PDA

View Full Version : மலரினும் மெல்லிது காதல் - படலம் மூன்றுஆதவா
19-01-2008, 05:53 AM
முதற் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14011)

இரண்டாம் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14113)

நாட்கள் உழன்றன. எனது மாற்றம், நிதியின் தடுமாற்றத்தை எட்டி உதைத்தது. ஆயினும் என்னை வலம் வந்து சிரமப்படுத்தியதை என்னால் மறக்க இயலாது, பெற்றவன் அறியாமல் ஒவ்வொரு நிமிடங்களுக்கும் செலவிட்டது நான் மட்டுமே அறிவேன். மீன்குஞ்சுகளைப் போல ஆயிரக்கணக்கில் பிறந்து மடியும் எனது உணர்ச்சிகளுக்கு நான் செலவிட்ட தொகைகள் மிகக் குறைவே எனினும் அது சற்றுநேர நிறைவு. பணிச்சுமையிலும் மதிய நேரத்தில் சாலையில் இறங்கி ஓடுவேன்; எங்கேனும் தொலைத் தொடர்பு சாதனங்கள் இருக்கிறதா என்று பார்வையிட்டு ஆங்கே அரைசதம் நாணயத்தைக் கடனாகப் பெற்று தொலைப்பேசிப் பெட்டியில் இட்டவாறு பேசிக் கொண்டிருப்பேன், நிதமும் எனது வருகை கண்டு, நாணயத்திற்குக் குறைவில்லாமல் கவனித்துக் கொண்டார்கள் சில அங்காடிக் காரர்கள். மாலையில் மயங்கும் ஆதவன், மதியத்தில் மயங்குவதைத் தடுக்க இயலவில்லை.

ஒருசமயம் எனது உறவுகளோடு உறவாக நீ பிறந்திருக்கக் கூடாதா என்று அங்கலாய்ப்பாள், மற்றொரு சமயம் வேறு பெண்களோடு பழகாதே என்று புத்திமதி கூறுவாள், பிறிதொரு சமயம், அண்ணா என்று அழைத்துவிட்டு, அய்யர் பாசையில் பேசினேன் என்பாள். பெண்களின் பூடகப் பேச்சுக்களைப் புரிந்துகொண்டாலும், புரியாதவண்ணம் நடிப்பது அல்லது புரியாமல் போனாலும் புரிந்த வண்ணம் நடிப்பது எனது வாடிக்கையாக இருப்பதால் காலத்தை அவ்விதமே ஓட்டினேன். அவள் அழைக்காத வார இறுதி நாட்கள் எனது குளத்தில் இருநாட்கள் மூழ்கும் அல்லிக் கொடிகள்.

இதுகாறும் நேரில் காணாமல் பேசிக் கொண்டிருந்த எங்கள் மனம், முகங்காண விழைந்தது. அதற்காகத் திட்டம் வரைந்தேன். வெள்ளியன்று சந்திப்பதாக முடிவு செய்தோம், என்னுள் காதல் தீயிற்கு சிதை மூட்டப்பட்டது. அவள் காத்திருப்பதாகச் சொன்னாள், காதலுடனா என்று நான் அறியவில்லை அன்று.

காதலை எப்படிச் சொல்ல? நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா? தீப்பிழம்புகளைப் பூசிக்கொண்டு ஆற்றைப் போல கரைபுரண்டு ஓடும் காதல் சக்தியை எந்த அணை வைத்து முற்றுகையிட? கட்டுக் கடங்காமல் ஊரில் புகும் வெள்ள நீரைப் போல எனது உடல் கடந்து காதல் சுற்றிக் கொண்டிருந்தது, பிறைவளரும் ஒரு வேளையில் இரு பிறைகள் சந்தித்ததை என்னால் மறக்க இயலவில்லை. அவள் படிக்கும் கல்லூரி வெகு தொலைவிலில்லை. எனது தொலைத் தொடர்புகளின் வாயிலாக சென்றடைந்தேன். கல்லூரிக்கல்ல. அவள் இதயம் நின்றுகொண்டிருக்கும் ஒரு பனிச்சாலைக்கு.

முதன்முறையாக அவளைத் தின்றேன், உரக்க உரக்கக் கூவும் குயிலாக இருந்தவள் மழைகாணா ஆண்மயிலாய் அடங்கியிருந்தாள்,. நாணம் அவளை தின்று முடித்திருந்தது. உடனிருந்த தோழியின் தைரியம் அவள் குரலளவிலும் இல்லை. புயல் திடீரென மென்காற்றாய் மாறுமா? வாடைக் காற்று திசைமாறி தென்றலாகுமா? கரைபுரண்டு ஓடும் அலையின் நுரையில் அமுதம் ஊறுமா? அல்லது வளர்பிறை பெளர்ணமியாய் மாறாது தேய்பிறையாகுமா? எனக்கு எதுவும் புரியவில்லை. அச்சத்தை தன் கைநுனியில் அடக்கி வைத்திருந்தாள். நான் தின்ற அவளின் பார்வை நிலம் நோக்கியே இருந்தது. முதல் சந்திப்பு முழுமையாக இருந்தாலும் நேரம் கடந்திருந்தது. அதை அவளும் அறிந்திருந்தாள். பேருந்தும் தவறிவிட, வேறு வழியின்றி என் தோள் தொட்டு வர சம்மதித்தாள். உடனிருந்தவள் கண்சிமிட்ட, என் தோள்தொட்ட அவள் கைகளின் ஸ்பரிசம் காற்றின் வழியே மூச்சைமுட்டி கண்ணை மறைத்தது. பத்துநிமிடங்கள் நான் இந்த நரகத்தில் இல்லை, அவளும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை, எங்களுக்குள் பேச ஒன்றுமில்லை. நத்தையைவிடவும் மெதுவாக ஊர்ந்து சென்றது எனது வாகனம், அதை அவள் விரும்பினாள். முகத்தைத் திரையிட்டு மூடிக் கொண்டாள். பத்தாம் நிமிடம் என் உயிரைப் பறித்தது அவளின் பிரிவு, மெழுகுவர்த்தியிலிருந்து உருவியெடுத்த நூலைப் போல உயிர் உருவியெடுக்கப்பட்டது. இலையின் நரம்புகளை மட்டும் பிரித்தெடுத்தலால் இலைக்கென்ன இங்கே வேலை? செம்பில்லா பொன்னை வைத்திருத்தலால் பயனென்ன? எனது உடல் இருந்தால்தான் என்ன? இல்லை இறந்தால்தான் என்ன?

இன்னும் வளரும்...

சிவா.ஜி
20-01-2008, 03:37 AM
காதல் நுழைந்து உங்களை ஆட்கொண்டு,மெள்ள வளர்ந்த கதையை வெகு சிறப்பாக கூறுகிறீர்கள் ஆதவா.எல்லோருக்கும்தான் காதல் வருகிறது.சிலர் இரவல் கவிதையில் அதை வளர்க்கிறார்கள்,சிலர் பயின் கனத்தால் பராமரிக்கிறார்கள்.உங்கள் காதல் உங்கள் காதல் குரலில் தொடங்கி,விழியில் இறங்கி,இதயத்துக்குள் நுழைந்திருக்கிறது.
அதை சொல்லும் விதமோ ஆஹா....என்ன ஒரு நடை.
மாலையில் மயங்கும் ஆதவன், மதியத்தில் மயங்குவதைத் தடுக்க இயலவில்லை.
இதுபோன்ற ரசிக்கவைக்கும் முந்திரிகளுடன் நீங்கள் பரிமாறும் இந்த விருந்து மிக அழகு.தொடருங்கள்.வாழ்த்துகள்.

ஆதவா
20-01-2008, 04:08 AM
தொடர்ந்து படித்து அகமகிழவைக்கும் அண்ணாவுக்கு மிகுந்த நன்றிகள். எனது பரிமாறல் சுவை என்று நீங்கள் சொல்லக் கேட்டால் அதைவிட சுவைதரக்கூடிய உணவு எனக்கு வேறேதுமில்லை.

மிக்க நன்றி அண்ணா.. அடுத்த படலம் நோக்கி.....