PDA

View Full Version : எதோடு உன்னை ஒப்பிட....?lenram80
14-02-2008, 02:04 AM
எதோடு உன்னை ஒப்பிட....?

மாலை நேர மங்கள வானம்!
மனதை மயக்கும் மழலைச் சிரிப்பு!
பறவைகள் பறக்கும் பூங்காவனம்!
தேகத்தை மயக்கும் தென்றல்!
வானவெளி முல்லைப் பூவாம் முழுமதி!

ம்ம்ம்.... புளிக்கிறது இந்த புழுங்கிப் போன கற்பனை!
உமட்டுகிறது இந்த ஊறிப் போன கற்பனை!
எதார்த்தம் எப்போதும் கொஞ்சம் எட்டியே நிற்பதால்!

நடைமுறை வாழ்க்கையில் ருசித்த தருணங்களில்
எதார்த்தம், எட்டி மட்டும் பார்ப்பதில்லை!
கட்டியும் பிடித்து கபடியும் ஆடுகிறது!

பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பு!
தாத்தாவுடன் பழைய கதைகளின் இடையே பார்க்கும் வீரபாண்டிய கட்ட பொம்மன்!
வாசலில் இருக்கும் பூச்செடியில் உள்ள குருவிக் கூடு!
பச்சை வயல்களின் வழியே சைக்கிள் பயணம்!
பால்கனி சாய்வு நாற்காலியில் படிக்கும் செய்தி தாள்!

குளிர் கால சுடுதண்ணீர் குளியல்!
போர்த்திக் கொண்டு உட்கார்ந்து
கோலமிடும் அம்மாவை பார்க்கும் காலை நேரம்!
தீபாவளி விடியல் காலையில் தூரத்தில் கேட்கும் சரவெடி சத்தம்!

மாரியம்மன் கோவில் கொண்டை கடலை!
மழை நேர சாலை ஓரக் கடை பஜ்ஜி!
பலகாரக் கடை வாசம்!
மதுரை முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா!

90களில் டெண்ட் தியேட்டரில் ரஜினி படங்களுக்கு அடித்த விசில்கள்!
கல்லூரி நாட்களில் சச்சின் அடித்த சிக்சர்கள்!
இரவுநேரத்தில் இளையராஜா இழுத்து வந்த 200% தூக்கங்கள்!
ஞாயிறு காலை அப்துல் கமீது அழைத்து வந்த இலங்கை வானொலி!
கோடையில் நுங்கு குடித்த பின்பு மதியம் குளத்தில் வந்து போட்ட நீச்சல்!

நெஞ்சில் அரிசி கொட்டி, கொத்திக் திண்ணும் கலர் கோழிக்குஞ்சு!
அண்டை முட்டும் கன்றுக் குட்டியை நாக்கால் தடவிக் கொடுக்கும் தாய்பசு!
பேருந்து நிறுத்தம் வரை வந்து தாடி போடும் வயதான(லும்) நாய்குட்டி!

சொல்லடி என்னவளே!
இப்படி நான்
ரசித்த அனைத்திலும்
ரகசியமாய் நீ இப்போது தெரிகிறாயே!

இதயத்தின் உள்ளே இருந்தாலும்
வெளியில் காணும் அனைத்திலும் தெரிகிறாயே!
எதோடு உன்னை ஒப்பிட....???

அக்னி
14-02-2008, 02:14 AM
இதயத்தின் உள்ளே இருந்தாலும்
வெளியில் காணும் அனைத்திலும் தெரிகிறாயே!
எதோடு உன்னை ஒப்பிட....???
லெனின் கவிதைகள் போன்று,
வேறுபட்டுத் தெரிகின்றாயே.
அழகாய்க் கவருகின்றாயே.
அதனோடு ஒப்பிடலாமா...
அல்லது
அதனாலேதான்
லெனினின் இந்த ஒப்பீடோ...

பாராட்டுக்கள் லெனின்...

யவனிகா
14-02-2008, 03:04 AM
ரொம்ப நல்லாருக்கு லெனின்...எதார்த்தமான ஒப்பீடு...

தூக்கக் கலக்கத்தில் சுருக் சூட்டு தேனீர்...
மார்கழி மாத ஸ்பீக்கர் பாட்டு...
நடக்கும் வேலை தலையில் விழும் சரக்கொன்றை...
பார்த்தவுடன் பயந்து பதுங்கும் பூனைக்குட்டி...
ஒற்றைக் கையில் புத்தகத்துடன் ரசம் சாதம்...
வாய் கொள்ளா அரட்டையுடன் பானிபூரி...

இவைகளுடன் நானும் ஒப்பிட ஆரம்பித்து விட்டேன்...
அடடா...என் கற்பனையும் ரெக்கை கட்டி பறக்கிறது. வாழ்த்துக்கள்

நாகரா
14-02-2008, 03:37 AM
இதயத்தின் உள்ளே இருந்தாலும்
வெளியில் காணும் அனைத்திலும் தெரிகிறாயே!
எதோடு உன்னை ஒப்பிட....???

ஆழமான இவ்வரிகளில் இன்னும் இன்னும் ஆழவேண்டும். எல்லாம் கடந்து இருதயத்தில் ஒளிந்திருக்கும் கடவுள், இறைவனாய் எங்கும் எதிலும் எப்போதும் இறைந்திருக்கும் அதிசயப் பேருண்மையை பகிரங்கப்படுத்தும் அற்புத வரிகள். காதலின் உச்சத்தில் ஆன்மீக வெளிச்சம். நல்லதோர் அருங்கவிக்கு நன்றியும் பாராட்டுகளும் லெனின்.

கடவுளே!
இருதயத்தின் உள்ளே
நீ
ஒளிந்தே இருந்தாலும்
வெளியில் காணும் அனைத்திலும்
இறைந்து
அவையனைத்திலும் தெரிகிறாயே!
எதோடு உன்னை ஒப்பிட....???

சிவா.ஜி
14-02-2008, 03:54 AM
ஒப்பீடே இல்லாத அற்புத காதலை உள்ளத்தில் வைத்திருக்கும் காதலன்....
எதனோடு தன் காதலியை ஒப்பிடுவான்...?
பட்டியலிட்ட பழம் நினைவுகளில் பதுக்கி வைத்திருக்கும் அந்தரங்க ஆன்மாவின் திருப்தியைத் தவிர....வேறு எதனோடு ஒப்பிட முடியும்?

அருமையான கவிதை லெனின்.வாழ்த்துகள்.

lenram80
14-02-2008, 01:43 PM
பட்டியலிட்ட பழம் நினைவுகளில் அந்தரங்க ஆன்மாவின் திருப்தியைத் திருப்பிப் பார்த்த அக்னி, யவனிகா, நாகரா & சிவா.ஜி - நன்றி!!!!!

ஜெயாஸ்தா
14-02-2008, 02:21 PM
அருமையான ஆட்டோகிராஃப் நினைவுகள். நம்ம வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்த்த மாதிரியே அப்படியே சொல்றீங்களே..... நன்றி லெனின்.

இளசு
14-02-2008, 07:22 PM
பேருந்தில் நீ எனக்கு சன்னலோரம்...

- பாடலில் இப்படி ஒரு தொகுப்பு உண்டு..

சுகமான குரல் எது என்றேன்
சுசீலாவின் குரலது என்றாய்..

இப்படி ரசனைக்கோடுகள் இணைவதைத் தொகுக்கும் பாட்டும் உண்டு..

ரசனைகள் எல்லாம் அவளை(னை) நினைவுபடுத்தினாலும்..
அந்த ரசனைகளைப் பங்கிட, இன்னும் கூராக்கிட
காலமுழுதும் உத்தரவாதம் தரும் காதலி(லன்) உண்டா?

என் ரசனைகள் என்னோடு
உன் ரசனைகள் உன்னோடு..
இணைந்த ரசனைகள் (மட்டும்) நம்மோடு
என சமரசமாய்ப் போகும் இணைகள் எத்தனை?

ரசனைகள் குறித்து பல சிந்தனைகள் எழுந்தாலும்..
கவிதையை ரசித்தேன் லெனின்...வாழ்த்துகள்!

lenram80
15-02-2008, 08:52 PM
அவன் ரசனைகளை அவளும், அவள் ரசனைகளை அவனும் - ரசிக்க தொடங்கிவிட்டால், எல்லா ரசனைகளும் 'பொதுவான'
ரசனைகள் ஆகிவிட்டால், வாழ்வே அப்பறம் ரசனை தான்.

நன்றி இளசு.

இன்பா
16-02-2008, 04:04 AM
வாவ் என்று சொல்ல தோன்றுகிறது...

அனுராகவன்
16-02-2008, 10:01 AM
சொல்லடி என்னவளே!
இப்படி நான்
ரசித்த அனைத்திலும்
ரகசியமாய் நீ இப்போது தெரிகிறாயே!

இதயத்தின் உள்ளே இருந்தாலும்
வெளியில் காணும் அனைத்திலும் தெரிகிறாயே!
எதோடு உன்னை ஒப்பிட....???

ஆகா எல்லாதையும் ஒரு பெண்ணுக்காகவா...
நல்ல கற்பனையே மெறுகேற்றி தந்து
கவியில் உங்கள் சிந்தையே புகட்டிய
உங்களுக்கு என் நன்றி..
ஒப்பிட்டால் ஒன்றும் தெரியாது காதலியே விட..
என் வாழ்த்துக்கள்!!

lenram80
16-02-2008, 03:10 PM
"வாவ்" சொல்லத் தோன்றி "வாவ்" சொல்லியேவிட்ட வரிப்புலிக்கும், "யை"யை "யே"யாக்கி, கவிதையை கற்கண்டாக்கி தின்ற அனுக்கும் நன்றிகள்.....:)

அமரன்
16-02-2008, 05:37 PM
கவியரசரின் பாடல்களிலும் கவிதைகளிலும் எதார்த்தமான, எளிதில் புரியக்கூடிய ஒப்புமைகள் நிறைந்திருக்கும். பட்டி தொட்டி எங்கும் அவரது எண்ணங்கள் ஒலிவடிவத்தில் ஆக்கிரமித்தமைக்கு இதுவும் ஒரு காரணம். அதுபோன்ற ஒப்பீடுகள் லெனின் கவிதையில்..

ஊர்கோவில்களில் வண்ண வண்ண கண்ணாடிகள் குவிந்திருக்கும். ஆசையுடன் அணிந்தால் கண்ணாடி வண்ணத்துக்கு அமைவாக காட்சிகளின் கலர் மாறும்.

இதயக்கண்ணாடி வழி பார்வைக் கற்றைகள் செலுத்தப்படும்போது இதயத்தின் நிறத்துக்கு காட்சிகள் மாறுவது வழக்கம்தானே..

அருமையான கவிதை லெனின். பாராட்டுகள்.

ஜெகதீசன்
16-02-2008, 06:14 PM
ரொம்ப நல்ல கவிதை லெனின். நல்ல கவிக்கு நல்வாழ்த்துக்கள்.
கவிதையை படிக்கும் போதே எதார்த்த வாழ்க்கையில் அதை அனுபவிக்கும் மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி.

lenram80
21-02-2008, 12:14 AM
நன்றி ஜெயாஸ்தா, அமரன் மற்றும் ஜெகதீசன்