PDA

View Full Version : மாட்டு பொங்கல் - லொள்ளுவாத்தியார்



lolluvathiyar
02-02-2008, 02:13 PM
மாட்டு பொங்கல் கொண்டாடுகிறார் லொள்ளுவாத்தியார்

தமிழ்மன்ற நன்பர்களுக்கு என் வனக்த்தை தெரிவித்து கொள்கிறேன். மாட்டு பொங்கல் முடிந்து 15 நாள் கழித்து இந்த பதிப்பை பதிக்கிறேன். இடையில் அதிக வேலை பலு காரனமாக என்னால் மன்றம் வர முடியாமல் இருந்தது. நாங்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை. மாறாக மாட்டு பொங்கல் தான் கொண்டாடுவோம். ஒவ்வொருவருடமும் விசேசமாக கொண்டாடுவோம்.

பொங்கலுக்கு நாலு நாளைக்கு முன்னமே மனைவி குழந்தைகளை எங்கள் கிராமத்து கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டேன். போகி பண்டிகைக்கு முந்தைய நாளே என் மனைவியும் அம்மாவும் முருக்கு சுட்டு வீட்டை வலித்து விட்டார்கள். எனக்கு பொங்கல் மாட்டும் பொங்கல் இரண்டு நாள் தான் லீவு. மாட்டு பொங்கல் அன்று காலை எல்லாம் வழக்கம் போல நடந்தது.

எங்கப்பாவும் அம்மாவும் தன்னி காட்டி பால் கறந்து மாடுகளை மேயரதுக்கு முடுக்கி விட்டார்கள். ஒரு காலத்துல நிரைய மாடுகள் இருந்தது, இப்ப இரண்டு கறவை மாடு மட்டும்தான். கூலி ஆள் பற்றாகுரையால் அதிகம் வைத்திருக்க முடியவில்லை. மாட்டு பொங்கல் அன்று காலையில் கட்டுதாரையை அம்மா நன்றாக கூட்டி சுத்தம் செய்து விடுவார்கள். பூசியும் விடுவார்கள். மதியம் நேரம் அடுத்த முரை பால் கறக்கும் நேரத்தில் மாடுகளுக்கு தன்னி காட்டி பால் கறந்து விட்டு சிறிது நேரம் மேய முடுக்கி விடுவோம்.

சாய்ந்திரம் தான் மாடுகளை குளிப்பாட்ட அழைத்து வருவேன். பண்டங்களை குளிப்பாட்டுவட்து லொள்ளுவாத்தியாரின் வேலை. மாடு குளிப்பாட்டுவது மிகவும் சுவாரசியமாக இருக்கும். நாம் நினைத்து கொள்வோம் மாடுகளை சுத்தபடுத்துகிறோம் என்று ஆனால் உன்மையில் மாடுகளை குளிப்பாடுவது என்பது மாடுகளை கொடுமை படுத்துவதுபோல தான். ஒவ்வொரு மாட்டையும் தனி தனியாக கூட்டி வந்து தொட்டிக்கு பக்கத்திலேயே கட்டி விடுவேன். பிறகு பக்கெட்டில் தன்னீர் மோந்து தயாராக வைத்து விடுவேன். மாட்டின் மூக்கனாங்கா கயித்துடன் இழுத்து பிடித்த் அதன் மீது தன்னீர் மோந்து ஊத்துவேன். அப்ப மாடு இழுத்துகிட்டு போகவே பாக்கும் வலுகட்டாயமாக இறுக்கி பிடித்து தன்னி ஊத்தி தேய்த்து கழுவுவேன்.

மாடுகளின் பின்புறம் தன்னீர் ஊத்தும் போது கம்முனுதான் இருக்கும் அதே போல அதன் வயிற்று பகுதி மடி மீது தன்னீர் இரைக்கும் போதும் அமைதியா இருக்கும் ஆனா முதுகு மேல தன்னீர் ஊத்தும் போது இழுத்து ஓட பாக்கும். இந்த வேலைய ஜாக்கிரதையா செய்யனும். கடைசியல் மெயின் பகுதி மாட்டின் முகத்து மேல தன்னி இரைப்பது. இந்த சமயத்துல முலை குச்சியிலிருந்து கயிற்றை அவுத்து முக்கனாங்க கயிற்றை பிடித்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் முகத்தின் மீது தன்னீர் ஊத்த வேண்டும். அப்ப மாடுகள் சரியான் துள்ளு துள்ளும். கையாளுவது மிக கடினம். கட்டி வச்சிருந்த கயிற்றால நம்மை சுத்தி தள்ளிவிடும். முகத்துக்கு தன்னி இரைப்பது 50 சதவீதம் தான் சக்ஸஸ் ஆகும். நிறைய சமயம் இழுத்து தள்ளி தப்பிச்சுடும்.

எல்லாத்தை விட கொடுமை என்னன்னா மாட்டி கயிறை மேல தூக்கி கட்டனும். இல்லீனா அது மன்னுல படுத்துக்கும் அப்புறம் குளிச்சதெல்லாம் வேஸ்ட். அடுத்தது மாட்டு கன்னுகளுக்கு குளிப்பாட்டி விடுவது. மாட்டுகன்னுகளுக்கு முக்கனாங்கயிரு இருக்காது அதுகளுக்கு சில சமயம் மட்டும் முகரை என்று அழைப்பபடும் கயிறுதான் கட்டுவோம். முகரை கயிறு மூக்கை சுத்தி கட்டி இருக்கும். பால் குடிப்பதை தவிர்க்க இவ்வாறு செய்யபடும். கன்னுகுட்டிய குளிப்பாட்டும் போது அதை அடக்க முடியாது. சுத்தி சுத்தி ஓடும். பக்கத்துல நின்னம்னா கயிரு கால சுத்தி நம்மை இழுத்து மிதித்து விடும். பொடுசுக மாட்டு கன்னுகளுக்கு குளிப்பாட்டி விட ஆசைபடுங்க. அதனால் அதுகல ஒண்ட கட்டி குழந்தைகள் தள்ளி நின்னு மேல அதுக மேல தன்னி வீசி ஏதோ ஒப்புக்கு குளித்து விடுவார்கள்.

அடுத்தது நாய்களுக்கு குளிப்பாட்டுவது. எங்க தோட்டத்துல நாட்டு நாய்கள தான் வளர்ப்போம். அதுகல கட்டுவதே கிடையாது. கழுத்துல பெல்ட் எல்லாம் இருக்காது. அன்னிக்கு சங்கிலியால கழுத்த சுத்தி கட்டி வந்து பக்கத்துல அதுக்கும் ஒரு முகரை கட்டு கட்டுவேன். அப்புரம் தான் குளிச்சு விடுவேன். அதுவும் நாம உக்காந்து தான் நாய்களுக்கு குளிப்பாட்டனும். நாய்களும் துள்ளும் ஆனால் மாடுகளுக்கு குளிப்பாட்டுபவர்களுக்கு நாய் துள்ளல் எல்லாம் சாதர்ன விசயம். நாய்களுக்கு குளிப்பாட்டி முடித்த வுடன் அதுக ஓடி போய் மனல்ல படுத்துக்குங்க.

அதன் பிறகு ஏமாந்து விட்டா குழந்தைக கோழிகளுக்கு குளிப்பாட்டி விட்டுருவாங்க. மாட்டு பொங்கல் அன்னிக்கு குளிப்பாட்டுவதிலிருந்து தப்பிக்கு ஒரே சீவன்கள் கோழிகள்தான். அதன் பிறகு மாடுகளுக்கு நெற்றியில் விபூதி சந்தனம் பொட்டு எல்லா வைப்போம். குழந்தைகள் நாய்கள் கோழி குஞ்சுகளுக்கு பொட்டு வைப்பாங்க. பொட்டு வச்சதுக்கப்பரம் மாடுகளையும் நாயையும் பார்த்தீங்கன்னா அழகா மங்கலகரமா இருக்கும். அதுகல பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்.

சரி இனி தமிழ் மன்ற நன்பர்கள் எல்லாம் மாட்டு பொங்கல் வக்க தயாராலாமா. நல்ல விலாசமான இடத்த பொங்கல் வைக்க தேர்ந்தெடுப்போம். அங்க இடத்தை நல்ல கூட்டி பெருக்கி வழிச்சு விடுவோம். அப்புறம் மாட்டு சானத்தால் இரண்டு பாத்தி ஒட்டி கட்டுவோம். அது எப்படினான் முதலில் சானியை நன்றாக தன்னீர் விட்டு குழைத்து களி மன் போல ஆக்குவோம். மூன்று அடிக்கு ஒன்றை அடியில் பரப்பி மேடை போல அமைப்போம். மேடை ஒரு கால் அடி உயரம் இருக்கும் உள்புரமிர்ந்து தோண்டி எடுத்து குளி போல செய்து விடுவோம். பிறகு சரி நடுவில் வரப்பு போல கட்டுவோம். மேலிருந்து பார்த்தால் இரண்டு குலம் போல தான் தெரியும்.

குலத்தின் ஒவ்வொரு வெவுத்தில் நடுவில் புல்லாரு சேப்புல இருக்கும் வெங்கச்சாங்கல் நட்டு அதுக்கும் பொட்டு போட்டு பூ போடுவோம். அதுதான் நாங்க குப்பிட போகும் சாமி. கொஞ்ச நேரம் சானி இஞ்சியவுடன் அதில் தன்னீர் விட்டு நப்பி விடுவோம். இதை பற்றி எங்கப்ப என்னிடம் சொன்ன விசயம், பூஜை செய்யும் போது கடவுள் இந்த சானி குலத்தில் குளித்து விட்டு வந்து நமக்கு ஆசிர்வதிக்குமாம். பிறகு எல்லா ஏற்பாடும் முடிந்த பிறகு வென் பொங்கல் வைப்போம். பொங்கல் வைக்கும் போது மாடுகள் அருகிலேயே கட்டி இருப்போம். பொங்கல் கல்லு கூட்டி தான் வைப்போம் அடுப்பு பயன்படுத்த மாட்டோம்.

பொங்கல் பொங்கியவுடன் அதை பெரிய வானாபோசியில் போட்டு கரும்பு சக்கரை வாழைபழம் பேரிச்சை போட்டு பினைந்து வைத்து விடுவோம். அது தான் படையல் பிறகு குலத்துக்கு பூஜை செய்து சாமி கும்பிட்டு அனைவருக்கும் விபூதி பொட்டு இட்டு முடிந்தவுடன் படையலை சாமிக்கு காட்டி பிறகு வரிசையாக வழங்க வேண்டும். இதில் முக்கியமாக வரிசை படி தான் வழங்க வேண்டும்.

1. பொங்கலை முதன் முதலில் மாட்டுக்கு தான் வழங்குவோம். அனைத்து மாடு சாப்பிட்டவுடன் தான் மற்றவர்களுக்கு. மாடு பொங்கல் சாப்பிடாது அதனால் அதன் வாயை வலுவாக திறந்து தினிக்க வேண்டும். அதன் பிறகு ருசி கண்டு சாப்பிட்டுவிடும்.

2. பட்டி காவல்காரன் : அடுத்த பொங்கல் நாயுக்கு வழங்கபடும். நாய் சாப்பிட்ட பிறகு தான் அடுத்த வரிசை.

3. பட்டிகாரன் : அடுத்த பொங்கல் பன்னையில் வேலை செய்பவனுக்கு வழங்கபடும். எங்கள் தோட்டத்தில் மாடுகளை பார்க்க தனி ஆள் கிடையாது என்பதால் தோடத்தில் வேலை செய்பவர்களுக்கு படையல் தரபடும்.

4. அடுத்து தோடத்து வேலை செய்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கபடும்.
5. அடுத்து விருந்தினர்களுக்கு
6. தோடத்து உரிமையாளர் வீட்டு பெண்களுக்கு
7. தோடத்து உரிமையாளர் வீட்டு ஆண்களுக்கு

இந்த வரிசையில் தான் பொங்கல் வழங்கபடும். பிறகு விசேசம் போல சாப்பாடு தயாராகி இருக்கும். முதலில் தோடத்தில் வேலை செய்பவர்களுக்கு விருந்து படைத்து அவர்களுக்கு பொங்கல் பரிசு தந்து அனுப்பி விட்டு. பிறகு விருந்தினர்களுடன் அமர்ந்து சாப்பிடுவோம்.

இதை ஏன் பதிக்கிறேன் என்றால், இன்னும் சில ஆண்டுகளில் தோட்ட வேலைக்கு சுத்தமாக ஆள் கிடைக்காமலும், வயதாகி கொண்டு இருப்பதாலும் அனைத்து மாடுகளையும் என் தாய் தந்தை விற்று விடுவார்கள். அதன் பின் எங்கள் வீட்டில் மாட்டு பொங்கல் நடைபெறாது என்று எனக்கு திட்டவட்டமாக தெரியும். இப்ப தோடத்தில் எந்த விவசாயமும் செய்ய முடிவதில்லை, வெறும் மாடு மேயும் அடப்பு காடுகள் மட்டுமே.
வருங்காலத்தில் பொங்கலை விவசாயிகள் தினம் என்று நாம் அனைவரும் சூப்பர் சிட்டியில் கேஸ் ஸ்டவில் வைத்து பிறகு டீவியில் பயிர்களை பார்த்து கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்

யவனிகா
02-02-2008, 03:17 PM
வாத்தியாரண்ணா...நீங்க பொங்கல் கொண்டாடறதை நிறுத்தும் முன்னர்...உங்க தோட்டத்துக்கு வந்து பாக்கணும்.
அடடா...இன்னும் ரசனையா வாழறீங்கண்ணா...
சரி மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நீங்க குளிச்சீங்களா...இல்ல மாடுகளுக்கு குளிப்பாட்டின திருப்த்தில மறந்துடீங்களா?
மாடு முகத்துக்கு மட்டும் டவல் பாத் குடுத்தா போதாதா...

நல்ல ரசனையான பதிப்புங்கன்னா...நீங்க இன்னும் நிறைய மாட்டுப் பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.

மயூ
02-02-2008, 03:48 PM
உங்க ஊரில மிருக ஆர்வலர்கள் இல்லீயோ???

நல்ல ஆவணப் பதிவு!!

சிவா.ஜி
03-02-2008, 03:44 AM
மிக அருமையான பதிவு வாத்தியார்.ஒவ்வொரு விவசாயிக்கும் கால்நடைகள் என்பது அவனுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டவை.அவற்றுக்கென ஒரு நாள்...மாட்டுப்பொங்கலாய் தமிழன் கொண்டாடும் திருநாள்.அதுவும் நீங்கள் ஆதங்கப்பட்டிருப்பதைப் போல வழக்கொழிந்து விடுமோ என்ற கவலைதான் தோன்றுகிறது.
மிக ரசனையாக மாட்டுப்பொங்கலைக் கொண்டாடி அதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி வாத்தியார்.வாழ்த்துகள்.

தங்கவேல்
03-02-2008, 11:17 PM
ஆவாரம் பூவு, கூலை பூவு, பிரண்டை, வேப்பிலை சேர்த்து அத்துடன் இண்டங்காய் இணைத்து நாரில் மாலை கட்டி மாடுகளுக்கு போடுவது கிடையாதா வாத்தியார். எங்க பக்கம் இந்த மாலை போட்டுத்தான் மாட்டு பொங்கலே வைப்பாங்க...