PDA

View Full Version : நிந்தனைப் பூ வாசம்!அமரன்
26-02-2008, 04:52 PM
துவக்கப்பள்ளி தோழன்
நடுநிலைப்பள்ளி இருப்புக்கதவண்டை
போடுகிறான் பாதரச குண்டை.
மறந்துவிட்டாய் என்னைநடுநிலைப்பள்ளி நண்பன்
கல்லூரி சாலையோரம் ஒதுக்கி
ஏற்றுகிறான் நகக்கண்ணில் ஊசி.
பழையமாதிரி இல்லடா நீ
கல்லூரி சினேகங்கள்
அலுவலக அவசரத்தில் மறித்து
குரல் பிசிறுகிறது..
ரொம்பத்தான் மாறிட்டே
கண்டுக்காமப் போறியேஅனைத்து நிந்தனைகளிலும்
ஒத்த வாசனை
மித்திர துரோக வேதனை
நான் செய்யாத ஓரவஞ்சனை!.அவர்களுக்குத் தெரியுமா..
அவர்தம் நினைவுகளின்
ஈரம் குடித்து வேரூன்றி
தழைக்கிறது என் வாழ்க்கை!!

பூமகள்
26-02-2008, 05:10 PM
அழைக்காவிட்டாலும்
நட்பும் பந்தமும்
நம்மில் ஊறியிருப்பதை
நட்புள்ளம் அறிய
மறக்க வைத்த
துடிக்கும் யுகம்..!!

காலமும் சூழலும்
களைப்பின்றி மாறினாலும்
அருகம்புல்லாய் வேரூன்றிய
நேச நினைவுகள்
சொல்லால்
விளக்க இயலுமா??

புரியாத போக்குகளில்
பலர் புலம்ப..
புரிய வைக்க நேரமின்றி
வாழ்க்கை நினைவுகளால்
கடந்து நிற்கிறது..!!

எப்போதாவது திரும்ப
பார்க்கும் புகைப்படங்களில்
முகம் பார்த்து கண்
கலங்கி நிற்கிறது..!

அண்மையின் இன்மை
இருந்தாலும்
அன்பின் குறையென்று
கொள்ளலாகுமா??

------

மிகவும் எளிய நடையில் புரிய வைத்த நடை அமரன் அண்ணா. கிரேட்.
நல்ல வரிகள்..! இவ்வகை சாடல்களை நிறைய பார்த்திருக்கிறேன்..!!
என் பழைய நட்புகளில் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்கள் பதிவு.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அண்ணா. :)

இளசு
26-02-2008, 06:11 PM
அபாரம் அமரா
என் மனதை அடிக்கடி நெருடும் விடயம் இது..
கருவாக்கி கவிதையாக்கி ரசவாதம் புரிந்துவிட்டாய்..

இதன் ''எதிர்சீட்டு பார்வை'யாய் லாவண்யா முன்னர் மன்றத்தில்
கவிதை எழுதியிருக்கிறார். நண்பகல் ஏக்கம் என நினைவு..

இரண்டையும் ஒருசேர வாசித்தால்
இரு பக்க மனநிலைகளை ஒட்டி/வெட்டி
இதமாய் இன்னும் அலசலாம்..

யவனிகா
26-02-2008, 07:55 PM
அருமை...அமரன்...
நினைவுகளில் நாம் வாழ்கிறோம்..
நிஜத்திலும் கொஞ்சம் பிரதிபலிக்கலாம் தான்...
வாழ்த்துக்கள் அமரன்...

செல்வா
27-02-2008, 07:00 AM
படிச்சவுடனே பச்சக்குனு ஒட்டிக்குற ஒரு கவிதை. மனதில் நினைவுகள் இருந்தாலும் வாழ்க்கைச் சூழல்களால் அடிக்கடி சந்திக்க முடியாத பேசிக்கொள்ள முடியாத நிலை.
நானும் என் நண்பனும் விடுமுறை நாட்கள்ள அவன் முதலில் எங்க வீட்டுக்கு வருவான் மதிய உணவு முடிச்சுட்டு கெளம்பி அவங்க வீட்டுக்கு போறது சாயங்காலம் தேநீர் குடிச்சுட்டு கெளம்பி வந்தா
நாகர்கோவில் பேருந்து நிலையம்
நிறைந்து வழியும் மக்கள் கூட்டத்தால்
அப்போது தான் வந்து நின்ற
ஆளில்லா பேருந்தில் அமர்ந்து
பேச ஆரம்பிப்போம்.
ஊர்க்கதை உலகக் கதை
உன் கதை என் கதை
உருவிழந்த காதல் கதை
உருவான புது நட்பு
என அனைத்தும் ....
நடு நடுவே நடத்துநர் வந்து
விடுவார் இடைவெளி -
இந்த வண்டி நடத்துநர் வந்தால்
அந்த வண்டி -இன்னும் அடுத்த வண்டி -
இப்படியாக நீளும் பேச்சு - எங்கள் ஊர்
கடைசி வண்டி வந்ததும் கலைந்து போகும்
அப்படியும் மனதில் பேசத் தயாராக
ஆயிரம் கதை ....
கடைசி வண்டில வீட்டுக்கு வந்தா ... ஊரே மயான அமைதில இருக்கும்.
வீட்டுல போய் கதவ தட்டுனா தினம் தினம் அர்ச்சனை ...
பூனை நடைபோட்டு பானைகளை உருட்டி ...
உருட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம்
காதில் விழும் ஏச்சுச் சத்தம்.
சாப்பிட்டு முடிச்சு தூங்கி எழுந்தால்
மறுநாளும் இதே தொடரும்
---
அன்று ஒரு நாள் ஆனந்த திருநாள்
இன்று நினைத்தால் என்னன்ன சுகமோ...
எதற்கோ எழுதியது இதற்கும் பொருந்துகிறதே...

மதி
27-02-2008, 07:48 AM
அட...எல்லோருக்கும் ஒரே ஏக்கங்கள்...
பழகிய முகம் மறக்க ஆரம்பித்தாலும் நினைவுகள் என்றும் பசுமையாய்.. இத்தகைய சாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன்.. கண்டிருக்கிறேன்..

மாறிவிட்டாய் நீ...
என்றும் மாறாது
இந்த பேச்சு..

அமரன்
27-02-2008, 05:04 PM
இதன் ''எதிர்சீட்டு பார்வை'யாய் லாவண்யா முன்னர் மன்றத்தில்
கவிதை எழுதியிருக்கிறார். நண்பகல் ஏக்கம் என நினைவு..
இரண்டையும் ஒருசேர வாசித்தால்
இரு பக்க மனநிலைகளை ஒட்டி/வெட்டி
இதமாய் இன்னும் அலசலாம்..

கல்விநிலைய நிலையும் கல்விநிலையும் பணிப்படி நிலையும் மாறும்போது நட்பு வட்டாரமும் மாறுகின்றது. அதனால் புதிதாக பலர்.. பழக முடியாமல் பழையவர்கள் பலர்.. தினப்படி கேட்கும் குரல்கள் முன்னை மாதிரி நீ இல்லை.. ரொம்பத்தான் மாறிட்டேன்.. வசதி வாய்ப்பு வந்ததும் நடந்து வந்த பாதையை மறந்துட்டே.. இன்னும் எத்தனையோ... அவை வெளிக்கொணர்ந்த கவிதை இது..

லாவன்யாவின் எதிர்சீட்டு இதோ.. படித்தேன்.. மறுபக்கம் வெளிச்சமிடப்பட்டுள்ளது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=574

அமரன்
27-02-2008, 06:25 PM
மிகவும் எளிய நடையில் புரிய வைத்த நடை அமரன் அண்ணா. கிரேட்.
நல்ல வரிகள்..! இவ்வகை சாடல்களை நிறைய பார்த்திருக்கிறேன்..!!
என் பழைய நட்புகளில் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்கள் பதிவு.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அண்ணா. :)


என்ன செய்வது. எழுதும் ஒவ்வொரு தடவையும் எளிமையாக எழுதவே நினைக்கின்றேன். ஆனால் முடிவதில்லை. இம்முறை இயன்றதை நினைத்து மகிழ்ச்சி.. நன்றி பூ.

அமரன்
27-02-2008, 06:39 PM
நினைவுகளில் நாம் வாழ்கிறோம்..
நிஜத்திலும் கொஞ்சம் பிரதிபலிக்கலாம் தான்......

நிஜத்தில் பிரதிபலிக்கப்படுகிறது..
பிரதிபடுத்தும் காகிதம் மட்டும் மாறுகிறது..
சுவடிகளாக பழைய காகிதங்க*ள் பத்திரப்படுத்தப்பட்டு,
வாழ்க்கை என்னும் மொழி செம்மைப்படுத்தப்படுகிறது..
அதற்காக எந்நேரமும் சுவடிகளைப் புரட்டுவது முடியாது.
அதனால் சுவடிகள் கோபம் கொள்ளலும் ஆகாது..

ஊக்க ஊசியாக உங்கள் உற்சாகப்பதிவு.. நன்றி யவனிகா.

பாரதி
28-02-2008, 03:48 AM
நெஞ்சை நெருடும் கவிதை அமரன். மனமார்ந்த பாராட்டுக்கள்.

சிவா.ஜி
28-02-2008, 04:58 AM
நிதர்சனம் அமரன்.அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு அவஸ்தையான நேரங்கள் அவை.
உன்னை மறக்கவில்லையடா....
எந்த நினைவும் இன்னும் இறக்கவில்லையடா
சந்திக்க நேரம்தான் பிறக்கவில்லையடா...

என்று புலம்பத்தான் தோன்றுகிறது...ஆனாலும் அந்த நேரத்தில் அசடு வழிவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.

நினைவுகளை மீட்டெடுத்து...நிதர்சனம் காட்டிய கவிதைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமரன்.

ஓவியன்
28-02-2008, 06:09 AM
சேரனின் ஆட்டோகிராப் படத்தைப் போல எல்லோரது நினைவுகளையும் தட்டிவிட்டு தானும் சத்தம் போடாமல் ஓரத்தில் நின்றுகொண்டு தன்னுள் நம்மையும் அடக்கிவிடும் ஓர் அற்புதக் கவிதை....

மனதாரப் பாராட்டுகிறேன் அமர்...!!

____________________________________________________________________________________________________

இப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பல்கலைப் படிப்புக்கள் முடிந்து நான் என் சொந்தப் பகுதிக்கு மீள வந்திருந்த நாட்களில் , அப்பா கூறிய பணியின் நிமித்தம் எங்கோ தொலைவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நான் தாகத்துக்காக தண்ணீர் வேண்டி ஒரு குடிசையின் படலையைத் தட்ட.....

இடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவந்து யாரது....

அட, நீயாடா...??
எப்படி இருக்கே.....
நம்மை எல்லாம் மறந்திருப்பியே....

என்று கேட்க, என் ஞாபக அலைகளில் ஆரம்ப பள்ளியில் என்னோடு கூடவே படித்த அந்த பெண்ணின் முகத்தை திரும்ப திரும்ப அந்த தாயின் முகத்தில் பொருத்திப் பார்த்து நிதர்சன நிஜத்தையும், "நம்மை எல்லாம் மறந்திருப்பியே...." அவர் வாய்வந்த வசனத்தையும் மறக்கமுடியாமல் வலியுடனேயே.....

இல்லை, தண்ணீர் கொஞ்சம் தாறீங்களா என்று கேட்ட நினைவலைகளை கிளறிவிட்டது நீங்கள் கல்லாய் என் மனக் குளத்தில் எறிந்த கவிதை அமரன்....

அமரன்
28-02-2008, 08:54 AM
அன்று ஒரு நாள் ஆனந்த திருநாள்
இன்று நினைத்தால் என்னன்ன சுகமோ...
எதற்கோ எழுதியது இதற்கும் பொருந்துகிறதே...

குருவே.. உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி. நிகழ்வு என்கவிதைக்கு காரணம். என்கவிதை உங்ககவிதைக்கு காரணம்.. அவ்வகையில் இருவரும் பாக்கியசாலிகள்.. நன்றி.

வாஸ்தவந்தான் செல்வா.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற முதுமொழிக்கமைய சில பால்யகால நட்புகள். அந்த ஓரிருவர் நேர்மறை வார்த்தைகள் தரும் தெம்பு இன்னும் பலநூறு மைற்கற்களை கடக்கலாம் என்ற வேகத்தை தரும்... அப்படியான் ஒருவன்கூட இதே வார்த்தைகள் சொல்லாமல் இருக்கமாட்டான்.

புலம்பெயர்ந்து பனிப்புலத்தை புகலிடமாக்கிய புதுதில், வாராந்த தொலைபேசல், மாதாந்தமாக மாற்றம் காணும்போது, அவனும் இந்த வார்த்தைகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டான். ஆனாலும் விடுமுறைகாலச் சந்திப்பு நீங்கள் சொன்னது போலவெ கழி(ளி)யும்..

அனுராகவன்
29-02-2008, 12:30 AM
வெளிநாடு சென்று
ஊருக்கு சென்றால்
இதே பேச்சு...
எங்களை மறந்துட்ட
ஒரு கடுதாசி போடல,...
வெளிநாடு போன
ஆளையே மறந்துட்ட.
ம்ம் நீ அப்ப உள்ள
மனுசியா...
..
..
இதே பேச்சு..
அதனால் ஊருக்கு போகவே கஸ்டமாக இருக்கு..
நன்றி அமரன்...
ஒவ்வருவருக்கும் ஏதோ ஒரு புலம்பல் உள்ளது..
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

க.கமலக்கண்ணன்
29-02-2008, 02:24 AM
மறக்க முடியாத நினைவுகளை

மனமுழுவதும் நன்றியுடன்

மறக்காமல் கவிதையாய் அளித்திட்ட அமரனுக்கு நன்றி...

ஆதி
29-02-2008, 04:28 AM
சூல்களில் பூக்கிற நாம்
சூழ்நிலைகளின் சிறையாளிகள்..
நட்பின் இந்த வாய்சாடல்
வருந்தங்களின் வார்ர்புகளால்தான்
ஆனாலும் நெஞ்சைத்தொடும் தருணம்
சுட்டும்விடுகிறது..
"மச்சான் நீ எல்லாத்தையும் மறந்துட்டடா எனச் சொன்னாலும் பதில் தரலாம்...
மாறிட்டடா எனச் சொன்னால் மௌனிக்கதான் வேண்டியுள்ளது, மாறித்தான் போய்ட்டனோ எனும் சுயக்கேள்விகளுடன்"

பழைய உணவுகளை பற்ற வைத்துவிட்ட கவி.. யார்த்த கவிதைக்கும் அமரனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

செந்தமிழரசி
03-03-2008, 05:50 PM
கானலாய் கழிந்த
காலங்களின் கைதப்பித்து
நானலாவிய பழைய
நட்பை சந்திக்க
போனகாலத்திலும்
பொழியப்பட்ட வார்த்தைகள் இவைதான்
மறந்துட்டடீ பழையவள் இல்லைநீ
வாய் தெறித்த வார்த்தைகள்
வேப்பம் சாற்றை
நெஞ்சின் நா கசக்க ஊற்றியது
நீர் நாக்கை விழிகள் நீட்டியது.

கடந்து வந்தவைகளை கண்முன் மீளக் கொணர்ந்தது கவிதை.

வாழ்த்துக்கள் அமரன்

அமரன்
03-03-2008, 07:03 PM
நடைமுறை வாழ்க்கையில் கண்டெடுக்கும் கவிதைகள் நெஞ்சைத் தொட்டுவிடும் என்பது மீண்டுமொரு தடவை நிரூபணம் ஆகியுள்ளது..

எப்போதும் போல என்னாக்கங்களுக்கு கொக்கிபோடும் உங்களூக்கங்கள் இப்போதும் கிடைத்ததுகண்டு மெத்தமகிழ்ச்சி. நன்றி அனைவருக்கும்..

சுகந்தப்ரீதன்
04-03-2008, 04:54 AM
அப்பாடா..!!

இப்பதான் அண்ணா முதன்முதலா உங்களோட கவிதை எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாட்டாம் தெளிவா விளங்குது..!!

உணர்வு கவிதைகள்தான் என்னை அதிகம் கவரும்.. அந்தவிதத்தில் உங்கள் கவிதை ரொம்பவே ஆழமாய் மனதில் நிறைந்துவிட்டது...!!

அப்புறம்... நீண்ட நாளைக்கு அப்புறம் சந்திக்கும்போது 'நீ என்னை மறந்துட்டட்டா-"ங்கிற வார்த்தையை இரண்டுபேர்ல யார் முதல்ல சொன்னாலும் அடுத்தவன் அமைதியாக வேண்டியதுதான்...!! அதனால் இனி நீங்க முந்திக்கொண்டு கேட்டுடுங்க...!! அப்பதான் அவங்களுக்கு இன்னும் இவன் நம்பளை மறக்கலைன்னு தெரியும்..புரியும்...!!

வாழ்த்துக்கள் அண்ணா.. தொடர்ந்து இதுமாதிரியும் கொஞ்சம் எழுதுங்கண்ணா...!!