PDA

View Full Version : காலக் குயவன் கைகளில்



யவனிகா
16-01-2008, 03:35 AM
களிமண் கொஞ்சம் கிடைத்தது
காலக் குயவன் கைகளில்�

பானை செய்ய உத்தேசித்தான் முதலில்,
மண்ணை மிதித்து, மனதுபோல வந்தவுடன்
சக்கரத்தில் இட்டு சுற்ற ஆரம்பித்தான்.

வாழ்க்கைச் சக்கரம் சுற்ற ஆரம்பித்தது..
குயவனின் கைகள் வனைய ஆரம்பித்தது...
சக்கரம் சுற்றச் சுற்றச்
மண்ணுக்குக் கிலி எடுத்தது...
மண்ணின் மனது தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது,
உயிர் போகும் வேதனை உணர ஆரம்பித்தது,
குயவனும் விடாது வனைந்து கொண்டிருந்தான்...

பயத்தில் கூக்குரலிட்ட களிமண்
சடுதியில் சமாதானமாகி,
சுற்றோட்டத்தில் சுகம் காண ஆரம்பித்தது...
பானையின் உருவத்தில்
தன்னைப் பொருத்தி பார்க்கும் ஆவலில்
படும் வேதனைகளை பொருட்படுத்தவில்லை அது....
விளிம்பு வரை வந்தாகிவிட்டது...
முழு வடிவமும் அடுத்த சுற்றில்...
நிம்மதிப் பெருமூச்சு விட்டது
பாதிப் பானையாகிய களிமண்...

காலக் குயவனுக்கு என்ன தோன்றியதோ...
வனைந்த பானை வடிவில்லை என்று நினைத்தான் போலும்
உருவாக்கிய பானையை ஒட்டுமொத்தமாய் சிதைத்து
மீண்டும் மண்ணாக்கி....
பூச்சாடி செய்யப் புறப்பட்டான் இப்போது...
களிமண் குழம்பியது...
எதற்குள் தன்னை இருத்திக்கொள்ள என்று...
பானக்குள்ளா...ஜாடிக்குள்ளா...?

சிவா.ஜி
16-01-2008, 03:49 AM
இது மண்ணுக்கு நேரும் சோதனை.சக்கர சுழற்றலில் என்ன ஆக்கப்படுகிறதோ அதுவாக ஆதல்....அல்லது எத்தனை சுழற்றியும் எதுவாக ஆக விருப்பமோ அதுவாக ஆகும் உறுதி.
இங்கு மட்டும்தான் மண்ணுக்கு முடிவெடுக்கும் சக்தியுள்ளது.அதே சமயம் சுழற்றலின் கதி அதிகரிக்குமானால் பிடிப்பை விடாதிருக்கும் பக்குவம்,உறுதி வேண்டும்.
\"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா\"
சிந்தனைகளை தெளிக்கும் இப்படியான கவிதைகள் ரசிக்க மட்டுமல்ல யோசிக்க வைக்கிறது. வாழ்த்துகள் தங்கையே.

யவனிகா
16-01-2008, 03:58 AM
[/B]சிந்தனைகளை தெளிக்கும் இப்படியான கவிதைகள் ரசிக்க மட்டுமல்ல யோசிக்க வைக்கிறது. வாழ்த்துகள் தங்கையே.

ரொம்ப யோசிக்காதீங்க அண்ணா...

உங்க பின்னூட்டம் ஆழமாக இருக்கிறது. நன்றி சிவாண்ணா.

அல்லிராணி
16-01-2008, 04:33 AM
இழுத்துப் பிடிக்கும் ஈரம் இருந்த வரை
குயவனின் இழுப்பும் வளைப்பும்
ராட்டினச் சுற்றலும்
சுகமாய்த்தான் இருந்தது..

சுட்டபின் இறுகி
ரத்த ரணமும்
கருகிய சில இடங்களும்
ஆறாத வடுக்களாய்


காலக் குயவன்
என் வடிவை மட்டுமா
வனைத்தான்
மனதையும் தான்

சுட்டவனாய் இருந்தாலும்
அவனுக்குத் நான் தருவது
சில்லென்ற நீர்தான்

காதல்
வேர்கள் என்னுள் நுழைந்து
இதயத்தை இறுகத் தழுவி
வளரா விட்டாலும்
வேர்கள் விரும்பும் மண்ணை
என்னுள் தாங்கி
அமைதியாய் நான்

சுக்கு நூறாய் உடைத்துப் போட்டாலும்
சிறுவர் விளையாட சில்லு நான்

சொல்லிக் கொடுத்த குயவனுக்கு
கால் வயிறும் நிறையவில்லை
மனமெல்லாம் நிறைந்து
நான்..


இப்படிக்குப் பானை.:icon_b:

யவனிகா
16-01-2008, 04:42 AM
நல்ல பின்னூட்டக் கவிதை அல்லி ராணி அவர்களே...நன்றி.

தாமரை
16-01-2008, 04:49 AM
சுடாத களிமண்ணும் சுட்ட களிமண்ணும்
பட்டறிவுதான் எப்படி பக்குவப்படுத்தி விடுகிறது..

யவனிகா
16-01-2008, 04:55 AM
சுடாத வரை தான் களிமண் யோசிக்க முடியும் தாமரை..
சுட்ட பின் இவ்வளவுதான் என்று திருப்தி பட்டுக் கொள்ளத்தான் வேண்டும்..

இதற்கு எதற்கு அறிவு...சூடு ஒன்று மட்டும் போதாதா? தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடான்னு சிலாகித்துப் பாட மட்டும் தான் நன்றாக இருக்கும்.

நடைமுறையில் சூடு பட்டால் அனிச்சையாக கையை இழுத்துக் கொள்ளத் தான் தோன்றும்.

தாமரை
16-01-2008, 05:08 AM
சுடாத வரை தான் களிமண் யோசிக்க முடியும் தாமரை..
சுட்ட பின் இவ்வளவுதான் என்று திருப்தி பட்டுக் கொள்ளத்தான் வேண்டும்..

இதற்கு எதற்கு அறிவு...சூடு ஒன்று மட்டும் போதாதா? தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடான்னு சிலாகித்துப் பாட மட்டும் தான் நன்றாக இருக்கும்.

நடைமுறையில் சூடு பட்டால் அனிச்சையாக கையை இழுத்துக் கொள்ளத் தான் தோன்றும்.

சுட்ட பழத்தின் சூடு பட ஔவையாக வேண்டிய அவசியமுண்டோ யவனிகா..

சூடுபட்ட மனிதங்கள் பல மகாத்மாக்கள் ஆகியதுண்டு..

குயவனின் சூட்டில் வரும் பக்குவம் அது..

காலக் குயவனின் சூடு பலரைப் பக்குவப் படுத்தியதுண்டு..

சுட்டபோது எரிந்த ரணங்கள் ஆறி, பக்குவப்பட்ட மண்பானைகளில் நானும் ஒரு உதாரணம்தான்..

கல்லூரிக்கால தாமரைக்கும் இன்றைய தாமரைக்கும் வித்தியாசம் உமக்குத் தெரியுமே! அன்று பட்ட சூடுகள் தானே இன்று என்னைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கின்றன.

பென்ஸின் பழைய பதிவுகள் ""நானும் கும்பளாம்பிகையும்"" " தூத்துக்குடியும் நானும்" யாரையும் கை நீட்டி அடிக்காதே" அனைத்தையும் படியுங்கள்.. அடுத்த உதாரணமும் கிடைக்கும்.


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5994
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6208
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6020

ஒன்று புரிகிறது.. நானும் தமிழும் நான் சரியாக எழுதவில்லை. :(

சுகந்தப்ரீதன்
16-01-2008, 06:03 AM
உலக வாழ்க்கையை குழவனாகவும் அதில் வாழ்பவர்களை களிமண்ணாகவும் உருவகித்த கற்பனை அருமை..! கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகம்தானே..? இதில் பானையாய் இருந்தாலென்ன..? ஜாடியாய் இருந்தாலென்ன..?
அனுபவ கவிக்கு ஆறுதலாய் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!

யவனிகா
16-01-2008, 03:53 PM
அனுபவ கவிக்கு ஆறுதலாய் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!

நல்ல வேளை அனுபவக் கவிக்கு ஆறுதல் சொல்லும் என் அன்புத் தம்பியே..அது சரி,கனவு காணும் மேகம் எல்லாம் கலைஞ்சு போய் இப்ப ஒட்டு மொத்தமா துபாயில மழையாக் கொட்டுதாமே...அப்படியா?

மனோஜ்
16-01-2008, 05:59 PM
இறைவன் கையில மனிதனாகிய நாம் களிமண்
உருவாக்குபவன் விரும்புவரை உருட்டுவது புரிந்து கொள்ளதான் கடினம்

நல்ல கவிதைவரிகள் யவனி(ய)க்கா

சாலைஜெயராமன்
16-01-2008, 07:53 PM
சூடு

மண்ணைக் கல்லாக்கும் கனமான உலோகத்தை கரைய வைக்கும். ஆக்கும் அழிக்கும் சிவனின் நிலையிது.

சூடு உண்டானதால் ஜனனம். சூடு மறைந்ததால் சுடுகாடு.

வினைக்கு வினையாயும் காலத்தின் னிலையாயும், இருளைத் தகர்க்கவும் சூடுதான்.

உள்ளத்தில் சூடு ஞானமாக்கும். வார்த்தையில் சூடு உறவைப் பிரிக்கும்.
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.

இயக்கத்திற்கு மூலம் சூடு. இயங்கானிலையிலும் சூடு.
உயிரை உறவை உடலை இல்லாமை ஆக்குவது சூடு.

ஞானத்தின் திறவுகோல் வெறுமையின் உருவம் சூடே.

இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

சூடு நன்மையா தீமையா?!!!

ஆர்.ஈஸ்வரன்
17-01-2008, 10:31 AM
வித்தியாசமான் சிந்தனை. வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
18-01-2008, 03:03 PM
மிக வித்தியாசமான சிந்தனைகளை அடக்கியிருக்கிறது இக்கவிதை... வாழ்த்துக்கள் யவனிகா....

வனைபவனின் கையில் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு அதன் பாதையில் செலுத்த ஆரம்பித்தால், உருவாவது பானை என்றாலும் பிரச்சனையில்லை...மண்தொட்டி என்றாலும் பிரச்சனையில்லை...

உருவாகிக்கொண்டிருக்கும்போதே, எண்ணங்கள் வானை சிறகடிக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினை...

வடிவம் வரும்வரை பொருத்திரு மனிதா...

வனைந்துகொண்டிருக்கும்போதே, வாழ்க்கையில் உயர்ந்துகொண்டிருக்கும்போதே ஆட ஆரம்பித்தால், அத்தனையும் குழைந்துவிடும்...

காரணம் சக்கரத்தில் நாம் சுற்றவைக்கபட்டுக் கொண்டிருக்கிறோம்.....

யவனிகா
18-01-2008, 04:06 PM
வனைபவனின் கையில் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு அதன் பாதையில் செலுத்த ஆரம்பித்தால், உருவாவது பானை என்றாலும் பிரச்சனையில்லை...மண்தொட்டி என்றாலும் பிரச்சனையில்லை...

காரணம் சக்கரத்தில் நாம் சுற்றவைக்கபட்டுக் கொண்டிருக்கிறோம்.....

அது எப்படி முடியும் தோழரே...எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்...இது பொய்யா...

வாழ்க்கையைப் பற்றிய கற்பனையின்றி வாழ்தல் சாத்தியமா...அவன் கொடுப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்க என்பது மனதை தேற்ற வேண்டுமானல் பொருந்தும்...பாராட்டுக்கு நன்றி கவிஞரே...

பென்ஸ்
18-01-2008, 04:46 PM
நல்ல கவிதை.... யவானிகா.......

உங்கள் தரமான கவிதைகள் பலவற்றையும் வாசித்து
வெறுமனே சென்றமைக்கு முதலில் மன்னிக்கவும்...

பச்சை மண் என்று குழந்தைகளை சொல்லுவார்கள்...
அவர்களை ஒரு அரசியல்வாதுயாக்குவதும்
அல்லது அறிஞன் ஆக்குவதும் பச்சை மண்ணாயிருக்கும் போதுதான்.

நான் சிறுவனாக இருந்த போது கலெக்டர் என்றால் என்ன என்று தெரியாமலே அப்படியாக விரும்பினேன்...
அப்பாவுக்கு நான் ஒரு சாட்டர்ட் அக்கவுன்டாக வரனும்...
அம்மாவுக்கு நான் போலிஸ் ஆபிசராக வரனும்...
பாட்டிக்கோ நான் சாமியராகனும்.
சிறுவன் எனக்கோ, ஹீமன் மாதிரி ஆகனும்.
இளவயதில் இரானுவ வீரன் ஆகணும்...
குழைந்த மண், மீண்டும் பிசையபட்டு பொறியாளன் ஆக்கபட்டது...
சமுதாயம் என்னை சுட்டு மனிதன் ஆக்குகிறது...

மனிதன் ஆகும் முயற்ச்சியில் இன்னும்...
திருமணம், குழந்தைகள் என்று கட்டுகளும் கடமையும் வந்த பிறகு சூடுபட்ட கல்லாக...
பயனில்லாத போது உடைந்த சட்டியாக எங்கோ மூலையில்....

யவானிகா... என்ன அழகாக கவிதையாக சொல்லிவிட்டீர்கள்....

அல்லிராணி அவர்கள் மன்றத்தில் காண்பது அரிது ஆகிவிட்டாலும்,
இந்த கவிதையில் பதில் கவிதையோடு காண்கையில்..
அதீத மகிழ்ச்சி....

தாமரை...
மீண்டும் மீண்டும் நன்றி...
நீங்க வர வர அனிருத்தை மிஞ்ச ஆரம்பிச்சிடிங்க...
அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு என் நன்றி அருமை மனசாட்சியே....

சாலை ஜெயராமன்...
ஒரு பின்னூட்டம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற உங்கள் பதிவை கண்டு மகிழ்ச்சி....

யவானிகா....
நீங்கள் இன்னும் நிறைய கொடுக்கமுடியும்...
நான் உங்களை புகழ வேண்டும் என்று சொல்லவில்லை....
நீங்கள் புதைந்து கிடக்கும் மாணிக்க கல்...
இப்போதுதான் ஜொலிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்...
இன்னும் சிறக்க வாழ்த்துகள்...

யவனிகா
18-01-2008, 05:13 PM
தரமான பின்னூட்டங்களைப் பெற்றதில் பானை..கர்வத்தின் கனம் தாளாமல், உடைந்தும் போகக் கூடும்.

பின்னூட்டங்களுக்கு நன்றி சகோதரர்களே...

யவனிகா
18-01-2008, 05:16 PM
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

சூடு நன்மையா தீமையா?!!!

தெரியவில்லை அய்யா...தெளிவான பின்னூட்டம். நன்றி அய்யா.

ஓவியன்
18-01-2008, 05:34 PM
எந்த ஒரு வெற்றிக்கும் பின்னே ஒரு இழப்பு, வலி நிச்சயமாக ஒளிந்து கொண்டிருக்கும்...
காலக் குயவனால் சுழற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் ஒன்றை இழந்தே ஒன்றைப் பெற வேண்டியதாக இருக்கிறது.....
அது என்னவோ தெரியவில்லை எந்த இழப்புக்களும் வலிகளும் இல்லாமல் பெறும் எந்த வெற்றிகளும் வெற்றிகளாகத் தெரிவதில்லை...

தங்கத்தைச் சுட்டால் ஜொலிக்கும்..
இதுவே ஒரு
சருகைச் சுட்டால் கருகிப் புகைக்கும்....

ஆதலால் நாம் எதனை
என்ன செய்ய போகிறோம்,
எப்படிச் செய்யப் போகிறோம்,
என்னவாகச் செய்யப் போகிறோம்.....

எனத் தீர்க்கமாக முடிவெடுத்து பணிகளிலிறங்கவேண்டும்..
அத்தகைய தீர்க்கமான திட்டமிடல்களால்
வீண் வலிகளும், நேர விரயங்களும் தவிர்க்கப் படும்...

இது களிமண்ணுக்கும் பொருந்தும்,
நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்...

நல்லதோர் சிந்தனையைத் தூண்டும் கவிதைக்காக அக்காவுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்....

யவனிகா
18-01-2008, 06:06 PM
அடடா...ஓவித்தாத்தா...கலக்கறீங்க..நன்றி ஓவியன்.

ஓவியன்
18-01-2008, 06:28 PM
அடடா...ஓவித்தாத்தா....

தாதாவாக இருந்தேன்
தாத்தாவாக ஆனேன்
இடையில்
ஒரு "த்" ஐ
போட்டு விட்ட
ஒரு "தை" ஆல்...!! :)

யவனிகா
18-01-2008, 06:37 PM
தாதாவாக இருந்தேன்
தாத்தாவாக ஆனேன்
இடையில்
ஒரு "த்" ஐ
போட்டு விட்ட
ஒரு "தை" ஆல்...!! :)

இதை நான் எதிர்பார்க்கலே...கிடைச்ச பாலை சிக்சர் அடிச்சிட்டீங்க...

அமரன்
18-01-2008, 06:57 PM
உச்சிப்பட்டம் நெற்றிச்சுட்டி,
நவரத்னம் பதித்த அட்டிகை
அகலமான தங்க ஒட்டியாணம்..
காந்தள் விரல்களில் வைரமோதிரம்..
கால்களில் வெள்ளிமணிக்கொலுசு....

எத்தனை அலங்கார அணிகலன்களோ
அத்தனையும் அணிந்து தக்தகக்கிறாள்
தமிழன்னை இங்கே!!!!!!
கண்ணை பறிகொடுத்த ஓவியனாக நான்!!!!

ஆடுவோர் கூண்டேறியதை
பார்த்துப் பழக்கப்படவனுக்கு
ஆட்டுவிப்பவன் கூண்டேற்றப்பட்டதில்
பிறந்த தாளமுடியாத மகிழ்வு...

அறிவு துயில் கலைத்தபோது
தாழ்ந்து போனது!!!!

காலச்சக்கரத்தின் சுழற்சிப் பாதையில் செல்வதா
சுடாத களிமண்ணின் நழுவல் வழி பயணிப்பதா..
குயவன் மூட்டும் நெருப்புக்காக காத்திருப்பதா...
ஒன்றை தேர்வதில் குழப்ப நிலை..

நிழல் குடைகளாக யாரும் வருவார்களானால்
பழைய மட்பாண்டங்களை நிழல்குடை ஆக்குவதால்
காத்திருப்பது சிறப்புத் தேர்வாகப் தெரிகின்றது.

மூளையில் செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் கவிதை.
பாராட்டுகள் யவனிகா!!!!

அறிஞர்
18-01-2008, 10:13 PM
களிமண் பற்றிய வரிகள் அருமை..

நம் வாழ்க்கைக்கூட களிமண் மாதிரி தான்...
இறைவன் என்ற குயவனிடம்
முழுவதும் ஒப்படைத்தால்..
நல்ல உபயோகரமான பாத்திரமாக மாறலாம்.

ஷீ-நிசி
19-01-2008, 12:46 AM
தாதாவாக இருந்தேன்
தாத்தாவாக ஆனேன்
இடையில்
ஒரு "த்" ஐ
போட்டு விட்ட
ஒரு "தை" ஆல்...!! :)

"தை" ஆல்.... உண்டான "தையல்" னு சொல்லவர்றீங்க...... :)

ஷீ-நிசி
19-01-2008, 12:54 AM
அது எப்படி முடியும் தோழரே...எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்...இது பொய்யா...

வாழ்க்கையைப் பற்றிய கற்பனையின்றி வாழ்தல் சாத்தியமா...அவன் கொடுப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்க என்பது மனதை தேற்ற வேண்டுமானல் பொருந்தும்...பாராட்டுக்கு நன்றி கவிஞரே...

"முயற்சி திருவினையாக்கும்..."
"என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்."

எல்லாம் வளருகின்ற செடிக்கு ஊற்றுகின்ற தண்ணீர் போல...

ஆனால் மாமரமாக வளர்க்கப்பட்டுகொண்டிருக்கிற ஒரு செடிக்கு திடீரென்று பலா மரமாக வளர ஆசை ஏற்பட்டால்.....

தன்னம்பிக்கை வரிகளும், உத்வேக வரிகளும், நாம் போகின்ற, தெரிந்தெடுத்திருக்கின்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவும்..

பாதையை மாற்ற அந்த கால குயவன் முடிவெடுத்துவிட்டால்.........

அதான் சொல்கிறேன்.. எல்லோருக்குமே முதலமைச்சராகவோ, ஒரு சிறந்த நடிகனாகவோ ஆசைகள் வரலாம்...

எல்லோரும் ஆக முடிவதில்லையே...

காரணம், நாட்டில் தொண்டர்களும் அவசியம், ரசிகர்களும் அவசியம்...

காலக்குயவன் என்ன வனையவேண்டுமோ அதை வனைந்துகொண்டிருக்கிறான்..

பானையானால் தண்ணீரை சேமித்து பயன்படு...

பூந்தொட்டியானால் செடியை வளர்த்து பயன்படு...

வேண்டுமானால் இப்படி மாற்றிவிடலாம், காலக்குயவனை கருத்தில் கொண்டு...

"என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆவாய்."

நன்றி யவனிகா..

அமரன்
19-01-2008, 08:32 AM
திரும்புகின்றது வசந்தகாலம்..
ஆனந்த மனம் துள்ளலில்..

நன்றி, பாராட்டு அனைவருக்கும்

ஓவியன்
19-01-2008, 08:42 AM
"தை" ஆல்.... உண்டான "தையல்" னு சொல்லவர்றீங்க...... :)

நான் அப்படிச் சொன்னேனா, இல்லையே...!! :rolleyes:

யவனிகா
19-01-2008, 10:13 AM
[QUOTE=ஷீ-நிசி;317920
பாதையை மாற்ற அந்த கால குயவன் முடிவெடுத்துவிட்டால்.........

[/QUOTE]

நல்ல பின்னூட்டம் ஷீ-நிசி...

கண்டிப்பாக களிமண்ணால் தன் மனதை...குயவனுக்கு வெளிப்படுத்த முடியாது தான்...குயவனாகவே இரக்கம் காட்டினால் தான் உண்டு...
அழகான பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே.

சாலைஜெயராமன்
26-01-2008, 03:48 AM
கண்டிப்பாக களிமண்ணால் தன் மனதை...குயவனுக்கு வெளிப்படுத்த முடியாது தான்...குயவனாகவே இரக்கம் காட்டினால் தான் உண்டு...


சரியான சிந்தனை சகோதரி,

கடமோ, குடமோ களிமண்ணால் ஒன்றும் ஆகக் கூடாதுதான்.

குயவர்களிடை ஒரு குணம் உண்டு.

மனதற்கு இசைவில்லாமல் வந்தாலும் தான் செய்த குடத்தை தன் கைகளால் உடைக்க எந்தக் குயவரும் மனம் கொள்வாரலர். தரமற்ற களியானாலும் அதன் தரத்திற்கேற்ற வடிவமைப்பை சுட்டு, பிசைந்து, உருமாற்றி கற்ற வித்தையின் அனைத்து விஷயங்களையும் அரங்கேற்றி எந்த மண்ணையும் உருக் கொண்டுவருவது குயவர்க்கு குலத்தொழில்.

இன்னும் சில களிகள் இருக்கின்றன. ஆந்திர மண்ணுக்கு சொந்தமான இக்களிகள் எந்த வெப்ப னிலையையும் தாங்கும். வார்ப்புருவின் செயல்பாடுகளுக்கு இந்தக் களிதான் அதிகம் உபயோகப்படுகிறது.

களிமண்ணின் மனதை அறிந்தவனே நல்ல குயவன். நல்ல குயவன் களிமண்ணின் தரத்தை குணத்தை அறிவான்.

இக் கடமாகிய மனிதக் களிமண் எதற்கு ஆகும்? எளிதில் உருக்குலையக் கூடிய மண் குடதத்திற்கு ஒப்பானதுதானே. ஆணவம், கன்மம், மாயை என்ற மயக்கத்தில் தன்னை அறியாத தறி கெட்ட குணத்தை இறை என்னும் காலக் குயவனின் கருணையால்தான் கடைத்தேற்றிக் கொள்ள முடியும்.

காலக் குயவன் அவத்தை தாரமாக்கி கொண்டு பூவுலகிற்கு வரும்போது அவதார மகிமையாகிய இயேசு, கிருஷ்ணன், முகம்மது என்ற ரூபநிலையை அடைந்து களிகளை அழகு ரூபமாக்கி மகிழ்கிறான்.

யவனிகா
26-01-2008, 04:54 AM
பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரர் சாலை ஜெயராமன் அவர்களே.

kavitha
10-03-2008, 11:06 AM
களிமண் குழம்பியது...
எதற்குள் தன்னை இருத்திக்கொள்ள என்று...
லட்சியமா? உயிரா? மனமா?
காலம் எதை விட்டது. ஆழமான கவிதை.

யவனிகா
10-03-2008, 12:07 PM
லட்சியமா? உயிரா? மனமா?
காலம் எதை விட்டது. ஆழமான கவிதை.

தோழி உங்கள் பின்னூட்டம் படிக்கும் போது எப்போதோ படித்த வரிகள் நினைவு வருகிறது.

உயிரும்
மனமும்
லட்சியமும்
சற்றும் பொருந்தாத
உடல் சட்டத்தில்
அடைபட்டு...
நேரெதிர் மோதிக்கொள்ளும் போது
புரிகிறது
பெண் என்றால் என்னவென்று....?

நன்றி தோழியே...

அக்னி
10-03-2008, 01:18 PM
களியானால் குயவனிடம்,
மணலானால் கொத்தனாரிடம்,
வளமான மண்ணானால் விவசாயிடம்,
சேரும் இடம் பொருத்தமானால், எம் நிலை நிலையானதாகும்...
எம் எதிர்பார்ப்புகள்,
எம் இயல்புகள் சார்ந்து, எம் திறன்கள் சார்ந்து, எம் சூழல் சார்ந்து, இருக்குமேயானால், சிதைவுகள் இல்லாது செதுக்கப்படுவோம்.

பாராட்டுக்கள் யவனிகா... மற்றும் பின்னூட்டங்கள் தந்த அனைவருக்கும்...