PDA

View Full Version : மாரி அந்தாதி



செல்வா
04-12-2007, 02:56 PM
மாரி அந்தாதி

(இது கல்லூரியில் படிக்கும் போது அந்தாதி எழுதவேண்டும் என்ற ஒரு பந்தயத்தின் பேரில் எழுதியது. கடைசி இரு பாடல்களும் சரியாக நினைவில் இல்லை எனவே இப்போது எழுதினேன். )

மரைகடல் நீரெல்லாம் கதிரவன் கதிரினால்
தரையதை தான்விட்டு வானமதை வந்தடைந்து
கரையாத வரம்பெற்று கார்மேகம் பேர் பெற்று
தரையதில் வரும்போது பெற்றது பேர் மாரியென்று

மாரியென்று மட்டுமல்ல மழையென்றும் உரைத்தனரே
பாரியென்ற மன்னனையும் மழைக்கீடாய் போற்றினரே
ஓரியென்ற வீரனவன் வில்விட்ட அம்பெனவே
பாரினிலே மாரியது பாய்ந்தோட பார்த்தனரே

பார்த்த மக்களெல்லாம் மனக்கவலை மறந்தனரே
ஆர்த்து வருகின்ற அழிவொன்று மறந்தனரே
கோர்த்து கொடும்புகை விடும்தொழிற் சாலைகள்
நீர்த்த அமிலமென நன்-னீரையே மாற்றினவே

மாற்றின மக்கள்-நாம் மாறிய மனங்களில்
ஏற்றி வைப்போம் ஒருபுது வாசகம்
சுற்றம் சூழல் காற்றும் நீரும்
குற்றம் இன்றி காப்போம் என்று

சிவா.ஜி
19-02-2008, 06:07 AM
ஆஹா...தமிழ் கொஞ்சி விளையாடும் இந்த அருமையான கவிதை இத்தனைநாள் என் கண்களுக்கு படாமல் இருந்துவிட்டதே....

அழகிய சொற்களில்...மாரியைப் பாடிய கவிதை...அது பொய்த்து விடும் வண்ணம் சுற்றுச் சூழல் கெட்டு வருவதையும் பாடுகிறது.

அருமையான வார்த்தையாடல் செல்வா...வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

இளசு
19-02-2008, 06:26 AM
முதலில் அமரனுக்கும் சிவாவுக்கும் நன்றி.. மேலெழுப்பியமைக்கு..

செல்வா.. கையைக்கொடுங்கள்..

வாசிக்க சுவைதரும் சொல்நயம்..

அந்தாதி எனும் பழைய வடிவம்.
சூழல் காக்கும் நவீன எண்ணம்

தமிழ் - அன்னையா கன்னியா?
(சீரிளமைத் திறம் வியந்து.... போற்றுதுமே)

வாழ்த்துகள் செல்வா!

ஆதி
19-02-2008, 06:53 AM
செல்வா விட்டதை தொடர முடியுமா முயற்சிக்கிறேன்..

என்று உன்றன் விரலது தொடுமோ
அன்று மணகும் மண்ணவள் பெண்மை
ஒன்று போல உலகினில் ஒழுகி
ஒன்றாய் ஓடும் ஒற்றுமை சொன்னாய்

சொன்னவை எல்லாம் மறக்கும் மாந்தார்
நின்றது இல்லை எவரின் மனதிலும்
வெண்முகில் நீயும் வெளிறியே இருந்தால்
உன்னவர் நாங்களும் உய்வதை மறப்போம்..

மற_போ என்று காதலி சொன்னால்
மறப்போம் அன்னை சொன்னால் உன்றன்
உறவுகொடி பூக்கள் எப்படி மலர்வோம்
அறவே நீங்குவோம் அகிலத்தில் இருந்தே

இருப்பதை வைத்து இதுவரை வாழ்ந்தோம்
இருக்கும் ஈரமோ இனிப்போ தாததால்
கருப்பு உழவனின் கால்களாய் வெடித்தன
நெருப்பவன் காய்த்த நிலமும் கழனியுமே..

வாழ்த்துக்கள் பொய்வாய் புலவா, கவிதை எழுத தெரியாது என்றவர்தானே நீங்கள் அதான் பொய் வாய் புலவா என்றேன்..

அன்புடன் ஆதி

செல்வா
19-02-2008, 07:59 PM
அருமையான வார்த்தையாடல் செல்வா...வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.


செல்வா.. கையைக்கொடுங்கள்..
வாழ்த்துகள் செல்வா!

நன்றி அண்ணா.... மிக்க நன்றி. இதெல்லாம் ஒரு கவிதையா? என்ற எண்ணத்தில் .... ஓரமாகப் புனைபெயரில் ஒதுங்கிக் கிடந்த கவிதை. நண்பர் அமரனிடம் கதைக்கப் போய்... தனியே பிரித்து எழுப்பி விட்டு விட்டார். ஆனால் தங்களைப் போன்ற மகாகவிகளின் பாராட்டைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது.
இன்னும் சந்தேகம்தான் எனக்கு இத்தகையப் பாராட்டிற்கு நான் தகுதியா என...

இளசு
19-02-2008, 08:11 PM
முழுத்தகுதியும் உண்டு செல்வா..

தயக்கத்தை உதறி, பாராட்டை ஏற்கவும்!

செல்வா
19-02-2008, 08:17 PM
வாழ்த்துக்கள் பொய்வாய் புலவா, கவிதை எழுத தெரியாது என்றவர்தானே நீங்கள் அதான் பொய் வாய் புலவா என்றேன்..

அன்புடன் ஆதி

அருமை ஆதி .....
மண்ணை பெண்ணாக்கி ......
ஒற்றுமை காட்டும்
உருவக மழையைப் பொழிய வேண்டிய மேகம்
வெளுத்து உளுத்துப்போனால் ?..... கேள்வியைத் தொக்கி.....
காதலியைக் கூட மறக்கும் எங்களால்
அன்னை உன்னை மறக்க இயலுமா?
அவ்வாறு நீ மறப்பின் இருப்பினுமோ நாங்கள்?
உயிரனைத்தும் உன் கொடி உறவல்லவோ....?

கொடுப்பதை வைத்து வாழ்ந்திருந்தோம்.... குழந்தையாயிருக்கும் போது கொடுத்த பாலுக்கும் வளர்ந்த பின் ஊட்டும் அன்னத்திற்கும் அளவு ஒன்றே என்றால் .... வளர வேண்டிய பிள்ளை என் வயிறு வாடுதலை காணாயோ......? விரைந்தமுது செய்ய வாராயோ.....

ஆகா..... தங்கள் கவியை படித்த பின்னும் ஆதி நான் உரைத்தது பொய்யென்றா சொல்லுகிறீர்....

தங்கள் கவியால் என் உரைக்குப் பெருமை....

நன்றி ஆதி

நாகரா
20-02-2008, 05:15 AM
என்றே நீவிர் காப்பதை மறந்தால்
குன்றிப் போவீர் புவிகாப் பதுங்கடன்
பல்லுயிர்ச் சுற்றம் உம்முயிர் என்றே
நல்லதைச் செய்வீர் இங்கே இன்றே

நல்லதோர் அந்தாதிக் கவிக்கு மிக்க நன்றி, செல்வா. மேலே என் சிறு முயற்சி, செய்யுள் இலக்கணம் அறியேன், பிழையிருப்பின் பொறுப்பீர்.

அமரன்
01-03-2008, 06:59 PM
குருவே....
தமிழாழியில் பேரலையாக எழுந்த புதுக்கவிதை பரிணாமத்தால் இவ்வகை சேய்யுள்களும் செய்யுள் செய்பவர்களும் ஒதுங்கி விட்டார்கள். ஒதுங்கிய அவர்கள் தம்முள் ஓங்கி இருக்கும் தளம்பாப் புலமையால் புலனடக்கி, புதுக்கவிதைக்காரர்கள் ஆட்டத்தை ஞானதிருட்டியால் உய்த்தறிந்து மோனத்தில் இருக்கிறார்கள் என்று என்னுடன்பேசிய ஒருவர் சொன்னார். அதுப்போல நீங்களும்...

பல சொற்கள் புதிது...:) சொற்சுவையைப் பூரணமாகச் சுவைக்க அவற்றின் அர்த்தங்களைக் கொடுக்கலாமே..:)

செந்தமிழரசி
03-03-2008, 04:00 AM
செல்வா ஆதி நாகாரா உங்கள் மூவருக்கும் முதலில் என் வாழ்த்துக்கள்.

அந்தாதி எழுத தனி ஆற்றல் வேண்டும் நீங்கள் மூவரும் அதை வாய்க்கப் பெற்றிருக்குறீர்கள்..

செல்வா இயற்கை நலன் கெடுகிறது தொலைற்கூடங்களால் என்று சமுதாய அவலத்தைப் பாடுகிறார்.

ஆதி மழை இல்லையேல் மனிதரும் நிலைக்கமாட்டோம் என்று உயிர்களுக்கு பரிந்து பேசுகிறார்.

நாகாரா நல்லதை செய்து வாழ் என்று ஞானம் பேசுகிறார்..

மூவரும் மூன்று கூரு வேறுப்பட்ட பார்வையால் மாரியைக் காணுகின்றனர்.

அந்தாதியை துங்கிய செல்வாவிற்கும் தொடர்ந்த ஆதி நாகாரா இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

செல்வா
12-03-2008, 07:03 PM
அடடா என்ன குருவே தங்களுக்கு நான் உரை கொடுப்பதா?
முயற்சிக்கிறேன்.....
முதல் இரு பத்திகள் தான் அப்படித் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். எனவே அதற்கு மட்டும்.. இப்போது...
மரைகடல் நீரெல்லாம் கதிரவன் கதிரினால்
மரை - கப்பல், மரக்கலம். கப்பல்கள் நீந்தும் கடல் நீரானது சூரியனின் வெப்பத்தினால்
தரையதை தான்விட்டு வானமதை வந்தடைந்து
தரையைவிட்டு - பூமியை விட்டு ஆவியாகி வானத்தை நோக்கிச் சென்று
கரையாத வரம்பெற்று கார்மேகம் பேர் பெற்று
திரவ நிலையில் இருந்து ஆவியாக காற்றில் கரைந்த நீரானது மீண்டும் குளிர்ந்து கடினப்பட்டு கரையாத தன்மையால் கார்மேகம் என்ற பெயரைப் பெற்றது
தரையதில் வரும்போது பெற்றது பேர் மாரியென்று
அவ்வாறு கறுத்து முதிர்ந்த கார் மேகமானது மீண்டும் தரையை நோக்கித் தன் பயணத்தைத் துவக்கி தரையை அடையும் போது நாம் அதை மாரி - மழை என்று அழைக்கிறோம்
(இது காளமேகப் புலவரிடமிருந்து கடன் வாங்கியது ஒரு இடைச்சியின் மோரில் தண்ணீர் அதிகமாக இருந்தது என்பதை வஞ்சப்புகழ்ச்சி அணியாக பாடலில் சுட்டியிருப்பார். ஆக என் கற்பனை எதுவுமில்லை குருவே)

மாரியென்று மட்டுமல்ல மழையென்றும் உரைத்தனரே

மாரி - மழை இரண்டும் மழையின் பெயர்கள்....

பாரியென்ற மன்னனையும் மழைக்கீடாய் போற்றினரே
கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரியை பதிலுதவி பாராமல் உதவி கொடுப்பவன் என்று மழையோடு ஒப்பிட்டு கூறுவர்

ஓரியென்ற வீரனவன் வில்விட்ட அம்பெனவே
பாரினிலே மாரியது பாய்ந்தோட பார்த்தனரே

இது எடுத்துக்காட்டு உவமை ஓரியும் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.
சிறந்த வில்லாளி. அவனது திறமையை இப்படி பாடியிருப்பர் சங்கப் பாடலில்

[வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?

(வரிக்கு வரி விளக்கம் சொல்ல நேரமில்லை சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிடுகிறேன்)
ஓரியின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பானது யானை, புலி, மான், பன்றி போன்ற விலங்குகளை வீழ்த்தியும் நில்லாமல் புற்றிற்குள்ளிருந்த உடும்பைக் குத்தி நின்றதாக வரும். அது போல மலையில் பொழியும் மழையானது அருவியாகி அங்கிருந்து ஓடி மலையடிவாரத்தைக் கடந்து ஆறாகி சமவெளியெங்கும் நிறைந்து இறுதியில் கடலில் சென்று நிலைபெறும்.

அவ்வளவே ஐயா....

அமரன்
12-03-2008, 07:11 PM
அடடே.... குருவே..
மிக்க மகிழ்ச்சி.. இச்சிறுவனின் அறியாமையைப் போற்றி அறிவொளி பரப்பியமைக்கு என்ன கைமாறு செய்வேன்..

செல்வா
14-03-2008, 06:26 PM
நன்றி நாகரா... ஆண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் அவர்களின் தொடார்ந்த கவிதைக்கும்.

நன்றி தமிழரசி அவர்களே தங்களின் பாராட்டிற்கு

ஐயா குருவே கொஞ்சம் அதிகமாகத்தான் பேசுகிறீர் உங்கள அப்புறமா கவனிச்சுக்கறன்....