PDA

View Full Version : மழை - போட்டிக் கவி



பிச்சி
07-12-2007, 05:23 AM
இந்திரனின்
கொடிபடர்ந்த விழிகளினுள்
சுவை புரண்டு
திரண்ட கண்ணீர்
மழை.

முகில் வயிற்றில்
கருவாய் முளைத்து
ஊடல் மிகுந்து
உடைந்து போய்த்
தெறிக்கும் இரத்தம் - மழை.

கறையின்றி புலரும்
பொழுதொன்றில்
நிறமற்ற பூக்கள் தேடி
புன்னகை துளைக்கும்
பொய்கை - மழை.

வானமேடையில்
நெஞ்சவிழ்த்து
சோகம் பாடி அரற்றும்
களிக்கூத்து - மழை.

யாசகம் கேட்டு
கிளை நீட்டும்
புவியரங்கில்
ஈர்ந்தமிழ் கவி பேசும்
கவிப்பேரிளம்பெண் - மழை.

அவ்வகை
மழை தவிர்க்கும்
மாந்தர் கூட்டங்கள்,
நில ஓடையில்
நீந்தவியலா மீன்குஞ்சுகள்.

ஆதி
07-12-2007, 06:03 AM
முகில் வயிற்றில்
கருவாய் முளைத்து
ஊடல் மிகுந்து
உடைந்து போய்த்
தெறிக்கும் இரத்தம் - மழை.


இந்த வரிகள் வைறமுத்துவின் வைகறை மேகங்கள் என்னும் கவித்தொகுப்பை ஞாபகமூட்டிச் சென்றன, அழகிய வரிகள் அருமையானக் கற்பனை..




யாசகம் கேட்டு
கிளை நீட்டும்
புவியரங்கில்
ஈர்ந்தமிழ் கவி பேசும்
கவிப்பேரிளம்பெண் - மழை.


மங்கையர் பருவத்தில் ஒன்று, இடம்பார்த்து புகுத்தியது அழகு..

புரிகின்ற வார்த்தைகளை வைத்து புரியாத கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும் காலம் இக்காலம், பிந்நவீனதுவ காலம்.

இச்சுழலில் அழகியக் கற்பனைக் கொடிகளில் பூத்திருக்கிறது இக்கவிதைப்பூ.

சொல் புதிது, சுவைப் புதிது. ஆனால் ஏதாவது ஒரு கனத்தை ஏதாவது ஒரு பாதிப்பை விட்டுச்சென்றிருந்தால் இது வீடுபேறு பெற்றிருக்குமோ ?

உதாரனக்கவி, இதுவும் ஒரு மழைக்கவிதை - தாமரை - ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்.

அந்த மழைநாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!.

இது அவர் 1995 இல் எழுதியது, இப்போது படித்தாலும் அதே கனம், இப்படி ஏதாவது ஒரு ஈரத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதே என் தாழ்மையானக் கருத்து. மற்றபடி கவிதை சூப்பர்..


பாராட்டுக்கள் பிச்சி..


-ஆதி

சிவா.ஜி
07-12-2007, 06:39 AM
அவ்வகை
மழை தவிர்க்கும்
மாந்தர் கூட்டங்கள்,
நில ஓடையில்
நீந்தவியலா மீன்குஞ்சுகள்.

மழையின் பல பரிமாணங்கள் கூறப்பட்டு முத்தாய்ப்பாய் நீங்கள் வடித்திருக்கும் இந்த வரிகள் பிரமாதம். நில ஓடையில் நீந்தவியலா மீன்குஞ்சுகள்.......அசத்தல் வரிகள்.பிச்சியின் கவிதையில் எப்போதும் தெரியும் கவி வாசம் மழையிலும் வீசுகிறது.வாழ்த்துக்கள் தங்கையே.