PDA

View Full Version : இசங்கள்..



ஆதவா
02-02-2008, 11:14 AM
எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
முட்டி மோதி உடையும்
கருத்துச் செறிவே!

பிரவேசிக்கிற கணத்தில்
கைக்கெட்டா காதலாய்
கனிந்து நிற்கிறாய்

எடுத்துண்ண இயலா ஊணை
கண்களில் காட்டி
உதட்டை ஈரமாக்குகிறாய்
நாவால்.

மதிலேறி உட்புகுந்து
மனதடைய வேண்டுமெனில்
மனிதம் ஒதுக்கும் நின்னை
மாண்புமிகு கருத்தே!

தேடிப் புணரவைத்தல்
கலைஞனுக்கழகல்ல.
கடைவிரித்துக் காத்திரு
அன்றி
பத்தினி வேடமிட்டு
பகலில் உறங்காதே!

rocky
02-02-2008, 12:06 PM
அன்புள்ள தோழன் ஆதவனுக்கு,

நேற்றே உன்னிடம் சொன்னேன், இந்தக் கவிதையை மன்றத்தில் பதித்தால் முதல் அடி என்னுடையதாகத் தான் இருக்குமென்று, இருந்தும் நீ கேட்காமல் பதித்துவிட்டாய், வாங்கிக்கொள். இந்தக் கவிதையை மட்டும் பார்த்தால் ஒரு நல்ல கவிதைதான் ஒத்துக் கொள்கிறேன், கருவும் நான் ஏற்றுக்கொள்கிறேன், என் கருத்தும் அதுவேதான், ஆனால் இந்தக் கருத்தைக் கூற உனக்கு உரிமையில்லை(மன்றமென்றதால் உரிமை என்று மறியாதையாகக் கூறியிருக்கிறேன்). அர்த்தம் புரியாமல் கவிதை எழுதுவோரைப் பற்றி நீ எப்படி விமர்சிக்கலாம் நீயே அந்த கட்சிதானே, 7000 பதிப்பைப் போட்டுவிட்டால் உன்னை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணமா? இதோ நான் ஆரம்பித்து விட்டேன், மற்றவர்களும் இனி தொடர்வார்கள், (இந்தக் கொடுமைய கேக்க ஆளிள்லையா? யாராவது கேளுங்கப்பா, முடிஞ்சா எல்லாரும் கேளுங்க).

ஆதவா
02-02-2008, 12:26 PM
அன்புள்ள தோழன் ஆதவனுக்கு,

நேற்றே உன்னிடம் சொன்னேன், இந்தக் கவிதையை மன்றத்தில் பதித்தால் முதல் அடி என்னுடையதாகத் தான் இருக்குமென்று, இருந்தும் நீ கேட்காமல் பதித்துவிட்டாய், வாங்கிக்கொள். இந்தக் கவிதையை மட்டும் பார்த்தால் ஒரு நல்ல கவிதைதான் ஒத்துக் கொள்கிறேன், கருவும் நான் ஏற்றுக்கொள்கிறேன், என் கருத்தும் அதுவேதான், ஆனால் இந்தக் கருத்தைக் கூற உனக்கு உரிமையில்லை(மன்றமென்றதால் உரிமை என்று மறியாதையாகக் கூறியிருக்கிறேன்). அர்த்தம் புரியாமல் கவிதை எழுதுவோரைப் பற்றி நீ எப்படி விமர்சிக்கலாம் நீயே அந்த கட்சிதானே, 7000 பதிப்பைப் போட்டுவிட்டால் உன்னை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணமா? இதோ நான் ஆரம்பித்து விட்டேன், மற்றவர்களும் இனி தொடர்வார்கள், (இந்தக் கொடுமைய கேக்க ஆளிள்லையா? யாராவது கேளுங்கப்பா, முடிஞ்சா எல்லாரும் கேளுங்க).

மிக்க நன்றி ராக்கி... முதன் முதலாக எனது கவிதைக்கு உனது பின்னூட்டம்..........

இங்கே யாரும் யாருக்கும் இணையில்லை... ஏழாயிரம் என்பது வெறும் பதிவுகளின் எண்ணிக்கைதான்.. பின்னோக்கிப் பார்த்தால் தெரியும் அங்கே என்ன சாதித்துவிட்டேன் என்று...

இப்படித்தான் பல புரியாத கவிதைகள்.... புரியாத பல.....

எனக்குப் புரிந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது புரியாத கவிதைதான் கொடுக்கவேண்டும் என்பதற்காகவோ நான் இடவில்லை... பிறகு?

நான் இந்தக் கவிதையில் எதையும் மறைத்து எழுதவில்லை. நேரடியாக... ஆனால் ஆழமாக... எனக்குத் தெரிந்த ஆழம் இதுதான். அதற்கு மேலும் எழுதுபவர்கள் உண்டு....

சிலரை இங்கே காணுகிறேன். எளிமை + ஆழம்... எனக்கு பிடிபடுவதில்லை........................ அதற்காக கவிதை எழுதாமலும் இருக்க முடிவதில்லை...

உனக்கே தெரியும்.. எனது கணிணியில் நான் எழுதி வைத்திருக்கும் கவிதைகள் எத்தனை என்று... ஒரு நாளைக்கு ஒன்று கொடுத்தால் கூட மூன்று மாதங்கள் ஓட்டலாம்.. ஏன் கொடுக்க முடிவதில்லை..?? நீ சொன்ன அதே காரணம்.. இசங்களை நோக்கி நானும் போகிறேனோ?

அதன் விளைவுதான் கதைகள் எழுதுவதன் காரணம்... எனக்கு சும்மா உட்கார்ந்திருந்தால் பிடிக்காது என்பது உனக்குத் தெரியும்.. குறைந்தபட்சம் புத்தகம் இல்லாமல் கூட.... சரிதான் புத்தகங்களைப் படித்தால் அவர்கள் நம்மை விட அதிகமாக இசங்களை இழைக்கிறார்கள்...

கவிதை புரியவில்லை என்பது ஏன்? தயவு செய்து ஆழமாக படியுங்கள்... பின்னும் புரியவில்லை எனில் அது கவிதையே அல்ல என்று சொல்லிவிட்டுப் போங்கள்.... ஏனெனில் அதுதான் உண்மை...

நன்றி...

அனுராகவன்
03-02-2008, 09:27 AM
ம்ம் நன்றி ஆதவா!!
ராக்கி இது தேவையா!!
ம்ம் நல்ல கவி நண்பரே!!!

இளசு
03-02-2008, 07:00 PM
ஹாஹ்ஹா!

இதுபற்றி நானும் ராம்பாலும் நண்பனும் பூவும் பல சமயம் உரசி உறவாடி இருக்கிறோம்..

தனக்கு விளங்கிவிட்ட கருவை உள்வைத்துப் புனைந்து
பிறர் தன்னாலே விளங்கிச் சொன்னால் கவிக்குப் பரவசம் பன்மடங்கு..

வாசித்தவர் எவருக்கும் புரியாமல் மௌனமாய் எல்லாரும் ஒதுங்கினால்
கவிக்கு இரு பாதை : மேதையின் இசம்; வணிகத் தோல்வி..

இரண்டில் இதுதான் மேல் என என்னால் சொல்ல இயலவில்லை ஆதவா..

எளிமைக்கு இடுகுறியாய் இருப்பவரும் எப்போதோ இசத்தில் நுழைவதும்
இசத்தின் தலைவனாய் இருப்பவர் எளிய கதைபோல் கவிதை தருவதும்..

இரண்டுமே இலக்கிய உலகுக்குத் தேவை..

ஒன்று - பரவலாய் பலரையும் கவிதை உலகுக்கு அழைத்துவர
இன்னொன்று - உள்ளே வந்தவரில் சிலரின் உட்பசிக்கு விசேஷ விருந்து தர..


ஹிண்டுவின் குறுக்கெழுத்தில் எளிது, கடினம் என இருவகை இருப்பது போல...

செல்வா
03-02-2008, 07:27 PM
படித்தவர்கள்
புரிந்தவர்கள்
விரித்துச் சொன்னால்....
அறிந்திடுவேன் அடியேனும்
ஆதவன் சொல்ல வருவது என்னவென்று....

பூமகள்
03-02-2008, 07:31 PM
அண்ணலே..!!
சுடுக்கோ-ஐத் தானே சொல்றீங்க..??

இளசு
03-02-2008, 07:34 PM
Crossword ( Easy and Cryptic clues) -இல் என இரண்டு வகை உண்டு... சுடுக்கோ-விலும் இருக்கலாம் பூ!

பூமகள்
03-02-2008, 07:39 PM
கிராஸ்வேர்ட் - எனக்கு விழி புரியா மொழி..!
சுடுக்கோ - எண்கள் வட்டமிடும் கண்களில்..!

சுடுக்கோவில் மூவகை இளசு அண்ணா.

கடினம், மிதம், எளிது..!

முத்துக்குளிப்போர் பொறுத்து விளையாட்டு மாறும்.. நாட்கள் தோறும்..!

விளக்கியமைக்கு மகிழ்ச்சி மற்றும் அன்பான நன்றிகள் அண்ணலே..!

ஓவியன்
04-02-2008, 12:48 PM
தப்பில்லை ஆதவா, கவிதைகளில் இரண்டு வகைகளுமே தப்பில்லை ஆதவா...

இசையில் மெல்லிசையை இரசிக்கும் நாம், இன்னோர் இடத்தில் ஆர்ப்பாட்டமான இசையையும் இரசிக்கின்றோம் தானே...

ஒரு கலைஞனின் புரிதலை இரசிகன் நூற்றுக்கு நூறு வீதம் உள்வாங்குவதென்பது கடினமானது. ஏனென்றால் ஒரு கலைஞனின் படைப்புக்களைத் தீர்மானிப்பதில் அவன் சார்ந்து நிற்கும் பின்புலமே முக்கிய பங்காற்றுகிறது. அந்த பின்புலத்தின் தன்மையை எல்லா இரசிகனாலும் இலகுவில் அடைய முடிவதில்லை....

அதன் காரணமாகவே சரியான புரிதல் சாத்தியமாவதில்லை, புரிதல் கிட்டவில்லையெ என படைப்பாளிகள் மனம் நொந்து படைப்புக்களை நிறுத்துவதும் தப்பே....

ஒரு காலத்தில் பிக்காஷோ வரைந்து தள்ளிய நவீன ஓவியங்களை அன்று ஓவியமாகவே கருத மறுத்த உலகம் இன்று அவரை நவீன ஓவியங்களின் பிதாமகனாக தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது....

அதாவது அன்று புரிய சிக்கலானது, இன்று புரிகிறது...
அது படைப்பாளியின் தப்புமில்லை...
படைப்புக்களைப் பார்ப்போரின் தப்புமில்லை....!!
மாறாக படைப்புக்களை நோக்குவோரின் பின்புலமே தீர்மானிக்கிறது...

rocky
04-02-2008, 02:16 PM
அன்புள்ள மன்றத்தோழர் செல்வா அவர்களுக்கு,

இந்தக் கவிதையின் அர்த்தத்தைக் கேட்டிருந்தீர்கள், அதை கூறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,


எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
முட்டி மோதி உடையும்
கருத்துச் செறிவே!
கவிதையின் கருத்து எண்ணத்தில் முலுமையாக கிடைக்காமல் இதுவோ அதுவோ என்றிருக்கும் நிலை,

பிரவேசிக்கிற கணத்தில்
கைக்கெட்டா காதலாய்
கனிந்து நிற்கிறாய்

கண்னால் கவிதையைப் பார்த்தாலும் அதன் அர்த்தம் கைக்கெட்டாத காதல் போல் இருக்கிறது,

எடுத்துண்ண இயலா ஊணை
கண்களில் காட்டி
உதட்டை ஈரமாக்குகிறாய்
நாவால்.
ஏதோ ஒரு கருத்துள்ள கவிதை கண்களில் பட்டாலும் அதன் பொருள் தெரியாமல் அந்தக் கவிதையை சுவைக்க முடியாமலிருப்பது,

மதிலேறி உட்புகுந்து
மனதடைய வேண்டுமெனில்
மனிதம் ஒதுக்கும் நின்னை
மாண்புமிகு கருத்தே!

மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கருத்தை அடைய வேண்டுமென்றால் மனிதர்கள் அந்தக் கவிதையை ஒதுக்கி விடுவார்கள் என்பதே,

தேடிப் புணரவைத்தல்
கலைஞனுக்கழகல்ல.
கடைவிரித்துக் காத்திரு
அன்றி
பத்தினி வேடமிட்டு
பகலில் உறங்காதே

ஒரு கவிதையின் கருத்தை தேடிக் கண்டுபிடித்துத்தான் தெரிந்து கொள்வதானால் அப்படிக் கவிதையெழுதுவது கவிஞனுக்கு அழகல்ல, அனைவருக்கும் தெரியும் படி கடைவிரித்துக் காட்டவேண்டும், அதைவிடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற பத்தினிக்கொள்கை போல் எழுதியவனுக்கு மட்டுமே புரியுமானால் அது கவிதையல்ல என்பதே இதன் பொருள்.
(என்னபா சரியா).

ஆதவா
05-02-2008, 10:44 AM
ம்ம் நன்றி ஆதவா!!
ராக்கி இது தேவையா!!
ம்ம் நல்ல கவி நண்பரே!!!

மிக்க நன்றி அனு அக்கா...:)

ஆதவா
05-02-2008, 10:49 AM
ஹாஹ்ஹா!

இதுபற்றி நானும் ராம்பாலும் நண்பனும் பூவும் பல சமயம் உரசி உறவாடி இருக்கிறோம்..

தனக்கு விளங்கிவிட்ட கருவை உள்வைத்துப் புனைந்து
பிறர் தன்னாலே விளங்கிச் சொன்னால் கவிக்குப் பரவசம் பன்மடங்கு..

வாசித்தவர் எவருக்கும் புரியாமல் மௌனமாய் எல்லாரும் ஒதுங்கினால்
கவிக்கு இரு பாதை : மேதையின் இசம்; வணிகத் தோல்வி..

இரண்டில் இதுதான் மேல் என என்னால் சொல்ல இயலவில்லை ஆதவா..

எளிமைக்கு இடுகுறியாய் இருப்பவரும் எப்போதோ இசத்தில் நுழைவதும்
இசத்தின் தலைவனாய் இருப்பவர் எளிய கதைபோல் கவிதை தருவதும்..

இரண்டுமே இலக்கிய உலகுக்குத் தேவை..

ஒன்று - பரவலாய் பலரையும் கவிதை உலகுக்கு அழைத்துவர
இன்னொன்று - உள்ளே வந்தவரில் சிலரின் உட்பசிக்கு விசேஷ விருந்து தர..


ஹிண்டுவின் குறுக்கெழுத்தில் எளிது, கடினம் என இருவகை இருப்பது போல...

நன்றி அண்ணா.. ஆனால் வார்த்தை அடக்கலில் எளிமை கிழிந்து இசங்கள் புகுவனவோ என்ற அச்சம் மேலிடுகிறது. எனக்கு ஏற்பட்டதும் அதுவே.

இசங்கள் படித்திருக்கிறேன். என்னவென்றே புரியாமல்.. நானாக ஒரு அர்த்தப்படுத்தியுமிருக்கிறேன். ஆனால் எனக்கு வாராது அவை.. நல்ல கருவை உள்ளமர்த்தி கடுந்தேனைச் சுற்றி ஒழுகவிட்ட குடமாகத்தான் இருக்கின்றன என் படைப்புகள்.. சிலருக்கு காட்டுத்தேன் நேரே பழமாக வாயில் லொபக்'.

ஆதவா
05-02-2008, 10:59 AM
படித்தவர்கள்
புரிந்தவர்கள்
விரித்துச் சொன்னால்....
அறிந்திடுவேன் அடியேனும்
ஆதவன் சொல்ல வருவது என்னவென்று....

நன்றி செல்வா அவர்களே!!

நண்பர் ராக்கி இதைப்பற்றிய அவர் கருத்தைக் கொடுத்திருக்கிறார்... பெரும்பாலும் அவர் கவிதையினை அவரே விளக்கம் தரும் அவலம் ஏற்படுதல் நன்றன்று.. அது எனக்கு வாய்த்திருக்கிறது.. உங்களுக்காக எனது விரிவான விளக்கம் இதோ!!
----------------------------------------------------------
இசங்கள் என்பது அவ்வளவு எளிதில் புரியாத கரு அல்லது கவிதை..

எண்ணத்தை உறுப்பாக்கியிருக்கிறேன் அதன் சுவற்றில் மோதி உடையும் செறிவு நிறைந்த கருத்தே!! - (முட்டி என்பது தேவையில்லாதது.. ) இசங்களைப் படிக்கும்போது நம் எண்ணத்தில் இறங்க மறுக்கும். அதனால் அது எண்ணத்தோடு போரிட்டு உடைந்துபோகிறதாகக் குறித்திருக்கிறேன்.

அது உருவாகும் அல்லது உலாவும் காலத்தில் கைகளுக்கு எட்டாத காதலாக இருக்கிறது - காதல் என்பது ஒரு இன்பம். அவ்வின்பம் கிட்டாவிடில்??? இசங்களும் ஒரு இன்பக்கருத்துகள் தாம்.. அவை கிட்டாமல் இருக்கிறது...

சாப்பாடைக் கண்களில் காட்டி உதட்டை ஈரமாக்குகிறாய் நாக்கினால் - இசங்களைப் படிக்கும்போது நமக்குத் தெரிகிறது அது நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை என்று.. ஆனால் அதுதான் இறங்க மறுக்கிறதே!! ஆதலால் சாப்பாடு கண்களுக்குத் தெரிந்தும் சாப்பிட முடியாத அவலம்..

இசங்களின் மனதை அதாவது கவிதையின் சரியான கருத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில்.. மதிலேறி உட்புகுந்து - ரொம்ப கஷ்டப்பட்டு சுவர் தாண்டிதான் உள்ளே செல்லவேண்டுமென்றால் இந்த மனிதம் ஒதுக்கும்...

தேடித்தேடி கருவைப் பிடிக்கவைத்தல் கவிஞனுக்கு அழகு அல்ல. அதனால் எப்போதும் கடைவிரித்துத் திறந்தவண்ணம் இரு... எழுதியவர் மட்டுமே தெரிந்துகொள்ளும் வண்ணம் அதாவது ஒருவருக்கு மட்டுமே சொந்தமாகும் பத்தினித்தனம் போட்டு கவிதை உலகு என்ற பகலில் உறங்காதே!

இப்போது படித்துப் பாருங்கள்.....
-----------------------------------
நன்றி இங்கே பார்வையிட்ட அனைவருக்கும்...

சுகந்தப்ரீதன்
06-02-2008, 07:08 AM
ஆஹா..அருமை..ஆதவா..! கவிதையும் அதற்கு நீங்கள் இருவரும் கொடுத்த விளக்கமும் அருமை.. உங்கள் புண்ணியத்தில் இசங்கள் என்ற ஒரு புதிய தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் அறிந்துக் கொண்டேன்.. மிக்க நன்றி நண்பரே...!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!

ஆதவா
07-02-2008, 03:03 AM
ஆஹா..அருமை..ஆதவா..! கவிதையும் அதற்கு நீங்கள் இருவரும் கொடுத்த விளக்கமும் அருமை.. உங்கள் புண்ணியத்தில் இசங்கள் என்ற ஒரு புதிய தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் அறிந்துக் கொண்டேன்.. மிக்க நன்றி நண்பரே...!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!

மிக்க நன்றி சுபீ:)

யவனிகா
07-02-2008, 03:16 AM
இசங்கள் எத்தனையோ
முட்டி மோதி உடைபடும் மனம்...
பிடிபட்டு விடும் பொழுதுகள் பரவசம்,
பிடிபடா நேரம் ஆத்திரம்
எனக்கு புரியாத எழுத்தா...

பிரித்து மேய்ந்து
படித்து உள்ளேற்றி
கண்மூடி அமரும் நேரம்...
அம்புலிமாமாவின் ஆனைக்கதை
எந்த எத்தனிப்பும் இன்றி
படித்த மகிழ்ந்த நாட்கள்...
கோபம் கொள்ள வைக்கிறது
இசங்களைக் குறித்தான என் தேடுதலின் மீது!

வாழ்த்துக்கள் ஆதவா...

ஆதவா
08-02-2008, 09:49 AM
மிக்க நன்றி யவனி அக்கா..

ஷீ-நிசி
08-02-2008, 01:40 PM
தேடிப் புணரவைத்தல்
கலைஞனுக்கழகல்ல.
கடைவிரித்துக் காத்திரு
அன்றி
பத்தினி வேடமிட்டு
பகலில் உறங்காதே

ஒரு கவிதையின் கருத்தை தேடிக் கண்டுபிடித்துத்தான் தெரிந்து கொள்வதானால் அப்படிக் கவிதையெழுதுவது கவிஞனுக்கு அழகல்ல, அனைவருக்கும் தெரியும் படி கடைவிரித்துக் காட்டவேண்டும், அதைவிடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற பத்தினிக்கொள்கை போல் எழுதியவனுக்கு மட்டுமே புரியுமானால் அது கவிதையல்ல என்பதே இதன் பொருள்.
(என்னபா சரியா).

இந்த கடைசி வரிகள் எனக்கு எளிதில் விளங்க மறுத்தது. ஆனால் ராக்கியின் விமர்சனம் ஆதவாவின் கவிதைக்காய் கையாண்ட உவமானத்தினை நினைத்து என்னை 'அட' போடவைத்தது.

ஆதவா... உண்மையில் இசங்கள் வகை கவிதைகள் படித்து அது புரியாமல் தோல்வி கண்டவன் நான். அதனாலேயே எனக்கு பிடிப்பதுமில்லை. கவிதை எழுதியவர் அதன் அர்த்தத்தை விளக்கும்போது அந்த கவிதை பிரமிப்பை தருகிறது.

என் கேள்வி... ஏன் அழகியை போர்வை போட்டு மூடிவைக்கிறீர்கள் என்பதே....

ஆதவாவின் கவிதை பலவும் இசங்கள் வகையில் இருப்பதை நான் அறிவேன். கவிதை புரியாமல் அதற்கு ஆதவாவிடம் சாட்டில் விளக்கத்தை பெறுகின்ற போது அந்த கவிதையின் கருத்துக்கள், உவமானங்கள் மிக பிரமிப்பாஉ இருக்கும்.

இந்த கவிதையுன் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது ஆதவா. வாழ்த்துக்கள்.

kavitha
09-02-2008, 08:22 AM
இசங்கள் பற்றிய எனக்கு முதல் அறிமுகம் தந்தவர் இளசு அண்ணா..
புரியாமல் சில நாட்கள் வேற்றுக்கிரகத்தில் திரிவது போல் திரிந்து...
பின் வெட்கத்தை விட்டு வாய்விட்டுக்கேட்டு..
அண்ணல், நண்பன் விளக்கக் கேட்டு
புரிந்து படித்து... கண்ட மகிழ்ச்சி முதல் கட்டம்..
பிறகு வார்த்தைகள் வசப்பட...
கருத்துக்கோர்வை கொவ்வையாக
இலைமறை கனியாய் மட்டும் இசத்தை எடுத்தாண்டு
எழுதிய கவிதைகளில் பூத்துக்குலுங்கும் மரம், அங்கே எவரும் இல்லை குறிப்பிடுவன.

kavitha
09-02-2008, 08:34 AM
கவிதையைப்பற்றிய கவிதை அருமை ஆதவா... ராக்கி Vs ஆதவா மிக ரசித்தேன். இசங்கள் சார்ந்த கவிதைகள் ஈர்ப்பைத்தந்தாலும் புரியாமல் சிலர் தவிர்த்து விலகக்கூடும். ஆனால் புரியும் வரை விடமாட்டோம் என்று அலையும் சிலரும் உண்டு. பிரித்து மேய்ந்து படிக்கும் யவனிகா, ராக்கி... போலும் உண்டு. தளறாதீர்கள்.

இதே பாணியில் நண்பன் அவர்கள் எழுதிய கவிதை 'வெட்கம் கெட்ட தாய்'.

நம் கவிதையை நாம் எழுதியவிதமேயான சரியான புரிதலுக்கு கொண்டு செல்லும் போது நோக்கம் நிறைவேறிவிடும். இல்லையேல்... பலகோணத்திற்கு வித்திடும்.

பழைய மன்றத்தில் இது போல் விவாதித்த கவிதைகள் பல....

தொடர்ந்து எழுதுங்கள்.