PDA

View Full Version : வாணிபக் காற்று ( அ.மை.-28)



இளசு
07-01-2008, 09:23 PM
அறிவியல் மைல்கற்கள்- 28

வாணிபக் காற்று

----------------------------------------------------------
அ.மை.(27) - வாலறிவன் இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12257

------------------------------------------

அ.மை (28): வாணிபக் காற்று

ஜார்ஜ் ஹேட்லி ( George Hadley) 1685 - 1768

பதினெட்டாம் நூற்றாண்டில் மாலுமிகள் அனுபவித்து உணர்ந்த ஒன்று -
காலம்,இடத்துக்குத் தக்க வீசும் வேகக்காற்றின் குணநலன்கள்.
நிலநடுக்கோட்டுக்கு வடக்கே காற்று வடகிழக்கிலிருந்து வீசும்..
நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே காற்று தென்கிழக்கிலிருந்து வீசும்.
கப்பல்கள் அதன் திசையிலே பயணித்தால் - பயணங்கள் சுகமானவை; வேகமானவை.

அதே நிலநடுக்கோட்டை நெருங்கிவிட்டால்... அந்தக்காற்றும் இல்லாமல், இந்தக்காற்றும் இல்லாமல்
அந்தரத்தில் ''திரிசங்காய்'' விட்டுவிடும். ஆங்கிலத்தில் ''doldrums'' என்றழைக்கப்படும் இந்நிலை
மாலுமிகளைக் குலைநடுங்க வைக்கும். சிக்கினால் கப்பல் அங்கேயே அல்லாடும்.

(டோல்ட்ரம் என்றால் திக்பிரமை/விரக்தியில் தேமேன்னு சமைஞ்சு இருக்கும் கிறக்க நிலை)

ஜார்ஜ் ஹேட்லி - அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயே வழக்கறிஞர்.
அவருக்கு வானிலை மாற்றங்களில் வற்றாத ஆர்வம். அதிலும் நிலமகளின் உடல் தழுவும்
காற்றோட்டங்கள், காலம்/இடம் பொருத்த சில கணிப்புகளுக்கேற்ப வீசுவதை
இன்னும் ஆராய ஆர்வம்.

வழக்கறிஞராக மட்டுமன்றி, ராயல் இலண்டன் கழகத்தின் வானிலை ஆராய்ச்சிப் பிரிவின்
பொறுப்பாளராகவும் இரட்டிப்பாய் உழைத்தார் ஹேட்லி. இரண்டாவது உழைப்புதான்
அவருக்கு அழியாப்புகழையும், இந்த மைல்கல் நாயகர் பட்டத்தையும் அவருக்கு ஈட்டித்தந்தது.

நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு லண்டன் கழகத்துக்கு 1735-ல் இந்த வாணிபக்காற்றின்
இயற்பியல் சூட்சுமங்களை விளக்கி, கட்டுரையாக சமர்ப்பித்தார். அதில் ஹேட்லி கூறிய
கோட்பாடுகள்:

1) சூரிய வெப்பத்தால் பூமத்திய ரேகைக்கு இருபக்கமும் உள்ள வெப்பமண்டலங்களில்
(Tropics) காற்று சூடாகிறது. சூடான காற்று,எடைக்குறைவால் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
மேலே எழும்புகிறது. துருவங்கள் அருகே குளிர்ந்து , எடை கூடி கீழிறங்குகிறது.
இதனால் வடக்கு, தெற்கு என இரு பிரிவுகளில் காற்றின் Convection Cell'' - அனல் அறைகள்
உருவாகின்றன. இவற்றுக்கு ஹேட்லி செல்கள் எனப் பெயர்.

நிலப்பரப்பின் அருகே உள்ள காற்று, நிலநடுக்கோட்டுக்குப் பயணிக்க,
உயர்ந்த மலைக்காற்று துருவம் நோக்கி ஓட்டமெடுக்க..
காற்றின் பயணத்திசைகள் இப்போது தெளிவாகின..

நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் காற்று நடுக்கோடு நோக்கியே வீசுவது புரியத்தொடங்கியது.

2) ஆனால் ஏன் வடக்காற்று வடகிழக்காய்? தென்காற்று தென்கிழக்காய்?

சற்றே சாய்ந்தபடி சுழலும் பூமியும் காற்றும் உரசுவதால், இந்த கீழைத்தன்மை காற்றின் பயணத்திசைக்கு..

3) மேலெழும்பி வரும் வடக்காற்றும், தென்காற்றும் சந்திக்கும் இடம்தான் - மோனநிலை தவழும் டோல்ட்ரம்.



மலைக்குகையின் இருள்மடியில்
தலைசாய்த்த இளவரசன்
மனங்கவர்ந்த காதலி
மடியில் இல்லை என மருகி
எறிந்த பெருமூச்சே
இரவின் பெருங்காற்று....

என அதுவரை கவிதையாய் உணரப்பட்ட காற்றுப் பிரசவம், அதன் பயணம்
ஹேட்லியின் ஆராய்ச்சி முடிவுகளால், சூரிய வெப்பம், பூமி உரசல் என
கவர்ச்சியற்ற அறிவியல் உண்மைகளாய் மாறின..

ஆனாலும் பல நல்ல ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட '' உதாசீன நிலை''
ஹேட்லிக்கும் வாய்த்தது.

1793-ல் ஜான் டால்டன் ( அணுக்கொள்கை தந்த அதே டால்டன்
http://en.wikipedia.org/wiki/John_Dalton)..
ஹேட்லியின் கண்டுபிடிப்பை மறு -அறிவுபரப்பு செய்த பின்னரே
முன்னவருக்கு உரிய அங்கீகாரத்தை உலகம் அளித்தது..

நல்லவை உணரப்படாமலே மறைந்து விடுவது - பாபம்!
பின்னாளில் அவற்றை மறந்தும் விடுவது மகாபாபம்!!

ஹேட்லியை வாழவைத்த டால்டனுக்கு நன்றி சொல்லி
மைல்கல் நாயகர் ஹேட்லி நினைவைப் பாராட்டி முடிக்கிறேன்.

செல்வா
07-01-2008, 10:16 PM
முற்றிலும் நான் அறிந்திராத ஒரு தகவல்....
தமிழிலேயே... அறிவியல் உண்மைகள் ...
இளசு அண்ணாவின் கருவிலிருந்து கதைக் குழவிகளாய்....
இடையில் கவிதை அலங்காரத்துடன்...

நன்றி அண்ணா பகிர்தலுக்கு........

பாரதி
07-01-2008, 10:33 PM
டோல்ட்ரம் நிலையிலிருந்த அ.மை இப்போதுதான் பருவக்காற்றாக வீசத்தொடங்கி இருக்கிறது!

காற்றைக்குறித்த ஒரு கண்டுபிடிப்பை பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் அண்ணா. வாழும் போது பாராட்டப்படாத பல அறிஞர்களைப் போல ஜார்ஜ் ஹேட்லியும்!

மைல்கற்களின் தொடர்ச்சி மனதினில் பெரும் மகிழ்ச்சி. உங்களுக்கு என் அன்பு.

அறிஞர்
07-01-2008, 10:53 PM
புதிய தகவல்...

ஒரு ஆராய்ச்சியாளனின் கண்டுபிடிப்பு.. அடுத்தவரால் அங்கீகரிப்பட்டால் மாத்திரமே.. பயனுள்ளதாக அமையும்..

இளசு பாணியில் "ஹேட்லியை வாழவைத்த டால்டனுக்கு நன்றி"

சிவா.ஜி
08-01-2008, 04:07 AM
அறிவியல் கட்டுரைகள் என்றாலே புரியாத சொற்களால் பக்கங்கள் நிரப்பட்டு தூக்கம் வரவழைக்கும் என்று யாராவது சொன்னால் அழைத்து வந்து இந்த அற்புதத்தைக் காட்டவேண்டும்.இதுவரை தெரியாத ஒரு புது விஷயம்,தெரிவித்த விதமோ....ஆஹா...அருமை.
ஹாட்லியின் கண்டுபிடிப்பு காலந்தாழ்ந்தாவது அங்கீகரிக்கப்பட்டதே.
புதிய அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வைத்து எம்மை இன்னும் செல்வந்தராக்கும் இளசுவுக்கு நன்றியுடன் வந்தணங்கள்.

இளசு
04-02-2008, 08:42 PM
செல்வா, பாரதி, அறிஞர், சிவா..

உங்கள் ஊக்கமொழிகளுக்கு நன்றி..

இதே உற்சாகத்துடன் விரைவில் அடுத்த பாகம்...

aren
05-02-2008, 01:31 AM
மீண்டுமொரு அருமையான அறிவியல் விளக்கம். இளசு நீங்கள் இங்கே இல்லையென்றால் இந்த மாதிரியான விஷயங்களை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது.

அப்படியென்றால் தென்மேற்கு வடமேற்கு பருவக்காற்று என்று நம் வானிலையாளர்கள் கூறுகிறார்கள், அது என்ன? எங்கிருந்து வருகிறது?

இன்னும் கொடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
05-02-2008, 07:20 AM
நன்றி அன்பின் ஆரென்..

கண்ணதாசன் மழலைப்பட்டாளம் படத்தில் சொன்னதே என் பதிலும்:

கடல் மீது அடித்தாலும் காற்று.. அது
மலை மீது அடித்தாலும் காற்று...


அதே சூழல்கள்தான் இருவகைக் காற்றுக்கும் மூலம்..

தரைக்காற்று தடைகளால் உடைபடும்.. திசை மாறும் வாய்ப்புகள் அதிகம்..

வாடைக்காற்றம்மா ( இரத்தத்திலகம்)
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ( திருவிளையாடல்)
தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது ( கருத்தம்மா)
ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போற திசை தென்கிழக்கோ ( தூறல் நின்னுபோச்சு)

எனக் காற்றின் திசைகள் திரைப்பாடல் வரை ஊடுருவி நிற்கின்றன...

தொடர்வேன்..

sarcharan
05-02-2008, 07:31 AM
பயனுள்ள தகவல் அன்பரே.பகிர்ந்தமைக்கு நன்றி.

ஆதவா
06-02-2008, 01:26 AM
ஓ!! இத்தனை மேட்டர் இருக்கா.... !!!! டோல்ட்ரம்.. நான் கேள்விப்படாத ஒன்று.. திசையில்லா காற்றும் வருமா? சூப்பர் தகவல்...

ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வகை உதாசீனங்கள் தொடருகிறதா? நம்ம ஊர்லதான் ஏதாச்சும் கண்டுபிடிச்சாலே ஒரு மாதிரியா பார்ப்பாங்க....!!

Narathar
30-09-2008, 06:51 AM
நல்லவை உணரப்படாமலே மறைந்து விடுவது - பாபம்!
பின்னாளில் அவற்றை மறந்தும் விடுவது மகாபாபம்!!

ஹேட்லியை வாழவைத்த டால்டனுக்கு நன்றி சொல்லி
மைல்கல் நாயகர் ஹேட்லி நினைவைப் பாராட்டி முடிக்கிறேன்.

இவர்களனைவரையும் இங்கு நினைவு கூறவைத்த உங்களுக்கு எனது நன்றிகள்......

அருமையான தொடர்!
இவ்வளவு காலமும் தவறவிட்டமைக்கு வருந்துகின்றேன்