PDA

View Full Version : இணைய மோசடி புகார் செய்ய



பகுருதீன்
12-12-2007, 05:57 AM
நம்பி வரும் இணையவாசிகளை அந்த நம்பிக்கையை வைத்து வலையில் விழச் செய்து விடும் கலையில் பலர் கில்லாடிகளாக இருக்கின்றனர். இத்தகைய இன்டெர்நெட் மோசடிகளின் வகைகளும் சரி, எண்ணிக்கையும் சரி அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

விழிப்புணர்வோடு இருப்பவர்கள் எப்படியோ தப்பித்துக் கொண்டு விடுகின்றனர். ஆனால் அப்பாவிகள் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். இன்டெர்நெட் மோசடியில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் ஏமாந்து நிற்கும் நிலையில் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாத நிலைதான்.

அதாவது ஏமாற்றப்பட்டதை யாரிடம் தெரிவிப்பது, எப்படி புகார் செய்வது போன்ற விஷயங்கள் தெளிவில்லாமல் இருப்பதால் ஏமாறுபவர்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது.

இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய் விடுகிறது. அது மட்டுமல்லாமல் இத்தகைய குற்றங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கூட ஏற்படாமல் போய் விடுகிறது. இது இன்டெர்நெட் தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கி விடுகிறது.

இதற்கு தீர்வாக பிரிட்டனில் ஒரு முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்டெர்நெட்டை பயன்படுத்தும் போது ஏமாற்றப்பட்டால் அதனை புகார் செய்வதற்காக என்று ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

www.ic3.org எனும் அந்த தளத்தின் மூலம் ஏமாற்றப்படும் இணையவாசிகள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம். அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் இடம் என்று சொல்லப்படுவதை போல இன்டெர்நெட் மோசடி தொடர்பான சகலவிதமான செயல்களையும் புகார் செய்யக் கூடிய ஒரே இடமாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

இன்டெர்நெட்டில் எந்த வகையான மோசடிக்கு ஆளானாலும் சரி. இந்த தளத்தில் புகார் செய்தால் போதும். உரிய அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
எனவே எந்த துறையிடம் புகார் செய்வது, எப்படி புகார் செய்வது என்ற குழப்பத்திற்கே இடமில்லை.

பிரிட்டனின் பிரதான உளவு அமைப்பான மத்திய புலனாய்வு மையம் மற்றும் தேசிய ஒயிட்காலர் குற்ற மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சேர்ந்து இந்த தளத்தை உருவாக்கி உள்ளன.

அதிகரித்து வரும் இன்டெர்நெட் மோசடிகள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்கான எளிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்னும் நோக்கத்தோடு இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000மாவது ஆண்டிலேயே இந்த தளம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு இன்டெர்நெட் குற்றங்களின் வகைகள் அதிகரித்து விட்டன. அதே போல இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களும் பலவிதத்தில் சேர்ந்தவையாக இருந்தன.

ஆரம்பத்தில் இந்த தளம் இன்டெர்நெட் பிராடு சென்டர் எனும் பெயரில்தான் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்டெர்நெட் தொடர்பான அனைத்து வகையான மோசடிகள் குறித்த புகார்களும் இதில் தெரிவிக்கப்பட்டதால், இதன் பரப்பை உணர்த்தக் கூடிய வகையில் இதன் பெயர் இன்டெர்நெட் கிரைம் சென்டராக மாற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பெயரில்தான் இத்தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த தளமானது இணையவாசிகளுக்கு புகார் செய்வதற்கான சுலபமான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும் அதே நேரத்தில் எந்த வகையான குற்றங்களை எந்த துறை கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

இதில் புலனாய்வுத் துறையினரின் பணியை மிகவும் சுலபமானதாக்கி விடுகிறது. அதே நேரத்தில் இதில் பதிவாகும் குற்றங்கள் தற்போது இன்டெர்நெட்டில் குற்றச் செயல்களின் போக்கு எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளக் கூடிய வகையிலும் இருக்கிறது. இது இணையவாசிகளின் விழிப்புணர்வை உறுதி செய்வதோடு புலனாய்வுத் துறையினரையும் துடிப்போடு இருக்க வைக்கிறது.

இந்த தளத்தின் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும் வேகமும் அதிகரித்தால் நல்லதுதான்.

நன்றி: மாலைச்சுடர்.காம்