PDA

View Full Version : பாரம்..!அமரன்
13-12-2007, 09:06 PM
புலர்ந்தும் புலராத காலைவேளை. மணியஞ்சாகிவிட்டது என்று கோயில்மணி அடித்துச்சொல்ல பதறி அடித்து எழுந்தாள் சரசு. குளிருக்கு இதமாக மண்தரையில் படுத்திருந்ததாலோ என்னவோ கிழிந்த சேலை அவளை விட்டு விலகி இருந்தது. அதைச் சரிசெய்து விட்டு குலைந்திருந்த தலையை சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள். பக்கத்துக் குடிசைத்திண்ணையில் பாக்குவெத்தலை இடித்துக்கொண்டிருந்த பங்கசக்கிழவிக்கு பாசத்துடன் புன்னகையை பரிசாக்கிவிட்டு, வழக்கமான வேலைகள்எல்லாவற்றையும் முடித்து விட்டு வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.ஊர்ப்பெரியவீட்டின் படலை பழுதாகாவண்ணம் பாதையில் விரிசல் ஏற்படுத்தி வளவுக்குள் நுழைய, வாலைக் குழைத்து குழைவுடன் வரவேற்றது கறுப்பு நாய். மெல்லப்பிடரியில் தடவி செல்லம் கொஞ்சும்போது கனைப்புச் சத்தத்துடன் எஜமானி. சாயம் போன வார்த்தைகளை விசிறி அடித்தாள்..

"பழையசோறு தின்றாலும் கொழுப்புக் கூடிட்டுது உனக்கு. வேலைக்கு வரும் நேரமிதுவாடி?".

பழங்கஞ்சி மிளகாய் பழகிப்போனதால், சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, மலைபோலக் குவிந்திருக்கும் பாத்திரங்கழுவும் வேலையை தொடங்கினாள். சற்று நேரத்திற்கெல்லாம், யாரோ அவளை பார்ப்பதாக உள்ளுணர்வு சொன்னது.சுற்று முற்றும் பார்த்தாள். யாருமில்லை என்று தெளிந்தாள்.

"இந்தாடி... இந்த உடுபுடைவைகளை நல்லா கசக்கித் துவைத்துபோடு. எப்பதான் அழுக்கில்லாமல் துவைக்கப்போறாயோ சனியனே.. எனக்கு மட்டும் எங்கிருந்து வந்து சேருகின்றீர்களோ" யானைப்பிளிறலுடன் மறைந்தாள் எஜமானி.

பாத்திரம் தேய்க்கும் சத்தத்தையும் மீறி யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. அவளையே பார்த்துக்கொண்டிருந்த நாயைப் பார்த்துப் புன்னகைத்தாள். கைவேலையை கவனித்தது.

கிணற்றடித் தொட்டியில் நீர் மொண்டு நிரப்பிவிட்டு உடுப்புகளை ஈரமாக்கி, சவர்க்காரம் போட்டு, தன் பெண்டாகி தன் பெண்டைத் தானே கழற்றிக்கொண்டு இருக்கும்போது, "இன்னும் துவைக்கலையா.. சனியனே.. சனியனே.. திண்டு திண்டு திரண்டு போயிருக்கிறாயே தவிர வேலையை வாகாச்செய்ய திராணி இல்லை. மாட்டுக்கொட்டகையை எப்பவடி சுத்தம் செய்யப்போறாய்" வெடித்தமடி மலைபோல ஆடி அசைந்து எசமானி செல்ல சருகுகள் அழுத சத்தம் கேட்டது. ம்மா என்று மாடுகள் அழைத்த சத்தம் அதனுடன் கலந்தது...

உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, கோமாதாக்கள் இருப்பிடத்தை கோயிலாக்கிவிட்டு, அவைகளுக்கு தண்ணி காட்டிவிட்டு தந்தாகம் தணிக்க துணிந்தவளை நெட்டித்தள்ளியது இடிக்குரல்.. "வேலை செய்து கிழித்த கிழிப்பிலை தண்ணி கேட்குதோ மகாராணிக்கு.... அப்படியே இதையும் தின்னு" பழைய பாத்திரத்தில் இருந்த பழஞ்சோறை தண்ணியில் கலந்துகுடிக்க பரிசாகபுரை ஏறியது..தன்னையும் யாரோ நினைக்கின்றார்கள் என்ற மகிழ்வுடன் குடித்துவிட்டு வீட்டுக் கொல்லப்புறக்கதவால் உள்நுழைந்து வீட்டைப் பெருக்கினாள்.. ஒருவாறு கட்டளைகளை நிறைவேற்றி அடிமாட்டுக்கூலியைப் பெற்றுக்கொண்டு அவள் குடிசைக்கு போகும்போது நேரம் மூன்று ஆகிவிட்டது...

குடிசை தனிமையாக வெயிலில் காய்ந்து கொண்டிருக்க, காலையில் அவள் ஆக்கி வைத்த சுடுசோறு ஆறிப்போய் இருந்தது.. பதைக்கும் மனதுடன் பாயைப் பார்க்க அது நின்ற நிலையில் இருந்தது.. வெளியே ஓடி எங்கும் தேடிக் களைத்து வந்தவளுக்கு பக்கத்துக் குடிசை பங்கசம் சேதி சொன்னாள்..

"ஏண்டி சரசு.. முந்தா நேத்து கூட்டியாந்தியே ஒருத்தி..யாருடி அவ... காலங்காத்தலா வேலைக்குப் போன உன்பின்னால போனாள்...கொஞ்ச நேரத்துக்குமுன்ன வந்தாள். உனக்கு பாரமா இருக்க வருமபல். அதனால போறேன்னு உங்கிட்ட சொல்லச்சொல்லிட்டு போயிட்டா..."

அதைக் கேட்டதும், யாருமற்ற தனக்கு, யாருமற்ற அவளை துணையாக ஆண்டவன் அனுப்பினானென சற்றுமுன் வரை புளகாங்கிதப்பட்ட சரசு, பாதரசப் பீப்பாவை நெஞ்சில் வைத்தது போல குடிசையின் திண்ணையில் சாய்ந்தாள்..

சிவா.ஜி
14-12-2007, 03:59 AM
யாருமில்லாதவர்களுக்கு ஆண்டவன் துணை என்பார்கள்.அப்படிப்பட்ட ஒருத்திக்கு எங்கிருந்தோ வந்தவள் துணையாய் இருப்பாள் என்ற எண்ணத்தையும் மாய்த்துவிட்டு மீண்டும் இவளை தனியாக்கிவிட்டுப் போய்விட்டாள்.வெறித்த பார்வையிலும்,விசும்பல் சத்தத்திலும் மட்டும் அந்த பாத்திரத்தைக் காட்டியது அருமை.படிப்பவர் யூகத்துக்கு அதை விட்டு விட்டதும் அருமை.அதிலும் புரையேறியதையும் நினைத்து சந்தோஷப்படும் சரசு,எவ்வளவுதூரம் அவளின் தனிமையின் கொடுமையை அனுபவித்திருப்பாளென்று உணர முடிகிறது.
சிறிய சம்பவம்தான்.அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் ஒரு கதை படித்த நிறைவு இல்லை.வெகு சுருக்கமாக முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு.எங்கிருந்தோ வந்தவளின் வெளியேற்றம் இத்தனை பாரத்தைக் கொடுத்தது என்று உணர அழுத்தமான காரணம் கொடுக்கப் படாததே என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் அமரன்.

தாமரை
14-12-2007, 05:09 AM
ஒரு வேளை அது ஓவியாவோ? நாலஞ்சு நாளா அவங்களைத்தான் காணோம்.

lolluvathiyar
14-12-2007, 06:07 AM
அருமை அமரன், எப்படி உங்களுடைய இந்த கதையை பின்னூட்டங்களை படிக்கும் முன்னரே புரிந்து கொண்டேன். பாவம் துனைக்கு யாரோ ஒருத்தியை அழைத்து வந்தால் அவளோ விட்டு விட்டு போய் விட்டாள். அந்த பாத்திரத்தை கன்னில் காட்டாமலே ஆனால் அதன் முக்கியத்துவத்தை காட்டி விட்டீர்கள்.
அதிலும் வீட்டு வேலை செய்யும் பென் கஸ்டபடுவதை அழகாக எழுதிஇருந்தீர்கள், அதை நான் நேராக பார்த்து கொண்டிருப்பவன். அதன் இன்னொரு முகமும் அடியே அறிந்தவன், எங்கள் வீட்டிலும் வேலை செய்ய ஒரு பென் வருவாள், இதேபோல எல்லா வேலையும் செய்வாள் 2 மனி நேரம் தொடர்ச்சியாக இருக்கும், என் மனைவி திட்டி விரட்டி கொன்டுதான் வேலை வாங்குவாள், ஆனா கோவையில் குரைந்த கூலி கிடையாது, வீட்டு வேலை செய்யும் பென்கள் மாத வருமானம் 10000 வரும். மில்லுக்கு போரவன் கூட அவ்வளவு ஈட்ட முடியாது

மலர்
14-12-2007, 07:02 AM
அமரண்ணா கதையை இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்...
நேக்கு முதல்ல புரிஞ்சிக்க கஷ்டமா இருந்திச்சி..
அப்புறம் ரெண்டு மூணு முறை படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

வர.. வர.. மணிரத்னம் படம் பாத்து எல்லாரும் கெட்டுபோயிட்டாங்க..
சுருக்கமா சொல்றேன்னு ஆணியடிக்கிற மாதிரி சொல்றேன்னு கிளம்பிட்டாங்களே...
"ஏண்டி சரசு.. முந்தா நேத்து கூட்டியாந்தியே ஒருத்தி..யாருடி அவ... காலங்காத்தலா வேலைக்குப் போன உன்பின்னால போனாள்...கொஞ்ச நேரத்துக்குமுன்ன வந்தாள். உனக்கு பாரமா இருக்க வருமபல். அதனால போறேன்னு உங்கிட்ட சொல்லச்சொல்லிட்டு போயிட்டா..."

அமரன்
14-12-2007, 07:47 AM
சிறிய சம்பவம்தான்.அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் ஒரு கதை படித்த நிறைவு இல்லை.வெகு சுருக்கமாக முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு.எங்கிருந்தோ வந்தவளின் வெளியேற்றம் இத்தனை பாரத்தைக் கொடுத்தது என்று உணர அழுத்தமான காரணம் கொடுக்கப் படாததே என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் அமரன்.
இது ரொம்பப் பிடிச்சிருக்கு.. உண்மைதான் சிவா. கதையாக இருக்கக்கூடாது என்று நினைத்து எழுதினேன். அவரவர் அனுபவித்த தனிமைத்துணை வேதனையைப் பொறுத்து பாரம் இருக்கட்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை.. மிக்க நன்றி.. குறைகளை தொடர்ந்து சொல்லுங்கள்.. பிடிச்சிருக்கு..

தாமரை
14-12-2007, 07:53 AM
அமரண்ணா கதையை இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்...
நேக்கு முதல்ல புரிஞ்சிக்க கஷ்டமா இருந்திச்சி..
அப்புறம் ரெண்டு மூணு முறை படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

வர.. வர.. மணிரத்னம் படம் பாத்து எல்லாரும் கெட்டுபோயிட்டாங்க..
சுருக்கமா சொல்றேன்னு ஆணியடிக்கிற மாதிரி சொல்றேன்னு கிளம்பிட்டாங்களே...

ரொம்பவும் வலிக்குதா மலர்?

ஆதி
14-12-2007, 07:57 AM
கதைச் சுருக்கம் போல ஒரு கதை.. படிப்பவரின் மனதைப் பொருத்து கனம் கொடுக்கும் கதை.. தனிமையின் கொடுமை அனுபவித்தவனுக்கே அது புரியும்.. என்னைப் பொருத்தமட்டில் கதையில் இன்னும் கொஞ்சம் கனம் கூட்டி இருக்கலாம்.. படிக்கும் வரை இதயத்தில் ஈரமாய் இருந்தக்கதைப் படித்தவுடன் உலர்ந்துவிடுகிறது.. ஆனால் சொல்லவந்ததைக் கதை சொல்லிவிட்டுப் போகிறது..

வாழ்த்துக்கள் அமரன்..

-ஆதி

அமரன்
14-12-2007, 07:59 AM
ஒரு வேளை அது ஓவியாவோ? நாலஞ்சு நாளா அவங்களைத்தான் காணோம்.
அவுங்களா இருக்காது.. அவுங்க சொல்லாமல் கொள்ளாமல் போக மாட்டாங்க..

அமரன்
14-12-2007, 08:05 AM
கதைச் சுருக்கம் போல ஒரு கதை.. படிப்பவரின் மனதைப் பொருத்து கனம் கொடுக்கும் கதை.. தனிமையின் கொடுமை அனுபவித்தவனுக்கே அது புரியும்.. என்னைப் பொருத்தமட்டில் கதையில் இன்னும் கொஞ்சம் கனம் கூட்டி இருக்கலாம்.. படிக்கும் வரை இதயத்தில் ஈரமாய் இருந்தக்கதைப் படித்தவுடன் உலர்ந்துவிடுகிறது.. ஆனால் சொல்லவந்ததைக் கதை சொல்லிவிட்டுப் போகிறது..

வாழ்த்துக்கள் அமரன்..

-ஆதி
உடனடி ஈர உலர்வு இருப்பது போலத்தான் இருக்கின்றது..
அடுத்த தடவை பார்த்துக்கலாம்.. நன்றி...

தாமரை
14-12-2007, 08:08 AM
அவுங்களா இருக்காது.. அவுங்க சொல்லாமல் கொள்ளாமல் போக மாட்டாங்க..

:rolleyes:

பூமகள்
14-12-2007, 08:16 AM
நல்லவிவரிப்பு...!
சுடுசொல் கூறும் எசமானியம்மா.... அடிக்கடி சனி பகவானைக் கூப்பிடுவது தான்.. கொஞ்சம் நெருடியது..!
அமரன் அண்ணா... உங்க ஸ்டைலில் (அழகிய தீ) மாதிரி ஒரு கதையை எப்போ தரப்போறீங்க?? எனக்கு படிக்கனும்.
கதை விவரிப்பு.. காட்சியமைப்பு அருமை. ஆமா.. அந்த துணியை கடைசி வரை துவைக்கவே இல்லையா?? ;)

அமரன்
14-12-2007, 09:04 AM
அமரன் அண்ணா... உங்க ஸ்டைலில் (அழகிய தீ) மாதிரி ஒரு கதையை எப்போ தரப்போறீங்க?? எனக்கு படிக்கனும்.
அழகியதீ எப்போ மலருக்குப் புரியுதோ அப்போது உங்கள் ஆசை நிறைவேறும்..

அன்புரசிகன்
14-12-2007, 09:12 AM
இற்றைக்கு மூன்றுவருடங்களுக்கு முன் நான் கண்ட சில சம்பவங்கள் வந்து போனதாக ஒரு எண்ணம். .... இன்னும் தொடர்கிறது என்றே எண்ணுகிறேன்.

பாராட்டுக்கள் அமரா.

பூமகள்
14-12-2007, 09:13 AM
அழகியதீ எப்போ மலருக்குப் புரியுதோ அப்போது உங்கள் ஆசை நிறைவேறும்..
சுத்தம்... எனக்கு கதை கிடைச்சாப்ல தான்..!:frown::frown:

ஆமா.. மலர்னு என்னைத் தானே சொன்னீங்க...??!:rolleyes::rolleyes:
எனக்கு விளங்கிச்சு.. நீங்க தாராளமா எழுதுங்கண்ணோய்...!!:icon_b:

மனோஜ்
03-01-2008, 09:23 AM
தனிமை இனியாக தவிக்கவிட்டது கொடுமை
நல்ல கதை அமரன் வாழ்த்துக்கள்

MURALINITHISH
22-09-2008, 09:30 AM
பாரம் அவளுக்கு உடலால் ஏற்படும் வேலைதான் ஆனால் அவள் சென்றதால் மனதில் ஏற்பட்ட பாரம் தீராதது

இளசு
16-10-2008, 08:20 PM
யுரேனியம் போல் அடர்த்தி அதிகம்..

சில வரிகளில் இத்தனைச் செறிவா?

அசந்தேன் அமரா..

யாரோ பார்ப்பது, விசும்பல் சத்தம் என மறைமுன்னோட்ட உத்தி அசத்தல்..

புரைக்கேறுவது - நினைக்கிறார்கள் என்பது - தனிமையேக்க . அதன் அண்மைத் தீர்வின் வெள்ளோட்டம்..

சாயம் போன சாடல் சொற்கள்..
பழகிய கஞ்சி -மிளகாய்க் காரம்..

மிகத் தேர்ந்த சொல்லாடல்கள்.. ரசித்தேன்!

கஞ்சி குடித்து கடுமையாய் உழைக்கும் சரசுவை - திரண்டவள், கொழுத்தவள் எனச் சாடியபடி வளையவரும் எசமானியைக் குறிக்க..

கையாண்ட சொற்கள் அனைத்துமே எள்ளல் முரணின் எடுத்துக்காட்டுகள்..

அடுத்த தலைமுறைக்கு எழுதும் ஒரு அடர்த்தியான பாணி..

உளமார்ந்த பாராட்டுகள் அமரா..