PDA

View Full Version : பழைய பேபர்ஆதி
25-01-2008, 10:48 AM
"பழைய பேபர்
ப்ளாஸ்டிக் கவர்
காலி புட்டி வாங்குறதே.." என
பழைய வார்த்தைகளை
புதிதாய் உச்சரித்தவாறு
தினமும் வருகிறான் அவன்..

"பள்ளி நாட்களிலும்
படிக்காமல் ஊர் சுற்றுகையில்
பழைய சாக்கும்
சைக்கிளும் தந்து
காலி புட்டி வாங்க
அனுப்பி விடுவதாய் மிரட்டுவார்
அப்பா"

எத்தனை ஞாபகம்
வைத்திருப்பினும்
எதையாவது ஒன்றை
இழக்கதான் நேரிடுகிறது
பழையப் பொருட்கள் போடுகையில்..

குழந்தைகளின்
விளையாட்டு சாமான்கள்..
சேகரித்து வைக்க நினைத்த
மருத்துவ குறிப்பு நாளிதழ்கள்..
அண்ணனுக்கு பிடித்த
நடிகரின் படங்கள்.. என்று
நீளும் பட்டியலினூடே
போட இயலாதவையாய்
கணவனைப் பிரிந்து வந்த
அக்காவின் கண்ணீரும்..
அப்பாவின் குடிப் பழக்கமும்..


-ஆதி

பூமகள்
25-01-2008, 11:47 AM
பழைய பேப்பரோடு
போட்டு மறக்க
முடியா சில..

கையெழுத்தோடு காதல் பேசிய
கடிதங்களும்...
வலி சொல்லி படபடக்கும்
விவாகரத்து பத்திரங்களும்..

மறக்க முடியாமல்
மறைக்கப்பட்டிருக்கும்
அலமாரியின் ஏதோவொரு
இடுக்கில்..!

தூசு தட்டி எடுத்து
தங்கமீன் குடம் வாங்க..
தயங்கியது மனம்..
கண்கள் குளமானதால்..!

வித்தியாசமான ஆதியின் கவிதை. :)
சொற்கட்டைவிட கருத்து சொல்வதில் ஆர்வம் அதிகம் தெரிகிறது.
நல்லதொரு முயற்சி.
பாராட்டுகள் ஆதி. தொடருங்கள். :)

வாசகி
25-01-2008, 01:09 PM
போகியின் வேர்நான்
பழைய பண்டங்களுக்கு
மாற்றீடாக
புதுப்பாத்திரங்களை கொடுக்கிறேன்..

இருவர் மனதுக்குள்
மகிழ்ச்சிப் பொங்கல்

பளபளப்புடன் பத்திரத்தை
புதுப்
பண்டத்துக்கு மாற்றுகிறனர்

மறு சுற்று வரும்போது
எடுத்துச் செல்பவர்களில் பலர்
பத்திரப்படுத்திய பழைசானவைகளுடன்
காத்திருந்து வழி மறிக்கின்றனர்.

சற்றும் சளைக்காமல்
மாற்றீட்டில் நானும்..
மறுபடியும் பொங்கல்...

நினைவு சின்னக்களாக
அடைத்து வைக்கபட்ட வீடுகளின்
வெப்பப் பெரு மூச்சுகள்
சுமத்தும் பழியினால்
கருகிப் போகிறன
பழ'யதைச் சுமந்து
என்னுள் பொங்கிய நுரைகள்.

நான் யாரை நோவது?

-காலம்

சிவா.ஜி
26-01-2008, 04:48 AM
ஆதியின் அசத்தல் கவிதை....சொல்கிற ஆழமான கருத்து நெஞ்சை சுடுகிறது.மிகவும் சரிதான் ஆதி.ஒவ்வொருமுறை பழம்பொருட்களை கழித்துவிட எத்தனிக்கும்போது...அந்த பொருட்களுடனான பந்தம் சிறிது நேரத்துக்கு நினைவில் நிழலாடாமல் இருப்பதில்லை.பிரமாதம் ஆதி.வாழ்த்துகள்.

தங்கை பூமகளின் பின்னூட்டக்கவிதையும் அசத்தல் ரகமே....ஆதியின் கவியில் விடுபட்ட மற்றவையும் பட்டியலாக்கப்பட்டு பகிர்ந்துகொள்ளும் செய்தி....சிந்திக்க வைக்கிறது.பாராட்டுக்கள் பூ.

அனுராகவன்
26-01-2008, 09:07 AM
நன்றி ஆதியே..
பழயன கழிதல்
புதியன புகுதல்..
பொங்கள் வந்தவுடன் நினைவுக்கு வந்தது..
ம்ம் மிக அழகாக உங்கள் கவிதை
என்ன என்பதை மிக அருமையாக
கவிதைமுறையில் நன்கு
தந்தமைக்கு என் வாழ்த்துக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
26-01-2008, 11:12 AM
[QUOTE=ஆதி;319495
எத்தனை ஞாபகம்
வைத்திருப்பினும்
எதையாவது ஒன்றை
இழக்கதான் நேரிடுகிறது
பழையப் பொருட்கள் போடுகையில்..

-ஆதி[/QUOTE]

தங்கள் சொல்வது சரிதான். பழையதைப் போடுவதற்கு இன்னும் எனக்கு மனசு வரவேயில்லை.

சுகந்தப்ரீதன்
26-01-2008, 01:49 PM
நண்பரே..! கவிதையின் ஆழம் கடைசி இரு வரிகளில்..!
கவிதையின் ஆரம்பத்திலேயே தெரிகிறது ஒருவித இயலாமையும் சோகமும்..!
வாழ்த்துக்கள் ஆதியாரே..! வலிக்கத்தான் செய்கிறது வாழ்வில் இதுபோன்ற சிலவிடயங்கள்..!

ஆதி
26-01-2008, 02:30 PM
பழைய பேப்பரோடு
போட்டு மறக்க
முடியா சில..

கையெழுத்தோடு காதல் பேசிய
கடிதங்களும்...
வலி சொல்லி படபடக்கும்
விவாகரத்து பத்திரங்களும்..

மறக்க முடியாமல்
மறைக்கப்பட்டிருக்கும்
அலமாரியின் ஏதோவொரு
இடுக்கில்..!

தூசு தட்டி எடுத்து
தங்கமீன் குடம் வாங்க..
தயங்கியது மனம்..
கண்கள் குளமானதால்..!

வித்தியாசமான கவிதை. :)அழகிய பின்னூட்டம்..

பயனின்மை கசியும்
பழைய பொருளினோடு
போட முடியாமல்தான்
போகிறது..
சில விருப்பங்களையும்
வருத்தங்களையும..

கையெழுத்தாய்..
கடிதமாய்..
காதல் கசயியும்
காயமாய்..
இன்ன பிறவாய்
நெஞ்சுக்குள்..

ஒவ்வொரு முறை
இவ்வற்றை
தூசி தட்டி
எறிய முனையும் போது
எரிகிறது விழிகள்
கண்ணீர் துளிகளாய்..

மிக அற்புதமானப் பின்னூட்டம் தந்த பூமகளுக்கு என் நன்றிகள் பல..

கவிதையை எளிமையாய் எழுத விழைந்ததால்..

விளைந்த கவிதையே இது..

அதனால்தான் சொற்கட்டுகளுக்கு மிக முக்கியதுவம் தரவில்லை..

அன்புடன் ஆதி

அமரன்
26-01-2008, 07:52 PM
அரும்பொருட்சாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றின் ஞாபகக் குறிப்பேடுகள். நவரசங்களினதும் சம்பவங்களினதும் படிமங்கள். அதைப் பார்த்துக்கொண்டு, யாரோ ஒருவரின் விபரிப்பை செவிமடுக்கும்போது வரலாற்று நிகழ்வுகளில் நம்மையும் நடமாடவைக்கும். அழுவோம்.. சிரிப்போம்.. கோபப்படுவோம்.. பச்சாபடுவோம்... நவரசம் தாண்டியும் ததும்பும் நிகழ்வுகள்..

அதுப்போல நாம் உபயோகித்த பொருட்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வைத்து நமது விபரமறியாப் பருவத்திற்கு விபரம் தெரிந்த வயதில் அழைத்துச்செல்லும் பாங்கில் செயல்படும்போது கரைபுரளும் வெள்ளத்தில் நாமும் புரள்வோம். இன்னும் சில பொருட்களை வைத்து பின்னப்படும் கடந்துபோன நிஜங்களும் அவ்வாறே..

இவற்றுள் சில தூர வீசப்படும் போது அவற்றில் இருக்கும் படிமங்களும் தூரிப்போனாலும் உயிரில் கலந்த படிமங்களின் மிச்சங்கள் உயிர்பிரியும் வரை விட்டுப்பிரியாது. உள்ளுக்குள் இருந்து உயிர் பிரியும் வலி கொடுக்கும். கலைத்துவிட முடிந்தாலும் முடிவதில்லை.. பிணைப்பின் வீரியம் அப்படி. காலத்தை விட சிறந்த வைத்தியன் இல்லை என்று சொன்னாலும் அவனாலும் குணப்படுத்த முடியாத கொடிய உயிர்கொல்லி நோய்களும் உள்ளன.

உயிர்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டவர்களிலும் மூவகையானோரைக் காண்கிறேன். நோயை நினைத்து நிதமும் தம்மைத் தாமே அணுவணுவாக மாய்த்துக்கொள்வார்கள்.. சங்கடப்படுத்தும் இவர்களை வெறுப்பதா அணைப்பதா என்ற சஞ்சலம் தோன்றும். இன்னொரு சாரார் நித்தக் காரியங்களை தடங்கலின்றி செவ்வனே செய்துகொண்டு இருப்பார்கள். நோயால் பீடிக்கப்பட்ட அடையாளமே தெரியாது.. நோய் தீவிரப்படும்போது அல்லல் படுத்துவார்கள். ஆச்சரியம் பொங்கும்.. இன்னும் சிலர் தீவிரமான தோரணையை வலிந்து ஏற்படுத்தி அல்லல் படுவதுபோல தோற்றம் ஏற்படுத்தி அல்லல் படுத்துவார்கள்.. அவர்களின் மறுபக்கம் மகிழ்ச்சிப் பிரவாகமாக இருக்கும்.. இந்தப் போலிகளை பார்க்கும் போது வெறுப்பு பீறிட்டுக் கிளம்பும்

டீக்கடை பெஞ்சில் இருந்து பழைய பேப்பர் படிப்பதைபோன்ற உணர்வு இந்தப் பழைய பேப்பரிலும்.. பாராட்டுக்கள் ஆதி.

இளசு
26-01-2008, 09:30 PM
ஒரு நல்ல படைப்பு படித்தவரையும் படைக்க வைக்கும்..

ஆதியைத் தொடர்ந்த பாமகள், உதயநிலா -- இது ஒரு நல்ல கவிதை எனக் கட்டியம் கூறுகின்றன..

நுகர்வோர் எல்லாரையும் தத்தம் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றாலே
வெற்றி உறுதி.. (அழகி, ஆட்டோகிராஃப் போல)

சேமிக்க நினைக்க அனைத்தையும் சேமித்துவிட முடிவதில்லை..
கைநழுவி கழிந்துவிடுபவை பல..
கழித்துவிட நினைப்பவை அனைத்தும் அகன்று விடுவதுமில்லை..
கடைசிவரை இருந்து அலைக்கழிப்பவை...

இந்த முழுமையில்லா வரவு செலவு ஏடே வாழ்க்கை!
இந்த இயலாமை + ஒழுங்கற்ற கணக்கே அதன் தாளலயம்!

அழகாய்ச் சொன்ன , அலசிய அனைவருக்கும் பாராட்டுகள்..

அமரனின் மூவகை மாந்தர் அலசல் பிரமிக்க வைத்தது..
இதை இனிய பென்ஸ் இன்னும் சிலாகிப்பார் என்பது உறுதி..

ஆதவா
28-01-2008, 03:08 AM
..

அமரனின் மூவகை மாந்தர் அலசல் பிரமிக்க வைத்தது..
இதை இனிய பென்ஸ் இன்னும் சிலாகிப்பார் என்பது உறுதி..

இப்போதெல்லாம் அமரனின் பின்னூட்டங்களைத் தனியே படிக்கலாம் போல இருக்கிறது.. நன்ராக எழுதுகிறார் அண்ணா...

வாழ்த்துகள் அமரன்.

ஆதி
29-01-2008, 05:52 PM
ஆதியின் அசத்தல் கவிதை....சொல்கிற ஆழமான கருத்து நெஞ்சை சுடுகிறது.மிகவும் சரிதான் ஆதி.ஒவ்வொருமுறை பழம்பொருட்களை கழித்துவிட எத்தனிக்கும்போது...அந்த பொருட்களுடனான பந்தம் சிறிது நேரத்துக்கு நினைவில் நிழலாடாமல் இருப்பதில்லை.

உண்மை சிவா அண்ணா.. உள்ளார்ந்த பார்வைக்கொண்டு தந்த பின்னூட்டத்திற்கு மிக நன்றிகள் சிவா அண்ணா..

அன்புடன் ஆதி