PDA

View Full Version : ஒடியும் கனவுகள்ஆதவா
28-01-2008, 05:07 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/2u.gif

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன். எனது வண்டி கொஞ்சம் தடுமாற்றத்தோடுதான்
சென்றுகொண்டிருந்தது. நாம் எப்போதெல்லாம் கலங்குகிறோமோ அப்போதெல்லாம் நம்மைச் சேர்ந்த பொருட்களும்
கூட கலங்குகிறது.. என் வீட்டுக்குச் செல்ல வேண்டுமானால் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்லமுடியும். பாதை
அத்தனை குறுகலாக இருக்கும். கற்கள் ஆங்காங்கே முளைத்து கிடக்கும், சற்றே இலக்கிய நயமாகச்
சொல்லவேண்டுமெனில், பூமித்தகப்பனின் தாடிமுளைத்த முகத்தில் ஆங்காங்கே காணப்படும் பருக்களைப் போல..

வீட்டுக்கு வந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கால்களைக் கழுவச் சென்றேன். வெளியே எங்கேனும்
சென்றுவந்தால் கால்களைக் கழுவிவிட்டு பின்னரே வீட்டுக்குள் செல்வது என் வழக்கம். முன்னர் நான் படிக்கும் காலத்தில்
அப்படியே வீட்டுக்குள் வந்தால் என் அம்மா சாட்டை எடுத்து அடிப்பார்.. அப்போது இருந்த வீடு ஓட்டு வீடு என்பதால்
எனக்கு எட்ட முடியாத தூரத்தில் சாட்டையை ஓட்டின் இடுக்கில் சொறுகி வைத்திருப்பார். அந்த கண்டிப்பு பின்னாளில்
ஒழுக்கத்தைக் கொடுத்திருப்பதை மறக்க இயலாது. கால்களை நன்றாகக் கழுவினேன். அழுக்கும் நீரும் பிணைந்து அது
தானாய் ஒரு பாதையை ஏற்படுத்திச் சென்றது. நம் மன அழுக்குகளும் இப்படித்தான், தினமும் கழுவவேண்டும் என்று
அப்பா அடிக்கடி சொல்வார்.

நேரே வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் வாசலில் கிடந்த சாக்கில் பாதங்களை நன்றாகத் துடைத்துவிட்டு நுழைந்தேன்.
என் தங்கை துண்டு ஒன்றை எடுத்து வந்து நீட்டினாள்... அவள் கைகளை நீட்டும் போதெல்லாம், இவளை எப்போது கரை
சேர்ப்போம் என்ற எண்ணம் உடனே வரும்.

அம்மா, உள்ளே நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிகள் வந்த பிறகு, கூடிப் பேசி மகிழ்ந்த காலங்கள்
என்றோ போய்விட்டது. இதற்கு முன்னர் வாடகைக்கு இருந்த வீட்டில் நான், அப்பா, அம்மா ஆகிய மூவரும் இரவு
நேரங்களை சீட்டு விளையாடி கழிப்போம். சீட்டில் ரம்மி ஆடுவதில் என் அம்மா கெட்டிக் காரி. அப்போதெல்லாம் அப்பா,
நன்றாகக் குடித்துவிட்டு வருவார். அவர் கைகளில் இருக்கும் பதின்மூன்று சீட்டுக்களும் ஒழுங்கற்ற முறையில் தொங்கிக்
கொண்டிருக்கும். இருந்தாலும் வெற்றி பெற்றுவிடுவார். சில சமயங்களில் நானும் வெற்றிபெற்றிருக்கிறேன் என்றாலும்
தோற்பதுதான் அதிகம். அந்த நினைவுகள் எல்லாம் சொல்லவேண்டுமெனில் தொடர்கதையும் பற்றாது.

நாடகம் முடிந்ததும் எழுந்து வந்து எனக்கு சாதம் பரிமாறினார். இப்பொழுதெல்லாம் சாதம் சாப்பிடுகையில் என் கையில்
புத்தகம் இருப்பதில்லை. என் அம்மாவும் எனைக் கண்டு ஒளித்து வைப்பதுமில்லை. அந்த நேரத்தில் மட்டுமே அம்மா
என்னிடம் பேசமுடியும் என்பதால் கொஞ்சம் அடக்கத்தோடு சொன்னார்,

" பதைது தேதி ஆயிட குமாரு, இக்க பாடகை ஈயலேது "

எனக்கும் அந்த ஞாபகம் இருந்தது. வாடகை இன்னும் கொடுக்காததால் வீட்டுக்காரர் சத்தம் போட்டிருக்கக் கூடும்.
சொல்லிவிட்டு பக்கத்தில் வைத்திருந்த சாம்பாரிலேயே கண்களைச் செலுத்தினார். அம்மா எதையோ நினைக்கிறார்
என்பது மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.. என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. முன்பைப் போல அம்மா, என்னை
வற்புறுத்தி சாப்பிடச் சொல்லுவதில்லை.

நேரே எழுந்து வாசலுக்கு வந்தால், திண்ணையில் கைகளை ஊன்றியவாறு அப்பா அமர்ந்திருந்தார்,. அவரைக்
கவனித்தவாறே மாடிக்குச் சென்றேன்.

அப்பாவுடன் இப்போதெல்லாம் பேசுவதில்லை. சிற்சில மனத்தாபங்கள் எங்களுக்குள். அதிகம் பேசிக்
கொள்ளமாட்டோம். என்றாலும் தானாடாவிடில் தன் தசை ஆடும் என்பார்களே அதைப் போல அவர் சோகமாக
அமர்ந்திருந்தால் எனக்குத் தாங்காது. எழுந்து கேட்கவும் கவுரவத் தடை. என் வீட்டில் படுக்க இடமில்லாததால்
மாடிக்குச் சென்று உறங்குவது என் வழக்கம். அங்கே நிலாவையும் நிலா காணாத நேரத்தில் விண்மீன்களையும்,
இவையிரண்டும் காணாத நேரத்தில் மேகத்தையும் என எதாவது ஒன்றைப் பார்க்காமல் மனம் உறங்குவதில்லை. வீட்டில்
அம்மா வாடகைப் பிரச்சனையைக் கிளறிவிட்டதில் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற அச்சம் மெல்ல மனதுக்குள்
எழுந்தாடியது. மூன்று மாத வாடகை என்பதால் பணம் திரட்டுவதில் அதிக சிரமம்.

அப்பா அடிக்கடி சொல்வார், என் காலத்திலாவது சொந்த வீடு கட்டவேண்டும் என்று. அவரால் சொந்தமாக ஒரு
செங்கல்லும் கூட வாங்க முடியாமல் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அப்பா சம்பாதிக்காத பணமா? அவரின் குடி,
குடியின் கனவையே குடித்தது. இன்று வருத்தப்படுவதில் எந்த லாபமுமில்லை. ஒவ்வொரு அப்பாக்களும் இப்படித்தான்,
சொந்த வீடு என்ற கனவு வைத்திருப்பார்கள். தன் வாரிசுகளை விட்டாவது வீட்டைக் கட்டி விடவேண்டுமென்று
நினைப்பார்கள்.. தன் காலத்தில் ஆடிய ஆட்டத்தைப் பிற்காலத்தில் எண்ணி வருந்துவார்கள்...

மாடிக்குச் சென்று வானைப் பார்த்தவாறே படுத்துக் கொண்டேன்,... இன்று ஏனோ நிலவும் வின்மீண்களும் தெரியவில்லை. வெறும் வானம்தான்...

- ஆதவன்.

அன்புரசிகன்
28-01-2008, 05:50 PM
சில ஜதார்த்தங்களை உணர்த்துகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவனுக்கு வரும் உணர்வுகள்... உணர்த்தலுக்கு நன்றிகள்.

ஆதவா
28-01-2008, 06:13 PM
மிக்க நன்றி அன்பு...

இது மரணவதை.. எனக்காக கடவுள் கொடுத்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாட இயலாத வதைப்பு..

மனோஜ்
28-01-2008, 07:12 PM
மனதை வறித்தியது ஆதவன்
காலங்கள் மாறும் கனிவாய் கடவுகள் உதவுவார்
முயற்சி மட்டும் முன் வையுங்கள்

ஆதவா
02-02-2008, 12:33 PM
மிக்க நன்றி மனோஜ்

என்னவன் விஜய்
04-02-2008, 12:06 AM
ஆதவா
அவரின் குடி,
குடியின் கனவையே குடித்தது.
ஆழமான உண்மை

நன்றி

சுகந்தப்ரீதன்
13-02-2008, 06:36 AM
மாடிக்குச் சென்று வானைப் பார்த்தவாறே படுத்துக் கொண்டேன்,... இன்று ஏனோ நிலவும் வின்மீண்களும் தெரியவில்லை. வெறும் வானம்தான்... .
இங்கே பலருக்கு வானம்தான் கூரையாய் தினம்தினம் காட்சியளிக்கிறது..!அதனால் வருத்தம் வேண்டாம்...வலித்தாலும் இனித்தாலும் வாய்த்த வாழ்க்கையை வாழத்தானே வேண்டியிருக்கு...!
உணர்வுகளை சொன்னவிதம் அருமை ஆதவா...! தொடருங்கள்..!!

யவனிகா
13-02-2008, 07:00 AM
ஆதவா...உங்களின் சுமைகளை எங்கள் நெஞ்சில் ஏற்றி வைத்து விட்டீர்கள்.

நீங்கள் இளையவர் என்று சிவா அண்ணா ஒரு பதிப்பில் சொல்லியிருக்கிறார்.உங்கள் வயதில் சிவா அண்ணா, நுரை எல்லாம் எப்படி இருந்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.

எனக்குத் தெரிந்து மிளகாய் தூள் விற்று எஞினியரிங் படித்த ஒருவர் இருக்கிறார். என் சித்தப்பா பையன் காலை 4 மணிக்கு கோயமுத்தூர் மீன் மார்க்கெட் வேலைக்குப் போய் விட்டு 10 மணிக்கு காலேஜ் போவான். உடம்பெல்லாம் மீன் நாற்றம், பசங்க கிண்டல் செய்யறாங்கன்னு வருத்தப்படுவான். அருமையான கவிஞன் அவன்.நீ எப்படிடா இப்படி எழுதறன்னு நானே அவன்கிட்ட பலமுறை கேட்டிருக்கேன். உள்ள ஒரு தீ இருக்குக்கா...எப்படியாவது நான் பெரிய ஆளாகணும்ன்னு ஒரு 18வயசு பையன் சொல்லும் போதே தெரியும்...அவன் பெரிய ஆளாகப் போகிறான் என்று.உங்களைப் போலத் தான் அவனும் சொல்வான்...அக்கா நீ ஊரில் இருக்கும் போது என் புலம்பல்களை கேட்பாய்...இப்போது நிலாவுக்கு மட்டும் தான் அந்தப் பேறு என்பான்....

உங்களுக்கும் காலம் வரும் பொறுங்கள் ஆதவரே... நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று தெரியும்.உழைப்பின் பலனை அனுபவிக்க கொஞ்சம் பொறுமை தான் தேவை. கோவை வரும் போது உங்களை சந்திக்க ஆசை தம்பியே.

கதை நடை அழகாக உணர்வுப்பூர்வமாக உள்ளது...உண்மைக் கதை என்று நினைத்து அட்வைஸை அள்ளித் தெளித்துவிட்டேன். இல்லையென்றால், கதை நாயகனுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்.வாழ்த்துக்கள்.

இளசு
19-03-2008, 11:14 PM
கனவுகளை நிமிர்த்திவிடும் காலம் வரும்..
அக்காலத்தை உழைக்கும் கையும் நம்பிக்கையும்
இரு கைபிடித்து அழைத்துவரும்..

யவனிகா சொல்லும் உள்ளில் தீ இருக்கும் எவருக்கும்
நிச்சயம் உயர்நாள் வந்தே தீரும்..

வெற்று வானம் பார்க்கும் கடைசி வரியில்
கதை சொல்லியை மீறி ஒரு கவிஞன் வெளிவந்துவிட்டான் ஆதவா!

வாழ்த்துகள்!

அமரன்
29-03-2008, 09:20 AM
கதையைப் வாசித்தபோது நாயகன் இடத்தில் உங்களை பொருத்திப் பார்த்தது மனது. கவிதைகளுக்கான உங்களது பின்னூட்டங்களும், உங்கள் சில படைப்புகளில் இழை ஓடுவதாக நான் நினைத்தவையும் சேர்ந்து இந்தக்காரியத்தை செய்ய வைத்தன. இளசு அண்ணா சொன்னது போல, அன்றைய உறக்கம் தொலைத்த மனதை, வெறும் வானம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிய கவித்துவம்.. அந்த வானமே இடிந்து வீழ்ந்தாலும் கலங்காதிரு என்ற பாரதி வரிகளின் உரம்.. இரண்டும் வந்து போயின என்னுள். உங்கள் எழுத்துகளை ரொம்பவும் மிஸ் பண்ணுறோம் ஆதவா..