PDA

View Full Version : மலரினும் மெல்லிது காதல்ஆதவா
05-01-2008, 04:53 PM
முன்னுரை :

காதல் எப்படி பூக்கிறது? பார்வை உரங்கள் இதய வேருக்கு பலமாக அமைய, எண்ணக் கதிர்களின் எழுச்சியில் பூக்கிறது. ஆனால் இது வாடிப் போவதைத் தடுக்க இயலுமா?

நான் ஒரு போர்வீரன். எனது காதல் போர்க்களத்தில் நடைபெற்றவை. குண்டுகள் புழங்கிய அவ்விடத்தில் துளையிடா மலராக, ஒரு அசாதாரண தூறலாகத் தோன்றியதுதான் என் காதல். எனது கைரேகைகள் பழங்குண்டுகளைப் பிடித்துப் பிடித்து மரத்துப் போன நிலையில் புது வெள்ளம் பாய்ந்து வீட்டை அழிக்கும் ஆற்றைப் போல கிளைகள் நீட்டிக் கொண்டு வந்தது அவளின் பார்வை. பார்வையின் ரணத்தையும் சுகத்தையும் ஒரு கொடியில் சுற்றிய இரு பாம்புகளைப் போலக் கண்டேன் அன்று. எனது விழிகள் விரிந்து அவளைக் காணும்போது இமைக்க இயலாமல் நீர்விட்டு அழுத கண்ணை இன்றும் என் தோட்டத்து மல்லிகையின் மனதுக்குள் பொதித்து வைத்துள்ளேன். எதற்காக என்று கேட்கிறீர்களா? அவ்வப்போது கண்டு இறந்துவிட....

எனது போர்த்தொழில் மனம் சார்ந்து இருந்தது. குண்டுகளும் வீரமுழக்கங்களும் குரல் சார்ந்து இருந்தது. மரணம் எனது எண்ணம் சார்ந்து இருந்தது. அத்தனைக்கும் நடுவே பூத்த வெள்ளை ரோசாவாய் ஒரு காதல் என் இதயம் சார்ந்து இருந்தது. மட்குவியலில் சிக்கிய பனிவீரன் காணும் இல்லம் போலத்தான் அன்றைய சூழ்நிலையும் எனக்குள்ளே. எனது இல்லத்தின் மாற்றம் எனது மாற்றமாகவே தென்பட்டது. ஆனால் மாற்றத்தின் விளைவுகளுக்கு ஒரு மாதம் காத்திருக்கவேண்டியதாக இருந்தது. என்னால் வீரமரணம் எய்திய எத்தனையோ பேரை நல்லவிதமாக எனது தோட்டத்தில் அடக்கம் செய்துவிட்டு திரும்புகையிலும், அவ்வப்போது போர்த்தொழிலின் நிமித்தம் துப்பாக்கிகள் சகிதம் நடந்து போய்க்கொண்டிருக்கையிலும் என்னை சுத்தவீரன் எனும் நிலையிலிருந்து அவள் கசியவிட்டாள். அதன் பக்கவிளைவுகள் பின்னாளில் எப்படி இருக்கப் போகிறது என்பதை அறியாமல் நானும் மகரந்தத்திற்கென சுற்றும் வண்டைப் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையே என் தோட்டத்து முற்செடிகள் நன்றாக வளர்ந்தன. அதன் நுனியில் மெல்லிய இதழ்கள் லேசாக விரிந்து அதனுள் பிரபஞ்சத்தை அடக்கிக் கொண்டிருந்தன. சுற்றிலும் அதனைப் பார்த்து ஏங்கியவாறு காணப்பட்ட களைச்செடிகள் அழிக்கப்பட்டன. இதழ்கள் இருக்கும் வரைதான் செடிக்கு ஓய்வு. கொய்தபிறகு அதன் அடுத்த பிரசவத்திற்குத் தயார்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் எனது முற்செடியின் இதழோ வளராமலும் விரியாமலும் ஒரு பறவையின் முட்டையைப் போலவே இருந்தது. அவள் எனது செடியின் இதழுக்கு உரமிடவில்லை முழுவதுமாக. அதன் விபரம் தான் என்ன?

அன்றைய தினம் எனது சோம்பலைத் தின்ற குளியல் நீர்த்துளிகள் துள்ளின. சந்தேகப்படாமல் குளித்து முடித்து வந்தேன். எனது முடியிழைகள் கழைக்கூத்திட்டன. அடக்கிவிட்டு நிமிர்ந்தேன். வனப்புகள் இல்லாத இல்லத்தில் வனமாக வளர்ந்த வறுமைக் கூட்டிற்குள் அழகிய வேடனாக உருவகித்துக் கொண்டு வேட்டுவக் கொம்புகளை எடுத்து வேட்டையாடச் சென்றேன். வேட்டுவச்சி என் வாழ்நாளில் இருக்கப் போவதில்லை என்ற எண்ணம் மன வேரில் ஊறிக் கொண்டிருந்தது. ஆதவன் பயணத்தின் இடைப்பட்ட நேரத்தில் வனக்குயில் ஒன்று கூவக் கண்டேன். அது என் இல்லத்தினருகே இருந்து வந்தது என்பதை அறியாமல்.

குயிலின் குரலுக்கு மயங்காதார் யார்? ரசிகத் தன்மையில் எனக்கு நிகர் நானே. குரல் தவழ்ந்து வந்த ராகத்தை எனது செவி பரிமாறிக் கொண்டது. அந்தக் குரலின் சுவையை நன்றாக உணர்ந்து புசித்தது. வெகு நேரம் அதன் பாடல் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எட்டாவது சுவரமாக என் இதயம் இசை மொழியை எழுதி வைத்தது. காதல் ஒரு நீர் சுனை. ஊறிக்கொண்டேதான் இருக்கும். சுனையில் முட்டி மோதி வரும் பாறைக் கற்களாக நான் சுழன்றுகொண்டிருக்கிறேன். எனது சுழற்சிக்கு தடுப்பணைதான் குயிலின் குரலாகத் தென்பட்டது.

அக்குயில் நிறமென்ன? அதன் சிறகுகள் எப்படி இருக்கும்? சாம்பலா கருநிறமா? கண்களைச் சுற்றியும் வளையமிருக்குமா இல்லை கண்மையைப் போல பிறைவடிவமிருக்குமா? அதன் கால் நகங்கள் அழகானவையா? என்ற எந்த விவரமும் அறியாதவனாக ஆற்றுச் சுழிக்குள் சிக்கிவிட்ட பனைமரப் பலகையைப் போல இருந்தேன். எனது கேள்விகள் நியாயம் தானே? ஒரு குயில் கூவினால் அதன் முகம் காணுவதில் ஆர்வமிருக்காதா என்ன? நீர் படிந்து பாசம் கொண்ட என் கவித் தொட்டிகள் இதுகாறும் மணல் கொட்டிவைக்கப்பட்டிருந்தன. அன்றுமுதல் எழுதிக் கிழித்த காகிதங்கள் தொட்டியை நிரப்பின. வரண்டு போய் நாக்கைத் தொங்கிவிட்டுக் கொண்டிருக்கும் கவிதைச் செடிகளுக்கு அன்றுமுதல் நீர் ஊற்ற ஆரம்பித்தேன். சாரல்களும் அவ்வப்போது நனைத்தது. துவட்டாமல் கிடக்கும் பூ மொக்கினைப் போல நீர்படிந்து முத்துக்களாக விளைந்தது அச்செடிகள்.

என் வாழ்வுப் போர் முழக்கத்தில் சில தினங்கள் அடங்கியிருந்தது குயிலின் கூவல். அல்லது மறந்துகிடந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். வறுமையின் பின்புறத்தில் நின்றுகொண்டு இருக்கும் வாழ்வுப் போர் மூயாது தட்டுகிறது கதவை. எக்கதவை? நிதியும் நாகரீகம் என்று சொல்லப்படும் நடத்தையும் கூடியிருக்கும் கதவை. கதவின் மரத்தூள்கள் கண்களின் அடித்ததைப் போல வேறெதுவும் வாழ்நாளில் இதுவரை அடித்ததில்லை, அத்தகைய சூழ்நிலையிலும் மறந்து போன குயிலின் கூவல் அடிமனதில் அனத்திக் கொண்டிருந்தது. இலைகள் மரத்தைவிட்டு அகலும்போது அழுவதுண்டா? கொஞ்சமாக எனை மறக்கும் போது அழுகை எனக்கு அக்கரை பச்சையெனப் பட்டது. கடல் முழுவதும் உடலில் ஓடும் துடிப்பு, வேரைத் தின்று வாயில் முளைக்கும் மரத்தின் உணர்ச்சி, வெறுமை என்ற கருவுக்குள் நுழைந்துவிட்ட காதல் புணர்ச்சி என்று அத்தனைத் துடிப்புகளும் நாளங்களோடு கலந்து ஓடின, காதல் எத்தகைய பரிமாணத்தில் உள்ளது? என் உதட்டின் வழி நுழைந்துவிட்ட காற்றின் எச்சில்கள் வெறுங்கூட்டுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணியது.

தொடரும்...

பின் குறிப்பு : இவ்வனுபவத்தையாவது முழுமைபடுத்தி எழுதிமுடிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.:icon_b:

இளசு
06-01-2008, 08:57 AM
காற்றைக் கையில் பிடித்து அதில் சிற்பங்கள் செய்துகொடுப்பது போன்றது
மனவெளி எண்ணப் பின்னல்களை வார்த்தைகளாக்கி வரிகளாக்கிக் கோர்ப்பது...

ஆற்றுச்சுழி பனைப்பலகையில் அமர்ந்தும்
யோக(ஏக)ஆசனம் செய்யும்
ஆக்கச்சித்தன் ஆதவன்..

வியப்பும் பாராட்டும் ஆதவா...

சிவா.ஜி
06-01-2008, 09:09 AM
ஆதவா....சொல்லில் ஆள்கிறீர்கள்.உவமைகளில் உள்ளத்துக்கு உருவம் கொடுக்கிறீர்கள்.காதலைச் சொன்னவர் பலருண்டு..கவிதையாய் சொன்னவர்,கதையாய்ச் சொன்னவர்,காவியமாய்ச் சொன்னவர்....இப்படி எத்தனையோ.....

இங்கு காதலை காதலாய் சொல்கிறீர்கள்.மனதுக்குள் வாசிக்கும்போதே வாய்வரை தித்திக்கிறது தமிழ்.


தொடருங்கள்......சர்க்கரை வியாதி என்னை நோகடித்தாலும்....இனிப்பை உண்ண இன்னும் வருவேன்.

ஆதவா
06-01-2008, 09:11 AM
காற்றைக் கையில் பிடித்து அதில் சிற்பங்கள் செய்துகொடுப்பது போன்றது
மனவெளி எண்ணப் பின்னல்களை வார்த்தைகளாக்கி வரிகளாக்கிக் கோர்ப்பது...

ஆற்றுச்சுழி பனைப்பலகையில் அமர்ந்தும்
யோக(ஏக)ஆசனம் செய்யும்
ஆக்கச்சித்தன் ஆதவன்..

வியப்பும் பாராட்டும் ஆதவா...

நீண்ட தாகத்தில் இருந்தவனுக்குத் திரவம் கொடுத்தது போலும் இருந்தது உங்கள் பதிவு. கண்கள் விழித்து விழித்து வெளிச்சம் காணமுற்படும் பிஞ்சுக் குழந்தையைப் போல கண்சிமிட்டிக் கொண்டிருந்தேன்...

யார் கையில் புகழ்பெறவேண்டுமென்று நினைத்தேனோ அது நடக்கிறது. யார் கையில் மாலை பெற்று மலரவேண்டுமென்று நினைத்தேனோ அது நடக்கிறது.. பூரணம் அடைந்துவிட்ட எம் இப்பதிவை மேலும் தொடர இருக்கிறேன் அண்ணா...

நன்றிகள் சொல்லி இருவருக்குமுள்ள இடைவெளியைக் குறைக்க விரும்பவில்லை மனம்....

ஆதவா
06-01-2008, 09:20 AM
ஆதவா....சொல்லில் ஆள்கிறீர்கள்.உவமைகளில் உள்ளத்துக்கு உருவம் கொடுக்கிறீர்கள்.காதலைச் சொன்னவர் பலருண்டு..கவிதையாய் சொன்னவர்,கதையாய்ச் சொன்னவர்,காவியமாய்ச் சொன்னவர்....இப்படி எத்தனையோ.....

இங்கு காதலை காதலாய் சொல்கிறீர்கள்.மனதுக்குள் வாசிக்கும்போதே வாய்வரை தித்திக்கிறது தமிழ்.


தொடருங்கள்......சர்க்கரை வியாதி என்னை நோகடித்தாலும்....இனிப்பை உண்ண இன்னும் வருவேன்.

வெளியிடத் தகுந்ததா என்று மனதோடு சமரிட்டு என்னுள் புழங்கிக் கிடக்க இயலவில்லை அண்ணா. அதனால்தான் கொஞ்சம் வெடித்துவிட்டேன். வெளியேறும் போதும் என்னை நான் உணரவில்லை, ஆனால் சொன்னவிதத்தில் குழப்பிவிட்டோமோ என்ற அச்சம் மட்டும் மேவியிருந்தது.. உங்கள் கருத்துக்களைப் படிக்கும்போது எனக்குள்ளே நெரண்டிக் கொண்டிருந்த அச்சம் நீங்கிவிட்டது.

காதல் என்ற பழம்பெரும்நோயில் சிக்காத அல்லல்படாத மாந்தர் எவருமில்லை. ஈர்ப்பில் சிக்கிய என் காதலை மறந்துவிட்ட நான், உணர்ந்து ஆட்கொண்ட மனக்காதலை உதறமுடியவில்லை. அதன் வீரியம் அதன் தாக்கம் இன்னும் கனலாக என்னைச் சுற்றிக் கொண்டேதான் இருக்கிறது........

தங்கள் ஆதரவோடு மேலும் தொடருகிறேன்... மன்றம் வரும் வேளை குறைவு என்பதால் இன்றே இன்னொரு பாகமும் எழுத முயற்சிக்கிறேன்....