PDA

View Full Version : மலரினும் மெல்லிது காதல் - படலம் ஐந்துஆதவா
05-02-2008, 01:57 PM
முதற் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14011) இரண்டாம் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14113) மூன்றாம் படலம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14186) நான்காம் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14197)

உழைப்பாளர்கள் தினம். எனது உழைப்புக்குப் பலனான தினம், இருபது வருடங்களுக்கு முந்தி அவள் பிறந்த தினம், எனது உறவுகள் கண்டாவது சிறிது காதல் மறப்போம் என்று பறந்துவிட்டேன்; எனக்காக காத்திருந்த அவள் காத்திருப்பைக் கலைத்துவிட்டு.. மறுதினம் அவள் கல்லூரியில் இறுதிநாள், வீட்டுக் கூண்டுக்குள் புகவிருக்கும் நாள், என்னுடன் பேசியே ஆகவேண்டிய கட்டாய நாள், எனது தொலைத் தொடர்பைத் தீண்டினாள். ஊருக்கு வெளியே இருந்து பேசினேன்.

உள்ளத்தின் முத்தம் அன்றைக்கு நான் கண்டேன். எனது உதடுகள் நடுக்கத்தில் இருந்தன. மொழியோ மறந்து இருந்தேன். ஜாடையில் அவள் தன் ஆதரவை நீட்டினாள். பெண்கள் உள்ளத்தை எளிதில் புரியா ஜடமான எனக்கோ அது புரியாத புதிராகவே இருந்தது. ஒன்றரை மணித்துளிகளைச் சிந்தியும் என்னிடமிருந்து வாரா பதிலால் வெகுண்டாள். அந்த கோபக் கனல் முத்தமழையாக சாதனத்தை நனைத்தது. கம்பி வழியே ஊடுறுவி அவள் எச்சில் என் காதை நனைக்க, என் பதிலை முத்தமாய் பொழிந்தேன். அவளைவிடவும் ஒரு மடங்கு அதிகமாக, கையிலிருந்த செல்வம் கரைவதைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைவதை முதலாகக் கொண்டேன், ஊரில் உறவுகள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார்கள் என்பது வேறுவிசயம். உன்னதமான அவளின் காதல் மொழியை அன்று புரிந்துகொண்டேன், வேறு வழியில்லாமல் எங்கள் மொழியை காலக்கொடூரன் தடைசெய்தான். எனக்கு முதன்முதலாய் நிமிடங்களின் மேல் கோபம் வந்தது. அவள் சிந்திய வார்த்தைகளைப் பொறுக்கி எடுக்க யார் தடை செய்ய இயலும்? அதிலும் அன்றுமுதல் அவள் எனக்குச் சொந்தம். வேட்டைக்கு வந்த வேடனை வேட்டுவச்சி காதலிக்கும் தெய்வக் காதல் இது. சிந்திப்பு முழுவதிலும் அவள் இட்ட முத்தங்கள் ஆட்கொண்டிருந்தது. அவளின் ஒவ்வொரு ஒலியும், அதன் பிண்ணனியில் நாவிசைக்க, காற்றுப் பாடும் ராகமும் என் கண்ணைத் துருத்திக் கொண்டே இருந்தது. தேனை ஒழுகவிட்டு முழுவதுமாக நனைந்தேன். எனது மூச்சுக்காற்றின் ஈரத்தில் அவள் கலந்துவிட்டாள்.

நெடிய சிந்தனைகள் தோன்றி மறைந்தன. நடுத்தர மக்களுக்குக் காதல் பொருந்துமா? சிறிய ஓடையில் கப்பல் விடலாமா? காதல் என் சமூகக் கண்ணை மறைத்தது. வெளியே வர முடியாமல் என்னை முடமாக்கியது. காதல் செய்யவிருந்த பொழுது தெரியாத, வராத சிந்தனைகள் செய்தபிறகு வந்து ஆலோசித்தது. எனது மனம் இரண்டாகி பிளந்து ஒன்று ஆதரித்தும் ஒன்று எதிர்த்தும் வாதிட்டது. நீதிபதியில்லா நீதிமன்றத்தில் வாதங்கள் மட்டுமே பெருகும். தீர்ப்பில்லா காகிதங்களைப் பார்வையிட எந்த கைதியும் ஒத்துக் கொள்ளமாட்டான். சேற்றை எடுத்து பூசிக்கொண்டோமோ என்ற இழிவும் நானறியாமல் ஊறும் வியர்வைபோல வெளிவந்தது. அவள் கல்லூரியின் வருட இறுதிநாட்கள் என் வாழ்நாளில் வரண்டபாலையில் முளைத்த கள்ளிச் செடிகள். ஆங்காங்கே துக்கத்தோடு பிறக்கும் தத்துவத்தைப் போல மணலை முட்டி வளர்ந்தது. பாதைகள் பலவாகப் பிரிந்து தடங்களைப் பதிக்க மறுத்தது. உடல் வேகும் சூட்டில் காதல் குளிர் காய்வதை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் அவளின் பார்வை எல்லாவற்றையும் ஒரேயடியாக அழித்துத் துவம்சம் செய்தது.

என் இல்லத்தினருகே இருப்பது அவளுக்கு நிம்மதியாக இருந்தது; எனக்கு அது துன்பமாகவே இருந்தது. பொறுக்கமாட்டாமல் எனது பாசறைக்கே வந்துவிட்டாள், எனது மனத் தூக்கத்தைக் கலைத்து என்னை மவுனியாக்கினாள். பத்துநாட்கள் பொறுக்காமல் கடித்துத் தின்ற எனது நகங்களைப் பார்வையிட்டாள். அவளின் கொஞ்சுமொழி என்னைக் கெஞ்சியது. தவிப்புகளைப் பற்றிய பாடத்தை நடத்தினாள். இந்த முகத்திற்கும் ஒரு அரிதாரம் பூசவந்தவளை எங்ஙனம் மறுப்பது? பிரிவில் வளரும் பசலையை விட வேறு நோய் உண்டா? எனக்கு மட்டும் சற்றே மாற்றம். குழப்பத்தில் முளைத்த பசலை நோயாக இருப்பதைக் கண்டு வெதும்பினாள்.
குளியலுக்குச் செல்லும் முன்னரே என்னை குளிக்கவைத்தாள், குமிழ்களை உருவாக்கி அதை உடைக்காமல் பாதுகாவலிட ஆணையிட்டாள். எனது அறிவு கரைந்து வழிந்தது, காதலில் திளைத்து மறைந்தது.

அன்றொருநாள் எனது பாசறைக்கு அருகே அமைந்திருந்த கடையில் காற்றடைத்த பந்தொன்றை விலைக்கு வாங்கினேன். பந்துவிடுதூதாக இருப்பதற்குத் தோதாக காலைக் கதிரவன் வர்ணத்தில் வாங்கினேன். எனது கவிதைகளால் குதூகலித்த காகிதங்கள் சற்று காலம் இளைப்பாறட்டும் என்றெண்ணி பந்தில் வரைந்தேன் காவிய ஓவியங்கள். சில ஆங்கிலமும் சில ஜாடைமொழியுமாய். பந்துவிடுதூதை என்னுடன் பிறந்தவள் காலில் கட்டி பறக்கவிட்டேன். எனது இல்லத்தருகே அமைந்திருக்கும் அல்லி மாடத்திற்கு. அவள் பெற்றுக் கொள்வாள்; படிப்பாள்; பதிலெழுதுவாள், கோபத்தோடு பந்தைக் கடிப்பாள், அவள் எச்சில் உறைவதற்குள் நானும் பயணித்துவிடுவேன். ஆதவன் ஓயும் வேளையில் என் உதடுகள் தேநீர் உறிஞ்சும், அந்த வேளையில் அவள் எழுதிய கவிதைகளையும் உறிஞ்சியது, மெல்ல ஓரக்கண்ணால் ரசித்தபடி எனக்கெதிரே இருப்பாள். அச்சம் அவள் பார்வையிலிருந்து விலகியிருக்கும், நாணம் கொதிக்கும் தேநீரின் ஆவியைப் போல கொப்பளிக்கும். வருடத்தின் உச்சிவெயில் மாதம் முழுவதும் என் மேனி குளிர்ந்தே இருந்தது. எங்கள் பந்துவிடுதூதில் எழுத இடமில்லாமல் பந்தானது தன் மஞ்சள் மேனியை உரித்து நீலவர்ண ஆடை அணிந்துகொண்டது அல்லது அணிவித்தோம்.

அனுராகவன்
09-02-2008, 01:59 AM
நன்றி ஆதவா..!!
ம்ம் நல்ல ஆக்கம்தான்..!
ம்ம் என் வாழ்த்துக்கள்!!

இளசு
21-03-2008, 08:40 AM
ஓர் உயர்தர தளத்தில் சஞ்சரிக்கும் மனதில் மட்டுமே
இத்தகைய சொற்கட்டு, வாக்கிய அமைவு உருவாகும்.

ஆதவனின் சிருஷ்டி கணங்களில் ஜனித்த முத்துவரிகள் இவை!

போற்ற சொல்லில்லை! புளகாங்கிதமடைகிறேன் ஆதவா!

நீதிபதி தொடர்பான உன் வரிகள் இதுவரை படிக்காத புதுப்படிமங்கள்!
அசந்தேன்!

ஆதவா
20-06-2008, 01:35 PM
ஓர் உயர்தர தளத்தில் சஞ்சரிக்கும் மனதில் மட்டுமே
இத்தகைய சொற்கட்டு, வாக்கிய அமைவு உருவாகும்.

ஆதவனின் சிருஷ்டி கணங்களில் ஜனித்த முத்துவரிகள் இவை!

போற்ற சொல்லில்லை! புளகாங்கிதமடைகிறேன் ஆதவா!

நீதிபதி தொடர்பான உன் வரிகள் இதுவரை படிக்காத புதுப்படிமங்கள்!
அசந்தேன்!

சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேனோ என்று எனக்குத் தோன்றும். இந்த 'மலரினும் மெல்லிது காதல்' ஆரம்பித்து, இறுதிவரை சில மணித்துளிகளில் எழுதி முடித்தேன். அதன் கோர்வை எல்லா பகுதிகளிலும் தெரியும். அந்த அதீத எழுத்துக்கள் தான் மன்ற நண்பர்களின் சாராமையோ என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.

சிலர் சொல்லக் கேட்கும் போது, நாமா என்று நமக்கே ஒரு ஓரப்புன்னகை எழுமே, அது நீடிப்பதில்லை.. தாழ்தள வசிப்பாக இருப்பதாலோ என்னவோ, தாழ்மை அதிகப்படியாகவே அதக்கி வைத்திருக்கிறேன்...

நீங்கள் பலமுறை என்னைப் பாராட்டி இருந்தாலும், இம்முறை எனக்கு ஏதோ ஒருவித நெகிழ்வை ஏற்படுத்துவது உண்மை. அது உங்கள் வார்த்தையில் அடங்கியிருக்கிறது..

இத்தொடர் இன்னும் நிறைவு பெறவில்லை. நாளை தொடருகிறேன்..

நன்றி அண்ணா

(மற்ற பாகங்களைப் படிக்கவில்லையே என்ற ஏக்கமும் நெஞ்சினில் உண்டு.)