PDA

View Full Version : தழல் ( அ.மை - 30)இளசு
19-02-2008, 09:15 PM
அறிவியல் மைல்கற்கள்- 30

.............................தழல்....................................


--------------------------------------------------------------
.

அ.மை.(29) -யாரோ... என்ன பேரோ.. இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14463

------------------------------------------------------------

அ.மை (30): தழல்..

ஜோசப் ப்ரீஸ்ட்லி ( Joseph Priestley) 1733- 1804


தண்ணீர் தணல்போல் எரியும் - செந்
தழலும் நீர் போல் குளிரும்...

கவியரசின் இல்பொருள் உவமை அணிப்பாடல் வரிகள்!

ஒரு பொருள் தணலாய், தழலாய் எரிவது எப்படி?

எரிதல் ( Combustion) - 17ம் நூற்றாண்டின் வேதியரை
மிகவும் ஆக்கிரமித்த விஷயம்.

பொருட்களிலேயே எரிவதற்கான '' தன்மை'' ஒளிந்திருப்பதாக
அறிவுலகம் (தப்பாக) நிச்சயமாக நம்பியிருந்த காலம் அது.
(Phlogiston Theory என அதற்குப் பெயர்.)

இரண்டாம் நூற்றாண்டிலியே எரியும் பொருளை மூடிவைத்தால்
அணைந்துவிடுவதைக் கண்டவர் ஃபிலோ ( Philo).
எரிதலிலும் சுவாசிப்பதிலும் காற்றின் ஒருபாகம் கரைந்துவிடுவதை
15ம் நூற்றாண்டிலேயே கண்டு சொன்னவர் லியனார்டோ டாவின்சி..

ஆனாலும் எரிதலை பொருளோடு இணைத்த ஃப்ளோகிஸ்டான் கோட்பாடு
அக்கால அறிஞர்களின் மூளையில் புரையோடிப் போயிருந்ததால்
பொருளை விட்டு, காற்றுப்பக்கம் சிந்தனை திருப்ப இயலாமல்
செக்குமாடாய் சுற்றிவந்தன அவர்களின் பார்வைகளும், சோதனைகளும்..

ஜோசப் ப்ரீஸ்ட்லி - இங்கிலாந்தில் வசித்த பாதிரியார்+ விஞ்ஞானி.
மெர்குரி ஆக்ஸைடில் சூரிய ஒளி வெப்பம் படவைத்து அவர்
முதன் முதலாய் ( 1774) ஆக்சிஜனை கண்டுபிடித்தார்.

ஆக்சிஜன் இருந்தால் பொருட்கள் அதிகம் எரிவதைக் கண்டார்.
ஆக்சிஜனைச் சுவாசித்தால் மார்பு லேசாவதாய்ச் சொன்னார்.

ஆனாலும் ஆழ்ந்திருந்த பழைய கோட்பாட்டால், எரிதலுக்கு மூலமான
ஆக்சிஜனை, எரிந்தபின் மிச்சம் என தப்பாய்ச் சொன்னார்.

(இதே காலகட்டத்தில் ஸ்வீடனில் கார்ல் ஷீல் ( Carl Scheele) இதே முறைகளில்
ஆக்சிஜனைக் கண்டு, '' நெருப்புக் காற்று'' எனப்பெயரிட்டார்.
ஆனாலும் அவரும் இதுதான் எரிவதன் ஆதாரம் என அறியத் தவறினார்.


ப்ரீஸ்ட்லியின் கண்டுபிடிப்புக்கு மூன்று ஆண்டுகள் கழித்து
பிரான்சின் லாவோய்சியர் ( Lavoisier) இந்தப் புதிய...
வேதியல் புரட்சிக்கு வித்திட்ட தன்னிகரற்ற வாயுக்கு
ஆக்சிஜன் எனப் பெயரிட்டார்.

ஆக்சிஜன் என்றால் அமில - ஆக்கி. ( oxy - Gen).
அமிலம் ஆக்குவது என்னவோ கொஞ்சம்.
அகிலம் ஆக்கியதே அதிகம்.

அண்டத்தில் ஹைட்ரஜன், ஹீலியத்துக்கு அடுத்தபடி அதிக எடை பலசாலி - ஆக்சிஜன்.
சில பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி மண்டலத்தில் ஆக்சிஜன் மண்டத்தொடங்கிய பின்னரே
புல், பூண்டுகள் என பல்லுயிர்கள் தழைத்தன..

பாசிகள் உருவாக்கும் ஆக்சிஜன் நீரில் கரைந்ததாலாயே மீன் வகைகள் பருத்துப் பல்கின..
அங்கே இட/உணவுப் பற்றாக்குறையால்
நிலத்திலும் பிழைக்கலாம் என இரட்டை சுவாசவாழ்க்கை பழகிய தவளை இனம்தான்
மிருக இனத்தின் முதல் முன்னேற்ற அடி!
அந்த இனத்தின் பல்வேறு பரிணாம இறுதி வடிவம்தான் - நம் மனித இனம்!

எல்லாமே ஆக்சிஜன் மயம்!
இருக்கும்வரை ஒவ்வொரு உயிர்ச்செல்லுக்கும் இன்றியமையாச் செல்வம் ஆக்சிஜன்..!

கண்டும் பெயர் வைக்காத ப்ரீஸ்ட்லி..
கண்டும் தப்புப்பெயர் வைத்த ஷீல்
இன்றும் நிலைத்த பெயர் தந்த லாவோய்சியர்...

மூவருக்கும் நினைவுப் பாராட்டுகள் அளித்தபடி
மூச்சிழுத்து நெஞ்சுக்கூட்டை ஆக்சிஜனால் நிரப்புங்கள்..

*******************************************************************************

ஆமாம்.. கண்ணதாசனை மறந்துவிட்டோமே!

தண்ணீர் தணல்போல் எரியும் - செந்
தழலும் நீர் போல் குளிரும்...!

முரண் வரிகள்தான் முதல் பார்வையில்..
தழல் எரிய உதவும் ஆக்சிஜன்தான் - அது
தணிக்கும் தண்ணீரின் 88.8 சதம் பங்காய்!

aren
19-02-2008, 10:35 PM
இன்னொரு அருமையான கட்டுரை இளசு அவர்களிடமிருந்து.

ஆக்ஸிஜனை இவ்வளவு நாட்கள் கடந்துதான் கண்டுபிடித்தார்களா?

நாம் வெறுமனே சுவாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறோம். எதை சுவாசிக்கிறோம் என்றெல்லாம் அந்த காலத்தில் ஆராய்ச்சி செய்து (அதுவும் போதிய உபகரணங்கள் இல்லாமல்) நமக்கு பல வகைகளில் உதவியிருக்கும் நம் முன்னோர்களுக்கு ஒரு பெரிய "ஜே!!!". அதை நமக்குத் தெரியப்படுத்திய இளசு அவர்களுக்கு இன்னொரு பெரிய "ஜே!!!"

நன்றி இளசு. தொடருங்கள். இன்னும் பல கொடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
20-02-2008, 07:02 AM
உயிர்வாயு எனும் ஆக்ஸிஜனைப் பற்றி அருமையானதொரு அறிவியல் கட்டுரை.அதுவும் இளசு எனும் மந்திரவாதியின் மந்திரக்கோலால் எழுதி அளித்தமையால் எளிதில் விளங்குகிறது...புரியா அறிவியல்.

கண்ணதாசனின் பாடல் வரிகளில் தொடங்கி...அழகான ஒரு முரன் கவிதையாய்...நெருப்பெரிக்கும் வாயுவே...நெருப்பணைக்கும் நீரிலும் மிகுந்திருப்பதாய் காட்டியிருந்தது வெகு அழகு.

அமிலம் ஆக்குவது என்னவோ கொஞ்சம்.
அகிலம் ஆக்கியதே அதிகம்.

அறிவியல் உண்மை சொல்லும் கவிதை வரிகள் இவை.அதோடு ஆக்ஸிஜனுக்கான காரணப் பெயர் இதுநாள் வரை நான் அறிந்திராத ஒன்று.

மிகவும் அருமையான ஆக்கம்.வாழ்த்துகள் இளசு.

யவனிகா
20-02-2008, 11:43 AM
படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.
அதற்குள் முடிந்து போன ஐஸ்கிரீமாய்.. முடிவு ஏமாற்றம் தருகிறது.
நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன்.
நறுமணத்துடன் ஆக்சிஜன் நாசி நிரப்பிச் செல்கிறது.
அடுத்தது எப்போ...எதைப் பற்றியது?

ஆவலுடன்.....
நாங்களும், அறிவியலும்...
மைல் கல்லின் மேல்...
அமர்ந்து காத்திருக்கிறோம்...!

பாரதி
21-02-2008, 07:23 AM
உயிர் வாயுவைப்பற்றிய உண்மைச்செய்திகளை உரைத்தமைக்கு நன்றி அண்ணா. ஒவ்வொரு மைல்கல்லும் உண்மையை உரசிச்சொல்லும் உண்மைக்கல்லாக அமைவது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறதண்ணா.

இளசு
21-02-2008, 07:38 AM
ஊக்கமொழிகளுக்கு நன்றி - அன்பின் ஆரென், இனிய சிவா, தங்கை யவனி, தம்பி பாரதி..

தழலுக்குப் பிறகென்ன? புனல்????

இளசு
22-02-2008, 07:30 PM
என் நண்பன் கண்ஸின் வரவை இத்திரி காட்டுகிறது..
நலமா கண்ஸ்? பணிப்பளுவா? கணினி வறட்சியா?
மீண்டும் உன் அற்றா வரவு எப்போது?

kavitha
23-02-2008, 08:24 AM
அண்ணா,
லவாய்சியர் பற்றி படித்திருக்கிறேன். ஷீல், ப்ரீஸ்ட்லீ உங்கள் அறிமுகத்தில்.
துவர்க்கும் மருந்தினையும் இனிப்பு சேர்த்துத்தருவது போல்,
அறிவியல் பாடங்களையும் மேற்கோள்களுடன் எளிமையாகத் தருகிறீர்கள். உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். (நாங்களும் தான்)

பூமகள்
23-02-2008, 10:46 AM
தணலின் காரணி
பிராணவாயுவென
கண்டு கொள்ள
இத்தனை போராட்டமா??

எதிர்மறையாய் புரிந்த
எரிதல் நிகழ்வு இறுதியில்
எடுத்தியம்பிய லவாய்சியர்
வாழ்க வாழ்க..!!

நெஞ்சுக்கூட்டில் உயிர்
நாடிக்கு ஆதாரம்..
பரிணாமத்தின்
அடிவேர் ஆழத்தையும்
அழுத்தமான பலத்தையும்
அங்கங்கு இனிப்புடன் கொடுக்கும்
அண்ணலுக்கு நிகர் அண்ணலே..!!

அடுத்த மைல் கல்லில்
அற்புதங்கள் கற்க..
ஓடோடி வருகிறேன்....

மைல் கல் தொடும்
தூரத்தினை மனத்தில்
நிறுத்தி அண்ணலின்
வழியில் ஓடி வருகிறேன்..!!

வாழ்க பெரியண்ணா.. :)

kavitha
03-03-2008, 10:17 AM
கவிதையில் ஒரு பதில். அருமை பூமகள். :)

பூமகள்
03-03-2008, 11:55 AM
கவிதையில் ஒரு பதில். அருமை பூமகள். :)
நன்றிகள் கவி அக்கா..! :)

இளசு
20-06-2008, 09:18 PM
இனிய தங்கைகள் கவீ, பூ -- சிறப்பான பின்னூட்டங்களுக்கு நன்றி..

பூவின் கவிதைப் பின்னூட்டம் - பூமனம் போல் அழகு!

lenram80
21-06-2008, 12:27 AM
அறிவியல் தமிழ்- இளமை.
அதோடு இளசுவின் தமிழும் சேர்ந்தால் - இனிமையான இளமை.


தழல் எரிய உதவும் ஆக்சிஜன்தான் - அது
தணிக்கும் தண்ணீரின் 88.8 சதம் பங்காய்!

H2O-ல், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருக்கும். அப்பரம் எப்படி 88.8% என்று வியக்க வேண்டாம்.

ஹைட்ரஜன் அணு நிறை 1. ஆக்சிஜன் அணு நிறை 16, ஆகவே 2:16 =>1:8
எனவே, 8/9 = 88.8%

இளசு
08-07-2008, 05:19 AM
நன்றி லெனின்..

பதிவுக் கூந்தலுக்கு புரிதல் பின்னூட்டம் - பூச்சூடலாய்!

மணக்கும் நன்றி!

Narathar
30-09-2008, 12:21 AM
கண்டும் பெயர் வைக்காத ப்ரீஸ்ட்லி..
கண்டும் தப்புப்பெயர் வைத்த ஷீல்
இன்றும் நிலைத்த பெயர் தந்த லாவோய்சியர்...

மூவருக்கும் நினைவுப் பாராட்டுகள் அளித்தபடி
மூச்சிழுத்து நெஞ்சுக்கூட்டை ஆக்சிஜனால் நிரப்புங்கள்..
!


அந்த மூவருக்கும் மட்டுமல்ல பாராட்டுக்கள் உங்களுக்கும் தான்...... பட்டியலில் உங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்!

இளசுவின் எளிமையான நடையில் மயங்கித்தான் போய்விட்டேன்...........