PDA

View Full Version : 125 ஆம் ஆண்டு மகாகவி பாரதி(11-12-2007) பிறந்த நாள்mgandhi
10-12-2007, 03:55 AM
குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன - பாரதி

http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/xr18ucaedszgmca4midtxcatx2.jpg


யதுகிரி செல்லம்மா, உடம்பு சரியாக இல்லையா? எப்படியோ இருக்கிறீரே?

செல்லம்மாள் : உடம்புக்கு ஒன்றும் இல்லை யதுகிரி. மனத்திலே புழு அரிப்பதைப் போல் அரிக்கிறது. யாரிடமாவது சொன்னால்தான் இம்சை தீரும் போல் இருக்கிறது. நீ குழந்தை. உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்?

யதுகிரி: பரவாயில்லை. என்னவென்று சொல்லுமே. நான் பாரதியாரைக் கேட்கிறேன். 'பெண்கள் விடுதலையை வாயால் கொண்டாடுகிறீரே; காரியத்தில் இப்படிப் பன்ணலாமா?' என்று கேட்டு விடுகிறேன்.

செல்லம்மாள் : 'ஐயோ குழந்தை! உன் உள்ளம் ஒன்றும் அறியாது. இப்போது மாதக் கடைசி. போன மாசப் பாக்கியைப் பால்காரனுக்கு −ன்னும் கொடுக்கவில்லை. அவன் நேற்று வந்து கேட்டான். வருகிற மாசம் கொடுப்பதாகச் சொன்னேன். அவன் முடியாது என்றான். நான் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினேன்.

இவர் பார், இன்றைக்குச் 'சுதேசமித்திரன்' அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்பவேயில்லை. அவன் எப்படி பணம் அனுப்புவான்? இன்று காலையிலேயே குளித்து, காப்பி குடித்து, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆனபிறகு எவ்வளவோ சொல்லி மேஜை மேல் காகிதம், பேனா, இங்கிபுட்டி எல்லாவற்றையும் கொண்டு போய் வைத்து விட்டு, அரிசியைப் பொறுக்கி வைத்தேன். பிறகு மடி உடுத்திக் கொள்ளப் போனேன். இவருக்கு எழுத முடியவில்லை. முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இறைத்து விட்டு அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு பாடிக் கொண்டிருந்தார்.

அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வெளியில் வந்து பார்க்கிறேன்; அரிசியில் கால் பங்கு இல்லை. எனக்கு அழுகை வந்து விட்டது. இதைப் பார்த்த அவர், ''வா செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோசமாக −ருக்கின்றன! நாமும் அதைப் போல் ஏன் இருக்கக்கூடாது ? நீயும் சதா தொந்தரவு செய்கிறாய்; நானும் எப்பொழுதும் எரிந்து விழுகிறேன். நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன. நாம் அதைக் கவனியாமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம். நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?' என்றார்.

''எனக்குப் பொறுக்கவில்லை. 'என் கோபத்தை ஏன் கிளப்புகிறீர்கள்? குழந்தைகள் அண்ணியம்மா ( பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவி ) வீட்டிலிருந்து வருகிற வேளைக்குள் சமைத்து விடலாம் என்று அடுப்பை மூட்டினால் பொறுக்கின அரிசியைக் குருவிக்குப் போட்டு விட்டீர்களே! திரும்பப் பொறுக்க பத்து நிமிஷம் ஆகும். உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ! நீங்களோ இன்னும் கட்டுரை எழுதியாகவில்லை. பால்காரன் மானத்தை வாங்குகிறான். வேலைக்காரி இரண்டு நாளாய் வரவேயில்லை. நீங்கள் இதை யோசிக்க வேண்டாமா? என்னைக் குருவியைப் போல் சந்தோஷமாக இரு என்கிறீர்களே. கடவுளுக்குக் கண்ணேயில்லை. இந்தக் குழந்தைகளைக் கொடுத்து வதைக்கிறார்.' என்று சொல்லிக் கொண்டே போய் ஒரு விதமாகச் சமையல் வேலையைச் செய்து முடித்தேன்.

வெளியே வந்தால் இவர் சகுந்தலா பாப்பாவுக்கு 'விட்டு விடுதலையாகி' என்று துவங்கும் பாட்டைப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறார். குழந்தை சந்தோஷத்தால் குதிக்கிறாள்! இவர் பாட்டுக்கு ஆனந்தத்தால் மெய்மறந்திருக்கிறார். குருவிகளோ அரிசியைக் கொத்தித் தின்ற வண்ணமாய் இருக்கின்றன. தங்கம்மா பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள்.''

யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' நூலிலிருந்து.....

mgandhi
10-12-2007, 03:57 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/untitled-2.jpg

நான் சென்னையில் இருந்த சமயம் எப்போதாவது பேச்சுநடுவே, இரண்டும் பெண் குழந்தைகள். கையில் வந்த பிள்ளைக் குழந்தையோ போய்விட்டது என்று சலித்துக் கொள்வதைப் பாரதி கேட்டுவிட்டால் போதும்; பெண் குழந்தைகளுக்குத்தான் வாத்ஸல்யம் அதிகம், யதுகிரி. புதுச்சேரியில் விளையாடின நீ என்னை இன்னும் அப்படியே காண்கிறாய். ஆனால் உன் அண்ணன் சாமிக்கு சம்சாரக் கவலை; உன்னைப்போல என்னிடம் பேச ஒழிவதில்லை என்பார்.

நான் யுகாதிவரை சென்னைப் பட்டிணத்தில் இருந்தேன். பாரதியார் தினம் எங்கள் வீட்டுக்கு வருவார். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா அடிக்கடி வருவார்கள். நாங்களும் அடிக்கடி போவோம்.

சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதி வந்திருந்தார். க்ஷேமலாபங்கள் விசாரித்துவிட்டு, எங்கள் வீட்டு வாசலிலே க்ஷவரம் செய்துகொண்டார். இன்று க்ஷவரத்துக்கு நாள் நன்றாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்துகொண்டேன் என்றார்.

அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பாரதி மறுபடி வந்தார். நான் நமஸ்கரித்து, எங்கள் ஊர்பக்கம் (பங்களூருக்கு) நீங்கள் வருவதில்லையா? என்று கேட்டேன். அவர், எனக்கு பங்களூரில் என்ன அம்மா காரியம்? போய்வா அம்மா. நீ மறுபடி வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ! உன்னை மறுபடி பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்றார். அதுவே அவரை நான் கண்ட கடைசித் தடவை.

நான் மைசூரில் இருந்தேன். என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், பாரதியார் இறந்துவிட்டார்! என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.

விதி முடிந்துவிட்டது! தமிழ்நாட்டின் அதிருஷ்டம் அவ்வளவுதான்!

1923-ம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னை பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை காண எனக்கு வருத்தமாயிருந்தது.

செல்லம்மா, யதுகிரி, அவர் பிராணன் போகும்முன்கூட, செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்? என விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாக சொன்னேன். எவ்வளவு குழந்தைகள்? என்று கேட்டார். நம்மைப்போல இரண்டு பெண்கள் என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும்போல இருப்பதாக சொல்லிவிட்டு, அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும் காலை சமைத்து விடு, எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு போகவேணும் என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் உயிர் போய்விட்டது! என்ன செய்வேன்! அதுவும் ஒரு கூத்தாகிவிட்டது! என்றார்

- யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் புத்தகத்தில் இருந்து

யதுகிரி, புண்ணியம் செய்த ஆத்மா. பாரதியின் பல கவிதைகளை முதலில் கேட்ட செவி இவருடையது. பாரதியின் நண்பரான மாண்டையம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸசாரியாரின் மகள் தான் யதுகிரி. பாரதியுடனான தனது அனுபவங்களை இவர் பாரதி நினைவுகள் என்ற புத்தகமாக எழுதினார். என் அளவில் செல்லம்மாள் எழுதிய பாரதி சரித்திரத்தை விட இது மிக அழகான, முக்கியமான புத்தகமாக படுகிறது. செல்லம்மாளின் புத்தகத்தின் நான் அதுவரை கண்ட கேட்ட பாரதியையே காண முடிந்தது. அதாவது, எழுத்தின் மூலமாக நமக்கு காணக்கிடைக்கும் பிம்பத்தினை சற்றும் குலைக்காத வகையில் எழுதப்பட்ட நூல் செல்லம்மாவின் பாரதி சரித்திரம். ஆனால் யதுகிரியின் பாரதி நினைவுகள் அப்படியல்ல. பாரதியை அவனது காவிய உயரத்திலும் சாதாரணத் தளத்திலும் ஒருசேர நிற்கவைக்க முயலும் படைப்பு இது. மேலும் பாரதியின் பல பாடல்கள் உருவான கணத்தையும் பதிவு செய்த புத்தகம்.

lolluvathiyar
10-12-2007, 06:31 AM
அருமையாக இருந்தது, கவி சக்ரவர்த்தி பாரதி என்னதான் கவிதையில் சமாதானம் சொன்னாலும் குடும்ப கஸ்டத்தி போக்க அவ்வளவு சிரத்தை எடுக்கவில்லை. என்ன செய்ய அப்படி செய்ததால் தான் இந்த தழிழ் நாட்டுக்கு நல்ல கவிதைகளை கொடுக்க முடிந்ததிருகிறது

mgandhi
10-12-2007, 05:10 PM
அருமையாக இருந்தது, கவி சக்ரவர்த்தி பாரதி என்னதான் கவிதையில் சமாதானம் சொன்னாலும் குடும்ப கஸ்டத்தி போக்க அவ்வளவு சிரத்தை எடுக்கவில்லை. என்ன செய்ய அப்படி செய்ததால் தான் இந்த தழிழ் நாட்டுக்கு நல்ல கவிதைகளை கொடுக்க முடிந்ததிருகிறது

புலவரும்,வறுமையும் பிறிக்க முடியாதவை

தேவிப்ரியா
10-12-2007, 06:29 PM
பாரதி அன்று தன் எழுத்துகளில் நிமிர வைத்தான்...

பாரதி ஒரு வரலாறு. பாரதி ஒரு சகாப்தம்.

முன்டாசுக் கவிஞனுக்கு தமிழ்போற்றும் வணக்கங்கள்.

நுரையீரல்
11-12-2007, 03:30 AM
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.

அவர் நினைவு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மக்கள் நினைவில் நிற்க வேண்டும்..