PDA

View Full Version : கணவரைத் தேடி...பகுருதீன்
06-12-2007, 09:00 PM
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா லெவின்சனை பரிதாபத்துக்கு உரியவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது பரிதாபத்தை பலரும் உணர்ந்திருக்கின்றனர். உணர்ந்திருப்பதோடு தங்களது பரிவையும் அவரோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதை விட முக்கியமாக அவரது தேடல் முயற்சியில் தாங்களும் பங்கேற்று இருக்கின்றனர்.
.
இதனால் கிறிஸ்டினாவுக்கு தான் தனி ஆளில்லை என்ற தைரியம் ஏற்பட்டிருக்கலாம். அதோடு தனது தேடல் நோக்கம் நிறைவேறும் வாய்ப்பு குறித்து நம்பிக்கையும் அதிகரித்திருக்கலாம்.

ஆனால் இன்று வரை அவரது தேடலுக்கு பயன் கிடைத்ததாக தெரியவில்லை. இருப்பினும் அவரது தேடல் முயற்சி பற்றி தெரிந்து கொள்வது பயனுள்ளதாகத்தான் இருக்கும்.

காரணம் அதுவொரு நெகிழ்ச்சியான கதை என்பது மட்டுமல்ல; திக்கற்று நிற்கும் நேரத்தில் இன்டெர்நெட் எப்படி உதவிக்கு வரும் என்பதற்கான உதாரணமும் கூட.

கிறிஸ்டினாவுக்கு நேர்ந்த பரிதாபம் இதுதான் கடந்த மார்ச் மாதம் அவரது கணவர் ஈரானில் காணாமல் போனார். அதன் பிறகு அவரை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.

அமெரிக்காவில் இருந்து கொண்டு எங்கோ இருக்கும் ஈரானில் காணாமல் போன கணவர் குறித்த தகவலை பெறுவது எப்படி? அவரை தேடுவதுதான் எப்படி? அதிலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் தூதரக உறவு இல்லாத நிலையில் அந்நாட்டை தொடர்பு கொள்வதுதான் எப்படி?

நிலைமை இப்படி இருக்கும் போது கிறிஸ்டினாவின் மனது என்னபாடு பட்டிருக்கும் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். ஆனால் அவர் வேதனைப்பட்டதோடு நிற்கவில்லை. கணவரை தேடி தானே புறப்பட்டு விட்டார்.

லெவின்சன் அமெரிக்க உளவுத்துறை அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி. 98 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். சிகரெட் கடத்தல் ஒன்று குறித்து விசாரணை நடத்துவதற்காக அவர் மார்ச் மாதம் அவர் ஈரான் சென்றார்.

லெவின்சன் மனைவி மற்றும் குடும்பம் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். தினந்தோறும் மனைவிக்கு தவறாமல் போன் செய்வதோடு எஸ்எம்எஸ் மூலமும் செய்திகளை அனுப்புவார்.

கடந்த மார்ச் 8ந் தேதி அவர் மனைவியிடம் போனில் பேசி விட்டு தனது ஓட்டல் அறைக்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. தினந்தோறும் பேசுபவர் சில நாட்களாக போனில் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த கிறிஸ்டினா, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட தொடங்கினார்.

அதன் பிறகு பல நாட்களாகியும் அவரை பற்றி தகவல் தெரியாத நிலையில் கிறிஸ்டினா அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

ஈரானோடு அமெரிக்காவுக்கு தூதரக உறவு இல்லாத நிலையிலும் அமெரிக்க அதிகாரிகள் அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு லெவின்சன் குறித்து விசாரித்தனர். ஆனால் ஈராக் அதிகாரிகளோ அவரை பற்றி எந்த விவரமும் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.

அதிகாரபூர்வமான விசாரணை இப்படி முட்டுக்கட்டையை சந்தித்த நிலையில் கிறிஸ்டினா தானே தேடலில் ஈடுபட முடிவு செய்தார். ஹெல்ப் பாப் லெவின்சன் எனும் பெயரில் ஒரு இணையதளத்தை அமைத்து அதில் லெவின்சன் பற்றிய விவரங்களையும், அவரது பயண குறிப்புகளையும் குறிப்பிட்டு அவரை பார்த்தவர்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் மூலமாக லெவின்சனை கடைசியாக பார்த்த யாரேனும் தொடர்பு கொண்டு அவரது இருப்பிடம் பற்றிய தகவல்களை தெரிவிக்கக் கூடும் என்பது அவரது நம்பிக்கை.

இந்த தளம் உருவாக்கப்பட்டதை அடுத்து லெவின்சன் நிலை குறித்து உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் கவலை அடைந்தனர். ஆனால் அவரது இருப்பிடத்தை உணரக் கூடிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே கிறிஸ்டினா தனது கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கையில் தானே ஈரானுக்கு நேரில் சென்று பார்ப்பதற்கான அனுமதியையும் பெற்று விட்டார். இது பற்றிய அறிக்கையையும் அவர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதன் நடுவே அவரது உறவினர்கள் பேஸ்புக் இணையதளத்தில் லெவின்சனுக்காக என்று ஒரு தனி பக்கத்தை உருவாக்கி தேடலில் உதவி கோரினர். இதனையடுத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த தளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து லெவின்சன் தேடுதல் பணியில் உதவுமாறு ஐநா அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பினர்.

இந்த ஆதரவு லெவின்சன் குடும்பத்தினரை திக்குமுக்காட வைத்து விட்டது.
ஆனாலும் கூட இன்று வரை லெவின்சன் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையோடு, இன்டெர்நெட்டின் துணை கொண்டு தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓவியன்
07-12-2007, 03:14 AM
கிறிஸ்டினாவின் நம்பிக்கைக்கு பலன் கிட்ட நம் பிரார்த்தனைகளும்.......

அன்புரசிகன்
07-12-2007, 04:02 AM
நம்பிக்கை வீண் போகாது. சும்மா இருப்பதிலும் ஏதாவது செய்வது நலம். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.