PDA

View Full Version : வானவில் காலம்.. (அத்தியாயம் 5)...தொடர்கதை..



rambal
04-07-2003, 04:09 PM
வானவில் காலம்.. (அத்தியாயம் 5)...தொடர்கதை..

அந்த எமர்ஜென்சி வார்டில் இரு புறமும் வரிசையாக கட்டில்கள். கேசவன் இருக்கும் கட்டிலை படபடப்போடு தேடிக்கொண்டே போக
"கௌரி.."
சட்டெனத் திரும்ப கேசவன்.
"உனக்கு.."
"எனக்கு ஒன்னும் ஆகலை.. என் பிரெண்டுக்கு ஆக்சிடெண்ட்.. ஆமா நீ எப்படி இங்க?"
இந்த வார்த்தை சொல்லி முடிப்பதற்குள் கௌரி கேசவன் கன்னத்தில் ஒரு அறை விட்டிருந்தாள்.
"உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு.. நான் என்னவோ ஏதோன்னு வந்தா.."
"இல்லை கௌரி.. இதெல்லாம் விளையாட்டு இல்லை.. ஒத்திகை.."
"ஒத்திகையா?"
"ஆமா.. ஒருவேளை நான் பாய்சன் சாப்பிட்டா நீ வருவியோ மாட்டியோன்னுதான்.. இப்ப எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு.."
"அதுக்கு"
"இதோ இப்ப குடிக்கப் போறேன்.."
"ஏய் வேணாம்.. சொன்னாக் கேளு.."
"அதெப்படி கௌரி.. நீதான் சொல்லிட்டியே.."
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"
"ஆமா.. உன் மேலதான் பைத்தியம்.."
"சரி நான் இப்ப என்ன சொன்னா நீ அதக் குடிக்கமாட்டே?"
"நான் என்ன உங்கிட்ட இருந்து நாயக்கர் மகாலையா கேக்கப்போறேன்?'
"சரி ஐ லவ் யூ.. போதுமா?"
"என்ன நேயர் விருப்பம் மாதிரி சொல்ற?"
"பின்ன எப்படி சொல்றது?"
"ஒரு ரொமாண்டிக்கா"
"ஹாஸ்பிட்டல்ல இவ்ளவுதான் சொல்ல முடியும்.. வேணான்னா போ.."
"சரி சரி.. கோபப்படாத.."
இப்படியாக அந்தக் காதல் ஆரம்பமானது.
கௌரி கேசவன் வீட்டிற்கு சகஜமாக போய் வர ஆரம்பித்தாள். கேசவனும் தனது அக்காவுடன் கௌரி வீட்டிற்கு வந்து போக
தொடங்கினான். இப்படியாக யாருக்கும் தெரியாமல் அவர்கள் காதல் ஆரம்ப நிலையில் இருந்து வளரத்தொடங்கிய தருணத்தில்..
ஒரு சனிக்கிழமை காலை போன் அடித்தது. மீரு சமையலில் இருக்க கௌரி போனை எடுத்தாள்.
"கௌ.."
"என்ன?"
"என் வீட்டில எல்லோரும் ஒரு பங்சனுக்காக போயிருக்காங்க..நாளைக்குத்தான் திரும்பி வருவாங்க.."
"அதுக்கு?"
"அடிப்பாவி.. வீட்டில யாரும் இல்லை.. தனியா இருக்கேன்னு சொல்றேன்.."
"சரி.. நீ தனியா இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..?"
"கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துடுப் போ.."
"அய்யோ நான் மாட்டேன்.. சும்மாவே நீ ஒரு பிசாசு.. இந்த லட்சணத்துல உன் கிட்ட தனியா மாட்டிக்க நான் விரும்பலை.."
"அப்படியெல்லாம் சொல்லாதடா.. உனக்கு இன்னிக்கு சமைச்சு போடலாம்ன்னு பாத்தேன்.."
"என்னது நீ சமைக்கிறியா?"
"ஆமா.."
"அதுக்கு டெஸ்ட் பண்ண நான்தான் கிடைச்சேனா?"
"அப்படின்னா ஒன்னு பண்ணு நீ சமை.. நான் சாப்பிடுறேன்.."
"சரி பத்து மணிக்கா வந்துடுறேன்.."
பத்து மணிக்கு நித்யா வீட்டிற்கு போவதாக மீருவிடமும், கேசவன் வீட்டிற்கு போவதாக நித்யாவிடமும் சொல்லிவிட்டு கௌரி கிளம்பினாள்.
கேசவன் வீட்டில்,
"என்ன சமைக்கப் போற?"
"முதல்ல என்ன இருக்குன்னு பாக்கணும். அப்புறம்தான் டிசைட் பண்ணனும்.."
கிச்சனுக்குள் நுழைய அங்கு எல்லாம் ஏற்கனவே சமைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.
"என்ன எல்லாம் சமைச்சு ரெடியா இருக்கு.. பின்ன எதுக்கு என்னைய வரச் சொன்ன?"
கௌரி சொல்லிக் கொண்டே திரும்ப அந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்தில் கேசவன் அவள் உதடுகளில் அழுத்தி ஒரு கிஸ் கொடுத்தான்.
கௌரிக்கு சிறு அதிர்ச்சி.. ஏதோ தப்பு என்று மட்டும் மனதிற்குள் ஏதோ எச்சரிக்க அவனை தள்ளிவிட்டாள்.
"என்ன கௌ?"
"இங்க பாரு.. இதெல்லாம் நல்லாயில்லை.."
"சும்மா லவ் பண்றேன்ன்னு சொல்லிகிட்டே இருந்தா எப்படி?"
"அதுக்கு கிஸ் பண்ணுவியா? இனிமே என் மூஞ்சில முழிக்காத..நான் போறேன்.." கொஞ்சம் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.
"கௌ.. சாரி கௌ.. சொன்னாக் கேளு.. இனிமே இப்படி பண்ண மாட்டேன் கௌ.."
அதற்குள் அவள் அந்த இடத்தை விட்டு கிளம்பிசென்றிருந்தாள்.

அன்று முழுதும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு. முதல் முத்தம். எதிர்பாரா தருணத்தில் கிடைத்த முத்தம்.
அந்த காட்சியை பலமுறை அசைபோட்டுவிட்டாள். ஆனால், மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒன்று தப்பு என்று எச்சரிக்கை
மணி அடித்துக் கொண்டே இருந்தது. அதன்பின் அது என்னவோ தப்பு என்றே அவள் மனதிற்குள் அழுந்திப் பதிய இப்போது கேசவன்
மேல் எரிச்சலாக வந்தது. அன்றைய தினமும் அடுத்த தினமும் எரிச்சலாகவே இருந்தாள்.
அதற்கடுத்த நாள் பஸ்ஸில் நித்யாவிடம் இந்த விஷயத்தை சொன்னதும் அவள்
"பரவாயில்லைடி.. பையன் இந்த விஷயமெல்லாம் பண்ணுவானா? வேற என்னென்ன பண்ணான்?"
"இங்க பாரு நித்தி.. உங்கிட்ட சொன்னதே ஒரு ஆறுதலுக்காகத்தான். ஆனா நீ என்னடான்னா குத்தி கிளற்ற"
"சரி சரி.. இதுக்காக அவனை தள்ளிவிட்டு வந்துட்டியாக்கும்?"
"ஆமா.. பின்ன கண்ட்டினியூ பண்ணச் சொல்றியா?"
"என்ஜாய் பண்ணத் தெரியாம இருக்கியேடி."
"எனக்கு இந்த கன்றாவியெல்லாம் வேண்டாம்.. இனிமேல் அவனை பாக்கவே கூடாதுன்னு வைச்சிருக்கேன்.."
"இந்த சின்ன விஷயத்தைப் போயி இவ்ளோ பெரிசுபடுத்துறியே.."
"இது சின்ன விஷயமா?"
"ஆமா.. நானும் ஒன்னை லவ் பண்றேனே.. அதுக்கு கிஸ் பண்ணவே தெரியலை.. பின்ன நான்தான்.."
"சரி சரி.. நிறுத்து.. விட்டா இந்த இடத்தையே நீ நாறடிச்சிடுவ.."
"ஆமாண்டி.. இல்லைன்னாலும் இந்த பஸ் ரொம்ப நல்லா இருக்கு.. போடி நீ வேற.."
அவுட் போஸ்ட்டில் கேசவன் ஏற.. கௌரி சற்று விரைப்பாகத்தான் இருந்தாள். கேசவன் தான் ஆரம்பித்தான்.
"நீயே சொல்லு நித்யா.. இவளை லவ் பண்ணிட்டு இவங்க அம்மாவுக்கா..."
"நித்யா அவனை பேச வேண்டான்னு சொல்லு"
"நித்யா..நான் செஞ்சதை தப்புன்னு நீ சொல்லு.."
"தப்பேயில்லை.."
"இங்க பாரு நித்யா.. இவன் பண்ணது உனக்கு வேணும்னா தப்பில்லாம இருக்கலாம்..
என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் பண்ணது தப்புதான்.."
"சரி நான் பண்ணது தப்புதான்.. அதுக்காக இப்படி பேசாம அடம்பிடிக்கிறது நல்லா இல்லை.."
"அவனை என் மூஞ்சில முழிக்க வேண்டாம்ன்னு சொல்லு நித்யா.."
"அய்யோ உங்க சண்டையை நிறுத்துறீங்களா.."
"சரி.. நான் போறேன்.. அவளை இன்னிக்கு சாயங்காலம் பேஸ்ட்ரீக்குக் கூட்டிட்டு வா.."
சொல்லிவிட்டு அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டான்.
"பாவம்டி.. ரொம்ப காய விடாத.."
"நீ அவனுக்காக வாதாடத.."
"சரி இன்னிக்கு சாயங்காலம் அங்க போகலாம்.."
அன்று மாலை பேஸ்ட்ரீ கார்னரில் கௌரி கேசவன் பிரச்சினை நித்யாவால மத்யசம் பண்ணப்பட்டு சுமூகமாக முடிவுற்றது.
இதற்குப் பின் கேசவன் கௌரி காதல் சைவக் காதலாகவே இருந்தது.
இப்படி ஒரு தருணத்தில் கௌரிக்கு பிராக்டிக்கல் முடிந்து மதியத்திற்கு மேல் விடுமுறை என்பதால்
கேசவனோடு படத்திற்கு கிளம்பினாள்.
அங்கு தியேட்டரில் கௌரியின் வாழ்வையே புரட்டிப் போடும் சம்பவம் காத்துக் கிடப்பது தெரியாமல் அவள்
கேசவனோடு நடனா தியேட்டருக்குள் நுழைந்தாள்.

(தொடரும்)

இளசு
04-07-2003, 05:22 PM
ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது...

இப்போது நானும் நடனா தியேட்டரில்...

வாசகரைக் கட்டி இழுத்துப்போகும்
தொடர்கதை உத்தி வெகு சிறப்பு...

கதாசிரியர் ராமின் திறமைக்கு வந்தனம்...

பாரதி
04-07-2003, 05:24 PM
உரையாடல்களிலேயே கதையை வேகமாக கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்து இருக்கும் ராம்பாலுக்கு சபாஷ்.

poo
17-07-2003, 01:19 PM
நண்பனே.. இன்றுதான் அனைத்து பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்தது..

வெகுநாட்களுக்கு பிறகு தொடர்கதையொன்றை படிக்கிறேன்..

ஒவ்வொரு பாகத்தின் இறுதியிலும் அடுத்த பாகத்திற்கு ஏங்க வைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

ஒரு தேர்ந்த கதாசிரியனாய் நீ ஜொலிப்பதுகண்டு மன்றத்து உறுப்பினர்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன்..

எடுத்த இந்த கதையை முடித்தே தீரவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. அதே சுவாரஸ்யங்கள் தொடருமென நம்புகிறேன்..

மீண்டும் பாராட்டுக்கள்!!

(ஒவ்வொரு பாகத்தையும் வந்தபோதே படித்து பாராட்டாத பாவம் என்னை சும்மாவிடுமா?!!)