PDA

View Full Version : தவம்தாமரை
24-02-2008, 11:36 AM
அலைகள் அறைந்தறைந்து
மொட்டையாய்ப் போன
மனத்தின் மோனத் தவம்

அறைந்து எழுந்த
அலைகளின் அழகு
தலைக்குப் பின்
வர்ணஜாலம் காட்டி
மதியும் ரவியும்
எழுந்து விழும்
அழகு என

நிழற் படங்களாய்
அதன் பிம்பங்கள்
சுவர்களை அலங்கரிக்க

சலனமின்றி
மொட்டைப் பாறையின்
மோனத்தவம்

சாலைஜெயராமன்
24-02-2008, 12:59 PM
பாலச்சந்தரின் சிந்துபைரவி திரைப்படத்தின் கடற்கரைப்பிண்ணனியைக் கவிதையாக்கித் தந்துள்ளளீர்கள்.

அறைந்தெழும் எண்ண அலையின் மோதல், மதியும் ரவியும் ஒரு சேர எழுந்ததன் பிண்ணனி, சலன மற்ற பாறையாய் மனம். ஆகா அதீத கற்பனை வளம். எண்ணங்கள் அடங்கி அசைவற்ற நிலையில் மனம் கல்லாகுமா- கற்பனைதானே ஆகும்.

தவனிலையின் அசைவற்ற பெருனிலையின் அழகை வார்த்தைகளாக்கி வடித்துள்ளீர்கள். மனம் கல்லாய் மாறுவது உயர்நிலையாகிய ஏகாந்தனிலைதானே, மனோநாசம். பின் மனோ ஜெயமாகிறது.

மனிதனால் மட்டும் ஆகக் கூடும் அதி உன்னத மோன நிலையை வார்த்தையாக்கி வடித்துள்ளீர்கள் திரு தாமரை.

நல்ல கவி தந்ததற்கு நன்றி

ஆர்.ஈஸ்வரன்
24-02-2008, 01:47 PM
நல்ல கவிதை வாழ்த்துக்கள்

ஆதி
25-02-2008, 06:59 AM
எண்ண பிம்பங்கள் அறைந்தறைந்து பின் அடங்கும் மோனநிலையில் மன
ம் வெட்டை வெளிப்போல் விரியும் இது தியானத்தின் முதலும் உச்சமும்..

மனதுக்கு நாம் வசப்பட்டிருந்தது தகர்ந்து மனம் நமக்கு வசப்படும் நிலை இது..

முதல் பத்தியிலேயே கவிதை முடிந்தது போல் தோன்றியது அண்ணா எனக்கு.. கருத்தை புரிய வைக்க நீண்ட ஒரு விளக்கம் போல் மீதிவரிகள் அழகின் சிறப்பு..

ஞானக்கவிதைக்கு உங்களுக்கும் நன்றிகள் அண்ணா

அன்புடன் ஆதி

தாமரை
25-02-2008, 11:11 AM
உண்மைதான் ஆதி.. மூன்று வரிகள் மட்டுமே எழுதி வெகு நேரம் வைத்திருந்தேன்.

ஒரு சின்ன உணர்வு.. மொட்டைப் பாறையாக எவ்வித சிந்தனையுமின்றி என் மனதில்...

பிறரின் எத்தனையோ எண்ண அலைகள் மோதி எழுந்து ஆர்ப்பரித்து ஜாலம் காட்டி...

அதனால் விளையும் கவிதைகளையோ, வார்த்தை ஜாலங்களையோ ஆஹா அபாரம்.. இதெப்படி இருக்கு என்று பாராட்டுகள் சொல்லி

உதாரணங்களாக எடுத்துக் காட்டுகளாக அந்த ஜாலங்கள் பல இடங்களில் உபயோகப் படுத்தப் பட..

அவ்வப்பொழுது வரும் பலரின் உதயங்களும் அஸ்தமனங்களும் வர்ண ஜாலத்தில் இந்தப் பாறைய அழகாக்க

அசையாத அந்த மனப் பாறை மோனத் தவம் செய்து கொண்டிருக்கிறது..

யாராவது அதன் மீது ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அதற்கு பெயர் கொடுக்கலாம்.. யாராவது அதை செதுக்கிச் சிலையாக்கலாம்..

யாரோ ஒரு காதல் ஜோடி அந்த பாறையின் மேல் தங்களின் பெயரைக் கிறுக்கி வைக்கலாம்..

எத்தனையோ நண்டுகளும் மீன்களும் அந்தப் பாறையிடுக்கில் பாசி தின்று சுதந்திரமாய் இருக்கலாம்

ஆனால் இவரில் யாரும் பாறையின் மௌனத்தை புரிந்து கொள்வாரில்லை..

அந்தத் தவம் ஏன்? எதற்காக என்று..

பாறையும் கவலைப் படுவதில்லை..

ஆதி
25-02-2008, 11:41 AM
ஆனால் இவரில் யாரும் பாறையின் மௌனத்தை புரிந்து கொள்வாரில்லை..

அந்தத் தவம் ஏன்? எதற்காக என்று..

பாறையும் கவலைப் படுவதில்லை..

உங்கள் விளக்கம் இன்னும் ஆழ்ந்து சிந்திக்கவைக்கிறது அண்ணா,

இந்த மோனம் தான் நாகாரா ஐய்யா சொல்லும் "நான்"னாக இருத்தலோ ?

ஜென் சொல்லும் "சும்மா" இருத்தலோ ?

சித்தர்களின் ஜீவசமாதியோ ?

பேரமைதி என்பதும் இதுதானோ ?

நித்யானந்தர் கூறுவார், சப்தங்களுக்குள் ஆழ்ந்து போ.. சப்தமில்லா நிலைக்காணலாம்..

இது இந்த தவம்தானோ ?

என்றெல்லாம் நிரம்பி வழிகிறது கேள்விகள்..

பாறையாய் ஆகிப்பார்த்தால்தான் அந்த தவத்தின் பொருள் புலப்படும் இன்னும் ஆழமாய்..

ஒரு புது தேடலை துவக்கி வைத்துவிட்டீர்கள் அண்ணா, விடை எளிதில் அகப்படாது என்றுமட்டும் புரிகிறது.. பாறையாய் விறைத்துப்போகாமல்..

ஆழமான விளக்கத்திற்கும் ஆழ்மன தேடலை தூண்டியமைக்கும் மிக நன்றிகள் அண்ணா..


அன்புடன் ஆதி