PDA

View Full Version : குருவிகளுடன் பறக்கலானது மனது...யவனிகா
04-03-2008, 08:28 AM
கண்கள் குளிர்ந்தன...
கண்ணாடியூடே தெரிந்த
பரந்து விரிந்த இளமஞ்சள் வானம்,
பச்சைச்செடியில் தீக்கங்குகளாய்
அடர்சிவப்பு செம்பருத்திப்பூக்கள்.....
செம்பருத்தியைக் கொத்தியவாறு
சிட்டுக் குருவிக் கூட்டம் ஒன்று...

ஏதோ வாகனம் எழுப்பிய இரைச்சலில்
எழும்பிப் பறந்தன அச்சமுற்ற
சிட்டுக்குருவிகள் வேலியின்றும் வேகமாய்...

கவிதை எழுத சரியான தருணம்
சொன்னது மனம்...

பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
கவிதைக்குச் சிக்காமல்
தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...

எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?

எழுதுவதை நிறுத்தி விட்டு
குருவிகளுடன் பறக்கலானது மனது...

குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...

குருவியின் பின்னால்
மிதந்து செல்லும் மனதே...

நீயும் தப்ப முயற்சி செய்...
என் கவிதையிடமிருந்து...

நாகரா
04-03-2008, 08:46 AM
குருவிகளைச் சிறைப்படுத்தாமல்
கவிதையே குருவிகளோடு பறக்க
நானும் பறக்கிறேன்.

அருமையான் கவிதை, வாழ்த்துக்கள் யவனிகா.

சுட்டிபையன்
04-03-2008, 08:55 AM
குருவியின் பின்னால்
மிதந்து செல்லும் மனதே...

நீயும் தப்ப முயற்சி செய்...
என் கவிதையிடமிருந்து...

அழகான கவிதை
எதிலும் மாட்டாமல் தப்பக் கூடிய மன்மிருந்தால் மனிதன் எப்போதோ மனிதனாகி இருந்திருப்பான்

மதி
04-03-2008, 10:30 AM
கட்டுக்குள் சிக்காமல் பறக்க மனதால் மட்டுமே முடியும்.. அதை கட்டுபடுத்துதல் கடினம். கவிதையால் கூட..
நல்ல கவிதை யவனி அக்கா..

பூமகள்
04-03-2008, 10:40 AM
குருவிக்கான கவிதை
குருவியுடனே பறந்ததுவே..!!

சிக்காத மனமும்
பின்னால் போனதோ??!!

கட்டுக்குள் அடங்கா கற்பனை
விட்டுச் சிறகடித்தனவோ??

சூப்பர் யவனி அக்கா..!!
காட்சிகளைக் கூட கவிதையில் சொல்லி நச் என்று ஒரு கருவோடு முடிப்பது உங்களுக்கே உரிய தனித்திறன்..!!

அசத்துங்க அக்கா..!!
உங்கள் தங்கையானதில் பெருமிதம் கொள்கிறேன்.! :)

சிவா.ஜி
04-03-2008, 10:45 AM
கவிதைக்குள் கட்டுண்டு கிடக்காமல் குருவியுடன் சிறகடித்து பறந்து வா மனமே என மனதை பறக்கவிட்டு....ஏற்கனவே குருவிகளைப் பார்த்த கண்கள் கவர்ந்து வைத்த வார்த்தைகளால் கவிதை வந்து விழுந்திருக்கிறது.

மனதைக் கட்ட யாரால் முடியும்....காற்றோடும் கூட்டு சேரும்...குருவியோடும்..பறந்து திரியும்...அலையோடும் விளையாடும்....அண்டங்களைத் தாண்டியும் சென்று வரும்...

அழகான கவிதைக்கு வாழ்த்துகள் தங்கையே.

செந்தமிழரசி
04-03-2008, 10:46 AM
வானளந்த குருவியிறகும்
வார்த்தையளந்த மனது
கவிதைக்கும் தப்பிக்க
காட்சி தப்பாமல் கண்களில்.

வாழ்த்துக்கள் யவனிக்கா

rocky
04-03-2008, 12:51 PM
அன்புள்ள மன்றத்தோழி யவனிகா அவர்களுக்கு,

வரிகள் (கவிதை) மிகவும் அருமையாக இருந்தது. உண்மையிலேயே மிகவும் அருமையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்ததிலிருந்து எதைக் கண்டாலும் இதை ஒரு கவிதையாக எழுதலாமா என்ற எண்ணம் பார்ப்பதிலெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகே தெரிந்தது, நான் செய்து கொண்டிருந்த தவறு,

பார்த்த அழகைக் கவிதையாக்க
அறிவு சென்றுவிட்டது, இப்போது
பாதி மட்டுமே ரசித்த மனதால்
கவிதையும் கெட்டது,
காட்சியும் போய்விட்டது.

இந்தக் கருத்தை ஒரு நல்ல பெரிய கவிதையாக எழுத முயற்சித்துக் கொண்டிருந்தேன் ( ரொம்பநாளா). ஆனால் அதே விஷயத்தைத் தாங்கள் மிகவும் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். கவிதை எழுதுவோர் அனைவருக்குமே இந்தப் பிரச்சனை இருக்குமென்றே நிணைக்கிறேன். இதனால் அழகை மட்டும்மல்ல பல உணர்ச்சிகளையும் கவிஞர்கள் அந்த நொடியில் கவிதையாக்க முயன்று வாத்தைக்ளைத்தேடி சென்றுவிட்டு அனுபவிப்பதை இழந்துவிடுகின்றனர். ஆனால் ஒரு நிகழ்வை முழுமையாக அனுபவித்து உணர்ந்த பின்னர் தானாக உதிக்கும் கவிதைகளுக்கு இணையாக நாம் தேடிப்பிடித்து ஒட்டவைக்கும் வார்த்தைகள் இருப்பதில்லை. மிகவும் அருமையான வரிகள், நன்றி.

ஷீ-நிசி
04-03-2008, 01:15 PM
பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
கவிதைக்குச் சிக்காமல்
தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...

எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?

எழுதுவதை நிறுத்தி விட்டு
குருவிகளுடன் பறக்கலானது மனது...

குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...

குருவியின் பின்னால்
மிதந்து செல்லும் மனதே...

நீயும் தப்ப முயற்சி செய்...
என் கவிதையிடமிருந்து...


படிக்கையில் இந்த வரிகளினுடன் ஒன்றிப்போனது மனது!

வாழ்த்துக்கள் யவனி!

இளசு
04-03-2008, 06:01 PM
விட்டு விடுதலையாகு - அந்தச்
சிட்டுக் குருவியைப்போல்...


எங்கெங்கோ அறியாத் தளங்களில் மனதை அலையவிடும் கவிதை!

நான் கனவு காண்பதாகக் கனவு காண்கிறேன் - இது சர்ரியலிசம் என்பார்கள்..

கவிதையிலிருந்து தப்பச் சொல்லி, குருவிகளை வைத்து கவிதை பாடுவது --
குருவிகளுடன் மனதை படிமமாக்கும் இதமான உத்தி..

கொன்றைப்பூக்களுக்குப் படித்த தீக்கங்கு வர்ணனை இங்கே செம்பருத்திக்காய்..

வாழ்த்துகிறேன் யவனி..
உன் கவியுலகில் இது புதுப் பரிமாண பவனி..

யவனிகா
04-03-2008, 06:10 PM
பார்த்த அழகைக் கவிதையாக்க
அறிவு சென்றுவிட்டது, இப்போது
பாதி மட்டுமே ரசித்த மனதால்
கவிதையும் கெட்டது,
காட்சியும் போய்விட்டது.மிக மிகச் சரியாக நாடி பிடித்துவிட்டீர்கள்...ராக்கி. நன்றி.

யவனிகா
04-03-2008, 06:16 PM
விட்டு விடுதலையாகு - அந்தச்
சிட்டுக் குருவியைப்போல்...
கொன்றைப்பூக்களுக்குப் படித்த தீக்கங்கு வர்ணனை இங்கே செம்பருத்திக்காய்..
வாழ்த்துகிறேன் யவனி..
உன் கவியுலகில் இது புதுப் பரிமாண பவனி..

அண்ணா...நிஜமாகவே இந்த கொன்றைப் பூவை நீங்கள் சொல்வீர்கள் என்று, செம்பருத்திப் பூவைப் பற்றி எழுதும் போது தயங்கி ஒரு விநாடி நின்றேன். ஆனாலும் ஏனோ இந்த உவமையை விட மனம் இல்லை. சிவப்பு நிறப் பூக்களைப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் தீம்பிழம்பு நினைவு தான் வருகிறது.வேறென்ன எழுதினாலும் நிறைவதில்லை. கோளாறு பிடித்த மனது.

பாரதியின் வரிகளையும் நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன். அதே...எனக்கு மிகவும் படித்த வரிகள்.ஆனால் கவிதைக்கு இன்ஸ்பிரேசன் அந்த வரிகள் அல்ல...

நன்றி அண்ணா...

யவனிகா
04-03-2008, 06:22 PM
குருவிகளைச் சிறைப்படுத்தாமல்
கவிதையே குருவிகளோடு பறக்க
நானும் பறக்கிறேன்.

அருமையான் கவிதை, வாழ்த்துக்கள் யவனிகா.

நன்றி ஐய்யா...

யவனிகா
04-03-2008, 06:23 PM
அழகான கவிதை
எதிலும் மாட்டாமல் தப்பக் கூடிய மன்மிருந்தால் மனிதன் எப்போதோ மனிதனாகி இருந்திருப்பான்

நன்றி சுட்டி...அவதார் மாத்திடீங்க போல...எப்ப கன்ஸ்ட்ரக்சன் முடிப்பீங்க?

யவனிகா
04-03-2008, 06:25 PM
குருவிக்கான கவிதை
குருவியுடனே பறந்ததுவே..!!

சிக்காத மனமும்
பின்னால் போனதோ??!!


அதே...நாளைக்கு வரட்டும் அந்தக்குருவி...விடறதா இல்லை. நன்றி பூவு.

அக்னி
04-03-2008, 06:25 PM
குருவிகள்... அஞ்சிப் பறந்தாலும் அழகு...
கவரப்படும் மனது,
கூடப் பறக்கலாம்...
பறக்கத் தொடங்கும் வரை பார்க்கலாம்...
அதன் பின்...
சிட்டுக் குருவிகள் விழி மறையும்வரை,
மனப் பறப்பும் இருக்கும்...
மறைந்தபின் வெறுமையாகும் மனப்பரப்பில்,
குருவியைச் சிறைப்படுத்தாத வார்த்தைகள், செதுக்கப்படுகையில்..,
பறக்கிறது தொடர்ந்தும் கவிதையாக மனது...

ரசிப்போம் அழகை நசிக்காமல்...

பாராட்டுக்கள் யவனிகா+அக்கா...

யவனிகா
04-03-2008, 06:27 PM
நன்றி சிவா அண்ணா, ஷி-நிசி, தோழி செந்தமிழரசி, தம்பி மதி...
உற்சாகமாய் உணர்கிறேன்.

யவனிகா
04-03-2008, 06:29 PM
மறைந்தபின் வெறுமையாகும் மனப்பரப்பில்,
குருவியைச் சிறைப்படுத்தாத வார்த்தைகள், செதுக்கப்படுகையில்..,
பறக்கிறது தொடர்ந்தும் கவிதையாக மனது...

ரசிப்போம் அழகை நசிக்காமல்...

பாராட்டுக்கள் யவனிகா+அக்கா...

நல்ல வரிகள் அக்னி...வாழ்த்துக்கள்.

அமரன்
04-03-2008, 07:00 PM
ஆச்சரியம் இரட்டைப் புருவம் உயர்த்தும் ரகக்கவிதை..
இச்சாயலுடன் இன்றோர் அனுபவம்..
நல்லவேளை.. நான் அவசரப்படவில்லை.
அவசரம் கொண்டிருந்தால் தெளிவான நீரோடையில் மிதந்துவரும் மலர்க்கவிதை கிடைத்திருக்காது..
கவியுள்ள மிதவைகள் பல தள்ளாடும் நிலை இது..
அவற்றுள் சிலதான் கரைதட்டுகிறன.. சில கவிழ்ந்துவிடுகின்றன இடை நடுவில் ..
பறக்கும் குருவிகள் பார்க்க இயலாமல் பலர்.
அவர்களுக்காக படம்பிடிக்கலாமே கவிதைக் கமெராவால்..
முயலும் மனதை ஏன் கட்டிப்போடுகிறீர்கள்..

அக்னி
04-03-2008, 07:06 PM
இன்னொரு வகையில்,

குருவிகளுடன் பறக்கலாகும் மனது
எழுதியது கவிதை...

குருவிகள் பறக்கக் கல்லான மனது
வீழ்த்தியது கவியை...

குருவிகள் பறக்க, கல்லாத மனது,
நில்லாது பறந்து, ரசித்துச் சொல்லான கவிதை...

குருவிகள் பறக்கக் கள்ளாகும் மனது,
தள்ளாடும் போதையில் தரும் கவிதை...

இப்படியும் சொல்லலாமோ...

சுகந்தப்ரீதன்
05-03-2008, 06:55 AM
திறந்து விட்டாலும்
பறந்து விடாமல்
மீண்டும் மீண்டும்
கூட்டுக்குள் செல்லும்
கூண்டுகிளியாய் மனம்..!!

எப்படிப்பா... சாதாரணமாவே அசாதாரணமா எழுதுறீங்க...!!
எங்களுக்கும் சொன்னா நாங்களும் பறக்க முயற்ச்சிப்போம்ல்ல..?!

வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் மனது குருவியை... உங்கள் கவிதை மனதை...!!

தீபா
05-03-2008, 05:36 PM
எதற்கும் அடங்காதது கற்பனை
கற்பனை ரதத்தின் தேவன் கவிதை.

கற்பனை செல்லுமிடமெல்லாம் கவிதை செல்லும்

குருவியாக இருப்பினும்
குருத்தாக இருப்பினும்

இயல்பான கவிதை,
இங்கிருந்து இடம்மாற நினைப்பு இல்லை........

வாழ்த்து..

சுட்டிபையன்
06-03-2008, 06:45 AM
நன்றி சுட்டி...அவதார் மாத்திடீங்க போல...எப்ப கன்ஸ்ட்ரக்சன் முடிப்பீங்க?

மம்மிகிட்டேதான் கேக்கணும், மம்மி வைத்துகுள்ளே இருக்கேன்:icon_rollout::icon_rollout:

வசீகரன்
06-03-2008, 09:49 AM
எழுதுவதை நிறுத்தி விட்டு
குருவிகளுடன் பறக்கலானது மனது...

குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...


மிக ரசித்த வரிகள்....!!!இயல்பழகை ரசித்திடும் மனது....
அருமை யவனி மேடம்.....!:icon_b:

யவனிகா
06-03-2008, 09:53 AM
பின்னூட்டக் கவிதைகள் அசத்தல்...சிலநேரம் பின்னூட்டக் கவிதைகள் படிக்கும் போது நாம் எழுதிய கவிதைகள் ஒன்றுமில்லாததாய் ஆகிவிடுகிறது. தாய் எட்டடி...குட்டி பதினாறாடி...
பின்னூட்டமிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள்.

பென்ஸ்
06-03-2008, 05:10 PM
அட அடடே.... அருமை...

நல்ல கவிதை யவனிகா....

கண்டதை எழுதியிருந்தால் என்னால் ரசிக்க முடிந்ததை விட
நீங்கள் மனதை பறக்கவிட்டு ரசித்து எழுதியதால்
இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது....

வரிகள் உரைநடை போல இருந்தாலும் ... நன்றாக இருக்கிறது.

simariba
04-05-2010, 06:55 AM
கவிதை அருமை யவனிகா உங்கள் பெயர் கூட கவிதையாய் தெரிகிறது எனக்கு. வாழ்த்துக்கள்!