PDA

View Full Version : மின்னஞ்சல் கதை: 3 - நாவினாற் சுட்ட வடுபாரதி
05-03-2008, 02:31 PM
நாவினாற் சுட்ட வடு.

ஒரு காலத்தில் மிகவும் கோபப்படக்கூடிய பையன் ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும், யார் பேசினாலும் காரணமின்றி கோபப்படுவான்.

அவனுடைய தகப்பனார் அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளையும் சுத்தியலையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் ஒரு ஆணியை வீட்டின் காம்பவுண்டு சுவரில் அடிக்கும் படி கூறினார்.

அடுத்த நாளில் அவன் 37 ஆணிகளை சுவரில் அடிக்க வேண்டியதாயிற்று. அத்ற்கடுத்த சில வாரங்களில் அவன் தன்னுடைய கோபத்தை எப்படிக்கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சுவரில் அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.

காலப்போக்கில் சுவரில் ஆணி அடிப்பதை விட கோபத்தை கட்டுப்படுத்துவது எளிதானது என்பதை அவன் கண்டுபிடித்தான். கடைசியாக ஒரு நாள் அவனால் கோபப்படாமலேயே இருக்க முடிந்தது.

அதை அவன் தகப்பனாரிடம் தெரிவித்தான். அவர் அவன் கோபப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியை சுவரில் இருந்து பிடுங்குமாறு கூறினார்.

கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாக அவன் பிடுங்க ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன. ஒரு நாள் சுவரில் இருந்த எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன.

அதை அறிந்த தகப்பனார் அவனை அந்த சுவரினருகே அழைத்துச் சென்றார்.

"நல்ல காரியம் செய்தாய் மகனே. முன்பு இந்த சுவர் எவ்வளவு அழகாக சுத்தமாக இருந்தது?! இப்போதும் அதே சுவர்தான். ஆனால் பழைய நிலையிலா இருக்கிறது? இல்லை அல்லவா. கோபத்தில் நீ சொல்லும் வார்த்தைகள் கூட இப்படித்தான் - சுவரில் இருக்கும் ஓட்டைகள் போல - வடுவை உண்டாக்கி விடும். ஒருவனை கத்தியால் குத்திவிட்டு பின்பு நாம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கூட, அந்தக் காயத்தால் ஏற்பட்ட வடு அவன் உடலில் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். வார்த்தைகள் மனதில் ஏற்படுத்தும் வடுவும், காயத்தில் ஏற்படும் வடுவைப்போன்றதே என்பதை உணர்ந்து கொள்.

அன்பும், நட்பும் நிறைந்திருப்பவர்களை பெறுவதென்பது ரத்தினங்களைப் பெறுவது போன்றது. அவர்கள் உன்னை மகிழ்விப்பார்கள், உற்சாகப்படுத்துவார்கள். எப்போதும் நீ கூறுவதை காது கொடுத்து கேட்பார்கள். சுக, துக்கங்களில் பங்கு கொண்டு ஆறுதலான வார்த்தைகளை அள்ளித்தருவார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் எப்போதுமே திறந்த மனதுடன் உனக்காகவே காத்திருப்பார்கள். புரிகிறதா?

நான் எப்போதாவது இது போன்ற ஓட்டையை உண்டாக்கி இருந்தால் என்னை மன்னித்து விடு மகனே."

மதி
05-03-2008, 02:55 PM
அருமையான கருத்து பாரதி.
அதிலும் கடைசி வரி.. புரிந்துணர்வின் எடுத்துக்காட்டு.

பாரதி
05-03-2008, 06:21 PM
கருத்துக்கு மிக்க நன்றி மதி.

aren
11-03-2008, 03:29 AM
நல்ல கதை. ஆனால் இது நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். நான் பயங்கரமாக கோபப்படுபவன். நான் ஆணி அடிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான், பின்னர் பிடுங்குவதற்கு ஆட்களை வைக்கவேண்டும். சுவற்றை மறுபடியும் எழுப்பவேண்டும்.

சிவா.ஜி
11-03-2008, 04:22 AM
ரொம்ப பெரிய செய்தியை..அழகா தெரிவிக்கிற கதை.சில இடங்களில்,சில சந்தர்ப்பங்களில் கோபமும் தேவைப்படுகிறது.ஆனால் அடிக்கடி கோபப்பட்டால் அதற்கு மதிப்பில்லை.
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி பாரதி.

மன்மதன்
17-03-2008, 03:51 PM
தீயினால் சுட்ட புண் - குரலை வலியுறுத்தும் கதை.. எளிமையாக உணர்த்தியது.. நன்றி பகிர்தலுக்கு,...

மனோஜ்
17-03-2008, 05:31 PM
வார்த்தைகள் கொட்டி விடலாம் திரும்ப எடுப்பதுதான் கடினம்
அதற்கு வார்த்தை வரும்முன் தடுதல் நலம் நன்றி அண்ணா

இளசு
17-03-2008, 09:43 PM
அன்பு பாரதி

நாம் முன்பே அளவளாவியபடி
உடல் வலியைப் போன்றதே மனவலியும்... அதே துன்பம்..
ஆறாமல் போகும் வாய்ப்பு மனவலிக்கு அதிகம் என்பதால் சேதம் அதிகம்..

என்பதை இன்னும் '' ஆணியடித்தாற்போல்'' ஒங்கிச் சொல்லும் சிறுகதை!

கதைத் தந்தை என் தந்தையை நினைவுபடுத்துவதால்
மனம் ஈரவயலாய் கூடுதல் குழைந்தது..

நன்றி பாரதி!

தமிழ் மகன்
17-03-2008, 11:12 PM
நாவினால் சுட்ட வடு,இந்த குறள் என்றென்றும் என் நினைவிலே இருக்கும்.எப்பொழுதெல்லாம் எனக்கு கோபம் வந்தாலும் எனக்கு இந்த குறளைத்தான் நினைத்துக்கொள்வேன்.என்னால் யாரும் மணம் புண் படக்கூடாது என்று நினைப்பவன்.இந்த நீதிநெறி கதை என்றென்றும் என் மனதில் ஆணி அடித்தது போல என் நினைவில் இருக்கும்.
பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.

பாரதி
22-03-2008, 07:39 AM
கருத்துக்கள் தந்த ஆரென், சிவா.ஜி, மன்மதன், மனோஜ், அண்ணா, தமிழ்மகன் ஆகியோருக்கு நன்றி.