PDA

View Full Version : மலரினும் மெல்லிது காதல் - படலம் நான்குஆதவா
20-01-2008, 04:12 AM
முதற் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14011) இரண்டாம் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14113) மூன்றாம் படலம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14186)

அவள் காதுமடல் எழுதிய புதிய மொழியை என் காதல் புத்தகத்தில் எழுதிக் கொண்டேன், அவள் தீட்டிய மை ஓவியம் என் விரல் தீட்ட இதயத்தில் பதித்து வைத்தேன், அவள் இட்ட பத்து நிமிட சுவாசத்தை என் அறைக்குள் நிரப்பி வைத்தேன். அவள் தொட்ட என் தோள்களைத் தடவித் தடவியே எடைகுறைத்தேன். காதல் செய்த குழப்ப முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது என்பது நன்றாக தெரிந்துவிட்டது. எனது அச்சம் நிரம்பி வழிந்தது. வீணாக வெளியேறவில்லை, அது வழிந்து உள்ளேயே ஊறியது. மனக்குகையில் எட்டிய தைரியம் இன்றோ நூலில் இருந்து பிரிந்த பஞ்சைப் போல ஆனது. மஞ்சமிட்டு அமர்ந்திருந்த காதல் தினவெடுத்து ஊறியதன் பலன்கள் இவை. என் பேனாக்கள் எழுதி எழுதி அழுத துளிகளை மண்ணுள் புதையுண்ட பாரதி கண்டிருந்தால் என்னை தோள்தூக்கியிருப்பான், மண்ணுக்குள் போன அந்த காகிதங்கள் மழைத்துளியில் நனைந்த மெழுகுச்சுடரைப் போன்றது.

இதற்கிடையே திருவிழாவில் தெருவுலாவும் நேரம் வந்தது. ஆதிமுதல் அந்தம் வரையிலும் படித்த வாசகர்களுக்கு நான் மறைத்தது காற்றடைந்து இதயபந்துகள் இரண்டும் அதனைச் சுற்றிலும் பூமிப்பந்தைப் போல ஆக்கிரமித்திருக்கும் வெள்ளை வர்ண பந்தும். ஆனால் இந்த தெருவுலா நடைபெற்று இருவருடங்கள் ஆகிவிட்டதையும் இங்கே உணர்த்துகிறேன்.எனது இல்லம் அத்தனை பெரிதல்ல. நாங்கள் ஐவரில் நால்வர் மட்டுமே உறங்கமுடியும், ஐந்தாம் நபராகிய நான் எனது போர்க்களப் பாசறைக்குச் செல்லவேண்டிய கட்டாயம், காற்றடைத்த பந்தை அதிலும் அவளுக்காக வாங்கிய பந்தை எங்கே தொங்கவிட? இல்லத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த கூரையில் தொங்கவிட்டேன், பனைமரத்துக் கள்ளிறக்கத் தொங்கவிடும் பானையைப் போல. அவளும் கண்டுகொள்வதற்கு அது வசதிப் பட்டது. எனது இதயத்தை தென்னைக் கீற்றில் தொங்கவிட்டு பார்வையிடவைத்தேன். அகமகிழ்ந்தாள், அதன் பலனை சிரிப்பில் கண்டுகொண்டேன். தென்னை வழியே விழும் கதிர்கள் காரணமோ அல்லது அவள் கண்கள் வழியே விடும் பாணம் காரணமோ தெரியவில்லை பந்து, காற்றுப்பசியில் காணாமல் போனது.

மார்கழி பிறந்தது. எனது காதல் துகள்கள் மார்வழி கழிந்தது. சிறு கும்பத்தை இடுப்பிலே சுமந்து கொண்டு இன்னொரு கையில் இறைவனுக்குப் படைக்கவேண்டிய பூசைச் சாமான்கள் நிரம்பப் பெற்ற பொற்கூடையை ஏந்திக் கொண்டு எனது பாசறை வழியே வருவாள். கண்ணை மறைத்துக் கொண்டிருக்கும் நீரின் திடங்களை நீக்கிவிட்டு துயில்கலைந்து தரிசனத்திற்காகக் காத்திருப்பேன். திருப்பாவையின் சில வரிகளை நா அசைக்க கும்பத்து நீரை பிள்ளையாருக்குத் தந்துவிட்டு தரிசனத்தை எனக்குத் தந்தாள். அந்த மாதம், அந்த காலை, அந்த அரைமணித்துளிகள் என்னால் எப்படி மறக்க இயலும்? அவள் நடை, சிரிப்பு, ஆடை, ஒலி, உருவம் என அத்தனையையும் படம்பிடித்துத்தான் எழுகிறேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். காலை வணக்கம் என் அவள் மீது என்றால், கதிரவனும் நேரத்திலே துயில் கலையும் கோலத்தைப் பார்த்தேன்... இத்தனைக்கும் அது பனி சூழ்ந்த மாதம் வேறு... மார்கழியில் மட்டும் நாட்கள் நீளாதா என்ற அற்பம் என்னுள் எழுந்தது. தை பிறந்தால் வழி பிறக்குமாம், எனக்கோ வழி மூடியது... அவள் வருகை மார்கழியோடு நின்றது...

ஒருநாள் எனது எண்ணக்குவியலை நல்ல எண்ணத்தோடு அவளுக்குத் தந்தேன், பரிசாக அல்ல, பார்வையிட, அவளும் ஏதோ ஒரு மரத்தினடியில் அமர்ந்துகொண்டு பருக்கைகள் பரிமாற படித்திருக்கக் கூடும், புற்களை நோண்டி நோண்டி பிடிங்கியெடுத்தவாறே அவள் காதலித்தாள் காதல் கவிதைகளை. எனது பக்கங்களுக்காக நான் உழைத்தது வீண் போகவில்லை. எனது உழைப்பின் பலன்களை கொஞ்சம் கொஞ்சமாக தனதாக்கிக் கொண்டாள். கவிதை எழுதியதன் அர்த்தம் அன்று எனக்குப் புலப்பட்டது. எனது குளியல்கள் நீண்டன, உறக்கம் கலையமறுத்தது, கனவுகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். காதல் மலர்ந்தது. இது நான் விதையிடா களைச்செடியைப் போல முளைத்தது. களைச்செடிகள் பிடிங்கியெடுக்கத்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை, அது நில வெறுமைக்குப் போர்த்தும் பச்சைப் பட்டாடை. அவள் என் தோட்டத்திற்கு வருகை தந்தாள். எனது மலர்களை அழவைத்து அதில் குளிர்காய்ந்தாள். எனது கவிதைகள் நீரில் கரைந்த எழுத்துக்களைப் போல அழுகி மடிந்தன. கற்பனையில் அடங்காத அவள் வருகை எப்படி இருந்தது தெரியுமா? அதை விளக்க எக்கவிஞனும் இன்னும் பிறக்கவில்லை


இன்னும் வளரும்...