PDA

View Full Version : அடங்கா மிருகம்!!



சிவா.ஜி
03-02-2008, 12:11 PM
எப்போது வேண்டுமானாலும்
பாய்ந்து குதறும் மிருகத்தை
பல்லணை போட்டு
உதடு கதவுகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்!

இருந்தும் இற்றுப்போன
சங்கிலியை அற்றுக்கொண்டு பாய
சின்ன உசுப்பலை
தேடி அலைகிறது!

நட்பென்றும்,உறவென்றும்
பார்ப்பதேயில்லை அந்த
பாழும் மிருகம்!

குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
குரூரமாய் கூண்டுக்குள்
அடங்கிவிடுகிறது..மீண்டும்
வெட்கமின்றி வெளிவந்து
வேதனையின் வீச்சத்தை
முகர்ந்து ருசிக்கிறது!

அற்றுப்போகாத சங்கிலியாய்
அமைதி வேண்டி யோகித்தாலும்
அடங்காமல் ஆடும்
அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
என்னையும் அழித்துத்தான்
அடங்குமோ.......

யவனிகா
03-02-2008, 12:23 PM
மிருகம் உறங்கிப் போகும் நாளும் வரும்...ஆனால் முழித்து இருக்கும் வரை தான் நமக்குப் பாதுகாப்பு.
சில நேரம் மிருகமாய் இருத்தல் நலமே...
சிங்கம் புலிகளுக்களுக்கிடையே வாழ எத்தனிக்கும் போது நரியாகவேனும் இருத்தல் நலமே...
நல்ல கவிதை அண்ணா...


இரட்டை நாக்குப் பாம்பு
எப்போது விழிக்கும் தெரியாது
வழு வழு தோல்
வனப்பான அழகு
நேர்த்தியான உடல்
மயங்கித் தொட
கையை நீட்டும் நேரம்....
தீத் தீண்டல்...

ஒவ்வோரு வார்த்தையும்
உயிர் கருக்கும் விசம்...
விசம் என்று தெரிந்தும்
தொட்டது என் தவறா...

இல்லை,

பாம்பின் குணம் விசம்.
எனது குணம் இது தான்
அவரவர்க்கு
அவரவர் குணம்....

படைப்பின் நியதி
யாரைக் குறைப்பட...

சிவா.ஜி
03-02-2008, 12:33 PM
திரும்பத்திரும்ப படிக்கத்தூண்டும் பின்னூட்டம்.அருமை தங்கையே...உங்கள் கோணமும் சிந்திக்க வேண்டியதே.....சில நேரங்களில் சாட்டைகள் சுழல வேண்டும்.ஆனால் யார், என்ன, எப்போது, எங்கு என்று வரைமுறையின்றி சுழன்றால் வலி இருபக்கமும்தான்.

மிக்க நன்றிம்மா.

இளசு
03-02-2008, 05:05 PM
நாக்கையும் ஆணுறுப்பையும் அடக்காதவன் வாழ்க்கை நரகம் நோக்கி
என இஸ்லாம் புனிதநூல் குரான் சொல்வதாக மேற்கோள் படித்திருக்கிறேன்.

சுவையுணவுக்காக மீறும் நாக்கின் முதல் குணம் - அதனால் சுயநோய் மட்டுமே...

சொல்விஷம் சிந்தி அள்ளமுடியா இழப்பும் ஆற்றமுடியா புண்ணும் தரும்
இரண்டாவது அடக்கமின்மை - அடடா!!!! என்ன சொல்ல சிவா?

ஆறாதே சுட்ட வடு
யாகாவாராயினும் காக்க
என வள்ளுவன் படித்துப் படித்துச் சொன்ன பாடங்கள்..

நாவை இப்படி பயன்படுத்துவோர் - செவியை அடைத்துவிட்டவர்கள் அல்லவா? பின்னர் எப்படி அய்யன் சொல் அவர்களின் மூளைக்குள் ஏறும்?

சொல்லின் செல்வன் என அனுமனைக் கம்பன் சொன்னது - அவன் அதிகம் பேசுவான் என்பதால் அன்று..
பேசினால் முத்துச்சரம் போல் அம்சமாய், அளவாய், அந்தந்தச்சூழலுக்கு சாலப் பொருத்தமாய்ப் பேசுவான்..

அப்படி அமைவது மட்டுமே நாக்கு!
மற்றவை யவனிகா சொல்வதுபோல் இரட்டைத் தலை நாகப்பாம்பு...!


விஷமின்றி அவற்றின் பல் பிடுங்க இயலாதுதான் -
ஆனால் நம் செவி பொத்தலாம்..
மனதைச் சுற்றி உதாசீன உறை சுற்றலாம்..
விஷம் சீறித் தீண்டா உயரத்துக்கு பக்குவ ஏணி ஏறலாம்..

வழிகள் இருக்கின்றன சிவா... வாருங்கள் என்னுடன்!

பூமகள்
03-02-2008, 06:31 PM
வார்த்தைகள் தடித்தால் வையகத்தில்
சிற்றெறும்பினும் கடுகாவர்..!

நஞ்சு வார்த்தை காது படின்
நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

சொல்லே உருவம்..!
சொல்லியவர்???!!

புத்தர் சொன்னது நினைவில்
இன்னும்..!!

"நீ சொல்லியவை
உமக்கே சொந்தம்..!!
நான் எடுக்கவில்லை..!!"

இதைவிட அழகாய்
வேறு வார்த்தை தெரியவில்லை..!!

----------------

யவனி அக்காவின் கவி அருமை..

பெரியண்ணாவின் பதில் அபாரம்..!!

நல்லதொரு உள்ளத்துக்கு சான்று உங்கள் கவி சிவா அண்ணா.

பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த பூ தங்கையிடம்..!! :)

இளசு
03-02-2008, 06:34 PM
வார்த்தைகள் தடித்தால் வையகத்தில்
சிற்றெறும்பினும் கடுகாவர்..!

நஞ்சு வார்த்தை காது படின்
நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

சொல்லே உருவம்..!
சொல்லியவர்???!!

புத்தர் சொன்னது நினைவில்
இன்னும்..!!

"நீ சொல்லியவை
உமக்கே சொந்தம்..!!
நான் எடுக்கவில்லை..!!"





அருமைடா தங்கை!
அருகில் இருந்திருந்தால் உச்சி மோந்திருப்பேன்...
அசத்திவிட்டாய்!

பூமகள்
03-02-2008, 06:39 PM
அருமைடா தங்கை!
அருகில் இருந்திருந்தால் உச்சி மோந்திருப்பேன்...
அசத்திவிட்டாய்!
அப்பப்பா.... பெரியண்ணாவின் அன்பு அமுதமாய் உண்ணக் கிடைத்த அற்புத நாள் இன்றா??!!


இதைவிட எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை அண்ணலே..!


அருகிலிருந்தால் தான் அன்பா??? மன்ற வீட்டில் ஒவ்வொரு பக்கமும் பூ பூத்தவண்ணம் தானே இருக்கிறேன் பெரியண்ணா??

நாளை பூக்கள் பார்த்தால் இந்த பூவை நினையுங்கள்..! அது போதும் எனக்கு..!! :)

சிவா.ஜி
04-02-2008, 03:36 AM
விஷமின்றி அவற்றின் பல் பிடுங்க இயலாதுதான் -
ஆனால் நம் செவி பொத்தலாம்..
மனதைச் சுற்றி உதாசீன உறை சுற்றலாம்..
விஷம் சீறித் தீண்டா உயரத்துக்கு பக்குவ ஏணி ஏறலாம்..

வழிகள் இருக்கின்றன சிவா... வாருங்கள் என்னுடன்!
உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அற்புதமான உண்மைகள் இளசு.உதாசீன உறை....நிச்சயம் காயத்திலிருந்து காப்பாற்றும்.
வழிகாட்டும் செம்மல்கள் இருக்கும் போது கைப்பிடித்து வர தயார்.தோளணைத்து தந்த தோழமை ஆறுதலுக்கு அநேக வந்தனங்கள்.
மனம் நெகிழ்ந்த நன்றி இளசு.

சிவா.ஜி
04-02-2008, 03:40 AM
நஞ்சு வார்த்தை காது படின்
நெட்டித் தள்ளி நிமிர்ந்து நட..!

சொல்லே உருவம்..!
சொல்லியவர்???!!

புத்தர் சொன்னது நினைவில்
இன்னும்..!!
\"நீ சொல்லியவை
உமக்கே சொந்தம்..!!
நான் எடுக்கவில்லை..!!



கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிது என்பதைப் போல....தங்கையானாலும் நீ சொல்லிய இந்த சொற்கள்.....அபாரம் தங்கையே.
சொல்லே உருவம்......சொல்லியவர்...?அந்தக் கேள்விக்குறியில் அடங்கிவிடுகிறது அவன் ஆணவம்.புத்தர் சொன்ன வாக்கு.....எந்நாளும் கடைபிடிக்க வேண்டிய சத்திய வாக்கு.
மிக அருமையானதொரு பின்னூட்டம் கண்டு பெருமையால் என் விழி உயர்கிறது.....என் தங்கை என்ற பெருமிதத்தில்.மிக்க நன்றி பூ.

இதயம்
04-02-2008, 04:17 AM
எனக்குள்ளும் இந்த மிருகம் சில நேரங்களில் ஆட்டம் போட்டுவிடுவதால் என் கருத்தை இங்கே இட எனக்கு தகுதியில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், முடிந்தவரை அந்த மிருகத்தை விலங்குகளால் பிணைத்து செயலிழக்க வைக்கவே எனக்கு எப்போதும் ஆசை. பல நேரங்களில் அது முடிகிறது. சில நேரங்களில் அதனிடம் தோற்றுவிடுகிறேன். அந்த மிருகம் தொடர்பாக கருத்து சொன்ன அத்தனை பேரின் வார்த்தைகளையும் செவி சாய்த்து கேட்டுக்கொள்கிறேன். அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முயற்சி செய்வேன். வயதில் குறைந்தவராய் இருந்தாலும் என் தங்கையிடமிருந்து நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் கோபம் அடக்குதலும் ஒன்று.!

அன்பு அண்ணா இளசு அவர்கள் சொன்னது போல் நரகத்தின் பாதையில் நான் செல்ல எனக்கு சம்மதமில்லை. எனவே விலகி நடக்க விருப்பம் கொண்டு, அதற்காக முயற்சி செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன். சிவாவின் கருத்துக்கள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை, வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அவருக்கு என் பாராட்டுக்கள்..!!

ஆதி
04-02-2008, 07:57 AM
விடக் கூடாதது இரண்டு
தன்மாண்பும் வார்த்தையும்..

நா அடக்கம் கொண்டுவிட்டால்
நம்மில் மற்றவை அடங்கிவிடும்..

நறுமணத்தையும் துர்மணத்தையும்
நல்கும் ஆற்றல்
நமிதழ்களுக்கு உண்டு..

சொல்லிலும் உண்டு
கசப்பு
புளிப்பு
இனிப்பு..

அடித்துக் கொன்று
சுவைத்து தின்று மீள*யிலும்
இதழ் தோய்ந்த
இரத்தத்தை நக்கிவரும் நாவுகள்
வார்த்தைகள் உடையது

இப்படி எவ்வளவோ அறிந்தும்
இந்த பிறவியல் என்னால்
அடைக்க முடியாத நா
அடக்கி வைத்தது என்னை..
அந்நிய மாக்கியது உறவுகளை..

அர்த்தம் பொதிந்த வரிகள் தந்த சிவா அண்ணாவிற்கு பாராட்டுக்கள்..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
04-02-2008, 11:20 AM
நாவடக்கம்,அடங்காமை பற்றி அற்புதமான பின்னூட்டம்.படித்து ரசித்தேன் ஆதி.மனமார்ந்த நன்றி.

அமரன்
04-02-2008, 01:16 PM
மனிதன் பிறக்கும்போது
பலருக்கு வலி கொடுக்கிறான்.
பிறந்தத மறு கணமே
வலிகளை துடைத்து விடுகிறான்..

பிறக்கையில் அவனென்ன
மிருக சாதியா....??
பிறந்ததும் அவனென்ன
கடவுள் சாதியா..??

மிருகமெனச் சொல்லாதீர்கள்..
அவை
வலிகளை மட்டும் தருவதில்லை..

கடவுளென்றும் சொல்லாதீர்கள்
அவை
வலிகளைத் தராமல் இல்லை.

இரண்டுக்கும் நடுவில் உள்ள
சதைப்பிண்டம்தான் மனிதன்..
தலைமட்டும் இல்லாது போனால்
பிண்டம் முண்டமாக மாறிவிடும்

பாழும் உலகின் அனுபவ பாடங்கள்
தலை புகுந்து ஆட்டுகிறது நிதமும்
தலைமகுடிக்கு ஆடுகிறான் அவனும்.

நல்லனுபவங்களை தேடாதது
அவன் குற்றமா..
தேடியவனை ஏமாற்றியது
உலகின் குற்றமா..

இந்தக்கேள்விக்கு விடையை
நாமாகவே கண்டு விட்டால்
வார்த்தைகள் நம் கட்டுக்குள்..
நல்வார்த்தைகள் நம்வசப்படும்..

கவிதையும் தொடர்ந்த கருத்துகளும் தந்த உணர்ச்சியில் எழுதியது.. கவிதையின் எல்லை தாண்டிச் சென்றதாக உணர்வு.. அப்படி இருந்தால் மன்னிக்க..

சிவா.ஜி
04-02-2008, 01:46 PM
நல்லனுபவங்களை தேடாதது
அவன் குற்றமா..
தேடியவனை ஏமாற்றியது
உலகின் குற்றமா..

இந்தக்கேள்விக்கு விடையை
நாமாகவே கண்டு விட்டால்
வார்த்தைகள் நம் கட்டுக்குள்..
நல்வார்த்தைகள் நம்வசப்படும்..

கவிதையும் தொடர்ந்த கருத்துகளும் தந்த உணர்ச்சியில் எழுதியது.. கவிதையின் எல்லை தாண்டிச் சென்றதாக உணர்வு.. அப்படி இருந்தால் மன்னிக்க..

உணர வேண்டிய உன்னதமான கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி அமரன்.அற்புதமான கருத்தை சொல்லிவிட்டு மன்னிப்பு எதற்கு.....கவிதைகளின் எல்லைகள் பின்னூட்டங்களால் விரிவடைகிறது...எனவே தயக்கம் வேண்டாம்....

அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அமரன்.

அமரன்
04-02-2008, 07:41 PM
அடுத்தவனை வேதனைப்படுத்துபவன் மிருகம் என்பதை நான் ஏற்பதில்லை. கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை மனிதன் என்ற அடிப்படைத் தத்துவம் பித்தலாட்டமோ என்றும் எண்ணுவேன். வேதனை தருவது கடவுளின் குணமில்லையா. மிருகங்களிடத்தே அன்பு என்பது காண்பதரிதா.

ஒவ்வொரு மனிதனும் அன்பாலேயே ஆக்கப்படுகிறான். ஆளப்படுகிறான். ஆட்கொள்ளப்படுகிறான். வேறுபடும் அன்பின் நாட்டம் மாறுபடும் மனித இயல்புக்கு கருவாகிறது. மாறுபடும் மனித இயல்பு வார்த்தைகளை உந்தித்தள்ளி விடுகிறது. ஆக அன்பே ஆண்டவன் என்னும் கோட்பாடுக்கமைவாக அனைத்து உயிரிகளும் கடவுள்தான். கடவுள்கள் அதிகரித்து பூமிப்பந்தில் சேதாரம் ஏற்படாதிருக்கவே உணவுச்சங்கிலிகள் உருவாக்கப்ப்ட்டுள்ளன

நாவடக்கம் தொடர்பான திரியில் இது தேவை இல்லையோ என்று அறிவு ஒருகணம் ஓவர்டைம் செய்ததன் விளைவே மன்னிக்க என்னும் பதம்..

ஐம்புலன்கள் எமது அகச்சூழலுக்கு காரணமாகின்றன. அவற்றின் திரட்டை துவைத்து, அலசி, காயப்போட்டுஅழுக்கு நீக்கும் வேலையே மூளையின் வேலை. ஐம்புலன்களும் புறச்சூழலை மையமாகக் கொண்டவையாக இருக்குபோது புறச்சூழல் தாக்கம் அகச்சூழலில் பிரதி பலிக்கும் அல்லவா. அதனால... வார்த்தைகளுக்கும் புறச்சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறேன். மூளை அசந்தவேளை துள்ளுகிறது. மூளை முழித்து விட்டால் பொதி சுமக்கிறது. அண்ணன் வழி தேவைப்படுமிடத்தில் புலனடக்கம் அவசியமாகிறது என்பதே எனது நிலை..

அருமையான கவிதை சிவா. எல்லாருக்கும் எல்லா நேரமும் பொருந்தக்கூடியது. ஒவ்வொருவரும் படித்து புரிந்து தம்மைத்தானெ செப்பனிட அவசியமானது. எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.:):icon_b:

சிவா.ஜி
05-02-2008, 03:44 AM
எத்தனை அருமையான பின்னூட்டங்கள்....வியந்து நிற்கிறேன் அமரன்.மன்றமும்,மன்ற உறவுகளும் கற்றுக்கொடுப்பவைகளை எண்ணி எண்ணி வியக்கிறேன்.மிக்க நன்றி.

ஆதவா
05-02-2008, 07:23 AM
அடங்கு அடங்கு அடங்கு...

நாவடக்கம் அல்ல. மன அடக்கம்.

இத்துணை பிரமாத பின்னூட்டங்களுக்கு இடையில் எத்தனை அழகாய் என்னால் பிரதிபலிக்க இயலும்? அத்தனை
பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும்.... பரிசுகளும்..

கவிதை??

வார்த்தைகளை ஆராய்ந்தால்... நாக்கை அடக்க என்ன இருக்கிறது என்பதைத் தெளிவாக சுட்டியிருக்கிறீர்கள் சிவா.
அண்ணா. உதடுகள் கதவாக, பற்கள் அணையாக மற்றும் இதனுள் ஒளித்து வைக்கும் மனமும்.. நாக்கு எப்படிப்பட்டது?
சுவைகள் அறியும் நரம்புகளைக் கொண்ட, எலும்பில்லாத உறுப்பு.. வலிமையில்லா ஆயுதம்தான் வலிமையான ஆயுதம்..
நாக்கு அதற்குச் சரியான உதாரணம். எத்தனை சுவைகள் உள்ளனவோ அத்தனை சுவைகளும் நாக்கு அறியும்...
இனிப்பு, காரம், உவர்ப்பு.... பல பல.. இனிய தேன் சிந்தும் அதே நாக்கு கொடிய தேளாகவும் கொட்டும்..

எல்லாவற்றிற்கும் பழி நாக்கின் மேல்... அம்பிட்டவனை விடுத்து அம்பைக் குறைகூறுதல் நல்லதோ? மன அடக்கம்
இருப்பின் நாவடக்கமே தேவையற்றது. இது என் கருத்து. நாக்கை அடக்கு அடக்கு என்று சொல்வதைக் காட்டிலும் மனத்தை அடக்கு என்று சொல்லலாம்.. இதெப்படியென்றால், ஒருவர் மீது சொற்கள் பிறக்காவிடினும் அவரைப் பற்றிய நிந்தனை இருக்கிறதே!! அது நாவடக்கத்தை மீறும் இழிவு.

கற்பு கற்பு என்று சொல்கிறார்கள்... மனத்தூய்மையே கற்பு.. மனம் ஒரு புலனாகப் போற்றி கற்பைப் போர்த்தி இருக்கவேண்டும்.. கற்பிழத்தல்... காமத்தில் அல்ல. வார்த்தையிலுமுண்டு.

இற்றுப் போன சங்கிலி

இற்றுப் போகவைக்கும் மனத்திடம்... சே சே இது திடமல்ல, திரவம்.. எங்கும் பாயும் நீர்மம்.

அமைதி வேண்டி யோகித்தாலும் - யோசித்தாலும் என்று வந்திருந்தாலும் சரிதான்... ஆனால் யோகி என்பதற்கான சரியான விளக்கம் பிடிபடவில்லை.

இறுதியாக...

அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
என்னையும் அழித்துத்தான்
அடங்குமோ.......

ஆம்... அப்படித்தான்.. சொல்லெடுத்தவனுக்குச் சொல்லிலே சாவு...

நாக்கு ஒரு தூதன்... பார்ப்பதற்குக் கொடூரம்... ஆனால் சாது.. பாவம் அவனை விட்டுவிடுங்கள்..

நல்ல, தேவையான, காலத்திய, பாங்கான, தெளிவான, குட்டும் கவிதை... அதற்குப் பாராட்டுகள்..

ஆதவா
05-02-2008, 07:27 AM
எத்தனை அருமையான பின்னூட்டங்கள்....வியந்து நிற்கிறேன் அமரன்.மன்றமும்,மன்ற உறவுகளும் கற்றுக்கொடுப்பவைகளை எண்ணி எண்ணி வியக்கிறேன்.மிக்க நன்றி.

குறிப்பாக, அமரன், ஓவியன்.... அவ்வப்போது இவர்களை மிஞ்சும் பூ... கலக்கல் கூட்டணி.

எட்ட நின்று ரசிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுமோ என்னவோ? :D

வாழ்த்துகள் அனைவருக்கும்...

(அழகு பின்னூட்டமிட்ட யவனிகா, பூ, ஆதி, அமரன் ஆகியோருக்கு தலா ரூபாய் 500 பரிசு.:icon_b: )

அமரன்
05-02-2008, 12:03 PM
உதடுகள் கதவாக, பற்கள் அணையாக மற்றும் இதனுள் ஒளித்து வைக்கும் மனமும்.. நாக்கு எப்படிப்பட்டது?..
வாங்கய்யா.. வாங்க.. யாராச்சும் பின்னிருந்து தள்ளினால் முன்னோக்குபவன் நான். முன்னோக்குவதற்காக அப்பப்போ பின்னோக்குவேன். இப்போதும்...

நான் பிறந்த, தவழ்ந்த, நடந்த, ஓடிய பிரதேசத்தில் குளம் கிடையாது. குட்டையும் கிடையாது. மழை உடைந்து, ஒன்றுசேர்ந்து ஓடி, எங்காச்சும் தேங்கும் வெள்ளம்தான் எனக்கு குளம் குட்டை. யார் செய்த பாவமோ புண்ணியமோ அடிக்கடி மாற்றும் வசிப்பிடம், ஓவியனின் பிரதேசத்துக்கு குடிபெயர்த்தது. அங்கே விசாலமான குளம். கண்ணாடி போல பரந்த நீர். குளத்தில் ஆங்காங்கே கறைகள்.. அழுக்குகள். நாற்புறக் கல்லணை.. ஒருபுறம் பலகதவு.

பொய்க்காத மாரியில் வானம் பொத்துக்கொண்டு ஊத்தும்போது கல்லணை விளிம்புக்கு வரும் தண்ணீர் அணை உடைக்க முட்டும். உடைத்தால் சுற்றி இருக்கும் குடி நாசமாகும். கதவுகளை திறந்து விடுவார்கள். யாரையும் பாதிக்காத வகையில் மிகையான ஆபத்து நீர் வாய்க்கால் வழி ஓடி எங்கேயே சேர்ந்துவிடும். குளத்திலிருந்த அழுக்குகளும் காணாமல் போய்விடும்..

பல்லணை, உதடுக்கதவு அப்படி இப்பிடின்னு உசுப்பேத்தி எழுத வெச்சிட்டீங்கள்ல.. பார்த்துக்கிறேன் உங்கள..

ஆதவா
05-02-2008, 12:24 PM
வாங்கய்யா.. வாங்க.. யாராச்சும் பின்னிருந்து தள்ளினால் முன்னோக்குபவன் நான். முன்னோக்குவதற்காக அப்பப்போ பின்னோக்குவேன். இப்போதும்...



பல்லணை, உதடுக்கதவு அப்படி இப்பிடின்னு உசுப்பேத்தி எழுத வெச்சிட்டீங்கள்ல.. பார்த்துக்கிறேன் உங்கள..

இதுக்கு எதுக்குங்க என்னோட மேற்கோள்... எல்லாம் நம்ம அண்ணன் செய்த வேலை....:)

சிவா.ஜி
05-02-2008, 12:35 PM
அமைதி வேண்டி யோகித்தாலும் - யோசித்தாலும் என்று வந்திருந்தாலும் சரிதான்... ஆனால் யோகி என்பதற்கான சரியான விளக்கம் பிடிபடவில்லை.

கர்மயோகி என்பவன் செய்யும் எந்த செயலும் தவமிருப்பதைப்போல வெளிக்குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காமல் காரியத்தில் கண்ணாய் நடைபெறும்.யோகத்தால் விளைவது அமைதி.அப்படி செய்வதை சுருக்கமாக யோகித்தல் என்று பிரயோகித்தேன்.தவறாயிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.



நாக்கு ஒரு தூதன்... பார்ப்பதற்குக் கொடூரம்... ஆனால் சாது.. பாவம் அவனை விட்டுவிடுங்கள்..

உடலின் அத்தனை செயல்களின் கட்டுப்பாடும் மூளையின் கீழ்.மனமும்..மூளையும் ஒன்றே....ஆனால் சில சமயங்களில்...படைத்தலைவனின் கட்டளைக்குக் கீழ்படியாமல் போர்வீரன் எதிரியின் தலைக் கொய்வான்.அங்கு அவனுடைய உணர்ச்சிகள் கட்டுக்குள் இருப்பதில்லை...அதனால் கட்டளைகள் செவிக்கு எட்டுவதில்லை.அதனால்தானோ என்னவோ நாக்கை நரம்பில்லாதது என்கிறார்கள்?நரம்புவழி மூளையின் கட்டளை சரியான சமயத்தில் வந்து சேர்ந்தால் கட்டுக்குள் இருக்குமோ?இதை மறைமுகமாக உணர்த்தவோ என்னவோ அன்று முதல் இன்றுவரை நாவடக்கமென்று நாக்கை அடக்கச் சொல்கிறார்கள்?


நல்ல, தேவையான, காலத்திய, பாங்கான, தெளிவான, குட்டும் கவிதை... அதற்குப் பாராட்டுகள்..

அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ஆதவா.

ஜெயாஸ்தா
06-02-2008, 04:07 AM
குறிப்பாக, அமரன், ஓவியன்.... அவ்வப்போது இவர்களை மிஞ்சும் பூ... கலக்கல் கூட்டணி.

எட்ட நின்று ரசிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுமோ என்னவோ? :D



மிகச்சரியாக சொன்னீர்கள் ஆதவா. கவிதையையும் அதைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்களையும் படிக்கையில் எனக்க கருத்து எதுவுமே எழுதத் தோன்றவில்லை. நடக்கவேண்டும் என்று ஆசைப்படும் நடக்காத சில விசயங்களைத்தான் கவிதை வடித்து தாகத்தை தணித்துக்கொள்கிறோமே என்று தோன்றுகிறது.

நா, மனவடக்கம் பற்றி அற்புதமான கவிதை தந்த சிவா அண்ணாவுக்கு நன்றி.

சிவா.ஜி
06-02-2008, 04:18 AM
நடக்கவேண்டும் என்று ஆசைப்படும் நடக்காத சில விசயங்களைத்தான் கவிதை வடித்து தாகத்தை தணித்துக்கொள்கிறோமே என்று தோன்றுகிறது.

உண்மையானாலும்......சிறிதே சிந்திக்க வைக்கும் வரிகள் ஜெயஸ்தா.கவிதை எழுத இந்தக் கருவைப் பற்றி சிந்திக்கும்போதே இதைப் பின்பற்றி இனி எந்தவொரு அசம்பாவிதமும் நிகழக்கூடாது என நினைத்தது உண்மை.நடக்கவே நடக்காத விஷயமாய் இதை நினைக்கவில்லை.அடுத்தடுத்து கிடைக்கும் சில அடிகள் மிகப் பெரும்பாலோரை திருத்தும்.அந்த வகையில் இளசு சொன்ன ஒதுங்கிப்போதல் மற்றும் தள்ளிப்போடுதல் என்ற செயல்களால் மனக்கசப்பு தடுக்கப்படலாம்.ஆதவா சொன்னதைப்போல நாவுக்குப் பின்னே இருக்கும் மன அடக்கமும் நாவைக் கட்டலாம்.
எனவே சில கவிதைகள்....நூறு சதவீதம் அப்படியே பின்பற்றவைக்கவில்லையாயினும்,குறைந்த பட்சம் சிந்திக்கவாவது வைக்கும்.சிந்தனையில் வெற்றி பெற்றால் செயல்கள் தடுக்கப்படும்.அப்படி ஓரிரண்டு பேராவது குறைத்துக்கொண்டாலே அந்த படைப்பின் பயன் பூர்த்தியாகிறது.

நலதொரு பின்னூட்டத்திற்கு நன்றி நன்பரே.

சுகந்தப்ரீதன்
06-02-2008, 06:35 AM
நாவின் நயவஞ்சகத்தை நயம்பட கவிதையில் சொன்ன சிவா அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்...!!!

நாவின் நாவில் சிக்காதவர் எவருண்டார் அண்ணா..? அதனால்தான் வள்ளுவரும் சொன்னாரோ..யாகாவராயினும் நா காக்க வென்று...?!

சிவா.ஜி
06-02-2008, 06:40 AM
நாவின் நயவஞ்சகத்தை நயம்பட கவிதையில் சொன்ன சிவா அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்...!!!

நாவின் நாவில் சிக்காதவர் எவருண்டார் அண்ணா..? அதனால்தான் வள்ளுவரும் சொன்னாரோ..யாகாவராயினும் நா காக்க வென்று...?!
நன்றி சுகந்த்....பல சமயங்களில் இந்த பாழும் நாக்கு நம் கட்டளைகளையும் மீறிவிடுமென்றாலும்....முடிந்தவரை அடக்கப் பார்ப்பது நல்லதில்லையா...

சாலைஜெயராமன்
06-02-2008, 03:25 PM
நாவின் வலிமை பற்றி நமது முன்னிறைத் தெய்வமான திருக் கொரல் வள்ளுவ நாயனார் அறிவிப்பது யாதெனில்

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு

என்பதில்

வள்ளுவம், நாவின் வலிமைக்கு முன் நாம் தூசு என்று சொல்லு முகத்தான் ஒரு பெரும் பொருளை உணர்த்துகிறது.

"காவாக்கால்" என்றால் "காத்துக்கொள்ளாவிட்டால்" என்னவாகும் என்று எதிர்மறையாக பொருள் கொள்ளுமாறுதான் அனைவரின் நினைவும் ஓடும்.

ஆனால் அதையே "கா வாக்கால்" என்பதாகப் பிரித்துப் பொருள் கொண்டால், அதாவது "வாக்கால் காத்துக் கொள்" எனப்தாகத்தான் தெய்வப் புலவர் வலியுறுத்துகிறார்.

பகாபதச் சுவையை பகுபதமாக்கும் விதமாக நாவிற்கு பொருள் உணர்த்த வந்த எம்மான் வள்ளுவர் எதிர்மறையாகக் கூறுமிடத்தும் நேர் மறையாகப் பொருள் கொள்ளுமாறு நாவின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.

இங்கே சொல் இழுக்கு மட்டும் படுவதல்ல. சொல்லால் இழுக்கப்படுவதாலே நாவை காத்துக் கொள்ள நம்மால் இயலவில்லை. சொல்லும் சொல்லில் வெல்லும் சொல் எது என அறியும் போது வாக்கு நம்மைக் காக்கிறது. இல்லையேல் இழுக்குப்படுவது இயல்பு.
அதனால் சோகத்தைக் காத்துக் கொள்ளும் செயல்தான் அமையும்.

அப்படிப் பட்ட வலிமையுடைய 3 அங்குல நாக்கின் நீளம் மாபலிச் சக்ரவர்த்திக்கு மூன்று உலகை மறையோனுக்கு அளந்தும் கால் வைக்க இடம் இல்லா நிலைக்கு அவனையாக்கியது அவன் நாவால்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நாவு நரம்பில்லாதது. ஆனால் சகலத்தையும் கட்டக் கூடிய வலிமையான கயிற்றின் திரிகள் அதற்கு உண்டு.

நாவினை நன்மையாக்கிக் கொண்டால் மோட்ச சாம்ராஜ்யமும் நமக்கு வசமாகும். இல்லையேல் நம் வாழ்வு நரகம்தான்.

சிவா.ஜி
08-02-2008, 05:30 AM
திரு.ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள மிக அரிய செய்திகள் இருக்கிறது.ஜெயராமன் அவர்களின் அனுபவ அறிவு ஆசானாயிருந்து நமக்கு பாடங்கள் சொல்லித்தருகின்றன. மிக்க நன்றி அய்யா.

ஷீ-நிசி
08-02-2008, 07:28 AM
வாழ்த்துக்கள் சிவா.ஜி..

சிறப்பான கவிதை!

பைபிள்: யாக்கோபு 3 : 7 - 8

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது.

மிக மிக கடினமான செயல். நாம் அனைவருடனும் நட்புறவு கொள்ளவேண்டுமென்றால் பல நேரங்களில் நாவை அடக்கித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் மிக உயர்ந்த நட்பை, உறவை, அன்பை இழக்கநேரிடும்.

மிக அழகான பின்னூட்டங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும். எனக்கு இதயம் அவர்களின் பின்னூட்டம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது.

தொடரட்டும் நம் பயணம்.

Narathar
09-02-2008, 04:34 PM
நாவால் நாம் பலரை அடக்கினாலும், நமது நாவை நாம் கட்டுப்படுத்தமுடியாமல் போவது வியப்பானதே.....

அருமையான கவிதை அன்பரே..

வாழ்த்துக்கள்

அக்னி
12-02-2008, 06:42 PM
மனித சுய கட்டுப்பாட்டின் அவயம்...
மறை உரைப்பின் திறை
கறை உரைப்பின் சிறை

நா நிலையில்...
நாணாதிருக்க வேண்டும்...
நாணாயிருக்க வேண்டும்..
உறையாதிருக்க வேண்டும்...
உறைக்காதிருக்க வேண்டும்...
வளையாதிருக்க வேண்டும்...
வளைக்காதிருக்க வேண்டும்...
பலமாயிருக்க வேண்டும்...
பலதில்லாதிருக்க வேண்டும்...

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
உணர்ந்தே நடப்போம்...

என்பில்லாத நாக்கில் அன்பே உறுதி சேர்க்கும்...

வாழ்விற் கொள்ள வேண்டிய படிப்பினைகள்,
சிவா.ஜி யின் கவிதையாகவும் அனைவர் பின்னூட்டங்களாகவும்...
மிகுந்த பாராட்டுக்கள்...

இளசு
12-02-2008, 06:51 PM
...
மறை உரைப்பின் திறை
கறை உரைப்பின் சிறை

நா நிலையில்...
நாணாதிருக்க வேண்டும்...
நாணாயிருக்க வேண்டும்..
உறையாதிருக்க வேண்டும்...
உறைக்காதிருக்க வேண்டும்...
வளையாதிருக்க வேண்டும்...
வளைக்காதிருக்க வேண்டும்...
பலமாயிருக்க வேண்டும்...
பலதில்லாதிருக்க வேண்டும்...

என்பில்லாத நாக்கில் அன்பே உறுதி சேர்க்கும்...

...

அக்னித்தமிழ் அபாரம்... பாராட்டுகள் அக்னி!

அக்னி
12-02-2008, 08:06 PM
அக்னித்தமிழ் அபாரம்... பாராட்டுகள் அக்னி!
நன்றி அண்ணா... இப்போதுதான் என் மனதில் ஆறுதல்.
ஏனென்றால் இதனை நான் எழுதி சேமித்து வைத்துக், கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களுக்குப் பின்னரே பதிவிட்டேன்.
நான் சொல்ல நினைப்பது சரியா என்ற சஞ்சலம். இப்போது சரியாகிவிட்டது.

சிவா.ஜி
13-02-2008, 03:38 AM
அட அட அட.....அக்னித் தமிழை என்ன சொல்லி பாராட்ட.....
பிரமாதமென்ற ஒற்றைச் சொல் போதாது....
சொல்லாடலில் சிறந்த கவிதையொன்று என் கவிதைக்கு பின்னூட்டமாய் கிடைத்ததில்...ஆனந்தம்...பேரானந்தம்.

நாகரா
20-02-2008, 04:21 AM
அடங்கா மிருகத்தின் வெளிவேட்டையின் முடிவில்.
மனிதத்தின் தியான உட்கோட்டைப் புகுதல்?
தேவனாய் உயிர்த்தெழ, பூமி சொர்க்கமாகும் அதிசயம்!

அடங்கா மிருகத்தைக் கவிதையில் பிடித்ததற்கு நன்றி, சிவா.

சிவா.ஜி
23-02-2008, 06:58 AM
அடங்கா மிருகத்தின் வெளிவேட்டையின் முடிவில்.
மனிதத்தின் தியான உட்கோட்டைப் புகுதல்?
தேவனாய் உயிர்த்தெழ, பூமி சொர்க்கமாகும் அதிசயம்!

அடங்கா மிருகத்தைக் கவிதையில் பிடித்ததற்கு நன்றி, சிவா.

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நாகரா...அந்த மிருகத்தின் வெளிவேட்டை முடிவில் உள்நோக்கி பார்த்து ஓய வேண்டும்.
செய்த செயலை எண்ணி தலை கவிழ வேண்டும்.
நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நாகரா.

Ravee
21-08-2011, 12:10 AM
எப்போது வேண்டுமானாலும்
பாய்ந்து குதறும் மிருகத்தை
பல்லணை போட்டு
உதடு கதவுகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்!

இருந்தும் இற்றுப்போன
சங்கிலியை அற்றுக்கொண்டு பாய
சின்ன உசுப்பலை
தேடி அலைகிறது!

நட்பென்றும்,உறவென்றும்
பார்ப்பதேயில்லை அந்த
பாழும் மிருகம்!

குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
குரூரமாய் கூண்டுக்குள்
அடங்கிவிடுகிறது..மீண்டும்
வெட்கமின்றி வெளிவந்து
வேதனையின் வீச்சத்தை
முகர்ந்து ருசிக்கிறது!

அற்றுப்போகாத சங்கிலியாய்
அமைதி வேண்டி யோகித்தாலும்
அடங்காமல் ஆடும்
அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
என்னையும் அழித்துத்தான்
அடங்குமோ.......



ஆஹா அருமையான கவிதை .... எழுதி தந்த சிவா அண்ணாவிற்கும் , எடுத்து தந்த அமரனுக்கும் நன்றி.

இந்த மிருகத்தை அடக்கி ஒடுக்கத்தானே அண்ணி, குழந்தைகள் என்ற பாசக் கயிறுகள் இருக்கிறது சிவா அண்ணா ..... :lachen001:

கீதம்
21-08-2011, 12:54 AM
அமரன் சுட்டிய வழி வந்து கட்டிக்கிடக்கும் இந்த அடங்கா மிருகம் கண்டேன். விழி விரியவைத்த கவிச்சிந்தனையையும், வியக்கச் செய்த பின்னூட்டங்களில் பெருகிய எண்ணங்களையும் கண்டு மலைத்து, ரசித்து, மகிழ்ந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் இங்கு வாராமற்போனேனே என்று என்னையும் நொந்துகொண்டேன்.

கவிதை செதுக்கியவிதம் வெகு அருமை அண்ணா. அதன் குரூரத்தை இந்த வரிகளை விடவும் பொருத்தமாய் வெளிப்படுத்திவிட முடியாது.

குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
குரூரமாய் கூண்டுக்குள்
அடங்கிவிடுகிறது..மீண்டும்
வெட்கமின்றி வெளிவந்து
வேதனையின் வீச்சத்தை
முகர்ந்து ருசிக்கிறது!

சிவாஜி அண்ணாவின் கவியோட்டத்துக்குப் பாராட்டும், பின் தொடர்ந்துவந்த பின்னூட்டங்களுக்குப் பலத்த கைதட்டும் வழங்கி, சுட்டிய அமரனுக்கு நன்றியைச் சொல்கிறேன்.

Nivas.T
21-08-2011, 07:13 AM
அற்ப்புதமான கவிதை அண்ணா,

இந்த மிருகத்தை கட்டுப்படுத்தமுடியாமல், பலமுறை தோற்றுப் போயிருக்கிறேன். நானும் பலசமயம் குதறப் பட்டிருக்கிறேன். அதன் வலியும் வேதனையும் எனக்கு நன்கு தெரியும்.

அமரனின் அசத்தலான பின்னூட்டம் இன்னும் அழகு

சிவா.ஜி
28-08-2011, 02:45 PM
எங்கோ ஒளிந்திருந்த கவிதையை வெளிக்கொணர்ந்து பாராட்டிய ரவீ, தங்கை கீதம் மற்றும் நிவாஸுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

ஜெகதீசன் அவர்களின் கவிதை சொல்லும் இன்னொரு கோணமும் சிந்திக்க வைக்கிறது. வெறுமே நாவைச் சொல்லி என்ன பயன்....நாவின் முதலாளி மனதை அல்லவா கூண்டில் ஏற்ற வேண்டும்.

சுட்டிக் காட்டிய அன்பு அமரனுக்கும் மிக்க நன்றிகள்.

aren
31-08-2011, 04:45 AM
நல்ல அருமையான கவிதை வரிகள் சிவாஜி. பாராட்டுக்கள்.

இந்த நாக்கையே மிருகம் என்று சொன்னால் அதை அடக்கி ஆளும் மூளையை எப்படிச் சொல்வீர்கள்!!!

இந்த மாதிரி நிறைய முத்துக்கள் நம் மன்றத்தில் இருக்கிறது. யாரும் பழைய ஏட்டை புரட்டிப்பார்க்க மறுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் உள்ளே சென்று பாருங்கள்.