PDA

View Full Version : .... எனக்கு வழி பிறந்ததுஇளஞ்சூரியன்
30-01-2008, 02:09 PM
தை பிறந்தது; புத்தகக் கண்காட்சி 2008 ல்.. எனக்கு வழி பிறந்தது

இப்போதெல்லாம், சீரியசான புத்தகங்களுக்கும் எனக்கும் வெகு தூரம்!! நான் கல்லூரி முடித்து இன்னும் ஐந்து ஆண்டுகள் கூட முடியவில்லை. இருப்பினும் இந்த ஐந்து வருடங்களில், என் தீவிர, புத்தகம் படிக்கும் வழக்கம், முற்றிலும் ஒழிந்து போயிருந்தது. அப்படியிருக்கையில் இவ்வருட புத்தகக் கண்காட்சியைக் குறித்த அறிவிப்பினைப் பார்த்ததுமே, இவ்வருடம் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என முடிவு செய்தேன். இந்த என் முடிவு, எப்படி என்னை வாழ்நாள் முழுவதும் கட்டிப் போடப் போகிறது என்பதை நான் அப்போது உணர்ந்திருக்க வில்லை. விதியாகப் பட்டது வலியது; அதை யாரும் வெல்ல முடியாது.

இந்த புத்தகக் கண்காட்சி என்பதே ஒரு அற்புதமான செய்தி. ஒரே இடத்தில் எல்லா பதிப்பகங்களும்.. நாகர்கோயில் முதல் சென்னை வரை.. சிற்றிதழ்கள் முதல் பிரபல வார இதழ்கள் வரை.. சிறிய பதிப்பகங்கள் முதல் ஜாம்பவான்கள் வரை.. தொல்காப்பியம் முதல் சுஜாதா வரை.. சுஜாதா முதல் அபித குசலாம்பாள் வரை. நவீன இலக்கியம், சரித்திரக் கதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆராய்ச்சிக்கு உதவும் புத்தகங்கள், தத்துவங்கள், பங்குச் சந்தை, திரைப்படப் புத்தகங்கள், ஆங்கிலம், தமிழ், சில இடங்களில் இந்தி மற்றும் என்னால் படிக்க இயலாத மொழிப் புத்தகங்களும் என. ஒரே கதம்பக் கலவையாக புத்தகப் பிரியர்களுக்கு 45 வகையான அயிட்டங்களுடன் சாப்பாடு பறிமாறியது போல். (மோடி 45 வகை அயிட்டங்களையும் சுவைத்து மகிழ்ந்தாரா என்று எந்த செய்திக் குறிப்பிலும் இல்லை!!)

அரிய வகைப் புத்தகங்களும், நமக்குத் தேவையான புத்தகங்களை நாமே நேரில் பார்த்து, புரட்டி, விலை, நம்முடைய பணப்பைக்கு கட்டு படியாகிறதா என் கவனித்து, மொத்தமாகப் புத்தகம் வாங்குகையில் தள்ளுபடி பேரம் பண்ணி என் இதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உண்டு.
முன்பெல்லாம் இந்தப் புத்தகக் கண்காட்சி, அண்ணா சாலையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி வளாகத்தில் நடக்கும். அங்கு பயங்கர இடப் பற்றாக்குறை. அதற்காக வேண்டி சென்ற வருடம் முதல், அமைந்த கரையில், பச்சையப்பன் கல்லூரியின் எதிரில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் விசாலமான வளாகத்தில், இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

பச்சையப்பன் கல்லூரி, நான் இளவறிவியல் படித்த கல்லூரி; என்னை ஒரு நல்ல தமிழ்க் குடிமகனாக, தமிழை நேசிப்பவனாக, என் போன்ற மாணாக்கர்களை ஆயிரக் கணக்கில் புடம் போட்டு வெளி உலகுக்கு அனுப்பிய ஒரு மகத்தான கல்லூரி.

இது 31வது சென்னை புத்தகக் கண்காட்சியாம்; வெளியே இருந்த அறிவிப்பு பறை சாற்றியது. 500க்கு மேற்பட்ட விற்பனை மையங்கள்; அனைத்து துறை சார்ந்த, அனைத்த வயதினருக்கும் ஏற்ற அறிவுத் தேடல் சங்கமமாக அந்தப் புத்தகத் திடல் பலருக்கும் காட்சி அளித்திருக்க வேண்டும். பல்வேறு திரைப்பட பிரபலங்கள், அரசியல் முக்கிய புள்ளிகள், சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் மக்களோடு மக்களாய்; கண் கொள்ளாக் காட்சி.

வழக்கம்போல் உங்கள் கூக்குரல் என் காதில் முதல் பத்தி எழுதுகையிலேயே விழுந்து விட்டது. கவலைப் படாதீர்கள். இதோ, தையில் எனக்கு வழி பிறந்த கதை.

பொங்கலுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் கிளம்பி, நேராக எங்கள் கல்லூரிக்குச் சென்றேன், பொங்கலுக்காக விடுதி மாணவர்கள் அவர்கள் சொந்த ஊர் சென்றிருக்கக் கூடும். கல்லூரி வெறிச்சோடிக் கிடந்தது. கால் போன போக்கில், கல்லூரி வளாகம் எங்கும் சுற்றினேன். மிக நீண்ட மலரும் நினைவுகள்; ஆழ்ந்து அனுபவித்து விட்டு, வெளியில் வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு, புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

கண்காட்சியின் ஆரம்ப நேரத்திலேயே நல்ல கூட்டம். சென்ற வருடம் ரூ 12 கோடிக்கு விற்பனை ஆனதாம். இவ்வருடம் ரூ 15 கோடிக்கு விற்பனைக் குறியீடாம். குறியீட்டை எட்டியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நிறைய சிற்றிதழ் மையங்கள். அது போக பிரபல வார இதழ்களின், ஒரு புலனாய்வு இதழின், மற்றும் பதிப்பக ஜாம்பவான்களின் விற்பனை மையங்கள் என கண்காட்சி களை கட்டியிருந்தது.
முதல் வரிசையில் இருந்த ஒரு விற்பனை மையத்தில் எனக்குப் பிடித்த சில கதாசிரியர்களின் புத்தகங்கள் கண்ணில் பட்டன. பெரும்பாலான புத்தகங்கள் நான் ஏற்கெனவே படித்து, சொந்தத்தில் வாங்கி வைத்திருப்பவை. இருப்பினும் ஒரு புதிதாக அச்சு செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்துப் புரட்டுகையில், அது ஏற்கனவே நான் ரசித்த ஒன்றை, திரும்பவும் புதிதாகப் பார்ப்பது போல் இருந்தது. அச்சுத் தொழில் நுட்பம் வெகு விரைவாக வளர்ந்திருக்கிறது. அப்படியே புத்தகங்களைக் கண்ணோட்டமிட்டுக் கொண்டே.. நகர்கையில்.. அதே போல் எனக்கு எதிராக ஒரு பெண்ணும் நகர்கையில்.. இருவரும் ஒரு புள்ளியில் மெல்லிதாக உரசிக் கொண்டோம். இருவரும் மாற்றி மாற்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டே, புன்னகைத்தவாறே பிரிந்தோம்.

அந்த மோதலில் எனக்கு பெரிய அதிர்வு அடித்த உணர்ச்சியெல்லாம் இல்லை. சாதாரணமான மோதல்தான். மேலும், மற்ற புத்தகங்களை, மேய்ந்து கொண்டே போனதில், இந்தப் பெண்ணை மறந்தே போனேன். ஆனாலும் அடுத்த வரிசைப் பகுதிக்குப் போகையிலும் திரும்ப அவளைப் பார்க்க நேர்ந்தது. அவள் முகத்தில் மெல்லிய அறிமுகப் புன்னகை படர்ந்தது. ஆனாலும் பேசிக் கொள்ள வில்லை. அடுத்தடுத்த புத்தக விற்பனைமையங்களிலும் இதே நிலைதான். பெரும்பாலும் அவளின் ரசனை என்னை ஒத்தே இருந்தது. ஏனெனில் நான் பிரித்த புத்தகங்களை அவளும், அவள் பார்த்த புத்தகங்களை நானும்; ஆனால் அவள் பார்த்த சில புத்தகங்கள் மிகக் கடுமையான தமிழ் இலக்கியப் புத்தகங்கள்; கல்லூரி நாட்களில் நான் படித்து ரசித்து, நேசித்த புத்தகங்கள். எனக்கு அந்தப் பெண் மீது ஒரு மரியாதையும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

தொடர்ந்து அவளையே பார்த்ததில், இப்போது அவள் என் கண்ணுக்கு ஒரு வெள்ளைப் பருத்திப் புடவை உடுத்திய மோகினியாகத் தெரிந்தாள். மெல்லிய ஒடிசலான தேகம்தான்; மாநிறம்; நீண்ட ஒற்றைப் பின்னல்; முரண்பாடான பெரிய காது வளையம். நிறைய படித்த ஒரு அறிவு ஜீவிக் களை அவள் முகத்தில். எனக்கு அவளுடன் பேசவேண்டும் என்ற ஆசை. அவளுக்கும் அது போன்றே தோன்றியிருக்க வேண்டும்.

நான் அடுத்து அங்கிருந்த டீ விற்பனைக் கடைக்குச் சென்றபோது என் பின்னாலேயே அவள். இந்த வகைப் பெண்கள் டீ குடிக்கும் வகை இல்லை. காபிதான். நான் நட்பாக, டீ குடிக்கிறீங்களா எனக் கேட்க, அவள் தலை ஆட்ட அதுவே எங்களின் மௌனத்தை உடைத்து, பேசத் துவங்க ஆதாரமாக அமைந்தது. இருவரும் டீ சுவைக்கையில், அவள் என்னைப் பார்த்து பச்சையப்பாஸில் படிக்கறீங்களா என்று கேட்டாள்.

எனக்கு ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தேன். அவளே மேலும் தொடர்ந்து, நான் லைப்ரரில இருந்தபோது உங்கள பாத்தேன் என்றாள். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல் மகிழ்ச்சி அவள் என்னை இன்னும் கல்லூரி மாணவனாக நினைத்தது. இரண்டாவது அவள் நூலகத்தில் இருந்து பார்த்ததை நினைவில் கொண்டு வந்தது. இருப்பினும் அவளுக்கு, நான் கல்லூரி மாணவன் இல்லை என்று மறுப்பு தெரிவித்தேன். (அப்போது நான் மிகவும் வெட்கப் பட்டதாக, கடற்கரையில் அவளுடன் அன்று மாலை பேசுகையில் சொன்னாள்.) எனக்கும் வெட்கம் வந்ததா அதைக் குறித்து இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

மேலும் தேநீர் சுவைத்தபின்னும் எங்கள் பேச்சு நீடித்தது. அவள் சிங்கப்பூரில் வசிக்கும், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற, தமிழ் வம்சாவளிப் பெண். என்னைப் போலவே அவளும் தமிழை நேசிப்பவள்; சுவாசிப்பவள். பெயர் அருணா. (இப்பெயரூக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு உண்டோ!!) தமிழாராய்ச்சி குறித்து சென்னை வந்திருக்கிறாள். சென்னை வந்து ஒரு வருடம் ஆகிறது. YWCA வில் தங்கியிருக்கிறாள். டிசம்பருடன் அவள் வந்த பணி முடிந்து விட்டது. ஆனாலும் சிங்கப்பூர் போக மனசில்லாமல், இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக இது வரை தங்கி இருக்கிறாள். குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட, நாளை இரவு சிங்கப்பூர் போக ஆயத்தமாக இருக்கிறாள்.

லேசாக உரசிக் கொண்டதற்கே ஆயிரத்தெட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விலகியவள், இப்போது என்னை உரசி; விலகாமல்; மன்னிப்புக் கேட்காமல்; ஏதோ என்னை உரசி நடப்பது அவள் பிறப்புரிமை என்பது போல் என்னையொட்டி நடந்தாள். இருவருமாக கண்காட்சியைச் சுற்றி முடித்து விட்டோம்.

அவள் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் செலவழித்து புத்தகம் வாங்கியிருப்பாள். ஆனால் வாங்கிய புத்தகச் சுமை அனைத்தும் என் மீதே. புத்தகத்தைச் சுமந்து வருவதற்காகவே என்னிடம் பேச்சுக் கொடுத்தாளோ! அவளிடமே நான் இதனைக் கேட்ட போது, அவள் முகம் மலர்ந்து, என் இடுப்பில் ஒரு செல்லக் குத்து விட்டு, பொறுக்கி என்றாள்.

எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இந்த வசவெல்லாம் சகஜமப்பா!!!!

சுற்றிய களைப்பு தீர வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். மாலைச் சூரியனின் வெளிச்சத்தில் அவள் வேற்றுலகப் பெண் போல் இருந்தாள்.

வாங்கிய புத்தகங்களை ஒரே சீராக அடுக்கி, கண்காட்சியிலேயே கொடுத்த, மெல்லிய கயிறினால் கட்டி, சரி பண்ணி, வெளியே வந்து என் பிளாட்டினாவை எடுக்கையில் மணி ஐந்தை நெருங்கிவிட்டது. ஒரு ஆட்டோவைப் பிடித்து, அவளையும் அவள் புத்தக சுமையையும் அதில் ஏற்றி; அவள் ஆட்டோவில் முன்னாலே போக; நான் பின்னாலே என் பிளாட்டினாவில் தொடர்ந்தேன்.

அவள் விடுதியை அடைந்து, புத்தகங்களை இறக்கி விட்டு, YWCA வரவேற்பறையில் அமர்ந்து அவள் வரக் காத்திருந்தேன். சரி, ஒரு சுவையான கடலைப் பகுதி முடிந்து, நாம் வெட்டி விடப் படப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவள் திரும்பவும் விடுதியின் வரவேற்பறைக்குத் திரும்பும்போது, வெளிர் நீல, மெல்லிய பாலியஸ்டர் புடவையில், மோகினியின் இன்னொரு வடிவாக வந்தாள். அவளையே கண் இமைக்காமல் பார்த்தேன். வந்தவுடனே, உட்கார்ந்திருந்த என் கையைப் பிடித்து இழுத்து, என்னை நிற்க வைத்து, என்ன பாக்கறீங்க; வாங்க எங்கேயாவது வெளியில் போகலாம்; என்றாள்.

மனதிற்குள் கெட்டிமேளம் அடித்தது. வெட்டி விடும் என நினைத்தால், சிங்கப்பூர் கிளி ஒட்டி உறவாடுகிறது. வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடிப்போம் என நினைத்தால், அருணா, என்னைத் தடுத்து, என் பிளாட்டினாவிலேயே போவோம் என்றாள். வண்டியின் பின் அவள் அமர்ந்து கொண்டு; எழும்பூர் பாலம் தாண்டுகையிலேயே, கிளி என் தோளின் மீதும், மனதின் உள்ளும் அமர்ந்து கொண்டது.

பிளாட்டினாவை நான் எங்கே ஓட்டினேன். என்னுள் பெருக்கெடுத்த இன்ப உணர்வுகள்தான் என் வண்டியை செலுத்தியது.

முதலில் ஏதாவது ஸ்டார் உணவகத்திலே அமர்ந்து பேசலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு கடற்கரை பக்கம் சென்றேன். அது வரை நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மிகவும் இருட்டிவிட்டது. மெரினாவில், கண்ணகி சிலைக்கு முன், கடற்கரைக்குள் திரும்பி, உள் சாலையில் என் பிளாட்டினாவை நிறுத்திவிட்டு இருவரும், மணலில், கால் புதையப் புதைய, என் கைகளும் அவள் கைகளும் கோர்த்துக் கொண்டு, வெகு இயல்பாக, அலைகளை நோக்கி நடந்தோம்.

அலைகளுக்கு சற்று முன்னால் மணலில் அமர்ந்தோம். கடல் காற்றின் குளிர்ச்சியும், காற்றில் இருந்த காதலும், எங்களிருவரையும் பற்றிக் கொண்டது.

இது வரை பேசாதிருந்த அருணா மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தாள். சிங்கப்பூரின் சிறப்பு மிக்க வாழ்க்கை குறித்து; சிங்கப்பூரில் தமிழ் இயக்கம் குறித்து; அவளின் தமிழ் ஆர்வம் குறித்து; அவளுக்குப் பிடித்த தமிழ் இலக்கியங்கள்; உலக இலக்கியங்கள்; நவீன தமிழ் இலக்கியம் போகும் பாதை என என்னென்னவோ பேசினாள்.

என் மனதில் எதுவும் பதியவில்லை. என் முழு மனதையும், அவளே ஆக்கிரமித்திருக்கையில், வேறெதுவும் எனக்குப் புரியவில்லை. எவ்வளவு நேரம் அவ்வாறு போயிற்று எனத் தெரியவில்லை. இப்போது லேசாக நிலா வெளியே தலை காட்ட, அதன் மங்கிய வெளிச்சம்; அந்த மங்கிய ஒளியில் அவள்..; அவளின் உயிரூட்டமான முகம்; நான் ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இவ்வுலகத்திலேயே இல்லை. என்னை மீறி நான் அவளிடம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தேன்.

கடற் காற்றிலே, காதல் இப்போது மேலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்தது.

நான் அவளையே பார்த்துக் கொண்டு, ஒன்றுமே பேசாமல் இருந்ததை. வெகு நேரம் கழித்துத்தான் அதனை உணர்ந்தாளோ அல்லது ஒன்றுமே தெரியாதது போல் இருந்தாளோ; தெரியவில்லை. இருப்பினும் நான் அவ்வாறு ஒன்றும் பேசாமல் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தவள் போல், என்னங்க ஒன்னுமே பேச மாட்டீங்கறீங்க என்ற அவளின் குரல் என்னை இவ்வுலகுக்கு கொணர்ந்தது.

ம்ம்.. என்ன கேட்ட என்று கனவிலிருந்து விழித்தவனாகக் கேட்டேன். என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து, பொறுக்கி என்றாள். நல்ல பெண்ணாகத்தானே பொறுக்கியிருக்கிறேன்!! இருப்பினும் இரண்டாவது முறை அவள் என்னை அவ்வாறு பொறுக்கி என்று சொல்கையில், மதியம் சொன்னதை விட இப்போது மிகவும் தேன் குழைத்து சொன்னது போல் இருந்தது. நான் வெட்கப் பட்டு.. தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். கண்றாவி; எனக்கு ஏன் இப்படியெல்லாம் வெட்கம் வந்து தொலைக்கிறது!!

அவள் கல கலவென்று சிரித்து, மதியம் கூட அவள் என்னைக் கல்லூரி மாணவன் என்று குறிப்பிட்டபோது, நான் வெட்கப் பட்டதைக் குறிப்பிட்டாள். இயல்பாக வெட்கப் படவேண்டியவள், என்னை சீண்டிக் கொண்டிருக்கிறாள்!! அன்பும் பாசமும் போட்டி போடுகையில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்களோ; அந்த அவஸ்தையைப் பெண்களும் உணர்ந்து, ரசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு நிறைய அகநானூற்றுப் பாடல்கள் நினைவுக்கு வந்தன.

அப்போதுதான், என் முதுகில் யாரோ தட்டுவது போல் தெரிந்தது. திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டு திரும்பினால்; காவல் துறை நண்பர்கள்; என்னா சார். பாத்தா டீஜன்டா இருக்க, வூட்டுக்குப் போ சார். இதெல்லாம் கலீஜான இடம் என்றார் ஒரு காவல் நண்பர். நல்ல பிள்ளைகளாக நாங்கள் இருவரும் எழுந்தோம், மணலைத் தட்டி விட்டுக் கொண்டோம். மற்றொரு காவல் துறை நண்பர் தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். அந்த இருட்டில் எவ்வளவு கொடுத்தேன் என்று கூடத் தெரியாமல், என் பர்ஸிலிருந்து, இரண்டு நோட்டுக்களை உருவிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு அடுத்த ஜோடியை நோக்கிச் சென்றார்கள்.

திரும்ப பிளாட்டினா நிறுத்துமிடம் நோக்கி வருகையில்தான், இங்கு காவல் துறை நண்பர்களிடம் வெட்கப் பட்டதையும் குறிப்பிட்டு, சிரித்து மகிழ்ந்தாள்.

என்னை அவளிடம் இவ்வளவு தூரம் ஈர்த்தது எது. பச்சையப்பன் கல்லூரியா; புத்தகக் கண்காட்சியா; அல்லது எங்கள் இருவரின் மனங்கவர்ந்த தமிழா; எந்த இடத்தில் இந்த ஈர்ப்பு துவங்கியது. துவங்கியது என்பதை விட எங்கு போய் முடியப் போகிறது என்பதைப் பற்றித்தான் நான் கவலைப் பட்டேன். ஏனெனில் நான் ஏற்கெனவே அவளிடம் தொலைந்து போய் விட்டிருந்தேன்!!

பின்பு, அண்ணாசாலையில் இருந்த ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு வந்து, சாப்பிட்டோம். சாப்பிடும் போதும் அவள் நான் வெட்கம் கொண்டதைப் பற்றி சிரித்து அடிக்கடி, வெட்கத்தைப் பாரு என்று என் கன்னத்தில் இடித்தாள். சாப்பிட்டு விட்டு வெளியே வந்து என் பிளாட்டினாவை எடுக்கு முன் என் கையைத் தடுத்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா என்று கேட்டாள்.

எனக்கு ஊ..லல்லா என்று பாடவேண்டும் போலிருந்தது!!!!
பின்பு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள். திட்டப் படி அருணா, சிங்கப்பூர் செல்லவில்லை. பொங்கலை எங்கள் வீட்டில்தான் கொண்டாடினாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பெண்களுக்குதான் சொல்வார்கள். ஆனால்.

சந்தித்த, காதல் சொல்லிய, இரண்டாவது வாரத்திலேயே, எங்கள் திருமணம், சென்ற ஞாயிறன்று, எளிமையாக, பெரியோர்களுடன் ஆசியுடன் நடந்தது.

இனி ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் வீட்டில் இனி எப்போதும் மதுரைதான்; சிதம்பரத்திற்கோ, திருச்செங்கோட்டிற்கோ நான் முயலப் போவது கூட கிடையாது. அடங்கியிருப்பதிலும் கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இன்னும் நான்தான் வெட்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன்!!!!

உனக்கு எவ்வளவு தடவை கல்யாணம் நடக்கும். மார்கழியில் ஒரு தடவை; தையில் ஒரு தடவை; எனப் பின்னூட்டம் இட்டு விடாதீர்கள். கதைதானே என்ற அளவில் மட்டும் ரசியுங்கள்.

ஜெயாஸ்தா
31-01-2008, 12:50 PM
நாணமோ...இன்னும்.. நாணமோ... என்று உங்கள் மனைவி உங்களைப் பார்த்து பாடாமலிருந்தால் சரி. (அத்தனையும் கதையா? நான் உண்மைச் சம்பவம் என்றல்லவா நினைத்தேன். :lachen001: :lachen001: :lachen001: )

அனுராகவன்
17-02-2008, 03:41 AM
ம்ம் உங்களுக்கு வழி பிறக்கும்
அதில் சந்தேக வேண்டாம்..
ம்ம் நல்ல கதை..
என் வாழ்த்துக்கள்