PDA

View Full Version : யாரோ.. என்ன பேரோ... ( அ.மை.-29)



இளசு
05-02-2008, 08:28 PM
அறிவியல் மைல்கற்கள்- 29


யாரோ... என்ன பேரோ...

-------------------------------------------------
அ.மை.(28) - வாணிபக் காற்று இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14039

------------------------------------------------------

அ.மை (29): யாரோ என்ன பேரோ..

கரோலஸ் லின்னேயஸ் ( Carolus Linnaeus) 1707 - 1778
**********************************************************************************************

உயிரியலாளர்கள் ( Biologists) எல்லா உயிரினங்களையும்
''லின்னேயன்'' முறைப்படி இரு பாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

Equus caballus - என்றால் நாம் பழக்கி வளர்க்கும் நாட்டுக்குதிரை இனம்.
எல்லாருக்கும் தெரிந்தது Hibiscus rosasinensis (செம்பருத்தி).

லின்னேயன் பெயரின் முதல் பாதி எப்போதும் கேபிட்டல் எழுத்தில் தொடங்கும்.
இது அந்த உயிரினத்தின் Genus எனப்படும் தொகுப்பைக் குறிக்கும்.

இரண்டாம் பாகம் எப்போதும் முழுதும் சிறிய எழுத்துக்களால் எழுதப்படும்.
இது அந்தக் குறிப்பிட்ட இனத்தை ( species) மட்டுமே குறிக்கும்.

ஒரு தொகுப்பில் (Genus) பல இனங்கள் ( species) இருக்கலாம்.

உதாரணமாக Equus burchelli என்றால் சமவெளிகளில் வாழும் குறிப்பிட்ட
வரிக்குதிரையின் பெயர்.

Equus - குதிரை இனங்களின் தொகுப்புப் பெயர். முதல் பாதி.
caballus, burchelli - குறிப்பிட்ட ஓர் இன உயிர்களுக்கான தனிப்பெயர். பின் பாதி.

இரட்டையாய் முழுதாக்கி சொல்லும்போது, சட்டென எல்லாருக்கும்
அந்தக் குறிப்பிட்ட இனம் மட்டுமே என உரைப்பது - லின்னேயன் பெயர்முறையின் வெற்றி!

கரோலஸ் லின்னேயஸ் - ஸ்வீடன் நாட்டு மருத்துவர்; இயற்கை ஆர்வலர்.
1735-ல் அவர் அர்ப்பணித்த இம்முறை அச்சாக இரண்டரை நூற்றாண்டு கடந்தும்
அப்படியே இன்றும் பின்பற்றப்படுகிறது.

லின்னேயஸ் புதிதாய் ஒரு பெயர் முறையைக் கொண்டு வர என்ன அவசியம்?

அதற்கு முன் அரிஸ்ட்டாட்டில் முறை பயனில் இருந்தது. அம்முறையிலும் ஒரு பொது (தொகுப்புப்)
பெயரும் , ஒரு தனி (specific) பெயரும் வைத்து உயிரினங்கள் அழைக்கப்பட்டன..

ஆனால் பெயர் சொன்னாலே போதும், அதன் தோற்றம் தன்னாலே விளங்கும் என்னும்
கொள்கையுடன், தனிப்பெயர்கள் உயிரிகளின் அங்க அடையாளச் சிறப்புகளைக் குறித்து
இடப்பட்டன.

ஒரு சிறிய தேசத்தில் சில உயிரினங்கள் மட்டும் பழக்கத்தில் இருக்கும்வரை
இந்த அரிஸ்ட்டாட்டில் முறை தாக்குப்பிடிக்கவே செய்தது.

ஆனால் பரவலான பயணங்கள், சேகரிப்புகளால் உலக உயிரினங்களின் எண்ணிக்கை
அதிவேகமாய் உயர, உயர அம்முறை பலத்த அடிவாங்கி நைந்துபோனது.

எடுத்துக்காட்டாய்,Solanum caule inerme herbaceo, foliis pinnatis incisis,nacemis simplicibus
என்றால் நம்ம தக்காளியைக் குறிக்கும் பெயர்.

காரணம் அதன் வழவழப்பான தண்டு, வெட்டுப்பட்ட காது போன்ற இலை, அதன் ஒளிரும் நிறம்
எல்லாம் குறிப்பிடப்பட்டு இப்படி அதன் பெயர் வால் போல் நீண்டுபோனது.

லின்னேயன் முறையில் தக்காளியின் பெயர் : Solanum lycopersicum.

லின்னேயஸ் இந்த அங்கலட்சண விவரிப்பு சமாசாரத்தை வீசி எறிந்தார்.
இரண்டாம் பாகம் கண்டுசொன்னவர் பெயரோ, எதுவோ - எளிமையாய் ஒரு சொல்லாக்கினார்.

இப்படி நாம் எல்லோரும் உயிரியல் வகுப்பில் மயங்கி வீழாமல் காத்த லின்னேயஸூக்கு
நன்றி சொல்ல, இம்மைல்கல் நாயகர் பட்டத்தை அவருக்கு அளித்து நன்றி கூர்வோம்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களை முறையாய்த் தொகுத்து
அவர் படைத்த நூல்கள் பல தலைமுறைக்கு உயிர் இனம் தேட வழிகாட்டி!

தொகுப்பு உயிர்களை மேலும் தொகுத்து , பெரிய தொகுதிகளாய் பிரித்த பெருமையும்
அவருக்கே...! பாலூட்டும் அகங்கள் இருக்கும் உயிர்களை Mammalia என்று
முதலில் அழைத்தவரும் அவரே.!

அந்த பாலூட்டித் தொகுதியின் ஓர் இனமே நம் மனித இனம்..
நம் இனம் மொத்தத்துக்கும் லின்னேயன் இட்டது ஒரே பெயர்: Homo sapiens

ஆனால் நிறத்தாலும் மதத்தாலும் நம் தேசத் தனிப்பெருமையாம் சாதிச்சனியனாலும்
நமக்கு நாமே எத்தனை எத்தனை கூடுதல் பெயர்கள் வைத்து
லின்னேயஸ் முன்னோக்கி சென்றதை எத்தனை பின்னடைய வைத்துவிட்டோம்!!

செல்வா
05-02-2008, 09:35 PM
பள்ளியில் பயிலாத பயின்றும் மனதில் பதியாத எத்தனையோ விசயங்களை எளிய தமிழில் தரும் இளசு அண்ணாவின் அறிவியல் அறிவு அதோடு கூடிய சமூகப்பார்வை அறிவியல் மைல்கற்களை செதுக்கிய சிலைகளாக்குகிறது.
பகிர்வுக்கு நன்றி அண்ணா....

aren
05-02-2008, 09:38 PM
மறுபடியும் ஒரு அருமையான பதிவு இளசு அவர்களே.

200 - 300 வருடங்களுக்கு முன்பாக இத்தனை விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து இவ்வளவு விரிவான ஒரு பட்டியலை அவர் போட்டிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமில்லை.

இத்தனை முன்னேற்றம் இருந்தும் நம்மால் ஒரு பட்டியலை சரியாக தயாரிக்கமுடிவதில்லை.

நிச்சயம் இவர் அறிவியல் மைல்கல்லின் நாயகர்தான்.

தொடருங்கள் இளசு அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
06-02-2008, 01:15 AM
யப்ப்பா!! இத்தனை மேட்டர் இருக்கா.. பேசாம தக்காளையை டொமேட்டோன்னே கூப்பிடலாம்.. இந்த பெயரே வாயில நுழையமாட்டேங்குது... :D

இந்த பெயர்களைப் பார்க்கும்போது இதற்குத் தனி அகராதியே இருக்கும் என்று நினைக்கிறேன்.. கற்றுக் கொள்பவர்களுக்கு புது மொழியாகத் தோன்றூம்.............

இதை இங்கே எளிமையாக சொன்னமைக்கு நன்றி இளசு அண்ணா.

பாரதி
07-02-2008, 03:47 PM
இந்தப்பதிவைப் படித்ததும் இரட்டைப்பெயர்களாக இருந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெயரை வழக்கிலிருந்து ஒழிப்பதற்கான முயற்சி நடந்ததும் நினைவுக்கு வருகிறது அண்ணா.

இனங்காண இரட்டைப்பெயர் வைத்த முறையை கண்டறிந்த கரோலஸ் லின்னேயஸ் பாராட்டுக்குரியவரே. இருப்பினும் அறிவியற்பூர்வமான பெயர்கள் என்னைப்போன்றவர்களை சற்று மிரளத்தான் வைத்திருக்கிறது.

பெயருக்குள் அடங்கியிருக்கும் மர்மத்தை எளிய முறையில் விளக்கிய இனிய அண்ணாவிற்கு தம்பியின் அன்பு.

பூமகள்
07-02-2008, 04:57 PM
பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் எடுத்து உருட்டி உருட்டி படித்த தாவரவியல் விலங்கியல் பெயர்களின் தந்தையார்... இவர் தானா??!!

கண்டு கொண்டேன்.. தெளிந்தேன் செவ்வனே பெரியண்ணா..!! :icon_b:

இவ்வளவு தாமதமாக வந்து பார்த்தமைக்கு எனக்கு நானே குட்டிக் கொள்கிறேன்..!

எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கும் தாவர குடும்பங்களின் பெயர்களை இங்கு உங்கள் அனுமதியோடு நினைவு கூறுகிறேன்.

பேபேசி - இது சங்குப் பூ வகை பூக்களைச் சேர்ந்த தாவர குடும்பத்தின் பெயர்.
ஆஸ்ட்ரேசி - தலைவெட்டுப்பூ என்ற வகை பூக்களைச் சேர்ந்த தாவர குடும்பத்தின் பெயர்.
மியூட்டேசி - வாழை போன்ற தாவர குடும்பத்தின் பெயர்.
சட்டென்று நினைவுக்கு வரவில்லை.. இன்னும் இன்னும் நிறைய இருக்கு..!

உதாரணமாக,

வாழைப்பழத்தை வாங்கி கொஞ்ச நாள் வீட்டில் வைத்திருந்தா ஒரு கருப்பு நிற குட்டியா பூச்சி ஒன்று அதைச் சுற்றி பறந்துட்டே இருக்குமே..! அதுக்கு பேரு கூட "பழப் பூச்சி".

இதை நம்ம அறிவியல் மேதை லின்னேயன் முறையில் சொல்லனும் எனில், "ட்ரோசோஃபில்லா மெலனோசைலான்" அப்படின்னு சொல்லனும்..!

இந்த பேரு மட்டும் எப்படி நினைவிருக்குன்னு கேக்குறீங்களா?? படிக்கும் காலத்துல செம்பருத்தியை பார்க்கும் போதெல்லாம் "ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்ஸஸ்" என்று சொல்லிச் சொல்லி நினைவில் வைத்துக் கொள்வோம்..!!

அதே போல், இந்த பழப்பூச்சியை பார்க்கும் போதெல்லாம் மனத்தில் சொல்லி சொல்லி அது அப்படியே பதிவாகிவிட்டது. இப்போது, இங்கே சொல்ல பயன்பட்டிருக்கிறது.

என் நினைவுச் சுவடுகளை தட்டி எழும்பச் செய்த ஞானபிரபஞ்சமான என் அன்பு பெரியண்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..! :)

இளசு
19-02-2008, 08:09 PM
பின்னூட்டம் இட்டு ஊக்குவித்த அருமை உறவுகள் - செல்வா, ஆதவா, அன்பின் ஆரென், பாரதி, பாமகள் - அனைவருக்கும் நன்றிகள்!

அடுத்த பாகம் விரைவில்..

தலைப்பு - தழல்!

kavitha
23-02-2008, 08:55 AM
நான் சொல்ல நினைத்ததெல்லாம் பூமகள் சொல்லிட்டா... பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது உயிரியல் பாடம் என்றால் எனக்கு உயிர். ஒரு பக்கம் க், ச், விடாமல் படித்து.... அதில் முதல் மதிப்பெண்ணும் எடுத்தேன். சாலையில் நடந்தால் அரச மரம், நெட்டிலிங்க மரம் எதையும் விடாமல் பெயர் சேகரித்து... பள்ளிக்கு போறப்பவும் வரும்போதும் உயிரியில் பெயரில் அதை அழைப்பது என் தோழிகளுக்கு எல்லாம் கிண்டலாகத்தெரியும்.
ஒரு சில கண்காட்சிகளில் அல்லது தாவரவியல் தோட்டங்களில் இப்போதும் லின்னேயஸின் பெயர்களைப்பார்க்கலாம். சென்னையில் கிண்டி சிறுவர் பூங்காவிலும், எழும்பூர் மியூசியம் சுற்றியுள்ள மரங்களிலும் இவ்வகைப்பெயர்களைப்படிக்கலாம்.

சென்றவாரம் தொலைக்காட்சியில் தமிழகச்செய்திகள் பற்றிய ஜெயா செய்தித் தொகுப்பில் சித்தா மருத்துவக்கல்லூரியில் நடந்த கண்காட்சியில் பல் வகையான மூலிகைத் தாவரங்களை இவ்வாறாக வரிசையாக வைத்திருந்தார்கள்.

பிர்லா கோளரங்கத்தில் கூட 2 வாரங்களாக ஒரு அறிவியல் கண்காட்சி (மாணவர்களுக்கு மட்டும்) இலவசமாக நடந்தது. அதன் ஒரு பகுதியாக சித்தா மருந்துச் செடிகளும் அதன் பயன்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உயர்க்கல்வியிலிருந்து, ஆராய்ச்சிக்கு படிக்கும் மாணவர்கள் வரை அங்கே தங்களது செயல்முறை விளக்கங்களையும், படங்களையும் வைத்திருந்தனர்.

நாங்களும் அதைப்பார்க்க சென்றிருந்தோம் அண்ணா... அப்போது உங்களை நினைத்துக்கொண்டேன்.
கடனே என அதை வர்ணிக்கும்(?)/ஒப்பிக்கும் மாணவர்களைப் பார்த்த போது எனக்குத்தோன்றியது உங்களது பதிவுகளை அங்கே வரிசையாக ஒட்டி விட்டால் போதும் என்று.


தாவரவியல் ஆர்வலர்கள் சென்னை வரும்போது பார்க்கவேண்டிய இடங்கள் இவை.

இளசு
23-02-2008, 02:23 PM
நல்ல தகவல்கள் கவீ... நன்றி!

சொல்வதைச் சுவையாகச் சொல்ல வல்லவர் பலருண்டு மன்றத்தில்..
கற்றது இங்கேதானே!

தீட்டிய மரத்தில் கூர் பார்க்க வந்தவன் நான்!!

ஆமாம் - ஜாவா பாடங்கள் என்னாச்சு?

kavitha
03-03-2008, 10:17 AM
ஆமாம் - ஜாவா பாடங்கள் என்னாச்சு?
கற்றுக்கொண்டிருக்கிறேன் அண்ணா... புலிவாலைப்பிடித்த கதையாக இருக்கிறது அண்ணா... கடுகுக்குள்ளே கடலைத் தரித்த திருக்குறள் போலே ஜாவா எனும் இரண்டெழுத்தின் உள்ளே ஒரு கடல் இருக்கிறது.
மன்றத்தில் பாக்கியநாதன் அவர்களின் அடிப்படை ஜாவா கண்டபிறகு மீண்டும் அதையே நானும் எழுதுவது வீண் என்று தோன்றியது.
மலருக்கு சொன்ன பதிலையே... உங்களுக்கும்...

"அடுத்த கட்ட பணிக்கு ஆயத்தம் செய்துக்கொண்டிருக்கிறேன்" அண்ணா.

Narathar
30-09-2008, 12:30 AM
அந்த பாலூட்டித் தொகுதியின் ஓர் இனமே நம் மனித இனம்..
நம் இனம் மொத்தத்துக்கும் லின்னேயன் இட்டது ஒரே பெயர்: Homo sapiens

ஆனால் நிறத்தாலும் மதத்தாலும் நம் தேசத் தனிப்பெருமையாம் சாதிச்சனியனாலும்
நமக்கு நாமே எத்தனை எத்தனை கூடுதல் பெயர்கள் வைத்து
லின்னேயஸ் முன்னோக்கி சென்றதை எத்தனை பின்னடைய வைத்துவிட்டோம்!!

என்ன ஒரு தத்துவம்????

இந்தப்பெயர்களை மனப்பாடமாக்குவதில் என் சகோதரன் ஒருவன் பட்ட கஷ்டத்தைப்பார்த்து விஞ்சான பாடம் மீது எனக்கொரு பீதியே ஏற்பட்டிருந்தது..........

அந்த சின்ன வயசு போபியா உங்கள் பதிவுகளால் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது

நன்றிகள் பல கோடி!!!!!

கண்மணி
30-09-2008, 04:37 AM
இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கணுமா? ஒரைசம் சட்டைவம் கூட ஹைபிஸ்கஸ் எஸ்குலந்தஸ் சேர்த்துக்குங்க. ஹி ஹி...