PDA

View Full Version : ஈர விறகாய் மனம்....



யவனிகா
09-02-2008, 08:50 AM
கத்தரி தேட நேரமில்லை...
பல்லால் கடித்திழுத்துப் பிரித்ததில்
நைட்டி நனைத்துச் சிதறிய பால் பாக்கெட்....

எண்ணைய் காய பொறுமையின்றி
முன்னதாகவே இடப்பட்டதால்
கடைசிவரையில் மௌனம் சாதித்த கடுகு....

வடிகஞ்சி ஆற சமயமில்லை,
சூடான டம்ளர் விளிம்பு ,
உதடு தொட்ட இடத்தில் எரிச்சல்....

நிதானமாய் அணிய நேரமில்லை,
காரில் அணிந்து கொள்ள
கைப்பையில் திணிக்கப் பட்ட காலுறைகள்....

படியிறங்கும் நேரம் போட்டுக்கொள்ளலாம்
என்ற புறக்கணிப்பில்
வெள்ளை மேலங்கியின் கீழ்ப்பொத்தான்கள்...

காலை நேரத்தின் அவசரத் தீயில்,
நான்...ஆகுதியாகய்ப் போகும் நேரம்....

எதோ மூலையில், ஈரம் கொஞ்சம்
எஞ்சியிருக்கிறது போலும்...


வாசல் வாஸ்து மணி
சொல்லாமல் போகிறாயே என்று
தலை தட்டிச் சிணுங்குகையில்
அனிச்சையாய் ஆட்டிச் செல்லும் கைகள்....

தடுக்கி விழும் நடையின் அவசரத்திலும்
எதிர் வரும் குண்டுக் குழந்தையின்
கன்னம் வருடச் சொல்லும் மனம்....

உதிர்ந்த யூகலிப்டஸ் இலைகளின்
சரசரப்பில் தானாக தாமதிக்கும் கால்கள்...

ஈர விறகாய் மனம்
இன்னும் புகைகிறது என் மனம்....

ஆகுதி ஜ்வாலையின் ஆரஞ்சு நிறத்தையும்
வித்தியாசமாக அதன் விசுக் விசுக் நடனத்தையும்
கிளர்ந்து வரும் அதன் மணத்தையும் கூட
கொஞ்சம் ரசித்துக் கொள்கிறேன்...
என்னை முழுதாய் நீ எரித்துவிட்டுப் போகும் முன்...

தீயே...கொஞ்சம் பொறேன்....

பூமகள்
09-02-2008, 09:09 AM
யவனி அக்கா..!!
அசத்திட்டீங்க..!!

அவசர கதியில் ஒவ்வொரு செயலையும் செய்து ஓடும் நிமிடங்களில் நினைக்க மறந்ததை மறக்காமல் கவிதையில் வடிச்சிட்டீங்க..!!

எழுத்துகள் எங்கோ இட்டுச் செல்கிறது.

விரிவான பின்னூட்டம் பின்னர் வரும்..!!

பாராட்டுகள் எனதருமை யவனி அக்கா. :)

அமரன்
09-02-2008, 09:30 AM
வேள்வியாகப் போன வாழ்க்கையில்
ஆகுதியாக நாம் பலவற்றை சொரிந்து..
தனக்குரிய அவிர்பாகத்தை
கா(ல)லைத் தேவன் எடுத்துக்கொள்கிறான்..

தேவனானாலும் நமக்கென்ன.
லௌதீகங்களை இழக்காத சமயத்தில்
அவனைக் கட்டிவைக்கும் மாருதிகளாக
அவதாரமெடுக்க முயல்கிறோம்.
முடியாத போது இரைஞ்சுகிறோம்..

காலை நேரத்தின் ரம்மியம் பருகும் சுகம் கவிதை வாசிக்கையிலும்..:icon_b::icon_b::icon_b:

அகிலத்தை ஆளும் காலனால்
அவசரகால நிலைப் பிரகடனம்..
ஆட்சியாளன் அறிவிப்பு ஒற்றி
ஆற நேரமின்று நாம் தினமும்..

எதுக்காக? ஏன்? யாருக்கா?

பொன்செய் மருந்து இன்மையா?
இப்படியும் சிலர் இங்கில்லாமல் இல்லை
பொன்செய் மருந்து தின்மையா?
இந்நினைவிலும் சிலர் உழலும் நிலை..

போதும் என்பதே வரையறுக்க முடியாது
வரவை மிஞ்சிய செலவுச் சுழலில் பலர்..

எப்படி இருந்தாலும்...
இழந்தவைகள் பல கனக்க வைத்தாலும்
அடுத்தவர்கள் சிரிப்பை காணும்போது
கனங்கள் வெறும்
கானல்களென்பது திண்ணமாகிறது..

நேரம் கிடைக்கையில் இழப்புகள் சுருங்கும்..
ஓய்வு நேரங்கள் அனைவருக்கும் நிச்சயமல்லவா..

ஆர்.ஈஸ்வரன்
09-02-2008, 09:51 AM
தலைப்பே அருமை. கவிதை மனம் இருந்தால் போதும் எதியும் சாதிக்கலாம்.
www.eswaranvkl.blogspot.com

Narathar
09-02-2008, 04:12 PM
வாழ்த்துக்கள் யவனிகா
அருமையானா வரிகள்
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

சாலைஜெயராமன்
09-02-2008, 04:35 PM
காலை நேரத்தின் அவசரத் தீயில்,
நான்...ஆகுதியாகய்ப் போகும் நேரம்....

எதோ மூலையில், ஈரம் கொஞ்சம்
எஞ்சியிருக்கிறது போலும்...

ஈர விறகாய் மனம்
இன்னும் புகைகிறது என் மனம்....

ஆகுதி ஜ்வாலையின் ஆரஞ்சு நிறத்தையும்
வித்தியாசமாக அதன் விசுக் விசுக் நடனத்தையும்
கிளர்ந்து வரும் அதன் மணத்தையும் கூட
கொஞ்சம் ரசித்துக் கொள்கிறேன்...
என்னை முழுதாய் நீ எரித்துவிட்டுப் போகும் முன்...

தீயே...கொஞ்சம் பொறேன்....

வாழ்க்கையின் உயரிய தத்துவம். தீக்கு இரையாகவிருக்கும் ஈரவிறகுதானே நாமெல்லோரும். இதுதானே சத்தியம். உயிரெனும் தீ உறங்கிவிட்டால், உற்றார் ஏது உறவேது. இரண்டறக் கலத்தல் தீயில்தானே. அறுதல் என்பதே இல்லையே. அக்கினியின் கருணை பாவத்தின் சுவடைக் கூட இல்லாமையாக்கிவிடுமே. நாணுமே அக்கினி இந்த நயவஞ்சக மானுடத்தைக் கண்டு.

ஞானத்தின் திறவுகோல் தீ தானே.

அது இடும் நடனத்தை ரசிக்க நல்ல மனம் வேண்டும். தீயை நேசித்த போது, நிலையாமையின் நிதர்சனம் நிஜமாய்த் தெரியும். கொஞ்ச ஈரம் இல்லை, அவசரத்தி்லும் குழந்தையைக் கொஞ்சும் ஈரம்.

ஏனிந்த உழைப்பு, என்ன அடையப் போகிறோம். தீ உணர்த்தும் தீஸிஸ். தெளிவான ஆராய்ச்சி. சிறந்த பதப் பிரயோகம்.

அருமை சகோதரி. உழைப்பின் உக்கிரம் அக்கினியின் சாயல். உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தாய்மை. எங்கே போகிறோம் நாம்.

சுகந்தப்ரீதன்
10-02-2008, 03:43 AM
அன்புள்ள..அக்கா..அசத்தல் ரகம்..இந்த கவிதை..!

அவசர கதியில் எழுதியது போல் தோன்றினாலும் அவசியமானதை ஆழமாய் சொல்லி இருக்கிறீர்கள்..!! எல்லோருக்கும் வேண்டும் ஞானம் என்று..!!

இந்த அவ்சர உலகில் எதை தேடி எதை இழக்கிறோம்..என்று எண்ணிப்பார்க்க கூட பலருக்கு நேரமில்லை...!! இதில் எங்கே உங்களை போல் ஆழமாய் சிந்தித்து எங்களால் வாழ முடியப் போகிறது...? வாழ்த்துக்கள்..அக்கா..!!

சிவா.ஜி
10-02-2008, 04:28 AM
காலை நேரங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாய் விடிவதில்லை.
சுணங்கி வாடுகையில்...சூடாய் ஒரு கோப்பை தேநீர்....அன்பாய் கிடைத்தால் ஆனந்தம்.
இரவு உறக்கத்தோடு போராடி வைகறையில் வைகி எழ நேர்ந்தாலும்...ஆதரவான பார்வை பெற்றால் மகிழ்ச்சி.
தனக்காக இருக்கும் அனைத்து இன்பங்களையும் ஆற அமர அனுபவிக்கும் காலை கிடைத்தால் சுகமே.

ஆனால் எத்தனை பேருக்கு இது வாய்க்கிறது?
சில நேரங்களில் திணிக்கப்பட்டதாய்...சில நேரங்களில் விரும்பி ஏற்றுக்கொள்வதாய்...அமைந்து விடும் நிலை.

காய்ந்த விறாகாய் இல்லாமல் ஈர விறகாய் இருப்பது சிறு ஆறுதலே...அக்னியின் ஆக்ரோஷத்தை நிதானமாக்கலாம்.

எல்லா அதிருப்திக்குப் பிறகும் அவசிய,அனாவசிய ஆசைகளே இருப்பதால்...குற்றவாளிக்கூண்டில் ஒவ்வொருவரும்....

சிந்திக்க வைக்கும் கவிதை.
வாழ்த்துகள் தங்கையே!

இளசு
12-02-2008, 06:02 AM
பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்..

உடல் ஈரவிறகு என்பது நிரவப்பட்ட உண்மை!

இங்கே மனதுக்குச் சொன்னது புதுமை!

அவசர நெருப்புக்கு காய்ந்துவிட்ட விறகுகள் இயைந்து போகும்..
ஈர விறகுகள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்தபடி எரியும்..
புகையும் கரிச்சலும் கூடுதல் ஊதல் ஊக்குவிப்புமாய்...

அதை மிக அருமையான உவமையாய்க் கையாண்ட யவனிகாவுக்கு...
மீண்டும் சொல்கிறேன் -
நித்திய கவனிப்பும் அதை வடிக்கும் எழுத்தும் செம்மையாய் அமைந்த சிறப்பாளர் நீங்கள்..

பாராட்டுகள் யவனிகா!

-----------------------------------------------

என் கவிமனப் பதில் நெருப்புக்கு!

முழுதும் எரிந்து மனம் கரியாகுமா???
உடல் சாய்ந்த பின்னரே சாத்தியம்..
இறுதிவரை (யூகலிப்டஸ் இலைகளைச் சரக்கி நடக்க வைப்பது போன்ற சின்னச்சின்ன நிகழ்வுகளால்)
கொஞ்சம் ஈரம் எங்கேயோ ஒட்டி இருக்கும் நிச்சயமாய்..

யவனிகா
12-02-2008, 03:24 PM
பின்னூட்டமிட்ட சகோதரர்களுக்கு நன்றி. பெரிய கவிதாயினி இல்லை நான்.பிள்ளைக் கிறுக்கலாய் கிறுக்கும் போது கூட...அன்புடன் கிடைக்கும் உந்து சக்தியாய் உங்களின் பின்னூட்டம் கூடுதலாய் கிறுக்க உத்வேகம் தருகிறது.

கீதம்
03-01-2011, 11:45 PM
கவிச்சமராடும் யவனிகா,
கவிதைக்களத்துடன் விட்டீரோ கா?
கைவிட்டுப் போனாலும்
தடம்பார்த்துப் பின்தொடர்ந்து
பிடித்துவிட்டேனே உம்மை,
மீண்டும் பிடித்தாட்டட்டும்
உம் கவிப்பேய் எம்மை!

ஜானகி
04-01-2011, 12:49 AM
அவசரத் தீயில் இடும் ஈரமான ரசனை வீணாகாது... சந்தனமாய் மணக்கும், தவறவிடாதீர்கள்.

ஓய்வில் கூட இது சாத்தியமாகுமோ..தெரியாது !

ரசிப்பு தான் நம்மைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நூலிழை என்பதனை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ரசிக்க வாய்ப்புக் கொடுத்த தமிழ் மன்றத்துக்கு ந்ன்றி !