PDA

View Full Version : ஏதோ ஒன்று



jpl
07-12-2007, 05:53 AM
end of the platonic love,
touch with two pair of lips.

தொலைவில் நன்றாகத் தெரிந்த,வசீகர முகம் போல்படவே உற்று பார்த்தேன்.
கல்யாணி..............
ஏறக்குறைய ஓடியவள் போல் நடந்தாள்,நான் நின்ற பஸ்
ஸ்டாப்பிதற்கு எதிர் பிளாட்பார்மில். வேகமாக ரோட்டைக் கடந்து அவளெதிரில் போய் நின்று கல்யாணி என்று அழைத்தேன்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,"சீமாச்சு"என்று கத்தினாள்.
"வாடா பேசிண்டே நடக்கலாம்.புக்காத்து மனுஷாள்ளாம் ஜவுளிக் கடையில் காத்துண்டுருக்கா"என்று என்னையும் இழுத்துக் கொண்டு
ஓடினாள்.
நோக்கு தெரியுமோனோ,என் சின்ன நாத்தனாருக்கு கல்யாணம்.நம்ம
கோண்டு மாமாவாத்து பையன் கிச்சாவுக்குத் தான் பேசியிருக்கா.
என்றாள்.

"கல்யாணி காப்பி சாப்பிடலாமா"என்று வினவினேன்.
ஒரு வினாடி யோசித்து சரி என்றாள்.

ஒரு ரெஸ்டரண்டில் நுழைந்து காப்பி குடித்தப்டியே கேட்டாள்
"டேய்,சீமாச்சு எத்தனை வருஷாச்சு பார்த்து,ஆமா உ ஆத்துக்காரி
மாயவரம்ன்னு அக்கா சொன்னா எப்பிடிடா இருக்கா?"
என்றாள்.
நன்னாயிருக்கா என்றேன்.

"சரிடா சீமாச்சு,நாழியாறது உ போன் நம்பர் கொடுடா"
கொடுத்தேன்.

"கோவிச்சுக்காதேடா நாழியாறது வரேன்டா"என்று கூறியபடியே வேகமாக சென்றாள்.

புயலடித்து ஒய்ந்த உணர்வு எனக்குள்.உடனே கல்புவை பார்க்கத் தோணித்து.
"ஆட்டோ"என்றேன்.
-தொடரும்-

ஓவியன்
07-12-2007, 07:11 AM
வித்தியாசமான விதத்தில் ஆரம்ப உரைகள் ஏதுமின்றி சம்பவங்கள் நகரத் தொடங்கியமையால் இன்னுமும் தெளிவாக பதிவின் தன்மை விளங்கவில்லை எனக்கு....

தொடருங்கள், தொடர்ந்து உங்கள் பதிவுடன் இணைந்து வருகிறேன் ஜெயபுஸ்பலதா அவர்களே..!!

சிவா.ஜி
07-12-2007, 07:15 AM
கதை சொல்லும் பாங்கு அருமை லதா மேடம்.உரையாடல்களில் எதார்த்தம் மிளிர்கிறது.தொடருங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.

ஆனால் இது சிறுகதைகள்-தொடர்கதைகள் பகுதியில் வரவேண்டுமா ஓவியன்?

ஓவியன்
07-12-2007, 07:33 AM
ஆனால் இது சிறுகதைகள்-தொடர்கதைகள் பகுதியில் வரவேண்டுமா ஓவியன்?
முதல் பதிவை மாத்திரம் வைத்து என்னால் முடிவு கட்ட முடியவில்லை சிவா, அதனாலேயே பதிவின் தன்மையை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றேன்...!!

இது யாருடையதாவது அனுபவப் பகிர்வெனின் இங்கேயே வைத்திருக்கலாம்...

jpl
07-12-2007, 09:08 AM
மன்னிக்கவும் சிறுகதை,தொடர்கதை பகுதியை அழுத்துவதற்குப் பதிலாக இப்பகுதியை அழுத்தி விட்டேன் போலிருக்கு.(கவனமின்மை)
மாற்றி விடுங்கள்.நன்றி.

jpl
07-12-2007, 10:23 AM
சப்தம் கேட்ட கல்பு சமையல் உள்ளிலிருந்து சிரித்தபடியயே வந்தாள்.
"அக்கா போன் பண்ணினள்"என்றாள்.
அவளை ஏறிட்டு,என்னவாம் அவளுக்கு?

அக்கா,அத்திம்பேர்,நம்மாத்துல எல்லாம் வராளாம்,
என்று கூறியவள் என்னை உற்று பார்த்தபடி,
கல்யாணி நாத்தனாருக்கு கல்யாணம் என்றவளை
இடைமறித்து,

தெரியும் வரச்சே அவளை பார்த்துண்டுதான்
வரேன் என்றபடி ரிமோட்டை கையிலெடுத்தேன்.எதையெதையோ பார்த்தேன்.எழுதினேன்.படித்தேன்.இடையிடையே கல்பு எதோ கேட்டாள்,எதையோ சொன்னாள்.
"சித்த வந்து சாப்பிட்ரேளா,கைக் காரியமெல்லாம் ஒழிக்கனும்"
கல்பு குரல் கேட்டு கவனம் வந்தவனாய்,
அவளை அருகில் இழுத்து அணைத்தேன்.
"விடுங்கோன்னா,யாரவது பார்த்துட போற கதவு தொரந்துன கிடக்கு"
என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டு,விலகாமல் நின்றவள்
"கல்யாணி ரொம்ப அழகன்னா"என்றாள்.
நீயும்தான் அழகு என்றேன்.செல்லச் சிணுங்கலுடன் பழிப்புக் காட்டி,
"வாருங்கோ நாழியறது,விடிய காலம்பர சீக்கிரமே எழணும்"
என்றவளை தொடர்ந்தேன்.
கல்பு நீ ஏன் அவளை சுத்தி சுத்தி வர
பாட்டி சொன்னா,கல்யாணிக்கு உங்கள ரொம்ப பிடிக்குமாம்.
சின்ன வயசுலேருந்து ஒன்னா விளையாண்டிருபேளாம்.

ஆமாடி கல்பு,பக்கத்து பக்கத்து அகம்.அவாத்துலேயும்,எங்காத்துலேயும் மாறிமாறி விளையாண்டிருப்போம்.பாட்டிக்கு ஒரு மூட் இருந்தா பேசாத இருப்பா.ஒரு மூட் இருந்தா பிள்ளைகளா இதுகள்ன்னு திட்டுவா.

"சரின்னா நேக்கு தூக்கம் வரறது"
கண்ணை மூடினேன்.
-- கண்கள் உறங்க மறுத்தது.
-தொடரும்-

lolluvathiyar
07-12-2007, 01:44 PM
இதுவரை உங்கள் பதிப்பை நான் படித்ததில்லை. இது தான் முதல் முரையாக படிகிறேன். வித்தியாசாமான நடையில் கதை நகர்கிறது. இன்னும் மெயின் பாயின்டை தொடவில்லை.
உரைநடை புரியா கொஞ்சம் தருமாரினாலும், ரசிக்கும் படியாக இருகிறது, தொடருங்கள் ஜெபிஎல் (பெயர் தான் டைப் அடிக்க சிறம*மாக இருகிறதே)

jpl
08-12-2007, 01:13 AM
நன்றி வாத்தியார்...
கனமான கருவெல்லாம் கிடையாது..

jpl
08-12-2007, 01:14 AM
ஜன்னல் வழியாக வந்த சந்திர ஒளியில் கல்புவின் வைரக் கம்மல்
வித்தியசமாக ஒளி வீசி, கல்புவின் முகத்தை மேலும் சோபையுறச் செய்தது.
அவ்வொளியில் கல்யாணி ஆத்துப் பத்திரிக்கை மேஜையில் இருந்ததும் தெரிந்தது.


இருவரகத்து புழக்கடை தான் எங்களின் சிறுவயது விளையாட்டு மைதானம்.அக்கா என்னை அடித்தால் கல்யாணி அன்று கண்டிப்பாக
என்னிடம் அடி வங்குவாள்.
செப்பு வச்சு நாங்கள் விளையாடும் போது பெரியவ கூட சமயத்தில
சேந்துப்பா.

கொஞ்ச நாளில் விளையாட்டு மாறித்து.

பொண்ணாத்துக்காரா,பிள்ளையாத்துக்காரான்னு பிரிஞ்சுண்டு,

மீனாட்சிக் கல்யாணம்,பாமா ருக்மணிக் கல்யாணம்,ஸ்ரீநினிவாச கல்யாணம்,சீத்தாக் கல்யாணம் ன்னு ஊஞ்சல் உற்சவம் நடத்தினோம்.

பின் இதுவே பல்லாங்குழி,தாயம்,செஸ்,கேரம் என்று மாறித்து.

தாயம் விளையாடும் போது எல்லாரும் ஒன்னாச் சேந்து ஒரே அழிச்சாட்டியம் தான்.

இந்த அப்பாக்கள் மட்டும் பரபிரம்மாவாட்டமிருப்பா.ஞாயிறு லீவில்
மனுஷா ஒரு நா,ஒரு பொழுது நிம்மதி இருக்க முடியறத இந்த ஆத்துலன்னு சிடுசிடுப்பா.

10 க்ளாஸ் லீவுக்கு கடையநல்லூர் அம்பி மாமா ஆத்துக்குப் போயிட்டு வந்து மதியம் வரை கல்யாணி கண்லேயே படல.

"பாட்டி கல்யாணி எங்க பாட்டி,அவ காத்தல யிலிருந்து கண்லேயே படல".

"அவ பின்கட்டுலிருப்பா"என்றாள் பாட்டி.

அத்த,அக்கா,அம்மா இவாள்ளாம் பின்கட்டிலிருக்கும் போது தோணாதது கல்யாணி பின்கட்டிலிருப்பது கஷ்டமாகத் தோணித்து.

வெளியே சென்றேன்.
-தொடரும்-

ஓவியன்
08-12-2007, 02:03 AM
மன்னிக்கவும் சிறுகதை,தொடர்கதை பகுதியை அழுத்துவதற்குப் பதிலாக இப்பகுதியை அழுத்தி விட்டேன் போலிருக்கு.(கவனமின்மை)
மாற்றி விடுங்கள்.நன்றி.

இடம் மாற்றியாகிவிட்டது....

தொடரட்டும் உங்கள் தொடர்கதை...
அதன் வெற்றிக்கு என் முன் வாழ்த்துகள்......!! :icon_b:

ஆதவா
08-12-2007, 03:46 AM
யதார்த்தமான நடை.... ஒரேஒரு குறை... வடிவம் (para align) மடிந்து இருப்பதால் ஒருமாதிரியாக இருக்கிறது...

அய்யராத்து வசனங்களும், பெயர் அழைக்கும் விதமும் இப்படித்தான் இருக்குமோ என்ற யதார்த்தத்தை வரவழைக்கிறது....

தொடர் கதை என்பதால் என்னால் நிதானித்து படிக்க இயலாது... (மறதி மறந்தும் என்னைவிட்டு போகாது) முழுக்கதையும் இட்டபிறகே எனது முழு விமர்சனமும்... இங்கே மன்னிக்கவேண்டும் அம்மா...

சிவா.ஜி
08-12-2007, 04:04 AM
இயல்பான உரையாடலில் நகர்கிறது கதை.மிக நன்றாக இருக்கிறது.தொடருங்கள் ஜே.பி.எல்.

jpl
08-12-2007, 04:18 AM
நன்றி ஓவியா,ஆதவா,சிவா.ஜி...

jpl
08-12-2007, 04:20 AM
வெளியே சென்றேன்.
நாணா கோஷ்டி(சுப்புணி,பஞ்சு,கிட்டு,கிச்சா,பத்து,சாம்பு) போஸ்ட் மாஸ்டராத்து திண்ணையில் உட்கார்ந்து,போறவ,வரவா எல்லாத்தையும் வேடிக்கை பாத்துண்டிருந்தா.

அக்ரஹாரத்து மானத்த வாங்கறத்துக்குன்னே பொறந்ததுகள் ன்னு
பெரியவ முணுமுணுப்பா நாணாவைப் பார்த்து.

நான் மெதுவாக அவர்களிடம் சென்றேன்.

நாணா சிரிச்சுண்டேக் கேட்டான்"எங்கேடா கல்யாணி"

அதற்குள் எதித்தாத்து வச்சு,"என்டா நாணா நோக்கு வேற வேலையே இல்லையாடா" ன்னு கனகு மாமி பொண்ணு வாசல் தெளிக்க,படி இறங்கினாள்.

அசடு வழிய சிரித்தபடி"இல்லடி வச்சு" என்றான்.

நாணா இருந்தால் வச்சுவுக்கும் கோலம் மறந்து போய் தப்புத்தப்பாய்
வரும்.அழித்து,அழித்து போடுவாள்.

வச்சுவுக்கு கல்யாணம் நிச்சயமானதும்,நாணா கோண்டு மாமாவாத்துத் திண்ணைக்கு தன் இருபிடத்தை மாற்றிக் கொண்டான்.

எனக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரியும்,புரியாத மாதிரியுமிருந்தது.
மறுநாள் காலை.

ரேழியில்,மேஜை டிரையரில் குடைந்துக் கொண்டுயிருந்தேன்.
பழகிய கொலுசுச் சப்தம்.நிமிர்ந்தேன்.
கல்யாணி........

முடியினடியில் முடிச்சிட்டு ஈரத்தலையில்,காதோரம் ஒற்றை ரோஜா.
கன்னத்தின் மினுகினுப்பு,ஏதோ ஒரு புதுக் கவர்ச்சி கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போல் தோணித்து.ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

அவளை இப்பொழுதுதான் பார்ப்பது போல் பாக்கத் தோணித்து.

"எப்படா வந்தே?"

நான் நேத்திக்கே வந்திட்டன்,மகராணிக்கு இப்பத்தான் சமயம் வாய்ச்சது....என்று இழுத்து பின்,

இந்தாடி,ருக்கு, நோக்கு கோல நோட்டுக் கொடுத்து விட்டிற்கா என்றேன்.

"மாமாவாத்துல எல்லொரும் சௌக்கியமாயிருக்காளா?"

இருக்கா,இருக்கா என்றேன்.
"நீ இல்லம நேக்கு ரொம்ப போரான்னா இருந்துச்சு" என்றாள்.
ஆமாண்டி நேக்குகூட அப்படித்தான் தோன்றது.நீ எங்காத்து பின்கட்டுல இருந்துடு என்றேன் சீரியஸ்யாக.

"அப்படியெல்லாம் எங்காத்துல விடமாட்டா"

சரிடா என்றவள் "அக்கா" என்றழைத்தபடியே உள்ளுக்குச் சென்றாள்.

ஊரில் விச்சு,ருக்கு,லல்லி,பாச்சு என்று அடித்த கொட்டமொல்லாம் அவளிடம் கத,கதையாய் சொல்லணும் என்றால்
அக்காவிடம் அவளுக்கு என்ன பேச்சும்,கொம்மாளமும்.
அக்காவும்,அவளும் சிரிக்கும் சப்தம் காதில் விழ,கோபம்,கோபமாக வந்தது.

சனியன் எப்படியாவது போகட்டும்,மூஞ்சியிலேயே இனி முழிக்கப்படாது.

வரேண்டா சீமாச்சு என்றவள் போயே போய்விட்டாள்.

jpl
08-12-2007, 04:21 AM
பத்தாவது நல்லமார்க் எடுத்து +1 ப்ர்ஸ்ட் குருப்பில் சேர்ந்தேன்.

கல்யாணி 10 படித்தாள்.

இளம் வைலட் கலரில கண்ணை உறுத்தாத சிவப்பு பார்டர் பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு கொலுசு சப்திக்க மாமி என்று அழைத்த வண்ணம வந்தாள் கல்யாணி
கொலுவிற்கு அலங்காரித்த மின்விளக்குகள் கண்சிமிட்டி வெவ்வேற வண்ணங்களில் ஒளிவீசியது.

நெற்றியில் நெற்றி சுட்டி,காதில் லோலாக்கு,கழுத்தில் நெக்லஸ்,ஆரம்,லாங்க் செயின்,கையில் தங்க,கண்ணாடி வளையல்,இடுப்பில் சரம்,சரமாகத் தொங்கும் ஹிப் செயின் என சர்வலங்கார பூஷதையாக வந்து நின்றாள் கல்யாணி.

வீசிய ஒளியில் கல்யாணி ஜொலி ஜொலித்தாள்.
டமுக்கு டப்பா ஆயலோ,
டமுக்கு டப்பா ஆயலோ என்று பாடினேன்.

"பாட்டி இவனை பாருங்கோ பாட்டி"
"அவன் கிடக்கிறான்"
'பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்கோ"என்றபடி காலில் விழுந்தாள்.
"ஷேமமா இருடி குழந்தே" "இந்த டிசைன் நெக்லஸ் நோக்கு நன்னாயிருக்குடி"என்றாள் பாட்டி.
'டி விசாலி நீயும் இவளுமா எல்லார் ஆத்துக்கும் போய் கொலுவுக்கு அழைச்சுண்டு,சுருக்க வந்துருங்கோ"இது அம்மா.
அக்காவும் எல்லாத்தையும் மாட்டிண்டு தயாரா இருந்தா.

கல்யாணியின் எழில் மனதை விட்டு விலகவே இல்லை.
அதே நேரம் எனது வட்டம் வெளியில் விரிந்தது.பெண் நண்பிகளும்
கிடைத்தனர்.ஆனால் கல்யாணி அவர்களை எல்லாம் மீறி மனதில.
நின்றாள்.
கல்யாணி என்னிடம் விலகியும்,விலகாமலும் இருந்தாள்.
"சீமாச்சு இந்த சம் எப்படிடா போடணும்?"
"இந்த படம் போட்டுக் கொடுடா"
"கட்டுரைப் போட்டிக்கு கட்டுரை எழுதிக் கொடுடா"
என்று எதாச்சும் வேலை வாங்குவாள்.

நானும் ஜீனி பூதம் மாதிரி செய்து தர தயராக இருந்தேன். குறும்பு,கும்மாளம் எல்லாம் போய் என் அப்பா மாதிரி மாறிவிட்டேன்.

கல்யாணியோ அக்காவோட ஈஷிண்டு சே என்னதான் பேசுவாளோ இந்த பொம்மனாட்டிகள்!!!
பாட்டி எனக்கு படிப்பு அதிகமாதால் இப்படி ஆயிட்டேன் என்று பாட்டி அங்கலாய்த்தாள்.
எப்படியோ சற்றே சிரமப்பட்டு +2ல் மார்க் எடுத்து,சென்னையில் எஞ்சினரிங் கல்லூரியில் அடித்து பிடித்து சீட் வாங்கியாகி விட்டது.

சீர்காழியிலிருந்து சென்னை வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற கவலையை விட கல்யாணியின் பிரிவுதான் கஷ்டப்படுத்தியது.

கிளம்பும் நாளன்று கூட கல்யாணி கண்கலங்க, குரல்கம்ம தனியாக என்னிடம் வந்து,"சீமாச்சு என்னையெல்லாம் நினைச்சுப்பாயடா"என்று
விம்மிய வண்ணம் கேட்டாள்.

"சீ அசடு உன்னை மறப்பன்னாடி"என்றேன் அழுகையை அடக்கியபடி.
"நேக்கு அழ வரதுடா"
என்று கூறியபடி தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

வேறு வழியின்றி எல்லாரும் கஷ்டத்துடன் என்னை சென்னைக்கு
அனுப்பி வைத்தனர்.

"போய் சேர்ந்த்தும் கடிதம் போடு"
போட்டேன்.

"போன் பண்ணேன்டா"
பண்ணினேன்.

கல்யாணி வீட்டில் இருந்தால் அவளும் பேசுவாள்.

சென்னைப் பெண்களைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது.பிறகு பழகிவிட்டது.

jpl
08-12-2007, 04:22 AM
கல்யாணி +2 படிக்கும் பொழுதே வரன் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்
என்று பாட்டி போனில் சொன்னாள்.

திருச்சிக்காரா,பிள்ளையாண்டான் நாக்பூரிலே வேலை,கல்யாணி பரிட்சை
எழுதியதும் நிச்சயம்.ஏதோ தூரத்துச் சொந்தம்,அவாளா வந்து கேட்கிறாள்.
இதுவும் பாட்டி தகவல்.

ஏதோ ஒரு வகையில் கல்யாணி வீட்டில் எல்லோரையும் வசியப் படுத்தி வைத்திருந்தாள்.

கல்யாணியின் திருமணப் பேச்சு நடைபெற்றதாலோ என்னவோ ஊருக்குப் போக விருப்பமிருக்கவில்லை.

"ஊருக்கு எப்படா வருவ" பாட்டி கேட்டதற்கு,"போ பாட்டி இது என்ன ஸ்கூலா இஷ்டத்திற்கு வர,பாடம் ரொம்ப இருக்கு பாட்டி"என்றேன்.

செமஸ்டர் முடியவும் கல்யாணிக்கு நிச்சியம் நடக்கவும் சரியாக இருந்தது.15 நாளில் கல்யாணம்.ஏதோ சாக்கு சொல்லி ஹாஸ்டலியே
தங்கி விட்டேன்.

பாட்டியும் போனில் வருந்தி அழைத்தாள்.
"நம்மாத்து பொண்ணாட்டம் வளர்ந்தவள் கட்டாயம் வந்து விடு"
"இல்ல பாட்டி,நோக்கு சொன்னா புரியாது.ரிக்கார்ட்ஸ் சம்மிட் பண்ணனும்"

கல்யாணம் முடிந்து கல்யாணி புக்காத்துக்குக் கிளம்பும்போது "மாமி சீமாச்சு வரவேயில்லை அவன்கிட்டே பேசவே மாட்டேன்,வராமலே
ஏமாத்திட்டான்'' என்று கண் கலங்க கூறிவிட்டுச் சென்றளாம்.

அக்கா விசாலிக்கும் வரன் பார்த்தார்கள்.நாக்பூரில் கல்யாணி இருந்ததால் கல்யாணத்திற்கு வரவில்லை.
அவளும்,அக்காவும் கடிதத் தொடர்பு,போன் தொடர்பு,ஈ-மெயில் தொடர்பு என எல்லாத் தொடர்பும் வைத்திருந்தனர்.
பிள்ளையாண்டிருக்கா,சீமந்தம்,ஆண்பிள்ளை.
எப்படியோ அவளைப் பற்றி தகவல் காதில் விழுந்து விடும்.

ஏனோ கல்யாணியை பார்ப்பதை கூடியமட்டும் தவிர்த்தே வந்தேன்.
எது என்னைத் தடுத்தது என்று இதுவரை புரியாத புதிராகவே இருந்து
வருகிறது.

கால ஓட்டத்தில் 5 வருடம் ஓடி "காம்பஸ் இண்டர்வ்யூ"வில் செலக்ட்
ஆகி வேலையும் சென்னையில் செட்டிலாகி விட்டேன்.
பிறகு கல்புவின் வருகை.கல்புவும் மனதைக் கொள்ளை கொண்டாள்,
மென்மையான அணுகுமுறையால்.

jpl
08-12-2007, 04:23 AM
இதோ கல்யாண மண்டப முகப்பு.மாலை நேரம்.
அன்று கண்ட கல்யாணி போலவே சர்வ அலங்கார பூஷதையாக வாயிலில் நின்றிருந்தாள்.

எங்களைக் கண்டதும் வாடா என்று வரவேற்றவள்,
"ஏன்னா சித்த இங்க வரேளா,எங்க சீமாச்ச்சு இவன் தான்"என்று
தன் கணவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள்.

"ஒ,ஐ ஸீ,ஐயாம் சிவராமன்"என்று கைக் குலுக்கினார்.
'ஐ நோ" என்றேன் நான் கைக் குலுக்கியபடியே.

"எங்காத்துல ஓரே சீமாச்சு புராணம் தான் போங்கோ.உங்க ஸ்மரணை
இல்லாத கல்யாணிக்கு பொழுது விடியாது"என்றார் சிவராமன் விகல்பம் இல்லாமல்.

எனக்குள் இருந்த மெல்லிய திரை அகன்றது போல உணர்ந்தேன்.

"கல்யாணி இது கல்பு"
புன்னகையோடு இருந்த கல்புவை கல்யாணி இழுத்து அணைத்து
நெற்றியில் முத்தமிட்டாள்.

இப்பொழுது கல்பு விடுங்கோ யாரன பாத்துட போற என்று கூறவில்லை.

end of the platonic love,
touch with two pair of lips.

இருவரின் இதழ்கள் முத்தமிட்டுக் கொள்வதோடு platonic love முடிவடைகிறது என்னும் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.(மேற்கத்தியது)
இக்கதையிலும் ஒரு முத்தம் platonic loveவை முடிவுக்குக் கொண்டு
வருகின்றது.

இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.

jpl
08-12-2007, 04:23 AM
ஆதவாவின் விருப்பத்திற்காக முழுக்கதையும் போட்டு விட்டேன்..

lolluvathiyar
08-12-2007, 06:33 AM
ஒரே நாளில் அனைத்து பாகத்தையும் போட்டு முடித்து விட்டீர்கள் ஒரே மூச்சில் நானும் படித்து விட்டேன். இதுவரை நான் படித்த கதையிலேயே இது வித்தியாசமாக இருந்தது. ஆனால் படு வேகமாக நகர்ந்ததாக ஒரு பீல்ங். ஐயிர் வீட்டு பாசையில் நான் படித்த முதல் கதை என்றே சொல்லலாம். அமரர் கல்கியின் அலைஓசை என்ற கதையில் கூட ஐயிர் குடும்பம் தான் வரும். ஆனால் அது இந்த அளவுக்கு பாசை கஸ்டமாக இருக்கவில்லை. உங்கள் கதையில் எனக்கு சற்றே பாசை தடுமாற்றம் ஏற்பட்டது.
கதையின் கரு நன்றாகவே புரிந்தது. ஒரு இளம் வயது காதல் மனதில் உனரபட்டு ஆனால் வெளிகாட்டாமெலே திசை மாறி கடமையை நோக்கி சென்று விட்டது.


இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.

இது எனக்கு புதிய வார்த்தை புரியவில்லை விக்கிபிடியாவில் பார்த்தேன், ஓரளவுக்கு தான் புரிந்தது, இன்னும் அதை பற்றி நிதானமாக படிக்க ஆசை வந்துவிட்டது. பிளாடானிக் லவ் விளக்கம் முழுமையாக புரியாவிட்டாலும் உங்கள் கதை மூலம் அதை உனர முடிந்தது. பாராட்டுகள்

jpl
08-12-2007, 07:11 AM
நன்றி வாத்தியார்..
ஐயர் பாஷையில் கடினமான வார்த்தைகளை நான் தவிர்த்தே இருக்கின்றேன்.
இருப்பினும் புரியாத வார்த்தைகளை கூறுங்கள் அர்த்தம் தருகிறேன்.
நேக்கு-எனக்கு
நோக்கு-உனக்கு...

ஆதவா
08-12-2007, 03:01 PM
என் விருப்பப் படியே முழுக்கதையும் போட்டமைக்கு நன்றி மேடம்.

கதை - விமர்சனம் பண்ணூமளவுக்கு எனக்குத் திறமை வளரவில்லை. இருப்பினும்,

கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்... வழங்கப்பட்ட பெயர்கள் கூட ஏதேனும் அர்த்தத்திலிருக்குமோ என்றே யோசித்து சென்றேன்... கதையின் வேகம் படு ஸ்பீடு.

(ஈஷிண்டு - ஒட்டிக் கொண்டு???)

கதையில் சின்னதாய் என் வாழ்வுப் பகுதியும் இருக்கிறது. கடமைக்காக காதலைத் தியாகம் செய்யும் எத்தனையோ பேரோடு.... நானும். கல்யாணியைப் போல ரோசா... சீமாச்சுவைப் போல ஆதவன்.

அவளையே மீண்டும் பார்க்கும் வாய்ப்பு.?? எனக்கு கிட்டவில்லை.. சீமாச்சுவுக்குக் கிட்டியதுபோல. அப்படியென்றால் அவன் மனதில் ஏதுமே இல்லையா?

அவன் மனைவியின் ஆக்ரமிப்பு காரணமாக இருக்கலாம். இருவரின் சந்திப்பிலும் சிறு இழையாவது காதல் நுழைந்திருக்காதா?
நீங்கள் எழுதிய முதல் பகுதி கதை, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய கவிதை..... அதே தேநீர், அதே கல்யாணி,,, அதே சீமாச்சு, அதே அதே... எல்லாம் அதே...

மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??

கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..

மேலும் தொடருங்கள் அம்மா.

jpl
08-12-2007, 03:57 PM
அய்யர்,அய்யங்கார் பிரிவுகளில் இவ்வாறாகவே நிக் நேம் சூட்டி அழைப்பார்கள்.உண்மையில் வேறு பெயர்கள் இருக்கும்.
கல்பு-கற்பகம்.வச்சு-வச்லா,லல்லி-லலிதா என்பது போன்று.
வட்டார வழக்குகளில் எழுதினாலும் இப்பிரச்னை இருக்குமே ஆதவா...
மலையாளம்,தெலுங்கு பேசும் கதை மாந்தர் என்றாலும்

கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்...
இவ்வனுபவம் ஏற்படுமே ஆதவா..
அப்படி என்றால் அம்மாதிரியான கதைகள் இடக்கூடாதா?
பரந்துபட்ட படிக்கும் பழக்கம் இக்குறையை களைந்து விடும் ஆதவா..
ஆனால் இப்பொழுது உள்ள சூழலில் படிக்கும் பழக்கம் அருகி விட்டது.
பணம் சார் விஷயமே நம்மை இயக்குவதால் வரும் நிலை இது.
எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒன்று உன்னிப்பாக கவனிக்கும் தன்மை.
அத்துடன் கிரகித்தல்.அதாவது எதையும் உள்வாங்குதல்.இப்பொழுது பாணியில் சொல்வதென்றால் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்.

எனக்கே இப்பொழுது தோன்றுகிறது.இலக்கியம்,இலக்கணம் படித்து என்ன
ஆகப்போகிறது,கணினி சார் வளர்ச்சியின் முன் இவ்விஷயங்கள் அடிப்பட்டு
போகிறதே என்று.

jpl
08-12-2007, 04:04 PM
கதையின் வேகம் படு ஸ்பீடு.
எழுதுவதின் ரகசியம் இதுவும் தான் ஆதவா..


மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??

கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..

மேலும் தொடருங்கள் அம்மா.
நன்றி ஆதவா...கொங்கு தமிழிலும் கொஞ்சி விளையாடலாமென்று இருக்கின்றேன்...யோசிக்க வைக்கின்றாயே ஆதவா....

ஆதவா
09-12-2007, 05:29 AM
எழுதுவதின் ரகசியம் இதுவும் தான் ஆதவா..


நன்றி ஆதவா...கொங்கு தமிழிலும் கொஞ்சி விளையாடலாமென்று இருக்கின்றேன்...யோசிக்க வைக்கின்றாயே ஆதவா....


சே சே! நீங்கள் சொல்வது தவறூ... எனக்க்கு கதைகளைப் படிக்கும்போது நிதானம் தேவை.. (நேற்றே பணிச்சுமை...) அதனால் காரணமாக இருக்கலாம்.. இருந்தாலும் எனக்கு அனுபவமின்மை மிக முக்கிய காரணம்.... நண்பர்கள் எல்லாருக்கும் இந்தக் கதை நன்றாக ஒட்டியிருக்கும்... அதோடு, எதையும் மறைக்காமல் சொல்லும் பழக்கம் எனக்கு (இல்லையென்றால் மறைமுகமாக சொல்லும்பழக்கம்)

பெயர்களை கவனிக்காதது என் குற்றம். வித்தியாசமாக இருப்பதால் என்று நினைக்கிறேன்... என் கதை படிக்கும் திறனில் கோளாறு..

நிச்சயம் அடுத்த உங்கள் கதை கோவைத் தமிழா? (நம்ம ஊர் பாசை) படிக்க ஆவலாக இருக்கிறேன்....

lolluvathiyar
09-12-2007, 05:37 AM
கொங்கு தமிழிலும் கொஞ்சி விளையாடலாமென்று இருக்கின்றேன்..

எழுதுங்க எழுதுங்க காத்திருகிறோம். பேச்சு தமிழ் மொத்தம் 800 வகை இருகிறது, அதில் கொங்குதமிழ் தான் அனைத்து தரப்பு தழிழர்களுக்கும் புரிந்துவிடும் தன்மை கொண்டது. நானும் கொங்கு தமிழனே.

சிவா.ஜி
10-12-2007, 11:38 AM
கதை நகர்த்தல் படு சுவாரசியமாக இருக்கிறது.ஐயராத்து உரையாடல்கள் எனக்குப் பழகியதென்பதால் கதையோடும்,கதை மாந்தரோடும் ஒன்றிப்போக முடிந்தது.பாலய நட்பு எப்போது காதலாக மாறுகிறதென்பது யாருக்குமே இனங்காண முடிவதில்லை.அதனாலேயே அதை வெளிப்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.ஆனால் அந்த உணர்வு மட்டும் உயிருடன் ஒட்டிக் கொள்கிறது.
மனதுக்கு நெருக்கமாக மனைவியோ,கணவனோ வந்துவிட்டபிறகும் கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டுதானிருக்கும்.
இந்தக் கதையைப் பொருத்தவரை,கல்யாணியைப் பார்ப்பதை சீமாச்சு தவிர்த்து வந்ததால் ஒரு குற்ற உணர்வு அவனுக்குள் இருந்து வந்தது.ஆனால் கல்யானி கல்புவுக்குக் கொடுத்த அந்த ஒரு முத்தம் அவனுக்குள் ஒரு விடுதலையை உணர வைத்து விட்டது.விரும்பிப் படித்தேன், மிகவும் ரசித்தேன்.வாழ்த்துகள் மேடம்.

யவனிகா
10-12-2007, 04:10 PM
அருமையான கதை...ஒன்றிப் படிக்க வேண்டிய கதையாக தென்பட்டதால் படிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்...நல்ல நடை...அருமையான கரு...அழகாகக் கொடுத்துள்ளீர்.பாராட்டுகள்.

கல்யாணிகளும், சீமாச்சுகளும் நம் ஒவ்வொருவருள்ளும் ஒளிந்திருக்கிறார்கள் வேறு வேறு வட்டார* வழக்கு பேசிக்கொண்டு...அவரவர் பால்ய சினேகிதர்களை நினைவுக் கொண்டுவருகிறது...அதுவே கதைக்குக் கிடைத்த வெற்றி...

jpl
10-12-2007, 11:56 PM
நன்றி சிவா.ஜி,யவனிகா..........

மலர்
13-12-2007, 04:22 PM
இப்போ தான் முழுகதையையும் ஓரே மூச்சா படிச்சேன்...
அஹ்ரகாரத்துல இருந்த மாதிரி இருந்திச்சி...
அழகான எழுத்து நடை...
பின்னிட்டீங்க,,,,
வாழ்த்துக்கள்.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்....


இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.
நீங்க பாஸாயிட்டீங்கம்மா...
மலருக்கே புரிஞ்சிடுதுன்னா... லோகத்துல எல்லாருக்கும் புரிஞ்சமாதிரிதான்....:D:D

jpl
17-12-2007, 02:38 PM
நன்றி மலர்............பாஸ் மார்க் கொடுத்தற்கு.............

இளசு
06-01-2008, 08:06 PM
அன்புள்ள லதா,

இருவரின் இதழ்கள் உரசும்போது
உளநிலையில் மட்டும் உலவிய காதல் தகரும்...

இந்த ஆங்கிலச் சொலவடையை எடுத்து
எந்த இருவர் இதழ்களின் உரசல் என்பதில்
ஒரு இனிய திருப்பம் தந்தது அருமை..

கடையநல்லூர்ப் பயணத்துக்கு முந்திதான் கல்யாணியை அவன் தொட்டது
கடைசி முறையாக இருக்கும் - சரிதானே?

விகல்பம், உள்மன ஏக்கம், தேடல் இல்லாக்காலங்களில் அவளைத் தொட, விளையாட அவன் தயங்கியதில்லை... யோசித்ததில்லை..

ஆனால் - அந்த மனமாற்றப்பருவத்துக்குப் பின்போ...

பார்வையால் விழுங்குவதையும் பிறர் பார்ப்போரோ என மிடறல்..

எதை அதிகம் செய்ய விழைகிறோமோ
அதைக் கொஞ்சமும் செய்துவிடா விநோத மனநிலை..
செய்யாததன் காரணம் - விழைவை பிறமனம் புரிந்துகொண்டுவிடுமோ என்ற பேதைமை..

மனநிலையின் சுகமான பிணக்குநிலைகளில் இது தலையானது..

நம்மூர் பருவ வயதினரின் இந்த மறுகும் மனநிலை
உளம் மட்டும் சார்ந்த காதலாலா.. உள்ளூரப் புதைக்கவென்றே முளைத்த காதலாலா???

ஆதவா போல் பலருக்கும் நிகழும் முடிச்சு இது..

கல்பனா வாய்த்த சீமாச்சு அதிர்ஷ்டக்காரன்..
எல்லா மனைவியரும் கல்பு அல்ல என்பது துரதிர்ஷ்டம்..
எல்லா ஆடவரும் சிவராமன் இல்லை என்பது நிதர்சனம்..

ஊமைப்பாட்டிகள் அமைவதே விசேஷம்..

ஒன்றிப் படிக்க வைத்த கதை.. நன்றி லதா அவர்களே..
(கடந்த சில மாதங்களில் இன்றிரவே இதுபோல் வாசித்து பதிலளிக்க அமைந்தது... தாமதத்துக்கு மன்னியுங்கள்..)

பாரதி
07-01-2008, 12:59 AM
இனிய நடை...!

எங்கள் வீட்டிலும் ஒரு மாமி பல வருடங்கள் வாடகைக்கு குடி இருந்தார்கள். எப்போதும் என் கடைசி தமக்கையை பொடிஷி என்றுதான் அழைப்பார்கள். அவர்கள் நினைவு இந்த மொழி நடையை கண்டதும் வந்தது.

தமிழில் பேசினால் எந்த வழக்காய் இருந்தாலென்ன..? எத்தனை இனிமையாய் அழகாய் இருக்கிறது!

கணினியில் இப்போது வைக்கும் பெயர்களைப்போல அப்போதே பெயர்களை சுருக்கி விளிக்கும் வழக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது.

கதைக்கரு - பலரது வாழ்விலும் எப்போதாவது வந்து போயிருக்கக்கூடிய நிகழ்வை - பனிமூட்ட உணர்வைத் தருகிறது. என்னவாக இருக்கும், சொல்லலாமா - வேண்டாமா, சொன்னால் இப்போதிருக்கும் உறவும் பாழாகி விடுமோ என்று பலவிதத்திலும் குழம்பி இருக்கும் மனதில் ஏற்பட்ட அரும்பு உணர்வை தெளிவாக உணர்த்தி இருக்கிறது.

எனக்கு பிடித்த கி.ரா. எழுத்துக்களைப்போல மன மணம் கமழும், மண் மணம் கமழும் எழுத்து நடையில் வாசிக்க சுகமாயிருந்தது. இன்னும் எழுதுங்கள். நன்றி.

தொடர் முழுமையும் வந்த பிறகு வாசிக்க வேண்டும் என்று தள்ளிப்போட்டதால் இந்த தாமதமான பின்னூட்டம் - மன்னிக்கவும்.

jpl
12-05-2013, 07:07 AM
//எதை அதிகம் செய்ய விழைகிறோமோ
அதைக் கொஞ்சமும் செய்துவிடா விநோத மனநிலை..
செய்யாததன் காரணம் - விழைவை பிறமனம் புரிந்துகொண்டுவிடுமோ என்ற பேதைமை..

மனநிலையின் சுகமான பிணக்குநிலைகளில் இது தலையானது..//

இள மனதின் நிலையை இதை விட தெளிவாக கூறமுடியாது இளசு.நன்றி.

jpl
12-05-2013, 07:10 AM
நன்றி பாரதி..

மும்பை நாதன்
25-08-2013, 03:53 PM
இந்த ஒரு வார்த்தையே போதும் உங்களின் எழுத்துத்திறமைக்கு சான்று கூற.

" இப்பொழுது கல்பு விடுங்கோ யாரன பாத்துட போற என்று கூறவில்லை. "

மிக இயல்பான கதையோட்டத்துடல் ஒரு நல்ல பதிவைத்தந்ததற்கு நன்றி.
மும்பை நாதன்

dellas
04-08-2014, 11:54 AM
மிக மிக தாமதமான பின்னூட்டம்

தோழமையா ? காதலா? எது நல்ல பதம். " நீ அழகாக இருக்கிறாய் " என்று சொல்லிவிடுவது தோழமை. 'இவள் என்ன அழகு' என்று கள்ளத்தனமாய் ரசிப்பது சொல்லாக்காதல். அப்படியானால் நீங்கள் சொல்லவந்த எதோ ஓன்று என்னவாய் இருக்கும்.!!

மொழி வழக்கும் அருமை.