PDA

View Full Version : கிருஷாங்கினி கதைகள்



baluaravinth
13-02-2008, 08:32 AM
மூன்று அங்குலப் பிரவாகம்-க்ருஷாங்கினி

சூரியன் உச்சிக்கு ஏறப் போவுது, இன்னமும் நான் குளிச்சு முழுகி ஒண்ணும் பண்ணாமத்தான் கிடக்கேன். நல்ல நாளு அதுவுமா இப்படி ஒரு சோதனையா? என்ன செய்ய? காவிரிய விட்டுப் போட்டு இப்படிப் பட்டணத்துல வந்து கிடக்கறேனே. வர மாட்டேன்னு சொல்லச் சொல்ல கூட்டியாந்துட்டானே இந்தப் பய. என்னத்தப் பட்டணம் போ. குடிக்கத் தண்ணியில்லே. பெரிசா பேருதான். பொண்டாட்டியும் சம்பாதிக்கிற பவுசு, பயலுக்கு என்னைக் கூட்டியாந்து காட்ட இங்க என்னடான்னா ..

நாளுங் கிழமையுமா குளிக்காம கிடக்கறேனே. மூனு நாளா ஆச்சும்மா இந்த அடிக்கிற பம்பு ஒடஞ்சு போயி. இதோ அதோன்னு இன்னும் ஒர்க் பண்ணாமக் கிடக்கு.

இன்னக்கி ஆடி பதினெட்டு. ஆடிப் பெருக்குன்னு சொல்லுவோமில்ல்ை. அந்த நாளு நாங்கன்னா காலைல மூனு மூனரை மணிக்கே எந்திரிச்சு வீடு வாசக் கழுவி நிலப்படி கழுவி பொட்டு வச்சு .. இப்படி எம்மா வேலை கெடக்கும்? இங்க என்னடான்னா ஆறரை மணிக்கு கொறஞ்சு எவளும் எந்திரிக்க மாட்டேங்கிறாளுக. ராத்திரி இருட்டினப்ப தானா வந்து அடையுதுங்க குருவி காக்காக் கணக்கா. காலைலே எந்திரிச்சு, அரக்கப் பரக்க ஆக்கி அவிச்சுப்புட்டு கொட்டிக்கிட்டு, கட்டிக்கிட்டு களுவிக்கிட்டு போயிடுதுங்க. இதுங்கு எப்படீன்னா தொலயட்டும், என்னையுமில்ல இந்தக் கோலத்துக்காக்கிட்டான் இவன்.

வீடு வாசக் கழுவி பொட்டு வக்க முடியாம, தண்ணியில்லாமக் கூடக் கெடக்கே. ஒரு பொட்டுத் தண்ணி இல்லயம்மா தாயே வீடு. வீடா இது, ரெண்டு ரூம்பு, ரெண்டே ரூம்பு. ஊர்ல பம்பு செட்டு ரூம் கணக்காக அடுப்பங்கரை, களுவிவிட்டாக சலேன்னு தண்ணி போற மாதிரிக் கட்ட மாட்டாங்க? அலசினமா, களுவினமா தண்ணி போச்சா, ஊஹும். கையகல அடுப்பங்கரையைக் களுவ அத்தினி சாமானையும் எடுத்து அடுத்தாப்ல கொண்டு போடணும். தண்ணிய இழுத்து இழுத்துத் தள்ளித் தள்ளி அடுத்த ரூம்பில தள்ளி விட்டு விட்டு அத்தை வாசலுக்குத் தள்ளணும்.

அத்தோட போச்சா? ரோட்டை விட வீடு கீள இருக்குது. வாசல்ல நிலையத் தேங்கிக் கிடக்குந் தண்ணி எல்லாமா தெரு வாசல்ல இருந்து டப்பா டப்பாவா இறச்சு சர் சர்ன்னு சத்தத்தோட தெருவிலே கொட்டணும். ரெண்டு எட்டு வேகமாக நடக்க முடியுமா?

என்ன செய்ய இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே. ஊர்ல எல்லா அததுங்க வேலைக்கு லீவு எடுத்துக் கிட்டு, குளிச்சு நல்ல துணி கட்டிக்கிட்டு சோறு கட்டி எடுத்துக்கிட்டு பூவாங்கிக் கிட்டு கருவளை வாங்கிக் கும்மாளமா காவிரி அம்மாவைப் பார்க்க போவோமே, விளாக் கணக்கா!

ஆனி மாசம் மட்டும் நல்லாத்தானே இருக்கும் ஊரு கிணறுக்குள்ளேயே தண்ணியோட. ஆனா ஆனிக் காற்று அடிக்க ஆரம்பிச்ச உடனேயே தண்ணியெல்லாம் மளமளன்னு உறிஞ்சிக்கிட்டுப் போக ஆரம்பிக்குமே. கெணத்தைக் குனிஞ்சு ஒவ்வொரு நாளும் பாக்கப் பாக்க பகீர்ருந்தான். ஒரு அடி, ரெண்டடித் தண்ணியும் வத்தி காஞ்சு கிடக்கப் போவுதுன்னு நெனக்கும்போதே .. பயிர் பச்சைப் பத்தியெல்லாம் கவலை வந்துடுமே.



முன்னெல்லாம் இப்படியா? வருசம் முளுக்கத் தண்ணி ஓடின தடமில்ல இது. இந்தம்மா இப்படி காஞ்சா கெடப்பா? ஆனா அதெல்லாம் பளங் கதையாப் போச்சு. மத்த நாளெல்லாம் ஓடாம சித்த நாள் ஒடற காவிரியாப் போச்சு. பாலத்திலேருந்து பார்த்தாக்கா பச்சுன்னு வாசனையும் வெத்தலயுமா, நெல்லுங் கரும்புமா, எள்ளு உளுந்துமா மாத்தி மாத்தி கெடக்கற வயல்லே வேல செஞ்ச நாளெல்லா கனவாய் போச்சு. இப்ப என்னடான்னா மொறத் தண்ணி விட காலமில்ல. காவிரியிலே இருந்தா அரசலாத்திலே இல்லே, அதில இருந்தா இதில இல்லைன்னு ஆயிப் போச்சுத் தண்ணி.

அதவுடு, இப்போ என்ன செய்யறது? வீடு வாசக் கழுவி விடலேன்னாலும் போவுது நான் குளிக்க வேண்டாமா? யாரைப் போயி தண்ணி கேக்க? யாரு கிடக்காக மதியத்திலே சுத்திரலும் எல்லா பங்களாக்காரங்க. ஒண்ணா வெளியப் போயிடுவாங்க. இல்லாட்டி கதவை இளுத்து அடச்சிக்கிட்டு படம் பாக்காறாங்க. கொஞ்சம் எட்டி ரெண்டு வூட்டுக்காரங்க இருக்கிறாங்க. அதுங்க சித்த என்னன்னா ஏன்னுன்னு கேட்கும் நம்பளப் போல. அப்பப்ப அங்க போயி இந்தப் பட்டண வெய்யிலுக்கு ஜில்லுன்னு தண்ணி வாங்கிக் குடிப்பேன். அந்தம்மா கூட சில வேளைக்கு எங்க வூட்டுக்குத் தண்ணியக் கூட கெட்டி பண்ணிக் கொடுக்கும். கட்டித் தண்ணியோட சாதாத் தண்ணியையும் கலக்கி வச்சுக் குடிச்சாக்கா நெஞ்செரிச்சலுக்கு நல்லா இருக்கும். அதுங்கக் கிட்டத்தாம் போயி ரெண்டு கொடந் தண்ணி வாங்கிட்டு வரணும்.

ஆனி மாசம் அடிக்கிற காத்தக் கண்டு எரிச்சப்பட்டாலும் ஆடி மாசமானா அந்தக் காற்று தானே தண்ணியை இளுத்துக்கிட்டு வருது. இல்லென்னா இந்தக் காஞ்ச மணல்ல தடவிக்கிட்டே வரதுக்குள்ளாற பாதித் தண்ணி உள்ளார போயிடும்ல. என்ன செய்யறது, எல்லாக் கெணறுமே நெல்லுக் கொட்ற தொட்டி மாதிரி ஈரமில்லாம ஆயிப் போவுதே இப்பெல்லாந்தான். இங்கிருக்கிற பட்டணத்துக்காரங்களுக்கு மழையும் சனியந்தான், காத்தும் சனியந்தான், வெய்யிலும் சனியந்தான். எல்லாத்தையுமில்லே திட்டிக் கிட்டே கிடக்குதுங்க. ரெண்டு தூத்தப் போட்டா ஒண்டிக்கிதுங்க சக்கரை பொம்மை கணக்கா.

முன்னெல்லாம் ஆடி மாசம் வெள்ளம் தானே வரும். இப்பெல்லாம் இந்த வருசம் ஆடிப் பண்டிகைக்குத் தண்ணி எத்தனை நாள் முன்ன வரும்? பதினெட்டு அன்னைக்கான வருமா அப்படீன்னு தவசு கிடக்கிறோமே!

ஏதோ மவராசியா நல்லா இரு தாயி ஒம் புண்ணியத்தால ரெண்டு கொடந் தண்ணி கெடச்சுது. குளிச்சு முளுவலாம்.

இந்த வருசம் எப்படியோ? ஒவ்வொரு வருசம் மாதிரியே தண்ணி வருமா பண்டிகை கொண்டாடுவோமான்னு ஏங்கிக்கிட்டு கெடக்கோ சனங்க? அம்மா தாயே இந்த வருசம் கிழடு, கிண்டு, பிஞ்சு, எளசு அப்படீன்னு எத்தையும் பலி வாங்காம பயிற் பச்சையை பாளாக்காம பதவிசா விடு தாயி. இந்த நாள்ளே உனக்கு வெளக்கேத்தி கருவளை விட்டு பூப்போட்டுக் கும்பிடுறோம் தாயி. ஆனாலும் இப்படியுந்தான் ரெண்டு வருசமானாக்கா பலி வாங்காம இந்தம்மா விடறதேயில்லை. இந்தப் பசங்களுக்குத்தான் தண்ணியக் கண்டுட்டா கண்ணு மண்ணுத் தெரியாம கெடந்து ஆடுதுங்க.

பாலத்து மேலருந்து குதிக்கிறானுங்க. காஞ்ச அம்மா மடியிலேருந்து லாரி லாரியா மணல் எடுத்து கெணறாட்டமா ஆக்கிப் போட்றானுங்க, இந்த லாரிக்காரப் பசங்க. எங்க சுழல்லு எங்க மேடு எதுவும் தெரியமாட்டேங்குதே. இதுக் கெடயில கல்லுக்கட்டி வெட்டியிருக்கிற கெணருங்க வேற இங்க ஒண்ணு அங்க ஒண்ணுன்னு ஏதானாலும் மதகில தாம் போயி உடலெடுக்கணும். சாக்கடை அடச்சிக்காட்டாப்பில எங்க எங்க இருந்த ஆடு, மாடு, மனுசங்க, மர மட்டைங்க எல்லாமா அங்க வந்து அடச்சிக்கிட்டு உப்பிக் கெடக்குமோ? தூக்கி வந்து போட்டு அள வேண்டியதுதான்.

இதோ, மூணு மணிக்கு ஆளைக் கூட்டி வாரேன்னு சொல்லக் காலைல போன மவந்தான். இப்ப வரைக்கும் வரவில்லை. மணி நாலு இருக்குமா? வெருட் வெருட்டென்று ஒத்தையிலே உட்கார்ந்து என்ன செய்ய? அவுத்தப் போட்டத் துணி கூட துவைக்க முடியல்லையே. துணி துவைக்க பாத்திரந் தேய்க்க அப்படின்னு எத்தனைக்குப் போய் ஒத்தர்க்கிட்டதண்ணி வாங்கறது. இப்படி பளசெல்லாம் நெனச்சுக்கிட்டு பட்டணத்திலே கிடக்க வேண்டியதுதான்.

போன வருசம் இப்படித்தான் ...



இந்த நாள்ல சப்பரம் இளுத்துக்கிட்டு போவமில்ல பசங்க நம் ஊர்லே அததுங்க வசதிக்கேப்ப வெல கொடுத்து வாங்குதுங்க. கோயிலய்யிரு மவனுக்கு அவரே சப்பரம் செஞ்சு கொடுத்தாரில்லே. எப்பவுமே அப்படித்தானே. மவனுக்கும், அப்பனைப் போலயே சோடனை எல்லாந்த் தெரியும். நல்லா சோடிச்சு, சப்பரத்தைத் தெரு முழுக்க இழுத்துக்கிட்டு ஓடும். கல்பூரங்காட்டி, பூப்போட்டு எல்லாம் நெசமாலுமே செய்யும். அந்தப் பிஞ்சை இழுத்திக்கிட்டுப் போயிட்டாளே இந்தத் தாயீ. எங்கெங்க கெடக்கற மட்டையோட மதகிருந்து இழுத்துக்கிட்டு எடுத்துப் போட்டு வண்டியிலே எடுத்தாத்தாங்களே.

பயிரை உயிரா காக்கற தாயிம்மா நீயி. அளிச்சுப் போடாதேன்னல்ல வேண்டிக்குவோம். அந்தி சந்தி கூடற நேரமாயிப் போச்சு. இன்னம் மவனைக் காணமே, மொட்டு மொட்டுன்னு எம்மா நாழி கெட்டதறது? காவிரி அம்மா இன்னக்கி என்னை என்னமா வக்கப் போறாளோ தெரியல்லியே .. அம்மாடி தாயி, ஒரு வளியா மவன் வந்துட்டான் ஆளுங் கூட்டித்தான்.

ஏம்பா ராசா, இன்னக்கி வெளக்கு வைக்கறதுக்குள்ளாற சரி பண்ணிப்புடுவீங்களா? நல்ல நாளு அதுவுமா தண்ணியில்லாம ஆகிப் போச்சே ..!

பிடி போயிடுச்சு, அது பாச்சு, இது போச்சு, எதுவுமே புரியல்ல்ை. மொத்தமா பணம் மட்டும் போச்சு நூறு ரூவாக்கும் மேல.

இருட்டிப் போயிடிச்சு. மவனும் அந்தப் பையனுமா சரி பம்பு ஒர்க் பண்ணிட்டுப் போயாச்சு. பிடி இறுக்கி அடிச்சுப் பார்த்தேன். பம்பிலே தண்ணி வருது. கொஞ்சங் கெட்டியா இருக்குது. தண்ணிய எப்ப பாப்பம்னல்லே ஆயிப் போச்சு. செத்த கடைக்கு ஓடிப் போயிட்டு வரேன். ஒரு முளம் பூவும் வெத்தள பாக்குமா.

பம்பைச் சுத்திப் பூவைக் கட்டி வச்சுட்டேன். பம்பு கீளே வெளக்கு ஏத்தி வச்சுப்புட்டேன். வெத்தலையும் பாக்கையுமா வச்சு பம்பிலேருந்து தண்ணி அடிச்சு சுத்தினேன். அம்மா தாயே நீ தாண்டி காவிரி எனக்கு. தண்ணீ நீதானேடி தர்றே. மூனு நாளா உஞ்சத்தமில்லாம தண்ணியில்லாம திண்டாடிட்டேம்மா. இனிமே இப்படி ஆக்காதே தாயே, அப்படின்னு மண் மேல விழுந்து கெடக்கறேன்.

baluaravinth
13-02-2008, 08:40 AM
வாசலில் வந்து நின்று வெயிலில் குளுமை கண்டு கொண்டிருந்தேன். இப்படித்தான் அடிக்கடி வந்து நிற்பேன். வீடு நசுக்கி விடும் என்று தோன்றும். அவசரமாக வாசல் கதவைத் திறந்து வந்து கீழே வெயிலையும், மனிதர்களையும் கண்டு, பிறகே மூச்சு விடுவேன்.

"அம்மா, சாத்துக்குடி பழம் வேணுமா?"

"வேண்டாம்ப்பா"

"நல்ல பழம்மா; பத்து ரூபாய்க்கு அஞ்சு தரேன்மா"

"எனக்கு வேண்டாம்ப்பா"

"கல்கண்டு போல இருக்கும்மா; ஆறுன்னு தரேன் வாங்கிக்க தாயீ, ரொம்பத் தொலைவிலேர்ந்து வர்றேன்"

பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மேலே படியேறிக் கூடையுடன் வந்து விட்டான். அவ்வளவு பழச் சுமையுடன் முகம் இறுகி, மூச்சுத் திணறி வயதான அவன் மேலேறி வந்த கஷ்டத்தைக் கண்டவுடன் மனது மெலிதாகியது. ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கி விடுவோம். சமைக்கப் பிடிக்கவில்லை என மாறுதல் நாடி ஹோட்டலில் பத்து ரூபாய் செலவழிப்பதில்லையா என சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

"ஏழு கொடுக்கறதுன்னா கொடுத்துட்டுப் போ" அல்ப ஆசை, லாபத்துக்கு வியாபாரம் செய்யும் பெருமை!

"கட்டாது தாயீ, கட்டுப்படியானா கொடுத்துட்டுப் போகாம எதுக்கு இப்படி வெயில்ல ரோடு சுத்தறேன் சொல்லு? வாங்கின வெலக்கே போட்டுத்தரேன் எடுத்துக்க. ரெண்டு டஜன் எடுத்து வெக்கட்டுமா அம்மா?'

"ஐயையோ, வேண்டாம்பா, நான் என்ன ஜூஸ் கடையா வச்சிருக்கேன்? "

"ஒரு பத்து ரூபாய்க்குக் கொடுத்துட்டுப் போ. அதுவும் சொமையோட மேலே ஏறி வந்துட்டியே, சும்மா அனுப்பக் கூடாதுங்கறதுக்காக வாங்கறேன்"

கூடையிலிருந்து பழங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்ப ..

"தாயீ, பசிக்குது, ஏதுனா சோறு இருந்தாப் போடு. காலேலெ நாலு இட்டிலி வாங்கித் தின்னேன். பசி தாளலே. ரவெ சோறு இருந்தாப் போதும், திருப்தியாப் போகும் .. " என்று சொல்லிக் கொண்டே போனான்.

காலையில் சாப்பிட்ட நாலு இட்லியுடன் இவ்வளவு தூரம் அலைகிறானே மணி மூன்றாகிறதே, பாவம் எப்படி பசி பொறுப்பான் ஒருவன்? நல்ல வேளையாக சாதம் இருக்கு, கொண்டு வந்து போடலாம்.

"இருப்பா வரேன்"

சோற்றைக் கிண்ணத்தில் மோர் ஊற்றிப் பிசைந்து கொண்டு உடன் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் எடுத்து வந்த போதுதான் அவன் எப்படிச் சாப்பிடுவான் என்று தோன்றியது. அவன் பிச்சைக்காரன் இல்லையே தட்டுடன் வர?

"எப்படிப்பா சாப்பிடுவே?"

"கையிலே போடும்மா"

அவன் கையில் சோற்றை உருட்டிப் போட அவன் சாப்பிட நான் அவனுக்கு அம்மா போல ஒரு உணர்வு. அவன் பசி ஆற ஆற என் மனதில் ஓர் நிறைவு. அவன் திருப்தியாக உண்டதும் முக மாறுதலில் மனசுக்கு மகிழ்ச்சி. குளிர்ந்த நீரில் முகம் அலம்பிக் கொண்டு முகத்து நீர் மேலே விழாவண்ணம் முகத்தை நீட்டிக் கொண்டு டவல் தேடும் புத்துணர்வு.

இப்படித்தான் மணிலாக் கொட்டைக்காரியின் அறிமுகம் இரக்கத்துடன் ஆரம்பித்தது. வயிற்றை சாய்த்துக் கொண்டு தலையில் சுமையுடன் அவள் தெருவில் செல்கையில் மனம் வேதனைப் பட்டது.

"எது மாசம்?"

"இது தாம்மா"

"உனக்கு குழந்தை எத்தனை?"

"இத்தோட அஞ்சம்மா"

"ஏதாவது தடை பண்ணிக்கக் கூடாது? இந்தக் காலத்திலே தான் எல்லோரும் சொல்லித் தராங்களே, உன் வீட்டுக்காரன் என்ன வேலை செய்யறான்?"

"தறி நெய்யரதும்மா, பத்த மாட்டேங்குது. இப்படி சுத்திக்கிட்டு வந்தா ஏதாவது நாலு அஞ்சு காசு கெடச்சா ராத்தி அடுப்பு எரியும்"

"இவ்வளவு கஷ்டங்கிறே, ஏன் நீ ஆபரேஷன் பண்ணிக்கக் கூடாது?"

"நமக்கு உக்காத்தி வச்சு செய்ய ஆளில்லையே அம்மா, எல்லாம் சின்னப் பசங்க. அதுங்களே யாரும்மா கவனிக்கிறது? கொஞ்ச நாளெக்கு வேல செய்யக் கூடாதாமே?"

"அப்படின்னா உன் வீட்டுக்காரரை செய்துக்கச் சொல்லேன்"

அவன் செய்து கொண்டால் சில நாட்கள் பகல் சாப்பாடு இல்லாமல் இருக்க வேண்டி வரும். அவள் செய்து கொண்டால் இரவுச் சாப்பாடு கிடைக்காது என்ற அவளின் கூற்று ஞாயமானதே.

கதவு தட்டப்பட்டது, ஒரு நாள். திறந்தேன்; எதிர் வீட்டின் சொந்தக்காரர்.

"நாங்க டில்லிலேர்ந்து திரும்பிட்டோம். முன்னாடியே வீட்டைக் காலி பண்ணச் சொல்லியிருந்தும் அவங்க காலி செய்யலே. நாங்க மூட்ட முடிச்சோட வந்திருக்கோம். அவங்க கதவெ தெறக்க மாட்டேங்கறாங்க"

"அப்படியா? "

வாசலில் அவர் குடும்பத்தினர் திண்ணையில் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் ஏகமாய் களைப்பு, கண்களில் அசதி, கலைந்த தலை.

"வாங்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு. ரொம்ப களைச்சு இருக்கீங்களே, சாப்பிட்டீங்களா? பாத்ரூம் போகனும்னா போங்க"

எல்லோரும் தப தபவென நுழைந்து வீட்டை நிரப்பினர். அவர்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரலாம் என்று உள்ளே சென்று டீயுடன் மீண்டபோது வீடு ழுவதும் மூட்டை முடிச்சுக்கள் நிறைந்திருந்தன. என் அனுமதி இல்லாமலேயே அவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இறக்கியிருந்தனர். இது நான் எதிர்பாராத ஒன்று.

"டீ சாப்பிடுங்க"

"டீயெல்லாம் எதற்கு? நாங்களே டிபன் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். அதை மட்டும் பிச்சு சாப்பிட அனுமதிச்சா போதும்" என்னமோ என்னிடம் அனுமதி பெற்றுத்தான் எல்லாவற்றையும் நிரப்பியது போல, என் தலை அசைப்புக்குக் கூட காத்திருக்காமல் அவர்கள் அனைவரும் அமர்ந்து உண்ணத் தொடங்கினார்கள்.

இட்லி, சட்னி, வெங்காயம், பூண்டு இன்னும் என்னவெல்லாமோ கலந்து ஒரே ஹோட்டல் நெடி! பித்துப் போட்டதை மடிக்க இயலாதது போல ஒரு பிரமிப்பு. வீடு முழுவதும் அவர்கள் ஆக்கிரமிப்பு.

அந்தச் சிறுமி- வேலைக்காரி வந்து என்னிடம், "அக்கா நான் தம்பியை கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போய் வரேன்' என்று பயந்த கண்களுடன் நின்றாள். பனிரெண்டே வயதான அந்தச் சிறுமி அப்படிப் பரிதாபமாகக் கேட்டபோது, எனக்குச் சிரமமாக இருந்தது.

வித்தியாசமான குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக மட்டுமே வேலை செய்ய வந்தாலும் என்னால் அவளிடம் முழு வேலைகளையும், சிறு சிறு வேலைகளைக் கூட குற்ற உணர்வு இல்லாமல் பெற்றுக் கொள்ள இயலவில்லை.

"நீ போய் வாசல்ல பையனைப் பார்த்துக்க, நான் இட்லிக்கு அரைச்சுக்கறேன்"

"உன்னால எல்லாத் துணிகளையும் துவைக்க முடியறதா? நான் வேணும்னா சோப்பு போட்டுத் தரட்டுமா? "

"பாவம் அந்தப் பெண் வெளித் திண்ணையிலேயே படுத்துக்கறது. ராத்திரிலே குளிராது? '

"வேலையெல்லாம் முடிச்சிட்டேன்க்கா' திரும்பக் கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நின்றவளிடம்,

"போயிட்டு வா, பாவாடையை கீழே எறக்கி விட்டுக்கோ, ஏன் மேலே தூக்கிக் கட்டிண்டே இருக்கே?' என்றேன்.

"கீழே போய் எறக்கி விட்டுக்கறேன் அக்கா'

என் குழந்தை சாலையில் நடப்பதைக் காணும் வழக்கமான ஆர்வம் காரணமாய் வாசலில் சென்று நின்று, சிறுமி பாதிப் படிகள் இறங்கிய பின்பும் பாவாடை கீழிறக்கப்படாததைக் கண்டு திரும்பவும் அதை நினைவூட்டினேன்.

அவள் கண்களில் திடீரெனக் காணப்பட்ட மிரட்சி கலந்த பயம் என்னை சந்தேகத்தில் கொண்டு விட அதைக் கட்டளையாக்கினேன். அப்போதும் நின்று கொண்டேயிருந்த சிறுமியின் பிடிவாதம் என்னிடம் அதிகமாகி, சந்தேகத்தையும் வளர்த்து நானே படியிறங்கி அவள் பாவாடையை இழுத்து விட்டு சோதனை செய்ய முயற்சிக்க, அவள் விரைவாகப் படியேறி உள்ளே சென்று பாவாடையை உதறும் சத்தம், நாணயம் வேறு சில பொருள்கள் உண்டாக்கிய சத்தம் கேட்டது.

மிகுந்த கோபத்துடன் விரைந்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமியைச் சுற்றிலும் மிக்சர் துகள்கள் சில நாணயங்களுடன் இரைந்து கிடந்தன. சிறுமியின் பிடிவாதம் நிறைந்த "என்ன செய்வாய்?' என எதிர்க்கும் பார்வை கொண்ட கண்கள்.

இன்று சாத்துக்குடிக்காரன் பசி தீர்த்ததும், வாசலில் கூவிச் செல்லும் அவளின் சக பாடியாக அவன் தோன்றுவதும் தான். அதுதான் நான் அவளுடன் பேசிய கடைசி பேச்சு என எண்ணுகிறேன். இன்று ஒரு தகவல், அவள் பிரசவத்தில் இறந்து விட்டதாக. அவளாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்றாலும் மனதில் அடிக்கடி அம் முகமே கலைந்து வந்து எழும்பி நிற்கிறது.

அந்த மணிலாக் கொட்டைக்காரியுடன் நான் பேசிய பேச்சு அர்த்தம் அற்றதாகப் போயிற்று. அன்று, சனி பகவான் தனது காக்கை வாகனத்தை விட்டு விட்டு என் நாவில் சவாரி செய்து கொண்டு இருந்தானோ? அவள் இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் நம்மைப் போல கிழ வயதில் புதைக்கப்படும் மாங்கொட்டைகள் அல்ல அவர்கள். தங்கள் சோற்றை தாங்களே சம்பாதிக்கும் திறன் அமையப் பெற்றவர்கள். என் முகத்தில் என்ன எழுதியிருக்கும் எல்லோரும் தங்கள் குறைகளைச் சொல்ல? எனக்குத் தெரியவில்லை.

"க்ருஷாங்கினி கதைகள்" தொகுப்பிலிருந்து ...

அமரன்
13-02-2008, 11:03 AM
அன்பரே!!

சொந்த ஆக்க சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மன்றம், நினைவில் நிற்கும் நற்படைப்புகளும் வரவேற்பளிப்பது வழக்கம். அப்படியான படைப்புகள் சேமிக்கப்படவேண்டியது இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதியில். கவனத்தில் எடுத்து தொடர்ந்து பங்களியுங்கள். இதை மாற்றியுள்ளேன்..

உங்கள் புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.