PDA

View Full Version : மின்னஞ்சல் கதை - 1. பார்வைகள் பலவிதம்



பாரதி
29-02-2008, 10:29 AM
மின்னஞ்சல் கதைகள்.

சில சமயம் மின்னஞ்சலில் வரும் கதைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல நண்பர்களின் வழியாக மாறி மாறி கடைசியில் நம்மை
வந்தடையும் போது கதையின் மூலத்தை நம்மில் பெரும்பாலானோரால் அறிந்து கொள்ள முடிவதில்லை. இருப்பினும் கதையின் கருத்து சிந்திக்க
வைக்கிறது எனில் என்றும் மறக்காமல் மனதில் தங்கி விடுகிறது. அப்படிப்பட்டவற்றை வாய்ப்பு கிடைக்கும் போது தரலாம் என்று எண்ணுகிறேன். சில மாற்றங்களுடன் எனக்குத் தோன்றிய வகையில் தமிழாக்கம் செய்து இங்கு தருவதைத் தவிர்த்து என்னுடைய பங்களிப்பு ஏதுமில்லை. இத்தருணத்தில் இக்கதை, சம்பவங்களின் நாயகர்களுக்கும், கதாசிரியர்களுக்கும், அனுப்பிய நண்பர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் பல.

மின்னஞ்சல் கதை - 1. பார்வைகள் பலவிதம்.

எழுதியவர்: ..........?

ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அடித்துப்பிடித்து வண்டிக்குள் அந்தக்குடும்பத்தினர் ஏறினார்கள். இருக்கையைத்தேடி அமரும் போது அருகே ஒரு முதியவரும், கண்ணாடி அணிந்த ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் வருபவர்கள் போவோர்கள் எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வண்டி கிளம்பியது. சில நிமிடங்களுக்குப் பின் அந்த இளைஞன் சந்தோசத்தில் கத்த ஆரம்பித்தான் - "அப்பா இங்க பாருங்க... எல்லாமே எவ்ளோ நல்லா இருக்கு..!". அவனது அப்பாவான அந்த முதியவரும் ஆமோதிப்பவராக தலையசைத்தார்.

பழங்கள் விற்பவர்கள் வந்தார்கள். அந்த இளைஞன் - "ஹைய்யா... அப்பா... அதானே சாத்துக்குடி.... அதானே ஆப்பிள்" என்றான்.
அந்த முதியவரும் "ஆமாம்..பா" என்றார்.

அடுத்தடுத்து இதே போல நடந்த நிகழ்வுகளில் அந்த இளைஞனைப் பார்த்து அந்தக்குடும்பத்தினர் எரிச்சல்பட்டுக் கொண்டே முணுமுணுக்க
ஆரம்பித்தார்கள். அந்த இளைஞன் கண்டுகொள்வதாயில்லை.

சற்று நேரத்தில் லேசான தூறல் ஆரம்பித்தது.

"ஹைய்யா... மழை...! அப்பா.. மழை பாருங்கப்பா...!!" என்று அவ்விளைஞன் குதிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் மழை வலுத்து, மழை நீர் வண்டியின் உள்ளேயும் தெறிக்க ஆரம்பித்தது.

"சன்னலை மூடுங்க" - என்ற அந்தக் குடும்பத்தினரின் குரலை அந்த இளைஞன் பொருட்படுத்தவில்லை.

அந்த இளைஞன் மழைநீரில் கைகளை நனைத்து விளையாட ஆரம்பித்திருந்தான். மழை நீர் லேசாக அந்தக்குடும்பத்தினரின் ஆடைகளிலும் பட ஆரம்பித்திருந்தது.

அந்தக்குடும்பத்தில் ஒருவர் கோபத்துடன் "ஏன் சார்.. கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா..? பப்ளிக் பிளேஸில் எப்படி நடந்துக்குறதுன்னு
தெரியாதா..? எத்தனை வயசாச்சு...! இன்னும் இப்படியா..? மூளை சரியில்லன்னா மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டியதுதானே..? அதை விட்டுட்டு, இப்படி கூப்பிட்டு வந்து ஏன் எல்லார் உயிரையும் வாங்குறீங்க..?" என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னார் - "மன்னிச்சுக்கோங்க. நேத்துதான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணுனாங்க.. பிறவியில் இருந்தே அவனுக்கு பார்வை இல்லாம இருந்துச்சு. இங்க இருக்குற ஆஸ்பத்திரியில பெரிய டாக்டருங்க இருக்காங்கன்னு சொன்னதால வந்தோம். ஆபரேசன் செஞ்சு கண்பார்வை சரியானதுனால அவனுக்கு பாக்குற எல்லாமே ஆச்சரியமா இருக்கு. இத்தன வருசமா தடவிப்பாத்து மட்டுமே தெரிஞ்சிகிட்டவன் இன்னைக்கு நேருல பாக்குறதால அப்படி நடந்துக்குறான். தெரியாம அவன் உங்களுக்கு தந்த தொந்தரவுக்கு தயவு பண்ணி மன்னிக்கணும். நாங்க
வேணும்னா வாசல் பக்கத்துல போயி நின்னுக்குறோம்."

பார்வைகள் பலவிதம்.

அமரன்
29-02-2008, 11:42 AM
அருமை அண்ணா....
அழகாக அடுக்கப்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட நளினமான கதை ஓட்டம். அதில் நனைந்த மனதில் எண்ணற்ற எண்ண அலைகள். எதிர்பாராத திருப்பத்தில் முடிகிறது ஓட்டம். அதிலிருந்து தொடங்கும் உணர்ச்சிப்பிரவாகம் சில நிமிடங்களுக்கு நிலைத்து விடுகிறது. சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் வகையில், சிறுகதை இலக்கணத்துக்கு அமைவாக அமைந்துள்ளது இந்தப்பகிர்வு.

இச்சிறுகதை இலக்கியத்தில் முதல்பொருளாக (களமாக) தொடருந்து பயன்படுத்தப்பட்டு இருப்பது சாலப்பொருந்துகிறது. நீண்ட தொடருந்துப் பயணத்தில் எத்தனை அனுபவங்கள். அதிலும் ஆசனம் காலியாக இருக்க, தொடருந்தை நிறைக்கும் மழலைகள்தான் எத்தனை? அங்கும் இங்கும் ஓடித்திரிந்து, பழைய காட்சிகளென்றாலும் அனுபவம் புதுமை என மகிழ்ந்து, சூழலை ஆனந்தப் பெருக்காக்கும் அந்த "மழலையர்நிலை"யில் கச்சிதமாக பொருந்துகிறான் கதாநாயகன்.

அவனது நீண்ட கால ஏக்கம் நிறைவடைந்த பேருவகை, அவனுவகையால் தனைமறந்து பயணிக்கும் தகப்பனின் ரசனை.. என எடுத்துக்கொண்ட உரிப்பொருள்... அதை இயல்பாக, ஆழமாக சொல்ல சகபயணிகளின் மனநிலையை கருப்பொருளாக்கிய வித்தகம்... என எல்லாமே கதைவெற்றிக்குப் பக்கபலம்..

கதைக்கள எழுத்துப்பயணம் சொல்லும் ஒவ்வொருவர் மனநிலையும் நியாயமானதாகவே தென்படுகிறது. சகபயணிகளின் "பைத்தியமா" போன்ற சூடான சாடல் சாட்டை பதப்பிரயோகங்கள் மட்டுமே அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவைக்கிறது..

பாரதி
01-03-2008, 05:14 PM
சில வரிகளில் வரும் சிறுகதைகளும் சில சமயங்களில் (!) சிறப்பானவையாகவே இருக்கின்றன. மிக அழகான விமர்சனத்துக்கு மிக்க நன்றி அமரன்.

kavitha
03-03-2008, 09:57 AM
உண்மை தெரியாதவரை பார்த்தவர்கள் குருடர்களாய்...

நல்ல கதை. ஆழமான கருத்து.

பூமகள்
03-03-2008, 11:52 AM
நெஞ்சை சட்டென்று தைத்துவிட்டது..!
அவ்விளைஞர் நிலையில் யோசித்துப் பார்க்கையில் மனம் கனக்கிறது.
மீண்டும் பார்வை வந்து, குழந்தையினைப் போல அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் கண் முன் விரிகிறது.

காட்சிகளை கண்ணில் கற்பனையாக ஓட விட தனி எழுத்து வல்லமை வேண்டும்..!!

அது உங்களிடம் நிறைய இருக்கிறது பாரதி அண்ணா.

நிறைய பதிவுகள் தர வேண்டுமாய் செல்லமாய் எல்லோர் சார்பிலும் வேண்டிக் கொள்கிறேன். :)

அழகிய தமிழாக்கத்துக்கும் பதிவிற்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..!

யவனிகா
03-03-2008, 12:10 PM
உற்சாகமாய் படிக்க ஆரம்பித்தேன்.
பாரதி அண்ணாவின் எழுத்துகளுக்கு ரசிகை நான்.
இதமாய் வருடி,புயலாய் உருக்குலைத்து,நின்று ரசிக்கும்படி வீசி என்று பலவிதமான பரிணாமங்கள் எடுக்கும் பெருவளிக்காற்று...உங்கள் எழுத்து வலி தந்து போகிறது இதமாய்...
பிரயத்தனப்படாமல் ஆடும் நாட்டியத்தின் இலகுத்தன்மை போன்ற வரிகள்
பாரதி அண்ணாவுக்குச் சொந்தம்...
இன்னும் வேண்டும் பாரதி அண்ணா...
நெகிழச்செய்யும் பதிவுகள்....

aren
03-03-2008, 12:13 PM
வாவ்!!! அருமையான கதை.

பார்வை நமக்கு இருப்பதால் அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. இல்லாதவர்களுக்கு அதன் அருமை தெரியும். அதே பார்வை திரும்பவும் கிடைத்துவிட்டால் சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாது.

அழகாக நகர்த்தப்பட்ட கதை. இன்னும் கொடுங்கள் பாரதி!!!

மதி
03-03-2008, 12:18 PM
அற்புதமான கதை..கொஞ்ச நாளைக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் வந்த போது அனுப்பியவருக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பினேன்..

இதை மன்றத்தில் பதிந்தமைக்கு நன்றி அண்ணா..

சிவா.ஜி
03-03-2008, 12:36 PM
நல்ல படைப்புகளை ரசிக்கும் ரசனையாளர்....அனைவரும் ரசிக்க வேண்டி..
ஆழ்ந்து சுவைக்கும் விதமாக அழகான மொழிபெயர்ப்பு பாரதி.
அருமையான கவிதையான கதை.சொன்ன விதமும்....மூலத்தை சிதைக்காத சிறப்பும்...அற்புதம்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாரதி.

அன்புரசிகன்
03-03-2008, 02:10 PM
இறுதி பந்தியில் சட்டென கனத்துவிட்டது. காணாததை கண்டவன் போல் என வாய்ப்பேச்சில் பேசுவோம். நடைமுறையில் நடக்கும் போது ......

பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

பாரதி
05-03-2008, 06:07 PM
கருத்தளித்த கவிதா, பூமகள், யவனிக்கா, ஆரென், மதி, சிவா, அன்புரசிகன் ஆகியோருக்கு நன்றி.

மன்மதன்
17-03-2008, 03:40 PM
மனசை தொட்டது...

பகிர்தலுக்கு நன்றிங்க..

மனோஜ்
17-03-2008, 05:21 PM
கண்பார்வையில்லாது கண்பார்வைகிடைத்தவருக்கு பார்பது எவ்வளவு மகிழ்ச்சி
சிலறுக்கு கண்ணிருந்தும் பார்பது இல்லை நல்லவைகளை
நல்லகதையை மொழிபெயர்ந்து பகிந்தமைக்கு நன்றி பாரதி அண்ணா

இளசு
17-03-2008, 09:32 PM
அன்பு பாரதி

உன்னைக் கவர்ந்தவற்றை உனக்கே உரிய தனித்துவ நடையில் நீ தர
படித்த மனதைச் சுண்டியிழுக்கும் கதைக்கருவால்... சொன்ன பாணியால்..

நெகிழ்ந்துவிட்டேன்.

சற்றும் யூகிக்கவில்லை முடிவை..
ஏனெனில் ஏசிய அந்த சகபயணியின் விழிகளே எனக்கும் இருந்தன..
இறுதிவரி இமை திறக்கும்வரை..

இனிய இலக்கியப்பணிக்கு அண்ணனின் வாழ்த்துகள்!

பாரதி
22-03-2008, 07:44 AM
கருத்தளித்த மன்மதன், மனோஜ், அண்ணாவிற்கு என் நன்றிகள்.