PDA

View Full Version : பொங்கலோ பொங்கல்...தீபன்
16-01-2008, 02:17 PM
நேற்றைய பொங்கலுக்கு இன்றுதான் என் வாழ்த்துக்களை தோழர்கழுக்கு சொல்ல முடிகிறது... பிந்திய என் வாழ்த்துக்களை மறுப்பின்றி ஏற்றிடுங்கள்...


பொங்கலோ பொங்கல்....

கதிரவன் கதிரால், கதிரான பயிரால்
உருவான உயிர்கள், நன்றி உணர்த்திடும் திருநாள்!
புதுப்பானை கொண்டு அடிப்பானை உடைய
புதுப்பொங்கல் செய்து பகிர்ந்துண்ணும் பெருநாள்!

அதிகாலை எழுந்து அதிசயமாய் குளித்து
பனியிலே விறைத்து படபடப்பாய் விரைந்து
முன்றலது கூட்டி மஞ்சள் நீரும் ஊற்றி
மாவிலைகள் கட்டி மாக்கோலம் தீட்டி
ஐயா அடுப்பமைக்க அம்மா விறகெடுக்க
அக்கா கல்லை விட்டு நெல்லை பொறுக்க
அண்ணா உங்கால ஒருக்கா என றோட்டளக்க
தங்கை பானை வைக்க தம்பி அரிசியிட
மங்கலம் சூடிப்பல நன்றிகள் கூறிநிற்க
பொங்கலோ பொங்கல் பொங்கியௌலானது!

பானை விளிம்பை நாம் பார்த்திருக்க
பானையோ வானம் பார்க்க
பொங்கலது வழியுமுன்பே
நாவில் வழிந்தது எச்சீ.!

கற்பனையில் கண்டு, கண்டவுடன்
கற்பறுக்கும் காமுகன்போல்,
கடைந்து வந்த சாதமதை
படைத்திடாது உண்டபின்போ. அடச்சீ....!

வீட்டுப்பொங்கல் போதுமினி
நாட்டுப்பொங்கல் காணுவோமென
நண்பர் கூடுமிடம் வண்டிசேர
அன்பரவர் மகிழ்வலையில் நானுமிணைத்தேன்..!

தெரியாத தெரிவையர் வீடுதேடி
தெரிந்தவர் அறிந்தவர் என்று சொல்லி
தெவிட்டுகின்ற அரிசிப் பொங்கலுண்டு
தெவிட்டாத அவள் பார்வைகண்டு,
பொங்கல் அமுதா? பொங்குமவள் அழகமுதா? என
எங்கள் நிலைமாறி ஏங்கும் நினைவாகி
திங்கள் முகம் விட்டு (மீள) திரும்பும் மனம் தேற்றி
நன்றி பல நாக்குழறி நாங்கள் பயணம் தொடர்ந்தோம்!

மீண்டும் நாய்கள் போல் நாங்கள் தெருச்சுற்ற
தெருவில் வந்த மருள்விழி மான்களெல்லாம்
அருகில் வரமுன் மாயமான்களாக
பொங்கலோ பொங்கல் எமக்கு
தொங்கலோ தொங்கல் ஆனது!

ஆனாலும்,
தை பிறந்தும் வழி பிறவாது கையிருந்தும் வயலுளாது
பழம்பானைக் கூழுமற்று பழைய ஆடை தானுமற்று
தெருத்தெருவாய் சுமைகளுடன் தேற்ற முடியா மனங்களுடன்
சரைசரையாய் எல்லோரும் வாழுகிறார் மரங்களின் கீழ்!

பொங்கலிங்கு பொலிந்தது!
பொங்குமின்பம் பொழிந்தது!
பொல்லாப்பெதுவும் இருக்கவில்லை - ஆனாலும்
பொங்கல் மட்டும் இனிக்கவில்லை!

எங்கள் உறவு அங்கு தவிக்க
பொங்கல் இங்கு எப்படி இனிக்கும்?
சொந்தச் சோதரர் சாவை அணைக்க
இந்தப் பொங்கல் எப்படிச் சுகிக்கும்?

எம் உறவுகள்தான் அங்கேயும்!
அவர்களும் பொங்குவார்கள் தான்!
அவர்கள் பொங்கும் போது தான்
எமக்குமிங்கு பொங்கல் இனிக்கும்!

அறிஞர்
16-01-2008, 05:41 PM
தை திங்கள் முதல் நாளில் நடக்கும் சம்பவங்களை அழகாய் வர்ணித்துவிட்டு.... இனிக்கா பொங்கல் பற்றி கூறி எம்மையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டீர்...


எம் உறவுகள்தான் அங்கேயும்!
அவர்களும் பொங்குவார்கள் தான்!
அவர்கள் பொங்கும் போது தான்
எமக்குமிங்கு பொங்கல் இனிக்கும்!

நம் உறவுகள் பொங்கும் காலமே..
நாமனைவருக்கும் இனிக்கும் காலம்.

தீபன்
17-01-2008, 01:45 PM
நன்றி அறிஞரே... உங்கள் வார்த்தைகளில் தொனிக்கும் ஆதரவுகூட எமக்கு இனிக்கிறது...

ஓவியன்
22-01-2008, 01:19 PM
இப்போதெல்லாம் பொங்கல் என்பது எனக்கெல்லாம் வார்த்தைகளிலும் எழுத்துக்களுமாக மட்டுமே எச்சமாக ஒளிந்து நிற்கிறது தீபன்...

வீட்டையும் நாட்டையும் விட்டு வந்த பின் பொங்கலென்ன, தீபாவளியென்ன....:mad:

ஞாபகங்களைக் கிளறி, தாயகப் பொங்கலுக்குக் கட்டியம் கூறும் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பரே..

தீபா
09-07-2008, 07:01 AM
இனிப்பா ஆரம்பிச்ச வரிகள் போகப் போகப் புரியாமல் போச்சுங்க. பொங்கல் அப்போ நீங்க ஊர்சுத்தினது வரைக்கும் தான் இந்த மரமண்டைக்கு ஏறியிருக்கு

அப்படியே கடகடன்னு பொழிஞ்சிருக்கீங்க.

தீபன்
09-07-2008, 02:49 PM
இனிப்பா ஆரம்பிச்ச வரிகள் போகப் போகப் புரியாமல் போச்சுங்க. பொங்கல் அப்போ நீங்க ஊர்சுத்தினது வரைக்கும் தான் இந்த மரமண்டைக்கு ஏறியிருக்கு
அப்படியே கடகடன்னு பொழிஞ்சிருக்கீங்க.
ஈழத்தில் வன்னிப்பகுதியில் மக்கள் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து அலைந்துகொண்டிருந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த நாம் பொங்கலை கொண்டாடினோம். அந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுகளை மீட்டிப்பார்த்து எழுதியது அது. இப்ப மிச்சமும் புரியுதா...?