PDA

View Full Version : ஆணழகன்அமரன்
12-03-2008, 08:06 PM
அடிக்கடி கடிகாரத்தையும் நுழைவாயிலையும் பார்த்துக்கொண்டிருந்தான் நிசங்கன். காலையில் ஆகாரம் கிடைக்காத வயிறு வேறு தொல்லை கொடுத்தது. அது போதாதென்று அதிக வேலையால் தலைவலியும் தன்பங்குக்கு இராட்டினம் ஆட்டியது. சே... இவன் எப்பதான் நேரத்துக்கு வந்திருக்கான்.. பேசாமல் தனியனாக போய் சாப்பிடவேண்டியதுதான் என்று நினைத்து எழுந்தபோது

"அண்ணே.. இதை ஒருக்கா சரியோண்டு பாருங்கோ"

அலுவலகத்தில் பலர் அவனை அண்ணை என்றே அழைத்துப் பழகிவிட்டார்கள். அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. ஒருத்தனுக்கு பொறுப்புக் கொடுத்தால் அவனை கவனமாக மேய்ப்பதுடன் நின்றுவிடுவது மேலாளர் பணி. அதை விட்டுவிட்டு எல்லாம் கச்சிதமாக இருக்கவேண்டும் என்பதற்காக இவனும் ஒருமுறை ஆதிமுதல் அந்தம்வரை சரிபார்த்துத்தான் அச்சகத்துக்கு அனுப்புவான். ஒரு எழுத்து இடம்மாறினாலும் அர்த்தம் மாறிவிடும் என்ற பரிதவிப்பே இதற்குக் காரணம். முதன் முதலாக தனது இந்த குணத்தை நினைத்து நொந்தான் நிசங்கன்.

அதை அலசி முடிக்கவும் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது..

"என்னடா.. இப்பதான் ஒரு மணியா.. "

"இல்லைண்ணா.. வேலை முடியக் கொஞ்சம் லேட்டாயிட்டுது.. இதோ.. பத்து நிமிசத்துல மைக் டொனால்டில் இருப்பேன்.. "

"சரி..சரி.. நானும் கிளம்புறேன்.. பத்து நிமிசத்தில் கரெக்டா அங்கே இருப்பேன்"

"அண்ணா... வரும்போது நூறு பவுண்ட்ஸ் கொண்டுவாங்க.. அடுத்த மாதம் தர்ரேன்.."

"ஏன்டா.. இப்பதானே சாலரி எடுத்தே.."

"வீட்டுக்கு கொடுத்தது போக என்பங்கு செலவாயிடுச்சு.."

"பாவி.. அப்படி என்னடா செலவு உனக்கு... வீட்டுக்கும் இந்தவாட்டி குறைச்சலாக் குடுத்திருக்கே.. உன்னை......"

"ஏசாதீங்கண்ணா... அடுத்த மாதத்துல இருந்த செலவைக் குறைச்சுக்கிறேன்.. இந்தமுறை விட்டுடுங்க.."

"நீ போனை வை.. நேரில வந்து பேசிக்கிறேன்"

"சரி.. வைக்கிறேன்.. மறக்காமல் கொண்டாந்துடுங்க.."

"சரிடா... தர்ரேன்.. சீக்கிரம் கட் பண்ணிட்டு புறப்படடா.."

"ஹி...ஹி.... ஆயிரம்தான் இருந்தாலும்..."

"அதையும் செலவழிப்பே.."

"ஹஹ்ஹ்ஹ்ஹா.. போங்கண்ணா உங்களை விட்டு இந்த பழக்கம் போகவே போகாதா... ஆயிரம்தான் இருந்தாலும் என்மேல உங்களுக்கு கொள்ளைப் பாசம்னு சொல்லவந்தேன்"

அத்துடன் உரையாடலை முடித்துவிட்டு பக்கத்திலிருந்த மைக்டொனால்ட் ரெஸ்ராரன்ட் நோக்கி நடக்கத்துவங்கினான்... அவனது மனமொ பழையதை அசைப்போட்டது..

விஷ்வா... சிறுபராயம் முதலாக பழகுபவன்.. என்றாலும் ஒரு வயது குறைந்தவன் என்பதால் அண்ணே என்று அழைப்பான்.. வந்தனாமேல் அவனுக்கு பற்றிய காதல் படர பல வழிகளில் நிசங்கன் உதவி இருக்கிறான். ஆரம்பத்தில் வந்தனா இழுத்த இழுப்புக்கெல்லாம் சாய்ந்த விஷ்வா, இரு ஆண்டுகள் கடந்து காதல் வலுப்பட்டதும் சற்று முரண்டு பிடிக்கத்துவங்கினான். தன்னை உதாசீனம் செய்வதாக வந்தனா நினைத்தாள்.. கொதித்தாள்.. தன்மேல் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக விஷ்வா எண்ணினான். அதிகமாக முரண்டு பிடித்தான்.. இந்த இழுபறியால் இருவருக்கும் இடையே இருந்த உறவில் விரிசல் விழுந்தது.. அந்த நேரம் பார்த்து விஷ்வாவும் நிசங்கனும் லண்டன் வந்து சேர்ந்தார்கள். அன்றுமுதலாக வந்தனாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீளவும் தொடர இருவரும் முயற்சி எடுக்கவே இல்லை. நிசங்கன் எடுத்த முயற்சியை முளையிலேயே விஷ்வா கிள்ளி எறிந்து விட்டான்..

காலச்சக்கரம் மூன்று வருடம் கடந்தபோது வந்தனாவும் லண்டன் வந்தாள். மீண்டும் அவளுடன் காதல் வயப்பட்டதை நிசங்கனிடம் விஷ்வா சொன்னபோது பிரவாகித்த மகிழ்ச்சி நேற்றுடன் வற்றிவிட்டது.

நேற்று, எதேச்சையாக ஊருக்கு தொலைபேசிய போது, வந்தனாவுக்கும் இன்னொருத்தனுக்கும் ஏற்பட்ட காதல் ரிஜிஸ்டர் மெரேஜில் முடிந்ததாக அதிர்ச்சிச் சேதி அறியக் கிடைத்தது. என்ன செய்வதென்று இரா முழுக்கக் குழம்பி, விஷ்வாவுடன் பேசிவிடுவது என்று தெளிந்து...

"ஹாய்.. அண்ணா.. பார்த்தீங்களா.. உங்களை விட முன்னமே வந்துட்டேன்"

சொன்னவனை பார்த்து பார்வையாலே சிரித்துவிட்டு, வேண்டியதை வாங்கிக்கொண்டு ஒதுப்புறமான ஒரு மேசையில் அமர்ந்தார்கள்.. பொதுவாகத் தொடங்கிய பேச்சு எங்கெங்கோ கிளைவிட்டது. வந்தனா பற்றி எப்படி சொல்வது.. எங்கே துவங்குவது என்ற சங்கடம் நிசங்கனை பிடித்து ஆட்டியது. சமாளித்து தொடந்தபோது பேச்சு வந்தானவை வந்தடைந்தது.. இதுதான் சமயம் என்று சொல்ல வாயெடுத்தான் நிசங்கன்..

""அண்ணே.. உங்களிடம் ஒன்று சொல்லோனும்" என்ன என்ற பார்வையை புரிந்தவன் "வந்து.. வந்தனாவுக்கு ஏற்கனவே இன்னொருத்தனுடன் ரிஜிஸ்டேசன் முடிஞ்சிருச்சு.. நேற்றுத்தான் சொன்னாள்.. "

நிசங்கன் ஆடிப்போனான்.. எதை சொல்ல சங்கடப் பட்டுக்கொண்டு இருந்தானோ.. எதை சொல்ல எத்தனித்தானோ.. அது ஏற்கனவே இவனுக்கு தெரிந்திருக்கிறது.. அதுவும் அவள் வாயாலேயே.. அதிர்ச்சி அடித்த ஆணியும், மேற்கொண்டு என்ன பேசுவது என்பதை மறைத்த திணறலும் பாடாய்ப்படுத்தியது..

"என்னண்ணே.. எதுவுமே பேசமாட்டேங்கிறீங்க."

"இதுல பேச என்ன இருக்கு. உனக்கு சம்மதம்னா எனக்கு ஓகே."

"எனக்கு பூரண சம்மதம்ணே.. வைபோஸ் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணி இருக்கான். உறவுக்கார ரிஜிஸ்தாரை வைத்து மிரட்டி இருக்காங்க. இதுல அவள் தப்பு ஏதுமில்லையே.."

பஸ்ஸால் வீழ்ந்தவன் மீது கார் ஏறியது பொன்ற நிலைக்கி நிசங்கன் ஆளானான். இதுல எது உண்மை எது பொய். ஊரிலுள்ள சினேகிதன் சொன்னதையா அல்லது வந்தனா சொல்வதையா நம்புவது என்ற தர்மசங்கடம் அவன் மீது கவிந்தது. சில நிமிடங்களை களவாடியது

"சப்போஸ்.. அவளும் ஒத்து செய்திருந்தால் என்ன செய்வே... விட்டுடுவியா"

"அது எப்படிண்ணே. அப்படி அவள் ஒத்து செய்திருந்தாலும், நிச்சமாக நானும் ஒரு காரணம்தானே.. நான் உதாசீனம் செய்த வெதும்பலில் அவன் காதலை ஏற்றிருக்கலாம்தானே. அவன் தப்பானவன்னு தெரிஞ்சு விலக நினைச்சிருப்பா.. அந்த இக்கட்டான நேரத்துல்ல இப்படி நடந்திருக்கும்.. "

அதற்கு மேல் பேச நிசங்கனிடம் ஏதுமில்லை. பெருமையுடன் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு விடைபெற்றான்..

அனுராகவன்
13-03-2008, 03:31 AM
நல்ல கதை ..
கதையில் வரும் சம்வம் நான் எங்கையோ கேள்வி பட்டது..
ஆனாலும் கதையில் வரும் காதல் ஒரு தலைகாதல் போல் உள்ளதே!
நன்றி அமரன்..

சிவா.ஜி
13-03-2008, 04:22 AM
காதல்வயப்பட்ட மனது எப்போது என்ன நினைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது...விஷ்வாவின் இந்த ஏற்றுக்கொள்ளும் பக்குவமும்...அந்த காதலால் விளைந்ததாய் இருக்கலாம்.
தன் உதாசீனம்தான் அவளது காதலை இழப்பதற்கான காரணம் என்று பழியை தன்மீது போட்டுக்கொண்டு...முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வழிவிடும் விஷ்வா..உண்மையிலேயே ஆணழகன் தான்.

ஒரு சந்திப்பில் கதை சொன்ன பாங்கு அருமை அமரன்.வாழ்த்துகள்.

இளசு
16-03-2008, 10:00 AM
இரட்டை விளையாட்டு ஆடுவது வந்தனாவும் விஷ்வாவும்..
இந்த முறை பந்தை வீசியது வந்தனா..

இன்னும் காதல் விளையாட ஆணழகன் தயார் போல தெரிகிறது..
இன்றும் நூறு பவுண்ட் கடன் வாங்கும் காரணம் புரிகிறது..

புலம்பெயர் மனத்தராசில் சில நிறுத்தல்கள் தாறுமாறாய்..

மனம் வலிக்கிறது அமரன்..