PDA

View Full Version : 107 போலீசாருக்கு எயிட்ஸ்



namsec
01-02-2008, 01:46 PM
`தமிழக போலீசில் 107 பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளது; இந்நிலை தொடர்ந்தால், இன்னும் ஐந்து, ஆறு ஆண்டுகளில் 50 சதவீதம் கூடிவிடும்' என்ற `திடுக்' தகவல் போலீசாருக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக போலீசில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரகசியமாக நடத்தப்பட்ட பரிசோதனையில், சிலருக்கு `எச்.ஐ.வி' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசாரிடையே `எய்ட்ஸ் தடுப்பு' முறைகள், குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாம் ஒருங்கிணைப்பாளராக ஒய்வு பெற்ற எஸ்.பி., சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். முகாம், கோவையில் நேற்று நடந்தது.

விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் பேசியதாவது: தமிழக போலீசில் பலரிடம் எச்.ஐ.வி., தாக்கம் உள்ளது. எனவே, இந்நோயின் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகளை விளக்கும் வகையில் தொடர்ந்து முகாம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள `நம்பிக்கை மையத்தில்' எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழக போலீசில் 107 பேருக்கு `எச்.ஐ.வி.,' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில், நடத்தப்பட்ட பரிசோதனைகளில் மேலும் பலருக்கு `எச்.ஐ.வி.,' பாதிப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது. போலீசில் இந்நிலை தொடருமானால், அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் எச்.ஐ.வி.,பாதித்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, எச்.ஐ.வி.,பாதிப்பில்லாத சமூகம் உருவாக, போலீசார் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.இவ்வாறு, சத்தியநாராயணன் பேசினார்.

தமிழக சிறைகளில் கைதிகளுக்கு காண்டம் : சத்தியநாராயணன் `தினமலர்' நிருபரிடம் கூறியதாவது: போலீஸ் துறையில் மட்டுமின்றி, தமிழக சிறைகளிலும் எச்.ஐ.வி.,பாதிப்பு உள்ளது. எட்டு மத்திய சிறைகளில் நடத்திய பரிசோதனையில், 25 சதவீத கைதிகளை எச்.ஐ.வி.,தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கைதிகளுக்கு `காண்டம்' வழங்கும் வகையில், சிறை விதிகளை மாற்றியமைக்க முடியுமா, என அரசிடம் கோரப்பட்டுள்ளது. இம்முறை, பிரேசில் மற்றும் பொலிவியா சிறைகளில் நடைமுறையில் உள்ளது. இதனால், எச்.ஐ.வி.,பரவுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. கைதிகளும் மனிதர்கள் தான்; குடும்பத்தாரை பிரிந்து சிறையில் இருக்கும் அவர்களுக்கும் சில உடல் ரீதியான தேவைகள் உள்ளன. அதை நிறைவேற்ற `காண்டம்' வழங்குவது `அந்த செயலை' ஊக்குவிப்பதாக ஆகாது; கொடிய நோயைத் தடுப்பதே எங்களது முதன்மையான குறிக்கோள். இவ்வாறு, சத்தியநாராயணன் தெரிவித்தார்.

நன்றி தினமலர்

aren
01-02-2008, 03:36 PM
போகிற இடத்தில் சரியாக நடந்துகொள்ளவில்லையென்றால் இப்படித்தான் ஆகிவிடும். இனிமேலாவது மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவார்கள் என்று நினைக்கிறேன்.