PDA

View Full Version : மஞ்சனத்திgragavan
19-12-2007, 06:36 PM
இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.

எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.

இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.

கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.

சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?

மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.

மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?

இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.

இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?

ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.

அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.

இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.

என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?

அன்புடன்,
கோ.இராகவன்

அன்புரசிகன்
19-12-2007, 07:03 PM
வாழ்க்கை காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. சிறுவயதில் பாடசாலை செல்லும் போது ஒரு பிரம்பு போன்று தடி ஒன்றை எடுத்து வேலி புல்பூண்டுகுள் எல்லாவற்றிற்கும் அடித்து அடித்து செல்வது. தொட்டாச்சிணுங்கி மரத்தை கண்டால் அதை விளக்கி அனைத்து இலைகளையும் சுருக்கிவிட்டு தான் அகல்வோம். இப்போது எவரும் அந்த பாதையால் நடப்பதில்லை. எல்லாம் சைக்கிள் மோட்டார் வண்டிகள் என்று ஆகிவிட்டது...

ஆனால் இந்த மஞ்சனத்தி மரம் நான் கேள்விப்பட்டதில்லை.

உணர்வு பகிரலுக்கு நன்றிகள் அண்ணா.

செல்வா
19-12-2007, 08:44 PM
ஒரு மரம் ஒரு குடும்பம்...... மரமும் குடும்பத்தில் ஒன்றாகிப்போனது.....
பச்சைப் பசேலென்று பலரும் பார்க்க பாராட்ட பாடிக்களிக்க வாழ்ந்த மரம் இன்று மொட்டையாகி ... கேட்பாரற்றுக் கிடக்கிறது..... அந்த பெண்ணைப்போலவே.....

அருமையான.. கதை ராகவன்......

(அமர் உங்கள் தெரிவு அருமை....ஹி...ஹி)

lolluvathiyar
20-12-2007, 09:16 AM
கதை அருமையாக இருந்தது. குழந்தையாக இருக்கும் போதிருந்து இன்னும் இருந்து கொண்டிருக்கும் அந்த மரம் பரம்பரை கதையை சொல்லி கொண்டிருகிறது. மலரும் நினைவுகளை மரத்தை வைத்து விளக்கிய விதம் மிக அருமை.
நானும் கிராமத்துகாரன் என்றாலும் உங்கள் கதையில் உள்ள சில கிராமத்து பாசை புரியவில்லை (எங்க கிராமத்துல கிட்டதட்ட நகரத்து பாசை தான் பேசுவாங்க). அது அவ்வளவு பிரச்சனை அல்ல ஆனால் கடைசி பாரா குழப்புதே, யாரு கல்யானத்த பத்தி பேசினாள் அந்த தாய்.
மஞ்சனத்தி மரம் நான் கேள்விபட்டதே இல்லையே இதுக்கு வேற ஏதாவது பேரு இருக்கிறதா?

jpl
20-12-2007, 01:31 PM
மஞ்சனத்தி மரத்தினை நுணா என்றும் குறிப்பிடுவார்கள்.
நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது டீத்தூளில் இந்த மஞ்சனத்தி மரத்தின் பட்டையைச் சேர்ப்பார்கள்(கலப்படம்)என்று பேசிக் கொள்வோம்..உண்மையா பொய்யா என்று தெரியாது இன்று வரை..

பாரதி
20-12-2007, 04:04 PM
அருமை இராகவன்..!!
வழக்கு மொழியில், எளிய நடையில் மனதை தைக்கும் கதை. இப்படியான கதைகள் உங்களிடம் இருந்து தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

mukilan
21-12-2007, 03:56 AM
மஞ்சனத்தி மரத்தினை நுணா என்றும் குறிப்பிடுவார்கள்.
நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது டீத்தூளில் இந்த மஞ்சனத்தி மரத்தின் பட்டையைச் சேர்ப்பார்கள்(கலப்படம்)என்று பேசிக் கொள்வோம்..உண்மையா பொய்யா என்று தெரியாது இன்று வரை..

உண்மைதான் மஞ்சனத்தியை நுனா என்றும் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Nuna indica Rubeacea என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. Morinda citronella என்ற ஒத்த சிற்றினமும் உண்டு. ராகவன் குறிப்பிடும் மஞ்சனத்தியை நான் வட தமிழகத்தில் அவ்வளவாக கண்டதில்லை. நான் தெற்குப் பகுதியைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு மஞ்சனத்தியை நன்கு தெரியும். நான் மஞ்சனத்திப் பழத்தை உண்டுமிருக்கிறேன். சிறுவயதில் மஞ்சனத்தி காய்களைப் பறித்து அடுப்பு சாம்பலில் ஒரு இரவு வைத்தால் அடுத்த நாள் கருப்பாக கனிந்திருப்பதையும் அனுபவித்திருக்கிறேன்.மஞ்சனத்தியின் பூக்கள் பற்றி ராகவன் குறிப்பிடாமல் போனது ஏனோ? அவை மல்லிகை மலர் போலவே வெண்மையாக நல்ல நறுமணத்துடன் இருக்கும். அவ்வளவு துர்நாற்றமடிக்கும் பழம் கொண்ட மரத்தினில் நறுமணம் கொண்ட மலர்கள் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.

மஞ்சனத்தியின் மரப்பட்டைகளை அல்ல இலைகளைக் காயவைத்து கலப்படம் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தூத்துக்குடியில் சூரியகாந்தி தேயிலை என்று ஒரு தேயிலைக் கம்பனி ஒன்று இருந்தது.அதில் செய்ததாக கேள்வி.

பூமகள்
21-12-2007, 05:37 AM
மஞ்சனத்தி மரம் அறிந்திராத ஒன்று. அதை வைத்து கிராமத்து வாசனையோடு கதை நகர்கிறது.
முன் பாதியில் கதை சொல்வது ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்பத்தை பின் பாதி தீர்த்து வைத்தது.
வெகு இயல்பான வார்த்தையாடல்கள்..!
அற்புதமான கதை..! கிராம வாசனையை நுகர்ந்த நினைவு.
முந்திரிக் கொத்து பலகாரத்தை தூத்துக்குடி தோழி ஒரு முறை எனக்கு கொடுத்து நான் சுவைத்த நினைவு. சுவையான ஸ்வீட். இங்கு அதைக் கொடுத்து நினைவைக் கிளறிவிட்டீர்கள்..!

இலையில்லா மரம் போல் தன் மகளின் வாழ்வும் சொந்த மாமாவுக்கே கட்டி வைத்து விதவையாக்கி வீணானதைத் தான் அந்தத் தாய் நினைத்தாளோ??

வாத்தியார் அண்ணா.. இப்படியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.

இது போன்ற எதார்த்தமான கிராம கதைகள் இன்னும் இன்னும் வரனும்.

வாழ்த்துகள் ராகவன் அண்ணா. :)

ஆதவா
28-01-2008, 02:03 AM
ராகவன், உங்கள் கதை படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.. மஞ்சனத்தி மரம் கதை படிக்கும்போது புளியமரத்தின் கதையும் இணைந்தே வந்தது.. ஆனால் உங்களின் கிராம பாசை வெகுவாக கவர்கிறது.. அநேகமாக இது தென் மாவட்டங்கள் (மதுரை நெல்லை) பக்கம் பேசப்படும் வழக்கமாக இருக்கும் என்றூ நினைக்கிறேன்.

மஞ்சனத்தி மரம் கேள்விப்பட்டதோடு சரி. பார்த்ததில்லை. அன்றெல்லாம் மரங்களைத் தன் பிள்ளைகளுக்கு ஒப்பாக வளர்த்தார்கள் என்பதுவும் தெரிந்ததே!! அந்தப் பிள்ளையும் சொந்தப் பிள்ளையும் தன் செழிப்பு நிலைகளை இழந்தது கண்டு வேதனைப் படும் அந்த தாயாரும் கண்ணில் நிற்கிறார்..

வழக்கம்போல உங்கள் முத்திரை..... இந்தக் கவிதையிலும்....