PDA

View Full Version : நான் புதைத்த சவங்கள்.rocky
18-02-2008, 05:25 AM
மண்ணில் புதைகப்படும் உயிரற்ற
உடலை பிணம் என்கிறீர்களே, என்
உடலில் புதைக்கப்பட்ட ஜீவனற்ற
மனதை என்னவென்று சொல்வீர்கள்?

ஓ நடைபிணமா!
அதுவும் ஒருவகையில் சரிதான்.

என்ன கேட்டீர்கள்? அப்படி
நான் என்ன புதைத்தேனென்றா?

ஒன்றா இரண்டா உங்களிடம்
சொல்வதற்க்கு?
ஓராயிரமுண்டு எப்படிச்
சொல்வேன்?

குழந்தையில் விளையாடக்
கேட்ட பொம்மை முதல்,
திருமணம் செய்து கொள்ள
விரும்பிய காதலி வரை,
என் நியாயமான ஆசைகள்
கூட நிராகரிக்கப்பட்டவைதான்.

அத்தனையையும் என்னில் புதைத்துவிட்டும்
உயிரோடிருக்கும் நான் நடைபினம் கூட அல்ல,
நடமாடும் சவக்கிடங்கு, ஆம் நான் ஒரு
நடமாடும் சவக்கிடங்கு.

இருந்தாலும் நான் உயிர்வாழ்வேன்,
என்னால் புதைக்கப்பட்ட பிணங்களுக்கு
உயிர்கொடுக்க ஒரு தேவதை வரும்வரை,
அவளுக்காக என் மயான பூமீயிலும்
சில பூச்செடிகள் வளர்த்து வைப்பேன்.

sarathecreator
18-02-2008, 05:34 AM
குழந்தையில் விழையாடக்
கேட்ட பொம்மை முதல்,

இதை குழந்தையில் விளையாடக்
கேட்ட பொம்மை முதல்,

என மாற்றினால் என்ன?
மற்றபடி உங்களது கருத்துக்களில் உடன்படுகிறேன்.
எங்கள் ஊர்ப் பழமொழி ஒன்று
சின்ன வயசுல ஐஸ்கிரீம் சாப்புட ஆசப்பட்டேன். ஆனால் காசு இல்ல கையில
அய்ம்பது வயசுல ஐஸ்கிரீம் சாப்புட ஆசப்படுறேன். ஆனால் கையில காசு இருந்தும் சாப்புட முடியல்ல. ஏன்னா சக்கரவியாதி..
எப்படி எங்க ஊர்ப்பழமொழி..
பழமொழியை உருவாக்குனதே அய்யா தானே..
ஊரு பேரைக் காப்பாத்துறதுக்காக பழமொழியெல்லாம் கண்டுபுடிக்க வேண்டியிருக்கு..

இளசு
18-02-2008, 06:21 AM
கிடைத்த உயிர்
குடித்த பால்
படித்த மொழி
வடித்த கவிதை..

இப்படி வாய்த்த ''உயிர்த் துணுக்குகளும்'' இருப்பதால்
நீங்கள் வாழும் மனந்தான் ராக்கி!

இழந்தவை கணக்கு மட்டும் பார்த்தால் இருள் மட்டுமே மிஞ்சும்!

ஜெயாஸ்தா
18-02-2008, 06:26 AM
இடைவெளி வேண்டுமென்று
அகழ்ந்தெடுக்க அகப்பட்டது
என் நினைவுகளா?
அடி கள்ளி.... மிகவும் சுயநலவாதியடி நீ...!
உன் நினைவு சுமந்த
நாடமாடும் கல்லறையாய்
நான் அலைந்துதிரிய...
நீ மட்டும் ஏன் இப்படி?

நல்ல கவிதை ராக்கி. நான் இன்று கவிச்சமரில் பதித்த கவிதையின் ஒரு வரியை, முழுக்கவிதையாக இங்கு பார்க்கிறேன். நன்றி. சில சமயங்கள் ஒரே மாதிரி சிந்தனைகள் சிலருக்கு வருமென்பது இதுதானோ?

பூமகள்
18-02-2008, 06:38 AM
நடைபிணமாய் வாழ
நாம் வரவில்லை..!

ஏதோ ஒரு நோக்கில்
ஒவ்வொரு உயிரும்
உலகில் உயிர்க்கிறது..!

பிறவிப்பயனும்
பிறருக்கு பயனும்
விளைவித்து செல்வதே
வாழ்க்கைக்கழகு..!

நம்மை நோக்குவதுவிடுத்து
கண்கள் விரிய
காலவெள்ளத்தின்
காட்சிகள் பாருங்கள்..!

உடைந்தது நம்மின்
உள்ளமல்ல..
அதையும் தாண்டி
உடைந்திருக்கும்
சோமாலியா குழந்தைகளின்
எலும்பு துருத்தலைப் பாருங்கள்..!

ஒருவேளை உணவுக்கு
தவழ்ந்து வந்து
பூச்சிவுருண்டை விற்கும்
பாதிச் சிற்பமான
மனிதர்களைப் பாருங்கள்..!!

வாழ்க்கை அர்த்தப்படும்..!
மனம், குணம் விசாலப்படும்..!!

வாழ்த்துகள் ராக்கி..!

சிவா.ஜி
18-02-2008, 07:08 AM
புதைத்தவை யாவற்றையும்...விதைத்தவைகளுக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள்....மண் மக்கினால்தான்...மரம் நிக்கும்.
மனம்....என்ற விளை நிலத்தில்....இறந்து போன எல்லாவற்றையும் மக்க விடுங்கள்....வெற்றிக்கான விதை...வேகமாக வளரும்.
மனம் சவக்கிடங்கல்ல....இழந்தவை சடலங்களல்ல.....உள்ளம் ஒரு உரக்கிடங்கு.....இழந்தவை...உங்களை இன்னும் உயரவைக்கும் உர உறுதி.
இதனினும் மேலாய் எல்லாவற்றையும் பெற்றிட...இவையே ஆதாரங்கள்.
வாழ்த்துகள் ராக்கி.

நாகரா
18-02-2008, 07:27 AM
அன்பரே!

நடமாடும் சவக்கிடங்கென்று நீவிர் விவரிக்கும் உமக்குள், உமது பெயரிலிருக்கும் "ராக்" போன்று திடமான நிஜமாக மரணமிலாப் பெருவாழ்வின் இரகசியம் புதைக்கப் பட்டிருக்கிறது. இது என் பணிவான கருத்து. நீவிர் அதை ஏற்க மறுப்பது உமக்குள்ள உரிமை. பட்டாம் பூச்சிக்கு எப்படி கம்பளிப்புழு மூலப்பொருளோ, அவ்வாறே பேரின்பப் பெருவாழ்விற்கு, இச்சவக்கிடங்கே மூலப் பொருள்.

இன்றைய மனிதனின் அவல நிலையை அழகாகக் கவிதையில் படம் பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். முதலடி சவக்கிடங்கின் அறிதல். அடுத்த பாய்ச்சல் பேரின்பப் பெருவாழ்வு.

பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே, பினம்- பிணம், மன்னில்-மண்ணில். திருத்துவீர், நற்றமிழ் வளர்ப்பீர், என் பதிவுகளிலும் பிழையிருந்தால் சுட்டிக் காட்டுவீர், ஒருவருக்கொருவர் உதவி நற்றமிழுக்கு நலம் சேர்ப்போமே!

நன்றி

சிவா.ஜி
18-02-2008, 07:30 AM
என் பதிவுகளிலும் பிழையிருந்தால் சுட்டிக் காட்டுவீர், ஒருவருக்கொருவர் உதவி நற்றமிழ்க்கு நலம் சேர்ப்போமே!

நன்றி

நற்றமிழுக்கு....என்றல்லவா வரவேண்டும் நாகரா அவர்களே...

நாகரா
18-02-2008, 07:42 AM
அவர் - அவர்க்கு சரியென்றால்
தமிழ் - தமிழ்க்கு சரியே

சிவா, விளக்க வேண்டும், நன்றி.

சிவா.ஜி
18-02-2008, 07:49 AM
அவர்க்கு என்பதும் சரியில்லை என்றே நினைக்கிறேன் நாகரா.
எல்லோருக்கும் இனிய என்பது எல்லோர்க்கினிய என்று வரலாம்
அவருக்குரியது என்பது அவர்க்குரியது என்று வராதே...(நல்ல தமிழாசான்கள்தான் சொல்ல வேண்டும்.)

நாகரா
18-02-2008, 08:21 AM
சிவா, தமிழுக்கு என்றே திருத்தி விட்டேன், அது பிழையில்லை என்று நிச்சயமாகத் தெரிந்ததால். நன்றி

rocky
18-02-2008, 12:06 PM
அன்புள்ள மன்றத்தோழர்களுக்கு,

இங்கே பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள், நான் அடிக்கடி இது போன்ற சோகக் கவிதைகள் எழுதுவது இப்போது வழக்கமாகிவிட்டது, காரணம் இது இப்போது என் வாழ்க்கையாகிவிட்டது, ஆனால் இங்கே நண்பர் நாகரா சொன்னதுபோல் ஏற்கனவே என்னுடைய "தற்கொலை" கவிதைக்காக என் பெயரையும் மனதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள், என்ன செய்வது நண்பரே, என் பெயரைப்போல் என் உடலைத்தான் வைத்துக்கொள்ள முடிகிறது, மனது பலசமயம் நான் சொல்வதைக் கேட்பதில்லை,.

இப்போது நான் இங்கே சேர்த்திருக்கும் இந்த ஐந்து வரிகளையும் ஏற்கனவே நான் எழுதியதுதான், ஆனால் இந்த அளவு சோகத்தைச் சொல்லவரும் போது இந்த கடைசி வரிகள் ஒருவேளை அந்த கனத்தைக் குறைத்து இதை ஒரு சாதாரண ஏக்கக் கவிதையாக மாற்றிவிடுமோ என்றென்னியே பதிக்கவில்லை. இப்போது பதித்துவிட்டேன், உங்களின் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன். நன்றி.

rocky
18-02-2008, 12:07 PM
கிடைத்த உயிர்
குடித்த பால்
படித்த மொழி
வடித்த கவிதை..

இப்படி வாய்த்த ''உயிர்த் துணுக்குகளும்'' இருப்பதால்
நீங்கள் வாழும் மனந்தான் ராக்கி!

இழந்தவை கணக்கு மட்டும் பார்த்தால் இருள் மட்டுமே மிஞ்சும்!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா, இழந்தவைகளை மட்டுமே நிணைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க என்னாலும் முடியாது, இந்தக் கவிதைகளெல்லாம் என் மனம் வலித்த நொடிகளில் நான் எழுதியவைகள், ஆகையால் அந்தச் சோகத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன், அதையும் தாண்டி நிச்சயம் எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை நான் விடவில்லை. சொல்லப்போனால் அந்த நம்பிக்கை இருப்பதால்தான் என்னால் கஷ்டங்களிலும் கவிதையெழுத முடிகிறது. உங்களின் நம்பிக்கையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

rocky
18-02-2008, 12:09 PM
நல்ல கவிதை ராக்கி. நான் இன்று கவிச்சமரில் பதித்த கவிதையின் ஒரு வரியை, முழுக்கவிதையாக இங்கு பார்க்கிறேன். நன்றி. சில சமயங்கள் ஒரே மாதிரி சிந்தனைகள் சிலருக்கு வருமென்பது இதுதானோ?

மிக்க நன்றி தோழர் ஜெயாஸ்தா அவர்களே,

உங்களின் இந்த அனுபவம் எனக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது, சில நாட்களுக்கு முன்பு "நான் கவிஞனல்ல" என்று ஒரு கவிதையை மன்றத்தில் பதித்தேன், ஆனால் அதே நாளில் தோழர் அமரன் என்று நினைக்கிறேன் அவரும் அதே தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தார், பின்பு நான் என் கவிதைக்கு "இது கவிதையா" என்று தலைப்பை மாற்றிவிட்டேன். நம் மன்றத்தில் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லையே, உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தோழரே,

rocky
18-02-2008, 12:10 PM
நடைபிணமாய் வாழ
நாம் வரவில்லை..!

ஏதோ ஒரு நோக்கில்
ஒவ்வொரு உயிரும்
உலகில் உயிர்க்கிறது..!

பிறவிப்பயனும்
பிறருக்கு பயனும்
விளைவித்து செல்வதே
வாழ்க்கைக்கழகு..!

வாழ்த்துகள் ராக்கி..!மிக்க நன்றி தோழி பூமகள்,

உங்களின் பின்னூட்டகவிதைக்கும். வாழ்த்துகளுக்கும். இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன் உணர்ந்து ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

நாகரா
20-02-2008, 06:38 AM
அன்புள்ள மன்றத்தோழர்களுக்கு,
இப்போது நான் இங்கே சேர்த்திருக்கும் இந்த ஐந்து வரிகளையும் ஏற்கனவே நான் எழுதியதுதான், ஆனால் இந்த அளவு சோகத்தைச் சொல்லவரும் போது இந்த கடைசி வரிகள் ஒருவேளை அந்த கனத்தைக் குறைத்து இதை ஒரு சாதாரண ஏக்கக் கவிதையாக மாற்றிவிடுமோ என்றென்னியே பதிக்கவில்லை. இப்போது பதித்துவிட்டேன், உங்களின் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன். நன்றி.

இருந்தாலும் நான் உயிர்வாழ்வேன்,
என்னால் புதைக்கப்பட்ட பிணங்களுக்கு
உயிர்கொடுக்க ஒரு தேவதை வரும்வரை,
அவளுக்காக என் மயான பூமீயிலும்
சில பூச்செடிகள் வளர்த்து வைப்பேன்.


இவ்வைந்து வரிகளே உம் கவிதையின் "பஞ்ச்" வரிகள், சாவுக்கு சாவு மணி அடிக்கும் வாழ்வின் சத்தியம். உமது சோகத்திலும் ஓர் நன்னம்பிக்கை முனை. வாழ்த்துக்கள் ராக்கி, நன்னம்பிக்கை முனை காட்டும் வாழ்வின் சத்தியத்தை நோக்கி உம் கவிப்பயணம் இனிதே செல்லவும், உம் தேவதையின் விரைவான வருகைக்கும், நமக்கெல்லாம் ஒருவனே தேவனாம் அருட்பெருங்கடவுள் அருள் செய்வாராக!

rocky
20-02-2008, 12:07 PM
இவ்வைந்து வரிகளே உம் கவிதையின் "பஞ்ச்" வரிகள், சாவுக்கு சாவு மணி அடிக்கும் வாழ்வின் சத்தியம். உமது சோகத்திலும் ஓர் நன்னம்பிக்கை முனை. வாழ்த்துக்கள் ராக்கி, நன்னம்பிக்கை முனை காட்டும் வாழ்வின் சத்தியத்தை நோக்கி உம் கவிப்பயணம் இனிதே செல்லவும், உம் தேவதையின் விரைவான வருகைக்கும், நமக்கெல்லாம் ஒருவனே தேவனாம் அருட்பெருங்கடவுள் அருள் செய்வாராக!

மிக்க நன்றி தோழர் நாகரா அவர்களே, உங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும். தொடர்ந்து உங்களின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன், நன்றி.