PDA

View Full Version : நாம்ஆதி
06-02-2008, 05:16 PM
நமக்கிடையிலான
இந்த நட்பு
ஞானியின் விழிப்புணர்வு போன்று
தூய்மையானது..

பால்
பருவம் என
அத்தனை தடைகளையும்
தகர்த்தது நம் புரிதல்..

சங்கடமானதையும்
சாதாரணமாய்
நீ பகிரும் தருணங்களில்
கவனித்திருக்கிறேன்
உனது விழிகளில் வழியும்
என் மீதான நம்பிக்கைகளை..

ஒரு சூழலில்
உனது குடும்பத்தாரிடம்..
எனது மிக நெருங்கிய
நண்பனென நீ
பெருமிதமாய் அறிமுகம் செய்கையில்
வெட்கி தலை குனிந்தது
நான் ஆண்
நீ பெண் எனும் நினைப்பு..


அன்புடன் ஆதி

இளசு
06-02-2008, 09:56 PM
இப்படி பால்தாண்டிய பால்நிற நட்பு அமைந்தவர்கள் பாக்கியசாலிகள்..

கடற்கரை மணலில் நடந்த இவ்வகை நண்பர்களின் தடம் பார்த்து
சமூகம் நிச்சயம் காதலர்களின் தடந்தான் எனப்பேசும் - என்ற
கருத்து கொண்ட கவிதை ( ?தபூசங்கர்) நினைவுக்கு வந்தது..

நட்பு பால் போல...
காதல் சர்க்கரை போல..

வெறும் பால் மட்டும் வெள்ளிய மனத்தோர் அருந்திக்கொண்டே இருக்கலாம்..

நட்பில்லாக் காதல் - திகட்டும்..திணறும்.. சலித்துப்போகும்!

வாழ்த்துகள் ஆதி!

சுகந்தப்ரீதன்
07-02-2008, 05:00 AM
வெட்கி தலை குனிந்தது
நான் ஆண்
நீ பெண் எனும் நினைப்பு..

அற்புதம்..ஆதி..!
ஆண் பெண் நட்பை கவிதையில் சொன்னவிதம்..!!
அப்படி ஒரு நட்பு கிடைப்பது எத்தனை அரிய விசயம்..?!
வாழ்த்துக்கள் ஆதி...!

சிவா.ஜி
07-02-2008, 05:05 AM
இந்த மாதிரியான நட்பை முழுமையாக அனுபவித்தவன் என்ர வகையில் என்னை மிக மிக கவர்ந்த கவிதை.
ஆம் ஆதி...குடும்பத்தாரிடம் அப்படி அறிமுகம் செய்து வைக்கும்போது மனசுக்குள் ஒரு உணர்ச்சி தோன்றும் பாருங்கள்.....விளக்க வார்த்தையே இல்லை.
பால் கடந்த பால் போன்ற நட்பு...பிரமாதம் ஆதி.வாழ்த்துகள்.

பூமகள்
07-02-2008, 07:08 AM
பூக்களின் மலர்வு போல்
எப்போது பூத்தது
நம்மில் நட்பூ..??
புலப்படாத தருணங்கள்..!

உணர்வுப் பரிமாறல்கள்
உள்ளம் கொண்ட
உவகை நிமிடங்கள்..!

ஓராயிரம் பேசினாலும்
உள்ளிருக்கும் நட்பு
அமைதியாய் கண்சிமிட்டும்..!

இன பேதமற்ற
சமூகம் படைக்க
முதல் படியாய்
நம் நட்பு..!

நடுக்கடல் ஆழத்தின்
அமைதி போல்
ஆழமாய் இருக்கும்
நமக்கான புரிதல்கள்..!

சொல்லும் முன்னே
புரிந்து எனக்காய்
அழுத புரிதலான மனம்..!

எல்லாம் கிட்டிய
மகிழ்ச்சியில் நான்..!
மைல்கள் கடந்து
தூரமிருந்தாலும்
மனத்தோடு இன்னும்
தூய்மையாய் அதே நட்பு..!

இன்னும் ரீங்காரமிடுகிறது
அன்பாய் அழைக்கும்
"பிரியமான தோழி..!" என்ற
வாசகம்..!

----------------------
வழக்கம் போல ஆதியின் அற்புதமான கவிதை..!

ஞானியின் விழிப்புணர்வு போன்று
தூய்மையானது..
இந்த வரிகள் மிக மிக அபாரம்.
இத்தகைய ஒரு நட்பு பெற்ற ஆதிக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

ஆர்.ஈஸ்வரன்
07-02-2008, 11:05 AM
வாழ்த்துகள் ஆதி அவர்களே

விகடன்
07-02-2008, 11:25 AM
கவிதையின் நடையில் எளிமையும் நட்பில் கனத்தையும் தன்னகத்தே வைத்த கவிதை.

அதிலும் ஆதியின்,


வெட்கி தலை குனிந்தது
நான் ஆண்
நீ பெண் எனும் நினைப்பு..


என்னும் வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
பாராட்டுக்கள் ஆதி.

rocky
08-02-2008, 10:32 AM
அன்புள்ள மன்றத்தோழர் ஆதி அவர்களுக்கு,

கவிதை மிகவும் அருமையாக இருந்தது, வார்த்தைகளின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற கவிதைகளைப் படிக்கும்போது எனக்கு அத்தகைய நட்பு இல்லையே என்ற வருத்தம் வருவதைத் தடுக்க முடியவில்லை. பாலினம் கடந்த நட்பு இன்றைய இளைஞர்களிடம் இருந்தாலும் அது இறுதிவரை வருமா என்பது கேள்விக்குறியே?

நான் இதுவரை அதிகம் பெண்களுடன் பழகியதில்லை, இதுவரை எனக்குத் தோழிகள் என்று இருவருடன் மட்டுமே பழகியிருக்கிறேன், ஆனால் அதிலும் ஒருவருடன் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை, இணையத்தின் மூலமாக மகம் பார்க்காமலேயே நண்பரானோம், என்னுடைய எந்தக் கஷ்டத்தையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன், நான் நேரில் பார்த்துப் பழகிய நண்பர்களை விட அவர் என்மீது மிகவும் அக்கறைகொள்வார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை நான் என் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது திருச்சியின் வழியாகச் சென்றோம், அப்போது அவரிடம் இதுபோல் இன்று எங்கள் வாகனம் திருச்சியில் இரவு உணவுக்காக நிருத்துவார்கள் அப்போது நீங்கள் வந்தால் என்னைப் பார்க்கலாம் என்று கூறினேன், வெரும் பத்துநிமிடம் பார்த்துப் பேசுவதற்க்காக ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தார், ஆனால் அவருடைய திருமணத்திற்குப் பிறகு என்னால் அவருடன் பேச முடியவில்லை, இப்போதும் ஏதாவது பண்டிகையின் போது அவரின் வீட்டிற்க்கு தொலைபேசியில் அழைத்து அவரின் தாயாருடன் பேசுவேன்.

இப்போது அவரின் முகமே எனக்கு மறந்துவிட்டது. என்னுடன் எவ்வளவோ உரிமையுடன் பழகிய அந்தத் தோழியை திடீரென இழந்துவிட்டது போல் தோன்றியது. இது மிகவும் வேதனையான பிரிவு. இதுபோல் அல்லாமல் என்றுமே தொடரக்கூடிய நட்பாக அமைந்தவர்கள் நிச்சயம் கொடுத்துவைத்தவர்களே! அவர்களைப் பார்த்தால் நிச்சயம் எனக்கு சந்தோஷத்தை விட பொறாமைதான் வரும். ஆகையால் ஆதி அவர்கள் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துக்கள் ஆதி, மிகவும் நல்ல கவிதையைத் தந்துள்ளீர்கள்.

kavitha
08-02-2008, 10:51 AM
சங்கடமானதையும்
சாதாரணமாய்
நீ பகிரும் தருணங்களில்
கவனித்திருக்கிறேன்
உனது விழிகளில் வழியும்
என் மீதான நம்பிக்கைகளை..


ரசித்த வரிகள்.... விலை கொடுத்து வாங்கமுடியாத ஒன்றில் ஒன்று இந்த நம்பிக்கை...
இதை இதனால் மட்டுமே வாங்கமுடியும்.
மிக அற்புதமான கவிதை ஆதி.

பொதுவாக எனக்கு அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இல்லை.
இந்த விசயத்தில் நான் நம்புகிறேன். நானும் ஓர் அதிர்ஷ்டசாலி என்று.

அமரன்
08-02-2008, 11:08 AM
பாலபருவத்தில் பால்பேதம்
புலப்படவில்லை
நமக்கும் பருகியோருக்கும்..
நம் பழக்கமும் பழுதில்லை..

கொஞ்சம் கொஞ்சமாக
இளம்பருவ வாசல் திறக்கையில்
கிடைத்த பொட்டால்
புகுந்த பேதக்காற்று சுவாசமாகி

இருதயம் பருவமடைந்த போது
பவித்திரமான காதலானது..

அவ்வப்போது நீ வீசிய
நம்பிக்கை வளையத்தில் கட்டுண்டது..

உனது குடும்பத்தாரிடம்..
எனது மிக நெருங்கிய
நண்பனென நீ
பெருமிதமாய் அறிமுகம் செய்கையில்
வெட்கி தலை குனிந்தது
நான் ஆண்
நீ பெண் எனும் நினைப்பு...

மன்னிக்க ஆதி..

எந்தக்கவிதை படித்தாலும்
யோசனைப் பாங்களை புரட்டி
கவிதையை புரட்டிப் போடு..
என் துரோணர்களில் ஒருவர்
திடீரென நினைவுக்கு வந்துவிட்டார்..

உங்கள் அருமையான புனிதமான கவிதையில்:icon_b:
குறுகோடிய என்சிந்தனை கறை இட்டுவிட்டது.:icon_p:
ஆனால்
நாங்கொண்ட இவ்வகை நட்பில் என்றும் கறையில்லை:icon_b:

ஆதவா
08-02-2008, 11:30 AM
அருமை ஆதி..

நட்புக்குக் கூட கற்புகள் உண்டு

என்று பாடுகிறார்கள்.. உண்மைதான்.. மனக்கறை இல்லாத நட்புதான் தூய்மையான கற்புள்ள நட்பு...
ஆண் பெண் வித்தியாசம் நட்பு அலையில் காணாமல் போய்விடும்...

ராக்கியின் அனுபவம் போலவே எனக்குள்ளும் உண்டு... அவர் முகம் பார்த்துவிட்டார்.. நான் பார்க்கவில்லை... அட அதே திருச்சிதான் பா...

இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7734) நட்புக் கவிதைகள் முன்னர் எழுதிக் கொண்டிருந்தோம்... விருப்பப் பட்டால் தொடரவும்..

kavitha
09-02-2008, 08:59 AM
அட அதே திருச்சிதான் பா
அட! நம்ம ஊரு பொண்ணா? வாழ்த்துகள்

Narathar
09-02-2008, 05:28 PM
புரிதல் பூரணமாகிவிட்டால்
பால் என்ன பருவம் என்ன?

அழகிய கவிதை வாழ்த்துக்கள்

சாலைஜெயராமன்
09-02-2008, 05:59 PM
நட்புக்கு நல்ல இலக்கணம் நம்பிக்கை. எதிர்பாலில் மட்டும் ஈர்ப்பு இருந்தால் அது நல்ல நட்பாக இருக்க முடியாது.

எனக்கு ஒரு நண்பன் உண்டு. உண்டு உறங்கி ஒன்றாக வாழ்ந்து, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இருந்த காலங்கள். ஒரே ஒரு பாலம்தான். அதன் பெயர் பரஸ்பர நம்பிக்கை. என்னை நம்பி சகலத்தையும் ஒப்படைத்த அவனுக்கு சில பழக்க வழக்கங்களால் என்னைத் தவிர்த்து தள்ளிப் போக வைத்தது.

காதலை உருகி உருகி எழுதும் பல பேருடைய தவிப்பை ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரிந்திருக்கும் அனுபவத்தால் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன்.

காதலியிடம் கூடப் பெறமுடியாத அன்பு நல்ல நண்பர்களிடையே ஏற்பட வாய்ப்பு உண்டு. காதலியிடம் வைக்கும் அன்பு தூய்மை சார்ந்தது அல்ல. வெற்றி பெற்ற காதலுக்கு முடிவு உண்டு. அதுதான் திருமணம். பின் கலவி. அங்கே காதல் என்பது முடிவுக்கு வருகிறது. புதிய உறவு மனைவி என்று மாறுகிறது.

ஆனால் நல்ல நண்பர்களின் நட்பு வார்த்தைக்குக் கொண்டுவர முடியாத இனிமைகளின் தொகுப்பு. தூய்மையின் உருவை காதலியைத் தாண்டி நண்பர்களிடம் காணமுடியும்.

கவிதையின் தாக்கம் இப்பின்னூட்டம். முரண் பட்டிருந்தால் மன்னிக்கவும் ஆதி.

ஆதி
03-08-2012, 10:14 AM
எத்தனை விதமான பின்னூட்டங்கள் எத்தனை விதமான அலசல்கள், ஒருவருக்கும் நான் நன்றி கூட சொல்லவில்லை என்பதை நினைவ்க்கும் போது மனம் குறுகுறுக்கிறது, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

மீண்டும் இது போல மன்றத்தில் பொற்காலம் தளைக்க இறைவனை யாசிக்கிறேன்

சிவா.ஜி
03-08-2012, 11:57 AM
ஆமாம் ஆதன்....ஆதியாய் இருந்து ஆதனாய் மாறிய காலக்கட்டத்தில் நாம் இழந்துவிட்ட உறவுகளை மீண்டும் காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.