PDA

View Full Version : பூங்கிளி கதை...!!பூமகள்
21-01-2008, 05:34 PM
பூங்கிளி கதை..!எத்தனை பெரிய வீட்டில் வாடகைக்கு வசித்தாலும் சின்ன வீடானாலும் சொந்த வீட்டில் இருக்கும் சுகமே தனி தான். பதினான்கு ஆண்டுகால வாடகை வீட்டு சந்தோசமான வாழ்க்கைக்கு பின்பு சொந்த வீட்டில் என் பாதம் பட்டது. அந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்.

என்ன தான் வாடகை வீட்டில் சந்தோசமாய் இருந்தாலும், நமக்கென்று குட்டி குட்டி ஆசை இருக்கும். வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது, பிடித்தமான செடிகள், மரங்கள் வளர்ப்பது, பிடித்தது போல் வீட்டின் வெளிப்புறத்தினை அழகு படுத்துவது இப்படி! எனக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி மனத்தில் ஊற்றெடுக்கத் துவங்கியிருந்தது.

எங்க சொந்த வீட்டின் சற்று தொலைவில் தென்னந் தோப்பு இருக்கும். அதனால், தினமும் அதிகாலையிலும், மாலையிலும் கூட்டம் கூட்டமாக கிளிகள் பறந்து வானில் செல்லும். ஒவ்வொரு முறையும் வானம் பார்த்து ரசித்து ரசித்து கிளிகள் மேல் தீராத பாசம் உண்டானது.

அதே சந்தர்ப்பத்தில் கிராமத்துக்கு என் பாட்டி ஊருக்கு சென்ற எனக்கு, அங்கு எங்க ஒரு உறவினரின் வீட்டில் கையில் வைத்தே கிளி வளர்த்து, என் கைக்கு கொடுக்க, அது தன் சிவப்பான மூக்கு கொண்டு என் விரலைப் பற்றி ஏறி நின்று கொள்ள, அந்த குறுகுறுப்பும் ஊசி போன்ற மெலிதாக நகத்தின் குத்தும் என்னை சிலிர்க்க வைக்கத் துவங்கியது. அது கீ கீ என்று அழைத்து இயல்பாய் எல்லார் இடத்தும் வந்து ஒட்டிக் கொண்டது.

இந்தச் சம்பவம், ஊருக்கு நான் வந்த பின்பும் என்னை தூங்க விடாமல், கிளியினைச் சுற்றியே இருந்தது.

இப்போ கதைக்கு வருகிறேன். இயல்பாகவே, அதிகமாக இயற்கையில் ரசனை உள்ளவள் பூ என்பதால், அப்பாவிடம் அடம் பிடித்து கிளி வளர்க்க ஒப்புதல் வாங்கினேன்.

அப்பாவும், சண்டே மார்க்கெட் (சனி,ஞாயிறு கிழமைகளில் வரும் துணி, மற்றும் ஏனைய விற்பனை இடம்) அருகில் விற்று வந்த கிளியை வாங்கிவந்தார். அது சின்ன கூட்டில் ஒரு பச்சைப் பசேளென்ற ஒற்றைப் பச்சைக் கிளி. ஜோடியாய் கிடைக்க வில்லை என்று சொல்லி, ஒற்றைக் கிளியை வாங்கி வர, உடனே அருகில் இருப்பவர்கள், கிளி வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது..! என்று சோதிடம் பேச ஆரம்பித்திருந்தனர்.

பக்கத்து வீட்டு வாலுப்பசங்க அவங்களே முன் வந்து, ஒரு அழகான வீடு போன்ற பச்சை நிற பெயிண்ட் அடித்த கூண்டைத் தந்தார்கள். ஆங். மறந்துட்டேனே பச்சைக் கிளிக்கு பெயர் வைக்கும் விழா இனிதே நடந்தேறியது. சீனு! என்று பெயரிட்டோம்.. அது ஆண் கிளி என்ற நம்பிக்கையில்!

சீனுவுக்கு ஏனோ புதிய இடமாதலால் ஒரே கோபம்.. கையை கூண்டினுள் விட்டாலே. கடிக்க வந்தது. பின்பு வெளியே எப்படி வளர்க்க..?? ஒருவேளை அந்த கிளி விற்பவர் ரொம்ப கொடுமை செய்திருப்பாரோ என்னவோ!! எப்படியோ அந்த கூட்டிலிருந்து எடுத்து, பெரிய வீட்டுக்கு (பெரிய கூண்டிற்கு) குடி புகச் செய்தோம்.

அடுத்து சீனுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம்னு ஒரு பெரிய மீட்டிங் நடந்தது. யாரோ மிளகாய் பழம் கொடுத்தா கிளி பேசும் என்று சொல்ல. நாங்களும் அதை நம்பி.. நன்கு பழுத்த மிளகாயைத் தேடி குட்டி கிண்ணத்தில் போட்டு உள்ளே வைத்தோம்.. அவ்வளவு தான் அதை வந்து பார்த்து.. ஒரு கொத்து கொத்திட்டு.. ஏற்கனவே படு கோபத்தில் இருந்த சீனு. கோபம் உச்சிக்கு ஏறி.. .கூண்டின் இருபுறமும் நடந்து நடந்து கிண்ணத்தைத் தட்டி விட்டது.

சரி சீனுவுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசித்து.. கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக்கி முதலில் கிண்ணத்தில் போட்டோம். அப்புறம்.. நிலக்கடலை.. சீட் லெஸ் மாதுளை இப்படி நான் சாப்பிடும் எல்லாமும் அதற்கு பரிமாறப்பட்டது.. நான் சாப்பிடாட்டியும் அதுக்கு கொடுத்து வந்தேன் ஆனா சீனுவுக்கு எங்க குடும்பத்து மேல் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. எங்களோடு பழகவுமில்லை.

எந்த இடத்தில் கூண்டினை மாட்டுவது என்று கேள்வி எழ எங்க வீட்டில் வெளிப்புறத்தில் ஒரு வராண்டா போல இருக்கும் இடத்தில் கதவின் அருகில் கட்டித் தொங்கவிட்டோம். கூண்டிலிருந்து சீனுவின் கழிவு உரமாக, மண்தரை அடியில் இருக்கும் இடத்தில் கூண்டினைப் பொருத்தினோம்.. அந்த மண் தரையில் தான் எங்க மினி கார்டனிங் ஆரம்பித்திருந்தோம். மருதாணி, எலுமிச்சை, ஜாதிமுல்லை, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, துளசி, லைன் கீரை, கற்பூரவல்லி இலை இப்படி பல.

இந்த களேபரங்கள் முடிய மாலை துவங்க ஆரம்பித்திருந்தது.
தென்னந்தோப்புகளுக்கு கூடு நோக்கித் திரும்பும் கிளிகள் வானில் கீ கீ..! என்று கத்திக் கொண்டு செல்ல.. கூண்டில் இருக்கும் சீனு படாத பாடு படும்.. வானைப் பார்த்து. இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடிச் சென்று அது படும் பாடு சொல்லி மாளாது. உள்ளே சாப்பிட வைத்திருக்கும் கிண்ணம் அதன் கால் தட்டி கவிழும். எல்லா உணவுப் பொருளும் மண் தரையில் விழும். இரவில் பூனைகளின் அட்டூழியம் தாங்காமல், தினமும் சீனுவினைப் பாதுக்காக்க, எங்க வீட்டில் உள்ள சமையல் அறையில் கூண்டினை எடுத்து வைத்துவிடுவோம்.

சீனு படும் அவஸ்தை என் மனதை உலுக்கி எடுத்தது. தினம் தினம் காலையும் மாலையும் இதே நிலை தொடர்ந்தது. அது இரவில் படு சோகமாய் அமர்ந்திருக்கும் நிலை பார்த்து (தூக்கத்தில் அப்படி இருக்கா துக்கத்தில் அப்படி இருக்கா என்று புரியாட்டியும்:confused::icon_ush:) ஏனோ.. அது அழுவது போல் தோன்ற.. எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரும்! அதன் கூடவே வெகுநேரம் அமர்ந்து நானும் அதன் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்வேன்.

ஒரு கிளியின் மனம் எனக்கு புரிய ஆரம்பித்திருந்தது. என் சீனு என்னோடு இருக்க வேண்டும் எப்போதும் என்ற எண்ணம் என்னில் மறையத்துவங்கியிருந்தது. அடுத்து, என் சீனுவின் சந்தோசம் எதுவென்று யோசிக்க ஆரம்பித்தேன். பறவைகளைக் கூண்டில் அடைப்பது எவ்வளவு பிழை என்று பலர் சொல்லக் கேட்டாலும், அனுபவத்தில் அறிந்து கொண்டேன். அடுத்து, என் வீடே.. சீனுவின் சந்தோசத்திற்கு வழி காண யோசிக்கலாயிற்று.

நானும் என் அண்ணனும் முதல் கட்டப் பணியை ஆரம்பித்திருந்தோம்.

சீனுவுக்கு பறக்கத் தெரியுமா?? என்று ஒரு கேள்வி எழுந்ததால்.. அப்போ அதனைச் சோதிக்க.. முன் அறையில் சீனுவினைக் கொண்டு வந்து எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு, கூண்டினைத் திறந்தோம். அண்ணன் மெல்ல சீனுவினைப் பிடித்து மேல் நோக்கி விட அது சிறகுகள் அடிக்க அடிக்க மேலே செல்லாமல் கீழே வந்தது. புரிந்தது சீனுவுக்கு.. இறகுகள் வெட்டப்பட்டிருக்கு பறக்க போதுமானதாக இல்லை.. இதற்கிடையில் தற்காலிகமாய் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் எங்களிடம் ஏற்கனவே வெகு கோபமாய் இருந்த சீனு, பீரோ அடியில் சென்று ஒளிந்து கொண்டது. கையை விட்டால் என் அண்ணனுக்கு கடி மிச்சம்.. மீறி குச்சி விட்டால் வெளிவந்து.. கட்டிலின் அடியில் சென்றது நான், அண்ணா, அம்மா எல்லாரும் சேர்ந்து சீனுவைப் பிடித்து ஒருவழியாய் மீண்டும் கூண்டில் அடைத்தோம். வீரச் செயலில் வெற்றிவாகை சூடியவர் என் அண்ணா.

அடுத்த கட்ட நடவடிக்கை.

சீனுவுக்கு இறகு வளரும் வரை உணவிட்டு வளர்த்து, பறக்க பயிற்சி கொடுப்பது என்ற தீர்மானம் ஒரு மனதாக எங்க வீட்டில் எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சீனு படும் துயர் பார்த்து தினம் தினம் நான் அழுவது கண்டு, கிளி பாவம்.. வாங்காதேன்னு சொன்னா கேட்குறாளா பூவு.. இப்ப சீனு சோகத்தைப் பார்த்து உட்காந்துட்டு அழுகை வேறு இப்படி சரமாரியாக வசை மொழி நான் வாங்க, கிளி பிடிப்பவரிடமிருந்து காப்பாத்தினேனே. நான் பத்திரமா தானே வச்சிருக்கேன் என்று சொல்லி அம்மாவிடம் என் தன்னிலை விளக்கம் கொடுத்தேன்.

ஒரு மாத காலம் இந்த நிலை. இதற்குள்.. சீனு நல்ல புஸ்டியாய் ஆனதோடு மட்டுமல்லாமல் சிறகுகளும் வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலை, நான் பள்ளிக்குச் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருக்க என் அண்ணா சாப்பிட்டு முடித்து வெளிவர, சீனு வழக்கம் போல், மேலே சென்ற கிளிக்கூட்டம் கண்டு தாவித் தாவி ஓட ஆரம்பித்து கீ கீ என்று உச்ச சாயலில் தனது ஏக்கத்தையும் வருத்தத்தையும் சொல்லி அந்த கிளிக்கூட்டத்தை தன் புறம் அழைக்க

அப்போ தான் நடந்தது அந்த அற்புத நிகழ்வு....:icon_b:

ஆம் என் அண்ணா என் சீனுவுக்கு விடுதலை கொடுத்திருந்தார். பல நாள் பயிற்சி பெற்ற சீனு இறகுகள் அடித்து வெகு வேகமாய் மேலே எழும்பிச் சென்று கிளிக்கூட்டத்தோடு இணைந்து V வடிவ கூட்டத்தில் இரு முனையில் ஒரு முனைக்குச் சென்று பறக்கலாயிற்று.

ஒரு மிகப் பெரும் மகிழ்ச்சி என் மனதில் அன்று தோன்றியது. சீனு எங்களிடம் அன்பு மட்டும் காட்டவேயில்லை என்றாலும், இன்றும் அதன் நினைவாக சீனு விட்டுச் சென்றவை அற்புதமானவை.

சீனுவுக்காக நாங்கள் கொடுத்த உணவுப்பொருட்களான, நிலக்கடலை, மாதுளை போன்றவை சீனு கூண்டினுள் ஓடி ஓடி கிண்ணத்தைத் தட்டி விட்டதால், கீழே விழுந்து மண்ணில் முளைத்தன.

நிலக்கடலை விளைந்து நிறைய கடலை கொடுத்தது. மாதுளை மரமாய் வளர்ந்து பல சுவையான மாதுளங்கனிகளை எங்களுக்கு வழங்கியது. மாதுளை மரத்தினைத் தடவிக் கொடுக்கையில், சீனுவினை தடவிக் கொடுப்பது போன்ற ஒரு பிரமை மனதில் வந்து போகும். அதன் கனிகளைச் சுவைக்கையில், வெகு அழகான என் சீனுவின் முகம் என் கண் முன் நிழலாடுகிறது. இப்போது என் கவலையும் வேண்டுதலும், என் சீனு நல்ல படியாய் சுதந்திரமாய் இருந்து, எந்த துப்பாக்கிக்கும், வேட்டையருக்கும் சிக்காமல் சந்தோசமாய் இருக்க வேண்டுமென்பதே! :icon_ush::traurig001:

அறிஞர்
21-01-2008, 06:24 PM
பாசமுள்ள கூட்டத்தின் நடுவில் சீனு இருக்காமல் பறந்து சென்றது.. வருத்தம் தான்...

சீனு விட்டு சென்ற மாதுளை, நிலக்கடலை... அவனை நினைவு கூற வைக்கிறது....

உம் விருப்பப்படி எங்கிருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும்.

பூமகள்
21-01-2008, 06:28 PM
உங்க வாழ்த்து பலிக்கட்டும் அறிஞர் அண்ணா.

சீனு என்னை விட்டுச் சென்றாலும், அதன் இருப்பிடம் தேடி சுதந்திரமாய் வாழ வழி செய்து கொடுத்ததே எனக்கு பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும். :)

முதல் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அண்ணா.

ஆதி
21-01-2008, 06:57 PM
கிளிகள் என்றால்
எனக்கும் மிகப் பிடிக்கும்..
இந்தப் பதிவை வாசித்த
நேரத்தில்..
நான் வளர்த்த கிளிகள்
என் மனசுக்குள் பறந்தன..
அவை மென்பாதம் எடுத்து
மெதுவாய் நடந்துவந்து..
மெல்ல என் தோள் ஏறி..
சிறிய சிறகு விரித்து
சாமரமாய் காது மடல் சிலிர்க்க
சின்னதாய் விசிறி..
குட்டி நகங்களாய்
மெல்ல அழுந்தி கீறி..
தலை சிலிப்பி பார்க்குமே..
அத்தனையும் அத்தனையும்
என் கண்களில் வழிந்தன..

இது ஒரு ஈரமானப் பதிவு, கண்ணீரைக் கற்றை கற்றையாய் கண்களில் தேக்கி வார்த்தைகளாய் வழியவிட்டிருக்கிறார் பூமகள்...

நாம் வளர்க்கும் உயிரினங்கள், வைகரைச் சேற்றில் தேங்கி கிடக்கிற நிலாவைப் போல் மனதுக்குள் தேங்கிவிடும் ஒரு சகவாசியாய்.. ஒரு நல்ல நண்பனாய்..

நாம் நண்பர்களோடு பகிர முடியாதவைக்களும் அந்த தோழனோடு பகிர முடியும்.. நம் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கேடுக்கிற உரிமையும் கொடுக்கப்படும்..

நாம் அழுதால் தானும் அழுது, நாம் சிரித்தால் தானும் சிரிக்கும் இயல்புடையவை அவை..

எங்கோ தூரத்தில் மிதிவண்டியின் பெல்லொலி கேட்டாளே ஒடி வரும் நாய் என் குரல் கேட்டாலே கீழ் இறங்கி வந்து விசில் அடிக்கு என் கிளி, குய்குய் என கூச்சல் இட்டு என் கவனத்தை பெறமுயலும் காதல்பறவைகள் எல்லாம் என் ஞாபகங்கள் ஓடி பறந்து சத்தமிட்டு கொண்டிருக்கின்றன..

பூமகளின் சீனு அவருடன் தன் அன்பை பகிராமல் போனாலும் அதை புரிந்து கொள்கிற மனம் பக்குவம் பூமகளுக்கு இருந்திருக்கிறது.. காசு கொடுத்து வாங்கிய கிளி தன்னுடன் பழகவில்லை என்று நியாயமான கோவம் வருவதற்கு பதிலாக அது ஏன் சோகமாக இருக்கிறது என்று எண்ணும் சிந்தனையே அவருக்கு பெரிதும் இருதிருக்கிறது..

உங்களை விட்டு சென்ற சீனுவின் ஞாபகங்கள் உங்களுக்கு முன் நிலக்கடலையாய் மாதுலையாய் வளர்ந்து நிற்கிறது, உங்களுடன் பழகாத சீனுவின் ஞாபகங்களாலான மாதுலையும் நிலக்கடலையும் உங்களுடன் பழகும்.. சீனுவே பறப்பதாய் அதன் பச்சை இலைகள் அசையும்..

உங்கள் சீனு எங்கு இருந்தாலும் சிரித்து இருக்க என் பிராத்தனைக்கள்..

வார்த்தைகளை ஈரமாய் வடிக்க உங்களால் இயன்றிருக்கிறது.. சின்ன வயதில் நடந்தாதை சிதாறாமல் தரும் எந்தப் பதிவும் சிறந்ததே.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

அன்புடன் ஆதி

மயூ
22-01-2008, 01:50 AM
அருமை.. அருமை...
ஓரு கிளியின் பின்னால் இப்படி டச்சிங்கான கதை! முடிவில் கிளி விடுதலை பெறும் காட்சி வாசிக்கும் போது படமாக விரிந்தது!!! உங்கள் எழுத்துக்களின் வலிமை புல்லரிக்க வைக்கின்றது!

மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்~!

பாரதி
22-01-2008, 01:42 PM
பூக்கிளியா..? இல்லை பூங்கிளியா..?

என் கிளி என்று நீங்கள் உரைத்திருப்பதிலிருந்தே உங்களின் அன்பு புலனாகிறது. இதைப்படித்து யோசித்தால்..

அன்பு வைக்க
காரணமே இருப்பதில்லை..
கால நேரமும் பார்ப்பதில்லை.
காலம் கடந்தாலும் கரைவதில்லை.

கண்ணிலிருந்து மறைந்தாலும், கனவில் வந்து வம்பு செய்யும் சீனு..!

சீனு..! மூன்றாம் பிறை பாதிப்பா..??

இதைப்படித்தால் சிறு வயதில் கோழிக்குஞ்சு வளர்த்த நினைவும் வருவதை தவிர்க்க இயலவில்லை.

குறைந்த பட்சம் சீனு மகிழ்ந்தது என்ற நினைவும், அது விட்டுச்சென்ற உரமும் (!) இந்தப்பதிவை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறது. அந்த வகையிலும், சம்பவங்களை அசைபோடும் கூட்டத்தில் இணைந்த வகையிலும், மனதில் பதியன் போடும் வகையில் எழுதிய வகையிலும் இந்தப்பதிவு பாராட்டுக்குரியது.

இன்னும் எழுதுங்கள் பூ.

அன்பே சிவம்.

பூமகள்
25-01-2008, 11:17 AM
வார்த்தைகளை ஈரமாய் வடிக்க உங்களால் இயன்றிருக்கிறது.. சின்ன வயதில் நடந்தாதை சிதாறாமல் தரும் எந்தப் பதிவும் சிறந்ததே.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
உங்கள் கிளி அனுபவம்
மெய் சிலிர்க்க வைக்கிறது..!

பூ மண(ன)ம் புரிந்து
பெரும் விமர்சனம் கொடுத்தமைக்கு
நன்றிகள் ஆதி. :)

பூமகள்
25-01-2008, 11:32 AM
அருமை.. அருமை...
ஓரு கிளியின் பின்னால் இப்படி டச்சிங்கான கதை! முடிவில் கிளி விடுதலை பெறும் காட்சி வாசிக்கும் போது படமாக விரிந்தது!!! உங்கள் எழுத்துக்களின் வலிமை புல்லரிக்க வைக்கின்றது!
மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்~!
என் பள்ளி நாட்களில் எப்போதோ நான் என் "சீனு" பற்றி ஒரு சிறு பத்தியாக எழுதி பத்திரிக்கைக்கு அனுப்ப, அது தினமணி சிறுவர் மணி இலவச இதழில் ஒரு அரைப்பக்க பதிவாக வெளிவந்தது.

அதனை பலவருடம் கழித்து, உங்கள் முன் இத்தனை பெரியதாய் விவரித்திருக்கிறேன். உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த ஊக்கமாய் இருக்கிறது.

மிகுந்த நன்றிகள் மயூ.

பூமகள்
25-01-2008, 12:04 PM
பூக்கிளியா..? இல்லை பூங்கிளியா..?
பூவின் கிளி தான் பூங்கிளி..!!

குறைந்த பட்சம் சீனு மகிழ்ந்தது என்ற நினைவும், அது விட்டுச்சென்ற உரமும் (!) இந்தப்பதிவை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறது. அந்த வகையிலும், சம்பவங்களை அசைபோடும் கூட்டத்தில் இணைந்த வகையிலும், மனதில் பதியன் போடும் வகையில் எழுதிய வகையிலும் இந்தப்பதிவு பாராட்டுக்குரியது.
இன்னும் எழுதுங்கள் பூ.உங்களின் ஆசியால் நிச்சயம் என் சீனு நலமாக சிறகடித்துப் பறந்துட்டு இருக்கும் என்று மனம் நிறைந்திருக்கிறது.
உங்களின் ஊக்கமான பின்னூட்டத்துக்கு நன்றிகள். :)

ஓவியன்
25-01-2008, 01:32 PM
கூண்டுக் கிளி என்றாலே ஏனோ மனம் பதை பதைக்கிறது, தாயகத்திலும் கூண்டுக் கிளிகளாக உள்ள உறவுகளின் ஞாபகங்கள் வந்து நெஞ்சை அழுத்துவதாலோ என்னவோ....

கரிசனத்துடன் கவனிக்க ஒரு வீடே காத்திருக்க, கீச்சென்றால் பழமும் தானியங்களும் தர பூமகள் ஓடிவர இத்துணை வசதியிருந்தும் எல்லாவற்றையும் விட்டு சட சடவென்று சிறகடித்து விண்ணில் பறக்க ஏங்கியிருக்கிறது இந்த பூங்கிளி. கிளியைக் கூண்டுக்குள் அடைத்த போதும் அதன் மனதை, சிறகடிக்க வேண்டும் என்ற சுதந்திர உணர்வை கூண்டிலே அடைக்க முடியவில்லை. ஆனால் அந்த பூங்கிளி பாக்கியம் செய்த பூங்களி, அதனால் தானே தன் மன உணர்வை புரிந்து கொள்ளக் கூடிய பூமகள் வீட்டிலே வந்து தங்கி பாதுகாப்பாக இருந்து பறப்பு பயிற்சியும் பெற்று தன் சுதந்திர கனவை சிறகடித்து அனுபவிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறது. இது எல்லாக் கிளிகளுக்கும் கிடைப்பதில்லை, அதனால் தான் இன்னமும் பல கூண்டுக் கிளிகள் கூண்டுகளிலே இருந்து வானத்தைப் பார்த்து அட இந்த வானத்துக் கிளிகளுக்கு பறக்கவும் தெரியுமா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன.....

மனிதரின் மனம் புரியவே மறுக்கும் இந்தக் கலி யுகத்தில் பூங்கிளியின் மனமறிந்து கூண்டுக் கிளிக்கு சுதந்திரம் தந்த பூமகளுக்கும் கிளியிடம் கொத்து மேல் கொத்து வாங்கியும் அதன் பறப்பு முயற்சிக்கு உறுதுணையாயிருந்த பூமகளின் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

பூமகள்
25-01-2008, 02:00 PM
மனிதரின் மனம் புரியவே மறுக்கும் இந்தக் கலி யுகத்தில் பூங்கிளியின் மனமறிந்து கூண்டுக் கிளிக்கு சுதந்திரம் தந்த பூமகளுக்கும் கிளியிடம் கொத்து மேல் கொத்து வாங்கியும் அதன் பறப்பு முயற்சிக்கு உறுதுணையாயிருந்த பூமகளின் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....
ரொம்ப சரி ஓவியன் அண்ணா.:)

கிளியிடம் கடி வாங்கி கோபப்படாமல் பறக்க விட்டவர் என் அண்ணா தான். :rolleyes:
அது பறப்பதைக் கூட என்னால் அருகில் பார்க்க முடியவில்லை. :frown:
நான் வெளியே ஓடிவந்து பார்ப்பதற்குள் வெகு தூரம் பறந்து சென்றுவிட்டிருந்தது.

தூரத்தில் இருந்து பார்த்து, சீனுவை மனமாற வாழ்த்தி விடைகொடுத்தேன் விழியோர ஈரத்தோடு...!

அழகான பின்னூட்டத்துக்கு நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

யவனிகா
25-01-2008, 04:22 PM
அடடா...கிளிக் கொஞ்சலாய் பூவிடம் இருந்து உண்மைச் சம்பவம்.
பூ உண்மையாகவே பூ மனம் கொண்ட பெண் தான், அது எனக்கு முன்னமே தெரியும். இந்தப் பதிவு அதை நிரூபிக்கிறது.

அழகாக விவரித்திருக்கிறாய் பூ.வாழ்த்துக்கள்.

கிளின்னா எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.என் கணக்கு ட்யூசன் டீச்சர் வீட்டில் கிளி வளர்ப்பார்கள். எப்பவும் 'கால்குலஸ்"மட்டும் எனக்கு சரியாகவே வராது. தப்பாய் போட்டுட்டுப் போனா, டீச்சர்...என்ன மண்டு..அறிவு இல்ல? அப்படின்னு திட்டுவாங்க...அதப் பாத்து அந்த கிளியும் என்ன 'மண்டு" ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருச்சு பூவு...இந்தக் கதைய எங்க போய் சொல்ல. அப்புறம் ஒரு சமயம்...ஒரு கிளி ஜோசியக்கார கிளிக்கு பாவப்பட்டு நெல்லு குடுக்கப் போக அது கொத்துச்சு பாரு...

இப்படி கிளி வம்சத்தால அக்கா பல முறை வஞ்சிக்கப் பட்டேன் பூவு....

பூமகள்
25-01-2008, 04:47 PM
அடடா...கிளிக் கொஞ்சலாய் பூவிடம் இருந்து உண்மைச் சம்பவம். பூ உண்மையாகவே பூ மனம் கொண்ட பெண் தான், அது எனக்கு முன்னமே தெரியும். இந்தப் பதிவு அதை நிரூபிக்கிறது. அழகாக விவரித்திருக்கிறாய் பூ.வாழ்த்துக்கள்.
வெகு சீக்கிரத்தில் பூவின் மனம் புரிந்தவர்களில் மிக முக்கியமானவர் தாங்கள்..! :)

சந்தோசமா இருக்கு யவனி அக்கா...!

இதுக்கு மேல எழுதினா.. இங்க நிறைய பேருக்கு காதுல புகை வரும்..!!

சரி சரி.. நிப்பாட்டிக்கறேன்..!!:)

அந்த கிளியும் என்ன 'மண்டு" ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருச்சு பூவு...இந்தக் கதைய எங்க போய் சொல்ல. அப்புறம் ஒரு சமயம்...ஒரு கிளி ஜோசியக்கார கிளிக்கு பாவப்பட்டு நெல்லு குடுக்கப் போக அது கொத்துச்சு பாரு...இப்படி கிளி வம்சத்தால அக்கா பல முறை வஞ்சிக்கப் பட்டேன் பூவு....

என்னது.. கிளி உங்களை கொத்துச்சா???!! :aetsch013: அது அதுக்கப்புறம் உசிரோட இருந்துதா அக்கா??? ஏன் கேக்குறனா..அது நேரா சொர்க்கத்துக்கு அல்ல போயிருக்கும்..!! (ஜஸ்டு மிஸ்ல தப்பிச்சிட்டேன்..அப்பாடா..!:eek::p)

என்னையும் என் சீனு விட்டுவைக்கல அக்கா..!! கடி வாங்கி.. ரத்தம் பார்த்த அனுபவமும் இருக்கு...ஹீ ஹீ..!!:D:D
ஒரே வித்யாசம்.. என்னை மண்டுன்னு அது கூப்பிடலை.. முறைச்சே பாதி உசிர வாங்கிருச்சி...!! :icon_ush::icon_ush:

அன்பான பின்னூட்டத்துக்கு நன்றிகள யவனி அக்கா. :)

யவனிகா
25-01-2008, 06:02 PM
சுகந்தா...பூவு என்னமோ எழுதிருகின்னு தெரியுது...ஆனா என்னன்னு தான் தெரியல...உன் எஸ்ரே கண்ணுக்காவது ஏதாவது தெரியுதா....சொல்லு.

பூமகள்
25-01-2008, 06:14 PM
சுகந்தா...பூவு என்னமோ எழுதிருகின்னு தெரியுது...ஆனா என்னன்னு தான் தெரியல...உன் எஸ்ரே கண்ணுக்காவது ஏதாவது தெரியுதா....சொல்லு.
எழுத்துரு மாற்றி உபயோகித்தேன்..!:icon_ush:
அது சரியா தெரியல போல...!! மன்னிச்சிருங்க அக்கக்கா....!!:icon_ush::)

இப்போ பாருங்க தெரியும்..!!
ஹீம்.. பூம் பா... போட்டு மாத்திட்டோம்ல...!! :icon_b:

செல்வா
25-01-2008, 07:30 PM
பூமகளோட.... கிளி அனுபவம் படிக்கும் போது ...

சின்ன வயசுல ஒரு நா.... காலைல பள்ளிகூடத்துக்கு போனாக்க அன்னிக்கி எங்க வகுப்பறைய திறக்கறதே நான் தான் ஏன்னா அவ்ளோ சீக்கிரா போய்ட்டேன். திறந்து உள்ளுக்குள்ள பாத்தா ஒரு அணில் சாலியா சுத்திட்டுருந்தாரு .... விடுவோமா நாம... வெரட்ட ஆரம்பிச்சோமுல்ல... அது ஒவ்வொரு வகுப்பறையா .... ஓட ஓட.... நாமளும் பின்னால துரத்த ஒண்ணு ரெண்டா சேர ஆரம்பிச்சு ஒரு கூட்டமே... துரத்துது....
அட அட.... என்ன ஒரு ஓட்டப் பந்தயம்னு நெனக்கிறீங்க..... அடிச்சு பிடிச்சு உருண்டு புரண்டு பல விழுப்புண்களோட எழுந்து பாக்கும் போது என்னோட உள்ளங்கைய கடிச்சுப் பிடிச்சபடி தொங்கிட்டுருக்கு அணில்...
ஒரு வழிய அதோட பிடிய விடுவிச்சா.. உள்ளங்கைலருந்து கொட்டிகிட்டுருக்கு இரத்தம். வலி ஒருபக்கம் இருந்தாலும்... அந்த கூட்டத்துல அதெல்லாம் காமிக்க முடியுமா ... வெற்றிக் களிப்போட ஒரு கூட்டமா சேந்து போயி வீட்டுல கொண்டு ஒரு பொட்டிக்குள்ள போட்டு மூடிட்டு எங்கம்மா கிட்ட ஒழுங்கா அணிலுக்கு சோறுவைக்க சொன்னா அவங்க கைல வழியிற இரத்தத்த பாத்து பயந்து காத புடிச்சு இழுத்துட்டு போயி ஊசி போட வச்சுட்டாங்க....
பள்ளில இருந்த நமக்கு பாடமே... ஒட்டல.... எப்ப பாத்தாலும் அணில் தான் .. இப்போ இந்த அணிலுக்கு ஒரு சோடி புடிக்கணுமே... நம்ம குமாரு நல்லா மரம் ஏறுவான் அவன்கிட்ட சொல்லி வச்சாச்சு.. சாயங்காலம் மணி அடிச்சதும் மொத ஆளா புத்தவத்தயும் தூக்கிட்டு மாமா வீட்டு கொய்யா மரத்துல ரெண்டு காயும் பறிச்சுட்டு அடிச்சு பிடிச்சு வீட்டுக்கு ஓடிப்போயி... பொட்டிக்குள்ள பாத்தா......... அணில காணேல.... வீடு முழுக்க தேடுனா பின்னாலருந்து... என்ன அணிலயா தேடுற.... அது படுற பாடு பாக்காம நான் தான் தொறந்து விட்டுட்டன்... பாவம்புல...அது போட்டும்ல...ன்னு சொன்னாங்க அம்மா...
அவ்ளோ தான் வீடே அதகளம் தான்..... ஓரே அழுக ..... கண்டுக்கவே இல்ல எங்க அம்மா..... கோவத்துல...ஒரு பாத்திரத்த தூக்கி போட்டன் சத்தம் கேட்டு வெளிய முத்தம் தூத்துட்டுருந்தவிய உள்ள வந்தாவ... கைல... புதுசா செஞ்ச தென்னங்கீத்து வெளக்கமாறு..... வாங்குன அடி இருக்கே..... இப்போ .... அணில பாத்தாலும் இந்த அடிதான் ஞாபகம் வரும்............
ஹ்ம்ம்ம்ம்ம்................................
இப்படி என்னயும் பொலம்ப வச்சுட்டியே.......... பூவு.........

சுகந்தப்ரீதன்
26-01-2008, 05:48 AM
வாழ்த்துக்கள் பூ...! சிறுவர்மணியிலியே உன் படைப்பு வர அளவுக்கு உன்ன பாதிச்சிருக்கு அந்த சீனு..!ம்ம்ம் ரொம்ப பெரிய மனுசிம்மா நீ..!:icon_b:

ஆனா இந்த பேர எதுக்கு வச்ச நீ..:traurig001:? அதுக்கு ஒரு குட்டு உனக்கு.. பின்ன கிளி ஆணா பெண்ணான்னு சொல்லாம பேர மட்டும் சொன்னா எப்படியாம்..?

அது எப்படி பூ.. உன்னால மட்டும் சோகமும் சுவையும் கலந்து உன்னோட சொந்த அனுபவத்த எழுத முடியுது..?நல்ல எழுத்து நடை..! அதுக்கு எனது பாராட்டுக்கள்..!:icon_ush:

எனக்கு இப்ப இந்த பாட்டு ஏனோ ஞாபகத்துக்கு வருது பூ..!
பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
நாளை வரும் கச்சேரிக்கு..!:smilie_abcfra:

உன்னோட சீனு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கும் பூ.. நீ கவலைபடாம கடலையும் மாதுளையும் தின்னுட்டு குண்டாக சீனுவின் சார்பில் எனது ஆசிர்வாதங்கள்..!:aetsch013:

இன்னும் நிறைய இது போல எழுதுங்க பூ..!:)


சுகந்தா...பூவு என்னமோ எழுதிருகின்னு தெரியுது...ஆனா என்னன்னு தான் தெரியல...உன் எஸ்ரே கண்ணுக்காவது ஏதாவது தெரியுதா....சொல்லு.
யக்கா இதான வேணாங்கிறது.. நான் கண்ணாடி போட்டிருக்கேங்கிறத இப்படியெல்லாம் நவீனமயமா சொல்றது கொஞ்சமும் நல்லா இல்ல சொல்லிட்டேன்..! அப்புறம் நான் மாமா கட்சிக்கு தாவிடுவேன்..!:icon_rollout:

பூமகள்
26-01-2008, 06:01 AM
ஹ்ம்ம்ம்ம்ம்................................
இப்படி என்னயும் பொலம்ப வச்சுட்டியே.......... பூவு.........
அச்சச்சோ.... செல்வா அண்ணா..!
அணில்... பிடிச்சி... விழுப்புண் பட்டு.... கடி வாங்கி... விளக்குமாரால் அடியும் வாங்கி.... கடசில அணில் உங்களுக்கு டாட்டா சொல்லாமலே போய்விட்டதே...!!

எனக்கு அணில் என்றாலே ரொம்ப பிடிக்கும்..!

மொட்டை மாடியில்.. பத்தகத்தில் மூழுகியிருக்க... பக்கத்துவீட்டு தென்னை மரத்தின் பாதி ஏறி.. கைபிடி சுவற்றில் தாவி குதிக்கும்..!

பார்க்கும் பார்க்காம நான் இருந்தா... மெல்ல மெல்ல கையில் ஏதோ கொட்டை வைத்து கடித்துக் கடித்து... அருகில் வரும்.... நீண்ட புசுபுசு வாலும்... அழகான முதுகில் மூன்று கோடுகளும்... சாம்பல் நிறத்தில் கியூட் குட்டி முகமும் கண்களும்... கண்டும் காணாமல் நான் ரசிக்க....

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அருகில் செல்ல... கொஞ்சம் அசைந்தாலும்.. குடுகுடுவென்று ஓடிச் சென்று மரமேறி இலைக்கிடையே ஒளியும்...!!:rolleyes:

நினைவுகளை எங்கே கொண்டு செல்கிறது உங்கள் பதிவு..!!
செல்வா அண்ணா.. இந்த பதிவை இன்னும் பெரியாத எழுதி.. தனித்திரியா போடுங்க.. அணில்.. ஓநான்..ஒடக்கான்.. இப்படி எத்தனை பிராணிகள் கடி வாங்கினீங்கன்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோமே...!!:)

அழகான பின்னூட்டத்துக்கு நன்றிகள் செல்வா அண்ணா.

பூமகள்
26-01-2008, 06:18 AM
அது எப்படி பூ.. உன்னால மட்டும் சோகமும் சுவையும் கலந்து உன்னோட சொந்த அனுபவத்த எழுத முடியுது..?நல்ல எழுத்து நடை..! அதுக்கு எனது பாராட்டுக்கள்..!:icon_ush:
எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் சுகந்தப்ரீதன். உங்க குட்டிப் பாப்பா சம்பவத்தை விடவா அழகா நான் இங்கு விவரிச்சிருக்கேன்..!! :icon_ush:

உன்னோட சீனு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கும் பூ.. நீ கவலைபடாம கடலையும் மாதுளையும் தின்னுட்டு குண்டாக சீனுவின் சார்பில் எனது ஆசிர்வாதங்கள்..!:aetsch013:
அது ஆணா பெண்ணான்னு எனக்கு கண்டுபிடிக்க தெரியலையே...!
கிளி வித்தவர் சொன்னது.. ஆண் கிளி என்று... அதான் "சீனு" என்று பெயர் வைத்தேன்..!!
அப்புறம்.. சீனுவே என்னோடு இருந்திருந்தா கூட இத்தனை பெரிய ஆசிரிவாதம் கொடுத்திருக்காது...!!:D:D
ரொம்ப நன்றி சுபி..!!

இன்னும் நிறைய இது போல எழுதுங்க பூ..!:)
கண்டிப்பா முயல்கிறேன் சுபி..!! :icon_ush:
நீங்களும் நிறைய எழுதுங்க..! அப்ப தான் நானும் நிறைய எழுத கத்துக்க முடியும்..!:)

ஓவியன்
26-01-2008, 06:46 AM
ஹ்ம்ம்ம்ம்ம்................................
இப்படி என்னயும் பொலம்ப வச்சுட்டியே.......... பூவு.........

பூங்கிளி கதை, இங்கே ஒரு செல்வ அணில் கதையையும் புலம்ப வைச்சுட்டுதே...
புலம்பலென்றாலும் அணில் கதை அழகோ அழகு..
அணிலைப் போலவே...!!:)

மனோஜ்
26-01-2008, 07:12 AM
கிளிக்கு விடுதலைகொடுத்த உங்கள் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
பிரிவின் சோகம் இருந்தாலும் மனதின் பாறம் இல்லை பூ.....மா

இதயம்
26-01-2008, 08:09 AM
இங்க என்ன நடந்திட்டிருக்கு..?! நீங்கள்லாம் மனசில என்ன நெனச்சிட்டிருக்கீங்க..?:sauer028::sauer028: இந்த பூவு என்னடான்னா கிளியை பத்தி போட்டுருக்கு. செல்வா அணிலை பத்தி போட்ருக்கார். யவனியக்கா குரங்கை... அடச்சே.. ஒரு சதிகார கிளியை பத்தி போட்ருக்காங்க..! இங்க பதிவு, பின்னூட்டம் போட்ட ஒவ்வொருத்தருக்கும் புள்ளை, குட்டிகளோட 2 கழுதை, 4 கழுதை வயசாவது. ஆனா எழுதியிருக்கிறத பார்த்தா ஏதோ நேத்து எல்கேஜில சேர்ந்த பாப்பா மாதிரி இருக்கு..! கொஞ்சம் கூட மெச்சூரிட்டி வேணாம்..?!! சின்னப்பசங்க..!! ஒழுங்கா இருக்கணும் ஆமா..! நான் எழுதியிருக்கிறத படிச்சிட்டு அது மாதிரி எழுத முயற்சி பண்ணுங்க..!!

எனக்கும் பூ மாதிரி பறவை, செல்லப்பிராணி, செடி வளர்க்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம்..! செடி வளர்க்கிறேன்னு வளர்த்து, வளர்த்து எங்கப்பா காசை காலியாக்குனதும், பறவை, பிராணி வளர்க்கிறேன்னு அதை அற்ப ஆயிசாக்கி சாவடிச்சதும் தான் மிச்சம். ஆனாலும் (கொல்றதுல) ஆர்வம் மட்டும் குறையவே குறையலை. ஒரு தடவை சின்னப்பிள்ளையா இருக்கும் போது பட்டுக்கோட்டையில பிச்சையெடுத்திட்டிருந்த யானையை பார்த்துட்டு அதை வாங்கித்தரச்சொல்லி அம்மாக்கிட்ட அடம்பிடிச்சத இப்ப நினைச்சாலும் சிரிப்பு, சிரிப்பா வருது..! இது சம்பந்தமா என் கைவசம் நிறைய கதை இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும் இங்க போட்டா மேனகா காந்திக்கு மேட்டர் போய் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துல என்னை உள்ளை தூக்கிப்போட நானே எடுத்துக்கொடுத்த மாதிரி ஆயிடும். அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும்..!

ஒரு தடவை என்னோட ஏழு மாமாவுல ஒருத்தர் கிளிக்குஞ்சு ஒண்ணை கொண்டு வந்தார். உடம்பில கிளிக்கே உரிய இறகெல்லாம் முளைக்காம உரிச்ச கோழி மாதிரி இருந்த அதை பார்த்தா எனக்கு பாவமா இருந்துச்சி. ஆனாலும், அதைப்பார்த்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதை கையில வாங்கின உடனேயே அது நல்லா புசு, புசுன்னு பச்சை இறகெல்லாம் வளர்ந்து அழகாகி, நான் சொல்றதெல்லாம் செய்ற மாதிரியும், நான் பேசுறதையெல்லாம் பேசிக்கேட்கிற மாதிரியும், எங்க கிராமத்து தாத்தா வீட்டுக்கு கொண்டு போய் தாத்தாக்கிட்ட லெட்டர் கொடுத்திட்டு வர்ற மாதிரியும் கற்பனையில் கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அந்த கிளிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செஞ்சி உண்ண, உறங்க குறையில்லாம பார்த்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ல மொட்டிலேர்ந்து பூ மலர்ற மாதிரி சொரசொரன்னு இருந்த அது தோலிலேர்ந்து அசத்தல் பச்சைல இறகெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா முளைக்க ஆரம்பிச்சது.

நம்ம ஆள் கொஞ்சம், கொஞ்சமா க்ளாமர் ஆகிட்டிருந்தார். ஆனா, அன்புத்தொல்லை எப்பவும் ஆபத்து தானே..? அதுக்கு எவ்வளவு வேணுமோ அவ்ளோ தானே சாப்பிடும்.? நான் அதை தான் ஒரு அநாதைங்கிற நினைப்பில், கழிவிரக்கத்துல ஒழுங்கா சாப்பிடாம இருக்குதோன்னு கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன். எந்த அளவுக்குன்னா, கிளியோட அலகை விரிச்சி உள்ளே உணவை தள்ளிவிடுற அளவுக்கு..! கொஞ்ச நாள் கழிச்சி அது கொஞ்சம், கொஞ்சமா பலவீனமா போற மாதிரி தெரிஞ்சது. ஏன்னா எப்ப பார்த்தாலும் உறக்கமா இருக்கிறது, நடையில் தள்ளாட்டம் இப்படி..! நான் அதை உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டுன்னு நினைச்சிட்டேன். ஆனா, ஒரு குண்டன் தான் அதை கொஞ்சம், கொஞ்சமா அன்புத்தொல்லையால கொன்னுக்கிட்டு இருக்கான்னு எனக்கு அப்ப புரியலை.

ஒரு நாள் பாதுகாப்பா என் அறையில் வச்சிட்டு ஸ்கூல் போய்ட்டு திரும்பி வந்து பார்த்தா என் மவராசா உடல் ஊதி மரிச்சி போய் கிடந்தார். மனம் அப்படியே நொறுங்கி போச்சு..! ஒரு நாள் முழுசும் அழுதேன். அதை கொண்டு போய் ராணுவ மரியாதையோட எங்க வீட்டு பின்புறத்துல அடக்கம் பண்ணி, தினமும் சாயந்தரம் அந்த இடத்துல போய் அஞ்சலி செலுத்துற மாதிரி அரைமணி நேரம் நின்னுட்டு வருவேன். இப்படி பல கதை என்கிட்ட இருக்குங்க. !

தங்கை பூ பதிவு படிச்சி அவரின் ஈர மனதின் வெளிப்பாடு இன்னும் காயாமல் இருப்பது தெரியுது. ஒரு கிளிக்கிட்ட இத்தனை இரக்கத்தோட நடந்துக்கிட்ட தங்கை, பதிவுல அண்ணன்கிட்ட இரத்தம் வர்ற அளவுக்கு வன்முறை செய்றது ஏன்னு தெரியலை.:D:D

மனசை நெகிழ வச்ச பதிவு.. நன்றி பூமகள்..!!

அமரன்
04-02-2008, 02:23 PM
ஹும்... எல்லாருத்தான் சொல்றாங்க.. இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் நாமும் ஏதாச்சும் எழுதலாம்னு தீர்க்கதரிசனமா உணர்ந்துதான் அம்மாவிடம் கேட்டேன் அந்தக்கேள்வியை.. பக்கத்து வீடுகள்ள கிளி வளர்த்தாங்க.. அம்மாவிடம் நானும் கேட்டேன்..

"வேணாம்டா.. பாவம்டா.. செத்திடும்டா"
"ஏன் சாகுது.. கூட்லதானே வெச்சிருப்போம்"
"டே... நமக்குத்தான் அது கூடு.. அதுக்கு அது கூண்டு. வீட்ல அடைச்சு வெச்சா நீ இருப்பியா"
யோசிச்சேன்.. "அப்படின்னா திறந்து விட்டு வளர்ப்போம்"
"பறந்திடுமே"
"பக்கத்து வீட்டுக்காரங்க செய்தது போல செட்டை வெட்டி வளர்ப்போம்"
"நாம் அசந்த நேர்த்துல பூனை, நாய் தின்னுடுச்சின்னா"
எதுவுமே பேசத்தோணல.. சமாதானம் ஆகவும் முடியல.. பழுத்த புத்திசாலின்னு நினைச்சு எப்போதும் நான் வம்புக்கு இழுக்கும் பாட்டியின் அம்மாவிடம் முறையிட்டேன்..
"போடா போ.. உன் ஒருத்தனை வளர்க்கும்போதே அழிச்சாட்டியம் தங்க முடியல.. இதுல கிளி வேறயா.."

இதேபோல எனது முயல், புறா வளர்க்கும் ஆசைகள் நிறைவேறாமலே போச்சு.. நண்பனைப் பார்த்து பார்த்து அந்த ஆசைகள் தீர்ந்தும் போச்சு. செல்லப்பிராணின்னு செல்லமாக கொஞ்சினாலும் அந்த நேரத்தில் அவை வெளிப்படுத்தும் சிணுங்கல் கெஞ்சலாகவே கேட்கிறது எனக்கு..

பூவின் அழகிய பதிவு.. பாரதி அண்ணாவின் சுவைமிகுந்த பதில்.. சக உறவுகளின் பகிர்வுகள். திருப்தியான விஜயம்..

பூமகள்
06-02-2008, 02:19 PM
கிளிக்கு விடுதலைகொடுத்த உங்கள் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்..!
பிரிவின் சோகம் இருந்தாலும் மனதின் பாறம் இல்லை பூ.....மா
ரொம்ப நன்றிகள் மனோஜ் அண்ணா. :)

பூமகள்
06-02-2008, 02:21 PM
மனசை நெகிழ வச்ச பதிவு.. நன்றி பூமகள்..!!
நீண்ட அருமையான அனுபவ பின்னூட்டம் இட்டு, அதில் எங்களுக்கு பல விசயம் சொல்லி பத்தி பத்தியா என் திரியை பத்த வைத்து தீபமேற்றிவிட்டீர்கள். :)

மிக மிக நன்றிகள் இதயம் அண்ணா.