PDA

View Full Version : துச்சாதனன்சிவா.ஜி
06-02-2008, 01:13 PM
தம்பி துச்சாதனா....இழுத்துவா திரௌபதியை.......

அண்ணனின் கர்ஜிக்கும் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தான்
துச்சாதனன்.தான் கேட்டதை நம்ப முடியாதவனாக,திகைத்தது அவனது குழம்பிய முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

தன் கட்டளையைக் கேட்டபிறகும் அசைவற்று நிற்கும் துச்சாதனனைப் பார்த்து மீண்டுமொருமுறை சொன்னான்...

இழுத்துவா பாஞ்சாலியை....மண்ணாளும் மன்னவர் பலர் கொலு வீற்றிருக்கும் இந்த மணி மண்டபத்தில் அந்த பாண்டவர் பத்தினியை கொண்டு வந்து நிறுத்து......

கொக்கரித்தான் கொடுமதி துரியோதனன்.

இந்த முறை செவி வலிக்க செப்பியவனின் மொழி கேட்டு மனம் அடக்கி மண்டபம் நீங்கினான் துச்சாதனன்.

போனவன் நின்றான் பொன்மகள் எதிரில்.கைகள் நடுங்க கைகள் பற்றி இழுத்தான்.காரணம் கேட்டவளுக்கு தோற்ற பொருள் நீ என்றான்.

தோற்க வேறுதுவும் தர்மரிடமில்லையா......

சீற்றத்தோடு கேட்டவளுக்கு மறுமொழி ஏதும் கூறாமல் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்...நான் கேட்க நினைத்த கேள்வியல்லவா இதுவென்று.

சற்று நேரத்திலேயே அண்ணியை அந்நியள் போல் அழைத்து வந்து மண்டபத்தின் மத்தியில் நிறுத்தினான்.இதற்குள் துச்சாதனனின் மனம் பட்ட பாடு.....

அய்யகோ....அன்னையைப் போன்றவள்,மூத்த அண்ணன்மார்களின் பத்தினி,ராஜவம்சத்தின் மரியாதை....இவளை தொட்டு இழுத்துவந்த இந்த கைகள் வெட்டுன்டு விழுந்திருக்கக்கூடாதோ.....கடத்தி வந்த கால்கள் கத்திக்கு இரையாகியிருக்கக்கூடாதோ......

அன்னையாகிய அண்ணியே...மன்னித்துவிடம்மா....ஒரு குருதி ஓடும் இரு உடல்களாய் வாழும் சகோதர்களில் ஒருவனாய் ஆகிப்போனதால்,அண்ணனின் கட்டளையை தட்ட முடியவில்லை தாயே......

பழி வருமே என்றென்னாமல் இழிசொல் சொன்னானே...
கலிமீது நடக்கா கொடுமையாய் மொழி ஒன்று சொன்னானே...
உடன்பிறப்பு தொன்னூற்றொம்பது.....மற்றவரை விடுத்து எனை ஏவினானே அதை என்னென்பது....இனி என்ன நிகழப்போகிறதோ...மமதை தலைக்கேறிய முன்னவன்,எங்கள் மன்னவன் என்ன இயம்புவானோ.....

சஞ்சலத்தில் துச்சாதனனின் பாசமும்,பண்பும் முட்டி மோதியதில் வெப்பமுண்டாகி வியர்வையாய் வீரத்தேகம் நனைந்து வழிந்தது.

இடியாய் இறங்கியது அண்ணனின் அடுத்த கட்டளை....

அவள் ஆடையைக் களைந்து அவமானப்படுத்து.....

காய்ச்சிய கம்பிகளாய் அண்ணனின் சொல் காதுகளில் நுழைந்தது....

அய்யோ ஆடையெடுப்பதிலும் மேல் அவள் ஆவியெடுப்பது....
நானா அந்த பாதகத்தை செய்ய வேண்டும்....எனக்கா இந்த இழி செயலுக்கான ஓலை....இதுவல்லவே என் வேலை....

கடவுளே எனைக் காப்பாற்று....தனயனால் தாயின் மானம் தகர்க்கப் படுவதை தடுத்து நிறுத்து.....ஒன்றாய் வளர்ந்த பாவத்திற்காக, கன்றே பசுவை களங்கப்படுத்தலாமா....

துச்சாதனா ஏன் தயக்கம், எதற்கு இந்த மயக்கம்....துகிலுரித்து தூய்மை ஒழி....மகிழும் உன் அண்ணனின் விழி

துரியோதனன் துரிதப்படுத்தினான்......

வழியின்றி அந்த இழிசெயலை துவங்கினான் துச்சாதனன்....

கண்ணா...கார்மேகவண்ணா,மாயம் போதும்.....கதறும் என் குரல் உன் காதுகளை கடக்க வில்லையா.....எனைக்காக்க இந்த அவதாரம் நீ எடுக்கவில்லையா...என்மேல் கரிசனம் காட்டு...உன் தரிசனம் காட்டு....

பாஞ்சாலியின் அபயக்குரல் அந்த ஆயர்குலத்தோனின் செவி சேர்ந்த மறு நொடி அங்கு உதித்தான்.....துகில் கொடுத்து திரௌபதியின் துயர் துடைத்தான்.....

தெய்வமே எனைக் காத்தாய்.....இந்த பாவியின் குருதியெடுத்து கூந்தல் தடவி முடிந்து கொள்கிறேன்...அதுவரை அவிழ்ந்தது...அப்படியே இருக்கட்டும்....

பாஞ்சாலியின் சபதம் கேட்டு துச்சாதனன் மகிழ்ச்சியால் மனதுக்குள் துள்ளினான்.

ஆ.....பரந்தாமா....நீ ஆபத்தாந்தவன்.....அபய ரட்சகன்....என் தாயின் மானம் காத்து நீ என்னைக் காத்தாய்.....தாயே என்னை மன்னித்துவிடு....அடுத்த பிறவியில் என்னை மகனாய் பெற்றெடு......உன் பாதங்களில் பூக்களிட்டு என் பாவங்களைக் கழுவிக்கொள்கிறேன்.....என் குருதி உன் கூந்தலடைந்தால்...இப்பிறவிப் பாவத்தில் சொற்பமேனும் குறையும்....என் மனதின் பாரம் அற்பமேனும் மறையும்.....

தாயே நீ வாழ்க!


துச்சாதனன் எழுந்தே - அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
\"அச்சோ, தேவர்களே!\" - என்று
அலறி அவ்விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறியவனைப் போல் - அந்தப்
பேயனுங் துகிலினை உரிகையிலே
உட்சோதியிற் கலந்தாள் - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்

(இந்த பாரதியின் வரிகளை வாசித்தபோது...துச்சாதனனின் இன்னொரு பக்கம் எப்படி யோசித்திருக்குமென்று கற்பனை செய்தேன்.பாரதிக்கு அன்னையாய் தோன்றிய பாஞ்சாலி துச்சாதனனுக்கும் அன்னையாய் தோன்றியிருந்தால் அவன் மனம் என்ன பாடு பட்டிருக்குமென்று சொல்ல நினைத்தேன்.)

சுகந்தப்ரீதன்
06-02-2008, 01:28 PM
அருமை அண்ணா.. அற்புதம்..தங்களின் கற்பனை...! யாரரிவார்..துச்சாதனன் மனநிலையை.. அவனையன்றி அவனியிலே...?!

தங்களின் மாறுபட்ட கோணம்.. உண்மையிலேயே துச்சாதனனுக்கு இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு..! பாரதியின் கோணத்தில் துச்சாதனனையும் நிறுத்தி அவனை நிரபராதியாக காட்டியது..வியப்பு..அண்ணா..!

ஆனால் ஒரு சின்ன நெருடல் என்னவென்றால்...இப்படி ஒரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் என்று எண்ணுபவன்... அந்த பாவசெயலை செய்யாமால் உயிர் மாய்த்திருக்க முடியுமே.. ஆனால் அவன் அப்படி செய்யாமால் தமயனின் சொல்லுக்கு கட்டுபட்டு செய்திருப்பதில் எனக்கென்னவோ துச்சாதனன் பாரதியின் கோணத்தில் பாஞ்சாலியை நோக்கவில்லை என்றே தோன்றுகிறது...!

எதிர்மறையாக எண்ணாமால் மாறுபாடு சிந்தித்த சிவா அண்ணாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூடவே 1000 இ-காசுகளும்..தம்பியிடமிருந்து..!

பூமகள்
06-02-2008, 01:32 PM
அட்டகாசம் சிவா அண்ணா.
காட்சி கண் முன் விரிகிறது.
துச்சாதனன் மனம் படும் பாடு நம்மையும் உருகச் செய்கிறது.
எப்படி இப்படி எல்லாம் முடிகிறது!!!

கண் முன் எல்லாம் நிகழ்ந்து துச்சாதனன் இறுதியில் சொல்லும் காட்சி.. அற்புதம்.. அபாரம்..!! :)

பாராட்ட வார்த்தைகள் இல்லை சிவா அண்ணா.

சிவா அண்ணாவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் இது. :)
தொடர்ந்து கலக்குங்க அண்ணாவ்..!!

சாலைஜெயராமன்
06-02-2008, 01:32 PM
கற்பனையோ இல்லை நிஜமோ எத்தனை வகை பாத்திரங்கள்? எத்தனையான சிந்தனைகள்? மஹாபாரதம் நம் மண்ணின் பெருமை

பாரதத்தின் பழமைகளின் சிறப்பில் மகா பாரதத்தைப் புனைந்தவரின் கற்பனை அதீத மனித சக்தியின் எண்ணங்களால் ஆன வெளிப்பாடு என்பதை யாவரும் மறுக்க இயலாது. ராஜதந்திர நெறிகளில் வஞ்சகத்தின் பங்கை மிகச் சிறப்பாக பல்வேறு முகங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்ட இந்த கற்பனை ஓவியம் இன்றைய நவீன பாரதத்தின் அரசியல் சித்துவிளையாட்டுக்களை தீர்க்க தரிசனக் கண்களோடு நோக்கி எழுதப்பட்ட மகா காவியம் என்றால் பொய்யாயிராது.

எத் தனைதான் கல் நெஞ்சக் காரனாயினும் அண்ணியின் துகில் உரிதலில் துச்சாதனின் எண்ணத்துக்குள் இப்படிப்பட்ட உணர்வுகள் இருந்திருக்குமானால் அது எவ்வளவு இனியதானதாக இருக்கும்.

யாரும் இதுவரை கற்பனை செய்யாத ஒரு கரு உங்கள் எண்ணத்தில் உதித்தது மிக அற்புதம். இது உங்கள் மெல்லிய, மிருதுவான, பகைவனுக்கும் அருள் செய்யும் அன்பான இருதயத்தை படமிட்டுக் காட்டியது திரு சிவா.

நல்ல கற்பனை வளத்தோடு தஞ்சைக்கே உரிய தமிழ் நடை அயர வைத்தது.

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?

கற்பனையிலாவது நல்ல உள்ளங்கள் படைத்த மனம் ஒன்று கூடவா இந்த சோக நிகழ்வில் இருந்திருக்காது என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இதைப் பார்க்கிறேன் திரு சிவா.

தாயே என்னை மன்னித்துவிடு அடுத்த பிறவியில் என்னை மகனாய் பெற்றெடு.....................

உண்மையில் துச்சாதனன் இவ்வாறு எண்ணியிருந்தால் ? கற்பனையே மிக நன்றாக இருக்கிறதே.

உவகை பொங்க வைத்த ஒரு உபகதை. தங்கள் நல்ல எண்ணம் வலிமையடைந்தது.

சிவா.ஜி
06-02-2008, 01:33 PM
மிக்க நன்றி சுகந்த்.நடந்து முடிந்துவிட்ட ஒன்று.அதனால் இறந்திருக்கலாமே என நான் அந்த கோணத்தில் சிந்திக்கவில்லை.செய்வது இழிசெயல்தான் என்று தெரிந்தே ஒரு நிர்பந்தத்தில் செய்திருந்தால் என்ன நினைத்திருப்பானென்றே யோசித்தேன். உங்கள் பாராட்டுக்கும்,பணத்துக்கும் மனம் நிறைந்த நன்றிப்பா.

சிவா.ஜி
06-02-2008, 01:36 PM
மனம் நிறைந்த நன்றிம்மா பூ.பாராட்டு எனக்கல்ல....அந்த முண்டாசுக்கவிஞன் பாரதிக்குத்தான் சேர வேண்டும்.தாயே என அவன் திரௌபதியை அழைத்தது என்னை இப்படி சிந்திக்க வைத்துவிட்டது.
மீண்டும் நன்றிம்மா.

சிவா.ஜி
06-02-2008, 01:40 PM
திரு ஜெயராமன்....மிக நீண்ட உங்கள் பின்னூடம் கண்டு மலைத்து விட்டேன்...கூடவே லேசான வெட்கமும்....உங்களின் இத்தனை பாராட்டுக்கு நான் தகுதியா என நினைத்து.நீங்கள் சொல்லியிருப்பதைப்போல...இந்த காலத்துக்கும் பொருந்துமாறுதான் மகாபாரதம் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது.அது கற்றுத்தரும் பாடங்களே அநேகம்.அதனை எளிமையாக்கி என் பாரதி ஊட்டிய கவித்தேனிலிருந்து சின்ன துளியை மட்டுமே நானெடுத்து கையாண்டிருக்கிறேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா.

மதி
06-02-2008, 01:55 PM
அருமையான சிந்தனை சிவாண்ணா..
சுகந்தன் சொன்னது போல யாரரிவர் அவன் உள்ளத்தை...
இப்படி கூட யோசிக்க முடியுமா..?

சாம்பவி
06-02-2008, 03:16 PM
ஹாட்ஸ் ஆஃப் டு யூ... !

அபாரமான கற்பனை...

பராசக்தியவள்...
பாருக்கே படியளப்பவள்...
கொழுந்தனும் ஓர்
குழந்தையென அறியாளோ... !


அதெல்லாம் சரி...
இப்படி
வார்த்தைகளை
வசப்படுத்தும்
வசியக்கலையை
எங்கு கற்றீரோ .. !
அசத்தல் ரகம்.... !!!!!பி.கு.: word wrap செய்ய இன்னும் கவிதை மிளிருமே... !

சிவா.ஜி
06-02-2008, 04:14 PM
அருமையான சிந்தனை சிவாண்ணா..
சுகந்தன் சொன்னது போல யாரரிவர் அவன் உள்ளத்தை...
இப்படி கூட யோசிக்க முடியுமா..?

நன்றி மதி.சற்றே மாறுபட்டு சிந்தித்துப் பார்த்தேன்.நன்றாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி மதி.

மலர்
06-02-2008, 04:18 PM
வாவ்.... வித்தியாசமான சிந்தனை...
எப்படி அண்ணா இப்படியெல்லாம்...... படித்து அசந்து போயிட்டேன்....
துச்சாதனின் உண்மையான மனநிலை மட்டும் இதுவானால்....
நினைக்கவே ஆச்சரியமா :sprachlos020: :sprachlos020: இருக்கு.....
பாராட்டுக்கள் சிவா அண்ணா......

சிவா.ஜி
06-02-2008, 04:20 PM
சாம்பவியிடமிருந்து பாராட்டு...வாவ்...மனசு பறக்குது...ஐ ஸ்வே...நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சாம்பவி.ரொம்ப நன்றி.
வார்த்தைகள்....எனக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனை.நிறைய வார்த்தைகள் தெரியாது.தெரிந்ததை வைத்து அலங்கரிக்கிறேன்.

இதைக் கவிதையாக எழுத வில்லை கதை போலத்தான் எழுதினேன் அதனால்தான் கதை வடிவில் இருக்கிறது.
மீண்டும் நன்றி சாம்பவி.

சிவா.ஜி
06-02-2008, 04:41 PM
மலர் ......ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா....நீ ஜி-சாட்ல சொல்லையின்னா எனக்கு தெரிஞ்சிருக்கவெ இருக்காது.அதுக்குன்னு இவ்ளோ கொடுத்துட்டு கொஞ்சமாக் கொடுத்தேன்னு சொல்றியேம்மா...கிரேட்.மனசு நிறைஞ்சு நன்றிம்மா.

இளசு
06-02-2008, 09:07 PM
மிக மிக புதிய சிந்தனை.. கோணம்..

அசத்திவிட்டீர்கள் சிவா..

சாலை ஜெயராமன், சாம்பவி உள்ளிட்டோரின் பாராட்டுகள் முழுக்கத் தகும்..

தாயை வெட்டிய பரசுராமனை எண்ணுகிறேன்.
தந்தை, தனயன் சொல்மிக்க மந்திரமில்லை...
சொன்னதைச் செய்வதை விட்டு, மரணிக்கிறேன் என்பது கூட
கட்டளை மீறல் என எண்ணும் காலம் அதுவல்லவா?

ஒரு கணம் இது மெய்யோ என உறைந்து சிலிர்க்கவைத்ததே
உங்கள் எழுத்தின் மகத்தான வெற்றிக்கு அடையாளம்..

பாராட்டுகள் சிவா!

செல்வா
06-02-2008, 09:24 PM
சிறுவயதில் நான் வாசித்த ஒரு கட்டுரையில் (கண்ணதாசன் அவர்கள் எழுதியது என எண்ணுகிறேன்) ஒரு கவிஞன் கவிதை எழுதும் போது அவன் வார்த்தைகளைத் தேடிச்செல்ல கூடாது மாறாக அவன் மனதில் நினைத்ததற்கு ஏதுவான வார்த்தைகள் தேடிவந்து என்னை எடுத்துக்கொள் என்னை எடுத்துக்கொள் என்று கெஞ்சவேண்டுமென்று எழுதியிருப்பார் அத்தகைய மொழி ஆளுமையை நான் உங்கள் பதிவில் பார்க்கிறேன் அண்ணா.

தான் பார்க்கும் சந்திக்கும் வாசிக்கும் நேசிக்கும் உணரும் சிறிய சிறிய விடயங்களையும் சந்திப்புகளையும் படைப்புகளாக்கும் திறனுடைய சிறந்த படைப்பாளி நீங்கள். உங்களால் குழந்தையோடு குழந்தையாக மழலை பேசவும் முடியும் தத்துவ வாதிகளோடு தர்க்கம் செய்யவும் இயலும்.

இனி இந்த கதையைப் பற்றி.... கருணாநிதி அவர்களின் ஒரு சிறுகதையைப் படித்து நான் மிக மிக வியப்படைந்ததுண்டு. (பெயர் மறந்து விட்டது ஒரு கோயிலில் இருந்திருக்க வேண்டிய 108 நடன முத்திரைகள் குறிக்கும் சிலைகளில் சில சிலைகள் இல்லை ஏனப்படி என்ற கற்பனையில் எழுதியிருப்பார்..அருமையான கதை) இந்த கதையைப் படிக்கும் போது அந்த கதைதான் ஞாபகம் வந்தது. இது இப்படி இருந்தால்... அல்லது ஏனப்படி இருக்கிறது என்ற கற்பனையை இத்தனை அழகிய கவிதை நடையில் கதையாகத் தருவது அத்தனை எளிதல்ல அண்ணா..... மயங்கிவிட்டேன் உங்கள் கற்பனைனமற்றும் மொழியாளுமைத் திறத்தில்...

சிவா.ஜி
07-02-2008, 03:29 AM
ஒரு கணம் இது மெய்யோ என உறைந்து சிலிர்க்கவைத்ததே
உங்கள் எழுத்தின் மகத்தான வெற்றிக்கு அடையாளம்..
பாராட்டுகள் சிவா!

உங்களின் இந்த மனம் நிறைந்த பாராட்டு..என்னை மென்மேலும் சிறக்கவைக்கும்.தன் குழந்தையை அயலார் பாராட்டும்போது பெற்றவருக்கு கிடைக்கும் பெருமிதம் தங்களின் பாராட்டில் உணர்கிறேன்.

மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
07-02-2008, 03:32 AM
அத்தகைய மொழி ஆளுமையை நான் உங்கள் பதிவில் பார்க்கிறேன் அண்ணா.

இது இப்படி இருந்தால்... அல்லது ஏனப்படி இருக்கிறது என்ற கற்பனையை இத்தனை அழகிய கவிதை நடையில் கதையாகத் தருவது அத்தனை எளிதல்ல அண்ணா..... மயங்கிவிட்டேன் உங்கள் கற்பனைனமற்றும் மொழியாளுமைத் திறத்தில்...

ஒரு காவியத்திலிருக்கும் பாத்திரங்களை நமது கதையில் நாயகர்களாக நடமாட விடும்போது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கருதியதால் கொஞ்சம் யோசித்துதான் எழுதினேன்.
என் எழுத்து உங்களைக் கவர்ந்திருந்தால்..அது தமிழுக்கு கிடைத்த பெருமை.மிக்க நன்றி செல்வா.

யவனிகா
07-02-2008, 09:13 AM
முதலில் உங்களைப் பாராட்டிவிடுகிறேன் அண்ணா...

ஏனோ ஞானியை நினைவூட்டியது...கவிதை உரைநடை தாங்கிப் பிடித்து வரும் கதை...எல்லாவற்றையும் அழகுத் தமிழில் அடக்கி விட்டீர்கள்.

நீதிக் கதைகள் சொல்ல நினைக்கும் போது கதா நாயகர்களை விட...குற்றம் இழைப்பவர்கள் தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்கள் இல்லையேல்..இப்படி எல்லாம் இருக்காதே...என்று அறிவுரை எப்படி சொல்ல முடியும்?

இதற்காகவோ என்னவோ...ராவணனும்,துச்சாதனும்...பல நற்குணங்கள் இருந்தாலும், வில்லன் ரோல் உள்புகுந்திருக்கிறார்கள். துச்சாதனனை நீங்கள் தேர்ந்தெடுத்தது பாராட்டப் படக்கூடிய விசயம்.வெறும் அம்பு, தான் நினைக்கும் இலக்கை தன்னாலேயே அடைய இயலாது.ஆனால் அடையாது போனதன் விளைவாக, கலங்கும் ஊமை அழுகை ...துச்சாதனன் நிலை.

நடை நன்றாக இருக்கிறது அண்ணா...அடுத்த மின்னிதழுக்கான நல்லதொரு பதிப்பு.

சிவா.ஜி
07-02-2008, 09:45 AM
ரொம்ப நன்றிம்மா.என் எண்ணத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியதைப்போல ஒரு கருத்து துச்சாதனனை அம்பென்று சொன்னது.அதனாலேயே அவனை இப்படியெல்லாம் நினைக்க வைத்து பார்த்தேன்.சரித்திர சம்பவமென்பதால் நல்ல தமிழில் இருக்க வேண்டுமென நினைத்து எழுதினேன்.என் எழுத்து உங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனதை கண்டு ஆனந்தப்படுகிறேன்.

நுரையீரல்
10-02-2008, 04:45 AM
தாயா? தனையனா?

நல்லவனா? கெட்டவனா?

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வாழ்க்கைக்கு உதவாது.

கஷ்டப்பட்டு வர்ணம் தீட்டியிருக்கும் உங்கள் ஓவியத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது உங்கள் மனதிற்கும் சங்கடம் தரும் தான். ஆனாலும் சேறையும் இறைத்துவிட்டு, சிவாண்ணாவின் ஓவியம் மீது சேற்றை இறைப்பது என் மனதிற்கும் சங்கடம் என்று சொல்வது தான் ஆல் இன் தி கேம் or டபுள் கேம் (உதாரணம் சூப்பரா இல்ல, அதுக்குணு போன் பண்ணி திட்டக்கூடாது ஆமா..).

என்ன செய்வது, நான் படிச்சவரைக்கும், எனக்கு புரிஞ்சவரைக்கும் துச்சாதனன் டபுள் கேம் ஆடுறாரோனு தோணுது...

சிவா.ஜி
10-02-2008, 05:50 AM
அய்யா சாமி...துச்சாதனன் டபுள்கேம் ஆடலைங்க...அவனை வெச்சு நான் தான் விளையாடியிருக்கேன்.அவன் கெட்டவன் தான்....அது அவனுடைய கேரக்டரா மகாபாரதம் படைத்த வியாசர் உருவாக்கினது.
இது என் மனசுல தோன்றின கற்பனை....
கற்பனைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஏனப்பா முடிச்சு போடுகிறீர்கள்?
ஆனா நீங்க சொன்னது நிஜம்.வாழ்க்கையில ரெண்டு வேஷம் போடக்கூடாது.
அப்புறம் இன்னொன்னு....ஒரு படைப்புக்குத் தேவை விமர்சனங்களும்,பாராட்டுக்களும்தான். வெறும் பூவை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது சில கற்களும் விழத்தான் செய்யும்.

Its all in the game... (சிங்கிள் கேம்தான்)

ரொம்ப நன்றி.கதையை படித்ததற்கும்,அதை விமர்சித்ததற்கும்.

ஆதி
13-02-2008, 12:53 PM
அபாரமான சிந்தனை சிவா அண்ணா..

உண்மையில் அசந்துப்போனேன்.. என் கல்லூரி காலங்களில் இப்படிதான் எழுதி கொண்டிருப்பேன் எதையாவது புதுமையாய் + இதேப் போன்ற வார்த்தை ஓட்டங்களுடன்..

பழயகாலங்களுக்கு சென்று திரும்பினேன் சிவா அண்ணா..

அண்ணியை அன்னாய் எண்ணிய அவனின் எண்ண ஓட்டங்களாய் எதிரொலிப்பது போன்ற உங்களின் கற்பனை ஓட்டங்களில் கரைபுரண்டது என் மனதும்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா அண்ணா..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
13-02-2008, 01:01 PM
அண்ணியை அன்னாய் எண்ணிய அவனின் எண்ண ஓட்டங்களாய் எதிரொலிப்பது போன்ற உங்களின் கற்பனை ஓட்டங்களில் கரைபுரண்டது என் மனதும்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா அண்ணா..

அன்புடன் ஆதி
மிக்க நன்றி ஆதி.நல்லதொரு வார்த்தை வித்தகரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு என்பது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

அமரன்
14-02-2008, 08:40 AM
பாரதம் பற்றி பெரிதாக தெரியாதெனக்கு. பிஞ்சு வயதில் நெஞ்சார்த்தி தாத்தா சொன்னமட்டில் முடிந்தது எனது மகாபாராரத பந்தம். அப்பப்போ அம்புலிமாமா கைகளில் தவழ்ந்தாலும் என்னுடன் ஒட்டாத இதிகாசகம். அண்மைக்கால என்மனங்கவர் பாவேந்தர் பா ரதம் ஏறி இருக்கிறது இதிகாசங்களுக்கு எதிராக. போர்க்குதிரை லாவகத்துடன் நானும் ஆகிவிட்டேனோ என எண்ணும் வகை அமைகிறது என்சிந்தனை.

தமயன் மனையாள் தம்பிகளும் இல்லாள். தமயன் மனைவி துகிலுரிப்பு. இவை எல்லாம் நாரசமாய் தோன்றுகின்றன. அண்ணனை, மூத்தோரை மதிக்கும் மாண்பு சொன்ன வியாசர் அண்ணியை அன்னையாக வணங்கும் மார்க்கம் சொல்லாததேனோ? தகாத உறவுக்கு தனயர்களை இழுத்து செல்கின்றாரோ அவருக்கும் பெண்கள் எறும்பும், ஈக்களும் மொய்க்கும் தேனோ? அவ்வப்போது எழும் கிளர்ச்சி புரட்சியாய் கண்முன் விரிவடைந்து பொலிவடைந்து சிரிப்பதைக் காண்பதில் கொள்ளை இன்பம்.

இது நல்லது என்று சொல்வதைக் காட்டிலும், இது கெட்டது ,இதனால் கெட்டது விளம்பிக் குட்டுவது சாலப் பொருந்துமானால், தற்கால திரையில் வன்முறை சொல்லி வன்முறை தப்பென்று உரைக்கும்போது கரகோசங்கள் எழாது கோசங்கள் கிளம்புவதேன். சிறுபான்மையினர் சொல்லும், அல்லதை விடுத்து நல்லதை எடுக்கும் அன்னப்பறவையில் எதிர்பதமான பெரும்பான்மை வாசிகளில் ஒருவனல்ல நான். சமகாலத்தின் தாயாகா கடந்த காலத்தை வரித்துக்கொண்டவன்.

சிந்தனையை சீவிச் சிங்காரிப்போர் பலருண்டு. சிந்தனையை சீவிச் சீவிச் கூராக்குவோர் வெகுசிலரே. வெகுசிலரில் சிவாவும் ஒருவர். துச்சாதனன் கண்ணனை மனமுருகி அழைத்ததாக எடுகோளி இருந்தால் இன்னும் வலுச்சேர்ந்திருக்குமோ?

சிவா.ஜி
14-02-2008, 08:50 AM
அமரனின் கவித்துவமான பின்னூட்டம்.நல்ல கருத்தை நயம்பட சொல்லியிருக்கிறீர்கள்.வன்முறை வேண்டாமென்று சொல்வதற்கு வன்முறையின்..விபரீதத்தைக் காட்டித்தானே ஆக வேண்டியிருக்கிறது...ஆனால் அதையும் எதிர்க்கிறார்கள்..யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
நானும் நீங்கள் சொன்னதை யோசித்தேன்...துச்சாதனனே கண்னனை அழைப்பதைப்போல அமைப்போமா என்று....ஆனால்....நிகழ்ந்ததை மாற்ற விரும்பாமல்...நினைப்பை மட்டுமே மாற்றினேன்.
அதனால்தான் அவன் கண்ணனுக்கு நன்றி கூறுவதைப் போல அமைத்தேன்.
மிக்க நன்றி அமரன்.

அக்னி
15-02-2008, 02:20 AM
சபையின் மையப்பகுதிக்கு எம்மையெல்லாம் அழைத்துச் சென்று, நிறுத்திவைத்துவிட்டதான உணர்வு.
அக்கொடுஞ்செயலை நேரடியாக பார்க்க அழைத்துச் சென்ற வலிமை எழுத்துக்கள்...
சிறந்த எழுத்தாற்றலுக்காக மிகுந்த பாராட்டுக்கள் சிவா.ஜி...

என்னைப் பொறுத்தவரையில்,
மனதில் துச்சாதனன் துயருற்று, அண்ணன் ஆணைக்கமைய துகிலுரிய முற்படும் முரண் ஏற்றுக்கொள்ள முடியாதது.
முறை தவறிய அண்ணனின், முகம்பார்த்து பண்பாடு சொல்லியிருந்தால்,
எதிர்த்து, தர்க்கித்து தவறை எடுத்தியம்பியிருந்தால், வரலாறு துச்சாதனனை மெச்சியிருக்கும்.
துச்சாதனனுக்கு சிவா.ஜி யேனும் ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கலாம்.

எது எவ்வாறாயினும், சிவா.ஜி யின்...
வித்தியாசமான புதுமையான சிந்தனைக்காக மிகுந்த பாராட்டுக்கள்...

சிவா.ஜி
15-02-2008, 04:25 AM
மிக்க நன்றி அக்னி.அண்ணனுக்கு அறிவுரை வழங்கும் தம்பியாக காட்டவில்லை...கட்டளைக்கு கீழ் படியும் விசுவாசமிக்க,பாசத்துக்காக அடாத செயல் புரிய ஒத்துக்கொள்ளும் ஒரு வீரனையும்,தம்பியையும்தான் என் எழுத்தில் காட்டியிருக்கிறேன்.
ஏன் என்பதற்கான காரணத்தை அமரனின் பின்னூட்டத்திற்கான பதிலில் சொன்னதைப் போல...நடந்த செயல்களை மாற்ற விரும்பாமல்...எண்ணங்களை மட்டுமே மாற்றிப் பார்த்தேன்.
மீண்டும் நன்றி அக்னி.

ஜெயாஸ்தா
15-02-2008, 12:52 PM
நல்லவர்கள் கெட்டவர்கள் கலந்ததுதான் உலகம். இதை புரிய வைப்பதற்கு இதிகாசங்கள். என்னதான் கெட்டவனாக இருந்தாலும் அவனுள் சில நல்ல எண்ணங்கள் அடியில் புதைந்து கிடக்கும். ஆனால் அவனின் துர்குணங்கள் அந்த நற்குணங்களை அமிழ்த்தி வெளிக்காட்டாமல் செய்துவிடும். துரியோதனன் துச்சாதனன்கள் இல்லையேல் மாகாபாரதமே ஒன்றிமில்லாதாகியிருக்கும். தீமை செய்தால் அழிவு வரும் என்பதை சுட்டிக்காட்ட வந்த நல்லவர்களாய் சிவா அண்ணாவின் பார்வையில் அவர்கள். சிவா அண்ணாவின் எழுத்து நன்றாக மெருகேறியிருக்கிறது.

அக்னி
15-02-2008, 10:16 PM
மிக்க நன்றி அக்னி.அண்ணனுக்கு அறிவுரை வழங்கும் தம்பியாக காட்டவில்லை...கட்டளைக்கு கீழ் படியும் விசுவாசமிக்க,பாசத்துக்காக அடாத செயல் புரிய ஒத்துக்கொள்ளும் ஒரு வீரனையும்,தம்பியையும்தான் என் எழுத்தில் காட்டியிருக்கிறேன்.
ஏன் என்பதற்கான காரணத்தை அமரனின் பின்னூட்டத்திற்கான பதிலில் சொன்னதைப் போல...நடந்த செயல்களை மாற்ற விரும்பாமல்...எண்ணங்களை மட்டுமே மாற்றிப் பார்த்தேன்.
மீண்டும் நன்றி அக்னி.
பார்த்திருந்தேன் சிவா.ஜி...
ஆனால், நீங்களாவது துச்சாதனனுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் எனது பின்னூட்டம்.
மற்றும்படி, உங்கள் எழுத்துக்கள் இயைந்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
இதுபோல் மேலும் மேலும் தருவீர்கள் என்று எதிர்பார்க்க வைக்கின்றீர்கள்...

சிவா.ஜி
16-02-2008, 03:28 AM
நல்லவர்கள் கெட்டவர்கள் கலந்ததுதான் உலகம். இதை புரிய வைப்பதற்கு இதிகாசங்கள். என்னதான் கெட்டவனாக இருந்தாலும் அவனுள் சில நல்ல எண்ணங்கள் அடியில் புதைந்து கிடக்கும். ஆனால் அவனின் துர்குணங்கள் அந்த நற்குணங்களை அமிழ்த்தி வெளிக்காட்டாமல் செய்துவிடும்.
மிகச் சரியான கருத்து ஜெயஸ்தா.தீய குணம் தலை தூக்கும்போது...எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அத்தனையும் மறைக்கப்பட்டு அந்த தீயதே பிரதானமாகத் தெரியும்.ஆனால் அத்தனை கதை,இதிகாசங்களிலும்...தீயதால் அந்த தீயவரே அழிந்து விடுவதைக் காட்டியிருப்பதுதான் அவற்றின் சிறப்பம்சம்.
மிக்க நன்றி ஜெயஸ்தா.

samuthraselvam
18-04-2009, 06:31 AM
பாதி படித்துக்கொண்டு இருக்கும் போதே, 'நம்ம அப்பத்தா, சொல்லும் போது துச்சாதனன் கேட்டவன்' என்று தானே சொன்னாங்க...

இதென்ன புதுக் கதையா இருக்கே? ஒரு வேளை அப்பத்தா சொன்னது தவறோ....? இது தான் உண்மையான கதையோ...? என்று சிந்திக்கவைத்து விட்டீர்கள்...

அண்ணியை அன்னையாகப் பார்த்திருந்தால் பாரதப் போரே வந்திருக்காதே....! நமக்கும் ஒரு இதிகாசம் கிடைத்திருக்காதே...!

வித்யாசமான சிந்தனை.... பாராட்டுகள் அண்ணா...!

தாமரை
18-04-2009, 07:10 AM
இதில் இன்னொரு கோணமும் உண்டு சிவா.ஜி.

துரியோதனன் - கர்ணன் நட்பு மிகப் பிரசித்தமானது, எடுக்கவா கோர்க்கவா என்று தன் மனைவின் மேகலை அறுந்தபோது கேட்டவன் துரியோதனன்..

அப்படி நட்புடன் பெண்மைக்கு உரிய சுதந்திரமும் மரியாதையும் அளிக்கும் துரியோதனன் ஒரு பெண்ணை அடிமையாக்க அவள் கேலிச்சிரிப்பு சிரித்தாள் என்பது மட்டுமே போதுமான காரணமா?

யோசித்துப் பாருங்கள்... !!!!!! இதில் எது பொய்? எது நிஜம்? கண்ணற்றவன் ஆளக்கூடாது என்றார்கள். பாண்டூ சாபமுற்று பின் கானகம் சென்ற பின் அதே கண்ணற்றவனை அரசனாக்கினார்கள். அத்தினாபுர அரியணை சில சக்திமிக்கவர்களால் ஆட்டுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆட்டத்தை நிறுத்தி அரசனுக்கு மேல் யாருமில்லை என அரச நீதி நிலை நாட்டியவன் துரியோதனன்.

தங்களுடைய கைப்பாவைதான் அத்தினாபுர அரசன் என்று ஆடிய சிலரின் கர்வமடக்க சகுனியின் உதவியோடு சதிராடி இருக்கிறான்..

பாஞ்சாலி துகிலுரிப்பு ஒரு அசம்பாவிதம் எனக் கொண்டால்.. கதையில் துரியோதனன் கதாநாயகன் ஆகக் கூட வாய்ப்பு இருக்கிறது.

சிவா.ஜி
18-04-2009, 09:46 AM
அப்பத்தா சொன்னதுதான் நிஜம் லீலும்மா. இது என்னுடைய கற்பனையில எழுதியது.

ஒரே ஒரு வினாடியாவது அவன் பாஞ்சாலியை அன்னையாய் நினைத்திருந்தால்...அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதைத்தான் சிந்தித்தேன்.

நன்றிம்மா.

சிவா.ஜி
18-04-2009, 09:52 AM
உங்கள் கருத்துக்கள் வித்தியாசமானவை மட்டுமல்ல...உண்மையானவையும் கூடதான் தாமரை. அத்தினாபுர அரன்மனையில் மறைமுகமான சில அதிகார சக்திகள் இருந்திருக்கக்கூடும்.

நீங்கள் சொல்லும் விதத்தில் பார்க்கும்போது....துரியோதனிடம் எவ்வளவோ உயர்ந்தகுணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அவனுக்குள் சில தீர்மானங்களை நிறைவேற்றி...அதனை அவன் வழியில் நிலைநாட்டியிருக்கிறான். இப்படியொரு கேரக்டரை உருவாக்கிய வியாசர்...இதன் மூலம் நிறைய அரசியலை வாசிப்பவர் அறிந்துகொள்ள வைத்திருக்கிறார்.

பொதுவாகவே பாரதத்தில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. அதற்கான சில காரணங்களை சொல்லும்போது அவை சில சமயம் சப்பைக்கட்டுக்களாகக்கூட இருக்கிறது.

உண்மையிலேயே...பல கோணங்களில் பார்க்கவைக்கக்கூடியது பாரதக் கதை என்பதில் சந்தேகமேயில்லை.

தாமரை
18-04-2009, 09:56 AM
மஹாபாரதத்தை பொருத்தவரை ஒவ்வொரு வீரனையும் கதாநாயகனாக்கிப் பார்த்தால் பல் கோணங்கள் கிடைக்கும்.

ஆதவா
23-04-2009, 03:57 PM
உங்களது மாற்று கோணம் லயிக்க வைக்கிறது. தாமரை அண்ணா சொல்வதைப் போல ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆராய்ந்தால் இப்படியொரு கதை கிடைக்கலாம்.

மாறுபட்டு சிந்திப்பதே ஒருவகையான திறமைதான்... அதைச் சிறுகதையில் புகுத்தியிருப்பதும் அருமை!!!

வாழ்த்துகள் சிவா.ஜி அண்ணா

சிவா.ஜி
24-04-2009, 10:11 AM
நன்றி ஆதவா. மாத்தியோசி என்பதற்கு மிக நல்ல உதாரணம் நீங்கள்தான். உங்கள் படைப்புகளே அதற்கு சாட்சி.

தாமரை சொன்னது என்னை இன்னும் மற்ற பாத்திரங்களையும் கூர்ந்து நோக்க வைத்திருக்கிறது.