PDA

View Full Version : நத்தை......



Nanban
06-07-2003, 09:15 AM
காற்றில் ஆடும் நாற்றின் சப்தமாய்
நீ பொழிந்தது பொய்கை.

அகத்தை செவிடாக்கி
ஓட்டினுள் இழுத்து கொண்டு
நத்தையாய் சுருங்கிய நான்....

சிதறிய நீர்த்திவலைகளில்
வானவில்லின் வண்ணமாய்
கதிரவனின் கைகள் சிறையில்...

பார்த்தும் பாராத நிறக்குருடாய்
என் கண்களின் பாவை...

ஓட்டை உடைத்து, குருடை சரி செய்து
நீ நடந்த பாதையில் இன்று நான்

மொழிகள் பேசி, விழிகள் வீசி
நீ திரிந்த இடங்களில் தேடுகிறேன்
எதைத் தேடுகிறேன் - இலக்கில்லாமல்?

மரமும், இலையும், தழையும்
செழித்திருக்கின்றன.
உன் மொழிகளைத் தின்றதினால் தானோ?

முல்லைச் சிறுமி, இன்று கொடியாய் மரத்தில்.
முல்லை மொக்குகளாய் மணக்கிறது
சிரிக்கும் உன் மெல்லொலி

இன்றும் வீசும் தென்றல்
வழிகாட்டியாய் முன்னே செல்லும்.
புதிதாய் நாற்று நடும்
புதுப் பெண்கள் எல்லோருக்கும்,
எல்லைகள் கட்டப் பட்டிருக்கும்
சங்குக் கழுத்தைக் கடந்து -
என் பயணம் நடந்தது.

எல்லைகள் உனக்கும் உண்டாக்கப்பட்டதா?
எல்லை தாண்டும் தீவிரவாதியின்
எச்சரிக்கையுடன் உன் மனை நோக்கி
என் கால்கள் தளர்வுடன்..

காடு, கழனி கழிந்து கரையேறி
பயணம் முடியும் நிறுத்தத்திற்கு
நீண்ட தூரம் முன்னே
இறங்கி நடந்த வழிகள் எல்லாம்
புதிதாய்க் கடைகள் - இப்பொழுது.
விற்பதற்கு நம்மைப் பற்றிய பேச்சு இல்லை,
புதிதாய் புறம் பேசுகிறார்கள்
புதியவர்களைப் பற்றி.
உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும்
பேச்சில்லை என்பதால் -
நீயும், நானும் கடந்த காலம்

கடந்த காலம், நிகழ் காலத்தினுள்
காலெடுத்து வைத்து,
தன் சக கடந்த காலத்தைத் தேடுகிறது.

மாறிப் போன காலத்தில்
உன் வீட்டு காரை பெயர்ந்த சுவர்கள் -
என்றோ நான் கிறுக்கிய
சில பென்சில் கோடுகளை
மறக்காமல் வைத்திருந்தது.

'ஓடிப்போன ராசாவே,
ஒரு வரி எழுதிப் போடக் கழியலயா
உனக்கு?'

கிழவி கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல்
பக்கத்தில் விளையாடிய பேரனுக்கு
மிட்டாய் கொடுத்துக் கேட்டேன் -
'உன் பெயரென்ன?'
அவன் சொன்னான் - என் பெயரை.

வீட்டினுள் ஒரு நிழல் கடந்து போய்
அடுப்பங்கரையில் வேலை தொடங்கியது.
தோட்டத்தில் ஒரு நத்தை
அரவம் கேட்ட நிமிடத்தில்
சுருங்கிக் கொண்டது ஓட்டிற்குள்.......

lavanya
06-07-2003, 11:27 AM
கொஞ்சம் 'மெதுவாய்' இருந்தாலும் உங்கள் கவிதையில்
சொல்லியிருக்கும் அந்த உரைநடை வரிகள் சொல்லும்
செய்திக்கு பாராட்டுக்கள் நண்பா

Nanban
06-07-2003, 11:55 AM
காலத்தே சொல்லாத, செயல்படாத எதுவுமே விளங்குவதில்லை.....

rambal
06-07-2003, 04:40 PM
அருமையாய் கவிதையை ஆரம்பிக்கிறார் நண்பன்..
ஊர் விட்டு ஓடிப்போனவன் திரும்பி வருகிறான்...
தன் பழைய காதலியைக் காண..

அவன் வரும் வழியில் இருக்கும்
மரம் இலை, தழை எல்லாம் செழிப்பாய் இருப்பதற்கு
அவல் மொழிதான் காரணம் என்று அருமையான உருவகப்படுத்தி கவிதை தொடர்கிரது..

மரமும், இலையும், தழையும்
செழித்திருக்கின்றன.
உன் மொழிகளைத் தின்றதினால் தானோ?


அடுத்து தற்போது ஹாட் ஆப் த டாக் ஆக இருக்கும் நபர்களை
அழகாய் சொல்கிறார்..
இப்போது யாரும் அவர்களைப் பற்றி பேசாததால்
அவனும் அவளும் கடந்த காலங்களாகிவிட்டனர்..
இதற்கு அப்புறம்தான் அந்த அற்புத வரிகள்..


கடந்த காலம், நிகழ் காலத்தினுள்
காலெடுத்து வைத்து,
தன் சக கடந்த காலத்தைத் தேடுகிறது.

மாறிப் போன காலத்தில்
உன் வீட்டு காரை பெயர்ந்த சுவர்கள் -
என்றோ நான் கிறுக்கிய
சில பென்சில் கோடுகளை
மறக்காமல் வைத்திருந்தது.


இப்படியாக செல்லும் கவிதையை பின் வருமாறு அருமையாய் முடித்து..


வீட்டினுள் ஒரு நிழல் கடந்து போய்
அடுப்பங்கரையில் வேலை தொடங்கியது.
தோட்டத்தில் ஒரு நத்தை
அரவம் கேட்ட நிமிடத்தில்
சுருங்கிக் கொண்டது ஓட்டிற்குள்.......


இப்போது அவள் நத்தையாக சுருண்டு கொள்ள..
அநேகமாக இன்னும் காலம் இருந்தால் மீண்டும் தொடரப் போகும் கதைதான்..

அற்புதம் நண்பன் அவர்களே.. தொடருங்கள்..

G.Sneha
06-07-2003, 09:41 PM
நண்பா,
ஒவ்வொருவர் நெஞ்சக்
குளத்திலும் கல்லெரிந்து
அவரவர் கொண்ட அந்த
அற்புத நாட்களை நினத்துப்
பார்க்கச் செய்யும் கவிதை.
எல்லோருக்கும் இருக்கும் அப்படி ஒரு அற்புதக்காலம்
அப்படி நத்தையாய் சொல்லாமல் சுருங்கியோர் ஏராளம்.


இறங்கி நடந்த வழிகள் எல்லாம்
புதிதாய்க் கடைகள் - இப்பொழுது.
விற்பதற்கு நம்மைப் பற்றிய பேச்சு இல்லை,
புதிதாய் புறம் பேசுகிறார்கள்
புதியவர்களைப் பற்றி.

இவ்வரிகள்,
ஒரு சாராருக்கு
தாங்கள் கொடுக்கும்
அறைகள்.

Nanban
07-07-2003, 09:43 PM
கவிதையைக் கூர்ந்து படித்து விமர்சித்த ராம்பால், சினேகாவுக்கும் நன்றிகள் பல.

அறிஞர்
23-05-2007, 07:03 PM
கிழவி கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல்
பக்கத்தில் விளையாடிய பேரனுக்கு
மிட்டாய் கொடுத்துக் கேட்டேன் -
'உன் பெயரென்ன?'
அவன் சொன்னான் - என் பெயரை.

வீட்டினுள் ஒரு நிழல் கடந்து போய்
அடுப்பங்கரையில் வேலை தொடங்கியது.
தோட்டத்தில் ஒரு நத்தை
அரவம் கேட்ட நிமிடத்தில்
சுருங்கிக் கொண்டது ஓட்டிற்குள்.......

காதலை வெளிப்படுத்தாமல்
வீட்டினுள் உள்ளே சுருங்கிவிட்டு..
நியாபகத்திற்கு தன் பையனுக்கு
தன்னவனின் பெயரை வைத்து
அழைக்கும் பலர் இன்று
நத்தையாய் நடமாடுகிறார்கள்...

அமரன்
24-05-2007, 06:48 AM
இது நிகழ்காலத்தின் கண்ணாடி. இங்கே வாழும் பலர் இப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்களின் பிம்பமே இக்கவிதையில் நத்தையாக வர்ணிக்கப்படுள்ளது என நினைக்கின்றேன். இதைப் படிக்கும்போது ஆட்டோகிராப் படத்தில் ஒரு காட்சி மனதில் வந்து சென்றது. இக்கவிதையைப் படிக்க உதவி செய்த அறிஞருக்கு எனது நன்றி.

விகடன்
05-08-2007, 12:45 PM
உங்களுடைய கவிதையில் ஒரு யுகத்தையே அடக்கிவிட்டீர்கள்.
நீங்கள் சொல்லியபின்னர்தான் சிந்தித்துப்பார்க்கிறேன். திரும்ப வீடு சென்றாலும் ஊரில் ஒருவருமிருக்கார் என்னுடன் பழகியோரும் சரி படித்தோரும் சரி.