PDA

View Full Version : சுஜாதா - ஒரு சகாப்தம்..



இளசு
27-02-2008, 09:11 PM
எழுத்தாளர் சுஜாதா

எழுபத்து மூன்று வயது தமிழ் இளைஞர்.

சீரங்கம் தந்த சிறந்த மூளைக்காரர்.

மின்வாக்கு இயந்திர வடிவமைப்பாளர்.

எண்ணற்ற தமிழ் இதயங்களில் தமிழ் படிக்க விதை விதைத்தவர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழில் கணினி தட்டச்சிய முன்னோடி..

கணேஷ் -வசந்த் - கற்பனையா நிஜமா என மயங்க வைத்தவர்.

ஏன் எதற்கு எப்படி, தலைமைச் செயலகம் - அறிவியலை இப்படியும் தரமுடியுமா என அசரவைத்த ஆசான்.

எதையும் ஒருமுறை, நில்லுங்கள் ராஜாவே, நிர்வாண நகரம்,பதவிக்காக, அனிதா இளம்மனைவி, கொலையுதிர்காலம் - தொடர்கதைகளின் புது அத்தியாயம் தமிழில் தொடங்கிவைத்த முனைவர்.

சிறுகதைகள் தமிழில் படிப்பதை இளைய தலைமுறைக்கு ''கவுரவச் சின்னமாய் '' ஆக்கியவர்..

கனவுத்தொழிற்சாலை, சீரங்கத்துத்தேவதைகள் - நிகழ்வுகளை இப்படி சுவையாய் படம்பிடித்து எழுதலாம் என சொல்லித்தந்த குரு..

ஜீனோ, என் இனிய இயந்திரா - அறிவியல் நவீனத்தின் தமிழ் அரிச்சுவடி..

புறநானூறு உரைகள் - வேர் மறக்கா தமிழ் நேசன்..

சாகும் நாள் தெரிஞ்சுட்டா, வாழற நாள் நரகமாயிடும் ( சிவாஜி)

அங்கெல்லாம் கடமை மீற லஞ்சம், இங்கே கடமை செய்யவே லஞ்சம் - (இந்தியன்)

வணிகப்படங்களைத் தாண்டித்தைக்கும் வசனகர்த்தர்..

கற்றதும் பெற்றதும் - அன்றாட வாழ்க்கையை அத்தனை அழகாய்ச் சொன்ன வல்லுநர்.

எளிமை + இனிமை + திறமை = மூன்றும் கொண்ட எழுத்துகளின் மொத்த உரிமையாளர்..

இத்தனை பட்டைகள் ஒளிவீசும் ஒரு தமிழ் வைரம் இனி நமக்கு அமைவது அரிது..

மதன், ராஜேந்திரகுமார், பாலகுமாரன் - ஒவ்வொரு பட்டைக்கு சில வாரிசுகள் உண்டு..

ஒன்றாய் அமைந்த பேரறிவாளர் - ஐயா உங்களைப்போல் இனி இங்கு
யாருண்டு?

ஈடில்லா இழப்பு நாள்...இன்று!

அமைதியிழந்து அலைபாய்கிறேன்...

என்னவன் விஜய்
27-02-2008, 09:25 PM
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே. எல்லா வயது மக்களும் படிக்க கூடியது அவருடைய எழுத்து. அவரின் பதிப்புகள் நிறைய படித்துள்ளேன், குங்குமத்தில் வந்து கொண்டிருக்கும் சுஜாதாவின் கேள்வி பதில் வரை .சுருங்க சொன்னால் அவரின் எழுத்துக்கள் தரமானது, சுவையானது, நவீனமானது

ஓவியா
27-02-2008, 09:32 PM
மனம் கனக்கின்றதே!!

எனது கண்ணீர் அஞ்சலிகள்.

மிகவும் அர்ப்புதமான எழுத்தாளர். எனக்கு பிடித்த வசனகர்த்தா.

அவரின் அன்பு குடும்பதினருக்கும், சொந்தங்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களை சமர்பிக்கின்றேன்.

அக்னி
27-02-2008, 09:46 PM
என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர்...
எளிமையாக, தெளிவாக, மனதில் பதியும் வண்ணம் எழுதும் ஆற்றல் மிக்கவர்...

உயிரோட்டமான எழுத்துக்குச் சொந்தக்காரர்... இன்று உயிரோடு இல்லை...
ஆனால், அவரின் எழுத்துக்கள் உலகுள்ளவரை உயிர்ப்பாக இருக்கும்...

தமிழுக்கு பேருதவி அவர் பிறப்பு...
தமிழுக்கு பேரிழப்பு அவர் இறப்பு...

மரணத்தை எழுத்துக்களால் வென்ற எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு,
எனது கண்ணீர் அஞ்சலிகள்...

அறிஞர்
27-02-2008, 09:57 PM
பல முகங்கள் கொண்ட சிறந்த எழுத்தாளர்.
வியாதிகளால் உடல் பல முறை பலவீனம் அடைந்தும்
அவரின் எழுத்துக்கள் என்றும் பலவீனம் அடைந்ததில்லை.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஓவியன்
27-02-2008, 11:56 PM
சிறுவயதில் என் அறிவுத்தேடலுக்கு வழிகாட்டிய "ஏன் எதற்கு எப்படி..??" என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் சுஜாதா. அன்றிலிருந்து எத்தனை நாவல்கள், சிறுகதைகள், விஞ்ஞான விளக்கங்கள், நாடகங்கள், நகைச்சுவைகள்.......

ம், இனி இவையெல்லாம் ஒரு படைப்பாளியிடமிருந்து வருமா....???

ஆம், சுஜாதாவின் திறமையையே அதுதானே, எழுத்துலகில் அவர் தொட்டுப் பார்க்காத தளமே இல்லை எனலாம். அத்துணை பன்முக திறன் கொண்ட எழுத்தாளர். வர்த்தக ரீதியிலான படைப்புக்களாக இவரது பல படைப்புக்கள் வந்திட்டாலும், இவர் எழுத்துக்கள் தனித்தன்மையானவை, எதற்கும் சோரம் போகாத, புதுமையானவை....

அந்த புதுமைதான் காலமெல்லாம் சுஜாதா புகழை இத்தரணியில் பாடப் போகிறது...!!

எல்லோரையும் தவிக்கவிட்டுவிட்டு பிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலைக்கு பறந்துவிட்ட அன்பான எழுத்தாளரே....!!

உங்கள் பாணியிலேயே சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்.....

பிரிவோம், சந்திப்போம்........!!!

aren
28-02-2008, 12:43 AM
இது தமிழ் மொழிக்கு ஒரு பெரிய இழப்பு. அவருடைய கரையெல்லாம் செண்பகப்பூ இன்னும் என் மனதில். கணேஷ் - வசந்த் இன்னும் உண்மையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு அவருடைய எழுத்து.

அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுஜாதா - நிச்சயம் ஒரு சகாப்தம்தான்.

கண்ணீருடன்
ஆரென்

மதி
28-02-2008, 01:32 AM
எனது படிப்பார்வத்துக்கு வித்திட்டவர். அவரது பல அறிவியல் நாவல்களில் தொலைநோக்குப் பார்வையோடு பல அறிவியல் விஷயங்களை கூறியிருப்பார்..

அவரது மறைவு மிகப் பெரும் இழப்பே..
எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

சாலைஜெயராமன்
28-02-2008, 01:42 AM
தமிழ் எழுத்து உலகிற்கு மாபெரும் இழப்பு.

நுனிப்புல் மேயாத எழுத்தாளர். தமிழின் வளமையை எளிமையாக்கி தமிழ் தொண்டாற்றியவர். பிற மொழிகளை தாய்மொழியின் துணையோடு அணுகியவர்.

ஆச்சரியமான தகவல் திரட்டுகளின் மொத்த உருவம்.

பெங்களூருவில் 15 ஆண்டுகளுக்கு முன் இருதய நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தன் இயலாமையைக் கூட நகைச்சுவையாக்கியவர்.

அறிவியல் எழுத்தின் முன்னோடி.

கணையாழியின் கடைசிப்பக்கங்களால் பல இளைஞர்களை எழுத்து உலகில் உலாவரச் செய்தவர். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவி. அன்னாரது இழப்பால் தமிழ் உலகு நல்ல ஒரு இலக்கியவாதியை இழந்தது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சும் தமிழ் மன்றத்து உறவுகள்.

பாரதி
28-02-2008, 02:36 AM
எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அவரைப்பற்றி.

சிறுவயதிலிருந்தே என் மனதைக்கவர்ந்த மந்திரவாதி எழுத்தாளர் அவர்.

அவரது முதல் சிறுகதை 1953-ல் சிவாஜி என்ற இதழில் வெளிவந்ததாம்.

சிலிக்கான் சில்லுப்புரட்சி மூலம் தமிழில் கணினிப்புரட்சி ஏற்பட மூல காரணகர்த்தா. மின்னணு வாக்குமுறையை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்தவர்களில் முதலாமவர்.

ஆறாம்திணையை வளர்த்த அறிவியலாளர். அத்தனை கேள்விகளுக்கும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பதிலளித்த அற்புத சிந்தனையாளர். மனித உணர்வுகளுக்கு காரணம் உடலில் இருக்கும் வேதிப்பொருட்களின் வினை என்பதை சுவைபட உரைத்தவர்.

கணையாழியின் கடைசிப்பக்கங்களில் அனைவரையும் கவர்ந்தவர்.

"ஹைக்கூ" கவிதைகளை தமிழில் பிரபலப்படுத்தியதில் அவருக்கும் பெரிய பங்குண்டு. ஒரு வரிக்கதை, கவிதைகளின் முன்னோடி!

லட்சக்கணக்கில் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட "கணேஷ் - வசந்த்", ஜீனோ கதாபாத்திரங்களின் காரணகர்த்தா. அவரது படைப்புகளில் வரும் கதை நாயக, நாயகிகளை நிஜம் என்று நம்புவோர் பலருண்டு.

சிறுகதைகளை செதுக்கி, புது நடையில், புத்துணர்வூட்டும் வகையில் அவர் படைத்ததை தமிழ் என்றும் மறக்காது. விஞ்ஞான, துப்பறியும் கதைகளோடு நெஞ்சைப்பிழியும் கண்ணீர்கதைகளையும் படைத்தவர் அவர்.

பிரபல திரைப்படங்களின் கதை வசனகர்த்தா!

எழுத்துக்களில் கருத்தை மறைத்து, யோசித்து புரிய வைக்கும் வகையில் வார்த்தைகளை கையாண்ட புதுவள்ளுவர்.

என்றும் மாறாத இளமையை எழுத்தில் கொண்டு வந்த வசிய வித்தைக்காரர்.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழுலகம் கண்ட புதுமைப்பித்தன்.

தன் மகனின் ஜப்பானிய பெண் காதலை வரவேற்று திருமணம் செய்வித்த முற்போக்குவாதி.

அறிஞர் அப்துல்கலாமின் திருச்சி வகுப்பறைத் தோழர்.

நிரப்ப முடியாத இடத்தை விட்டுச்சென்றாலும் - அவரின் எழுத்துக்கள் என்றும் தமிழில் வாசம் வீசிக்கொண்டிருக்கும்.

வாழ்க சுஜாதா - ரெங்கராஜனின் புகழ்.


மேற்கொண்டு அவரைப்பற்றி அறிய:
http://www.writersujatha.com/index.html
http://en.wikipedia.org/wiki/Sujatha
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=sujatha

சிவா.ஜி
28-02-2008, 03:35 AM
இன்னும் என்னால் இந்த அதிர்ச்சியை ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை...
சமீபத்தில்கூட சிவாஜி பட வெள்ளிவிழாவில் உரையாற்றினார்.ரோபோ படத்திற்கும் அவர்தான் வசனம் எழுதுவதாகச் சொன்னார்.அதையும் வெற்றிப்படமாக்கி அதன் விழாவிலும் கலந்துகொள்வேன் என்று சொன்னவரை இறைவன் அவனுக்கு கதை சொல்ல அழைத்துக்கொண்டானே...

அவருடைய என் இனிய இயந்திராவில் உலவிய ஒரு கதாபாத்திரத்தின் பெயரையே என் மகனுக்கும் வைத்து அழகு பார்த்தேன்(சிபி)

இளசுவும்,பாரதியும் அந்த எழுத்துக்காரரைப் பற்றி எழுதியிருப்பது...முற்றிலும்....நிஜம்...அப்படி ஒரு எழுத்தை இனி எப்போது படிக்கப் போகிறோம்.
மனம் கணத்து நிற்கிறேன்.

sarcharan
28-02-2008, 05:40 AM
எங்கள் கல்லூரிக்கு 1995ல் வருகை தந்தார். இன்னமும் அவரது எளிமை எனக்கு பிடிக்கும்.

sarcharan
28-02-2008, 05:40 AM
http://tamil.sify.com/fullstory.php?id=14611739&page=1
Writer Sujatha worked in Bharat Electronics Limited(BEL) and not in BHEL.

யவனிகா
28-02-2008, 05:59 AM
பதிப்பை படிக்க ஆரம்பித்த போது சாதாரணப் பதிப்பு என்று தான் நினைத்து ஆரம்பித்தேன். தவறி இருப்பார் என்று நினைக்கவே இல்லை.
விக்கித்துப் போய்விட்டேன்.
சாவை பற்றியும் சாவிற்குப் பிறகும் என்றெல்லாம் அவர் எழுதிய வரிகள் கண்முன்னே வருகிறது. தோழிகள் நாங்கள் பேச ஆரம்பித்தால் சுஜாதா தான் பேச்சின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பார்.காலத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் பெரும் படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார்.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.

நாகரா
28-02-2008, 06:17 AM
வருவதும் போவதும் இவ்வுலக நியதி
நீவிர் இங்கே விட்டுச் சென்ற அமரச் சுவடுகளில்
நீவிர் என்றும் வாழ்வீர்
அவ்வுலக அமைதியை நீவிர் தழுவியிருக்கும் இவ்வேளையில்
உம் பிரிவால் இவ்வுலகில் வாடும் உம் குடும்பம் ஆறுதல் பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

lolluvathiyar
28-02-2008, 06:51 AM
அடடே நான் ஏதோ சுஜாதா பற்றிய புகழுரை திரி என்றல்லவா நினைத்தேன். படிக்க படிக்க தான் தெரிந்து கொண்டே அவர் இறந்து விட்டாரென்று. அவர் இறந்தாலும் அவர் படைப்புகள் நீன்ட நாள் இறக்காது.
இன்று அப்துல் கலாம் போல அந்த காலத்தில் சுஜாதா கனினி இழைஞர்களுக்கு ஒரு இஸ்பிரேசனாக இருந்தார்.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா எனக்கு மிகவும் பிடித்த நாவல்

பூமகள்
28-02-2008, 08:46 AM
எனக்கு அழுகையா வருது..!!:traurig001::traurig001:
அவரின் எழுத்துகளில் வெளியான என் இனிய இயந்திராவில் என் மழலைப் பருவத்தைக் கட்டிப்போட்ட மந்திர எழுத்தாளர் அவர்..!

கொலையுதிர்காலத்தில் பயமுறித்தி என்னை திணறச் செய்தவர்..!!

அவரின் எந்த புத்தகத்தையும் நான் படிக்க வாய்ப்புகளே கிட்டவில்லையெனினும் இங்கே பெரியண்ணா சொன்ன பின்னர், படிக்கவில்லையே என்ற வலி இன்னும் கூடி இதயம் குத்துகிறது.:frown::frown:

அதிர்ச்சியான செய்தி..!:frown:
இனியாவது அவர் புத்தகங்கள் கிடைத்தால் விடாமல் படிக்கனும். அது தான் நான் அவருக்கு செய்யும் அஞ்சலியாகக் கருதுகிறேன்.:icon_ush:

அவரின் எழுத்துகளில் அவர் எப்போதும் நம்முடன் உயிரோடு உலவிக் கொண்டு தான் இருப்பார்.

கண்ணீரோடு ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.:traurig001::traurig001:

அமரன்
28-02-2008, 08:49 AM
கண்களில் தண்ணீர் முட்டுகிறது.
வார்த்தை வர தட்டுதடுமாறுது.
என்னை போன்ற பாலர் நிலை எழுத்தாளர்களுக்க்கு உறுதுணையாக நிற்கும் ஆசான்.
குறிக்கோளாக இருக்கும் எழுத்துப் பல்கலைக்கழகம். துயர் பகிர்கின்றேன்.

செல்வா
28-02-2008, 09:03 AM
நான் அதிகம் வாசித்திருந்தது சுஜாதா அவர்களின் சிறுகதைகள் தான். என் மனத்தைக் கொள்ளை கொண்டவர். அவர் இறப்பு என்பது தமிழுலகத்துக்கு மிகப் பெரும் இழுப்பு.

சுகந்தப்ரீதன்
28-02-2008, 09:18 AM
பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் தன்னை நிலைநிறுத்தியதுதான் சுஜாதா அவர்களின் தனித்திறமை தனிப்பெருமை எனலாம்...!

காலத்திற்கு ஏற்ப படைப்புகளை படைத்து வாசிப்பவர்களை வசியம் செய்யும் வல்லமை மிக்கவர்...!!

ஆன்மீகமும் அறிவியலும் கலந்த கலவையாய் அவரின் எழுத்துக்களை நான் கண்டிருக்கிறேன்... இன்றைய சூழலில் அவரின் அடியொற்றி பயணிக்கும் எழுத்தாளர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்..!!

பிறக்கும் யாவரும் இறந்துதான் ஆகவேண்டும் என்றாலும் அவரின் இடத்தை இனி தமிழில் யார் வந்து நிரப்ப போகிறார்கள்...?! எதிர்கால தலைமுறையும் தமிழ்கற்க வேண்டும் என்ற அவரின் கனவை யார் நிரப்ப போகிறார்கள் என்று நினைக்கும்போது உள்ளம் உடைவதை தடுக்க முடியவில்லை...!!

அந்த தமிழ்பற்றாளனின் ஆத்மா சாந்தியடைய அந்த ஆண்டவணை வேண்டிக் கொள்கிறேன்...!!

சுஜாதா- தமிழ் எழுத்துலக பிரம்மா என்னை பொருத்தவரை..!!

மன்மதன்
28-02-2008, 11:34 AM
அதிர்ச்சி செய்தி..

ரசிகர்கள்/குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

ஓவியன்
28-02-2008, 12:18 PM
சுஜாதா நினைவலைகளில் கமலஹாசன்.... (http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml)

மலர்
28-02-2008, 01:36 PM
ம்ம்...அதிர்ச்சியான செய்தி..
சிறந்த எழுத்தாளர்...
அன்னாரின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்...

க.கமலக்கண்ணன்
28-02-2008, 03:15 PM
சுஜாதா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

சுமராக கூட எழுத முடியவில்லை...

rocky
29-02-2008, 05:06 AM
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மரணம் நிச்சயம் தமிழ் எழுத்துலகில் நிரப்ப முடியாத ஓர் இடத்தை தந்துள்ளது, பலரையும் போல் நானும் அவரின் எழுத்தில் மயங்கியிருக்கிறேன். அவரின் விஞ்னானக் கட்டுரைகளும், சிறுகதைகளும், எனக்கு மிகவும் பிடித்த கற்றதும் பெற்றதும், போன்ற படைப்புகளை இனிமேல் படிக்க முடியாது என்றென்னும் போது மிகவும் வருத்தமாகவே உள்ளது.

அவர் எந்த அளவுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதுவார் என்பதற்கு இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது இப்போது நியாபகம் வருகிறது. அவரின் படத்திற்காக ஆர் டி எக்ஸ் பாம் பற்றி ஒரு வசனம் எழுதச் சொன்ன போது இன்று வேண்டாம் நாளை எழுதித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் ஆர் டி எக்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு வந்து பல பக்கங்களைக் காட்டியிருக்கிறார், அப்போது மணிரத்னம் அவர்கள் ஒரு வரிதானே கேட்டேன் நீங்கள் எப்படிச் செய்வது என்பது வரை கொண்டு வந்து என்னை உள்ளே தள்ள பார்க்கிறீர்களா? என்று கேட்டாராம். ஒரு செயலை இந்த அளவு ஆராய்ந்து தெரிந்து கொண்டு நமக்கு மிகவும் எளிமையாக புரியும்படி சொல்லும் ஒரு எழுத்தாளரை இனி பார்ப்பது அரிதுதான்.

நம் மண்றத்தாரோடு சேர்ந்து நானும் அவரின் மரணத்திற்காக வருந்துகிறேன்.

சக்திவேல்
04-03-2008, 01:28 PM
தமிழ் விஞ்ஞான எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி.

பாமரனாக இருந்த என்னை கணணி அறிவுபெற்றவனாக்கி உலகம் முழுதும் வலம வரச்செய்தது, விஞ்ஞான எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள்தான் என்றால் மிகையல்ல, உன்மை.

ஆமாம், வணிகவியல் இளங்கலை (அரியர்களுடன்) முடித்த கையோடு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, அவரது "சிலுக்கான் சில்லுப்புரட்சி" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதன் பிறகு மதுரை சக்தி-சிவம் தியேட்டருக்கு அருகில் உள்ள BDPS கணனி பயிலகத்தில் கற்று தேர்ந்து அதன் தொடர்ச்சிதான்.

பாமர பட்டிக்காட்டனுக்கும் பரலக்ஸ் விதி, ரிலேடிவிடி களை எளிதாக விளக்கும் அவரது பாணியைவிட, பாமரனுக்கும் தமிழில் விளக்கவேன்டும் என்ற அவரது எண்ணாம் உயர்ந்து இருக்கின்றது. விஞ்ஞான எழுத்துக்களைபோன்றே அவரது நாவல்களும் பல தரப்பட்டோரிடம் பலவிதமான தாக்கத்தை ஏற்ப்படுத்தியது என்பதும் உன்மை.

அனிதா என் இளம் மனைவி
மேகத்தை துரத்தியவன்
எதையும் ஒருமுறை
கொலையுதிர்க்காலம்
சிவந்தகைகள்
கலைந்த பொய்கள்
.... மற்றும் பல.

இதில் மேகத்தைத்துரத்தியவன் என்னுள் பல்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது.

அதுபோலவே தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாட்டுடன் எழுதும் பாங்கு, திரைப்பட வசனம். முக்கியமாக தான் மேல்தட்டுமக்களுக்குமட்டுமானவன் அல்ல கீழ்தட்டுவர்க்கத்தினரும் என்னால் பயன்பெறவேன்டுமென்று என்று தன்னுடைய எழுத்துமூலம் சாதித்தும் காட்டிது. இவையெல்லாம் காலத்தால் போற்றக்கூடியவையாகும்.

அன்னாருக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலி. அவரது இழப்பால் வாடித்தவிக்கும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

தாமரை
04-03-2008, 04:44 PM
மீண்டு வருமா
உன்னுள் ஒடுங்கி
எரிக்கப்பட்ட அந்த
சில நினைவுத் துளிகள்...

உனது
வசீகர வார்த்தைகளில்
வயமிழந்து போனது
சில மனங்கள்...

உனது விஞ்ஞானப் பார்வையில்
வெளிச்சம் பெற்றன
சில மூளைகள்...

இன்னும் என்ன
வைத்திருந்தாய்
உன் இதயப் பேழைக்குள்?

உழைத்தது போதும் அண்ணலே
ஓய்வெடு

உன் வழியில் உழைக்க
சில இளைஞர் உண்டென்ற
நம்பிக்கையுடன்
ஓய்வெடு

இன்னொரு பிறவி வாய்த்தால்
சமகாலத்தில் பிறந்து
சிநேகிதமாவோம்
என் இனிய இயந்திரா!

இந்தத் திரி எங்கிருக்கிறது என்று தெரியாமல் கவிச்சமரில் புதைந்த இக்கவிதை அண்ணாரின் நினைவைப் போல தூசி தட்டப்பட்டு உரிய இடத்தில் வைக்கப்படுகிறது.

ஓவியன்
05-03-2008, 01:27 AM
நிஜத்துடன் இழப்பின் ஆற்றாமையை வரிகளிலே சுமந்து என்னையும் வலியில் பங்கெடுக்க வைத்தன செல்வ வரிகள்...

prady
05-03-2008, 03:11 AM
ஈடுசெய்யப்படமுடியாத இழப்பு என்பதற்கு முழு உதாரணம் சுஜாதாவின் மறைவு. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பது பற்றிய அவரது ஆராய்ச்சிகளின் முடிவில் அப்படியொருவர் இருப்பாராயின் - அவரைச் சபிக்கிறேன் - சுஜாதாவை எம்மிடமிருந்து பிரிக்கும் கணக்கை எழுதியதற்காக!

பட்டாம்பூச்சி
08-03-2008, 11:45 AM
எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி எழுத்துக்கள்:-

அப்போலோ தினங்கள்...
இன்று 18-வது நாள். எத்தனை பேருக்குக் கவலை, மனக்கஷ்டம். இதை விதி என்று சொல்வதா, தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்கவோ, மீண்டும் தாங்கவோ முடியாது. இனி, ஆஸ்பத்திரி பக்கமே வரக் கூடாதபடி பகவான் என்னைக் காக்க வேண்டும். மனைவியும் மகனும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டதை மறக்கவே மாட்டேன். அவர்கள் இல்லை என்றால் சீரியஸாகி விளைவுகள் விபரீதமாகி இருக்கும். வீட்டுக்குப் போக வேண்டும். ஒழுங்காகச் சாப்பிட வேண்டும்...........................


'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.

அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.

'எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'

'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.

சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.

'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'

கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.

ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'

ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.

சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.

'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது' என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.

சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.

ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.

பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.

'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'

'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'

'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.



சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.

'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...

'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்' என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.

அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.

'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்' என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!

இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?

-சுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்.

நன்றி : ஆனந்தவிகடன்

பட்டாம்பூச்சி
08-03-2008, 11:47 AM
சுஜாதா பற்றி சுஜாதா!



''சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து. 800 மில்லி உடம்புலயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம், சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, 'வர மாட்டேன்'னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், 'ஊம்... ஊம்!'னு மட்டும் சொன்னார். திடீர்னு 'நீ யாரு?'ன்னு கேட்டார். 'ஏன் இப்படிப் பேசுறீங்க... என்ன பண்றது சொல்லுங்கோ!'னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன். வாய் கோணித்து... ஸ்ட்ரோக்குன்னாங்க. கை வரலைன்னதுமே, 'ஐ யம் ட்ராப்டு. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!'னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். 'அப்டிலாம் சொல்லாதேள். நான் இருக்கேன்ல... நீங்க சொல்லச் சொல்ல... நான் எழுதித் தர்றேன்'னேன். அவருக்குக் கேட்கலியா, கேட்க விரும்பலையான்னு தெரியலை!

ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பார்த்துண்டேன். அவருக்கே அவருக்குனு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, 'எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாமச் சாப்புடுறது. இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்பமாக்கிடாது!'னு சிரிப்பார். நல்ல மனுசன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.

சின்ன வயசுல எல்லாம் அவ்வளவா காசு பணம் வரலை. ஆனா, ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமாப் பார்த்துக்கிட்டார். என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்னப் பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா. இதைச் சொன்னா, 'அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம். அவாளுக்கெல்லாம் யங் ப்ரைன். உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து இல்லியா'ன்னுவார். அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும். அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாசுக்குப் போறதில்லை. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார். இனி எனக்கு என்ன இருக்கு. ஆனாலும் போகணும். அவர் இருந்தா, அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?

ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, 'ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?'ன்னாரு.

தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா 'தேங்க்ஸ்' சொல்வார். 'எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?'னு கேட்டா, 'உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே!'னு சிரிப்பார்.

ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி... நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..!

'பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?'னு ஒருத்தர் கேட்டா. ஆமா, அவர் இப்ப 'பாடி' ஆயிட்டாருல்ல... இனி அவர் வெறுமனே 'பாடி' மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..?!''

சுஜாதாவின் இந்தக் கேள்விக்கு அந்த 'சுஜாதா' பதில் சொல்லி இருக்கலாம்!

நன்றி : ஆனந்தவிகடன்

பட்டாம்பூச்சி
08-03-2008, 11:48 AM
ஓர் உதாரணம்!

மரணம் ஒரு கறுப்பு ஆடு. அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப் பூவைத் தின்றுவிடுகிறது!

என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் சுஜாதா. 1995ம் ஆண்டு கணையாழி, 'தசரா' என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மண்டபத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன் போன்றோர் பங்கேற்க நடைபெற்றது.

சுஜாதா பேசும்போது கணையாழி இதழுக்கு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் சுகமான சுமையைத் தான் ஏற்றிருப்பதாகவும் இவ்விதழில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்று வெளிவந்திருப்பதாகவும் கூறி என்னுடைய 'தூர்' கவிதையைப் படித்துக் காட்டினார். அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது.

'முத்துக்குமார் என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்றே தெரியாது!' என்று சொல்ல, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த நான் கை தூக்கினேன். 'இதை எழுதிய முத்துக்குமார் நீங்களா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'கை தட்டுங்கள் அந்தக் கவிஞனுக்கு' என்று சுஜாதா சொல்ல, அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிர்ந்தது. அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நபர் மேடைக்குச் சென்று சுஜாதா காதில் ஏதோ சொல்ல... 'இந்தக் கவிதையை எழுதிய முத்துக் குமாருக்கு இவர் ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கிறார். வாங்க முத்துக்குமார், வந்து வாங்கிக்கங்க. உண்மையிலேயே ஆயிரம் ரூபா!' என்று சுஜாதா குழந்தை ஆனார். நான் மேடைக்குச் சென்று பணத்தை வாங்கினேன். இருபது ஐம்பது ரூபாய்த் தாள்கள். அந்தப் பணத்தை நான் எண்ண ஆரம்பித்ததும், அரங்கம் சலசலப்புக்குள்ளானது. நான் அதில் ஐந்நூறு ரூபாயை கணையாழியின் வளர்ச்சிக்கு என்று கொடுத் தேன். அரங்கம் மீண்டும் கை தட்டல்களால் அதிர்ந்தது. ஒரு திரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி போல அமைந்த இச்சம்பவமே ஒற்றையடிப் பாதையில் திரிந்துகொண்டு இருந்த என் கவிதைப் பயணத்தை தண்டவாளப் பாதைக்குத் தடம் மாற்றியது. அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை எனக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்தவர் சுஜாதா.

அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அப்போலோ விரைந்தேன். அவரை நான் எப்போது சந்தித்தாலும், 'உங்களுக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்பேன். பதிலுக்கு அவர், 'என்னுடைய ஆசிகள்' என்று தலை மேல் கை வைத்து வாழ்த்துவார். இன்று அவர் கைகள் உயர்த்தப்படவே இல்லை. அந்த ஆசிகள் மட்டும் பத்திரமாய் என் நெஞ்சில்!

கவிஞர் நா.முத்துக்குமார்

நன்றி : ஆனந்தவிகடன்

சிவா.ஜி
08-03-2008, 11:58 AM
சுஜாதா அவர்களின் கடைசி நிமிடங்களைப் படித்து மனது வலிக்கிறது.எவ்வளவு அருமையான சிந்தனையாளர்...இன்று நம்மிடையே அவரில்லையென்றாலும்...அவரது எழுத்துக்களால் என்றுமிருப்பார்.
பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் பட்டாம்பூச்சி.

ராஜா
08-03-2008, 02:07 PM
இந்தியாவில் தேர்தல்கள் நடக்கும்போதெல்லாம் நாம் சுஜாதாவை மனதாலும், விரலாலும் ஸ்பர்சிக்க முடியும்.

அவர் படைப்புகளில் மாஸ்டர் பீஸ் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தை குறிப்பிடலாம்.

பன்முகத் திறன் கொண்டோரை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். அதுவும் அவர்கள் அவசியம் தேவைப்படும் இந்த கடுமையான காலகட்டங்களில்...

அமரன்
08-03-2008, 02:15 PM
சுஜாதா.... ஒரு சகாப்தம்.. எனக்கு அந்நியமான அவரது எழுத்துகள், அந்நியதேசம் வாழ் தமிழர்களையும் அவர்பால் பற்றுள்ள்வர்களாக மாற்றி உள்ளது. இந்த ஒன்று அவரது படைப்புகளை தேடிப்படிக்க ஊக்கம் தருகிறது.

அவர் தொடர்பான தகவல்கள் ஒரு ஆவணமாக மன்றத்தை அலங்கரிக்கட்டும். அதனால் தொடர்பான இத்திரியுடன் இணைக்கப்பட்டுள்ளது பட்டாம்பூச்சி பகிர்ந்த ஆனந்தவிகடன் பதிவுகள்..

நன்றி.

prady
08-03-2008, 07:53 PM
சுஜாதா தொடர்பான அண்மைய தகவல்கள் சிலவற்றை தொகுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. தனது எழுத்தின் மூலமே கண்டங்களை இணைத்து ஒரு பரந்த வாசகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் சுஜாதா.

அவரை கடல் கடந்து வந்து 2004ஆம் வருடத்தில் சந்தித்ததை மறக்கவே முடியாது. சிறு பையன்களாக இருந்த என்னையும் என் நண்பரையும் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்திக்கும் முன் அனுமதி கொடுத்தவர், பின்னர் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் எம்மோடு கழித்தார்.

இப்படிப்பட்டவர்களெல்லாம் இறப்பார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியாமலிருக்கிறது. அவரது அத்தனை படைப்புக்கள் மற்றும் அவர் பற்றிய தொகுப்புக்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தமிழ் மன்றத்தில் ஆவணக்காப்பகம் போன்று பாதுகாக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

pathman
10-03-2008, 10:41 AM
சுஜாதா அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அறிவியலை பல விஞ்ஞான விடயங்களை புரியும் தமிழில் தந்தவர்.

அவரின் நூல்களின் வழியே தொடர்ந்து நம்மோடு வாழ்வார்.

gankrish
12-03-2008, 12:20 PM
அவரின் பல கதைகள் (முக்கியமாக..crime கதைகளில்.கணேஷ், வஸந்த் character) ரொம்ப பிரபலம். அவரின் science fiction கட்டுரைகளும் அருமையாக இருக்கும்.

ரங்கராஜன்
07-04-2009, 12:39 PM
இந்த பதிவை இப்பொழுது தான் பார்த்தேன், இதை படிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வந்து விட்டது, இளசு அண்ணா நீங்க ஒரு வாக்கியம் சொல்லி இருந்தீங்க

சிறுகதைகள் தமிழில் படிப்பதை இளைய தலைமுறைக்கு ''கவுரவச் சின்னமாய் '' ஆக்கியவர்.

நேற்று தான் சிவாஜி அண்ணாவிடம் பேசும் பொழுது சொன்னேன், சுஜாதாவின் புத்தகங்கள் படிப்பது இப்பொழுது எல்லாம் ஒரு கவுரவச் சின்னமாக இளையவர்கள் நினைக்கிறார்கள் என்று. நம் உறவுகளின் ஐயாவை பற்றிய எண்ணங்கள் படித்து மனது கனத்து போனது.

அவர் இறந்து விட்டார் என்று கேள்விபட்டவுடன் தொடர்ந்து இரண்டு நாள் நான் பைத்தியம் மாதிரி அவரை பற்றியே நினைத்துக் கொண்டு தெரு தெருவாக சுற்றியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் உயிருடன் இருந்த வரை அவரின் எழுத்துக்களை தான் காதலித்தேன், அவர் இறந்த பின் அவரையே காதலிக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு எளிமையான மனிதர் தெரியுமா, அவர் இறந்த பின் அவரை வைத்து இருந்த பாடையின் விலையை தவிர வேறு எந்த விதமான ஆடம்பரமும் இல்லை, அவரின் இறுதி ஊர்வலம் கூட மிக மிக அமைதியாக நடந்தது, அவரின் குணத்தை போலவே.

சுஜாதா ஐயா பிறக்கும் பொழுது அவரை முதல் முதலில் தொட்டது யார் என்று தெரியவில்லை, ஆனால் அதே பெருமை எனக்கும் இருக்கிறது. ஏனென்றால் அவரை கடைசியாக தொட்டது நான் தான், அந்த காட்சி இன்னும் என்னுடைய கண் முன்னே இருக்கிறது. அவர் உடல் அங்கு எரிந்துக் கொண்டு இருக்கும் மின்சார கூண்டுக்குள் மெதுவாக செல்ல, முதலில் கால்கள், இடுப்பு வரை செல்ல, அவர் தலை உள்ளுக்குள் போவதற்கு முன் குனிந்து அவர் தலையை தொட்டு என் கண்ணில் ஒத்திக் கொண்டேன், கூண்டின் கதவு மூடியது, சொர்கத்தில் என்னுடைய ஆசானுக்கு கதவு திறந்து இருக்கும்.........

உண்மையிலே நீ ஒரு சகாப்தம் தான்............

பாரதி
27-02-2010, 03:38 PM
கால வெள்ளத்தில் கரையாத எழுத்துகளைத் தந்த சுஜாதா
கண்கூசா வெளிச்சமாக என்றும் நம்முடன் இருப்பார். வாழ்க அவரது புகழ்.

என்னவன் விஜய்
28-02-2010, 11:45 PM
அட, அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன! ம், நாட்கள் ஓலிம்பிக்ஸை விட அதி வேகத்தில் நகர்கின்றன.

விஞ்ஞான எழுத்தோவியத்திற்க்கு என் வணக்கங்கள்.

சுஜா
03-03-2010, 08:52 AM
என்னை வெவ்வேறு தளங்களில் படிக்க வைத்தவர்
சுஜாதா . என்றும் அவர் நினைவில் சுஜா .