PDA

View Full Version : தேவானை வினாக்கள்



சிவா.ஜி
03-01-2008, 06:12 AM
வேல் முருகா
மால் மருகா
இப்போதும்
நாமருகா....?

முருகனுக்கருகெனில்
ஒருவனுகொருத்தி விடுத்து
உறவெனக் குறத்தி எடுத்து
தவறெனத் தெரிந்தும் எனை
மறவெனச் சொன்னது ஏன் இறைவா?

நம்பிக்கை தகர்த்து
தும்பிக்கை துணையுடன்
வள்ளிக்கை அணைத்தாயே
அப்பனின் அரையுடல்
தத்துவம் மறந்தாயே....

வேடனாய் வேடமிட்டு
வள்ளியை வீழ்த்துமுன்
அ(ன்)ம்பினாற் எனை வீழ்த்தி
நம்பினார் கெடுவதில்லையென்ற
நாடகம் ஏனய்யா
நீயே சொல் வேலய்யா...?

அவதாரமென
அரிதாரமிட்டாய்
மறுதாரமேற்றால்
முதல்தாரம் நிலைபற்றி
ஒரு தரமேனும் யோசித்தாயா?

தினையுண்ண போனது
வினையென்று நீயுரைத்தால்
உனை அடைந்த
மனையொன்று வாடுமே என
நினைத்தாயோ நற்கணவா...?

ஆதவா
05-01-2008, 05:27 PM
தாரப் பிரச்சனைகள். என்றென்றும் உலகில் நிலவும் வெண்மேகங்களைப் போல உலவிக் கொண்டிருக்கும் பிரச்சனை இது. வடிவத்தில் இறைவனை இழுத்திருப்பது வித்தியாசம். அதிலும் வார்த்தையில் எதுகையை அணிவித்ததும் மிகச்சிறப்பே!

ஒட்டிப் பிறக்கும் பிள்ளைகளைப் போல சில உங்கள் கவிதையின் வார்த்தைகள் எழுத்து வித்தியாசங்களை மட்டும் இழைத்து வார்த்தைகளை வித்தியாசப்படுத்தியிருப்பதைக் கண்டு சிலாகிக்கிறேன்..

முதல்தாரத்தைப் பற்றிய முடிவெய்தாமல் முருகன் இரண்டாவது மணத்தைப் பற்றி யோசித்திருப்பானா? முனியனுக்கு முன்னால் மண முடிச்சுகள் எல்லாம் வெகு அற்பம். ஆனால் இதை மனிதனுக்கு ஒப்பிடும் போது கொஞ்சம் தளர்வு ஏற்படுகிறதே!

தேவானையின் வினாக்கள் ஒவ்வொரு முதல் தாரத்திற்கும் தேவையானது எனினும் வினாக்கள் இத்தனை வெள்ளைப் புறாக்களை ஏந்திக் கேட்க இயலவேண்டியதில்லை. ஜுவாலைகளைக் கலந்து கொப்பளிக்கவேண்டாமா?

எனக்கு இருதார நிலை பிடிப்பதில்லை. அது முருகனாக இருந்தாலும் சரி, என்னருகே அமர்ந்திருக்கும் குமரனாக இருந்தாலும் சரி.

கவிதையின் பாதை சாதாரணத்தைவிட்டு விலகி ஓடுகிறது... அந்தவகையில் மீண்டும் கவர்கிறீர்கள்.
வாழ்த்துகள்

சிவா.ஜி
05-01-2008, 05:33 PM
ஆதவா.....வா...வாப்பா...இந்த பின்னூட்டத்தைத்தான் எதிர்பார்த்தேன்.

என்ன இருந்தாலும் கணவன் அகிலத்துக்கு இறைவனல்லவா அதனால்தான் தாரமென்ற உரிமையிருந்தும் காரம் குறைத்து கேட்கிறாள்....ஆனாலும் கேட்கிறாளே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆதவாவின் பின்னூட்டம்.அசத்துகி|றது.நன்றி ஆதவா.

ஆதவா
05-01-2008, 05:43 PM
ஆதவா.....வா...வாப்பா...இந்த பின்னூட்டத்தைத்தான் எதிர்பார்த்தேன்.

என்ன இருந்தாலும் கணவன் அகிலத்துக்கு இறைவனல்லவா அதனால்தான் தாரமென்ற உரிமையிருந்தும் காரம் குறைத்து கேட்கிறாள்....ஆனாலும் கேட்கிறாளே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆதவாவின் பின்னூட்டம்.அசத்துகி|றது.நன்றி ஆதவா.

இந்த பின்னுக்குப் பின்னே ஏதும் இருக்கிறதோ?? :icon_rollout:

சிவா.ஜி
05-01-2008, 05:51 PM
எனக்கு இருதார நிலை பிடிப்பதில்லை. அது முருகனாக இருந்தாலும் சரி, என்னருகே அமர்ந்திருக்கும் குமரனாக இருந்தாலும் சரி.

இதைத்தான் சொன்னேன்

அமரன்
10-01-2008, 05:05 PM
சந்தம் மிகுந்த குத்து சிந்து..

ஒப்பீட்டுக்கு ஆகக்குறைந்தது இரண்டு.
சாமிகளும் நல்லன அல்லன கொண்டு..

கலக்கிடீங்க சிவா..:icon_b: பாராட்டுக்கள்.

சிவா.ஜி
16-01-2008, 08:42 AM
அடடா...மற்ற களேபரத்துல இந்த பின்னூட்டம் பாக்கலியே.
ரெண்டே வரியில நீங்களும் சந்தத்துல சத்தியம் சொல்லிட்டீங்களே.

மிக்க நன்றி அமரன்.

ஓவியன்
21-01-2008, 05:19 AM
நம்பிக்கை தகர்த்து
தும்பிக்கை துணையுடன்
வள்ளிக்கை அணைத்தாயே
அப்பனின் அரையுடல்
தத்துவம் மறந்தாயே..

அப்பனின் அரையுடல் மறந்தோ,
இல்லை
அப்பனின் முடி உடை மங்கை
கங்கையை நினைத்தோ இந்த வழி...!!??

ஒன்றை இரண்டாக்க தெய்வங்களுக்கு
தேவைப்பட்டவை காரணங்கள்..
அஃதே மாந்தரிலும் சிலருக்கு
உள்ளன காரணங்கள்....!!

காரணம் பற்றித் தான் எல்லாக்
காரியங்களும் என்றால்..
ஆண்களைப் போலவே
பெண்களும் காரணம் தேடின்
ஏற்றுக் கொள்ளுமா சமூகம்...??

சிந்திக்க வேண்டும் எல்லோரும்,
சிந்திக்க வைத்த கவிதைக்கு நன்றிகள் சிவா....!!

சிவா.ஜி
21-01-2008, 06:10 AM
சரியான கருத்து ஓவியன்.பெண்களும் அப்படி காரணங்கள் கற்பித்தால்....ஆண்களின் கதி என்னாவது?பெண்ணுக்கு மட்டுமா கற்பு?
மிக்க நன்றி ஓவியன்.

இளசு
26-01-2008, 08:17 PM
அன்பு சிவா

சிலநாள் பதிவுகளை நாமிழக்குமுன்பு, இதற்கு நான் பின்னூட்டமிட்ட நினைவு..

முதலில் கவர்ந்தது சிந்து... அது முருகனை வம்பிழுத்தாலும் அமையும் சந்தச் சிறப்பு.. உங்கள் விரல்களில் விளையாடி தவழ்ந்து தாவி அமர்க்களப்படுத்துகிறது சொல்லழகு!

இரண்டாவது பொருளழகு..

அரசன், பிரபு என அடிமைப்பட்ட ஆணினம் மெல்ல மெல்ல சமநிலைக்கு உயர.... குடியரசாக...

அதன்பின்பும் பேதமின்றி எல்லா ஆணும் பெண்ணை சொத்துரிமை, விவாகரத்துரிமை, அரசியல் வாக்குரிமை இல்லாமல் கூட்டாய்ச் சேர்ந்து அமுக்கி வைக்க..

பெண்விடுதலை முன்னணியில் உள்ள பிரிட்டனிலேயே
1850 வாக்கில்தான் சொத்தும், ரத்தும்
1918க்குப்பின் தான் பெண்ணுக்கு வாக்கும் ...

மெல்ல மெல்ல மாறிவருகிறது சமூகம்..

சில ஆயிரம் ஆண்டுகால வியாதி..
சில நூறு ஆண்டுகால சிகிச்சை..

விரைவில் முழுநலம் எட்டுவோம்..

தெய்வானைக் கதைகளும் திருத்தி எழுதப்படலாம்!

பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
27-01-2008, 12:54 PM
மிகப் பழமையான....மிக முக்கியமான ஆயிரம் கால வியாதியைப்பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள் இளசு.கேள்வி கேட்கும் நிலைக்கு மகளிர் வருவதற்கே ஆயின ஆண்டுகள் ஆயிரம்.ஆயினுமிங்கில்லை பூரணம்.
நீங்கள் சொல்வதைப்போல அப்படி ஒரு நிலையில் இப்போதைய தேவானைகளின் கேள்விக்கு அவசியமிராது.வரவேண்டும் அப்படியோர் காலம்.மிக்க நன்றி இளசு.