PDA

View Full Version : என் கண்ணில் நீர் வழிந்தால்...சிவா.ஜி
12-03-2008, 11:30 AM
சும்மா நை..நைன்னுகிட்டு இருக்காதீங்கடா....இதுக்குத்தான் உங்களை வெளியே கூட்டிக்கிட்டே வர்றதில்ல....பாக்கறதெல்லாம் வேணும்...உங்கம்மா உங்களை ரெட்டையா பெத்தாலும் பெத்தா....எனக்குத்தான் டபுள் ட்ரபிள்...ரெட்டைவாலுங்க...பேசாம வாங்கடா....

ஒரே ஜாடையில் குறும்பு கொப்பளிக்கும் குண்டு குண்டான அந்த விழிகளை...உருட்டி உருட்டி அப்பாவைப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள் அந்த இரட்டை வால் பையன்கள்.நாலு அடிதான் அப்படி அடங்கி நடந்தார்கள்...அதற்குள் பெரியவனுக்கு(5 நிமிடம் பெரியவன்..அவ்ளோதான்)ஏதோ கண்ணில் பட்டுவிட்டது...கடையில் தொங்க விடப்பட்டிருந்த அந்த பவர்ரேஞ்சர்...விளையாட்டு சாதனைத்தைப் பார்த்ததும் சின்னவனின் கையை உதறிவிட்டு ஒரே ஓட்டம்....

அப்பா...அண்னன் ஓடறான்....சின்னவன் அலறிய அலறலில் தூக்கிவாரிப்போட்டு...திரும்பிப்பார்ப்பதற்குள்...சின்னவனும் மாயமாகி இருந்தான்.கண்ணில் வழிந்து கொண்டிருந்த நீரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே..சுற்றுமுற்றும் பார்த்த கோபால்..அங்கிருந்து நாலாவது கடை தள்ளியிருந்த அந்த விளையாட்டு சாதனக் கடையில் அவனுடைய இரண்டு மகன்களும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமாக அருகே சென்று இரண்டு பேருக்கும் இரண்டிரண்டு முதுகில் வைத்தான்.
அதை சட்டை செய்யாத அந்த சிறுவர்கள்...அப்பா..அதை வாங்கிக்குடுப்பா...என்று கோரஸில் சொன்னார்கள்.

என்னடா நெனைச்சுக்கிட்டிருக்கிறீங்க...பாக்கறதெல்லாம் வாங்கிக்குடுக்க உங்கப்பன் என்ன கலெக்டர் உத்யோகமா பாக்கறான்...பேசாம வாங்கடா...

என்று அவர்களை அதட்டி அழைத்துக்கொண்டு தையல்கடைக்குப் போய்..இரண்டு பேருக்கும் பள்ளி சீருடைக்கு அளவு கொடுத்துவிட்டு வந்தான்(இதில் டைலர் வேறு ஜோக்கடிக்கிறான்...ஏன் சார் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்தீங்க...ஒரே அளவுதான...ஒருத்தனை மட்டும் அழைச்சிட்டு வந்திருந்தா போதுமே...என்று)அவனுக்கு என்ன தெரியும் இந்த வாலுங்களைப் பத்தி...ஒருத்தனை விட்டுட்டு அடுத்தவனைக் கூட்டிட்டு வந்தா போச்....ஆர்ப்பாட்டம் பண்ணி அவங்க அம்மாவை ஒரு வழி பண்ணிடுவான் என்று.

இரண்டு பேர் கையையும் இறுக்கமா பிடித்துக்கொண்டு வேக வேகமாய் சாலையைக் கடந்து நடை பாதைக்கு வந்ததும்....சின்னவன்...மெதுவா புடிப்பா...கை வலிக்குது....என்றதும்....டே உன்னைப் பத்தி தெரியாது...கொஞ்சம் லூஸா விட்டா போதுமே...பேசாம வாடா...என்று குனிந்து அவனைப் பார்த்து சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் எதிரே வந்த அந்த பெண்ணின் மேல் மோதிக்கொண்டான்.

மிகவும் பதட்டமாகி...சாரிங்க...ரொம்ப சாரிங்க...கவனிக்காம இடிச்சிட்டேன்...தப்பா நினைச்சுக்காதீங்க...என்று சொல்லிக்கொண்டிருந்தவனின் முகத்தையே...சின்னதாக நெற்றிச் சுருக்கி பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை அப்போதுதான் அவனும் சரியாகக் கவனித்தான்...இது...இது....ரஞ்சனியில்ல....யோசித்துக்கொண்டிருக்கும்போதே...அவள்..நீங்க கோபால்தானே....என்று கேட்டதும்..அப்ப நீ ரஞ்சனியேதான்..என்று உற்சாகமாய் சொன்னான்.
அய்யோ எவ்ளோ நாளாச்சு...ப்ளஸ் டூ வுக்கு அப்புறமா உன்னைப் பாக்கவேயில்ல....அந்த வருஷம்..நீ நம்ம ஸ்கூல் ஏனுவல் டேயில அப்பா வேஷத்துல நடிக்கும்போது ஒரு மேக்கப் போட்டிருந்தாங்களே...அதே மாதிரி இருக்க...அதான் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடிஞ்சது...இது உன் பசங்களா...

ஆமா...சரியான வாலுங்க...அது சரி நீ இந்த ஊர்லதான் இருக்கியா...உனக்கு எத்தனை பசங்க...வீட்டுக்காரர் என்ன செய்யறார்....வரிசையாய் அவன் கேட்ட எல்லா கேள்விகளும் முடிந்ததும்...ஒண்ணொன்னா கேளு...அப்பா...அதே பதட்டம் இப்பவும்....எப்படிதான் நீ ஆபீஸ்ல வேலை செய்யறியோ...

சாரி...சாரி...இப்ப சொல்லு...

இப்பதான் ரெண்டு வாரம் ஆச்சு இந்த ஊருக்கு வந்து...அவருக்கு ப்ரமோஷன் ட்ரான்ஸ்ஃபர்...மூணு கொழந்தைங்க....பெரியவ...பிகாம் ஃபைனல் இயர் படிக்கறா..சின்னவங்க ஒருத்தன்...ப்ளஸ் ஒன்..இன்னொருத்தன் ஒம்பதாவது...

என்ன ரஞ்சனி சொல்ற...என்ன விளையாடுறியா என்கிட்ட...என் பசங்களுக்கு இப்பதான் எட்டு வயசு ஆவுது..அதுக்குள்ள உனக்கு காலேஜ் படிக்கிற வயசுல பொண்ணா...வெளையாடாத...உண்மையச் சொல்லு..

சரி வா அந்த ஐஸ்க்ரீம் கடைக்குப் போகலாம்...இந்த குட்டிப் பசங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்குடுக்கறேன்...என்னடா பசங்களா உங்களுக்கு ஐஸ்கிரீம் புடிக்குமா...என்று கேட்டுக்கொண்டே அவர்களை தன் பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டாள்.கோபாலின் சம்மதத்தை எதிர் பார்க்காமல் உரிமையோடு அவர்களை ஆளுக்கொரு பக்கமாக கையைப் பிடித்துக்கொண்டு கடையை நோக்கி நடந்தாள்...கோபாலும் வேறு வழியில்லாம...அவள் சொல்ல வருவதை ஆற அமர சொல்ல நினைக்கிறாள்...அதற்குத்தான் கடையில் உட்காரலாம் என்று சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.

கடையில உட்கார்ந்து ...நான்கு ஐஸ்கிரீமுக்கு ஆர்டர் பண்ணிவிட்டு...மெதுவாய் ஆரம்பித்தாள்....

உண்மையாத்தான் கோபால்....அஞ்சு வருஷம் முன்னாடிதான் எனக்கு கல்யானம் ஆச்சு...எந்த வரனும் சரியா அமையல..வந்தவங்க எல்லாம்..இந்த குறையிருக்கறதுனால...ஆளாளுக்கு இவ்ளோ குடு..அவ்ளோ குடுன்னு கேட்டாங்க...எங்கப்பாவால முடியல...கடைசியா இவருக்கு ரெண்டாந்தாரமா என்னைக் கட்டி வெச்சுட்டாங்க...அவருக்கு முதல் மனைவி மூலமா இந்த மூணு பசங்க...முதல் மனைவி தவறிட்டதால...இத்தனை நாள் எப்படியோ கஷ்டப்பட்டு வளர்த்திருக்கார்.பொண்ணு பெரியவளானதும்...அவரால சமாளிக்க முடியல...அந்த சமயத்துல ஒரு அம்மாவோட தேவை ரொம்ப அவசியம்ன்னு நெனைச்சு...ரெண்டாங்கல்யாணத்துக்குப் பொண்ணு தேடிக்கிட்டிருந்தார்.புரோக்கர் மூலமா எங்கப்பாவுக்கு தெரிஞ்சதும்...என்கிட்ட பேசினார்...நானும் ரெண்டு மூணு நாள் யோசனை பண்ணிட்டு...சரின்னு சொல்லிட்டேன்...இப்ப பரவால்ல..அப்பா அம்மாவுக்கு வயசாயிட்டா...அப்புறம் எனக்குன்னு யார் இருக்காங்க...அதான் சரின்னு சொல்லிட்டேன். உடனே ரெடிமேட் அம்மாவாயிட்டேன்...மூணு குழந்தைகளுக்குத் தாய்...நல்லாதான் இருக்கு...பசங்களும் அம்மா பாசத்துக்கு ஏங்கிகிட்டிருந்ததுங்க...நான் கிடைச்சதும்...அப்படியே பாசத்தைப் பொழியறாங்க...சந்தோஷமாத்தான் இருக்கேன்....

கேட்க கேட்க...கோபாலுக்கு...உள்ளுக்குள்...துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது....6ஆவது படிக்கும் போது...இவனும் ரஞ்சனியும்..இன்னும் சில நன்பர்களும்..ஒரு கும்பலாகத்தான் காடு மேடெல்லாம் சுற்றி திரிந்து விளையாடுவார்கள்..அப்போது மிக அழகாக இருப்பாள்...அவளுடைய அம்மாவிடம் அந்த தெரு பெண்கள்..உன் பொண்ணுக்கென்னம்மா...ராசாத்தியாட்டமிருக்கா...ஆண்டவன் பணங்காசக் குடுக்கலன்னாலும்..உன் பொண்ணுக்கு நல்ல அழகை கொடுத்திருக்கான்...பாத்த உடனே மாப்பிள்ளைங்க கொத்திக்கிட்டு போயிடமாட்டாங்க...என்று சொல்லும்போது..ரஞ்சனியின் அம்மா பூரித்துப் போய்விடுவார்.

அப்போதுதான் ஒருநாள் கோபாலும்,ரஞ்சனியும்..மற்ற நன்பர்களும்...மடுவில் தேங்கியிருக்கும் ஆற்று நீரில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.கோபால்தான் தூண்டிலைப்போட்டுக்கொண்டிருந்தான்..வெளியே தூக்கிப்போடும் மீன்களை அலுமினியக்குண்டானில் சேகரிப்பது ரஞ்சனியின் வேலை...

மிதைவை பலமாக..ஆடியபோது...நல்ல பெரிய மீன் சிக்கிவிட்டது என்று கோபால் தூண்டிலை வேகமாக இழுத்தான்...புல்லிலோ எதிலோ சிக்கி...பின் முள் மட்டும் வெகு வேகமாக சுழன்று வந்து...ரஞ்சனியின் இடது கண்ணில் சொருகிக்கொண்டது....அய்யோ அம்மா என்று அவள் போட்ட அலறலில் தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு அவளருகே வந்து பார்த்த கோபால்...பதட்டத்தோடு அந்த முள்ளைப் பிடித்து இழுத்தான்...ஏற்கனவே கண்ணில் செருகியிருந்த அந்த முள் இன்னும் ஆழமாய் சேதப்படுத்தி...ரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது...கோபால் பயந்துபோய் ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் ரஞ்சனியின் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்தான்...பிறகு மருத்துவரிடம் போய் சிகிச்சை செய்து கொண்டும் பலனில்லாமல்...ஒரு கண்ணில் பார்வையை இழக்க வேண்டியதாகி விட்டது.

இப்போது அந்த குறையே இவளுக்கு...எதிராக அமைந்து...இரண்டாந்தாரமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்படியாகிவிட்டதே....நினைக்க நினக்க...இவனுக்கு பகீரென்றது...
பேயறைந்தவனைப்போல வெளிறிப்போன முகத்துடன் நீண்ட நேரமாய் கோபால் பேசாமல் அமர்ந்திருந்ததைப் பார்த்த ரஞ்சனி...அவனுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை யூகித்தவளாக...

அட விடு கோபால்...என்னவோ சின்னப் பிள்ளைங்கள்ல அப்படி ஆயிடிச்சி...அதுக்காக என்னோட இந்த வாழ்க்கைக்கு நாந்தான் காரணம் அப்படி இப்படின்னு மனசப் போட்டு கொழப்பிக்காத...எதெது நடக்கனுன்னு இருக்கோ அதது நடந்துதான் ஆகும்.இதுக்கு ஏன் அழுவுற நீ..சின்னப்புள்ள மாதிரி..என்று கேட்டவளைப் பார்த்து இரட்டை வால்களில் ஒன்று...
ஆண்ட்டி...அப்பா அழுவல..அப்பாவுக்கு அப்படித்தான் எப்பவுமே அந்தக் கண்ணுலருந்து தண்ணி வந்துகிட்டே இருக்கும்...மருந்தெல்லாம் சாப்ட்டும் நிக்கல...

அப்படியா என்பதைப்போல கோபாலைப் பார்த்தாள் ரஞ்சனி...

15 வருஷமா இப்படியேத்தான் இருக்கு ரஞ்சனி...தூங்கும்போதுகூட தலகானி நனைஞ்சிடும்...அதான் எப்பவும் ரெண்டு மூணு கர்சீப்போட நடந்துக்கிட்டிருப்பேன்.

அடடா...ஏன் டாக்டர் என்ன சொல்றாரு..

அது என்னவோ ஆப்ரேஷன் பண்னா சரியாப் போயிடுன்னுதான் சொல்றாரு..

அப்றமென்ன...பண்ணிக்க வேண்டியதுதானே....

இது கண்ணுலருந்து வர்ற தண்ணியில்ல ரஞ்சனி...என் மனசுலருந்து வர்றது...என்னாலத்தான உனக்கு ஒரு கண்ணு போச்சு...அதே கண்ணு...உன்னோட வெளிச்சம் போன கண்ணுக்காக எந்த நேரமும் அழுதுகிட்டிருக்கு...இருந்துட்டுப் போவட்டும்...நான் தெரியாம பண்ணியிருந்தாலும்...உன் வாழ்க்கையையே கெடுத்த பாவம் இல்லியா அது...அந்த பாவம்...இதால கொஞ்சமாவது கரையட்டுமே...

க.கமலக்கண்ணன்
12-03-2008, 11:59 AM
உள்ளத்தை கனக்க வைத்து விட்டது

உங்களை கதை நிச்சயமாக இந்த கதையை

உயர்ந்த இடத்தை பிடிக்கும்...

உண்மையை நினைத்து பார்த்தால் நிச்சயம் சுடும் என்பது

உலக அளவு நிஜம்... இந்த கதையை மின்னிதழுக்கு பரிந்துரை செய்கிறேன்...

அமரன்
12-03-2008, 12:13 PM
நேர்த்தியான கதை நகர்வு. இயல்பான உரையாடல்கள். சரளமான, பொருத்தமான சொற்பிரயோகங்கள். கதை முடிவில் நெகிழச்செய்யும் முடிச்சவிழ்ப்பு. துவக்கத்தில் இருந்து இருந்த வழக்கமான காதல் கதையோ என்ற நினைப்பு அறுந்தபோது மனது ஈரமானது. திணிப்பாக எதுவும் தெரியவில்லை.. பாராட்டுகள்..

எதேச்சையாக கண்கெடுத்து விதைத்த வினை அறுப்பாக கண்ணிலிருந்து நீர்வடியும் வியாதி. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ.. எல்லா செயலுக்கும் பரிசு உண்டு என்ற ஆன்மீகமோ.. எதுவானாலும் மனதில் பதியும்படியாக அமைத்த கதை. வாழ்த்துகள் தொடருங்கள்..

சிவா.ஜி
12-03-2008, 12:15 PM
உள்ளத்தை கனக்க வைத்து விட்டது

உங்களை கதை .

மிக்க நன்றி கமலக்கண்ணன்...உங்களின் உற்சாக ஊக்கத்திற்கு மன்மார்ந்த நன்றி.

சிவா.ஜி
12-03-2008, 12:18 PM
நேர்த்தியான கதை நகர்வு. இயல்பான உரையாடல்கள். சரளமான, பொருத்தமான சொற்பிரயோகங்கள். கதை முடிவில் நெகிழச்செய்யும் முடிச்சவிழ்ப்பு. துவக்கத்தில் இருந்து இருந்த வழக்கமான காதல் கதையோ என்ற நினைப்பு அறுந்தபோது மனது ஈரமானது. திணிப்பாக எதுவும் தெரியவில்லை.. பாராட்டுகள்..

எதேச்சையாக கண்கெடுத்து விதைத்த வினை அறுப்பாக கண்ணிலிருந்து நீர்வடியும் வியாதி. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ.. எல்லா செயலுக்கும் பரிசு உண்டு என்ற ஆன்மீகமோ.. எதுவானாலும் மனதில் பதியும்படியாக அமைத்த கதை. வாழ்த்துகள் தொடருங்கள்..

மிக்க நன்றி அமரன்.அர்த்தமுள்ள,அழகான அலசலாய் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.என் எழுத்தில் சிறிதளவேனும்...நன்றாக இருக்கிறதென்றால் அது உங்களைப்போன்றோரின் ஊக்கப் பின்னூட்டங்களால்தான்...மிக்க நன்றி.

யவனிகா
12-03-2008, 12:31 PM
ரஞ்சனி கோபால் இருவருமே பாராட்டப் படவேண்டியவர்கள்.
நம்மை சுற்றி நிறைய நல்ல இதயங்கள் இருக்கின்றன பல நேரங்களில் கண்களில் படாமலே..

இரண்டாம் தார வாழ்க்கை,மோசமானதா அண்ணா? எனக்கு ஏனோ அப்படித் தோன்றியதே இல்லை...ரஞ்சனிக்குப் பிடித்திருந்தால் சரிதான்..அந்த சந்திப்பிற்குப் பின் கண்ணிர் நின்றிருக்குமா? இல்லை அதிகரித்திருக்குமா...ரஞ்சனியையும் கோபாலையும் நம் முன் உலவ விட்டதில்...அவர்களைப் பற்றி யோசிக்கத் துவங்கி விட்டேன்...


கதை மாந்தரைக் கண் முன்னே உலவ விட்டு விட்டீர்கள்..தூண்டில் முள்ளில் மனது...பக்குமாய் பதிந்திருக்கிறது...இழுத்தீர்களேயானால் சேதம் நிச்சயம்அண்ணா...வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
12-03-2008, 12:37 PM
இரண்டாம் தார வாழ்க்கை,மோசமானதா அண்ணா? எனக்கு ஏனோ அப்படித் தோன்றியதே இல்லை...

முதல் தாரமாகத் தகுதியில்லாமல் ஒதுக்கப்பட்டவர் என்ற எண்ணமே அவர்களை சித்திரவதை செய்யும்.வெளிக்காட்டிக்கொள்லாவிட்டாலும் மனதுக்குள் அழுவார்கள்.யாரோ ஒரு சிலருக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விடுகிறது...அதே போல யாரோ ஒரு சிலர்...சிற்றன்னைக் கொடுமையைக் காட்டாமல் நல்லவர்களாக வாழ்கிறார்கள்...
என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தன்னை இரண்டாந்தாரமாகக் கட்டிக்கொடுப்பதில் விருப்பமிருக்காது யவனிகா...

உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி தங்கையே.

மதி
13-03-2008, 06:15 AM
அழகான கதை..
மனங்கள் இயல்புகளை அற்புதமாக எடுத்துச் சொன்ன விதம் அருமை..

பாராட்டுகள் அண்ணா..

சிவா.ஜி
13-03-2008, 06:36 AM
மிக்க நன்றி மதி.

அனுராகவன்
13-03-2008, 06:57 AM
வாவ்..நல்ல கதை..
ஆனால் அந்த இரண்டாதாரம் என் நண்பனின் வீட்டில் நடந்துள்ளது.
எனக்கு அதை நினைதால் மிகவும் கஸ்டமாக உள்ளது..
அதுவும் முதல் மனைவி உயிரோட உள்ள போதே..
மிக்க நன்றி சிவா.ஜி..
என் வாழ்த்துக்கள்

சிவா.ஜி
13-03-2008, 07:04 AM
ஆமாம் அனு..இரண்டாந்தாரமென்பது...கஷ்டமான நிலைதான்.என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் மனதின் ஓரத்தில் அந்த வலி இருந்துகொண்டே இருக்கும்.
பின்னூட்டத்திற்கு நன்றி அனு.

இளசு
16-03-2008, 10:10 AM
கடைத்தெருவில் அவன் கண் துடைத்தபோதே நெருடியது..
மிக இலாவகமாய் அந்நிகழ்வைச் செருகிய சிவா கதையாசிரியர் மட்டுமல்ல- காட்சி நகர்த்தும் , முன்குறிப்பு தரும் திரை ஓவியர்.
(சத்யஜித் ரேவிடம் இத்திறமை அதிகமாம்)..

என் கண்ணிலும் நீர் வழிய வைத்த சிவாவின் கைவன்மைக்குப்
பாராட்டுகள் பலப்பல!

சிவா.ஜி
16-03-2008, 10:20 AM
ஒரு கதாசிரியனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்....சிறிய குறிப்பானாலும்...அதைக் கவனித்து இடும் இந்த பின்னூட்டம்...அடடா...அருமை இளசு.மிக்க நன்றி.

மன்மதன்
16-03-2008, 11:23 AM
கனமான கதை..

நெஞ்சில் இன்னும் கனக்கிறது..

சிவா.ஜி
16-03-2008, 11:25 AM
மிக்க நன்றி மன்மதன்...கதைக்கு கனமூட்டிய உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 12:38 PM
வாழ்த்துக்கள்... அருமையான கதையோட்டம் சிவா அண்ணா..!!

ஆனால் கருதான் கண்மணியில் கண்ணீரை வரவைக்கிறது....!!

விளையாட்டு பிள்ளையாய் இருக்கும்போது இதுபோன்ற விபத்துகளால் வாழ்க்கையே மாறிப்போனவர்கள் பலரை கிராமப்புறங்களில் காணலாம் அண்ணா..!! அறியாத வயதில் ஏற்படும் சில நிகழ்வுகள் வாழ்வில் அழியாத வடுக்களை ஏற்படுத்திவிடுகின்றன்.. அப்படித்தான் இந்த கதையில் வரும் கோபாலுக்கும் ரஞ்சனிக்கும்..!!

சிவா.ஜி
22-03-2008, 01:02 PM
ஆமாம் சுகு...விளையாட்டு வினையாகிவிடுகிறது சில நேரங்களில்.என் நன்பரொருவர் கால்பந்து விளையாடும்போது அடித்த பந்து அவருடைய தம்பியின் கண்ணில் பட்டு ஊனமாகிவிட்டது..நன்றாகப் படித்தும் அவரது கனவான மருத்துவம் படித்து இராணுவத்தில் பணிபுரிய வேண்டுமென்ற ஆசை நிறைவேறவில்லை.மருத்துவராகிவிட்டார் ஆனால் இராணுவம்...முடியவில்லை.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுகந்த்.

MURALINITHISH
23-08-2008, 06:26 AM
சில நேரங்களில் இப்படிதான் நான் செய்யும் சில விளையாட்டுக்கள் அடுத்தவரை அதிலும் நாம் நேசிக்கும் நண்பரை துயரத்தில் ஆழ்த்தி விடும் பெண் நண்பியை துயரத்தில் ஆழ்த்திய நண்பனின் செயலுக்கு அவன் கண்ணே தண்டனை கொடுக்கிறது இதை தண்டனை என்று சொல்ல முடியுமா தவறுக்குதானே தண்டனை தர முடியும் அறியமால் செய்த பிழைக்கு ?????????

சிவா.ஜி
23-08-2008, 07:22 AM
அது நிச்சயம் தண்டனையல்ல முரளி. அவனே அதை தண்டனையாக ஏற்றுக்கொண்டு, சிறிதாவது தன்னது குற்ற உணர்ச்சியைக் குறைத்துக்கொள்கிறான். அதனால்தான் அந்தப் பெண்ணே, இது தெரிந்து செய்ததல்லவே என்று சொல்கிறாள். கால ஓட்டத்தில் கடலின் அடியில் தங்கிவிட்டவைகளை மேலெடுத்து வாசித்து பின்னூட்டமிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.