PDA

View Full Version : மலரினும் மெல்லிது காதல் - படலம் இரண்டுஆதவா
12-01-2008, 05:28 PM
மலரினும் மெல்லிது காதல் - முதல் படலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14011)

சில தினங்கள் கழிந்தன, நான்கு யுகங்களைத் தின்றுவிட்டு ஏப்பம் விட்ட எனது காலமூளை, காதல் யுகத்தை புசிக்கக் காத்திருந்தது.

தொலைத் தொடர்பு சாதனங்களின் வருகை எனக்கு அற்றை காலங்களில் புதிது. எனது எல்லாமுமே புதிதாக இருந்தது. நான் வளர்த்த தமிழ், என்னை வளர்த்திய தமிழ் என அத்தனையுமே! சடலம் மட்டுமே பழைமை அடைந்து கிடந்தது. என் தொலைத் தொடர்புகள் எல்லாமே காரணம் சார்ந்து இருந்தது, காரணங்கள் எல்லாமுமே நிதி சார்ந்து இருந்தது. எனது சாதனத்தின் ஒலியும் குறைவாகவே இருந்தது, மென்காற்றுத் தீண்டி தழுவும் இரு இலைகளின் ஒலியைவிடவும் மென்மை எனது சாதனத்தின் ஒலி, அதிர்வு இன்றி ஒலி ஏது? அதிர்வும் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய அதிர்வு, என் தோல் கிழித்து மனம் நோண்டிய காற்றலையின் அம்பு. காதல் நாணில் இருந்து வெளிவந்த குயிலின் குரலம்பு. முதன் முதலில் புணர்ந்தது எனது செவி, அவள் பேசினாள்.

கலைமகளின் நாமத்தைக் கொண்டிருந்த அவள் பேச்சு கலைமகள் வீணை நரம்பை சுண்டியதால் எழும் இசைக்கு ஒப்பாக இருந்தது. என்னிடம் என்னைப் பற்றி வினவினாள். எனது பூர்வீகம், வாழ்வு, எதிர்நோக்கியிருக்கும் லட்சியம் என பரிபூரணமாக அத்தனையும் விசாரித்தாள், குயிலின் அடையாளம் மெல்ல மெல்ல தெரிந்தது. அவளை நான் விசாரிக்கும் போது தன்னை மறந்து உளறிவிட்டாள். நான் குடிபுகுந்த இல்லத்திற்கு சொந்தக்காரியும் எனது இல்லத்தின் பக்கவாட்டில் இருக்கும் மற்றொரு இல்லத்திலிருந்து வந்தவளுமாக தன்னை பிரகடனப்படுத்தினாள். மூளைக்குள் மங்கிய வெளிச்சம் பாய, யாரெனத் தெரிந்துகொண்டேன். என்னருகே இருந்துகொண்டு, என் இல்லத்தருகே இருந்துகொண்டு இத்தனைநாளும் ஏமாற்றிய தென்றலை எனது இதயம் அடையாளம் கண்டு கொண்டது என் அதிட்டத்தின் சாதனை, அவள் என் முகம் கண்டிருக்கவேண்டும், நான் கண்டதில்லை அதுவரை. பேசியவைகள் அத்தனையும் தேன் குழைத்த தமிழ். ஆங்கிலம் இருவரும் அறியோம், அவள் தேனை ஊற்ற ஊற்ற, என் செவி வழியாமல் பெற்றுக் கொண்டது, எனது மனக்குடம் ஆடாமல் நிரம்பாமல் தேனை பெற்றுக் கொண்டது, தெவிட்டவில்லையா எனக்கு? இல்லை, சுத்தமாக இல்லை, மாறாக, தேன் தாகம் ஏற்பட்டது. அத்தனைக்கும் என்னதான் நடந்தது?

எனது விழிகளை நானறியாமல் படம்பிடித்த அவளின் விழிகள் எனது தொடர்பு சாதனத்தையும் உடன் பிடித்தது. என்னுடன் பிறந்தவளின் கைங்கரியத்தால் எண்கள் பரிமாறப்பட்டது. எனது முதுகுக்குப் பின்னே முளைத்த காதல் இது. முதன்முதல் கூவியபோது அச்சமும் நாணமும் குதற, அவள் பெயர் மறைத்து, தனை மறந்து சென்றாள். எனது இதயம் அடையாளம் கண்டதும் அவள் அச்சத்திற்கு எதிர்பக்கத்தில் இருந்தாள். கண்களைத் திறந்து பனியை ஏற்றுக் கொள்ளும் புல்லின் நுனியில் உறக்கம் கண்ட என் மொத்தமும் அவள் குத்திய அதிர்வலையில் காணாது போயின, இவளா அவள் என்று எண்ணுமாறு அவள் உரக்கக் கத்தினாள். காதல் அன்றெல்லாம் வெளிப்படவில்லை, ஏனெனில் நானோ அவளோ ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவில்லை. இது ஞாயிறு முட்டி நிறமிழக்கும் கடலின் காதலல்ல. ஓடத்தில் அமர்ந்துகொண்டு துடிப்புகளை மெல்லச் செலுத்தியவாறு பயணிக்கும் இரு உள்ளங்களின் காதல், மெல்லத்தான் படரும்.

தொடரும்....

தங்கவேல்
13-01-2008, 01:40 AM
ஆதவா, சொன்னேன் இல்ல. பட்டய கிளப்புரீங்க என்று. தன்னடக்கம் ஓவர் உங்களிடம். ஆனால் அதுவும் ரசிக்கும் தன்மை உடையதுதான்.

ஆதவா
13-01-2008, 02:49 AM
ஆதவா, சொன்னேன் இல்ல. பட்டய கிளப்புரீங்க என்று. தன்னடக்கம் ஓவர் உங்களிடம். ஆனால் அதுவும் ரசிக்கும் தன்மை உடையதுதான்.

மிக்க நன்றி தங்கவேல்... தன்னடக்கம் என்றல்லாம் இல்லை... இருப்பதைத்தானே சொன்னேன்... என்னிடம் எதுவும் ரசிக்கும்படி இருந்தால் அது என் பாக்கியம்..

நன்றிங்க

ஷீ-நிசி
13-01-2008, 02:58 AM
எனது முதுகுக்குப் பின்னே முளைத்த காதல் இது.

செம வரி! ம்ம்ம்ம்ம்... கலக்குங்க!

யவனிகா
13-01-2008, 03:23 AM
அழகான காதல் கதை...காரணகர்த்தா டெலிபோன் தான்...அழகுத் தமிழில் கேட்க சுவாரசியமாக இருக்கிறது ஆதவா...தொடருங்கள்.

ஆதவா
13-01-2008, 03:24 AM
எனது முதுகுக்குப் பின்னே முளைத்த காதல் இது.

செம வரி! ம்ம்ம்ம்ம்... கலக்குங்க!

நன்றிங்க ஷீ! ஏற்கனவே கலக்கியதால் வந்த வினை... தொடர்ந்து எல்லா படலங்களையும் படியுங்க....

நன்றி

ஆதவா
13-01-2008, 03:35 AM
அழகான காதல் கதை...காரணகர்த்தா டெலிபோன் தான்...அழகுத் தமிழில் கேட்க சுவாரசியமாக இருக்கிறது ஆதவா...தொடருங்கள்.

மிக்க நன்றி சகோதரி...

சிவா.ஜி
13-01-2008, 03:48 AM
உங்கள் மனக்குடத்தை நிரப்பிய தேன் இப்போது உங்களிடமிருந்து இந்த படைப்பு வழியாக வழிந்து எங்கள் காதுகளையும் நனைத்து,மனதை நிறைத்து இனிக்கிறது.அருமை...அருமை....அழகு தமிழ் கொஞ்சுகிறது.இன்னும் வாசிக்கச் சொல்லி இதயம் கெஞ்சுகிறது.அசத்துங்க ஆதவா.