PDA

View Full Version : புல்லாங்குழல்



செல்வா
04-12-2007, 02:57 PM
அங்கமெங்கும் ஊனம் கொண்ட தங்கமகன்
பங்கமின்றி பாடுகிறான் சங்கீதம்
உயிரில்லா அவன் குரல் அத்தனையும் - கண்ணே
உயிரோடு உன்குரலில் கேட்டேனே
(உயிரில்லா அவன் குரல் அத்தனைக்கும்
உயிர் கொடுத்த உத்தமியும் நீதானோ..)

நதி
24-05-2008, 03:31 PM
உயிரில்லா குழல்
கொடுக்கிறது இனிய குரல்..
என்ன விந்தை!

அழுகிறது..
சிரிக்கிறது..
உசுப்புகிறது..
மயக்கிறது..

பின்னே எப்படி
இல்லாமல் போகும்
குழலின் குரலில் ஜீவன்..

ஊதுபவன் சரியில்லையா.
கேட்பவன் இசைஞான சூனியமா?

சொல்வாயோ செல்வா..
சொல்லாமல் செல்வாயோ செல்வா

அறிஞர்
10-06-2008, 03:37 PM
உயிரில்லாதவனின் குரலுக்கு
உயிர் கொடுக்கும் உத்தமி... பற்றிய வரிகள் அருமை...

ஷீ-நிசி
10-06-2008, 03:47 PM
புல்லாங்குழலுக்குத்தான் எத்தனை வாய்கள்!
அவைகள் அழுதாலும் சங்கீதங்கள்தான்...

வாழ்த்துகள் செல்வா!

இளசு
10-06-2008, 09:08 PM
குழலினிது என்பார் - தம் காதலி
குரலினிமை கேளாதார்..

செல்வா சொல்கிறார் இப்படி..

காதல் ஒரு மயன்..
அதன் மாய வண்ணங்கள்
காட்சி, ஓசை, மணம் என
புலன்கள் தோறும் பூசப்படும்...

பூசப்பட்ட வண்ண மனதுக்கு
பூங்கவிதைகள் வசப்படும்..

வாழ்த்துகள் செல்வா!

kavitha
13-06-2008, 05:45 AM
சங்கீதம்

யார் சொன்னது
ஊமைக்கு வாயில்லையென?
-புல்லாங்குழல்


அருமை செல்வா. உங்கள் கவிதையின் நாயகர்களுக்கு இக்குறுங்கவிதை சமர்ப்பணம்.

பூமகள்
13-06-2008, 08:28 AM
புல்லாங்குழலின் இதழோர
புன்னகை....!
புண்ணான மனிதருக்கு..
பொன் - கை..!

மௌனத்தின் மொழிகளை
மொழிபெயர்க்க
பயிற்றுவித்தன
குழல் வழி..
தவழ விட்டன..
குழலினிதிசையாக...!!

அற்புதம்.. அபாரம்..!!
பாராட்டுகள் செல்வா அண்ணா. :)

ஆதவா
13-06-2008, 10:06 AM
இதழ் பணியின்போது அறிந்த கவிதை.. வைரமுத்து அவர்களின் ஒரு கவிதையில் புல்லாங்குழல் பற்றிய வரிகள் உண்டு........ ஒரு பெண் வருத்தப்படுகிறாளாம்.. புல்லாங்குழல் போல பல கண்கள் எனக்கில்லையே அழுவதற்கு என்று........ (அந்தக் குழலைப் போல் அழுவதற்கு, அத்தனை கண்கள் எனக்கில்லையே!) இது கண்களாக உருவகப்படுத்திய கவிதை..

காதலியாக, காதலியின் குரலாக கவிஞர் உருவகப்படுத்தியமை வெகு அருமை. தன் மேனியெங்கும் ஓட்டைகளைப் புண்களாக (ஊனமாக) கொண்ட தங்கமகன்... கவனிக்க. புல்லாங்குழல் பெரும்பாலும் பொன்வண்ணத்தில் இருப்பதால் தங்கமகன் என்கிறார் போலும். சிறிதும்கூட பங்கமில்லாமல் பாடுகிறான் சங்கீதம்.

வார்த்தைகளைக் கையாளும் விதத்தில் அழகாக நேர்த்தியாகக் கையாண்டமை வரவேற்க்கத்தக்கது. உயிரில்லா அவன் குரல் உயிரோடு இருக்கும் அவள் குரலோடு ஒப்பிட்டமை, வேற்றுமை அணியை நினைவுபடுத்துகிறது.

இறுதி பஞ்ச்.. காதலிக்கு வைக்கும் ஐஸ்.


குழலினிது என்பார் - தம் காதலி
குரலினிமை கேளாதார்..

வாவ்,,, முழு கவிதையையும் இருவரிகளில் அடக்கி, அழகாக கொடுத்த இளசு அண்ணாவின் திறமை கண்டு வியக்கிறேன்..........



யார் சொன்னது
ஊமைக்கு வாயில்லையென?
-புல்லாங்குழல்

ஆம் சகோதரி.. ஒரு கெட்ட பழமொழி கூட உண்டு.... ஊமை ஊரைக் கெடுக்கும் என்று.. ஆனால் இந்த ஊமை ஊரை மகிழ்விக்கிறது பாருங்கள்.... எல்லாமே எல்லாம் அல்ல..