PDA

View Full Version : சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்



அமரன்
09-03-2008, 06:45 PM
தூக்கி சொருகிய பாவாடையும்
நனைந்து மின்னிய கால்களும் கண்டு
வயற் காற்றுக் காமுகன்
மானபங்கம் செய முயல்வான்.

அங்கத்திற்கு திரையிட்டு-என்
உள்ளத்தில் உனை சிமிழ்ப்பாய்.

தேம்பல் துளிகள் ஏந்தியபடி
வீடேகிய கடநீரேறி மிச்சத்தில்
தூண்டிலிட்டுக் காய்வோம்..

காத்திருப்பில் கால்கடுக்க
தோள்சாய்ந்த தலை கோதி
தாயாகி நீ நிமிர்வாய்.

சொக்கட்டான் ஆட்டத்தில்
உருட்டிய சோகி தாயம்தர-என்
தொடை தட்டி மாயம்செய்வாய்.
கோவில் தீபமாய் காயம்வைப்பாய்!

குலசாமி அமர்ந்த அரசமர நிழலில்
கண்மடல் குவித்து இதழுக்கு தாழிட்டு
புறாக்கீதத்துடன் உறவாடுகையில்
பின்னின்று பயங்காட்டி மலர்வாய்.

காலவாரியம் இடமாற்றிய தோழியே..

வேசக் காட்டு மிருகங்கள் தரும்
துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
ஒத்தடமாகும் உன் நினைவுகள்
புன்னகையாய் பூத்து சொன்னது
சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்.

தாமரை
10-03-2008, 02:14 AM
தூக்கி சொருகிய பாவாடையும்நனைந்து மின்னிய கால்களும் கண்டு
வயற் காற்றுக் காமுகன்
மானபங்கம் செய முயல்வான்.


காலவாரியம் இடமாற்றிய தோழனே..

வேசக் காட்டு மிருகங்கள் தரும்
துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
ஒத்தடமாகும் உன் நினைவுகள்
புன்னகையாய் பூத்து சொன்னது
சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்

பால் மாறிப் போனதேனோ அமரா?

அமரன்
10-03-2008, 08:09 AM
தூக்க கலக்கம் அண்ணா.. மிக்க நன்றி...

பூமகள்
10-03-2008, 09:36 AM
வேசக் காட்டு மிருகங்கள் தரும்
துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
ஒத்தடமாகும் உன் நினைவுகள்
புன்னகையாய் பூத்து சொன்னது
சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்
வெகு நாட்களுக்கு பிறகு மனம் தொட்ட கவிதை..!!

என்னுள் வருடிச் சென்ற
மயிலிறகு குறுகுறுப்பில்
மையல் கொண்டு
திரும்ப திரும்ப
படித்து மனதுக்குள்
மடித்துக் கொண்டேன்..!!

ஏனோ இறுதி வரிகள் என்னுள் பெரும் அசைவை ஏற்படுத்தி அசைவற்று கிடத்திச் சென்றது..!!

கிராமிய சூழலில் கற்பனை வீதியில் ஒற்றையடிப்பாதையில் பயணித்த உணர்வு அமரன் அண்ணா.

மனம் நெகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன். :)

யவனிகா
10-03-2008, 12:36 PM
தூக்கக்கலக்கத்தில் கூட கவிதை வருது...எங்களுக்கு கனவு தான் வரும்...

சொக்கட்டான் ஆட்டத்தில்
உருட்டிய சோகி தாயம்தர-என்
தொடை தட்டி மாயம்செய்வாய்.

நல்லாருக்கு அமரன்...
தாயத்துக்கு ஒரு ஆட்டம் எச்சு உண்டா...உங்க ஊரில...
பண்ணிரண்டு விழுந்திருக்கணுமே...அதில...

சிவா.ஜி
10-03-2008, 12:58 PM
தூண்டிலிட்டு காய்ந்ததும்,தலை கோதி தோள் சாய்ந்ததும்,சொக்கட்டானில்..தொடைதட்டியதும், புறம் நின்று பயங்காட்டி மாயம் செய்ததும்...மனதைவிட்டு நீங்கவில்லை....
ஆனால் இந்த பாழும் காலம்..மாற்றியதே அத்தனையையும்...
நீங்காத நினைவுகளுடன்...என்றும் அல்லாடும் உள்ளம் சொல்லும் சோக கீதம்...சிரிப்பையும் அழுகையாக்கிய கசப்பு நாதம்.

மனதுக்குள் நுழைந்த கவிதை அமரன்.வாழ்த்துகள்.

அமரன்
11-03-2008, 01:16 PM
என் மனதில் பதிந்த வலியின், குறைந்தளவு கற்பனை தொழில்நுடபம் புகுத்தப்பட்ட மறுமதிப்பு இந்தக்கவிதை.. பதிலிட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி நவில்கிறேன்.