PDA

View Full Version : கலையாத கவிதை-காஜல்சுகந்தப்ரீதன்
05-12-2007, 01:46 PM
அது 2004-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் ஒரு உச்சிப்பொழுது, பணி நிமித்தமாக நான், என் சகஊழியர் இருவர் மற்றும் எங்கள் மேலாளருமாக டங்காராவிலிருந்து ராஜ்கோட்டிற்க்கு பயணம் மேற்கொண்டிருந்தோம். என்னை தவிர மற்ற மூவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கமாக எங்கள் வாகனத்தில் ஒலிக்கும் தெலுங்கு இசைக்கு பதிலாக அன்று என் விருப்பத்தை ஏற்று தமிழ் ஒலிதகட்டை சுழலவிட்டிருந்தனர். அதற்கு எங்கள் மேலாளர் தமிழகத்தில் படித்ததுடன் சிறிதுகாலம் பணியும் புரிந்திருந்ததால் அவருக்கு நன்றாகவே தமிழ் தெரியுமென்பதுதான் காரணமாகும். ஏற்கனவே மதிய உணவுக்கான நேரம் கடந்து விட்டிருந்தபடியால் எனக்கு வயிறு வேறு பசிக்க ஆரம்பித்து விட்டது. நாங்கள் சென்ற பாதையில் சொல்லிக்கொள்ளும் படி விடுதி எதுவும் கண்ணில் படவில்லை! நேரமாக ஆக பசிவேறு வயிறை பிச்சு எடுத்துக் கொண்டிருந்தது.


உடனே நான் மேலாளரிடம், "என்ன சார்! ராஜ்கோட் போய்தான் கை நனைப்பதாக உத்தேசமா?" என்றேன்.அவரும் பசியோடுதான் இருந்தார் போலும், "அரைமணி நேரமா நானும் சாலையோரமா பாத்துகிட்டுதான் வரேன் ஒரு ஹோட்டலும் கண்ணுல படலியே" என்றார்!


கொஞ்ச நேரத்தில் எங்கள் வாகனம் ஒரு கிராமத்தை கடக்கவேண்டி வந்தது. உடனே எங்கள் மேலாளர் வண்டியை சாலையோரமிருந்த பெட்டிகடையோரம் நிறுத்தி அருகில் உணவுவிடுதி ஏதேனும் உண்டா என்று கடைக்காரரிடம் குஜராத்தியில் விசாரித்தார்! அவர் ஏதோ சொல்ல எங்கள் மேலாளரின் முகத்தில் பூரிப்பு ஆனால் எங்களுக்குதான் ஒன்றுமே புரியவில்லை அவர் என்ன சொன்னாரென்று..! ஏனெனில்அந்த சமயத்தில் எனக்கு ஹிந்தியே சரிவர தெரியாதது மட்டுமின்றி நான் குஜராத் வந்து ஒருமாத காலம்தான் ஆகியிருந்தது. ஆறு வருடமாக அங்கே பணிபுரியும் எங்க மேலாளருக்கே அரைக்குறையாகத்தான் குஜராத்தி மொழி தெரியும் ஆனால் அதை வைத்துமொத்த விசயத்தையும் சைகை மூலமா வாங்கிவிடும் வல்லமை அவரிடம் இருந்தது!. தமிழகத்தில் மட்டுமல்ல குஜராத்திலும் கூட பெரும்பாலான மக்களுக்கு ஹிந்திமொழி தெரியாது என்பதையும் ஹிந்தி இந்தியாவில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி என்பது முற்றிலும் பொய்யான வாதமென்பதையும் வடமாநிலங்களுக்கு வந்த பிறகுதான் நான் அறிந்து கொண்டேன். வண்டி மீண்டும் ராஜ்கோட் நோக்கி ஓடத்தொடங்கியது!


ஆர்வ கோளாறில் நான் எங்கள் மேலாளரிடம்அந்த கடைக்காரர் என்ன கூறினாரென்று வினவினேன். "இங்க ஓட்டல் ஒன்னுமில்ல சாப்ஜி..! வேணுமுன்னா இன்னும் மூனு கிலோமீட்டர் தூரம் போனாஒரு ராம் மந்திர்(கோவில்) வரும்னு சொன்னார்" என்றார் எங்கள் மேலாளர்! "மந்திருக்கும் நமக்கும் என்ன சார் சம்மந்தம்?" என்றேன் நான். ஏனோ தெரியவில்லை அவர் சற்று முகத்தை இறுக்கி, "உனக்கு பசிக்குது அவ்வளவுதானே பேசாமா என்கூட வா" என்றார்.


அதன்பிறகு நானும் வாயை மூடிக்கொண்டேன்! அடுத்த ஐந்து நிமிடத்தில் கார் சாலையின் இடது பக்கமிருந்த ராம் மந்திர் மதிலோரம் மூச்சுவாங்கி நின்றது. சரி வாங்க உள்ளே போகலாம் என்றார் எங்கள் மேலாளர். எனக்கு எதுக்கு என்று கேட்கவேண்டும் போலிருந்ததாலும் அவரது இறுகிய முகம் மறுபடியும் நினைவில் வந்து வேண்டாம் விட்டுவிடு என்றது. அமைதியாக அவருடன் நானும் மற்றவர்களும் உள்ளே சென்றோம்.


அங்கே மதில்சுவருக்கு உள்ளே மிகப்பெரிய வளாகம் பரந்து விரிந்திருந்தது. அங்காங்கே சிறு சிறு மந்திர்கள் கட்டியிருந்தார்கள், நம்மூரில் இருக்கும் சிறு தெய்வங்கள் போல் இல்லாமல் அத்தனையும் புராணத்தில் வரும் கடவுள் பெயரில் அமைந்திருந்தது. அத்துடன் வளாகம் முழுமைக்கும் வண்ண வண்ணமலர் செடிகளையும் வகை வகையான மரங்களையும் வளர்த்து மரங்களின் அடியில் ஓய்வாக அமர சாய்வாக சிமெண்டாலான இருக்கைகளையும் அமைத்திருந்தனர்.


மதில்சுவருக்கு உள்ளே நுழைவு வாயிலுக்கு சற்று அருகிலேயே ஒரு கட்டிடம் வந்தவர்களை வரவேற்பது போல் அமைந்த்திருக்கவும் எங்கள் மேலாளர் எங்களை அழைத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்குள் சென்றார். அங்கே சற்று வயதான பெரிய மனிதருக்கு உரிய தோரணையுடன் மேஜைக்கு பின்புறம் தன் பருத்த உடலை நாற்காலிக்குள் அடக்கிவைத்து அமர்ந்திருந்தவர் எங்களை கண்டதும் முகத்தில் புன்னகை தவழ ஜெய் ராம் என்றுகூறி எங்களை வறவேற்றார். எங்கள் மேலாளரும் ஜெய்ராம் ஜி என்று அவரை வணங்கிவிட்டு ஏதோ குஜராத்தி கலந்த ஹிந்தி பாசையில் அவரிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு எங்களிடம் சரி வாருங்கள் அப்படி சென்று அமருவோம் என்று கூறிக்கொண்டே வெளியே மரத்தின்அடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி சென்றார்.


இதுவரை பொறுத்ததே என்னை பொருத்தவரை பெரிய விசயம் என்பதால் கேட்டே விட்டேன் எங்கள் மேலாளரிடம், "எதற்காக இப்போ நாம் இங்கே வந்தோம்? என்ன சொன்னார் அந்த படா பாய்?" என்று. அதற்கு அவர், நம்மூரில் கோயில்களில் அன்னதானாம் வழங்குவதுபோல் இங்கேயும் மூனுவேளையும் மந்திருக்கு வருவோருக்கு உணவு வழங்கபடுவதாகவும் இப்போது நமக்கு முன்புவந்தவர்கள் சாப்பிட்டு கொண்டிருப்பதால் நம்மை சற்றுநேரம் காத்திருக்குமாறு அவர் கேட்டு கொண்டதாகவும் ஆகையால் கொஞ்சநேரம் என்னை வாயைமூடிக் கொண்டு அமைதியாக இருக்கும்படி வேண்டினார்.


என்னுடன் வந்த மற்ற இரு ஊழியர்களும் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துக்கொள்ள, எங்கள் மேலாளருக்கு இப்போது நான் பேசுவது பிடிக்கவில்லை என்று தோன்றியதால் நான் அவருடன் அமராமல் அருகில் இருந்த மற்றொரு சிமெண்ட் பெஞ்சில் சென்று தனியாக அமர்ந்து கொண்டேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் வேறொரு இருக்கையில் இளமை என்றும் முதுமை என்றும் சொல்ல முடியாத நாற்பது வயது மதிக்கதக்க ஒரு தம்பதியர் உட்காந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு ஐந்து அல்லது ஆறடி தூரத்தில் குஜராத் குழந்தைகளுக்கே உரிய கோதுமைநிற கலரில் அவர்களுடைய மூன்றுவயது குழந்தை தனியாக மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது.


உரையாடுவதற்கு ஒருவருமே அருகில் இல்லாததால் அமைதியாக அந்த குழந்தையின் செயல்களை கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். நான் பார்ப்பது குழந்தைக்கு உறுத்தியதோ என்னவோ திடீரென்று அது என் பக்கம் திரும்பி பார்க்கவும் நான் வாயெல்லாம் பல்லாக புன்னகை சிந்தியவாறே அக்குழந்தையிடன் என்னிடம் வருமாறு கையை நீட்டி அழைத்தேன். முதலில் நான் வரமாட்டேன் என்ற தோரணையில் தலையை இடவலமாக ஆட்டிவிட்டு பின் தன் பெற்றோரை நோக்கி பார்வையை செலுத்தியது. அவர்களும் நான் அழைப்பதை பார்த்து கொண்டிருந்ததால் நான் மீண்டும் அழைத்தபோது அவர்கள் குழந்தையிடம் குஜராத்தியில் ஏதோ சொல்லவும், அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக தன் பிஞ்சு கால்களை மண்ணில் ஊன்றி என்னை நோக்கி ஓடி வந்து என்னிரு கால்களுக்கிடையே நின்று வந்த அதே வேகத்தில் தன்பிஞ்சு கைகளை என்தொடையில் ஊன்றி என் மடிமீது ஏறி அமர முயன்றது. என் உதவியின்றி அக்குழந்தையால் மேலே ஏறமுடியாதென்பதால் நான் அதன் பிஞ்சுகைகளை மெலிதாக பற்றி மேல்நோக்கி தூக்கவும் பட்டென்று தன்கால்களை என்மீது ஊன்றி என்மடிமீது வந்து அமர்ந்து கொண்டது குழந்தை.


பின்னர் என்ன நினைத்ததோ அண்ணாந்து என்முகத்தை பார்த்து ஏதோ மழலை மொழியில் என்னிடம் கூறியவாறே என்மடியிலிருந்து நழுவி என்னைப் போலவே சாய்வாக பெஞ்சின்மீது தன் கால்களை முன்னோக்கி நீட்டி அமர்ந்து கொண்டது. குழந்தையின் சின்ன கால்களுக்கு நீளம் பத்தாததால் அது தன் கால்களை கீழே தொங்கவிட முடியாமல் தன் பாதங்களை மட்டுமே இருக்கைக்கு வெளியே நீட்டியிருந்தது.


பின்னர்,சாய்வாக அமர்ந்திருந்த குழந்தை பக்கவாட்டில் மேல்நோக்கி என்முகத்தை பார்த்து தன் மழலைமொழியில் என்னிடம் குஜராத்தியில் ஏதோ கூறியது. அதன் மழலைமொழி கேட்பதற்கு இனிமையாக இருந்த அதே வேளையில் அதன் அர்த்தம் புரியாமல் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் நான் முழித்தது எனக்கு இப்போது நினைத்தாலும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.


என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், "சூ நாம் சே?" என்று அப்போது குஜராத்தியில் எனக்கு தெரிந்த ஒரே வார்த்தையான உன்பெயர் என்ன என்பதை அந்த குழந்தையிடம் கேட்டேன். என் உச்சரிப்பு குழந்தைக்கு புரிந்து விட்டதுபோலும் என்னை பார்த்து வாஞ்சையுடன்,"கா..கா...காஜல்" என்று தன் பெயரை அழுத்தி உச்சரித்து மகிழ்ந்தது. அதனை தொடர்ந்து நானும் இருமுறைகாஜல், காஜல் என்று அழுத்தி சொல்லி பார்த்ததை பார்த்து காஜலுக்கு ஒரே சந்தோசம். தன் சிரித்த முகத்துடன் மீண்டும் என்னிடம் காஜல் ஏதோ பேச ஆரம்பிக்கவும் இந்த முறை அவளின் பேச்சை சமாளிக்க நான் ஊமை பாஷை பேச வேண்டியதாகி விட்டது. என் கைகளை ஆட்டியும் கண்களை உருட்டியும் நான் சைகையில் சேட்டை காட்டவும் காஜல் விழுந்து விழுந்து சிரித்து என்னை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.


பின் சின்னவயதில் நான் விளையாடிய உள்ளங்கையில் பருப்பு கடைந்து எல்லோருக்கும் பகிர்ந்தளித்து விட்டு பின் நண்டோடுது நரியோடுது என்று கூறிகொண்டே கையிடுக்கில் விரல்களால் கிச்சுகிச்சு மூட்டி சிரிப்பை வரவைக்கும் விளையாட்டை நானும் காஜலும் மாறிமாறி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் சந்தோசத்திற்கும் மொழி ஒரு பிரச்சனையாகவோ தடையாகவோ இல்லை. இப்படி நாங்களிருவரும் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த 'படா பாய்' எங்களிடம், "தங்களுக்கான உணவு தயராக இருக்கிறது, எல்லோரும் வந்து சாப்பிடுங்கள்" என்று எங்கள் அனைவரையும் அழைத்தார்.


சரியென்று நான் சாப்பிடுவதற்காக இருக்கையிலிருந்து எழவும் காஜல் பட்டென்று தன் ஒருகையால் என்னை பிடித்துக்கொண்டு மறுகையை பெஞ்சில் ஊன்றி கீழே இறங்கிவிட்டாள். நான் அவளிடம் பெற்றோரிடம் செல்லுமாறு ஹிந்தியில் கூறிக்கொண்டே அவர்களிருந்த திசையை கைக்காட்டினேன். ஆனால் அவள் அதை ஏற்க மறுத்துவிட்டு என்விரல்களை பிடித்துக் கொண்டு என்னுடன் நடக்கவும் நான் அவளுடைய பெற்றோரை நோக்கினேன். அவர்கள் தங்கள் பேச்சினூடே அவ்வப்போது காஜலையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர் ஆகையால் இப்போது நான் நோக்கவும் அவர்கள் என்னை பார்த்து சிறிதாக புன்னகை பூத்தனர். அது எனக்கு அளிக்கபட்ட அனுமதியாக கருதி நான் காஜலை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றேன்.


இதையெல்லாம் கவனித்த என் மேலாளர் என்னிடம்,"எப்படிடா குழந்தைகள் உன்னிடம் மட்டும்இவ்வளவு சீக்கிரம் ஒட்டிக் கொள்கிறது?" என்றார். அதற்கு நான், "குழந்தைகளுக்கு எப்பவுமே கோமாளிகளை ரொம்ப பிடிக்கும் சார்" என்றேன். அவர் அர்த்தத்துடன் ஒரு சிரிப்பை உதிர்த்துக் கொண்டே கையலம்ப செல்லவும் நானும் காஜலும் அவரை பின் தொடர்ந்தோம்.


கையலம்பும் குழாய் காஜலின் உயரத்தைவிட சற்று மேலே இருந்ததால் நான் என் கையால் தண்ணீரை பிடித்து காஜலின் கையை கழுவப் போனேன் ஆனால் அவள் தன்பிஞ்சு விரல்களை தரையிலூன்றி எக்கிநின்று தன்கையை நீரில் நனைக்க முயன்றாள். ஆகையால் நான் அவளின் ஆர்வபடியே அவளை தூக்கி குழாய் நீரில் கையை அலம்பி விடுகையில், அவள் குழாயின் வாயை தன் பிஞ்சுகைகளால் பட்டென்று மூடவும் அதில் விசைக்கூடிய நீர் நாலாப்புறமும் அவளின் கையிடுக்கில் வெளிப்பட்டதில் என் சட்டையும் முகமும் நன்றாகவே நனைந்தது. அதைக்கண்ட காஜல் தன்கையை எடுத்துவிட்டு நீர்வடியும் என் முகத்தை பார்த்து சிரித்தாள்.


சிறிதாக நனைந்திருந்த காஜலின் உடையை என் கைக்குட்டையால் துடைத்துவிட்டு என் சட்டையையும் முகத்தையும் துடைத்துக் கொண்டு இருவரும் சாப்பிட சென்று அமர்ந்தோம். நம்ம ஊருப்போல வாழை இலை விருந்தெல்லாம் அங்கு கிடையாது என்பதால் வட்டமான பெரிய தட்டில் அதே வடிவில் ரோட்லாவை சுட்டுவைத்திருந்தனர். பக்கத்தில்ஒரு கிண்ணத்தில் சப்ஜியும் இன்னொரு கிண்ணத்தில் மோட்டா சாவலையும் வைத்து கூடவே ஒரு பெரிய டம்ளரில் குடிப்பதற்க்கு சாஸ் என்ற பெயரில் மோரை வைத்திருந்தனர். என்னருகிலே அமர்ந்திருந்த காஜல் சின்னபெண் என்பதால் அவளுக்கு தனியாக அவர்கள் உணவு வைக்கமால் விட்டுவிட்டதால் கோவப்பட்டு காஜல் என்தட்டை அவள் முன்பு இழுத்து வைத்துக்கொண்டாள்.பின் தன் பிஞ்சுவிரல்களால் தட்டிலிருந்த அந்த ரொட்டியை பிய்க்க முடியாமல் காஜல் திணரவும் நான் ஒரு ரொட்டியை எடுத்து சிறுசிறு துண்டாக பிய்த்து தட்டில் போட்டுவிட்டு அதில் ஒரு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டேன். உடனே காஜலும் தன் பங்குக்கு ஒரு ரொட்டி துண்டை எடுத்து எனக்கு ஊட்ட முயற்சிக்கவும் நான் குனிந்து அவள் கையிலிருந்த ரொட்டி துண்டை என்வாயில் வாங்கிக் கொண்டேன். எனக்கு ஊட்டிவிட்டதில் காஜலுக்கு முகத்தில் அப்படியொரு சந்தோசம்.


இப்படியே மாறி மாறி இருவரும் ஊட்டிக்கொண்டு மொத்த ரொட்டி துண்டையும் காலி செய்துவிட்டு கைகழுவிக் கொண்டு வெளியே வந்தோம். எங்களுக்கு முன்பே உண்டுவிட்டு எழுந்து விட்டதால் நாங்கள் இருவரும் கடைசியாக வெளியே வந்து பார்க்கையில் எல்லோரும் அவரவர் இருக்கையில் மறுபடியும் ஓய்வாக அமர்ந்திருக்க எங்கள் மேலாளர் மட்டும் அந்த படா பாய்யுடன் ஏதோ பேசிக்கொண்டு உட்காந்திருந்தார்.

நான் அவரை நோக்கி செல்லவும் காரணம் அறிந்தவராய் என்னிடம், " ஒரு பத்து நிமிசம் போய் உட்காருடா அப்புறமாநாம கிளம்பலாம்" என்றார். சரி என்று கூறிவிட்டு நான் என் இருக்கைக்கு போகவும் காஜல் என்கையை இழுத்து கோயிலை நோக்கி தன்கையை நீட்டி ஏதோ குஜராத்தியில் சொல்லவும் நான் கோயிலுக்குதான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டு அவளுடன் கைக்கோர்த்து அருகிலிருந்த சிறுகோயிலுக்கு நடந்தேன். கோபுரங்களுடன் கூடியபெரிய கோவில் அரைமைல் தூரம் உள்ளே இருப்பதால் அங்கு செல்லமால் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்க்கு அருகிலேயே அமைந்திருந்த சிறு கோவிலுக்குள் சென்றோம். சாப்பிட்டு வெளியே வந்தபிறகு காஜல் அவளின் பெற்றோரை பார்க்கவோ அவர்களிடம் செல்லவோ நினைக்காமல் முற்றிலும் அவர்களை மறந்துவிட்டு என்னைக் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

நம்ம ஊர் போல அங்கே சிலைகள் கற்களால் செய்யப் படவில்லை மாறாக பளிங்கு கற்களால் செய்யப்பட்டு பகட்டுதனமாய் காட்சியளிக்க சிலையின் பின்புறமிருந்து "ரகுபதி ராகவ ராஜா ராம் அதீத பாவன சீதா ராம்" என்ற பாடல் மெல்லிசையாய் தவழ்ந்து கொண்டிருந்தது. வணங்கும் இடத்திற்க்கு அருகிலேயே மின்சாரத்தால் இயங்கும் மேளக்கருவியை வைத்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் அதைக்கண்ட காஜால் ஆர்வமுடன் ஓடி அதன்மீது தன் கைகளால் அடித்து ஒலியெழுப்பியவாறு என்னை பார்த்து சந்தோசமாக சிரித்தாள். நானும் அவளை பார்த்து சிரித்துவிட்டு சிலைகளை நோக்கி கண்களை மூடி வணங்கியவாறு முன்னோக்கி குனிந்து கைகளை ஊன்றி எழுந்தேன். அதற்குள் காஜலும் வந்து என்னை போலவே தன் கரங்களை குவித்து வணங்கி தரையில் தன் கைகளை ஊன்றி எழுந்து கொண்டிருந்தாள். பின்னர்அங்கிருந்த மணியை நான் அடிக்கவும் தானும் அடிக்க வேண்டும் என்று தன்னை தூக்குமாறு காஜல் தன் கைகளை என்னை நோக்கி உயர்த்தவும் நானும் அவளை தூக்கி மணியை அடிக்க செய்தேன். காஜல் கயிரை பிடித்து வேகமாக மணியை அடிக்கவும் மணியோசை மண்டபம் முழுதும் எதிரொலித்து அதன் சுருதியை கூட்டி அங்கே ஒருவித ரம்மியத்தை ஏற்படுத்தி கொடுத்தது.


பின்னர் நாங்கள் இருவரும் அருகிலிருந்த மற்ற இருகோவிலுக்கும் சென்றுவிட்டு எங்கள் இடத்திற்க்கு திரும்பவும் எங்கள் மேலாளரும் மற்ற இருவரும் செல்வதற்க்கு தயாராக என்னை எதிர்பார்த்து காத்திருந்தனர். கோவிலிருந்து தூக்கிகொண்டு வந்த காஜலை நான் அவளின் பெற்றோரிடம் இறக்கிவிடவும் அவள் இறங்க மறுத்துவிட்டாள். அவளின் தாயார் எழுந்து செல்லமாக காஜலிடம் ஏதோ கூறிக்கொண்டு தன்னிடம் வருமாறு கையை நீட்டி அழைக்கவும் காஜல் முடியாது என்று தன் பிஞ்சுகைகளால் என்கழுத்தை கட்டிக்கொண்டு முகத்தை என் தோல்மீது புதைத்துக் கொண்டாள்.


எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் காஜலின் கையை விடுவித்து அவளை அவளின் தாயாரிடம் கொடுக்கவும் காஜல் அழ ஆரம்பித்துவிட்டாள். அவளின் தந்தை காஜலிடம் ஏதோ சமாதானம் பேசிக் கொண்டிருக்கையில் எனதுமேலாளர் என்னிடம், " சரி சரி கிளம்பு நாம இங்க நின்னாக்க குழந்தை இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுடும்" என்றார். அவரின் பேச்சை தட்ட முடியாமல் நான் அவருடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். நான் விலகி செல்கையில் காஜலின் அழுகை சத்தம் கூடவே நான் திரும்பி பார்த்தேன். காஜல் தன் கையை என்னை நோக்கிநீட்டி அழுதுக் கொண்டிருந்தாள். அதைக்கண்ட எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.


சற்றுமுன் வரை என்னுடன் சந்தோசத்துடன் இருந்த காஜல் தற்போது கண்ணீர் விடுவதற்கு காரணம் நான்தானே என்ற குற்ற உணர்வால் இனி குழந்தைகளிடம் நெருங்கி பழகக் கூடாது என்று நினைத்துக் கொண்டு திரும்பி பார்க்காமல் மேற்கொண்டு மேலாளருடம் நடந்தேன். கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரும்வரை காஜலின் அழுகுரல் மட்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உறங்கி கொண்டிருந்த கார் மறுபடியும் உயிர்பெற்று ராஜ்கோட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.


காஜலின் பிரிவால் கனத்த மனதுடன் இருந்த என்னிடம், "என்னடாச்சு, எப்பவும் வளவளன்னு பேசுவ இப்ப அமைதியா வர?" என்றார் என் மேலாளர். அதற்கு, "ஒன்னுமில்ல சார் சும்மாதான்" என்றவன் தொடர்ந்து அவரிடம், " ஆமா எங்களை நோக்கி கையைக்காட்டிஅந்த படா பாய் உங்ககிட்ட ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தாரே என்ன சார் அது?" என்றேன் வழக்கமான அறிந்து கொள்ளும் ஆவலுடன். எனது இந்த கேள்விக்குதான் காத்திருந்தவர் போல, "டேய் அந்த குழந்தையின் பெயர் என்னன்னு உனக்கு தெரியுமா?" என்று என்னிடம் வினவ நான், "ம் தெரியுமே காஜல்சார் " என்றேன். அதற்கு அவர், "இல்லடா அக்குழந்தையின் பெயர் காஜல் அல்ல என்றும் அதன் பெயர் ஆயிசா என்றும் அதனுடன் வந்தவர்கள் அக்குழந்தையின் பெற்றோர்கள் அல்லவென்றும்" கூறிவிட்டுதொடர்ந்து, "இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆயிசாவின் பெற்றொர்களும் இவர்களும் அகமதாபாத்தில் உள்ள மெம்நகரில் ஒரே அப்பார்ட்மெண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்ததாகவும், மதத்தால் மாறுப்பட்டிருந்தாலும் மனதால் ஒன்றுப்பட்டு இரு குடும்பத்தாரும் சகோதர பாசத்துடன் பழகி வந்ததாகவும், சம்பவதன்று தங்களின் ஒருவயது மகளை இவர்களின் வீட்டில் விட்டுவிட்டு மார்கெட்வரை சென்றுவர ஆயிசாவின் பெற்றோர்கள் கிளம்பியபோது தானும் வருவதாக கூறி இவர்களின் பத்துவயது மகனும் அவர்களுடன் சென்றதாகவும், அன்று அவர்கள் மூவரும் மார்கெட்டில் இருந்தபோது இவர்கள் இப்போதும் பின்பற்றும் மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அங்கே வந்த ஒரு மதம்பிடித்த கலவர கும்பலொன்று அவர்களை தாக்கியதாகவும், அப்போது ஆயிசாவின் பெற்றோர்கள் இந்த பையனையாவது விட்டுவிடுங்கள் அவன் நீங்கள் சொல்லும் மதத்தை சேர்ந்தவன்தான் என்று கெஞ்சியபோதும், அந்த வெறிபிடித்த மிருகங்கள் ஆயிசாவின் பெற்றோருடன் இவர்களின் மகன் உயிரையும் சேர்த்தே குடித்துவிட்டு சென்றதாகவும், அந்த கோராமான நிகழ்வுக்கு பிறகு அங்கே இருக்க பிடிக்காமல் இவர்கள் அயிசாவை கூட்டிக்கொண்டு ராஜ்கோட்டிற்கு குடி பெயர்ந்து விட்டதாகவும், மன ஆறுதலுக்காக அவர்கள் அவ்வப்போது காஜலையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்து போவதாகவும், ஆயிசா பிறந்ததிலிருந்தே அவளை இவர்கள் காஜல் என்றே அழைப்பதாகவும், இப்போது காஜல் மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்றும் " அந்த படா பாய் தன்னிடம் கூறியதாக ஒரேமூச்சில் சொல்லி முடித்தார்.


இதை அவர் சொல்லி முடித்த கணத்தில் ஏற்கனவே கனத்து போயிருந்த என் உள்ளத்தில் ஏதோ ஒரு உணர்வு உடைப்பட்டு கண்களினூடே கரைப்புரண்டோட தொடங்கியிருந்தது. எனக்கு திரும்பி சென்று காஜலை மறுபடியும் பார்க்க வேண்டும் போலிருந்தாலும் அதற்கு என் மேலாளர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்ற யதார்த்தம் எனக்கு புரிந்ததால் கண்களை மூடிக்கொண்டு காஜலுடனிருந்த அரைமணி நேரப்பொழுதை நினைத்து பார்த்து மனதுக்குள் அழத் தொடங்கினேன். என் கண்களில் நீர் கசிந்து கொண்டிருந்த அதே வேளையில் எங்கள் வாகனத்தில்,


மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர்மீது துயில் கொள்ளட்டும்..!!


என்ற பம்பாய் பட பாடலும் மெல்லிசையாய் கசியத் தொடங்கியிருந்தது. நிகழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகவே எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

சிவா.ஜி
05-12-2007, 02:12 PM
விளையாட்டாய் தொடங்கி மனம் கணக்க செய்துவிட்டது உங்கள் பதிவு.எதுவுமே அறியாமல் சிரிக்குமந்த மழலையைப் போலவே எல்லோரும் இருந்துவிடக்கூடாதா...மதம் மறந்து மனிதம் கொண்டு எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அருமையான நினைவுப் பதிப்பு சுகந்த்.

ஓவியன்
05-12-2007, 02:31 PM
ப்ரீதா...!!

என்ன சொல்ல, ஆயிரமாவது பதிவை வாழ்த்தவென ஓடோடி வந்த என் வார்த்தைகளைக் கட்டிப் போட்டு விட்டது உம் பதிவு....!

மனங்களால் ஒன்றுபட்ட குடும்பங்களை மதங்கள் பிரித்து அழித்த கொடுமையை என்னவென்பது....
அந்த சின்னஞ்சிறு ஜீவன் தான் என்ன கொடுமை செய்தது, ஏன் அது தன் தாய் தந்தையரை இழக்க வேண்டும்....
பிரச்சினைகளின் ஆழம் புரியாத இந்த வயதிலேயே சற்று நேரம் சேர்ந்து பழகி இருந்தவன் பிரிகையில் தாங்காமல் அழும் அந்த குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் தன் பெற்றோரைப் பற்றியும் தெரிந்து கொள்கையில் எப்படித்தான் தாங்கிக் கொள்ளுமோ...??

இனிமேலாவது காலம் அந்த குழந்தை மீது கருணை காட்ட என் பிரார்த்தனைகளும்....

மலர்
05-12-2007, 03:22 PM
சுகு...
மேலாளர் குழந்தையை பற்றி சொல்லும் வரை ஏதோ விளையாட்டான பதிவு
என்று தான் நினைத்தேன்... ்முழுமையாய் படித்ததும் ஏதோ மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி....

10வயது வரை குழந்தையை வளர்த்து பறிகொடுப்பது என்பது எத்தனை கொடுமை..
வீட்டில் அந்த சிறுவன் நிறபது போல் நடப்பது போல் பேசுவது போல்.. எப்படி தான் தாங்கினார்களோ..
அதே மாதிரி ஒரு பாவமும் அறியாத அந்த சிறுகுழந்தை. காஜல் தான் என்ன பாவம் செய்தது. இப்போது அதன் பெற்றோரை இழந்திட்டதே.. ஆனால் சகோதரமாய் பழகிய குடும்பத்தினரே வளர்ப்பதால் கொஞ்சம் ஆறுதல்...

மதத்தின் மீது நம்பிக்கை பற்று இருக்கலாம்... ஆனால் அதுவே வெறியானால்.....

அன்புரசிகன்
05-12-2007, 07:34 PM
மிகவும் கனமான நிகழ்வு.... சிறுபிள்ளைகளுடன் நாம் இருக்கும் போது நாமும் சிறுவர்கள் ஆவது வழமை. பிரிவது ரொம்ப கடினம். உங்களின் அந்த நேர மனநிலமை என்னால் உணர முடிகிறது...

இளசு
05-12-2007, 08:25 PM
அன்பான சுகந்தன்..

கண்கள் பனித்தன.. உங்களின் அந்த அரைமணி மன அழுகை
இன்று எனக்குள் மடைமாற்றம்!

ஆயிரமாவது பதிவில் மானுடம் போற்றும் மகத்தான பதிவை
அளித்த சுகந்தனுக்கு ஆயிரம் இ-காசுகள் பாராட்டாக..


சடகோபனின் மானுடம் கதையை வாசியுங்களேன் -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11788

நேசம்
05-12-2007, 10:44 PM
ஆரம்பத்தில் படிக்கும் போதெ உங்களுக்கும் மேலாளருக்கும் நடந்த வேடிக்கை தான் என்று நினைத்த போது,அப்புறம் அந்த குழந்தையுடன் ஏற்பட்ட சில நிமிட உறவுகளை தான் சொல்விர் என்று பார்த்த போது,அந்த குழந்தையின் பின்புலத்தை அறிந்த போது மனதை என்னவோ செய்து விட்டது.

அந்த குழந்தை மாதிரி நம்முடைய மனமும் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்து இருக்கும்.இத்தகைய கலவரங்களில் இடையேயும்,இரு குடும்பங்களின் உறவை பார்க்கும் போது இன்னும் நம்பிக்கை மனதில் இருக்கிறது.வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் இன்னும் ஒற்றுமையாக இருப்போம் என்று.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ப்ரியன்

சுகந்தப்ரீதன்
06-12-2007, 04:47 AM
பின்னூட்டமிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!

lolluvathiyar
06-12-2007, 08:31 AM
மனதை கரைத்து விட்டது உங்கள் அனுபவம் சுகந்தா, ஆரம்பத்தில் அந்த குழந்தையுடன் நெருங்கி பழகி பிரிய முடியாமல் பிர்ந்து வந்த உங்கள் கதை அதன் பின் உன்மைகளை ஒரே பாராவில் போட்டு விட்டீர்கள். மதவெறி அராஜகங்களுக்கு குழந்தைகளும் கூட தப்பவில்லை. காஜால் போல் நிரைய குழந்தைகள் அனாதையாகி விட்டன, ஏதோ ஆண்டவன் அருள் இந்த குழந்தைக்கு பெற்றோர் கிடைத்து விட்டனர்.
இன்னும் கொடுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் எத்தனை பேரோ? அனைவருக்கு ஆண்டவன் ஒரு நல்ல உறவை தரவேண்டும்.

அமரன்
06-12-2007, 09:34 AM
படிக்க்க்கும்போது..இதயத்தின் ஊற்றெடுத்த வலி, வேகமாகப் பயணித்து கண்களில் முட்டி நின்றது. மதத்தின் பேரால் நடந்த கோடூரத்திலும் ஒரு நெகிழ்வான சம்பவம் என்பதை நினைத்து மனதை ஆற்றிக்கொள்ள முடிந்தது. கலங்கவைத்துவிட்டாய் சுபி..

சுகந்தப்ரீதன்
06-12-2007, 11:23 AM
படிக்க்க்கும்போது..இதயத்தின் ஊற்றெடுத்த வலி, வேகமாகப் பயணித்து கண்களில் முட்டி நின்றது. மதத்தின் பேரால் நடந்த கோடூரத்திலும் ஒரு நெகிழ்வான சம்பவம் என்பதை நினைத்து மனதை ஆற்றிக்கொள்ள முடிந்தது. கலங்கவைத்துவிட்டாய் சுபி..
கலங்க வைக்கும் நோக்கில் எழுதவில்லை அண்ணா.. இங்கே எல்லோரும் சொன்னது போல் மனிதம் மட்டுமே உணரப்பட வேண்டும் மற்றவை எல்லாம் விலக்க படவேண்டும் என்பதற்காகவும், ஆழமாய் என் நினைவில் கலையாத கவிதையாய் நிலையாக நிற்றுவிட்ட நிகழ்வே எனது ஆயிரமாவது பதிவாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் இதை இங்கே பதிந்தேன்.. மனம் கனத்து பின்னூட்டமிட்ட வாத்தியாருக்கும் உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!

பூமகள்
06-12-2007, 11:46 AM
அன்பு ப்ரீதன்,

உங்களின் பதிவு மனத்தை உலுக்கி விட்டது. உங்களின் அதே மனநிலையில் இப்போது நான். கண்கள் பனிக்க அந்த காஜலையே இன்னும் மனம் நினைக்கிறது.

இனி ஒரு விதி செய்வோம்..! - எதிலும்
பேதமற்ற ஒரு புதுயுகம் படைப்போம்..!

நம் மன்றத்தில் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் முனைந்தால் நமது நாளைய சமுதாயம் உருவாக்கிட முடியும் என்பது என் கருத்து.

மறத்துப் போன மானுடத்தை உயிர்ப்பிக்க வேண்டும். அது நம்மால் தான் முடியும்.

மிக மிக எதார்த்தமாக விவரித்த பாங்கு, உங்களோடே நாங்களும் பயணம் செய்த நினைவை ஏற்படுத்தியது. ஆயிரமாவது பதிவு ப்ரீதனின் வழக்கமான குறும்புடன் இருக்கும் என்று நம்பி வந்த எனக்கு ப்ரீதனின் இன்னொரு அடையாளத்தை இப்பதிவு காட்டியது.

பாராட்டுகள் ப்ரீதன். :icon_b:
உங்கள் பதிவுக்கு 1000 இ-பணம் அன்பளிப்பு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். :)

சுகந்தப்ரீதன்
06-12-2007, 12:29 PM
இனி ஒரு விதி செய்வோம்..! - எதிலும்
பேதமற்ற ஒரு புதுயுகம் படைப்போம்..!


பாராட்டுகள் ப்ரீதன். :icon_b:
உங்கள் பதிவுக்கு 1000 இ-பணம் அன்பளிப்பு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். :)

மிக்க நன்றி பூமகள்..! மனமொத்த அலைவரிசையில் பயணித்து பாராட்டியமைக்கு..எனது வாழ்த்துக்கள்! நல்லதே நடக்குமென்று நாளை மீது நம்பிக்கை கொள்வோம்..சகோதரி..!

தங்கவேல்
07-12-2007, 06:52 AM
நாகரீகத்தின் விளைவு இந்த கடவுள்களும் மதங்களும். நாமெல்லாம் புத்திசாலிகள் அல்லவா ? எங்கே இருந்தன இந்த மதங்கல் ஆதிகாலத்தில்.. படித்தவன் செய்கின்ற வேலை இது... அடங்கிருவானுங்க... தர்மம் அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது எவருக்கும்.

சுகந்தப்ரீதன்
08-12-2007, 05:30 AM
நாகரீகத்தின் விளைவு இந்த கடவுள்களும் மதங்களும். நாமெல்லாம் புத்திசாலிகள் அல்லவா ? எங்கே இருந்தன இந்த மதங்கல் ஆதிகாலத்தில்.. படித்தவன் செய்கின்ற வேலை இது... அடங்கிருவானுங்க... தர்மம் அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது எவருக்கும்.
உண்மைதான் நண்பரே...! படித்தவனிடம்தான் இருக்கிறது.. பதவியும் வெறியும்.. அதனால் அதிகம் பாதிக்கபடுவது அப்பாவி மக்கள்தான் என்கிறபோது உங்களின் கோபம்தான் எனக்கும் வருகிறது....!

நுரையீரல்
08-12-2007, 10:43 AM
அன்பு மருமகப் புள்ள...

சூப்பர் கதைப்பா... இது உண்மைச்சம்பவமாய் இருந்தால், அதில் ஏற்பட்ட ரணமும், வலிகளும் உன் நெஞ்சை விட்டு இன்னும் மாறியிருக்காது.

ஒருவேளை கற்பனைக் கதையாயிருந்தால், மத வெறியை எதிர்த்து இவ்வளவு டச்சிங்காய் எழுதிய உன் சிந்தனைக்கு வந்தனம்.

ரொம்ப ரொம்ப அருமைமா... உன் பதிவுக்கு சரியான பின்னூட்டம் அளிக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்.

சுகந்தப்ரீதன்
08-12-2007, 11:47 AM
அன்பு மருமகப் புள்ள...

சூப்பர் கதைப்பா... .
மிக்க நன்றி என் அருமை மாமா..இது கதையாக இருக்கும் பட்சத்தில் கதைகள் பகுதியிலெயே பதிந்திருப்பேனே.. இது முழுக்க முழுக்க உண்மை நிகழ்வு என்பதால்தான்.. இதை சம்பவங்கள் பகுதியில் தந்தேன்.. ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அன்றாட வாழ்வில் வந்து சென்றாலும் ஒருசிலரின் நினைவுகள் மட்டுமே அடிமனம் வரை சென்று தங்குவதுண்டு.. அப்படித்தான் காஜலின் நினைவும் எனக்குள் இன்றைக்கும் இருந்துக் கொண்டிருக்கிறது..!

ஷீ-நிசி
08-12-2007, 12:26 PM
ப்ரீதன்...

மனம் ஒரு கணம் நின்றுபோனது!

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மண்மீது துயில் கொள்ளட்டும்..!!


என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

மதி
08-12-2007, 04:05 PM
மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு..ப்ரீதன்.
மதத்தின் பேரால மனிதர் சாகும் நிகழ்ச்சிகளால் மனிதம் என்றும் சாவதில்லை..

சுகந்தப்ரீதன்
09-12-2007, 05:12 AM
மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு..ப்ரீதன்.
மதத்தின் பேரால மனிதர் சாகும் நிகழ்ச்சிகளால் மனிதம் என்றும் சாவதில்லை..
உண்மைதான் நண்பரே..! பாலைவனத்தின் நடுவே நீரூற்று போல.. இந்நிகழ்வில் மனிதம் மலர்ந்து நிற்பது மட்டுமே மனதுக்கு ஆறுதலளிக்கிறது..!

யவனிகா
09-12-2007, 05:40 AM
சுகு அசத்தலான பதிப்பு....
மதங்களின் பெயரால் மனிதம் அழிக்கும் மாட்டுச் சாண மனிதர்களை என்ன செய்வது...

நேற்றுக்கூட மதவெறிக்கும்...இன வெறிக்கும் ப*லியானவர்களின் கொடுரூரமான புகைப்படம் இ.மெயிலில் வந்து....அதை விவரிப்பதற்காக நினைத்துப் பார்த்தாக் கூட உடல் நடுங்குகிறது...பெண் ஒருத்தியை கோழியைத் தீயில் வாட்டுவது போல சுட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம்...அவளது அலறலும் பதிவு செய்யப்பட்டிருந்தது...எனக்கு மயக்கமே வந்து விட்டது...பக்கதில் இருப்பவர்கள் எல்லாம்...இதெல்லாம் என்ன பெரிய விசயம் என்று...அவர்கள் கேள்விப்பட்ட சித்தரவதை மதப்பலிகளை எல்லாம் விளக்கிக் கூற ஆரம்பித்து விட்டனர்....அங்கிருந்து தப்பிப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது....

மனம் கனக்கும் பதிவு....இது போல இன்னுமொரு பதிவை நீ இட...உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாது என்று விரும்பும்...
யவனி அக்கா...

ஜெயாஸ்தா
09-12-2007, 05:54 AM
ப்ரீதா..... உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் நீங்காத பாரத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப்பதிவு. வன்முறை வெறியாட்டத்தில் ஆயிரக்கணக்கான காஜல்கள்..... ஆதரவாய் கண்ணீர் துடைக்க கரங்களில்லாமல் கதறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு காஜலின் நிலையே நம் மன்றத்தவரை கண்கலங்க வைத்துவிட்டதே.... ! உலகில் 'மனிதம்' தழைக்க நம்மால் இயன்றதை செய்வோம். உங்களின் இந்த அருமையான பதிவுக்கு 500 இணையகாசுகள்...!

சுகந்தப்ரீதன்
09-12-2007, 07:47 AM
மனம் கனக்கும் பதிவு....இது போல இன்னுமொரு பதிவை நீ இட...உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாது என்று விரும்பும்...
யவனி அக்கா...
மிக்க நன்றியக்கா.. எனக்கும் அதே விருப்பம்தான்... எனக்கு மட்டுமல்ல யாருக்குமே அதுபோல் மீண்டும் நிகழக்கூடாதென்று..!

சுகந்தப்ரீதன்
09-12-2007, 07:59 AM
ப்ரீதா..... உலகில் 'மனிதம்' தழைக்க நம்மால் இயன்றதை செய்வோம். ..!
மிக்க நன்றி என் அருமை ஜெயஸ்தா அண்ணாவே..!

பாரதி
09-12-2007, 02:04 PM
காஜல் என்பதாலோ... கண்ணிலேயே நிற்கிறது! அன்பை வைப்பதால் ஏற்படும் இன்பமும், இழப்பதால் ஏற்படும் துன்பமும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

நினைத்ததை விரும்பிய வடிவில் தந்ததில் உங்களுக்கு வெற்றியே! மதத்தை மறப்போம். மனிதத்தை வளர்ப்போம். பாராட்டுக்கள் நண்பரே.

சுகந்தப்ரீதன்
10-12-2007, 09:26 AM
நினைத்ததை விரும்பிய வடிவில் தந்ததில் உங்களுக்கு வெற்றியே! மதத்தை மறப்போம். மனிதத்தை வளர்ப்போம். பாராட்டுக்கள் நண்பரே.
மிக்க நன்றி பாரதி அண்ணா..!

இதயம்
13-12-2007, 08:46 AM
கலையாத கவிதை-காஜல் என்கிற இந்த திரி தலைப்பை படித்து நண்பர் சுகந்த ப்ரீதன் வயசுக்கோளாறில் நடிகை காஜலைப்பத்தி ஏதாவது புலம்பியிருப்பாரோ என்று தவறாக புரிந்து கொண்டேன். அது எவ்வளவு தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டேன். அதற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லவேளை, ஏதோ ஒரு ஆர்வத்தில் அவர் என்ன தான் எழுதியிருக்கிறார் என்று படிக்க வந்து, இங்கு எழுதியிருந்ததை படித்து மனம் கரைந்து போனேன். தன் அனுபவத்தை அவர் உணர்ந்து எழுதியிருப்பது நம்மை அவர்கள் சென்ற இடங்களுக்கே கொண்டு செல்கிறது.

நான் சுகந்தப்ரீதனின் படைப்புகளை படித்த வகையில் அவரை புரிந்து கொண்டது, அவர் அற்புதமான காதல் உணர்வு கொண்டவர்.! அதைக்கொண்டவர்களிடம் அன்பு, பாசம், இரக்கம், கனிவு போன்ற நற்குணங்களுக்கு பஞ்சமிருக்காது. இந்த எல்லா உணர்வுகளாலும் நிறைந்து, சுகு ஒரு நிறைந்த குடமாய் வழிகிறார். குழந்தைகளை கவர்வது என்பது அது வெறும் கற்றுத்தேறும் கலை மட்டுமல்ல, அது கடவுளிடமிருந்து வாங்கி வரும் வரமும் கூட..! எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் என் வாழ்வில் எந்த குழந்தையை சந்திக்க நேர்ந்தாலும், என் அப்போதைய சூழ்நிலை எல்லாம் மறந்து அவர்களை கவர்வதில் இறங்கிவிடுவேன். சில பூக்கள் முகம் பார்த்து சிரிக்கும். சில முறைக்கும். சில மான்களாய் மருளும். சில சேட்டைகளை பார்த்து அழுதே விடும். வெகு சில மட்டுமே கை நீட்டினால் என்னிடம் வரும். நன்மை, தீமை அறியாத அந்த பிஞ்சுகளின் சினேகமான சிரிப்பிற்கு இவ்வுலகில் விலையே இல்லை என்பது என் கருத்து. குழந்தைகள் பற்றி என் ஆசையெல்லாம், நான் கை நீட்டியவுடன் குழந்தைகள் ஓடி வந்து என்னை கட்டிக்கொள்ளவேண்டும் என்பது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் எனக்கு ஏற்படுவது ஏமாற்றமே..! அதற்காக நான் கடவுளின் சாபம் வாங்கியவனாக என்னையே நொந்து கொள்வேன். குழந்தைகளின் செயல்களை இரசிப்பவர்களுக்கு அதை விட இனிமையான விஷயம் எதுவும் உலகில் இருக்க வாய்ப்பில்லை. அது பார்த்து இரசிக்கும் விஷயமல்ல.. உணர்ந்து இரசிக்கும் விஷயம்..! இதில் சுகந்தப்ரீதன் கைதேர்ந்தவராக இருப்பார் என்பது புரிகிறது.

அவர் குழந்தை காஜலை பார்த்ததிலிருந்து, அதன் ஒவ்வொரு செயலையும் நுணுக்கமா கவனித்து, ஆழ்ந்து அனுபவித்து எழுதியிருக்கிறார். இந்த பதிவை படிக்கும் போது என் அருகில் மாயத்தோற்றத்தில் அந்த சின்னப்பூ காஜல் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. காஜல் செய்தவை அத்தனை அழகு என்றால், அதை அவர் வார்த்தைகளில் வடித்த விதம் அழகோ அழகு..! அவரை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. இத்தனையையும் படித்து சந்தோஷத்தில் குதூகலித்த என் மனம், முதல் தவிப்பை காஜல் சுகந்தனை பிரியாமல் அடம்பிடித்து அழுத போது உணர்ந்தது. அந்த சின்னஞ்சிறிய உயிருக்குள் சுகந்தன் தன் அன்பால் ஏற்படுத்திய பாதிப்பின் பரிமாணம் என்னை வியக்க வைத்துவிட்டது. அந்த வியப்புடனே தொடர்ந்து படித்த போது தான் காஜல் வாழ்வின் பின்னணியில் ஒளிந்திருந்த அந்த கொடூரம் வெளிப்பட்டு எனக்கு மிகவும் வேதனையை தந்துவிட்டது. ஜாதி, மதம் என்ற பெயரில் இன்னும் நடக்கும் இது போன்ற கொடுமைகள் இன்னும் எத்தனை காலத்திற்கு நம் தேசத்தை கலங்கடிக்கும் என்று தெரியவில்லை. பெற்றோரை பறி கொடுத்த அந்த குட்டி நிலவு காஜலுக்காக கலங்குவதா, தன் பிள்ளையை பறிகொடுத்த அந்த அற்புத கணவன், மனைவிக்காக கலங்குவதா என்று எனக்குள் ஏற்படுவது இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை. என்ன சொல்லி, என்ன செய்து என்ன பயன்..! காஜலின், அந்த பெற்றோரின் இழப்பை எவரால் ஈடு செய்ய முடியும்..? எல்லாரையும் போல் என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, மனதால் கலங்கி அழுவதை தவிர..!!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 10:03 AM
முதன்முதலில் என் திரியில் இதயம் அண்ணாவின் பின்னூட்டம் அவருக்கே உரிய அசத்தலான நடையில்.. மனதுக்குள் பூரிப்பாய் உணர்கிறேன்.. மிக்க நன்றி இதயம் அண்ணா..!

மலர்
13-12-2007, 05:35 PM
முதன்முதலில் என் திரியில் இதயம் அண்ணாவின் பின்னூட்டம் அவருக்கே உரிய அசத்தலான நடையில்.. மனதுக்குள் பூரிப்பாய் உணர்கிறேன்.. மிக்க நன்றி இதயம் அண்ணா..!
இது தானே ஆரம்பம்...
இனிமே போக போக தான் தெரியும். :icon_rollout::icon_rollout:

இதயம்
15-12-2007, 09:34 AM
இது தானே ஆரம்பம்... இனிமே போக போக தான் தெரியும். :icon_rollout::icon_rollout:

ஏன் மலரு.. நல்லாத்தானே போய்ட்டிருக்கு..???!!!:eek::eek: