PDA

View Full Version : எங்கப்பன் குழிசிவா.ஜி
02-02-2008, 12:26 PM
தண்ணிய போட்டுக்கிட்டு அந்த பரதேசி ஏன் இப்டி நாறிக்கறான்?அப்பன்காரன் செத்து பொணமாக் கெடக்கறான்....இந்த நாதாரி இப்பிடி ஆடினு கீறானே.டே வடிவேலு அவனக் கொஞ்சம் ஒக்கார வெய்யிடா.

என்னாடா எவ்ளோ நேரமாகுது இன்னும் உங்க மாமன்காரன காணமே...வரிசை எடுத்துக்கினு வந்தாத்தான மத்த வேலையப் பாக்கணும்....
பெருசு ஒன்று அந்த துக்க வீட்டில் எல்லா பொறுப்புகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தார்.

சுமாராக 150 வீடுகளே இருக்கும் அந்த கிராமத்துக்கு அழகே அதை ஒட்டியிருக்கும் அந்த ஏரிதான்.படே குலாம் கான் ஏரி என்று அதை அழைப்பார்கள்.முன்னொரு காலத்தில் திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியாதலால்...நிறைய ஏரிகளுக்கு முஸ்லீம் பெயர்களே இருக்கும்.
அந்த ஏரிக்கரையில்தான் இறந்தவர்களை புதைப்பது வழக்கம்.அந்த இனத்தவர் இறந்தவர்களை எரிப்பதில்லை.இந்துக்களாக இருந்தாலும் புதைப்பதைதான் காலங்காலமாக செய்து கொண்டு வருகிறார்கள்.

இதோ இங்கே இறந்து கிடப்பவர் ஒரு முன்னாள் இராணுவவீரர்.இரண்டு மகன்கள்.வடிவேலு,வேல்முருகன்.அந்த வேல்முருகன்தான் அப்பன் செத்த துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்தான்.அந்த ஊரிலிருப்பவர்களின் பேச்சு வழக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.அப்பாவை டே யப்பா என்றும்,அண்ணனை டே யண்ணா என்றும்தான் அழைப்பார்கள்.பரம்பரையாக வந்த கொஞ்ச நிலத்தில் பாடுபட்டு வந்தவர்கள் இப்போதெல்லாம் அதை நிறுத்திவிட்டு கோழிப்பண்னைகளும்,காடைப் பண்னைகளும் வைத்து பொழப்பு நடத்திக்கொண்டுவருகிறார்கள்.மீதி ஆட்கள் பக்கத்திலிருக்கும் பேட்டைக்கு(டவுனுக்கு அவர்கள் பேட்டை என்றுதான் சொல்வார்கள்)கொளத்து வேலைக்குப் போவார்கள்.வீட்டிலேயே சாராயம் காய்ச்சி குடிக்கும் குடிமகன்கள்.மனைவியே பதமாய் சாராயம் காய்ச்சிக் கொடுப்பாள்.பதம் தவறிவிட்டால் புருஷன் காரன் அவளையே பதம் பார்ப்பான்.ஆனால் அவளும் திருப்பி அடிப்பாள் என்பதுதான் அந்த சனங்களில் இருக்கும் பெண்சுதந்திரம்.

இறந்தவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர்.அதில் இவர் நான்காவது.இன்னும் ஒருவர் மட்டுமே தற்போது உயிரோடிருப்பவர்.அவர் இப்போது இறந்தவரை விட மூத்தவர்.

அதோ தாய்மாமன் வரிசை எடுத்துக்கொண்டு வந்து விட்டார். தெருக்கோடியிலிருந்து தாரை தப்பட்டைகள் அடித்துக்கொண்டு பித்தளை தவலைகளில் தண்ணீர் சுமந்து கொண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.தாய்மாமனின் கோடித்துணி வந்தபிறகுதான் மற்ற எல்லா வேலைகளும் துரிதமாக நடக்கும்.இறந்தவரைக் குளிப்பாட்டி இடுகாட்டுக்கு தூக்கிச் செல்வதற்கு ஏற்பாடு நடந்தது.

பிணம் வந்து சேர்ந்ததும் குழிக்கு அருகில் பிணத்தை வைத்துவிட்டு உடலுக்கு குறுக்கே இரண்டு கயிறை நுழைத்து உடலை குழிக்குள் இறக்க முயற்சிக்கும்போதுதான் இறந்தவரின் அந்த உயிரோடிருக்கும் இன்னொரு அண்னனின் வாரிசு அருவாளைத் தூக்கி கொண்டு ஆவேசமாக வந்தான்.

டே நிறுத்துங்கடா.....எங்க பெரியாப்பனுங்க குழிக்கு பக்கத்துலதான் எங்கப்பனை பொதைக்கனும்.எங்கப்பந்தான் மூத்தவன்.உங்கப்பனை பொதைக்கறதுக்கு ஒரு குழிக்கு எடம் விட்டு பக்கத்துல பொதைங்கடா....இல்லன்னா நடக்கறதே வேற?
என்று தன் உயிரோடு இருக்கும் அப்பாவின் சீனியாரிட்டிக்காக தனையன் அசிங்கமாய் திட்டிக்கொண்டே அவனுடைய பங்காளிகளை வெட்ட வந்தான்.பெரிசுகள் குறுக்கே புகுந்து...அவனை ஓரமாய் ஒதுக்கினார்கள்.
டே நாயே....இப்ப எதுக்குடா இப்படி ஆட்டம் போடற.உங்கப்பன் சாகும்போது பாத்துக்கலாம்...குழி வெட்டியாச்சு...இப்ப அதுல போடக்கூடாதுன்னா அதை மூடிட்டு பக்கத்துல வெட்ட ரொம்ப நேரமாகுமேடா.
யோவ் செவத்தான வரச் சொல்லுயா...அவன் தான் இவன அடக்க லாயக்கு.

யோவ் எந்த செவத்தான் வந்து சொன்னாலும் நான் கேக்கமாட்டேன்.எங்க பெரியப்பனுங்களுக்கு அடுத்த குழி எங்கப்பனுக்குத் தான். அதுல எவனையும் போடறதுக்கு நான் விடமாட்டேன்.மூடுங்கடா அந்த குழியை...

டே....டே...கிருஸ்ணா...அடங்குடா....எந்த நேரத்துல என்னா பேசறதுன்னு வெவஸ்தையில்லை....செத்துப்போனது உங்க சித்தப்பன்தானடா....இப்ப வந்து இப்படி அநியாயம் பண்றியே...மாமா...அவனை வூட்டாண்ட கூட்டிக்கினு போ...

யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை கிருஷ்னன்.அவனுடைய அப்பாவே வந்து அவனிடம் கெஞ்சி கேட்டதற்கு அவரையே எட்டி உதைத்துவிட்டான்.இதைப் பார்த்த வேல்முருகன் பாய்ந்து அவனை அடித்து கீழே தள்ளினான்.கிருஷ்னன் அடிபட்டதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய தம்பி வேல் முருகனைத் தாக்க...வடிவேலுவும் தன் பங்குக்கு களத்தில் குதித்து விட்டான்.சற்று நேரத்தில் அந்த இடமே போர்க்களமாகிவிட்டது.பெருசுகள் அந்த முரடர்களை சமாளிக்க முடியாமல் தினறிவிட்டார்கள்.இரண்டு சகோதர்களின் தாக்குதலுக்குள்ளான கிருஷ்ணன் ஆவேசமாகி தடுத்த அத்தனை பேரையும் தள்ளிவிட்டு..அருவாளை எடுத்து வடிவேலுவை வெட்ட ஓங்கி இறக்கினான்.
பதறிப்போய் அவனைத் தடுக்க ஓடிவந்த அவனுடைய அப்பா கால் இடறி வடிவேலுவின் மேல் விழ..அருவாள் அவருடைய கழுத்தில் ஆழமாக இறங்கியது.

சத்தம் போடக்கூட முடியாமல் பிணமாய் சரிந்த பெரியவர் அவருக்காக உரிமை கொண்டாடிய குழியில் தானாகவே விழுந்தார்.

ஆதவா
02-02-2008, 12:39 PM
அடப்பாவமே! இப்படியும் நடக்குமா?

அண்ணா கதை சொன்னவிதத்தில் கடைசி பாராவை சீக்கிரமே முடித்து விட்டீர்களோ?

மற்றபடி இதை படிக்கும் போது எனக்கு ஒரு ஞாபகம்.... எங்கள் உறவினர் வீட்டில் நடந்த முக்கியமான ஒரு இழவுக்கு இந்தமாதிரிதான் அடித்துக் கொண்டார்கள்... ஆனால் பேச்சால்தான் அடித்தார்கள்... அரிவாளைத் தூக்கும் அளவுக்கு வன்மை இல்லை....

கதை = ஒரு ஞாபகக் குறிப்பு எனக்கு...
பாராட்டுகள்.

சாலைஜெயராமன்
02-02-2008, 12:39 PM
கால காலமாக நிலவி வரும் மூடப்பழக்கம் இன்னும் தொடர்வதுதான் நிதர்சனமான உண்மை. இடத்துக்கு இடம் வேறுபடும் சம்பிரதாயங்களின் அபத்தங்களை அவ்வப்போது பார்க்கிறோம். என்னதான் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் நன்மையைக் கருதி வைக்கப்பட்ட கிராமத்து சடங்குகள் தனிமனித ஈகோவினால் பல நல்ல உறவுகள் கொச்சைப்படுத்தப் படுவது தற்போதும் நடந்துதான் வருகிறது.

கதைபோலச் சொல்லப்பட்டாலும் இன்னும் கிராமங்களில் நடத்தப்படும் பல்வேறு சமூக அவலங்களின் ஒரு சிறிய ஓரங்க நாடகத்தை ஒரு சமுதாயப் பழக்க்தின் பின்னணியை கண்முன் கொண்டுவந்ததில் திரு சிவா வென்றிருக்கிறார். உரையாடலில் சிறப்பான உள்ளுர் நடை தெரிய வைத்திருப்பது நயமுடையது. பாராட்டுக்கள் திரு. சிவா

சிவா.ஜி
02-02-2008, 12:49 PM
அண்ணா கதை சொன்னவிதத்தில் கடைசி பாராவை சீக்கிரமே முடித்து விட்டீர்களோ?

ஆம் ஆதவா. அதற்கு மேல் அதை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை.
ஆனா நிஜத்திலும் இப்படி அடித்துக்கொள்ளும் சனங்கள் இருக்கிறார்கள்.

நன்றி ஆதவா.

சிவா.ஜி
02-02-2008, 12:53 PM
என்னதான் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் நன்மையைக் கருதி வைக்கப்பட்ட கிராமத்து சடங்குகள் தனிமனித ஈகோவினால் பல நல்ல உறவுகள் கொச்சைப்படுத்தப் படுவது தற்போதும் நடந்துதான் வருகிறது.

உரையாடலில் சிறப்பான உள்ளுர் நடை தெரிய வைத்திருப்பது நயமுடையது.

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ஜெயராமன்.தனி மனித ஈகோவினால் நல்ல உறவுகள் கொச்சைப் படுத்தப்படுகிறது.

இப்படி நடப்பதை எங்கள் கிராமத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்.உப்பு பெறாத விஷயத்துக்கு அடித்துக்கொண்டு கும்பலாக வெட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போய்வருவதை சர்வசாதரணமாக அந்த மக்கள் செய்து வருகிறார்கள்.அவர்களின் பேச்சு வழக்கைத்தான் முடிந்தவரை கொடுக்க நினைத்தேன்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.(ஒரே ஒரு வேண்டுகோள்.இனி திரு.சிவா வேண்டாமே...வெறும் சிவா போதுமே)

செல்வா
02-02-2008, 07:57 PM
சிவாண்ணா கை குடுங்க.... கலக்குறீங்க போங்க.. நானும் சிறுகதை எழுதனும்னு தான் நெனக்கிறன் ஆனா வரமாட்டிங்குது. வீண் பிடிவாதம் .... அப்படிங்குறது மனிதர்கள் மத்தில பரவலா காணப்படுகிற குணம். அதனால்தான் பொதுவாக எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையைப் பற்றி போதித்திருக்கும். சூழ்நிலையைப் பற்றி யோசியாமல் கொண்டதே கோலம் கண்டதே காட்சி என்றிருக்கும் நிலை. இவர்களில் பலர் இத்தகைய விபரீதங்களை பார்த்தபின் அடங்கிவிடுவர். சிலரோ... அவன் ஆரம்பத்திலேயே... குழிய மாத்திருந்தான்னா இப்புடி ஒரு நெலம வந்திருக்குமானு அப்பவும் கொம்புசீவிகிட்டு இருப்பாங்க...
நல்ல பதிவு சிவாண்ணா

சிவா.ஜி
03-02-2008, 03:30 AM
வீண் பிடிவாதம் .... அப்படிங்குறது மனிதர்கள் மத்தில பரவலா காணப்படுகிற குணம். அதனால்தான் பொதுவாக எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையைப் பற்றி போதித்திருக்கும். சூழ்நிலையைப் பற்றி யோசியாமல் கொண்டதே கோலம் கண்டதே காட்சி என்றிருக்கும் நிலை. இவர்களில் பலர் இத்தகைய விபரீதங்களை பார்த்தபின் அடங்கிவிடுவர். சிலரோ... அவன் ஆரம்பத்திலேயே... குழிய மாத்திருந்தான்னா இப்புடி ஒரு நெலம வந்திருக்குமானு அப்பவும் கொம்புசீவிகிட்டு இருப்பாங்க...
நல்ல பதிவு சிவாண்ணா

மிக மிக சத்தியமான வார்த்தை.வீண் பிடிவாதங்கள் எந்தளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதனை விடாமல் சுமந்து திரியும் சிலரின் போக்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்றே இல்லையோ என நினைக்க வைக்கிறது.நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி செல்வா.

யவனிகா
03-02-2008, 05:19 AM
எதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கதை. பிணத்தை போட்டு வைத்துக் கொண்டு சண்டையிடும் உயிர்ச்சவங்கள்...எதில் தான் உரிமை நிலைநாட்டுவது என்று இல்லையா...ஒரு சிறிய சம்பவத்தை நல்ல கதையாக கொடுத்து உள்ளீர்கள் அண்ணா...வாழ்த்துக்கள்.

அனுராகவன்
03-02-2008, 06:10 AM
ம்ம் நடப்புநடைமுறையில் நடக்கும்
அன்றாட வாழ்க்கையே சிறப்பாக கொஞ்சமும் பிசிறுயின்றி
தந்தற்கு என் வாழ்த்துக்கள்..
எவ்வளவு காலம்தான் இப்படி நடக்குமோ..
ம்ம் என் நன்றி

அனுராகவன்
03-02-2008, 06:12 AM
எதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கவிதை.

கவிதையா..
எங்கு இருக்கிறீகள்..
கவனம் வேண்டும் நண்பியே..
ம்ம் என் நன்றி

சிவா.ஜி
03-02-2008, 09:06 AM
எதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கவிதை. பிணத்தை போட்டு வைத்துக் கொண்டு சண்டையிடும் உயிர்ச்சவங்கள்...எதில் தான் உரிமை நிலைநாட்டுவது என்று இல்லையா...ஒரு சிறிய சம்பவத்தை நல்ல கதையாக கொடுத்து உள்ளீர்கள் அண்ணா...வாழ்த்துக்கள்.
சரியாச் சொன்னீங்க யவனிகா.உயிர் சவங்கள்தான் இவர்கள்.உரிமையை நிலைநாட்டி சாதித்தது என்ன?உயிரோடு இருக்கும் வரைதான் ஆயிரம் பகை,சண்டை எல்லாம்....உயிர் போன பிறகும் அதிலும் உரிமை நாட்ட நினைத்து இழந்தது இன்னுமொரு உயிர்தானே? நன்றி தங்கையே.

சிவா.ஜி
03-02-2008, 09:07 AM
ம்ம் நடப்புநடைமுறையில் நடக்கும்
அன்றாட வாழ்க்கையே சிறப்பாக கொஞ்சமும் பிசிறுயின்றி
தந்தற்கு என் வாழ்த்துக்கள்..

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அனு.

இளசு
03-02-2008, 06:30 PM
அன்பு சிவா

ஒரு வாழ்க்கை யாதர்த்த விள்ளலை எள்ளல் நடையில் அழகாய்த் தந்தமைக்கு பாராட்டுகள்..

யார் குழிக்கு முன்னுரிமை கேட்டு வந்தானோ
அவரையே எட்டி உதைக்கும்போதே ---
மனிதமன அகங்கார விசித்திர அவதாரம் விளங்கிவிட்டது..

எட்டி உதைத்தபோதே அவனப்பன் செத்துவிட்டான்..
வெட்டிச் சாய்த்தது இரண்டாவது மரணம் மட்டுமே!

மரியாதை அளிக்கவாய் தோற்றங்காட்டி..
தரங்கெட்டு மரியாதை அழிக்கும்
மடையர்கள் மலிந்த காலத்தின் ஒரு சிறு விள்ளல்..


மீண்டும் என் பாராட்டுகள் சிவா!

மதி
04-02-2008, 02:08 AM
இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்...? என்ன செய்ய..?
யதார்த்தமான நடையில் கிராமிய மணம் சூழ கதை.. ரொம்ப நல்லாருக்கு சிவாண்ணா.. என்னிக்கு தான் இப்படி வெட்டிட்டு சாவறது நிக்குமோ?

aren
04-02-2008, 02:35 AM
இப்படி அடித்துக்கொண்டு அண்ணனுக்கு கிடைக்கவேண்டியதை கொடுத்துவிட்டார்கள்.

நல்ல கதைக்கரு. இன்னும் கொஞ்சம் மெதுவாக எழுதியிருக்கலாம்.

சிவா.ஜி
04-02-2008, 03:27 AM
யார் குழிக்கு முன்னுரிமை கேட்டு வந்தானோ
அவரையே எட்டி உதைக்கும்போதே ---
மனிதமன அகங்கார விசித்திர அவதாரம் விளங்கிவிட்டது..

எட்டி உதைத்தபோதே அவனப்பன் செத்துவிட்டான்..
வெட்டிச் சாய்த்தது இரண்டாவது மரணம் மட்டுமே!

மரியாதை அளிக்கவாய் தோற்றங்காட்டி..
தரங்கெட்டு மரியாதை அழிக்கும்
மடையர்கள் மலிந்த காலத்தின் ஒரு சிறு விள்ளல்..

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.யாருக்காக முன்னுரிமை கொண்டாடினானோ அவரையே எட்டி உதைத்தபோதே அப்பன் செத்துவிட்டான்.மிகச் சரி இளசு.இதற்குப் பின் அவன் என்ன உணர்ந்து என்ன பயன்?ஒன்றுமில்லா விஷயத்திற்காக விலையில்லா உயிர் போவது சரியல்ல என்பதை என்றுதான் உணர்ந்து திருந்துவார்களோ?
மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
04-02-2008, 03:28 AM
இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்...? என்ன செய்ய..?
யதார்த்தமான நடையில் கிராமிய மணம் சூழ கதை.. ரொம்ப நல்லாருக்கு சிவாண்ணா.. என்னிக்கு தான் இப்படி வெட்டிட்டு சாவறது நிக்குமோ?

ஆமாம் மதி....இப்படியும் சில மனிதர்கள்.இவர்களை எந்த பிரிவில் சேர்ப்பது...எதை சாதிக்க இந்த ஆவேசம்....மனம் வலிக்கிறது.
மிக்க நன்றி மதி.

சிவா.ஜி
04-02-2008, 03:30 AM
இப்படி அடித்துக்கொண்டு அண்ணனுக்கு கிடைக்கவேண்டியதை கொடுத்துவிட்டார்கள்.

நல்ல கதைக்கரு. இன்னும் கொஞ்சம் மெதுவாக எழுதியிருக்கலாம்.

சரிதான் ஆரென்...இன்னும் கொஞ்சம் மெதுவாகவே எழுதியிருக்கலாம்....பட்டென்று முடிந்துவிட்டதாய்த் தான் எனக்கும் தோன்றுகிறது.நன்றி ஆரென்.

அமரன்
21-02-2008, 06:00 PM
வெறிதான் எல்லாத்துக்கும் காரணம். ஜெயிக்கணும் என்னும் வெறி.. மது+மாது தரும் வெறி.. இப்படிப்பலப்பல வெறிகள் ஆட்டம்போடும் உலகில் அதிவீரிய விசம் போன்றது அடம் என்னும் வெறி.

வீம்புக்கு வீரம் பேசுபவனுக்கு வேம்பப்பட்டைக் கசாயமாக அறிவுரைகள். புறக்குட்டத்து நீரால் புறமாவது நனையும். இங்கே..

பார்த்தவன் அகம் ஈரமானது வெற்றி.

விலகி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் உசிதமான உபாயமோ என்று உபயமளிக்கும் நிகழ்வுகளில் ஒன்று கதையாக.. நல்லவேளை குழிக்கு சொந்தக்காரம் வீழ்ந்தான். விலக்க நினைத்தவர்கள் விலகிநின்றதால் ஆசை நிறைவேறியது...(??????)

நற்கவிதை வரம் நல்கிய சிவாவுக்கு நன்றியும் பாராட்டும்..

சிவா.ஜி
22-02-2008, 04:30 AM
மிக உண்மையான கருத்து.அடம்....தான் நினாஇத்ததை அது தவறே ஆனாலும் சாதித்துவிட வேண்டுமென்ற பிடிவாதம்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது.வாழ்க்கையின் பல கட்டங்களில் விட்டுக்கொடுத்தலும்,உண்மைநிலை புரிதலும் இல்லா விட்டால் அநர்த்தங்கள்தான் விளையும்.

நல்லதொரு ஆழ்ந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி அமரன்.

சுகந்தப்ரீதன்
24-02-2008, 01:32 PM
பக்கத்துல இருந்து பார்த்ததுபோல் கதையை எழுதியிருக்கிறீர்கள்...ஆதவன் சொன்னதுபோல் கடைசியில் கொஞ்சம் வேகம் கூடிவிட்டது அண்ணா..!!

அப்புறம் எங்க கிராமத்து பக்கம் ஆணவம் புடிச்சி அலையறவங்கள பாத்து ஜனங்க, "என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில எல்லோருக்கும் மிஞ்சறது ஆறடி நிலம்தான்ன்னு" மனித வாழ்க்கையை யாதார்த்தமா சொல்லிட்டு போவாங்க.. ஆனா அதுக்கும்கூட இப்படியொரு போட்டியும் பொறாமையும் இருக்கும்ன்னு இப்பதான்னா தெரியுது...!

வாழ்த்துக்கள்..தொடருங்கள் அண்ணா..!

சிவா.ஜி
25-02-2008, 03:27 AM
இப்படி டக்குன்னு முடிக்கறதும் சிறுகதையில ஒரு உத்தி...நான் நிறைய இந்த மாதிரி படிச்சிருக்கேன்..ஆரம்பம் முதல் விலாவரியாக எழுதி விட்டு வாசகர் எதிர்பார்க்காதைப் போல டக்கென்று முடிப்பதும் சில கதைகளில் உண்டு.
அல்ப விஷயத்துக்கு வெட்டு குத்துன்னு போற மக்கள் எங்க கிராமத்துப் பக்கம் நிறைய இருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்ததால் விளைந்த கதை இது.மிக்க நன்றி சுகந்த்.

lolluvathiyar
26-02-2008, 04:39 AM
அருமையான சிறுகதை சிவா ஜி மிக அற்புதமாக எழுதி இருகிறீர்கள். சில இடங்களில் அடிகடி நடக்கும் விசயங்கள் இது. வாய் சன்டையில் ஆரம்பித்து எச்சு பேச்சு பேசியே கைகலப்புக்கு போய் விடுகிறது. இதை தான் அந்த காலத்தில் சிறுவர் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்று சொல்வார்கள்.


அந்த இனத்தவர் இறந்தவர்களை எரிப்பதில்லை.இந்துக்களாக இருந்தாலும் புதைப்பதைதான் காலங்காலமாக செய்து கொண்டு வருகிறார்கள்.

ஹி ந்துகளில் புதைக்கும் பழக்கம் பல் குடும்பங்களில் இருக்கிறது. சுடும் பழக்கம் தற்பொழுது தான் அதிகரித்து வருகிறது.
காரனம் ஜனதொகை பெருக்கம் சுடுகாட்டில் இடபற்றாகுரை. மேலும் இப்ப ரியல் எஸ்டேர் தொழில் பரவி வருவதால் சொந்த இடத்தில் பிதைப்பதை கூட தவிர்த்து வருகின்றனர். காரனம் குகை இருக்கும் காட்டுக்கும் விலை இறங்கி விடுகிறதல்லவா.மனைவியே பதமாய் சாராயம் காய்ச்சிக் கொடுப்பாள்.பதம் தவறிவிட்டால் புருஷன் காரன் அவளையே பதம் பார்ப்பான்.ஆனால் அவளும் திருப்பி அடிப்பாள் என்பதுதான் அந்த சனங்களில் இருக்கும் பெண்சுதந்திரம்.அருமையான கிராமம், எனக்கு மிகவும் பிடித்த கிராமம். இறுதி காலத்தில் இப்படி ஒரு கிராமத்தில் வாழ வேன்டும். இது தான் நிஜ வாழ்கை. இப்ப இருக்கும் போலி வாழ்கை அடிமைதனத்தை நாகரீகம் என்ற பெயரில் மறைத்து விடுகிறது. (கொலைகளுக்கு சாராயம் காரனம் அல்ல)ஆனால் பேச்சால்தான் அடித்தார்கள்... அரிவாளைத் தூக்கும் அளவுக்கு வன்மை இல்லை....

ஆதவா நம்ம ஊர் பக்கம் எல்லாம் அறிவாள் தூக்கும் பழக்கம் இல்லை. ஆனால் தென் தமிழ் நாட்டில் இருக்கும் நிரைய கிராமங்களில் அந்த பழக்கம் சகஜமாக உண்டு. அதுவும் அறிவாள் தூக்குவதற்க்கு பேரு போன சாதிகள் உன்டு.

சிவா.ஜி
26-02-2008, 05:32 AM
அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி வாத்தியார்.பின்னூட்டத்திலும் பல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.என்னுடைய மூன்றாவது மாமா இறந்த பிறகு அவர்கள் தோட்டத்திலேயே புதைத்து சமாதி கட்டினார்கள்.அது சாலையோரத்திலிருந்ததால்...இடத்துக்கு மதிப்பு கூடியதும்...இரவோடிரவாக சமாதியை இடித்து விட்டு...வெளியூர் ஆளுக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள்.
கமர்ஷியலாகிப் போன வாழ்க்கைமுறையில்...இதெல்லாம் சகஜமோ...?

ஜெயாஸ்தா
26-02-2008, 07:02 AM
நல்ல கதைக்களம் மற்றும் கரு சிவா அண்ணா. ஆனால் விருந்து சாப்பிட வந்த என்னை அவசர சமையல் போட்டு ஏமாற்றியது போலுள்ளது. முயற்சித்தால் இன்னும் நிதானமாகவும், சிறப்பாகவும் தந்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. (உங்களின் வாலி கதையைப் படித்து, அதன் சிறப்பை கண்டு வியந்ததால் ஒருவேளை அதனுடன் இதை ஒப்பிட்டு இப்படி கருத்து எனக்கு தோன்றுகிறதோ என்றும் யோசிக்கிறேன்.)
ஆதவா நம்ம ஊர் பக்கம் எல்லாம் அறிவாள் தூக்கும் பழக்கம் இல்லை. ஆனால் தென் தமிழ் நாட்டில் இருக்கும் நிரைய கிராமங்களில் அந்த பழக்கம் சகஜமாக உண்டு. அதுவும் அறிவாள் தூக்குவதற்க்கு பேரு போன சாதிகள் உன்டு.

வாத்தியாரே... காலம் மாறினால் கோலமும் மாறும் என்பது போல இப்போது தென் தமிழகமும் நிறையவே மாறிவிட்டது. அரிவாள் தூக்குவதற்கு பேர் போன சாதியினரெல்லாம் இப்போது படித்து நல்ல வேலைக்கு போய் நல்ல பண்புள்ளவர்களாகி மிக பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நேரம் கிடைத்தால் அப்படியே நம்மூர் பக்கம் வந்து போங்க...!

சிவா.ஜி
26-02-2008, 07:16 AM
நன்றி ஜெயாஸ்தா...அனைவரும் சொல்லும்போது எனக்கும் அதேதான் தோன்றுகிறது....இன்னும் விரிவாய் கொடுத்திருக்கலாமோ என்று...மீண்டும் முயன்று பார்க்கட்டுமா?

மனோஜ்
26-02-2008, 08:06 AM
இன்னும் இந்தமாதிரியான மனிதபிமானம் என்ற ஒன்றை மறந்து கிராமத்தில் வாழ்துதான் வருகிறார்கள்
கதை அதை அழகாய் சித்தரிக்கிறது நன்றி சிவா அவர்கலே

samuthraselvam
18-04-2009, 07:10 AM
பொதுவாக கிராமங்களில் இப்படி எங்கேயாவது நடக்கும்.... அதை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தக்கதை...

ஆனால் இப்படி குழிக்கூட சண்டை போடுவதால் தானோ எரித்துவிடுகிறார்கள்....?

க்டைசியில் கல்லறைக்குக் கூட போட்டியா? எப்படியோ அவன் அப்பன் குழி அவனால் அப்போதே கிடைத்து விட்டது... இது தான் மகன் தந்தைக்காற்றும் செயலோ... ?

வாழ்த்துக்கள் அண்ணா..

தாமரை
18-04-2009, 07:44 AM
வெட்டின குழி வேஸ்டா போகாம வெட்டிப் போட்டு காரியத்தை கச்சிதமா முடிச்சி.. தன் குழியைத்தானே வெட்டிக்கிறவங்க நிறைய பேர் உண்டு, சாப்பிட அழைக்கறதில முறை மாறிப்போச்சின்னு ஜென்மப் பகையானவர்கள் இருக்காங்க.

இப்படி வரிசைக்கிரமமா புதைக்கிறவங்க தங்கள் சொந்த நிலத்தில்தான் புதைப்பாங்க. ஊர் பொது இடத்தில் கேட்கமுடியாது,,, ஊர்க்காரங்க அறுவா தூக்கிருவாங்க...

பொதுச்சுடுகாட்டில உரிய பணம் கட்டி சமாதி கட்டலாம். (இப்ப பெரிய ஊர்களில் அதைகூட அனுமதிப்பதில்லை. இடப்பற்றாக்குறை.) மத்தபடி இந்த இடத்தில்தான் புதைப்பேன் அப்படின்னு அடம் புடிக்க முடியாது.

நகரங்களில் இடுகாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம்தான் ஒதுக்கி இருப்பார்கள். புதைச்சு ஆறுமாசத்தில் உடம்பு மக்கி மண்ணுடன் கலந்துவிடும்.. எலும்புகள் மாத்திரம் மிஞ்சலாம். இந்தமண்ணைத் தோண்டி உரமா வித்திட்டு புது மண் போட்டு நிரவிடுவாங்க. அதனால இரண்டு வருஷத்துக்குள்ள நம்ம ஆள் படுத்த குழியில் வேற ஆள் படுத்திருப்பான்.

செத்தாலும் கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கறவங்க இன்னும் கொஞ்சம் ஓவரா போயிடறதுதான் இது. இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்யுது..

அடுத்த குழி தோண்டின உடனே அப்பனுக்கு பக்கத்தில என்னைத்தான் புதைக்கணும்னு அடம் புடிக்கலியே?

சிவா.ஜி
18-04-2009, 09:36 AM
ஆனால் இப்படி குழிக்கூட சண்டை போடுவதால் தானோ எரித்துவிடுகிறார்கள்....?

கடைசியில் கல்லறைக்குக் கூட போட்டியா? எப்படியோ அவன் அப்பன் குழி அவனால் அப்போதே கிடைத்து விட்டது... இது தான் மகன் தந்தைக்காற்றும் செயலோ... ?
வாழ்த்துக்கள் அண்ணா..

அட்டகாசமான பஞ்ச். நச்சுன்னு சொல்லியிருக்கம்மா. என்னுடைய தாய்மாமன் இறந்தபோது கிட்டத்தட்ட இதைப்போன்றே தகராறு நடந்தது. வெட்டுக்குத்து அளவுக்குப் போனாலும், யாருக்கும் வெட்டுவிழவில்லை.

கிராமத்துக்காரர்களில் சிலர் இப்படித்தான் தன் உரிமை என்று எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்பார்கள்.

நன்றி லீலும்மா.

சிவா.ஜி
18-04-2009, 09:40 AM
இப்படி வரிசைக்கிரமமா புதைக்கிறவங்க தங்கள் சொந்த நிலத்தில்தான் புதைப்பாங்க. ஊர் பொது இடத்தில் கேட்கமுடியாது,,, ஊர்க்காரங்க அறுவா தூக்கிருவாங்க...

பொதுச்சுடுகாட்டில உரிய பணம் கட்டி சமாதி கட்டலாம். (இப்ப பெரிய ஊர்களில் அதைகூட அனுமதிப்பதில்லை. இடப்பற்றாக்குறை.) மத்தபடி இந்த இடத்தில்தான் புதைப்பேன் அப்படின்னு அடம் புடிக்க முடியாது.

நகரங்களில் இடுகாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம்தான் ஒதுக்கி இருப்பார்கள். புதைச்சு ஆறுமாசத்தில் உடம்பு மக்கி மண்ணுடன் கலந்துவிடும்.. எலும்புகள் மாத்திரம் மிஞ்சலாம். இந்தமண்ணைத் தோண்டி உரமா வித்திட்டு புது மண் போட்டு நிரவிடுவாங்க. அதனால இரண்டு வருஷத்துக்குள்ள நம்ம ஆள் படுத்த குழியில் வேற ஆள் படுத்திருப்பான்.

செத்தாலும் கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கறவங்க இன்னும் கொஞ்சம் ஓவரா போயிடறதுதான் இது. இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்யுது..

அடுத்த குழி தோண்டின உடனே அப்பனுக்கு பக்கத்தில என்னைத்தான் புதைக்கணும்னு அடம் புடிக்கலியே?

ரொம்ப கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க தாமரை. ஆமா...இப்படி வரிசைக் கிரமமா புதைக்கறவங்க...பொது இடத்துல புதைக்கமுடியாது.

கடைசி வரிகள் “நச்”.

ரொம்ப நன்றி தாமரை.