PDA

View Full Version : மன்றமெனும் தோட்டமும் புது மலர்களும்...



rambal
01-07-2003, 05:49 PM
மன்றமெனும் தோட்டமும் புது மலர்களும்...

கவிதைகள் பக்கம் கொஞ்சம் தழைத்தோங்கியிருக்கிறது. தோட்டத்திற்கு வந்த புதுச் செடிகள்
பூத்து புதுவித மணம் வீசி மன்றம் மணக்கிறது.
கடந்த சில நாட்களாக புதியவர்களுக்காக இளசு அண்ணன் அவர்கள் ஒதுங்கிய பிறகு..
அதே பாணியை நானும் கடை பிடிக்க..
சமீப காலமாக பூவும் கண்காணிப்பாளர் ஆன பிறகு எழுதாமல் போக..
இதே போல நண்பனும் எழுதாமல் போக..
இப்படியாக கவிதைகள் எனும் நீரோடை சலசலத்துப் பாயாமல் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.
இப்படி இருந்த காலகட்டத்தில்
சுமா அவர்கள் விளையாட்டாய் செய்யப் போக மன்றத்திற்கு
கரவை பரணி வந்தார்.
நான் எப்போதோ சொன்னதை வைத்துக் கொண்டு என் நண்பன்
சுஜாதாவும் வந்தான்.
இப்படியாக கவிஞர்கள் வர ஆரம்பிக்க.. வழக்கம் போல் கவிதைகள் எனும் நீரோடை இப்போது
சலசலத்து ஓடுகிறது.

இப்படியாக வந்த சமீப கால மன்றக்கவிஞர்களைப் பற்றிய அலசல்தான் இந்தப் பதிப்பு..

புதிதாக வந்த கவிஞர்களில் பொதுவான சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் காதல் என்பது இரண்டாம் பட்சமாகி
தனிநபர் தேடல்.. களம் மாறிய புதிய சிந்தனை.. சொல்லும் விதம்.. பிரயோகிக்கும் வார்த்தைகள்..
இப்படி எல்லாமே வித்யாசமான அணுகுமுறை கொண்ட கவிதைகள்...

அப்படி என்னைக் கவர்ந்த மன்றத்தின் புதிய கவிஞர்கள் பட்டியலில்
நான் இங்கு அலசப் போவது
மௌரியன்2000
நாவல்ட்டி
குருவிகள்
G.சினேகா (கணேஸ்)
சுஜாதா

இவர்களைப் பற்றித்தான். விடுபட்டவர்கள் மன்னிக்கவும்..

முதலில் நான் ரசித்த சில வரிகள்..


எத்தனை முறை வழித்துப்போட்டாலும்
அப்போதும் குறையாத அட்சயப் பாத்திர நினைவுகள் ....

ஏன்? எதற்கு? எப்படி? எனும் கவிதையில் மௌரியன்2000..


இழவுவீட்டீலும் எடுத்துரைக்கப்பட்ட
உன் பேரழகு
இறந்துப்போன காதலின் இழப்பை
இன்னும் தீவிரபடுத்தியது!

இளைதாக முள் மரம் கொள்க எனும் கவிதையில் நாவல்ட்டி..


கொத்தித் தின்ன
ஒற்றைக் காலில்
கொக்காய்
தவமிருக்கிறது
காதல்..

என் காதல் எனும் கவிதையில் சுஜாதா...


முதலில் மௌர்யனில் இருந்து ஆரம்பிக்கிறேன்..
உள்ளே வெளியே.. எனும் கவிதை மூலம் பிரவேசம் ஆனார். அந்தக் கவிதையிலேயே தனது முத்திரயை பதித்து
தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்தவர் இவர்.

இது கொஞ்சம் பூடகமான கவிதை.
இரு பொருளை நினைக்கவைக்கும் ஒரு படிமக் கவிதை.
என் பார்வையில் தெரிந்தது வேறு மாதிரி. அது இங்கு வேண்டாம்.
ஏனெனில், அனைவரும் வேறுவிதமாக பார்த்த கவிதை என் கண்களுக்கு மட்டும்
வேறுவிதமாக தெரிந்தது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை.
உண்மை பொருள் மன்ற நண்பர்கள் சொன்னதா? இல்லை நான் நினைப்பது மாதிரியா?
இது பற்றி மௌர்யனிடம் இருந்து விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

சரி.. மன்ற நண்பர்கள் பார்த்தவிதத்திலேயே இந்தக் கவிதையை அலசுகிறேன். அதாவது சுய தேடல்...


யாரோ இருட்டில்
டார்ச் அடித்தபோது
என்னை எனக்குத்தெரியவில்லை
தொலைந்தது எது?
கனவே நினைவாய்
இருளே வெளிச்சமாய்
தேடுதலில் இன்னும் இந்த புகைவண்டி
...........

இந்த வரிகள்தான் இந்தக் கவிதையின் உயிர். டார்ச் அடித்து தேடியது சாக்ரட்டீஸ் என்று நினைக்கிறேன். இவர் தன்னைத் தேடியிருக்கிறார். இருளே வெளிச்சமாய்.. இந்த வரியும் கடைசி வரிகளும்தான் என்னை வேறு பார்வை பார்க்க வைத்த வரிகள்.
தேடுதலில் இன்னும் இந்த புகைவண்டி.. இந்த வரிகள் சொல்ல விழைவது பயணம்.. ஓய்வில்லா பயணம்.. குடும்ப பார பெட்டிகள் இணைந்த இயந்திரம்.. இப்படி ஒரு வரியில்தான் கவிஞர் தன்னை நிரூபிக்கிறார்.
இது உள்ளே வெளியே..யில் மௌர்யனின் முத்திரை..

அடுத்து ஏன்?எதற்கு? எப்படி? இந்தக்கவிதையின் ஆரம்பத்திலேயே அற்புதமான உருவகங்கள்.

எத்தனை முறை வழித்துப்போட்டாலும்
அப்போதும் குறையாத அட்சயப் பாத்திர நினைவுகள் ....
யெளவனம் உன்னை சூல்கொண்டபோது
வந்தியத்தேவன்களின் படையெடுப்பு.

இந்த நான்கு வரிகளில் முதல் இரண்டு வரிகள் தத்துவம் சார்ந்தவை. அடுத்த இரண்டு வரிகள் அருமையான உருவகம்.
எதைச் சொன்னாலும் தத்துவம்.. மன்னிக்கவும்.. இவர் உபயோகப்படுத்துவது நவீன சித்தாந்த தத்துவம். இது இல்லாமல்
இவர் எதையும் எழுதுவதில்லை. கதையோ கவிதையோ..

இவரது உண்மையான சுயதேடல் கவிதை என்றால் அது <span style='color:blue'> நான் தொலைந்தபோது"யாரோ பார்க்கிறார்கள்" </span>
எனும் கவிதைதான்.

வெளிப்படும் எண்ணங்கள்
சிலவற்றிற்கு சத்தியமாக
தகப்பன் நானில்லை.
யாரோ விதைக்கிறார்கள்
நான் அறுக்கிறேன்.
நினைவுகளின்
இடமாற்றுத் தோற்றப்பிழையில்
இசையைக் காண்பதும்
ஓவியம் கேட்பதும்
தினசரி வியாபாரமாய்


இதில் இவர் தேடியிருக்கும் எல்லைகள் எல்லைகள் தாண்டியவை. வெளிப்படும் எண்ணங்கள் சிலவற்றிற்கு சத்தியமாக தகப்பன் நானில்லை..
இந்த உண்மையை அவ்வளவு எளிதாக யாரும் ஒத்துக் கொள்வதில்லை..
யார் யாரோ என் மனமெனும் மண்ணில் விதைத்துவிட்ட விதைகளை வளர்ந்த பின்பு நான் மட்டும் அறுக்கிறேன்.

....................
..........
எல்லா ஞானிகளுக்கும்
ஒரு கடந்த காலம்
எல்லா பாவிகளுக்கும்
ஒரு எதிர்காலம்
எனக்கு மட்டும் ஏன்
இந்த நிகழ்காலம்?


இந்தப் பகுதியில்தான் இவரது சிறப்பம்சம் தெரிகிறது. ஞானிகளுக்கு கடந்த காலம்.. பாவிகள் பலியை எதிர்காலம் மீது போடுவார்கள்.
ஆனால், இவர் மட்டும் நிகழ்கால சூன்யத்தில் சிக்கித் தவிப்பதாக.. அருமை மௌர்யன் அவர்களே..
அவ்வப்போது வந்தாலும் தரமான படைப்புகள் தரும் மௌர்யனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. தொடரட்டும் உங்கள் தேடல்...

மௌர்யனுக்கு அடுத்தபடியாக என்னை பாதித்தது நாவல்ட்டிதான்.
இவரது கவிதைகளில் ஏதோ ஒரு கணம்... ஒரு காலத்தை பதிந்து.. எப்படி சொல்வது..
புகைப்படங்கள் என்பது என்றோ இறந்த போன ஒரு கணத்தின் பதிவு.. இது போன்ற கணங்களை இவரது கவிதைகளில் அனுபவித்தேன்.
இதற்கு போட்டோரியலிசம் என்று பெயர்.. இவர் இந்த கட்டுப்பாட்டிற்குள் வருவாரா என்றெல்லாம் எனக்கு தெரியாது.

உதிரிப்பூக்கள்.. ஒருதலைக் காதலை இவ்வளவு வித்யாசமாக யாரும் சொன்னதில்லை..
கவிதையின் அழகியல் கெடாமல் அதே சமயம் உணர்ச்சிக் குவியலாகி புலம்பாமல்.. இந்தக் கவிதை
சொல்ல வந்ததை அழகாய் சொல்லி.. அதற்கு இவர் கொடுத்திருக்கும் உருவகம்.. அந்த இறுதிவரிகள்..
இந்த ஒரு கவிதையிலேயே இவரை எடை போட்டு விடலாம்.


உன் கிண்கிணித்தோழிகளோடு
நீ மின்னி வரும்போது,
அந்த பொன்னிநதிக்கரை பக்கம்போய்
மனம் பேசத்துடிக்கின்றது..
.......

கோயில்தீபமே!
நின் ஆராதனைக்காலங்களில் மட்டுமல்லாமல்
அடைமழைக்காலங்களிலும்-உன்னை
அடைக்காப்பவன் நான்!

.........

அழுதுவடிக்கின்றது...
அறையினுள் தனியாய்.
மெழுகுவர்த்தி!

இப்படி ஒரு தலைக் காதலை.. காதலியை கோயில் தீபமாகவும் தன்னை அடைகாப்பவனாகவும்..
என்னென்னவோ சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தனது காதல் மெழுகுவர்த்தியாய் தனியாய் கரைவதை..
அற்புத படைப்பு இது..

இளைதாக முள்மரம் கொள்க! இந்தக் கவிதையும் சேராத காதல் பற்றியதுதான்.
ஆனால் சொல்லியிருக்கும் விதம்..

என்
மனதில் முளைத்த முள்செடியை
இளையதாக இருக்கும்போதே
கொன்றிருக்கலாம் நீ !

இழவுவீட்டீலும் எடுத்துரைக்கப்பட்ட
உன் பேரழகு
இறந்துப்போன காதலின் இழப்பை
இன்னும் தீவிரபடுத்தியது!

பசுமர ஆணியாய் இருக்கும் போதே காதலை கொன்றிருக்கலாம். காதலை முள்செடி என்று உருவகப்படுத்தி..
இப்படியான கவிதையை

புன்னகை செய்தபடி போகின்றது
நிகழ்காலம்.

என்று அதன் அழகியல் கெடாமல் முடித்து.. ஒரு பரவச நிலை..

கடைசிப்பேருந்து! இதை இவரது ஆளுமை நிறைந்த கவிதை என்றே சொல்வேன்.
அப்படி ஒரு தொடக்கம். எதையோ சொல்லி ஆரம்பித்து எதிர்பாரா தருணத்தில் சட்டென்று வேறு ஒரு
கருத்தை சொல்லி முடிகிறது.

எல்லோருக்குமான
பேருந்துகள்
வந்துசென்ற வண்ணமிருக்க..

நான்மட்டும் கடைசிப்பேருந்துவரை
காத்திருக்க வேண்டும்.

இப்படி கடைசிப் பேருந்திற்காக காத்திருக்கும் சராசரி பயணியாய் ஆரம்பிக்கும் கவிதை..


காத்திருப்பின் உச்சத்தில்
கடைகோடி சென்று
கழித்துவருகையில்...

என்னை கடந்துபோயிருக்கும்
காத்திருக்க விரும்பாத
காலத்தைப்போல,

கடைசிப்பேருந்தும்!

இப்படி யாரும் எதிர்பாரா திருப்பத்துடன் தத்துவ விசாரணைக்குட்படுத்தப்பட்டு முடிகிறது. இந்த கவிதை முடியும் இடத்தில் இருந்து
நம் சிந்தனை ஆரம்பமாகிறது. இதுதான் இந்தக் கவிதையின் சிறப்பு..
பாராட்டுக்கள் நாவல்ட்டி அவர்களே..
இன்னும் நிறைய எழுதுங்கள் நாவல்ட்டி அவர்களே..

குருவிகள் எனும் நண்பர். (வயது 89) இவர் படம் பொருள் என்று படம் போட்டு அதற்கு கவித எழுதி அசத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இவரது அமைதி எனும் கவிதையில் மனிதாபிமானத்திற்காக.. அழிக்கப்பட்ட அமைதிக்காக.. குரல் கொடுக்கிறார்.


மனிதன்
மாக்களை வென்று
மரங்களாய் உணர்வுடன்
வாழ்வது வேண்டுமா?
பெருமை கொள்
வாழ்வென்று பிதற்றி
தன்னைத்தானே அழிக்கும்
மனிதா
.......
........

நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்து அழிவு எனும் பர்த்தீனியமும் வளர்ந்து வருவதற்காக கவலைப்படும் இவரிடம் இருந்து
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.. பாராட்டுக்கள் குருவிகள் அவர்களே...

G.சினேகா எனும் பெண் பெயருடன் உலா வரும் நண்பர் கணேஸ் அவர்களின் கவிதைகள் கொஞ்சம் லௌகீகம் சார்ந்தது.
குழந்தை - தாய் - தந்தை எனும் கவிதையில் இவர் சொல்லியிருக்கும் கருத்து நச்.

அழுதது குழந்தை
அரட்டினார் உணரா தந்தை
அமுதூட்டினார் உணர்ந்த தாய்
அருந்தியது குழந்தை
நிறைந்தது வயிறு
சிரித்தது தந்தை நோக்கி
வலித்தது தந்தை மனது

அப்பனுக்கு
அமைதி மொழியில்
அஹிம்சை வழியில்
பாடம் சொன்னது மழலை.


இந்தக் கவிதைக்கு அஹிம்சை என்று தலைப்பிட்டிருக்கலாம்.
இவரது விருந்து எனும் கவிதை ஏகத்திற்கு சிந்திக்க வைத்த கவிதை.
இது ஹைக்கூ அல்ல. எட்கூ அல்ல..
இது ஒரு புது வடிவம்.
அவ்வளவே..
ஆனால் சொல்லியிருப்பது இரு காட்சிகள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள்.
முதல் காட்சி குழந்தை பிறப்பு. இரண்டாவது காட்சி ஆடு மரணம்.
எப்படி சம்பந்தம் இருக்க முடியும்?
அழகாய் முடிச்சு போட்டிருக்கிறார் கவிஞர்.

பிள்ளை
பிறந்த
சந்தோஷத்தை
கொண்டாட
புது ஆட்டுக்குட்டி
விருந்தானது.

இன்னும் தொடருங்கள் G.சினேகா அவர்களே.. உங்களுக்கென்று மன்றத்தில் நிரந்தர இடம் காத்துக் கொண்டிருக்கிறது.

இறுதியாக என் நண்பன் சுஜாதா. பள்ளி காலத்தில் இருந்தே தெரியும்.
இவனது கவிதைகள் கொஞ்சம் மாறுபட்டது. ஆனால், கொஞ்சம் காதல் வாடை அடிக்கும்.
காதலாயணம் எனும் கவிதையில் சீதை வந்து மீட்க காத்திருக்கும் ராமன் என்று கவிதை பயணத்தை
ஆரம்பித்தார்.

வனாந்தரத்தில்
அரக்கவார்த்தைகள்
சூழ காவல் வைக்கப்பட்டு
இருக்கிறேன்..

சூர்ப்பனகை காதல்
பலமுறை
கெஞ்சிப் பார்த்தும்
ஒத்துக் கொள்ளவில்லை..

ராமன் அசோகவனத்தில் சூர்ப்பனகையால் கடத்தப்பட்டு காவல் வைக்கப்பட்டிருக்க் என்ற மாறுபட்ட கருத்தோடு ஆரம்பிக்கிறது கவிதை..

சீதை காதல் வந்து
மீட்கும் வரை
இந்த ராமனுக்கு
வனவாசம்தான்..


என் காதல்.. எனும் கவிதையில் பரிணமித்து தன்னை கவிஞன் என்று அடையாளக் காட்டிக் கொண்டார்.

கொத்தித் தின்ன
ஒற்றைக் காலில்
கொக்காய்
தவமிருக்கிறது
காதல்..

சிக்கித் தவிக்க
விருப்பமில்லாமல்
தப்பி ஓடுகிற மீனாய்
மனது...
[color=blue]
காதலை கொக்காகவும் தப்பி ஓடும் மனதை மீனாகவும் விரித்துக் கொண்டு ஆரம்பிக்கும் கவிதை...
[color=blue]
மீனிடம்
சிக்கித் தவிக்கிறது
தவறவிட்ட
என் காதல்...


கடைசியாக காதல் மனமெனும் மீனின் உள்ளே புக இப்போதும் சிக்கித் தவிக்கிறது காதல்..
வித்யாசமான சிந்தனை கொண்ட காதல் கவிதை..

மனிதம் என்பது? எனும் கவிதையில் மனிதம் தேடி தானும் ஒரு மனிதாபிமானி என்று பறைசாற்றியிருக்கிறார் கவிஞர்.

மாண்டு போன வருணபகவான்.. என்று காலத்திற்கேற்ற சிந்தனையாக மழை பெய்யாததற்கான காரணங்கள்
பற்றி சொல்லியுள்ளார்.


அடிவயிற்றில்
விழுந்த தேவையில்லா
சதைகளை
அறுத்து எடுப்பதாய்
அள்ளப்படுகின்றன
ஆற்று மணல்..
..........
.........

துக்கம் விசாரிக்க வந்த
வருண பகவானோ
தங்க இடமில்லாமல்
தவித்து மாண்டான்...

மழை பெய்யாத காரணங்களை எதார்த்த உலகின் அவசர தேவைகள் எப்படி அழித்தன என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார்.

இவரது காற்று கவிதையும் ஒரு தலை காதலனின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
இவரும் அதை உணர்ச்சிபிரவாகமாக சொல்லி புலம்பாமல்..
அதே சமயம் காற்றையும் நேரடியாக அப்படியே சொல்லாமல் படிமமாக
கவிதையெங்கும் ஓட விட்டு கடைசி வரிகளில் சொல்லாமல் சொல்லி..



எல்லா அறைக்கதவுகளும்
மூடியிருக்க..
உன் வாசம் சுமந்து
வருவதால்தான்
ஜன்னலை மட்டும்
சாத்துவதில்லை..

என் உத்தரவு
இல்லாமலேயே
என் அறையெங்கும்
வியாபிக்கிறது...
என்னிடம்
சொல்லாமலேயே
திரும்பிச் செல்கிறது...

இந்தக் காற்றை காணவாவது
ஒருமுறை
இங்கு வந்து விட்டுப் போ...

இப்படி சொல்ல வரும் காற்றையும் கடைசி வரி வரை சொல்லாமல் விட்டு விட்டு....
ஆனால், கடைசி வரை காதலியை பற்றி சொல்லாமல்.. இப்படியாக
எதைப்பற்றியும் திட்டவட்டமாக சொல்லாமலேயே..

நான் ஏன் கவிதை எழுதவில்லை? எனும் கவிதையில் கவிதை எழுதாததை கவிதையாக சொல்கிறார்.
இந்தக் கவிதையில் ஹைக்கூவை புதுமையாக உருவகப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.

குறுக்கப்பட்ட
போன்சாய் போன்று எழுதுவது
பாவமென்பதால்...

இப்படியாக நீட்டி கவிதை எழுதாததை அழகாய் சொல்லியுள்ளார்.

தொடருங்கள் சுஜாதா அவர்களே.. உங்களுக்கு மன்றத்தில் ஒரு இடம் காத்திருக்கிறது.

இப்படியாக புதிதாக பதியன் போட்ட செடிகள் மலர்ந்து மன்றம் எங்கும் வாசம் பரப்பிக் கொண்டிருக்கின்றன...
தொடரட்டும் புதிய செடிகளில் மலரும் பூக்கள்..

suma
02-07-2003, 12:17 AM
புது கவிஞர் பற்றிய அலசல் அருமையான பாராட்டு கடிதம் .
ராம்பால்

noveltv
02-07-2003, 01:22 PM
நன்றிகள் பல! நண்பர் ராம் பாலுக்கு....
உங்கள் விமர்சனம் எங்களைப்போன்ற புதியவர்களை
ஊக்குவிக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது (நான் சுடர்விளக்கா என்ன?). அதுவே ஒருகவிதையின் அழகைகொண்டுள்ளது. ஏன் நீங்கள் எழுதுவதை குறைத்துக்கொண்டீர்கள்? உங்கள் கவி வெள்ளத்தில் நீந்த காத்திருக்கும் என்னைப்
போன்றோரை ஏமாற்றிவிடாதீர்கள்....! :-)
என்றும் மாறாத எதிர்பார்ப்புடன்....
..... புதுமை

G.Sneha
02-07-2003, 03:35 PM
நன்றி திரு ராம்பால் அவர்களே.

உங்களைப் போன்றவர்களின் விமர்சனமும் , பாராட்டும் என்னைப் போன்ற புதியவர்களுக்கு உற்சாகமளிக்கும் ஊட்டப்பொருள்.

உங்களுக்கு நன்றி தெரிவிக்க, கவிஞர் வைரமுத்துவின் "இது போதும் எனக்கு" கவிதையின் சில வரிகளை கடன் வாங்கிக் கொள்கிறேன்.

"...................
...................
அதிராத சிரிப்பு
அனிச்சப் பேச்சு
உற்சாகப் பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதை மேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எது வேண்டும் எனக்கு"

உங்கள் பாராட்டு இந்த ஒரு சொட்டுக் கண்ணீருக்குச் சமம். நன்றி.

படைப்புகளுக்கு விமர்சனமும் பாராட்டும் எழுதும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திற்கும் நன்றி.

கவிஞர் வைரமுத்து அவர்களின் மிகச் சிறந்த கவிதை இது. மனைவியிடம் (காதலியிடம்) கவிஞரின் எதிர்பார்ப்பை பற்றியது. மிக விரைவில் இதை "இலக்கியங்கள், புத்தகங்கள்" பகுதியில் பதிக்க நினைத்திருக்கிறேன்.

சுஜாதா
02-07-2003, 05:58 PM
என்னைப் பற்றி குறிப்பிட்டு..
என் கவிதைகளை சிலாகித்ததற்கு..
நன்றி ராம்...

நீயும் கவிதை எழுதவேண்டும் என்பதே என் கருத்து..

இளசு
03-07-2003, 04:29 PM
ராமின் இப்பதிவை பாராட்ட வார்த்தையில்லை...

என் போன்ற காட்டாறுகள்
எப்போதோ பொங்கும்...
மீத நாளெல்லாம் வறட்சியே...

உன் போன்ற ஜீவநதிகள்
மன்றத்தில் சில உண்டு...
என்றும் பாயட்டும்....

புதுநதிகளோடு இணைந்து
மன்றத்தில் கவிதாப்பிரவாகம்
என்றென்றும் பொங்கட்டும்...

என் வாழ்த்துகள் அத்துணை கவிஞர்களுக்கும்...
தந்தவர்கள் வாழ்க..
மற்றவர்கள் தருக...
எல்லாருமே வளர்க...

rambal
04-07-2003, 04:27 PM
இளசு அண்ணன் அவர்களுக்கு.. நன்றி.. என் மேல் கொண்ட அக்கறைக்கு..
புதியவர்கள் எழுதும் கவிதைகள் அருமையாக இருக்கிறது. அவர்கள் எழுதட்டும்.
நண்பனின் கவிதைகளை எதிர்பார்க்கிறேன். அவர் வந்தாலும் எதுவும் பதியாமல் செல்கிறார்.
அவர் வரும்வரை.. சில நாட்களுக்கு பார்வையாளன் நாற்காலியில் அமர்ந்து ரசிக்கலாம் என்று இருக்கிறேன்.
அதன் பின் வழக்கம் போல்...

Narathar
05-07-2003, 07:02 AM
புதியவர்களின் கவிகளில் ஒரு டொக்டரேட்டே பன்னி
முடித்திருக்கின்றார் ராம்பால்!

வாழ்த்துக்கள் ராம்பாலுக்கு மட்டுமல்ல ராம்பாலை எழுதவைத்தவர்களுக்கும்

kuruvikall
05-07-2003, 07:54 AM
வரிக்குள் கவி என்பது சுலபம்
வரிக்குள் பொருள் உணர்வதென்பது
வளமான சிந்தனைக்கு அடையாளம்!
வரியை வடிப்பவனை விட
வரியில் வடிவு காண்பவனே மேலோன்!
எமது அரிவரிகளில்
வடிவுகண்ட ராம் மற்றும்
அனைத்து கவியுள்ளங்களுக்கும்
பாராட்டும் நன்றிகளும்!

rambal
07-04-2004, 04:43 PM
பார்வையாளன் நாற்காலியில் அமர்ந்து
ரசித்த காலத்தில் இன்றோடு முடிவடைகிறது..
மன்றத்தில் புதிதாய் பூத்த மலர்களையும்..
என் கவிதைகளையும் எதிர்பாருங்கள்..

இக்பால்
07-04-2004, 04:49 PM
நல்லமுடிவு. பணி தொடரட்டும். நன்றியுடன் வாழ்த்துக்கள். :)
இந்த தலைப்பை இப்பொழுது படித்தாலும் ஒத்துப் போவது அருமை.

-அன்புடன் இக்பால்.

kavitha
08-04-2004, 10:09 AM
இக்பால் அண்ணா எங்கே தேடி பிடித்தீர்கள் இப்பக்கத்தை.. இத்தனை நாள் காணாது போனேனே!
நல்ல நல்ல கவிதைகளுக்கு அருமையான விமர்சனங்களும் தந்திருக்கிறார் ராம்பால் அவர்கள்!