PDA

View Full Version : சூடுசாலைஜெயராமன்
17-01-2008, 03:53 PM
சகோதரி யவனிக்காவின் தொகுப்பில் வந்த சூடு எனும் பதத்தில் எழுதப்பட்ட பின்னூட்டக் கவிதையை சில மாற்றங்களுடன் புதிய பதிவாய் தந்துள்ளேன்.

சூடு

மண்ணைக் கல்லாக்கும்
கல்லைக் கரைய வைக்கும்.
ஆக்கும் அழிக்கும் சிவனின் சூடு

மனிதச் சூட்டின் வினை ஜனனம்.
ஜனனத்தின் தன்மை மயக்கம்
சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து

வினைக்கு வினையாய் விளைவது சூடு
காலத்தைக் கணித்ததும் சூடு
இருளைத் தகர்த்ததும் சூடு

சூட்டினால் பெற்ற சுகங்கள்
இருட்டினை நீக்கிய வரங்கள்
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

மனிதனாகாவிட்டா மரணமெனும் சூடு
சட்டி சுட்டதும் கை விட்டதும்
காலமிட்ட சூது அநத்க் கயவனின் சூடு

காலனின் சூட்டை கவனப்பார் யாருமிலர்
காலனை வென்ற கணவனின் சூட்டினை
கருத்தாய்ப் பெற்றால் சூடும் சுகமே

குளிர்காய்வதும் சூட்டினிலே
பற்றியெறிவதும் சூட்டினிலே
பற்றியது எல்லாம் பாழே

சூடிட்டது சுயம்புவின் சூட்சுமம்
சுயம்புவின் சூடு ஞானத்தின் வீடு.
சூடில்லா உடம்பு சூன்யித்தில் துரும்பு

உள்ளத்தில் சூடு ஞானமாக்கும்
வார்த்தையில் சூடு உறவைக் கெடுக்கும்
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.

இயக்கத்திற்கு மூலம் சூடு.
இயங்கானிலையிலும் சூடு.
இல்லாமை ஆக்குவது சூடு.

உயிரை உறவை உடம்மை தீய்ப்பது சூடு
ஆக்க வந்த சூடு அழித்தது அம்பலத்தே
சுத்தத்தின் ரூபம் சுகிர்தத்தின் சூடு

வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

பதமான சூட்டால் பரமபதம் கிட்டும்
அது வள்ளலில் வாய்மையால்
வாய்த்தோருக்கு வாய்க்கும்

வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு

சூடு நன்மையா தீமையா?!!!

ஓவியன்
18-01-2008, 07:05 PM
சூடு நன்மையா தீமையா...???

நல்லவற்றுக்காக சுட்டால்,
நல்லவற்றுக்காக தீயவற்றைச் சுட்டால்
அது நல்ல சூடு தான்...

இல்லையென்றால்
சூட்டால் கிட்டுவது வலி மாத்திரம் தான்
வெற்றிகளல்ல....!!

வித்தியாசமான சிந்தனையுடன் உடன் கவி படைத்த உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

அறிஞர்
18-01-2008, 10:02 PM
வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு

சூடு நன்மையா தீமையா?!!!
படித்த சூட்டோடு...
சூடு பற்றி அழகாய் வர்ணித்து விட்டீர்கள்...

சூடில் எத்தனை வகை..
இடத்திற்கு ஏற்ப
நன்மைகள் சில
தீமைகள் சில....

நன்மை, தீமை கலந்து செல்வது தானே வாழ்க்கை...

சாலைஜெயராமன்
19-01-2008, 02:09 AM
நன்றிகள் பல திரு ஓவியர், மற்றும் அறிஞர்

சூட்டினின் தாக்கம் தானே உலகம். ஆதவனின் சூடு ஆக்கவும் அழிக்கவும் வல்லதன்றோ.

அமரன்
19-01-2008, 05:51 PM
பிரபஞ்சத்தின் தோற்றுவாயே சூடுதான்..
பிரபஞ்சத்தோற்றம் நன்மையா தீமையா??
எல்லாமே நல்லதுக்காகவே படைக்கப்படுகிறது.
எல்லாரும் அதற்காகப் பயன்படுத்துவதில்லை..
அதுபோலத்தான் சூடும்..
சூடு மிக்க அவசியம், நன்மையும்கூட..
நல்ல சொல்லாட்சி மிகுந்த கவிதை.
பாராட்டுகள் ஜெயராமன் அவர்களே!!

சாலைஜெயராமன்
19-01-2008, 06:00 PM
நன்றி அமரன்

பென்ஸ்
22-06-2008, 03:03 PM
சாலையாரே....

நன்மையா... தீமையா..!!!!
என்று பொதுவாக கேட்டுவிட்டால எப்படி.....

(முதலில் கவிதையும், உங்கள் சிந்தனையும் அருமை)

நன்மை, தீமை யார்முடிவு செய்வது...??? மனிதன் அல்லவா...???

சென்னை அக்னி நச்சத்திரத்தில் இருப்பவனுக்கு சூரியன் தீமை...
அலாஸ்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனுக்கு அது நன்மை...

பிரித்து பார்ப்பது தனிமனித, இடம், பொருள் பொறுத்து மாறுகின்ற பொழுது...
நன்மை எது, தீமை எது என்ற பொதுவான கேள்வி சரியில்லையே....??!!!!

படைக்கும் பொழுது எல்லாம் சரியாக அளந்தே படைக்க பட்டது... மனிதன் தன் தேவைக்காக மாற்றிகொள்கிறான் பின்னர் மாட்டி கொள்கிறான்....

நல்ல கவிதைக்கு... நன்றி...

சாலைஜெயராமன்
22-06-2008, 03:26 PM
கடவுள் உண்டா இல்லையா என்ற சர்ச்சையைப் போன்றே பகுத்தறிவு உள்ளதால் மிருகத்திலிருந்து உயர்ந்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதனால் அவ்வறிவு இவ்வுடம்பில் எங்குள்ளது என்பதை அறியஇயலவில்லை. தன்னிடமே உள்ள ஒரு பொருளை அறியமுடியாத எண்ணத்தின் வலிமையால்தான் அறியாமையில் அழிக்கும் சூட்டை அணைத்துக் கொள்கிறது மனித குலம்.

பகுத்தறியும் திறன் தரப்பட்ட நமக்கு அவ்வறிவு வரமா சாபமா என்று அறியமுடியாததைப் போல் நன்மையான இதமான சூட்டை எண்ணத்தாலும் வார்த்தையாலும் நம்மால் வெளிப்படுத்த இயலவில்லை.

இதமான சூடு அது உடம்பிலோ அல்லது எண்ணத்திலோ இருக்கும் வரை அனைத்தும் நன்மைதான்.

ஆறறிவு படைத்த மனிதனைவிட ஐயறிவு கொண்ட உயிரினங்கள் கட்டுக் கோப்பாக இன்பமாக வாழ்கிறதே. எனவே தங்கள் கூற்றுப்படி அனைத்தும் படைக்கப்பட்ட போது சரியாக அளந்துதான் படைக்கப்பட்டிருக்க வேண்டும். நம் துன்பம் அனைத்திற்கும் நாம்தான் காரணம்.

நல்ல கருத்தாழமிக்க பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல திரு பென்ஸ்

இளசு
22-06-2008, 09:55 PM
பலப்பல எண்ணங்களை ஊற்றெடுக்க வைத்த படைப்பு...
மூலமான யவனிக்கும்...
நீட்சி தந்து நினைக்க வைத்த சாலை அய்யா அவர்களுக்கும் வந்தனம்..

மிக நுணுக்கமாய்ப் பின்னூட்டம் தரும் வல்லவர், பென்ஸ் -
இங்கும் முத்திரையைப் பதித்திருக்கிறார்..

நீரின் சூடே தன் சூடு என அலைந்த மீன்குலம் நாம்..
பின் பாதி நிலம் மீதி நீர் - தோலீரம் காயாத தவளையானோம்..
உள்சூடு தாமே காக்க தீனி தேடி சிறகு வளர்த்து பறவையாகி
பின் அது ரோமமாகி, முக்கால் உதிர்ந்து மனிதனாகி..

உள்சூடு காத்து நிற்பதே இவ்வுயிரின் தலையாயச் செயலாகிய நிலை..

இப்படி உயிர்ச்சூட்டை எண்ணி,
கரும்பொருள் ( Dark Matter) - குளிரா சூடா என்னும் பிரபஞ்சக்கேள்வி வரை
எனக்குள் என்னை நுழைத்து கிளரவைத்த பதிவு..

நன்றியும் பாராட்டும் சாலை அய்யா அவர்களுக்கு!

ஆதவா
24-06-2008, 12:26 PM
அருமை அருமை சாலை ஐயா..

சூட்டிற்குத்தான் எத்தனை ரூபங்கள்? ஒன்றுவிடாமல் அத்தனையும் உங்கள் கவிதையில் அடக்கம் ஆகிவிட்டது.. (அடக்கத்திற்கும் சூடு தேவை தானே!! :D)

சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து..

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்? அமிழ்ந்து போன சூட்டின் மறுவடிவம் சாம்பல், மனித ஜனனத்தின் இறுதிச் சொத்து, சுடுகாட்டின் சொந்தம். அடடா!! ஜனனத்தின் தன்மை மயக்கம்... மனித மயக்கம். ஐயா!! இந்த மூன்று வரிகளில் இத்தனை பொருளா? வியக்கிறேன். மனித மயக்கம் போவதற்கும் சூடுதான் தேவையோ? தாங்காது உடம்பு.

இப்படியே ஒவ்வொரு வரிகளும் ஆழமான அர்த்தம் பொதிய எழுதப்பட்டிருக்கிறது.

சூடு நன்மையா தீமையா?

இரண்டுக்கும் இடைப்பட்டது. சூட்டினால் நாம் உருவானோம். சூட்டினால் நாம் அழிகிறோம். இதன் இடைப்பட்ட இடைவெளியும், சூட்டை பயன்படுத்தும் உயிர்களின் போக்குமே அது நன்மையா தீமையா என்று முடிவு செய்யும்..

சூடு வலிக்குமா?

இல்லை, சூட்டினால் வந்த பொய் வலிக்கும்.. சூடு விலக்கிய பொய்யினால் மெய் (உடல்) வலிக்கும்.

பென்ஸ் அண்ணா... படைக்கும் போது என்றால் அது ஒருவனால் படைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சூட்டிற்குத் தோற்றுவாய் யாரும் இருக்கமுடியாது. அது அளந்து படைக்கப்படவில்லை. சரியாக இருப்பதாக உருவானது.. அந்த அளவு நாளை இருக்கப் போவதில்லை... ஏனெனில் ஐயா சொல்வதைப் போல, சூட்டின் மறு உருவம் சாம்பல்... எந்த சூடு இந்த புவியை உருவாக்கியதோ அதே சூடு அழிக்கவும் போகிறது.. சூடு தானாய் உருவானது.. அதன் நிலையாமையால் பூமியும் உருவானது......

வாழ்த்துகள் ஐயா!

சிவா.ஜி
24-06-2008, 01:35 PM
சூடு என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஜெயராமன் அய்யா கொடுத்ஹ்திருக்கும் பலப்பல உருவங்கள் பிரமிக்க வைக்கிறது. இளசு சொன்னதைப்போல எத்தனையோ எண்ணங்களை மனதில் விதைத்த சூடு. அற்புதம் அய்யா.
(ஆதவாவின் பின்னூட்டம் அருமை)

சாலைஜெயராமன்
24-06-2008, 04:04 PM
தூல பண்டிதரான திரு இளசு அவர்கள் தங்களுக்கே உரிய பரந்து விரியும் எண்ணக் குவியலில் சூட்டின் விஞ்ஞானப் பார்வையை விரித்து இந்த கவிதையை மேலும் சிறக்க வைத்துள்ளார். நன்றிகள் பல.

ஆதவன் தங்கள் சிறப்பான பின்னூட்டம் கவிதையின் பல பரிமாணங்களை எனக்கு உணர்த்தியது. ஆழ்ந்த ஊடுறுவி நோக்கும் தங்கள் பார்வை என்னை வியக்க வைக்கிறது.

திரு சிவா போன்ற மன்றத்தின் முத்துக்களின் பாராட்டைப் பெற்றது யான் பெற்ற பாக்கியமே.

அனுராகவன்
25-06-2008, 05:22 AM
அருமை அருமை சாலைஜெயராமன் அவர்களெ!!