PDA

View Full Version : பாலபாடம்



sarathecreator
09-02-2008, 12:05 PM
நான் ரொம்பப்படிக்கவில்லை. சும்மா ஒரு பிஏ. வரைக்கும்தான் படித்தேன். ஒரு வழியா அரியர்ஸ் எல்லாம் முடிச்சு, சென்னைக்கு வேலை தேடி வந்தேன். சில சிறிய வேலைகளும் கிடைத்தன. எனக்கு எக்ஸ்பிரியன்ஸ் வேண்டும் - என்ற கருத்தில் உடன்பாடு உண்டு.

அதனாலே, கிடைத்த வேலையில் சில பல மாதங்கள் பார்த்து ஓரளவு தேரினேன். சின்னச் சின்ன வேலையாகவே பார்த்துபார்த்து போரடித்த காரணத்தால் கொஞ்சம் பெரியவேலையிலே சேரலாம் என்று நினைத்து, ஒரு பெரிய நிறுவனத்துக்கு மனுப்போட்டேன்.

அங்கே இருந்த பெரும் மனிதர் - என்னைப் பார்த்து சொன்னார். இந்த வேலை - பணவசூல் - செய்யும் வேலை. நம்பிக்கையான ஆளாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்தில், ஒரு இலட்சம் ரூபாய் டெபாசிட் கட்டும் அளவுக்கு தகுதியான ஆளாகவும் இருக்கவேண்டும். உன்னால் முடியுமா? - உன்னால் முடிந்தால் இன்னும் 3 நாட்களுக்குள்ளாக 1,00000 ரூபாய். டெபாசிட் செய்துவிட்டு வேலையிலே இணைந்துகொள்" -என்றார்.

நானும் எனக்குத் தெரிந்தவர்களிடமும், உறவினர்களிடமும் பணம் கேட்டுப் பார்த்தேன். யாரும் பணம் கொடுக்கும் நிலைமையிலோ - அல்லது - பணம தரக்கூடிய மன நிலையிலோ இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. நம்மை யாருமே நம்ப மாட்டேன்கிறாங்களே - என்று வருத்தம் கொண்டேன்.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. காலையிலேயே கடுப்பாக வாயிற்படியில் அமர்ந்து ஒரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.

நாங்கள் தினசரி செய்தித்தாள் வாங்கும் பழக்கம் உடையவர்கள். ஆனால் அதை படித்துமுடித்தபின் வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் கூடையிலே போட்டுவிடுவோம். அது ஒரு கூடைமுழுவதும் நிறைந்து இருக்கும். எப்போதாவது அதை பழைய பேப்பர் சேகரிப்பவரிடம் கொடுப்பது வழக்கம்.

காலை 7 மணிக்கே தெருப்பக்கம் வந்த பழைய பேப்பர்காரர் - கூடை நிறைய செய்தித்தாள் இருப்பது கண்டு - எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக விரைந்தோடினார். பணம் தராமல் திருடிவிட்டு ஓடிவிட்டார் என்பது தெளிவாக இருந்தது.

கேட்டு எடுத்தால் உரிமை - கேட்காமல் எடுத்தால் திருட்டு : இது பழமொழி.

அவரோ நான் இருக்கும்போதே என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் எல்லா பழைய பேப்பர்களையும் திருடிக்கொண்டே சென்றுவிட்டார். பண்பலை வானொலியில் பாடல் பாடியது - "தத்துவம் பிறக்கட்டுமே..!..!!..!!! தப்புப் பண்ணேன்டா.." - வசூல் ராஜா எம்பிபிஎஸ் - படப்பாடல். நானும் யோசித்தேன் இன்னொரு தம்மைப் பற்றவைத்துக்கொண்டு யோசித்தேன்.

ரொம்ப நாளாகவே நான் குடியிருக்கும் வீட்டின் எதிர்வீடு பூட்டியே இருக்கிறது. அந்த வீட்டு மனிதர்கள் வெளிநாடு சென்று இருக்கிறார்கள். வீட்டில் யாருமே இல்லை. நல்ல வசதிமிக்கவர்கள். கண்டிப்பாக வீட்டில் இரவிலே கள்ளத்தனமாக புகுந்தால், நமக்குத்தேவையான ஒரு இலட்சத்தை எளிதாக பெற்றுவிடலாம் என்று எண்ணினேன்.

திருட்டு செய்தாவது நல்லவேலை பார்க்கலாம் - என்று யோசித்தேன். ஆனால் இப்போது பார்க்கும் இந்த வேலை பிடிக்கவில்லை. கண்டிப்பாக புதிய வேலையில் இணைந்தே ஆகவேண்டும் என்ற வெறி இருந்தது. இரவு 8 மணிக்கே தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சடசட வென்று சுவரேறிக் குதித்து குழாய் வழியே ஏறி, மாடியை அடைந்தேன்.

சிறிய திறப்பு வழி இருந்தது. நான் ஏற்கனவே ஒல்லியாகவே இருந்ததாலே - எளிதாக உள்ளே நுழைந்து - வீட்டினுள் சென்றுவிட்டேன். பின் ஒவ்வொரு இடமாக ஆராய்ந்தேன். ஒரு இடத்தில் பூசையருக்குப் பின்னாலே கைப்பிடி இருந்தது. அதைத்திருகிப் பார்த்தேன் 500 ரூபாய் கட்டுகளாக பல கட்டுகள் இருந்தன. நான் என்னால் எடுக்க முடிந்த அளவு எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். எனது கழிவறையில் யாருக்கும் தெரியாமல் பணத்தை எண்ணிப்பார்த்தேன் 4,00000 வரை இருந்தது.

அதில் ஒரு இலட்சத்தைத் தனியாக பொட்டலம் போட்டு வைத்தேன். அடுத்த நாள் விசிலடித்தபடியே புது அலுவலகத்திற்கு, அந்தப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றேன். அங்கே சென்றவுடன் என்னை அவர் சில சோதனைகள் செய்துவிட்டு - பணத்தையும் வாங்கிக்கொண்டார். போட்டோ, பாஸ்போர்ட்டின் நகல் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு எனது வேலையைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

இறுதியாக அவர் ஒன்றை மிகவும் பாலபாடம் - என்று குறிப்பிட்டுச் சொன்னார். - எங்கே மொத்தமாகக் கட்டுக்கட்டாகப் பணம் வாங்கினாலும் - அவற்றின் சீரியல் எண்களை குறித்துவைத்துக் கொள்ளும்படி கூறினார். நான் வேலையிலே சேர்ந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. நன்றாக வேலை நடவடிக்கைகளைக் கற்றுக் கொண்டேன்.

குற்ற உணர்ச்சி எதுவும் இல்லை. - நான்கு நாட்களுக்குப் பிறகு வேலைமுடிந்து வீட்டுக்கு வந்தேன். எதிர்வீட்டில் போலீசுநாய் எல்லாம் வந்து சோதனை செய்ததாகச் ன்னார்கள் நண்பர்கள். எதிர்வீட்டினர் வெளிநாட்டில் இருந்து வந்தார்களாம். மாடியின் சன்னலை உடைத்து உள்ளே திருடன் நுழைந்து கொள்ளையடித்து இருப்பதாக - நண்பர்கள் சொன்னார்கள்.

நான் யாரிடமும் , எதுவும் சொல்லாமல் படுத்துறங்கிவிட்டேன். அடுத்த நாள் அலுவலகத்திற்கு உரிய நேரத்துக்குச் சென்றேன். வேலையையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். 3:00 மணி வாக்கிலே திடீரென்று என்னை போலிசார் கைது செய்தார்கள்.

பிறகுதான் தெரிந்தது :- நான் யார்வீட்டில் திருடினேனோ, அவர்தான் எனது இந்தக் கம்பெனி முதலாளி என்றும் - அவருக்கும் பாலபாடம் - யாரிடமும் மொத்தமாகக் கட்டுக்கட்டாகப் பணம் வாங்கும்போது - சீரியல் எண்களை குறித்துவைத்துக் கொள்வது - என்றும் எனக்கு வேலை கற்றுக்கொடுத்த குரு சொன்னார்.

சிவா.ஜி
09-02-2008, 12:38 PM
செய்யும் குற்றம்...அது எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்.....ஆனால் கண்டிப்பாக ஒருநாள் வெளிவந்தே ஆக வேண்டும்.நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள் சாரா.வாழ்த்துகள்.

sarathecreator
09-02-2008, 03:06 PM
செய்யும் குற்றம்...அது எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்.....ஆனால் கண்டிப்பாக ஒருநாள் வெளிவந்தே ஆக வேண்டும்.நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள் சாரா.வாழ்த்துகள்.

தண்டனைக்குத் தப்புவதும் குற்றம். குற்றத்துக்குக் காரணமாக இருப்பதும் குற்றம். அரசியல்வாதிகள் தவறு இழைக்க மக்களாகிய நாம்தானே காரணமாக இருக்கிறோம் (ஓட்டுப்போட்டு பாவம் செய்வது நாம் தானே) என்ன செய்ய?

அனுராகவன்
17-02-2008, 03:33 AM
நல்ல கதை..
செய்வதை திருந்த செய்ய வேண்டும்..
ம்ம் நல்ல கதை..
ம்ம் நீங்கள் தொடர்ந்து தர வேண்டுகிறேன்..
என் வாழ்த்துகள் உங்கள் முயற்சிக்கு..

sarathecreator
17-02-2008, 07:30 AM
அது என்ன இரண்டு முறை ம்ம்.. ம்ம்...